என் மலர்tooltip icon

    அரியலூர்

    ஆண்டிமடத்தில் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் கூலித்தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    ஆண்டிமடம்:

    அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம்- விளந்தை தியாகராஜ நகர் பகுதியை சேர்ந்தவர் குமார்(வயது 40). கூலித்தொழிலாளியான இவர் சம்பவத்தன்று சொந்த வேலை காரணமாக தனது சைக்கிளில் அருளானந்தபுரம் கிராமத்திற்கு செல்வதற்காக ஆண்டிமடம்- ஜெயங்கொண்டம் சாலையில் சென்றார். அப்போது பின்னால் வந்த கார், சைக்கிளில் சென்ற குமார் மீது மோதியது. 

    மேலும் சாலையோரத்தில் உள்ள மின்கம்பத்தில் கார் மோதி நின்றது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்த குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 

    இதுகுறித்து தகவல் அறிந்த ஆண்டிமடம் போலீசார் அங்கு வந்து, குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, காரை ஓட்டி வந்த அரியலூர் மாவட்டம், சின்னவளையம் கிராமத்தை சேர்ந்த இளவரசனை(31) கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    அரியலூர் மாவட்டத்தில் வெவ்வேறு விபத்துகளில் மூதாட்டி உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    ஆண்டிமடம்:

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள விழுதுடையான் கிராமத்தை சேர்ந்தவர் மெய்யழகன். இவரது மனைவி மலர்கொடி (வயது 60). சம்பவத்தன்று இவர் ஆண்டிமடத்தில் உள்ள ஒரு வங்கியில் பணம் எடுப்பதற்காக உறவினர் வெங்கடேசன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் ஆண்டிமடம் வந்தார்.

    இதனிடையே அவர்கள் விருத்தாச்சலம்-ஜெயங்கொண்டம் ரோட்டில் ஆண்டிமடம் கடை வீதியில் ரோட்டை கடக்க முயன்றபோது, பின்னால் வந்த லாரி வெங்கடேசன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் நடுரோட்டில் விழுந்த மலர்கொடியின் தலையில் லாரி ஏறி, இறங்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். வெங்கடேசன் ரோட்டோரத்தில் தூக்கி வீசப்பட்டதால் அவர் லேசான காயத்துடன் உயிர்தப்பினர். இதற்கிடையில் பொதுமக்கள் கூடியதும், லாரி டிரைவர் லாரியை அங்கு நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆண்டிமடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் உடையார்பாளையம் அருகே உள்ள மூர்த்தியான் பகுதியை சேர்ந்தவர் காசிநாதன்(72). விவசாயியான இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து அப்பகுதியில் உள்ள கடைவீதிக்கு நடந்துசென்றார். அப்போது இடையார் கிராமத்தை சேர்ந்த சந்தோஷ் (21) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் காசிநாதன் மீது மோதியது.

    இதில் படுகாயமடைந்த காசிநாதனை, அப்பகுதியினர் மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தோசை கைது செய்தனர்.
    ஜெயங்கொண்டம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    ஆண்டிமடம்:

    நாகை மாவட்டம், சிவராமபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன்(வயது 37). இவர் நேற்று முன்தினம் சொந்த வேலை காரணமாக தனது மோட்டார் சைக்கிளில் கள்ளக்குறிச்சி செல்வதற்காக ஜெயங்கொண்டம்- விருத்தாச்சலம் சாலையில் ராங்கியம் கிராமம் அருகே சென்றார். அப்போது எதிரே வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்த முருகேசன் பலத்த காயமடைந்தார். 

    அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகேசன் பரிதாபமாக உயிரிழந்தார். 

    இது குறித்து ஆண்டிமடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரியை ஓட்டி வந்த டிரைவர் அரியலூர் மாவட்டம், வெளிப்பிரிங்கியம் கிராமத்தை சேர்ந்த கிஷோர்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    ஜெயங்கொண்டம் நகராட்சி தூய்மை பணியாளர்கள், 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கைகள் தொடர்பான வாசகங்கள் அடங்கிய அட்டையை அணிந்து வேலைபார்த்தனர்.
    ஜெயங்கொண்டம்:

    ஜெயங்கொண்டம் நகராட்சி தூய்மை பணியாளர்கள், 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கோரிக்கைகள் தொடர்பான வாசகங்கள் அடங்கிய அட்டையை அணிந்து வேலைபார்த்தனர். 

    கொரோனா காலத்தில் ஒரு மாத கால சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும். பிடித்தம் செய்யப்படும் பண இருப்பு தொகையை கணக்கு காட்ட வேண்டும். அரசாணை 62-ன் படி உரிய சம்பளத்தை வழங்க வேண்டும். அனைவருக்கும் வீடு கட்டி கொடுக்க வேண்டும். ஒப்பந்த பணியாளர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டபடி சம்பளத்தை நிலுவையை சேர்த்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கோரிக்கைகள் அடங்கிய அட்டைகளை சட்டையில் அணிந்தபடி, அவர்கள் குப்பைகளை சேகரிப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டனர்.
    விக்கிரமங்கலம் அருகே தென்னை மட்டை வெட்டச்சென்ற எலக்ட்ரீசியன் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக இறந்தார்.
    விக்கிரமங்கலம்:

    அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே உள்ள முத்துவாஞ்சேரி கிராமத்தில் உள்ள தெற்கு தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் ரகுபாலன்(வயது 30). எலக்ட்ரீசியனான இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கொரோனா ஊரடங்கால் விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு ரகுபாலன் வந்தார்.

    இந்நிலையில் முத்துவாஞ்சேரி கொள்ளிடம் ஆற்றுப்படுகை பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள அவரது நண்பர் ரமேசுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள தென்னை மரத்தின் மட்டைகளை வெட்டுவதற்காக ரகுபாலன் சென்றார். அந்த வழியாக செல்லும் மின் இணைப்பு இல்லாத மின்கம்பிகளை கழற்றிவிட்டு, பின்னர் தென்னை மரத்தில் மட்டைகளை வெட்டுவதற்கு முடிவு செய்துள்ளார். அதன்படி மின்கம்பத்தில் ஏறி ஒரு முனையில் உள்ள மின் கம்பிகளை கழற்றியுள்ளார்.

    அப்போது எதிர்முனையில் உள்ள மின்கம்பத்தில் மின் இணைப்பு இல்லாத கம்பிகள், மின் இணைப்பு உள்ள மின் கம்பிகளோடு இணைந்துள்ளன. இதனால் ரகுபாலன் கையில் பிடித்திருந்த மின்கம்பியில் மின்சாரம் பாய்ந்ததால், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவருடைய உடல் மின்கம்பத்தில் உள்ள மின்கம்பிகள் மீது தொங்கியபடி இருந்தது.

    இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் மற்றும் போலீசார், தா.பழூர் மின்வாரிய அதிகாரிகள் வந்தனர். அவர்கள் மின் இணைப்பை துண்டித்துவிட்டு, மின்கம்பத்தில் தொங்கிக்கொண்டிருந்த ரகுபாலனின் உடலை மீட்டனர். இதையடுத்து அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஊரடங்கால் கணவருக்கு வேலையில்லாததால் ஏற்பட்ட தகராறில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இளமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 28). இவருக்கும் கல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்த செல்வராஜின் மகள் மகாலட்சுமிக்கும்(20) கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது இவர்களுக்கு 3 மாதத்தில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில் மகாலட்சுமியும், பெரியசாமியும் கல்லாத்தூர் கிராமத்திற்கு வந்து கடந்த 11 நாட்களாக தங்கி இருந்துள்ளனர். மேலும் கொரோனா ஊரடங்கு காரணமாக வேலை ஏதுமின்றி பெரியசாமி வீட்டிலேயே இருந்ததாகவும், இதுதொடர்பாக கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

    இந்நிலையில் மகாலட்சுமி, வீட்டு உத்திரத்தில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாக செல்வராஜ், ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வசந்த் வழக்குப்பதிந்து மகாலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தார்.

    மேலும் இது குறித்து விசாரித்து வருகிறார். திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே ஆனதால் மகாலட்சுமியின் சாவுக்கு வரதட்சணை கொடுமை காரணமா? என்பது குறித்து உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பூங்கோதை விசாரணை மேற்காண்டு வருகிறார்.
    மீன்சுருட்டி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைமையில் கபசுர குடிநீர் பொதுமக்கள் 500 பேருக்கு வழங்கப்பட்டது.
    மீன்சுருட்டி:

    அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைமையில் கபசுர குடிநீர் மற்றும் இலவச முககவசம் பொதுமக்கள் 500 பேருக்கு வழங்கப்பட்டது. மாவட்ட விழிப்புணர்வு துணை செயலாளர் பிரேம்குமார் முன்னிலை வகித்தார். இதில் குண்டவெளி ஊராட்சி தூய்மை பணியாளர்கள், சுண்டிப்பள்ளம் கிராம பொது மக்கள் பங்கேற்று பயன்அடைந்தனர்.
    அரியலூர் மாவட்டத்தில் மேலும் 69 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
    அரியலூர் :

    அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 13 பேருக்கும், அரியலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 4 பேருக்கும், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 20 பேருக்கும், செந்துறை ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 7 பேருக்கும், தா.பழூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகள், ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தலா 6 பேருக்கும், ஆண்டிமடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 4 பேருக்கும், ஜெயங்கொண்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 9 பேருக்கும் என மொத்தம் 69 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,642 ஆக உயர்ந்துள்ளது. 1,194 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 15 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 433 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 378 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வரவேண்டியது உள்ளது.
    புதிய தரைப்பாலம் அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
    உடையார்பாளையம்:

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள பிலிச்சுக்குழி ஊராட்சியை சேர்ந்த ஒக்கநத்தம் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கிருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் பஸ் நிறுத்தம் உள்ளது. ஆதிதிராவிடர் தெருவில் இருந்து பஸ் நிறுத்தம் செல்லும் சாலையை பொதுமக்கள், கல்லூரி மற்றும் பள்ளி, மாணவ- மாணவிகள் என அனைவரும் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் இந்த சாலை இடையே ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு மழைநீர் செல்லும் வகையில் அமைக்கப்பட்ட சிறு தரைப்பாலம், சில மாதங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையால் இடிந்தது. இதனால் சாலையின் நடுவில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால், இந்த சாலை வழியாக இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த வழியாக செல்பவர்கள் பாலத்தை கடக்கும்போது தடுமாறி பள்ளத்தில் விழுந்து காயமடையும் நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து அந்த பாலத்தை அகற்றிவிட்டு, புதிய தரைப்பாலம் அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
    உடையார்பாளையம் அருகே பழைய தரைப்பாலத்தை அகற்றிவிட்டு, புதிய தரைப்பாலம் அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
    உடையார்பாளையம்:

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள பிலிச்சுக்குழி ஊராட்சியை சேர்ந்த ஒக்கநத்தம் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கிருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் பஸ் நிறுத்தம் உள்ளது. ஆதிதிராவிடர் தெருவில் இருந்து பஸ் நிறுத்தம் செல்லும் சாலையை பொதுமக்கள், கல்லூரி மற்றும் பள்ளி, மாணவ- மாணவிகள் என அனைவரும் பயன்படுத்தி வந்தனர்.

    இந்நிலையில் இந்த சாலை இடையே ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு மழைநீர் செல்லும் வகையில் அமைக்கப்பட்ட சிறு தரைப்பாலம், சில மாதங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையால் இடிந்தது. இதனால் சாலையின் நடுவில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால், இந்த சாலை வழியாக இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த வழியாக செல்பவர்கள் பாலத்தை கடக்கும்போது தடுமாறி பள்ளத்தில் விழுந்து காயமடையும் நிலை உள்ளது.

    எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து அந்த பாலத்தை அகற்றிவிட்டு, புதிய தரைப்பாலம் அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
    ஜெயங்கொண்டத்தில் நடந்த மறைமுக ஏலத்தில் ரூ.70 லட்சத்துக்கு பருத்தி விற்பனையானது.
    ஜெயங்கொண்டம்:

    தமிழ்நாடு அரசின் மேலாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையில் பெரம்பலூர் விற்பனைக்குழுவின் கீழ் இயங்கும் ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடப்பாண்டு முதல் முறையாக பருத்தி விளைபொருட்களுக்கான மறைமுக ஏலம் நடத்தப்பட்டது.

    ஏலத்தில் 452 விவசாயிகள் கொண்டு வந்த 1,345.58 குவிண்டால் பருத்தி ரூ.68 லட்சத்து 99 ஆயிரத்து 576-க்கு விற்பனையானதாக பெரம்பலூர் விற்பனைக்குழுவின் செயலாளர் ஜெயக்குமார் தெரிவித்தார். இந்த ஏலத்தில் மத்திய அரசின் இந்திய பருத்தி கழகம், அரியலூர் கும்பகோணம், செம்பனார் கோவில் மற்றும் விழுப்புரம் பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் பங்கேற்றனர்.

    இந்திய பருத்தி கழகத்தினால் அதிகபட்ச தொகையாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரத்து 550-க்கும், குறைந்தப்பட்ச விலையாக ரூ.5,182-க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. தனியார் வியாபாரிகளால் உயர்ந்தப்பட்ச விலையாக ரூ.4,339-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.4,169-க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. விற்பனையான மொத்த பருத்தியானது 1,345.58 குவிண்டாலில் 1,051.46 குவிண்டால் அதாவது 75 சதவீத குவிண்டால் பருத்தியை இந்திய பருத்தி கழகமே கொள்முதல் செய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
    தா.பழூர் கடைவீதியில் மாவட்ட கலெக்டர் ரத்னா உத்தரவின்பேரில் மாற்றுத்திறனாளிகள் நல சங்கம் சார்பில் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.
    தா.பழூர்:

    அரியலூர் மாவட்டம், தா.பழூர் கடைவீதியில் மாவட்ட கலெக்டர் ரத்னா உத்தரவின்பேரில் மாற்றுத்திறனாளிகள் நல சங்கம் சார்பில் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. இதில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் தலைமையில் முடநீக்கியல் வல்லுனர் ராமன் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர். 

    கலைக்குழுவினர் தா.பழூர் கடைவீதியில் கலை நிகழ்ச்சி மூலம் பாடல்களை பாடி பொதுமக்களிடம் கொரோனா பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முககவசம் அணியாமல் நடந்து சென்றவர்களுக்கு கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, முககவசம் வழங்கப்பட்டது. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வழங்கப்படும் உதவித்தொகை பற்றியும், அதை மாற்றுத்திறனாளிகள் வாங்கி பயனடைய வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    ×