என் மலர்tooltip icon

    அரியலூர்

    அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 54 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 54 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அரியலூர் நகராட்சி, அரியலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தலா 5 பேருக்கும், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 16 பேருக்கும், செந்துறை, ஜெயங்கொண்டம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தலா 9 பேருக்கும், தா.பழூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் ஒருவருக்கும், ஆண்டிமடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 3 பேருக்கும், ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 6 பேருக்கும் என மொத்தம் 54 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,345 ஆக உயர்ந்துள்ளது. இதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். 1,020 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 312 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 386 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.
    தா.பழூர் அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்த வருகின்றனர்.
    தா.பழூர்:

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள மதனத்தூர் மெயின்ரோட்டை சேர்ந்தவர் முருகானந்தம்(வயது 40). விவசாய கூலி தொழிலாளியான இவர், தனது வீட்டின் பின்புறம் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். அதற்காக மின்மோட்டார் பொருத்தும் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே முருகானந்தம் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது பற்றி தகவல் அறிந்த தா.பழூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முருகானந்தத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து அவரது மனைவி அமுதவள்ளி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே சாத்தம்பாடி கிராமத்தில் வடிகால் வசதி கேட்டு பொதுமக்கள் மறியலில் ஈடுபட முயன்ற சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    விக்கிரமங்கலம்:

    அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே சாத்தம்பாடி கிராமம் உள்ளது. தற்போது மழைக்காலம் தொடங்கிய நிலையில் நேற்று முன்தினம் பெய்த கன மழையில் சாத்தம்பாடியில் உள்ள வடக்கு தெருவில் உள்ள சில வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. மழைநீர் வழிந்தோடுவதற்கு சரியான வடிகால் வசதி இல்லாததாலும், மழைநீர் செல்லுமிடத்தில் ஆக்கிரமிப்புகள் உள்ளதாலுமே மழைநீர் குடியிருப்புகளுக்குள் புகுந்ததாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

    மேலும் வடிகால் வசதி வேண்டும் என பலமுறை அதிகாரிகளிடம் கூறியும், மனுக்கள் அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நேற்று ஒன்றுகூடிய வடக்குத்தெரு பொதுமக்கள், வடிகால் வசதி கேட்டு அரியலூர் முத்துவாஞ்சேரி சாலையில் தடுப்புகளை அமைத்து சாலை மறியல் செய்ய முயன்றனர்.

    அப்போது சம்பவ இடத்திற்கு வந்த சாத்தம்பாடி ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன் ஆக்கிரமிப்புகளை அகற்றி, மழைநீர் வழிந்தோடுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்தார். இதையடுத்து அப்பகுதி மக்கள் போராட்ட முடிவை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    அரியலூரில் ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா முக கவசங்கள் வழங்கும் பணியை அரசு கொறடா தொடங்கி வைத்தார்.
    அரியலூர்:

    அரியலூர் ரெயில்வே நிலைய சாலையில் உள்ள ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரர் மற்றும் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு விலையில்லா முக கவசங்கள் வழங்கும் பணிக்கான தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா தலைமை தாங்கினார்.

    நிகழ்ச்சியில் அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் கலந்து கொண்டு, குடும்ப அட்டைதாரர்கள், குடும்ப உறுப்பினர்களுக்கு தலா 2 முக கவசங்களை வழங்கி, அந்த பணியை தொடங்கி வைத்து பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்னுலாப்தீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    அரியலூரில் கொரோனாவுக்கான சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் திறந்து வைத்து, மருந்துகளை பார்வையிட்டார்.
    அரியலூர்:

    தமிழக முதல்-அமைச்சரின் உத்தரவின் பேரில், அரியலூர் மாவட்டம், குறுமஞ்சாவடி குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் சார்பில் புதிதாக கொரோனாவுக்கான சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை நேற்று அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் திறந்து வைத்து, மருந்துகளை பார்வையிட்டார். அப்போது கலெக்டர் ரத்னா உடனிருந்தார்.

    பின்னர் அரசு கொறடா தாமரை ராஜேந்திரன் பேசுகையில், இந்த சித்தா சிறப்பு மையத்தில் 100 படுக்கைகள் அமைக்கப்பட்டு, தலா ஒரு சித்த மருத்துவர், அலோபதி மருத்துவர் மற்றும் செவிலியர்கள், பணியாளர்கள் என 10 பேர் கொரோனா நோயாளிகளுக்கு சித்த மருந்து மூலம் சிகிச்சைகள் அளிக்கவுள்ளனர். மேலும் இந்த மையத்தில் கொரோனா அறிகுறிகள் அல்லது சந்தேகத்திற்கு ஆட்படும் பட்சத்தில் மருத்துவமனைக்கு செல்ல தயங்குபவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுபவார்கள். சிகிச்சை பெறுபவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட சத்தான உணவுகளும், நோய் தடுப்பு மருந்துகளும் வழங்கப்படவுள்ளது, என்றார்.

    இதைத்தொடர்ந்து அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விழாவில் ரூ.3 லட்சத்து 82 ஆயிரத்து 500 மதிப்பில் ஊரடங்கு காலத்தில் தேவைப்படும் உணவு பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு கொறடா தாமரை ராஜேந்திரன் வழங்கினார். இதில் கலெக்டர் ரத்னா, மாவட்ட மாற்றுத்திறாளி நல அலுவலர் பொம்மி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    ஜெயங்கொண்டம் அருகே சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக போக்சோ சட்டத்தில் போலீசார் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள மேலநெடுவாய் கிராமத்தை சேர்ந்த மோகன்குமாரின் மகன் விஜயகுமார்(வயது 25). இவர், 18 வயது சிறுமியை விருத்தாசலம் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று, பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. 

    இது குறித்து அந்த சிறுமி, விஜகுமார் மீதும், உடந்தையாக இருந்ததாக விஜயகுமாரின் நண்பர் சதீஷ் மீதும் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) தமிழரசி வழக்குப்பதிந்து, விஜயகுமாரையும், சதீசையும் தேடி வருகிறார்.
    சின்னநாகலூரில் மின்மாற்றியை சீரமைக்கக்கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    வி.கைகாட்டி:

    அரியலூர் மாவட்டம் பெரியநாகலூர் அருகே உள்ள சின்னநாகலூர் கிராமத்தில் 17 விவசாயிகள் மின் இணைப்பு பெற்று மின் மோட்டார் மூலம் ஆழ்குழாய் கிணற்றில் இருந்து பெறப்படும் தண்ணீரை கொண்டு விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2 வாரங்களாக மின்மாற்றி பழுதானதால், மின்சாரம் தடைபட்டுள்ளது.

    இதனால் தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலையில், விவசாய பயிர்கள் பாதிக்கப்படுவதாக கூறி மின்வாரிய அலுவலகத்தை விவசாயிகள் அணுகியுள்ளனர். ஆனால் மின்மாற்றியை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இதையடுத்து அந்த மின்மாற்றியை உடனடியாக சீரமைக்கக்கோரி மின்மாற்றி உள்ள இடத்தில், விவசாயிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்து அங்கு சென்ற கயர்லாபாத் போலீசார், மின்வாரிய அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதில் சமரசம் ஏற்பட்டதையடுத்து, விவசாயிகள் கலைந்து சென்றனர்.
    அரியலூர் அருகே கிராமம் கிராமமாக சென்று மாணவ- மாணவிகளுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுத்தரும் ஆசிரியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள குவாகம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவர் தத்தனூர் அரசு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பட்டதாரி படிப்பு முடித்து கராத்தே பயிற்சியில் நன்கு பயிற்சி பெற்றவர்.

    தான் அறிந்த கலைகளை அனைத்துக் பகுதி மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் ஆண்டிமடம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் ஊர் ஊராக சென்று அந்தந்த பகுதிகளில் உள்ள மாணவ-மாணவிகளுக்கு கராத்தே, சிலம்பம், ஜிம்னாஸ்டிக், யோகா, நீச்சல் உள்ளிட்ட பல்வேறு தற்காப்பு கலைகளை இலவசமாக கற்றுக்கொடுத்து வருகிறார். ஆசிரியரின் செயலுக்கு பொதுமக்கள் பாராட்டுகள் தெரிவித்துள்ளனர்.
    குவாகம் போலீஸ் நிலையம் அருகே மூதாட்டியை அரை பவுன் நகைக்காக கொன்ற சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குவாகம் காலனி தெருவை சேர்ந்த லோகிதாசின் மனைவி சிவகாமி (வயது 80). இவர்களுடைய மகள்களான கலைச்செல்வி, அம்பிகா, இளவரசி, பானுமதி ஆகியோர் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். 

    லோகிதாஸ் இறந்துவிட்டதால், சிவகாமி குவாகம் போலீஸ் நிலையம் அருகே உள்ள குடிசையில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் வீட்டில் உள்ள கட்டிலில் மர்மமான முறையில் அவர் இறந்து கிடந்தார்.

    இதுகுறித்து குவாகம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உத்தரவின்பேரில், சந்தேக மரணம் என போலீசார் வழக்குப்பதிந்து, சிவகாமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில், சிவகாமி தலையில் தாக்கப்பட்டு, கழுத்தை நெரித்து கொல்லப்பட்டது தெரிய வந்தது.

    இதுகுறித்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டதில், 14 வயது சிறுவன் மூதாட்டியை தாக்கி கழுத்தை நெரித்து கொன்று, அவர் காதில் அணிந்திருந்த அரை பவுன் தங்க தோடு மற்றும் 100 ரூபாயை எடுத்து சென்றது தெரியவந்தது. அந்த சிறுவனிடம் தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், நகையை தனது தந்தையிடம் கொடுத்ததாக கூறினான். ஏற்கனவே அந்த சிறுவன், பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    இதையடுத்து சிறுவனின் தந்தையிடம் இருந்து நகையை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த சிறுவனை கைது செய்து, பரிசோதனை செய்ததில் அவனுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது. இதையடுத்து போலீசார் அரியலூர் கோர்ட்டில் சிறுவனை ஆஜர்படுத்தி, திருச்சி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். சிறுவனின் தந்தைக்கு 8 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    அரியலூர் மாவட்டம், ஏலாக்குறிச்சி கிராமம் அம்பேத்கர் தெருவில் வசிக்கும் மக்கள் நேற்று அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், ஏலாக்குறிச்சி கிராமம் அம்பேத்கர் தெருவில் வசிக்கும் மக்கள் நேற்று அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், எங்களுக்கு சொந்தமான நிலத்தை நாங்கள் எங்களது மூதாதையர் காலத்தில் இருந்து அனுபவித்து பயிர் செய்து வருகிறோம். ஆனால் அந்த நிலத்தை எங்களுக்கு தெரியாமல் கிராம நிர்வாக அதிகாரி தெருவுக்கு வீட்டு மனை எழுதி கொடுத்துள்ளதாக கூறினார். சம்பந்தப்பட்ட நிலத்திற்கு எங்களிடம் அடங்கல் சிட்டா உள்ளது. காலம் காலமாக அனுபவித்து வந்த எங்களுக்கு சொந்தமான நிலத்தில் தைல மரக்கன்று நட்டிருந்தோம். அங்கு வந்த கிராம நிர்வாக அதிகாரி எங்களை மிரட்டுகிறார். மேலும் நாங்கள் காண்பித்த ஆவணங்களை பார்த்து விட்டு பதில் ஏதும் கூறவில்லை. இதனால் எங்களுக்கு மிகுந்த மன உளைச்சலாக உள்ளது. எனவே மாவட்ட கலெக்டர் நாங்கள் மன உளைச்சலின்றி வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.

    தொடர்ந்து அவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலக வாசலில் வைக்கப்பட்டு இருந்த பெட்டியில் மனுவை போட்டுவிட்டு கலைந்து சென்றனர்.
    தொடர் மழையால் வெள்ளாற்று தடுப்பணையில் நிரம்பி வழியும் தண்ணீரை அப்பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் ஆர்வமுடன் கண்டு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள ஆலத்தியூர் பகுதியில் உள்ள வெள்ளாற்றில் புதிய தடுப்பணை கட்ட வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதனை தொடர்ந்து குன்னம் எம்.எல்.ஏ. ஆர்.டி.ராமச்சந்திரன் வெள்ளாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என்று தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கோரிக்கை விடுத்தார். அதனை தொடர்ந்து தமிழக முதல்- அமைச்சர் வெள்ளாற்றில் தடுப்பணை கட்ட ரூ.31 கோடி நிதி ஒதுக்கி உத்தரவிட்டார். அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெள்ளாற்றில் தடுப்பணை கட்ட முன்னாள் ஒன்றிய செயலாளர் முள்ளுக்குறிச்சி சுரேஷ் அடிக்கல் நாட்டினார். 

    தற்போது தடுப்பணை கட்டும் பணி முடிவடைந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக செந்துறை பகுதியில் ஆடி மாதத்தில் வரலாறு காணாத தொடர் மழை பெய்து வருகிறது. இந்த மழைநீர் காட்டாறுகள் ஆன ஆணைவழி ஓடை உள்ளிட்ட காட்டாறுகளில் பெருக்கெடுத்து ஓடி வெள்ளாற்றில் கலந்தது. இந்த மழைநீர் வெள்ளாற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் தேங்கி கடல் போல் காட்சியளிக்கிறது. ஆடிப்பெருக்கு அன்று வெள்ளாற்று தடுப்பணையில் நிரம்பி வழியும் தண்ணீரை அப்பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் ஆர்வமுடன் கண்டு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    ஒருங்கிணைந்த பண்ணைய திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருமானம் கிடைக்கும் என்று வேளாண்மை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
     அரியலூர்:

    அரியலூர் அருகே உள்ள பொய்யூரில் விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இதற்கு அரியலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பழனிசாமி தலைமை தாங்கி, விவசாயிகளிடம் பேசுகையில், ஒருங்கிணைந்த பண்ணையமானது பயிர் சாகுபடி செய்வதுடன் மாடு, ஆடு, கோழி வளர்ப்பது, மண்புழு உரம் தயாரித்தல், தேனீ வளர்ப்பு, காய்கறி தோட்டம், பழச்செடிகள், மரக்கன்றுகள் மக்கிய எரு தயாரித்தல் போன்ற அனைத்து தொழில் நுட்பங்களையும் ஒருங்கிணைந்து செய்து மண்ணின் வளத்தை பெருக்கி விவசாயிகளுக்கு நிரந்தர வருமானம் கிடைக்க செய்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இந்த திட்டத்தின் மூலம் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள முடியும் என்றார். 

    வேளாண்மை உதவி இயக்குனர் சவிதா ஒருங்கிணைந்த பண்ணையத்தின் முக்கியத்துவம் பற்றியும், கோடை உழவு செய்து, கடைசி உழவில் வேப்பம் புண்ணாக்கு இடவும் அறிவுறுத்தினார். பயிற்சி வகுப்பில் துணை வேளாண்மை அலுவலர் பீட்டர் அந்தோணிராஜ், வேளாண்மை உதவி அலுவலர்கள் சுப்ரமணியன், ராஜகிரி, தினேஷ், இளநிலை ஆராய்ச்சியாளர் செல்வராணி மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். முடிவில் பொய்யூர் தலைவர் பாலசுப்ரமணியன் நன்றி கூறினார்.
    ×