என் மலர்
அரியலூர்
திண்டுக்கல் அருகே நத்தம் ஒன்றியத்தில் 23 ஊராட்சிகள் உள்ளன. 100-க்கும்மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள், வங்கி கணக்குகளை தொடங்குவதற்காக வங்கிகளில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்தால் ஒரு மாதத்திற்கு மேலாகியும், சேமிப்பு புத்தகம் இருப்பு இல்லை என்றும், மேலும் ஒருசில வங்கிகளில் ஊழியர்கள் பற்றாக்குறையும், சேமிப்பு கணக்கு துவங்கி கொடுப்பதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர்.
சேமிப்பு கணக்கு தொடங்கி புத்தகம் தராததால், அரசு வழங்கும் மானியம், கல்வி உதவித்தொகை பெறுவதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேலும் கிராமத்தில் உள்ள படிப்பறிவு இல்லாதவர்கள், கைரேகை வைப்பவர்களும் தங்களுடைய சேமிப்பு கணக்கு புத்தகம் இருந்தால் தான் அவர்களுக்கு தங்களது கணக்கில் எவ்வளவு இருப்பு பணம் இருக்கிறது என்று கேட்டு தெரிய முடியும். படித்தவர்கள் ஏடிஎம் எந்திரத்தில் போய் பார்த்து கொள்கின்றனர்.
ஆனால் கிராமத்தில் உள்ள படிப்பறிவு இல்லாதவர்கள், கைரேகை வைப்பவர்களுக்கு இந்த சேமிப்பு புத்தகம் இருந்தால் மட்டுமே அருகில் உள்ளவர்களையும், வங்கி ஊழியர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளும் நிலமை உள்ளது.
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்தால் அவர்கள் வீன்அலைச்சலும், மன உளைச்சலும் இல்லாமல் அவர்கள் உங்களுடைய உதவியை நாடி பலர் வங்கி கணக்கு தொடங்கவும், பணத்தை வங்கியில் தொடர்வைப்புக்கு வழி வகுக்கும், அப்போது தான் வங்கி மீது நம்பிக்கைக்கு ஏதுவாக இருக்கும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சென்னை -கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வடவார் தலைப்பில் வீராணம் ஏரிக்கு செல்லும் தண்ணீரை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ நேரில் சென்று ஆய்வு செய்தார்.
கடந்த சில நாட்களாக கர்நாடகவில் பெய்ந்து வரும் மழையால் மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்து உபரி தண்ணீர் திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட தண்ணீர் அணைக்கரை வடவார் தலைப்பு மற்றும் கீழணைக்கு கடந்த 26- ந்தேதி இரவு 8 மணியளவில் வந்து சேர்ந்தது.
வரலாறு காணாத அளவிற்கு தண்ணீர் அதிகம் வந்ததால் அன்று இரவே வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனை அடுத்து ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ ராமஜெயலிங்கம் நேரில் சென்று வடவார் தலைப்பில் இருந்து செல்லும் தண்ணீர் வினாடிக்கு 2,200 கன அடி வீதம் செல்வதை பார்வையிட்டார்.
வடவார் தலைப்பில் இருந்து வீராணம் ஏரிக்கு செல்லும் வாய்க்கால் 4.5 கோடியில் தூர்வாரும் பணி, தண்ணீர் திறக்கப்படுவதற்கு முன்பே நடந்து முடிந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். கீழணையில் இருந்து தற்போது வினாடிக்கு 2 ,200 கன அடி வீதம் வீராணம் ஏரிக்கு குடி தண்ணீர் மற்றும் விவசாயத்திற்கும் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.
இந்த ஆய்வின்போது அணைக்கரை-கீழணை உதவி செயற்பொறியாளர் அருணகிரி மற்றும் உதவி பொறியாளர் வெற்றிவேல், மாவட்ட துணை செயலாளர் தங்கபிச்சமுத்து, ஒன்றிய செயலாளர் கல்யாண சுந்தரம், நகரசெயலாளர் செல்வராஜ், தண்டபாணி, மனோகரன், மாவட்ட தொழிற் சங்க துணை செயலாளர் ஜெயசங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள உஞ்சினி வடக்கு தெருவை சேர்ந்தவர் ரெங்கநாதன். அதேபகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம். இவர்கள் இருவருக்கும் அப்பகுதியில் விவசாய நிலங்கள் உள்ளது. இந்த நிலங்களில் எல்லை பிரச்சினை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் சம்பவத்தன்று இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் ரெங்கநாதன் மற்றும் தர்மலிங்கம் மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது 48) ஆகிய 2 பேர் காயமடைந்தனர். இதில் காயமடைந்த 2 பேரும் அரியலூர், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இதுகுறித்து இருதரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் இருப்புலிக்குறிச்சி போலீசார் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அன்பழகன், அவரது தம்பி குணசேகரன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி, செல்வம் ஆகிய 4 பேரை கைது செய்து ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள மற்ற 3 பேரையும் தேடி வருகின்றனர்.
ஜெயங்கொண்டம்:
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் அப்துல் கலாம் நினைவு நாளையொட்டி இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் விதமாக 26-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் தயார்படுத்தும் விதமாக ஆசிரியர்களுக்கு அறிவியல் தொழில் நுட்ப புத்தாக்க பயிற்சி ஜெயங்கொண்டம் அன்னை தெரசா மெட்ரிக் பள்ளியில் பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சிக்கு பள்ளி தாளாளர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் விஜயலட்சுமி பயிற்சியை துவக்கி வைத்தார். பள்ளி முதல்வர் தனலெட்சுமி, அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் பழனியப்பன், பொருளாளர் சக்திவேல், லயன் சங்கத்தலைவர் ரவிச்சந்திரன், செயலர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வட்டார கல்வி அலுவலர் ராசாத்தி, கலியபெருமாள் ஆகியோர் வாழ்த்தி பேசினர். பயிற்சியில் மரபு சார் தொழில்நுட்பம் சமூக பண்பாடு மற்றும் வாழ்வாதாரம், செல்வம், ஆரோக்கியம், சுகாதாரம், துப்புரவு, சூழல் மண்டலமும் செயல்பாடும் உள்ளிட்ட தலைப்புகளில் ஆசிரியர்களுக்கு மாணவர்களை இளம் விஞ்ஞானிகளாக உருவாக்குவதற்கான பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் முத்துக்குமார், பிரபாகரன், முத்துக்கண்ணன், நாராயணசாமி, சதாசிவம், தர்மராஜன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். பயிற்சியில் அரியலூர் மாவட்டம் முழுவதிலும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்கள் 250 பேர் கலந்து கொண்டனர்.
முன்னதாக அறிவியல் இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தர்மராஜன் வரவேற்றார். இறுதியில் செயற்குழு உறுப்பினர் ஞான சேகரன் நன்றி கூறினார். #Tamilnews
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள அய்யூர் கிராமம் மேலத்தெருவை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மனைவி அஞ்சலை (வயது55). சம்பவத்தன்று இவர் அதே பகுதியில் உள்ள முந்திரி தோப்பில் தனது ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி அஞ்சலை காதில் போட்டிருந்த தங்க தோடுகள் மற்றும் அவர் கையில் வைத்திருந்த ரூ.500 பணத்தையும் பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார்.
இது குறித்து அஞ்சலை ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினோத் ராஜ் வழக்கு பதிவு செய்து, பெண்ணிடம் கத்தியை காட்டி பணம் மற்றும் நகைகளை பறித்த குற்றத்துக்காக பூக்குழி கிராமத்தை சேர்ந்த ராமானுஜம் (வயது18) என்பவரை கைது செய்தனர்.
பின்னர் ஆண்டிமடம் (பொறுப்பு) இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி, ராமானுஜத்திடம் விசாரணை செய்ததில் கடந்த 14-ந் தேதி இரவு கவரப்பாளையம் கிராமம் அண்ணா வீதியில் வசிக்கும் தனியார் பள்ளி ஆசிரியர் ஜெயபிரகாஷ் என்பவர் , வீட்டுக்குள் புகுந்து வீட்டில் இருந்த 5 பவுன் நகை, வெள்ளி கொலுசு, ரொக்க பணம் 1000 கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டார்.
மேலும் அங்கு திருடிய நகைகளை கடலூர் மாவட்டம், விருத்தாச்சலத்தில் உள்ள ஒரு தனியார் வட்டி கடையில் அடகு வைத்துள்ளதாக கூறினார்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் வேலுசாமி மற்றும் போலீசார் அடகு வைத்த நகைகளை மீட்டனர்.
பின்னர் ராமானுஜத்தை ஜெயங்கொண்டம் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தினர். நீதிபதி 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.
அரியலூர் அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் அப்துல்கலாம் நினைவு நாளையொட்டி அமைதி ஊர்வலம் நடைபெற்றது. கல்லூரியில் இருந்து தொடங்கிய ஊர்வலம் செந்துறை சாலை வழியாக சென்று அரியலூர் பஸ் நிலையத்தில் முடிவடைந்தது. ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகள் அப்துல்கலாம் பொன்மொழி வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் கருணாகரன் செய்திருந்தார்.
இதேபோல் அரியலூர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ- மாணவிகள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். ஆர்.எஸ்.மாத்தூர் பஸ் நிலையம் அருகே 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், பொதுமக்கள் நல்லுறவு கமிட்டி மற்றும் மக்களாட்சி பேரவை சார்பில் அப்துல்கலாம் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். அரியலூர் ஒன்றியம் கல்லக்குடி கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அப்துல்கலாம் உருவப்படம் முன்பு பள்ளி மாணவ-மாணவிகள் மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.
ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் பணி புரிகின்ற ஆட்டோ, ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் சார்பில் அப்துல் கலாம் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல் ஜெயங்கொண்டம் நகர பகுதிகளில் பல்வேறு இடங்களிலும் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளிலும் அரசு சார்ந்த அலுவலகங்களிலும் அப்துல் கலாம் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள இடங்கன்னி கிராமத்தை சேர்ந்தவர் அன்பரசன்(வயது 27). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரவி மகள் ராஜலட்சுமி(22) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் ராஜலட்சுமி வயிற்று வலி காரணமாக அவதிப்பட்டு வந்தார்.
மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்றும் வயிற்று வலி குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த ராஜலட்சுமி நேற்று முன்தினம் காலை வீட்டில் யாரும் இல்லாதபோது சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவருடைய தந்தை ரவி தா.பழூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக்கூட்டரங்கில், விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் விஜய லட்சுமி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட திட்ட அலுவலர் லோகேஸ் வரி,கோட்டாட்சியர் சத்தியநாராயணன், மாவட்ட கூடுதல் எஸ்பி. பெரியய்யா, தாசில்தார் முத்து லெட்சுமி, கூட்டுறவு இணை பதிவாளர் பழனிவேல், துணை பதிவாளர் செல்வராஜ், வேளாண் துறை இணை இயக்குனர் உதய குமார், வேளாண்மை அதிகாரி வடிவேல், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சரவணன், விவசாய சங்க பிரதிநிதி அரியலூர் பிச்சபிள்ளை, செங்கமுத்து, வாரணவாசி ராஜேந்திரன், ஆண்டிமடம் ஜெயசந்திரன், தூத்தூர் தர்மராஜ், திருமானூர் சண்முகசுந்தரம், அம்பேத்கர் வழியன், பாண்டியன், ஏரிமற்றும் ஆற்று பாசன விவசாய சங்க தலைவர் விஸ்வநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்,
கூட்டத்தில் கொள்ளிடம் ஆற்றில் 5 இடங்களில் தடுப்பனை கட்ட வேண்டும், புள்ளம் பாடி வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட வேண்டும், ஏரி, குளம், வாய்க்கால் பகுதியில் குடிமராமத்து திட்டத்தில் நடை பெற்ற முறைகேடுகளை விசாரிக்க வேண்டும்,ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது,
இக்கூட்டத்தில் கலெக்டர் விஜய லெட்சுமிபேசும் போது, அரியலூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 954 மி.மீ ஆகும். நடப்பு ஆண்டில் இம்மாதம் இது நாள் வரை 196.98 மி.மீ. மழை பெய்துள்ளது. வேளாண்மை மற்றும் தோட்டக் கலை பயிர்களுக்கு தேவையான 1306 மெ.டன் யூரியா, 856 மெ.டன் டி.ஏ.பி, 637 மெ.டன் பொட்டாஷ் மற்றும் 1066 மெ.டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை மையங்களில் இருப்பில் உள்ளது. இதுவரை சான்று பெற்ற நெல் விதைகள் வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் 15 மெ.டன், தனியார் விதை விற்பனை மையங்கள் மூலம் 5 மெ.டன் என கூடுதலாக 20 மெ.டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
தற்போது வேளாண்மை விரிவாக்க மையங்களில் 129 மெ.டன் மற்றும் தனியார் கடைகளில் 30 மெ.டன் ஆக மொத்தம் 159 மெ.டன் நெல் விதைகள் கையிருப்பில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் மற்றும் தா.பழூரில் தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் சார்பில் ரூ.10.73 கோடி மதிப்பீட்டில் 87 காவலர்களுக்கான குடியிருப்புகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதனை அடுத்து மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி, மாவட்ட எஸ்.பி அபினவ் குமார் ஆகியோர் குத்து விளக்கேற்றி, பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான சாவிகளை வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் கூறுகையில்,
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட காவலர்களுக்கான குடியிருப்புகள் பணிகள் நிறைவுற்றதைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சரால், ஜெயங்கொண்டம் போலீஸ்நிலையத்திற்கு ரூ.9 கோடியே 91 லட்சம் மதிப்பீட்டில் 2 ஆய்வாளர்கள், 5 சார்பு ஆய்வளர்கள், 53 காவலர், தலைமைக் காவலர்களுக்கான குடியிருப்புகளையும், 6 அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்களுக்கான குடியிருப்புகளும் மற்றும் தா.பழூரில் ரூ.82 லட்சம் மதிப்பீட்டில் 1 சார்பு ஆய்வாளர், 20 காவலர், தலைமை காவலர்களுக்கான குடியிருப்புகளையும் என ரூ.10 கோடியே 73 லட்சம் மதிப்பீட்டில் 87 காவலர்களுக்கான குடியிருப்புகளை திறந்து வைத்தார்கள்.
இக்குடியிருப்புகளில் 1 வரவேற்பறை, 2 படுக்கறைகள், 1 சமையலறை, 1 கழிவறை மற்றும் தண்ணீர் வசதிகளுடன் மழைநீர் சேகரிக்கும் தொட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளது என கலெக்டர் விஜயலெட்சுமி தெரிவித்தார்.
அதன் பின்னர் குடியிருப்பு பகுதிக்கு முன்பாக மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இதனை தொடர்ந்து நான்கு ரோட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து சிக்னலை தொடக்கி வைத்தார்.
நிகழ்ச்சியின் போது ஏடிஎஸ்பி பெரியய்யா, ஆர்டிஓ. ஜோதி, டிஎஸ்பி கென்னடி, தாசில்தார் குமரய்யா மற்றும் காவலர்கள் மற்றும் மகளிர் காவலர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முடிவில் மகளிர் காவலர் கார்த்திகா நன்றி கூறினார்.






