என் மலர்
அரியலூர்
அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியம், நடுவலூர் கிராமத்தில் எண்ணெய் பனை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் விவசாயி இன்னாசிமுத்து வயலில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பாமாயில் மர தோட்டத்தை கலெக்டர் ரத்னா ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய- மாநில அரசுகளின் பாமாயில் பண்ணை திட்டத்தின் கீழ் அரியலூர் மாவட்டத்தில் 80 ஹெக்டேர் அளவில் டெனிரா என்கிற ரக பாமாயில் மரம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பாமாயில் மரமானது 30 ஆண்டுகளுக்கு நிரந்தர மாத வருமானம் தரக்கூடியது. 3 முதல் 5 ஆண்டுகளிலிருந்து அறுவடைக்கு தயாராகும். ஒரு ஹெக்டேர் பரப்பிற்கு 30 டன் வரை அறுவடை செய்யப்படுகிறது. பாமாயில் மரமானது மிதமான சாகுபடி செலவு, வேலையாட்கள் தேவை குறைவு, மழை, வெள்ளம், பூச்சிநோய் தாக்குதல் மிகவும் குறைவு. மேலும், அரசு நிர்ணயித்த விலையில் உத்தரவாத கொள்முதல் செய்யப்படுகிறது. மரம் நட்டதில் இருந்து முதல் 4 வருடத்திற்கு அரசு மானியம் பெறப்படுகிறது.
முதல் வருடம் கன்று மற்றும் பராமரிப்பு செலவிற்காக ஒரு ஹெக்டேருக்கு ரூ.22 ஆயிரமும், இரண்டு மற்றும் மூன்றாம் வருடம் ஊடுபயிர் மற்றும் பராமரிப்பு செலவிற்காக ஆண்டிற்கு ரூ.10 ஆயிரமும், 4-ம் வருடம் பராமரிப்பு செலவிற்காக ரூ.5 ஆயிரமும் வழங்கப்படுகிறது. அரியலூர் மாவட்டத்தில் வாரணவாசி கிராமத்தில் உள்ள ஆலையில் விவசாயிகளிடம் பாமாயில் பழக்குலைகளை கொள்முதல் செய்து, பணப்பட்டுவாடா செய்து வருகிறது. பாமாயில் பயிர் செய்வதன் மூலம் அதிக லாபம் பெறலாம். மேலும், தமிழக அரசு பாமாயில் பழக்குலைகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையினை அறிவித்து கடந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தி வருகிறது. விவசாயிகள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி பாமாயில் மரம் பயிரிட்டு ஒருங்கிணைந்த கலப்பு பண்ணை அமைத்து பயன்பெறலாம். இவ்வாறு அவா் கூறினார். ஆய்வின் போது வேளாண்மை துணை இயக்குனர் பழனிசாமி, வேளாண்மை அலுவலர்கள் செல்வகுமார், சுப்ரமணியன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) ரமேஷ்குமார், அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் சகாதேவன் மற்றும் வேளாண்மை அலுவலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.
அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அரியலூர் மாவட்ட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் அரியலூர், ராஜாஜி நகர், கல்லூரி சாலையில் குடிநீர் பரிசோதனை மையம் இயங்கி வருகிறது. இந்த பரிசோதனை மையத்தில் தண்ணீர் மக்களுக்கு குடிப்பதற்கு உகந்ததா? என பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது, இங்கு விவசாயத்திற்கு பயன்படுத்தும் நீர், பாசனத்திற்கு பயன்படுத்தும் நீர், கோழிப்பண்ணைக்கு (வளர்ப்பு பறவைகள்) பயன்படுத்தும் நீர், நீச்சல் குளத்திற்கு பயன்படுத்தும் நீர் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள நீர் போன்றவைகளை பரிசோதனை செய்வதற்காக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
மேற்கண்ட பயன்பாட்டுகளுக்கான நீரை பரிசோதனை செய்ய ரூ. ஆயிரம் மற்றும் அதற்குண்டான ஜி.எஸ்.டி. 18 சதவீதம் செலவின தொகையாக அரசு நிர்ணயத்துள்ளது. எனவே, பொதுமக்கள் மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலகங்கள் குடிநீர் பரிசோதனை செய்து பயன்பெறலாம். இது தொடர்பாக அரியலூர் கிராம குடிநீர் வடிகால் வாரியத்தின் நிர்வாக பொறியாளரை அணுகலாம்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் செவித்திறன் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் ரத்னா தலைமை தாங்கி, ஊர்வலத்தை தொடங்கி வைத்து பேசுகையில், அரியலூர் மாவட்டத்தில் தேசிய செவித்திறன் தின விழிப்புணர்வு பிரசாரமானது வருகிற 16-ந் தேதி வரை நடைபெறவுள்ளது. காது கேளாமை பற்றிய விழிப்புணர்வை அனைவரும் அறிந்து கொள்ள செவித்திறன் தினம் கொண்டாடப்படுகிறது என்றார்.
அரியலூர் அரசு தலைமை மருத்துவமனையில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலம் அரியலூர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக அண்ணா சிலை அருகே சென்றடைந்தது. மேலும், கொரானோ வைரசை தடுக்க நம் கைகளை சுத்தமாக கழுவுவோம், கைக்குட்டைகளை பயன்படுத்துவோம், கை கொடுப்பதை தவிர்த்து, வணக்கம் செலுத்துவோம், கூட்டமாக கூடுவதை தவிர்ப்போம் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி மாணவ- மாணவிகள் முழக்கமிட்டு ஊர்வலமாக சென்றனர்.
இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி தலைவர் டாக்டர் முத்துகிருஷ்ணன், துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) ஹேமசந்த்காந்தி, தலைமை மருத்துவ அலுவலர் ரவிசங்கர், மண்டல மருத்துவ அலுவலர் ரமேஷ், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பொம்மி மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள உட்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி மணிமேகலை. இவர்களது மகன் ராஜகுரு(வயது 30). மெக்கானிக் என்ஜினீயர். இவருக்கு விஜயா(26) என்ற மனைவியும், கிஷோர்(3) என்ற மகனும், 3 மாத பெண் குழந்தையும் உள்ளனர். இவர் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சிங்கப்பூர் சென்று அங்கு உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் ராஜகுரு நேற்று முன்தினம் மதியம் பணி முடிந்து தான் தங்கியிருந்த அறைக்கு சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது ஒரு திருப்பத்தில் அவர் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த கண்டெய்னர் லாரி எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். உடனே அவரது உடல் அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது.
பிரேத பரிசோதனை முடிந்து உடலை ஒப்படைப்பதில் டாக்டர்கள் தாமதம் செய்வதாக கூறப்படுகிறது. ராஜகுருவின் உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் வைத்துள்ளனர். இந்திய தூதரகம் மூலம் அவரது உடலை பிரேத பரிசோதனை செய்து சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க அரியலூர் கலெக்டர் ரத்னா நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மேலும் அவர் வேலை பார்த்த நிறுவனத்தில் உரிய இழப்பீட்டுத் தொகையை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில் அவரது உடல் இன்று (புதன்கிழமை) விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு கொண்டு சென்று அடக்கம் செய்யப்பட உள்ளது.
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள முத்துசேர்வாமடம் கிராமத்தை சேர்ந்தவர் சவுந்தரபாண்டியன். விவசாயி. கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2-ந் தேதி இவரது மகன் ஜீவகன், மீன்சுருட்டி என்ற இடத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற போது, ரெட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்த சங்கர் மகன் மணிகண்டன்(வயது 25), குமார்(23), திரிசங்கு மகன் துரைராஜ்(25) ஆகியோர் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் வாகனம் சேதமடைந்தது. இதையடுத்து தங்களது மோட்டார் சைக்கிளை சீர் செய்து தருமாறு ஜீவகன் மற்றும் அவரது தந்தை சவுந்தரபாண்டியனிடம் கேட்டுள்ளனர். அப்போது இரவு நேரம் என்பதால் காலையில் சீர் செய்து தருவதாக கூறியுள்ளார்கள். அப்போது வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன், குமார், துரைராஜ் ஆகியோர் ஜீவகன் தந்தை சவுந்தரபாண்டியனை கையால் தள்ளி கட்டையால் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மீன்சுருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி மறுநாள் (3.4.2019) உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் அளித்த புகாரின் பேரில் மீன்சுருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன், குமார், துரைராஜ் 3 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்து வந்த அரியலூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. குற்றவாளிகளான மணிகண்டன், குமார், துரைராஜ் ஆகியோருக்கு தலா 5 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜெயகுமார் தீர்ப்பளித்தார். இதையடுத்து அவர்கள் 3 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
அரியலூர்:
அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட சொத்துகளுக்காக 2019-20ம் ஆண்டிற்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணங்கள், பாதாள சாக்கடை கட்டணங்கள் மற்றும் நகராட்சி குத்தகை தாரர்கள் செலுத்த வேண்டிய கடை வாடகை தொகைகளை செலுத்தக்கோரி அரியலூர் நகராட்சியினால் பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் அரியலூர் நகராட்சி ஆணையர் குமரன் தலைமையில் ஊழியர்கள் குடிநீர் கட்டணம் வசூலிக்க சென்றனர். அப்போது அரியலூர் அழகப்பா 2வது தெருவில் உள்ள ஒரு வீடு உள்பட 3 வீடுகளில் குடிநீர் கட்டணம் செலுத்தாததால், அந்த வீடுகளின் குடிநீர் இணைப்பு நகராட்சி ஆணையர் முன்னிலையில் துண்டிக்கப்பட்டது.
அப்போது நகராட்சி ஆணையர் குமரன் கூறுகையில், மேலும் 1.4.2018 முதல் உயர்த்தப்பட்ட சொத்து வரி தொகைகளை அரசு அறிவிப்பு படி நிறுத்தி வைக்கப்பட்டு பழைய வரி தொகையையே பொதுமக்கள் செலுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணங்கள், பாதாள சாக்கடை போன்ற வரி தொகைகளை செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்புகள் நகராட்சியினால் துண்டிப்பு செய்யப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி தொகைகளை மற்றும் குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணங்களை உடனடியாக செலுத்தி நகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.






