என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரியலூர் அருகே கூட்டுறவு பால் சொசைட்டி ஊழியர் தற்கொலை
    X

    அரியலூர் அருகே கூட்டுறவு பால் சொசைட்டி ஊழியர் தற்கொலை

    • தற்கொலை செய்துகொண்ட சுந்தரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் சுந்தரின் திடீர் தற்கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் கீழகுளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர் (வயது 42). இவர் அரியலூர் பால் கூட்டுறவு சங்கத்தில் ஊழியரக (பால் வெண்டர்) வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி ராதா என்ற மனைவியும், சஞ்சய், சதீஷ்குமார் ஆகிய இரண்டு மகன்களும் உள்ளனர். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை அரியலூர் எம்.ஜி.ஆர். நகரில் உள்ள தனது மாமனார் வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

    இதையடுத்து அவர் கீழப்பழுர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கி அங்கு குடியேறினார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சுந்தரின் மனைவி மற்றும் குழந்தைகள் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக அரியலூரில் உள்ள அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றிருந்தனர். சுந்தர் மட்டும் தா.பழுரில் தங்கியிருந்தார். காலையில் வழக்கம்போல் பால் கூட்டுறவு சங்கத்திற்கு பணிக்கு சென்ற அவர் மீண்டும் மதியம் 3 மணிக்கு வரவேண்டும்.

    ஆனால் நீண்ட நேரமாகவும் அவர் வரவில்லை. உடனே பால் கூட்டுறவு சங்க ஊழியர்கள் சுந்தரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டனர். மறுமுனையில் சுந்தர் போனை எடுத்து பேசவில்லை. பின்னர் அவர்கள் சுந்தரின் மனைவி செல்போனுக்கு பேசி தகவலை தெரிவித்தனர். அவர் தொடர்பு கொண்டும் பலனில்லை. இதனால் அச்சம் அடைந்த ராதா உடனடியாக தா.பழுருக்கு புறப்பட்டு சென்றார்.

    அப்போது வீட்டின் கதவு உட்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. தட்டியும் திறக்காததால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு சுந்தர் தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டிருந்தார். அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி கதறித்துடித்தார். பின்னர் இதுகுறித்து தா.பழுர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் தற்கொலை செய்துகொண்ட சுந்தரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வழக்குப்பதிவு செய்த போலீசார் சுந்தரின் திடீர் தற்கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×