என் மலர்tooltip icon

    அரியலூர்

    • கொள்ளிடம் ஆற்றில் இருவர் மூழ்கினர்
    • இரண்டு பேரின் உடல்களும் மீட்கப்பட்டது

    உடையார்பாளையம்,

    அரியலூர் மாவட்டம், பெரியமறை கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம்(வயது 54). இவர் கடந்த 13-ந் தேதி கொள்ளிடம் ஆற்றின் திட்டுப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த மாடுகளை ஓட்டுவதற்காக சென்றபோது கொள்ளிடம் ஆற்றில் மூழ்கினார். அவரை தேடுவதற்காக கொள்ளிடம் ஆற்றில் இறங்கிய தஞ்சாவூர் மாவட்டம், மடம் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம்(54) என்பவரும் தண்ணீரில் மூழ்கினார்.இதையடுத்து அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்தது. இதில் அரியலூர் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், தாசில்தார் கண்ணன், திருமானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா ஆரோக்கிய மேரி தலைமையிலான போலீசார் மற்றும் அரியலூர் தீயணைப்புத் துறையினர், ஜெயங்கொண்டம் தீயணைப்பு துறையினர் ஆகியோரின் கடும் முயற்சியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.இதில் நேற்று முன்தினம் இறந்த நிலையில் முருகானந்தம் மீட்கப்பட்டார். இந்நிலையில் நேற்று 3-வது நாளாக தேடுதல் பணி நடைபெற்றது. இதில் ஆறுமுகம் பெரியமறை கிராமம் அருகே பிணமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து திருமானூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

    • தற்கொலை செய்துகொண்ட சுந்தரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் சுந்தரின் திடீர் தற்கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் கீழகுளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர் (வயது 42). இவர் அரியலூர் பால் கூட்டுறவு சங்கத்தில் ஊழியரக (பால் வெண்டர்) வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி ராதா என்ற மனைவியும், சஞ்சய், சதீஷ்குமார் ஆகிய இரண்டு மகன்களும் உள்ளனர். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை அரியலூர் எம்.ஜி.ஆர். நகரில் உள்ள தனது மாமனார் வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

    இதையடுத்து அவர் கீழப்பழுர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கி அங்கு குடியேறினார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சுந்தரின் மனைவி மற்றும் குழந்தைகள் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக அரியலூரில் உள்ள அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றிருந்தனர். சுந்தர் மட்டும் தா.பழுரில் தங்கியிருந்தார். காலையில் வழக்கம்போல் பால் கூட்டுறவு சங்கத்திற்கு பணிக்கு சென்ற அவர் மீண்டும் மதியம் 3 மணிக்கு வரவேண்டும்.

    ஆனால் நீண்ட நேரமாகவும் அவர் வரவில்லை. உடனே பால் கூட்டுறவு சங்க ஊழியர்கள் சுந்தரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டனர். மறுமுனையில் சுந்தர் போனை எடுத்து பேசவில்லை. பின்னர் அவர்கள் சுந்தரின் மனைவி செல்போனுக்கு பேசி தகவலை தெரிவித்தனர். அவர் தொடர்பு கொண்டும் பலனில்லை. இதனால் அச்சம் அடைந்த ராதா உடனடியாக தா.பழுருக்கு புறப்பட்டு சென்றார்.

    அப்போது வீட்டின் கதவு உட்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. தட்டியும் திறக்காததால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு சுந்தர் தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டிருந்தார். அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி கதறித்துடித்தார். பின்னர் இதுகுறித்து தா.பழுர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் தற்கொலை செய்துகொண்ட சுந்தரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வழக்குப்பதிவு செய்த போலீசார் சுந்தரின் திடீர் தற்கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மது விற்ற முதியவர் கைது செய்யப்பட்டார்
    • உடையார்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தத்தனூர் கீழவெளி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் (வயது 62) என்பவர் அப்பகுதியில் மதுவிற்றது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    • விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்
    • இந்த சம்பவம் குறித்து விக்கிரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே கீழநத்தம் கிராமம் வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் சின்னப்பிள்ளை (வயது 72), விவசாயி. இவரது தலையில் ஏற்பட்ட கட்டியின் காரணமாக பல மாதங்களாக வலியினால் அவதியுற்று வந்துள்ளார். இதற்கு பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் வலி குறையவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்த சின்னப்பிள்ளை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சின்னப்பிள்ளை பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து விக்கிரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • ஜெயங்கொண்டத்தில் மது விற்ற 2 பேர் கைது செய்யபட்டனர்
    • அவர்களிடம் இருந்து 19 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜெயங்கொண்டம்,

    ஜெயங்கொண்டத்தில் சட்ட விரோதமாக மது விற்கப்படுவதாக ஜெயங்கொண்டம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கீழக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த கருணாநிதி மகன் ரமேஷ் (வயது 39), சீனிவாசா நகர் சீனிவாசன் மகன் கோபி (38) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து 19 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடிகாடு கிராமத்தில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டுள்ளது
    • உடையார்பாளையம் காவல் ஆய்வாளர் வேலுச்சாமி திறந்துவைத்தார்

    உடையார் பாளையம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தத்தனூர் குடிகாடு கிராமத்தில் வெளிநாடு வாழும் இளைஞர்கள் சார்பில் குடிகாடு கிராமத்தில் முக்கிய வீதிகளில் 16 சிசிடிவி கேமராவை அமைத்தனர். அதனை உடையார்பாளையம் காவல் ஆய்வாளர் வேலுச்சாமி திறந்துவைத்தார். பின்னர் அவர் தெரிவிக்கையில், குடிகாடு கிராமத்தில் சிசிடிவி கேமரா மூலம் பல்வேறு குற்றங்களை தடுக்க முடியும். இதே போல் அனைத்து கிராமங்களிலும், சிசிடிவி கேமரா வைப்பதற்கு இளைஞர்களும், பொதுமக்களும், ஊர் முக்கியத்துவம் முன்வர வேண்டும் என்றார்.

    • தா.பழூரில் அப்பர் சுவாமிக்கு குருபூஜை விழா நடைபெற்றது
    • வேத மந்திரங்கள் முழங்க, பஞ்ச புராணம், பாராயணம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது

    உடையார்பாளையம்,

    அரியலூர் மாவட்டம் தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் அப்பர் பெருமான் குருபூஜை விழா நடைபெற்றது. குருபூஜையை முன்னிட்டு விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன், சமயக்குரவர்களான சுந்தரர், அப்பர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் எழுந்தருளிய விக்ரஹம் ஆகியவற்றுக்கு மஞ்சள் பொடி, மாப்பொடி, திரவிய பொடி, நெல்லி முள்ளி பொடி, வில்வ பொடி, அருகம்புல் பொடி, தேன், பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் சுவாமி, அம்பாள், சமயக்குரவர்கள் நால்வர் ஆகியோர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். ஓதுவார்கள் அப்பர் பெருமான் இயற்றிய தேவாரப் பாடல்களை பாடி வழிபட்டனர். வேத மந்திரங்கள் முழங்க, பஞ்ச புராணம், பாராயணம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. விழாவில் அடியார்களுக்கு தயிர்சாதம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

    • அரியலூர் மாவட்டத்தில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்
    • இதுவரை தூர்வாரப்பட்டுள்ள நீளம் குறித்தும் மாவட்ட கலெக்டர் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.

    அரியலூர்,

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவிற்கிணங்க நீர்வளத்துறையின் சார்பில் சிறப்பு தூர்வாரும் பணிகள் திட்டத்தின் கீழ் அரியலூர் மாவட்டத்தில், மருதையாறு வடிநிலக்கோட்டம், அரியலூர் மற்றும் ஆற்று பாதுகாப்புக்கோட்டம், திருச்சி கட்டுப்பாட்டில் உள்ள வரத்து வாய்க்கால்கள், பாசன வாய்க்கால்கள், உபரி நீர் வாய்க்கால்கள், ஓடை மற்றும் வடிகால்கள் முட்புதர்கள் மண்டியும் மண்மேடிட்டு தூர்ந்தும் காணப்பட்டது.

    மேலும் நீர் வெளியேற்றும் திறன் குறைந்து தற்போது பெய்த வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட வெள்ள நீர் முழுமையாக வடிய இயலாமல் பாசன நிலங்களில், நீர்தேங்கி விவசாய சாகுபடி பயிர்களுக்கும் மற்றும் நிலங்களுக்கும் சேதம் ஏற்படுத்தி உள்ளது. எனவே 13 தூர்வாரும் பணிகள் 42.80 கி.மீ. நீளத்திற்கு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு கல்லணைக்கு தண்ணீர் வரும் காலத்திற்குள் பணிகளை முடிக்க ஆணையிடப்பட்டுள்ளது.

    இதனைத்தொடர்ந்து 13 பணிகளும் போர்க்கால அடிப்படையில் துவங்கி 10.06.2023-க்கு முன் அனைத்து பணிகளும் முழுமையாக முடிக்கப்பட உள்ளது. இதில் சிறப்பு தூர்வாரும் பணிகள் திட்டத்தின்கீழ் மருதையாறு வடிநிலக்கோட்டத்தில் அரியலூர் வட்டத்தில் பெரிய நாகலூர் ஓடை, அருங்கால் ஓடை, உடையார்பாளையம் வட்டத்தில் சோழமாதேவி கிராமம் 4-வது புதிய பிரதான வாய்க்கால், சிந்தாமணி ஓடை, சித்தமல்லி நீர்த்தேக்க உபரிநீர் வாய்க்கால், கருவாட்டு ஓடை (பொன்னேரி வரத்து வாய்க்கால்) ஆகியவற்றுக்கு தண்ணீர் வரும் வரத்து வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    ஒரு சில பகுதிகளில் சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக மழைநீர் தேங்கி உள்ளதாலும், ஈரப்பதம் அதிகமாக உள்ளதாலும், தூர்வாரும் பணி சற்று தாமதமாக நடைபெறுவதாக அலுவலர்களால் தெரிவிக்கப்பட்டது. அனைத்து பணிகளையும் விரைவாகவும், முழுமையாகவும் வரும் 31.05.2023–க்குள் முடித்து கரைகளை பலப்படுத்திட சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தியும், பாசன வாய்க்கால் மூலமாக பயனடையும் விவசாய நிலங்களின் பரப்பளவு குறித்தும், இதுவரை தூர்வாரப்பட்டுள்ள நீளம் குறித்தும் மாவட்ட கலெக்டர் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.

    இதுகுறித்து நீர்வளத்துறை அலுவலர்கள் கூறுகையில், தற்போது வரை 25 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. பணிகள் முடிவடையும் போது சுமார் நான்காயிரம் ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பயனடையும் என கலெக்டர் பெ.ரமண சரஸ்வதியிடம் தெரிவித்தனர். இந்த ஆய்வில் நீர்வளத்துறை செயற்பொறியாளர் வேல்முருகன், உதவி செயற்பொறியாளர் சாந்தி, உதவி பொறியாளர் தினகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • அரியலூரில் காங்கிரசார் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்
    • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காங்கிரசார் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும், இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர்

    ஜெயங்கொண்டம்:

    கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காங்கிரசார் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும், இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில், மாவட்ட தலைவர் சங்கர் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • ஜெயங்கொண்டம் அருகே மது விற்ற வாலிபர் கைது செய்யபட்டார்
    • அவர் விற்பனைக்காக வைத்திருந்த 50-க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கல்லாத்தூர் தண்டலை பகுதியில் பதுக்கி வைத்து மது பாட்டில் விற்பனை செய்து வருவதாக ஜெயங்கொண்டம் காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் ஒருவர் பதுக்கி வைத்து மது பாட்டில்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. பின்னர் அவரை பிடித்து விசாரித்ததில் அவர் கடலூர் மாவட்டம் பண்ருட்டி முத்தரசு புதுத்தெருவை சேர்ந்த குமார் என்பவரது மகன் மதிவாணன் (வயது27) என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து மதிவாணனை கைது செய்த போலீசார் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 50-க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து மதிவாணனை சிறையில் அடைத்தனர்.

    • பொது இடத்தில் ரேசன் கடை கட்ட வலியுறுத்தி துணை வட்டாட்சியரிடம் கிராமமக்கள் குடும்ப அட்டைகளை ஒப்படைத்தனர்
    • மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உதயநத்தம் ஊராட்சிக்குட்பட்ட கோடாலி கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளனர். இதில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் பகுதியில் இருந்த பழைய ரேஷன் கடை கட்டிடம் சேதமடைந்ததால் அதனை இடித்து புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மற்றொரு சமூகத்தினர், அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் அரசுக்கு சொந்தமான பொது இடத்தில் ரேஷன் கடையை கட்ட வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் ரேஷன் கார்டுகளை வி.ஏ.ஓ. அலுவலகத்தில் ஒப்படைக்க வந்தனர்.

    அப்போது பொதுவான இடத்தில் ரேஷன் கடை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததால் ரேஷன் கார்டுகளை ஒப்படைக்கும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். ஆனால் ஏற்கனவே இருந்த இடத்திலேயே ரேஷன் கடை கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் ஜெயங்கொண்டம் தாலுக்கா அலுவலகத்தை முற்றுகையிட்டு சுமார் 247 குடும்பங்களை சேர்ந்தவர்கள் அரசால் வழங்கப்பட்ட தங்களது ரேஷன் கார்டுகளை ஜெயங்கொண்டம் தனி துணை வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.

    கோடாலி கிராமத்தில் அரசுக்கு சொந்தமான பொது இடத்தில் ரேஷன் கடையை கட்ட வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களிலும் மனு அளித்திருக்கிறோம். எனவே மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். பொது இடத்தில் ரேசன் கடை கட்டாவிட்டால் அடுத்த கட்டமாக மிகப்பெரிய போராட்டம் நடத்தவும் தயாராக உள்ளோம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    • ஆண்டிமடம் அருகே விளந்தை கிராமத்தில் அப்பர் சுவாமிக்கு குரு பூஜை விழா நடைபெற்றது
    • பக்தர்கள் தேவாரம், திருவாசகம், பெரிய புராணம் பாடல்களை பாடி கோயில் உள்பிரகாரத்தில் வலம் வந்தனர்.

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே விளந்தைகிராமத்தில் உள்ள, தர்மசம்வர்த்தினி அம்பிகா சமேத மேல அகத்தீஸ்வரர் கோயிலில். நால்வர் குரு பூஜை விழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த வருட அப்பர் குரு பூஜை விழா நடந்தது. இதனை முன்னிட்டு, மேல அகத்தீஸ்வரர், தர்மசம்வர்த்தினி, பிள்ளையார், முருகன், அகஸ்தியரை, தொடர்ந்து நாயன்மார்களில் நால்வர்களான. அப்பர், திருஞானசம்பந்தர், மணிக்கவாசகர், சுந்தரமூர்த்தி நாயனாருக்கு, சிறப்பு அபிஷேகமும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து, பன்னிரு திருமுறை சுமந்து தேவாரம், திருவாசகம், பெரிய புராணம் பாடல்களை பாடி ஆராதனையுடன் கூடிய குரு பூஜை நடந்தது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் தேவாரம், திருவாசகம், பெரிய புராணம் பாடல்களை பாடி கோயில் உள்பிரகாரத்தில் வலம் வந்தனர்.

    ×