என் மலர்tooltip icon

    அரியலூர்

    தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளை காத்திடும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட முதல்-அமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் பயனடையுமாறு அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி கேட்டுக்கொண்டுள்ளார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளை காத்திடும் நோக்கத்தில் முதல்-அமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் உருவாக்கப்பட்டது.

    இத்திட்டம் இரண்டு வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திட்டம் 1-ன் கீழ் குடும்பத்தில் ஒரு பெண் குழந்தையுடன் பெற்றோர் இருவரில் ஒருவர் கருத்தடை செய்திருந்தால், அப்பெண் குழந்தையின் பெயரில் நிலையான வைப்பு தொகையாக ரூ.50 ஆயிரம், திட்டம் 2-ன் கீழ் குடும்பத்தில் 2 பெண் குழந்தைகளில் 2-வது பெண் குழந்தை பிறந்து 3 ஆண்டுகளுக்குள் பெற்றோர் இருவரில் ஒருவர் கருத்தடை செய்திருந்தால், இரண்டு பெண் குழந்தைகளின் பெயரில் தலா ரூ.25 ஆயிரம் வீதம் நிலையான வைப்பு தொகையாக தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்படுகிறது. அக்குழந்தைக்கு 18 வயது பூர்த்தியடைந்ததும், வட்டியுடன் கூடிய முதிர்வு தொகை பெண் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.

    இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் அரியலூர் மாவட்ட பயனாளிகள் ஒரு பெண் குழந்தையுடன் அல்லது இரு பெண் குழந்தைகளுடன் அல்லது ஒரு பெண் குழந்தை இருந்தும், இரண்டாவது பிரசவத்தில் இரண்டும் பெண் குழந்தைகளாக உள்ள பெற்றோர்களில் யாரேனும் ஒருவர் கருத்தடை செய்தப்பின் இரண்டாவது குழந்தை மூன்று வயது முடிவதற்குள் குழந்தை பிறப்பு சான்று, பெற்றோர்கள் வயது சான்று, குடும்ப நல அறுவை சிகிச்சை செய்த சான்று, வருமான சான்று, இருப்பிட சான்று, ஆண் வாரிசு இல்லை என சான்று, சாதிச்சான்றிதழ், குடும்ப அட்டை நகலுடன் அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள சமூக நல விரிவாக்க அலுவலர் அல்லது கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் முறையாக ஆலோசனை பெற்று விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    அரியலூர் மாவட்டத்தில் டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் சார்பில் கார்கில் போரில் மரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    ஜெயங்கொண்டம்:

    கார்கில் போரில் தம் இன்னுயிர் நீத்து நம்மையும் நம் நாட்டையும் காப்பாற்ற போராடிய ராணுவ வீரர் களுக்கு, மரியாதை செலுத்தும் விதமாக டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் சார்பாக கார்கில் விஜய் திவாஸ்- ஐ முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள டி.வி.எஸ். ஷோரூம்களில் கார்கில் காலிங் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

    அதன்படி, அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகரில் கே.ஆர்.டி., டி.வி.எஸ். சார்பில், நடைபெற்ற ஊர்வலத்தை துணை போலீஸ் சூப்பிரண்டு கென்னடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக கே.கே.சி. கல்வி நிறுவனங்களின் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வான சின்னப்பன், போக்குவரத்து ஆய்வாளர் ரவிச்சந்திரன், உதவி ஆய்வாளர் ராமதாஸ், அரிமா சங்க தலைவர் லயன் சக்தி ரவிச்சந்திரன், செயலாளர் கண்ணையன், காவல் துறையினர், ஊர்க்காவல் படையினர், கே.ஆர்.டி., டி.வி.எஸ். நிறுவன ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் தங்களது டி.வி.எஸ். மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக வந்து ராணுவ வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும், மரியாதை செலுத்தும் விதமாகவும் நாட்டுப்பற்றை தூண்டும் முழக்கங்களை முழங்கி கொண்டு வந்தனர்.

    இந்த ஊர்வலம் கே.ஆர்.டி., டி.வி.எஸ். ஷோரூமிலிருந்து பஸ் நிலையம், அண்ணாசிலை, கடைவீதி, டாக்டர் கருப்பையா நகர் மற்றும் முக்கிய வீதிகள் வழியாக சென்று முடிவடைந்தது. இதற்கான ஏற்பாடுகளை நிறுவன பொது மேலாளர் ராஜேஷ்குமார், மேலாளர் சண்முகம் மற்றும் சர்வீஸ் மேலாளர் ரமேஷ் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் கே.ஆர்.டி., டி.வி.எஸ். நிறுவன உரிமையாளர் ராஜன் நன்றி கூறினார்.
    அரியலூர் அருகே கள்ளக்காதல் தகராறில் வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் செந்துறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே  உள்ள சிறுகடம்பூர் மேலப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 40). இவரது மனைவி ஜெயா (32). இந்த தம்பதிக்கு ஜெயபால் (7) என்ற மகனும், ஜெயஸ்ரீ (6), தன்யஸ்ரீ (4) ஆகிய இரண்டு மகள்களும் உள்ளனர்.

    கோவையில் கூலி வேலை பார்த்து வந்த துரைராஜ் கடந்த வாரம் சொந்த ஊருக்கு வந்திருந்தார். அப்போது முதல் அவருக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருந்து வந்தது. அதற்கேற்றாற்போல் இரு தினங்களுக்கு முன்பு அவரது மனைவி ஜெயா செல்போனில் நீண்ட நேரம் ஒரு ஆணுடன் பேசிக்கொண்டு இருந்துள்ளார்.

    ரகசியமாக விசாரித்ததில் ஜெயாவுக்கும். அதே ஊரைச்சேர்ந்த ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு  இருந்தது தெரியவந்தது. இதையடுத்து துரைராஜ் தனது மனைவியை கண்டித்தார். எனவே கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று இரவும் தம்பதிக்கிடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த துரைராஜ் மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளார். பின்னர் வீட்டின் வெளியே கட்டிலை போட்டு தூங்க சென்றார்.

    இன்று காலை துரைராஜ் கட்டில் போடப்பட்டிருந்த இடத்தின் அருகேயுள்ள மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார்.  இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள்  உடையார்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பிரேமா மற்றும் போலீசார் விரைந்து வந்து தூக்கில் தொங்கிய துரைராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    முன்னதாக துரைராஜின் உடலில் கழுத்து, கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயங்கள் தென்பட்டன. எனவே அவரை யாரோ அடித்துக்கொலை செய்து விட்டு அதனை மறைப்பதற்காக தூக்கில் தொங்கவிட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.

    மேலும் இன்று காலை முதல் துரைராஜின் மனைவி ஜெயா தலைமறைவாகி விட்டார். எனவே அவர்தான் கணவரை கொன்று விட்டு தலைமறைவாகி விட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் முதல் கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர். மேலும் ஜெயாவை தீவிரமாக தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் செந்துறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஜெயங்கொண்டத்தில் ரூ.72 லட்சம் செலவில் புதிய பாலம் கட்டும் பணியினை எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார். #Bridge

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், கழுவந் தோண்டி, தேவாமங்கலம் பெரிய வளையம் ஆகிய கிராமங்களை இணைக்கும் வகையில் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது. இந்த பாலத்தை அப்பகுதி பொது மக்கள், விவசாயிகள் பயன் பெறும் வகையில் இடிந்த பாலத்தை சீரமைக்கப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. புதிய பாலம் கட்டும் பணி தற்பொழுது 71.80 லட்சம் ரூபாய் மதிப்பில் தொடங்கப்பட்டுள்ளது.

    இந்த மூன்று கிராமங்களை இணைக்கும்வகையிலும் தார் சாலைகளும் அமைக்கப்படுகிறது. பாலம் கட்டும் பணி விரைவாக நடக்கின்றதா? உறுதியான முறையில் பாலம் கட்டப்படுகிறதா? என்பதை எம்எல்ஏ. ராமஜெயலிங்கம் ஆய்வு செய்தார். ஆய்வின் போது பணியினை விரைவாகவும், பாலத்தினை உறுதியாகவும் இருக்க வேண்டும் எனவும், மேலும் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக பாலம் கட்டும் பணியை முடித்து விட வேண்டும் என அதிகாரிகளுக்கும் ஒப்பந்ததாரருக்கும் அறிவுறுத்தினார்.

    ஆய்வின் போது பொதுப் பணித்துறை பொறியாளர் விஜயன் மற்றும் ஒப்பந்தகாரர் மற்றும் நகர செயலாளர் செல்வராஜ் மாவட்ட துணை செயலாளர் தங்க பிச்சைமுத்து, ஒன்றிய செயலாளர் கல்யாணசுந்தரம் மாவட்ட அம்மா பேரவை மனோகரன், அண்ணா தொழிற் சங்க மாவட்ட இணை செயலாளர் ஜெயசங்கர் முன்னாள் கவுன்சிலர்கள் மூர்த்தி, சுப்பிரமணியன், தலைமை கழக பேச்சாளர் ஜமால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    அரியலூரில் மாமியார் திட்டியதால் ரெயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரியலூர்:

    ராஜஸ்தான் மாநிலம் ஜாலூர் மாவட்டம் செவுடு கிராமத்தை சேர்ந்தவர் தலரா (வயது 25). இவரது மனைவி ரம்கோ (22). இவர்களுக்கு திருமணமாகி 2 வருடம் ஆகிறது. குழந்தைகள் இல்லை. இவர்கள் அரியலூரில் எலெக்ட்ரிக்கல் கடை வைத்து தொழில் செய்து வந்தனர்.

    இந்தநிலையில் நேற்றுக் காலை ரம்கோவுக்கு, ராஜஸ்தானில் இருந்து அவரது மாமியார் போன் செய்த போது, அவர் தூங்கி கொண்டிருந்ததால் போனை எடுக்கவில்லை. பின்னர் மீண்டும் போன் செய்த போது ரம்கோ எடுத்து பேசினார்.

    அப்போது அவரது மாமியார், ஏன் நீண்ட நேரமாக போனை எடுக்கவில்லை என்று தட்டிக்கேட்டதோடு, 8 மணி வரை தூங்கி கொண்டிருந்தால் எப்படி வியாபாரத்தை பார்க்க முடியும் என்று திட்டியதாக கூறப்படுகிறது. இதுபற்றி அவர் அவரது கணவர் தலராவிடம் கூறியபோது, வயதாகி விட்டதால் அப்படித்தான் இருப்பார்கள். அவர்கள் கூறியதை கண்டு கொள்ள வேண்டாம் என்று சமாதானப்படுத்தியுள்ளார். இருப்பினும் ரம்கோ மிகவும் மனமுடைந்தநிலையிலேயே இருந்துள்ளார். இதனிடையே தலரா வியாபாரத்திற்காக கடைக்கு சென்றுவிட்டார். மதியம் வீட்டிற்கு சாப்பிட வந்தபோது, வீட்டில் ரம்கோவை காணவில்லை. இதையடுத்து அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்தநிலையில் அரியலூர் ரெயில் நிலையத்தில் இருந்து ஒரு கி.மீ. தூரத்தில் தண்டவாளத்தில் இளம்பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக அரியலூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு இறந்து கிடந்தது ரம்கோ என தெரியவந்தது.

    இதையடுத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு வைத்தனர். மேலும் அவர் சென்னை சென்ற குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்திருப்பதும் தெரிய வந்தது. மாமியார் திட்டியதன் காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 2 வருடமே ஆவதால் ஆர்.டி.ஓ.வும் விசாரணை நடத்தி வருகிறார்.

    கூடுதல் பஸ் இயக்கக்கோரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #Student #Roadblock
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஊராட்சியில் ஸ்ரீபுரந்தான், சுத்தமல்லி, காரைக் குறிச்சி உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள மாணவ-மாணவிகள் கும்பகோணத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் படித்து வருகின்றனர். இவர்கள் தினமும் ஜெயங்கொண்டத்தில் இருந்து தா.பழூர் வழியாக கும்பகோணத்திற்கு செல்லும் பஸ்சில் பயணம் செய்து படித்து வந்தனர். ஆனால் இந்த பஸ் உரிய நேரத்தில் வருவதில்லை. இதனால் மாணவ-மாணவிகள் பள்ளி, கல்லூரிக்கு சரியான நேரத்தில் செல்ல முடியாமல் அவதியடைந்து வந்தனர்.

    இந்நிலையில் நேற்று காலையிலும் பள்ளி, கல்லூரிக்கு செல்ல மாணவர்கள் தா.பழூர் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது பஸ் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் தா.பழூர் பஸ் நிலையம் முன்பு ஜெயங்கொண்டம்-கும்ப கோணம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த தா.பழூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட மாணவ-மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து மாணவர்கள் கூறியதாவது:- இந்த வழியாக கும்பகோணத்திற்கு 1 மணி நேரத்திற்கு ஒரு பஸ்சும், 1½ மணி நேரத்திற்கு ஒரு பஸ்சும் வந்து செல்கின்றன. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தாமதமாக செல்கின்ற சூழ்நிலை ஏற்படுகிறது. மேலும் தாமதமாக செல்வதால் ஆசிரியரிடம் திட்டுவாங்க வேண்டிய அவசியம் ஏற்படுவதுடன், எங்களது படிப்பும் பாதிக்கின்றது. எனவே இந்த பகுதியில் கும்பகோணம் செல்வதற்கு கூடுதல் பஸ்களை இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவ-மாணவிகள் கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து பேச்சுவார்த்தையில் போலீசார் சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து மாணவ-மாணவிகள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் ஜெயங்கொண்டம்-கும்பகோணம் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் ஆய்வுக் கூட்டம் மாவட்ட தலைவர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது.
    ஜெயங்கொண்டம்:

    சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி அமைப்பாளர் சரவணன், பொருப்பாளர் அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது,

    வரும் பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் மிகப் பெரிய சக்தியாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் நிர்வாகிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. பாஜக கட்சி மாபெரும் சக்தியைப் பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.

    சேலம் எட்டு வழி சாலை பற்றி கேட்டபோது பாரதிய ஜனதா கட்சியில் வாஜ்பாய் நான்கு வழிச்சாலையை கொண்டு வந்தார். தற்போது தொடர்ந்து எட்டு வழிச்சாலை நாடு முழுவதும் நாட்டின் முன்னேற்றத்திற்கு செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கு பல தடைகள் வருகின்றது. இதற்கு அரசியல் காரணமே.

    அரியலூர் மாவட்டத்தில் மத்திய அரசு மூலம் வளர்ச்சித் திட்டப் பணிகள் இது வரை எந்தவித திட்டமும் செயல்படுத்தப்படவில்லை எனக் கேட்ட போது ஒவ்வொரு மாவட்டமாக ஆய்வு செய்து வருகிறோம். அரியலூர் மாவட்டத்தில் என்ன தேவையோ அவைகளை விரைவில் செயல்படுத்துவோம் எனக் கூறினர்.

    பாஜக வரும் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் இணைந்து போட்டியிடுமா? என கேட்டபோது அகில இந்திய தலைவர் கூறியது போல கூட்டணிக்கு நாங்கள் தயார் கூட்டணிக்கு யார் வருகிறார்களோ அவர்களுடன் வலுவான உறுதியான கூட்டணி அமைத்து வெற்றி பெறுவோம்.

    தற்போது ஒரு பாராளுமன்ற தொகுதியை கைப்பற்றியுள்ளோம். வரும் காலகட்டத்தில் கணிசமான தொகுதிகளை கணிசமான எண்ணிக்கையில் பல தொகுதிகளை கைப்பற்றுவோம் என கூறினார்.

    கூட்டத்தில் பா.ஜ.க. நெசவாளர் பிரிவு மாநில தலைவர் பாலமுருகன் உட்பட மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    அரியலூர் மாவட்டம் ஏழேரி கிராமத்தில் குடிநீர் குழாய்யை அரசு தலைமை கொறடா தாமரை.எஸ்.ராஜேந்திரன் எம்.எல்.ஏ, தொடங்கி வைத்தார்.

    அரியலூர்:

    அரியலூர் ஒன்றியம் கருப்பிலாக்கட்டளை ஊராட்சி, ஏழேரி கிராமத்தில் பொதுமக்கள் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி வேண்டி கோரிக்கை விடுத்திருந்தனர், அதன் அடிப்படையில் ரூ.25.40 லட்சம் மதிப்பில் புதிய ஆழ்குழாய் அமைத்து பைப் லைன் மூலம் குடிநீர் வழங்க ஏற்பாடுசெய்யப்பட்டது. மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி முன்னிலையில், அரசு தலைமைக்கொறடா தாமரை.எஸ்.ராஜேந்திரன் எம்.எல்.ஏ குடிநீர் குழாய்யை திறந்து வைத்து பேசியதாவது:

    அரியலூர்ஒன்றியத்திற்குட்பட்ட கருப்பிலாக்கட்டளை ஊராட்சியைச் சேர்ந்த ஏழேரி கிராம மக்கள் உப்புநீர் மட்டுமே குடிக்க பயன்படுத்தி வந்தனர். இக்கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் என்னிடம் நல்ல குடி தண்ணீர் எங்களது கிராமத்திற்கு வழங்கிட கோரிக்கை வைத்திருந்தார்கள்.

    அதனடிப்படையில், மாவட்ட நிர்வாகத்தின் துரித நடவடிக்கையில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து சுமார் ரூ.25.40 லட்சம் மதிப்பீட்டில் வைப்பம் கிராமத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து, அதன் மூலம் புதிய பைப் லைன் அமைத்திட ஆணைப்பிறப்பித்து, இப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் இக்கிராமத்தில் உள்ள 115 குடும்பங்கள் பயன்பெறும் என தெரிவித்தார்.

    இதில் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ ராமஜெயலிங்கம், மாவட்ட தலைவர் கணேசன், மாவட்ட பொருளாளர் அன் பழகன், மாவட்ட துணை செயலாளர் தங்கபிச்ச முத்து, ஒன்றிய செயலாளர் செல்வராஜ், அரசுவக்கீல் சாந்தி, தாசில்தார் முத்து லெட்சுமி, யூனியன் கமிஷ்னர் ஜாகீர்உசேன், செய்தி மக்கள் தொடர்பு உதவி அலுவலர் சரவணன், சிவக்குமார், மாநில ஒப்பந்தகாரர் பிரேம், முன்னாள் யூனியன் சேர்மன் சேப்பெருமாள், கல்லங்குறிச்சி பாஸ்கர், பொய்யூர் பாலு, சுண்டகுடி சுரேஷ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பிச்சபிள்ளை, மேகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    செந்துறை அருகே இன்று குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #Waterproblem

    ஆர்.எஸ்.மாத்தூர்:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள முதுகுளம் கிராமத்தில் கடந்த 6 மாதமாக சரியாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் 3மாதத்திற்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து ஆழ்குழாய் கிணறு அமைத்து தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அதன்படி அப்பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டது. ஆனால் குறைந்த அடியில் அமைக்கப்பட்டதால் அதில் இருந்து சரியாக தண்ணீர் வரவில்லை.

    இதனால் முதுகுளம் பகுதிக்கு தொடர்ந்து தண்ணீர் விநியோகம் செய்யப்பட வில்லை.

    இந்தநிலையில் இன்று காலை அப்பகுதி பொது மக்கள் முதுகுளத்தில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    உடனே சம்பவ இடத்திற்கு தளவாய் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். #Waterproblem

    ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் குறுவட்ட அளவிலான செஸ் போட்டி கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்றது.
    ஜெயங்கொண்டம்:

    ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் குறுவட்ட அளவிலான செஸ் போட்டி கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்றது. போட்டிக்கு கங்கை கொண்டசோழபுரம் பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அண்ணாதுரை முன்னிலை வகித்தார். 

    மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். மாவட்ட கல்வி அலுவலர் விஜயலட்சுமி போட்டியை பார்வையிட்டார். போட்டிகளில் நடுவர்களாக கண்ணதாசன், ஷாயின்ஷா, பாண்டியன், விஜய், ஆனந்த், கார்த்திக்ராஜன், பிரகாஷ், ராஜ், குமார், மோகன், சுப்ரமணியன், பழனிவேல் உள்பட பலர் பணியாற்றினர். 

    குறுவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் 11,14,17,19 ஆகிய வயது பிரிவுகளில் 40 பள்ளிகளை சேர்ந்த 249 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு போட்டியிட்டனர். இறுதியில் கங்கை கொண்டசோழபுரம் உடற்கல்வி ஆசிரியர் குமார் நன்றி கூறினார்.
    அரியலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு பெங்களூரில் இருந்து புதிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு 800 கட்டுப்பாட்டு கருவிகள் வரப்பெற்றுள்ளது. இதனை கலெக்டர் பார்வையிட்டார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு பெங்களூரில் இருந்து புதிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு 800 கட்டுப்பாட்டு கருவிகள் வரப்பெற்றுள்ளது. இதனை அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி பார்வையிட்டார். 

    அப்போது அவர் கூறுகையில், இந்திய தேர்தல் ஆணையம் மூலமாக அரியலூர் மாவட்டத்திற்கு புதிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் 80 பெட்டிகளில் 800 கட்டுப்பாட்டு கருவிகள் பெங்களூரில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இருந்து  கொண்டுவரப்பட்டன.
     
    இந்த கட்டுப்பாட்டு கருவிகள் தாசில்தார் (தமிழ்நாடு கேபிள் டி.வி. நிறுவனம்) முத்துகிருஷ்ணன் மூலம் அரியலூர் மாவட்டத்திற்கு எடுத்துவரப்பட்டது. இந்த கட்டுப்பாட்டு கருவிகள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் பாதுகாப்பாக வைத்து, சீல் வைக்கப்பட்டு, 24 மணிநேர துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது என்றார்.
    ஜெயங்கொண்டத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அனுமதியின்றி கூழாங்கற்கள் ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்து டிரைவரை கைது செய்தனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நான்கு ரோடு பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் தினேஷ் குமார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தா. அப்போது அவ்வழியாக கடலூரிலிருந்து உடையார்பாளையம் நோக்கி சென்ற லாரியை நிறுத்தி விசாரித்ததில்  அதில் அரசு அனுமதியின்றி 4 யூனிட்  கூழாங்கற்கள் ஏற்றி வந்தது  தெரியவந்தது. 

    இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார் லாரி ஓட்டுநர் கீழகுமார மங்கலம் சுந்தர ராஜன் (35) என்பவர் மீது வழக்கு பதிந்து கைது செய்து லாரியை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றார்.
    ×