என் மலர்tooltip icon

    அரியலூர்

    • அக்காவுடன் ஏற்பட்ட தகராறில் தங்கை தற்கொலை திருமானூர் அருகே நடந்த சம்பவம்
    • யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை

    திருமானூர்

    அரியலூர் மாவட்டம் எழுநாச்சிபுரம் காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருடைய மகள் காவியா (வயது 17). இவர் பிளஸ்-1 படித்து வந்தார். இந்தநிலையில் காவியா தனக்கு செல்போன் வாங்கி தரவேண்டும் என அவரது பெற்றோரிடம் கேட்டு வந்துள்ளார்.

    அதற்கு சுப்பிரமணியன் பணம் வரட்டும், வாங்கி தருகிறேன் என கூறியுள்ளார். சம்பவத்தன்று காவியா தனது அக்காள் தேவிகாவின் செல்போனை பயன்படுத்தி உள்ளார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த காவியா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த திருமானூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காவியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ராஜேந்திர சோழன் பிறந்தநாளையொட்டி பிரகதீஸ்வரர் கோவிலில் ஆடித்திருவாதிரை விழா நாளை நடக்கிறது
    • விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமை தாங்குகிறார்

    அரியலூர்A

    அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தை தலைமையிடமாக கொண்டு ஆட்சி புரிந்த மாமன்னன் ராஜேந்திர சோழன் பிறந்த நாளான ஆடித் திருவாதிரை விழா நாளை (சனிக்கிழமை) அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஆடித்திருவாதிரை விழாவையொட்டி மேடை அமைக்கும் பணிகள், பொதுமக்கள் அமரும் இடம், குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதி, பக்தர்கள் வந்து செல்லும் வகையில் பஸ் வசதி உள்ளிட்ட விழா தொடர்பான பல்வேறு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    ஆடித்திருவாதிரை விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமை தாங்குகிறார். நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் முன்னிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் காலை 10 மணியளவில் குத்து விளக்கு ஏற்றி விழாவினை தொடங்கி வைக்கிறார்.

    இதையடுத்து, காலை 11 மணி முதல் மங்கள இசை, தப்பாட்டம், பரதநாட்டியம், கரகாட்டம், காவடி ஆட்டம், கிராமிய நடனம், பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், சிலம்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் நடைபெறுகிறது.

    • அரியலூர் அருகே வழிப்பறி கொள்ளை வழக்கில் கோர்டுக்கு வராத இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு நீதிபதி உத்தரவு
    • இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் சேலம் மாவட்டம் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது

    அரியலூர் 

    அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் தளவாய் போலிஸ் சரகம் முள்ளுக்குறிச்சி கிராமத்தை சார்ந்தவர் ராஜாராம் இவர் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார், இவர் கடந்த 27.5.2019 அன்று 3மணியளவில் இருசக்கர வாகனத்தில் ரோட்டில் சென்றுகொண்டிருந்த போது 2 வாலிபர்கள் பின்தொடர்ந்து ராஜாராமை வழிமறித்து தாக்கி இருசக்கரவாகனத்தை பிடுங்கிக்கொண்டு தப்பி சென்றுவிட்டனர், ராஜாராம் கொடுத்த புகார் கொடுத்ததின் பேரில் தளவாய் போலிசார் வழக்கு பதிவு செய்து கடலூர் மாவட்டம் கருங்குழி கிராமத்தை சார்ந்த சக்திவேல்(30), கடலூர் மாவட்டம் சின்னகொசப்பாளையம் கிராமத்தை சார்ந்த அஜய்(23) ஆகிய இருவரையும் கைது செய்து வழக்கு தொடர்ந்தனர், இந்த வழக்கு செந்துறை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகின்றது, அனைத்து சாட்சிகளும் விசாரனை முடிவுற்ற நிலையில் விசாரனை அதிகாரியான இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் கோர்ட்டு சம்மனை பெற்றுக்கொண்டு மார்ச்-23 அன்றைய தேதியிலிருந்து கோர்ட்டுக்கு சாட்சி சொல்ல வரவில்லை, விசாரனை செய்த செந்துறை குற்றவியல் நிதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி ஜெயகிருபா வழிப்பறி கொள்ளை வழக்கில் கோர்ட்டிற்கு சாட்சி சொல்ல வராத சண்முகசுந்தரத்திற்கு பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார். வழக்கு 24ம் தேதி மாற்றப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் சேலம் மாவட்டம் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் பேருந்து நிலையம் முன்பு தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்.
    • மாவட்டச் செயலர் இராம.ஜெயவேல் தலைமை வகித்தார்

    அரியலூர் 

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் பேருந்து நிலையம் முன்பு தேமுதிகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில்,விவசாய நிலங்களை பாழ்படுத்தும் என்எல்சி நிர்வாகத்தை கண்டித்தும், திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும், கர்நாடக அரசு, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை பெற்று தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டச் செயலர் இராம.ஜெயவேல் தலைமை வகித்தார். தேசிய முற்போக்கு தொழிற் சங்க பேரவை துணைச் செயலர் சக்திவேல் கண்டன உரையாற்றினார். மாவட்ட அவைத் தலைவர் வேல்முருகன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆனந்தன், மாவட்ட துணைச் செயலர் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர். முன்னதாக நகரச் செயலாளர் தாமஸ் ஏசுதாஸ் வரவேற்றார். முடிவில் அரியலூர் வடக்கு ஒன்றியச் செயலர் மணிகண்டன் நன்றி கூறினார்.

    • அரியலூரில் ஏலாக்குறிச்சி வரையிலான புதிய வழித்தடத்தில் அரசு பஸ் இயக்கப்பட்டது
    • போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா கொடியசைத்து தொடங்கி வைத்தனர்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம் ஆண்டிப்பட்டாக்காடு கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று புதிய வழித்தடத்தில் அரசு பஸ் இயக்கப்பட்டது. இதனை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா முன்னிலை வகித்தார். இந்த நகர பஸ் தடம் எண் 22ஏ அரியலூர் - ஏலாக்குறிச்சி வழிதடத்தில் வல்லாகுளம், சிலுப்பனூர் இடையே ஆண்டிப்பட்டாக்காடு பிரிவு சாலையிலிருந்து 1 கி.மீட்டர் தொலைவில் உள்ள ஆண்டிப்பட்டாக்காடு கிராமத்தினை தொட்டு இயக்கப்படும். இந்த பஸ் காலை 7.50 மணிக்கு ஏலாக்குறிச்சியில் இருந்து புறப்பட்டு அரியலூரை சென்றடையும். மீண்டும் இந்த பஸ் மாலை 5.25 மணிக்கு அரியலூரில் இருந்து புறப்பட்டு ஏலாக்குறிச்சியை சென்றடையும். இதன் மூலம் இப்பகுதி மக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் மிகுந்த பயனடைவார்கள்

    • அரியலூர் மாவட்டத்தில் 201 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது
    • சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் என்று கலெக்டர் அறிவிப்பு

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டத்தில் உள்ள201 கிராம ஊராட்சிகளிலும் வருகிற 15-ந்தேதி சுதந்திர தினத்தன்று கிராமசபை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் இயக்குனரிடம் இருந்து வரப்பெற்ற கூட்ட பொருட்கள் மற்றும் இதர கூட்ட பொருட்கள் விவாதிக்கப்படும். கூட்டத்தில் மாவட்டத்தின் அனைத்துத்துறை அலுவலர்கள், அந்தந்த பகுதிகளில் உள்ள மக்கள் பிரதிநிதிகள், தன்னார்வலர்கள், சமுதாய அமைப்பு உறுப்பினர்கள், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கலந்து கொண்டு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வா்ணா தெரிவித்துள்ளார்.

    • அரியலூரில் சிறுமியை காதலிக்க வற்புறுத்திய வாலிபர் கைது செய்யப்பட்டு உள்ளார்
    • சைக்கிளில் சென்ற சிறுமியை வழிமறித்து மிரட்டியதால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சேர்ந்தவர் ஸ்டாலின் (வயது 21). இவர் 16 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இதனையறிந்த சிறுமியின் பெற்றோர் ஸ்டாலினின் தாயாரை சந்தித்து அவரது மகனை கண்டிக்குமாறு கூறியுள்ளனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளியிலிருந்து சைக்கிளில் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த சிறுமியை ஸ்டாலின் வழிமறித்து காதலிக்க வற்புறுத்தி மிரட்டியுள்ளார். இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சுமதி போக்சோவில் வழக்குப்பதிவு செய்து ஸ்டாலினை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • அரியலூரில் தாயாரை பார்க்க சென்ற ஜோதிடர் மீது தாக்குதல் நடைபெற்று உள்ளது
    • முன்விரோதம் காரணமாக தாக்கிய தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள நாயகனைபிரியாள் கிராமத்தை சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 44). ஜோதிடரான இவர் ஜெயங்கொண்டம் நகரில் வசித்து வருகிறார். இவருக்கும், அவரது அண்ணன் உலகநிதி (58) மற்றும் அக்காள் ஆகியோருக்கு இடையே சொத்து தகராறு தொடர்பாக ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் நாயகனைபிரியாள் கிராமத்தில் வசிக்கும் தனது தாயார் பழனியம்மாளை பார்ப்பதற்காக ராமதாஸ் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த அவரது அக்காள் மகன் கலையரசன் (26), ராமதாசிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த ராமதாஸ் தகாத வார்த்தைகளால் திட்டி கலையரசனை தாக்கி அவரது மோட்டார் சைக்கிளை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதேபோல் கலையரசன், உலகநிதி, அவரது மகன் அரவிந்த் (20) ஆகியோர் தகாத வார்த்தைகளால் திட்டி ராமதாசை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து ராமதாஸ், கலையரசன் ஆகியோர் தனித்தனியாக தா.பழூர் போலீசில் புகார் கொடுத்தனர். இதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அழகப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். பின்னர் ராமதாசை தாக்கிய உலகநிதி மற்றும் அவரது மகன் அரவிந்த் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். 

    • ஓரியூரில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் 58 பயனாளிகளுக்கு ரூ.7 லட்சம் நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது
    • மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா வழங்கினார்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், ஓரியூர் கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர்மேலாண்மையின் துறையின் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, 58 பயனாளிகளுக்கு ரூ.7 லட்சத்து 2 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து 111 கோரிக்கை மனுக்களை கலெக்டர் பெற்றுக்கொண்டார். மேலும் இம்முகாமில், அனைத்துத் துறை மாவட்ட நிலையிலான அலுவலர்கள் கலந்து கொண்டு தங்களது துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்கள், அதனை பெறும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்தனர். முன்னதாக, இம்முகாமில்ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், கால்நடை பராமரிப்புத் துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை, கூட்டுறவுத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள்அமைக்கப்பட்டிருந்தன. முகாமில், அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், மாவட்ட வழங்கல் அலுவலர் ராமலிங்கம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் உமா மகேஸ்வரன், மகளிர் திட்ட இயக்குநர்(பொ) ஆறுமுகம், பொது சுகாதார துணை இயக்குநர் அஜிதா, வட்டாட்சியர் கண்ணன்,ஊராட்சித் தலைவர்கள் புங்கங்குழி மணிமாறன், கோமான் பாஸ்கர் உள்ளிட்டோர்கலந்து கொண்டனர்.

    • அரியலூரில் மணல் அள்ளி வந்த டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது
    • மணல் கடத்திய இரண்டு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்

    அரியலூர்,

    அரும்பாவூர் பகுதியில் உள்ள ஏரிகளில் சட்டவிரோதமாக கிராவல் மண் அள்ளப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் அரும்பாவூர் ஏரியில் டிராக்டரில் கிராவல் மண் அள்ளிக்கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள், அ.மேட்டூரை சேர்ந்த ஹரிஹரன் (வயது 32), அரும்பாவூரை சேர்ந்த அருண் (31) என்பதும், அனுமதியின்றி மண் அள்ளியதும் தெரியவந்தது. இதையடுத்து டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • ஏரிக்கு வரும் தண்ணீர் வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை மனு அளிக்கப்பட்டு உள்ளது
    • ஆக்கிரமிப்பினால் மழைகாலங்களில் ஊருக்குள் தண்ணீர் புகும் அபாயம் உள்ளதாக மனுவில் அச்சம் தெரிவித்து உள்ளனர்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், கடுகூர் ஊராட்சிக்கு உட்பட்ட தலையாரிகுடிகாடு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், எங்கள் கிராமத்தில் 200 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சாலைக்குறிச்சி கிராமத்தில் 100 ஏக்கர் பரப்பளவில் புதி ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்கள் அனைத்தும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதால், மழைக்காலங்களில் பெய்யும் நீரானது கிராமத்தில் உட்புகுந்து வீடுகள், பள்ளிகள் மற்றும் விவசாய நிலங்களில் புகுவதால், பயிர்கள் சேதம் அடைகின்றன. இந்த வாய்க்கால் ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே பருவமழை தொடங்குவதற்கு முன்பு நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், என்று கூறியிருந்தனர்.

    • ஜெயங்கொண்டத்தில் நாய்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் பெருகி வருகிறது
    • இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை துரத்துவதால் கீழே விழும் அவலம்

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே மேலக்குடியிருப்பு குமரன் நகர், எம்.ஜி.ஆர். நகர் உள்ளிட்ட பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை அந்த வழியாக பள்ளி செல்லும் குழந்தைகளையும், வாகனங்களில் செல்பவர்களையும் துரத்தி சென்று கடிக்க முயற்சிக்கின்றன. இதனால் பள்ளி செல்லும் குழந்தைகளும், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அந்த வழியாக அச்சத்துடன் சென்று வருகின்றனர். ேமலும் நாய்கள் துரத்தியதால் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்த சம்பவமும் நடந்துள்ளது. மேலும் முதியவர்கள் அந்த வழியாக செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர்.

    மேலும் தனியாக செல்வதை தவிர்த்து சிலர் ஒன்று சேர்ந்து கையில் தடியுடன் சென்று வருகின்றனர். இதேபோல் நகரில் பல்வேறு இடங்களில் தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. அவற்றில் சில நாய்கள் கழுத்து, கால், உடல் உள்ளிட்ட இடங்களில் ஆறாத புண்ணுடன் மிகவும் மோசமாக நோய் தொற்று பரவும் அபாயத்தில் அலைந்து திரிகின்றன. எனவே தெரு நாய்களை அப்புறப்படுத்தி பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், வாகன ஓட்டிகளும், பள்ளி மாணவர்களும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×