என் மலர்
அரியலூர்
அரியலூர் மாவட்டம் விளாங்குடி அருகே உள்ள காத்தான்குடிகாடு கிராமத்தில் உள்ள தெற்கு தெருவை சேர்ந்தவர் தியாகராஜன் மகன் காமராஜ்(வயது 35). இவருக்கும் கோவில்சீமை கிராமத்தை சேர்ந்த சவுந்தரியாவுக்கும்(28) கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து 4 வயதில் யாழினி என்ற பெண் குழந்தை உள்ளது. காமராஜ் கோயம்புத்தூரில் சொந்தமாக பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கொரோனா ஊரடங்கால் சொந்த ஊரான காத்தான்குடிகாடு கிராமத்திற்கு காமராஜ் வந்தார்.
இதையடுத்து அவர் வி.கைகாட்டி பகுதியில் தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்தி வந்தார். ஆனால் ஊரடங்கு காரணமாக வியாபாரம் இல்லாததால், கடையில் வருமானமின்றி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் சிலரிடம் காமராஜ் கடன் வாங்கியிருந்தார். கடன் சுமை அதிகரித்த நிலையில், மேலும் சிலரிடம் காமராஜ் கடன் கேட்டபோது, யாரும் தரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தை எப்படி நடத்தப்போகிறோம் என்ற மனவேதனையில் அவர் இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பருத்தி செடிக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) காமராஜ் குடித்து மயங்கி கிடந்தார். இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் காமராஜை மீட்டு சிகிச்சைக்காக விளாங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அரியலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட காமராஜை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கயர்லாபாத் போலீஸ் நிலையத்தில் காமராஜின் மனைவி சவுந்தரியா புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் கீழப்பழுவூர் வ.உ.சி நகரைச் சேர்ந்தவர் மலர்கொடி (வயது 49). இவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வீட்டில் தனியாக தூங்கி கொண்டிருந்தபோது, வீட்டுக்குள் புகுந்த மர்மநபர் அவரை கொடூரமாக கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளியை தேடி வந்தனர். இந்த நிலையில் மலர்கொடியை அரியலூர் மாவட்டம் கோவில்சீமை கிராமத்தை சேர்ந்த வீரமுத்து மகன் விஜயபாஸ்கர் (39) என்பவர் கொலை செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், குடிபோதையில் இருந்த போது, மலர்கொடியின் வீட்டுக்குள் புகுந்து அவரிடம் தவறாக நடக்க முயன்றேன். அப்போது, அவர் தடுக்க முயன்றதால் கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டேன் என தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட விஜயபாஸ்கர் மீது மலர்கொடியை கொலை செய்த வழக்கு மட்டுமின்றி, கொள்ளை, கொலை உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இதனையடுத்து போலீசார் விஜயபாஸ்கரை அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அரியலூர்:
அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் தன் விருப்ப நிதியிலிருந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கலெக்டர் ரத்னா தலைமையில் நடைபெற்றது. அரசு தலைமைக்கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் கலந்து கொண்டு தூய்மை பாரத திட்டத்தின் கீழ் 67 ஊராட்சிகளுக்கு மின்கலம் மூலம் இயக்கப்படும் மூன்று சக்கர குப்பைவண்டிகள் ரூ.2 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டிலும், மகளிர் திட்டம் சார்பில் வேளாண் இயந்திரவாடகை மையம் அமைத்திட நான்குஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்புகளுக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் நான்கு கூட்டமைப்புகளுக்கும் மொத்தம் ரூ.40 லட்சம் மானியத்தில் வேளாண் இயந்திரங்களும் வழங்கினார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரின் தன்விருப்ப நிதியிலிருந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 5 நபர்களுக்குரூ.2,92, 500 மதிப்பிலான இணைப்பு சக்கரங்கள் பொறுத்தப்பட்ட இருசக்கர வாகனங்களையும், 7 நபர்களுக்கு ரூ.53,200 மதிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்று சக்கர வாகனங்களும், ரூ.45,000 மதிப்புள்ளநவீன செயற்கைகை ஒரு நபருக்கும், 10 நபர்களுக்கு ரூ.57,500மதிப்பிலான தையல் இயந்திரங்களையும், 8 நபர்களுக்கு பல்வேறு உதவி திட்டங்களின் கீழ் ரூ.1,45,000மதிப்பிலான காசோலைகளை 31 பயனாளிகளுக்கு ரூ.5,93,200 மதிப்பிலும் என மொத்தம் ரூ.2.71 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின மக்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (டாப்செட்கோ) மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (டாம்கோ) மூலம் சுயதொழில் செய்வதற்காக தொழிற்கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தொழில் கடன், தனிநபர் கடன், சுயஉதவிக்குழுக்களுக்கான சிறுகடன் மற்றும் கறவைமாடு வாங்க கடனுதவி பெற விரும்புபவர்கள் மேலும் பொருளாதாரத்தில் பின் தங்கிய கல்வியில் சிறந்த சிறுபான்மையின மாணவ- மாணவிகள் உயர் கல்வி பயில்வதற்கான கல்விக்கடன் பெற விரும்புபவர்கள் அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம் தென்னூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில் நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் நடைபெறவுள்ள டாப்செட்கோ மற்றும் டாம்கோ லோன் மேளாவில் விண்ணப்பங்கள் பெற்று பயன்பெறலாம்.
கடன் பெற பிற்படுத்தப்பட்டோர் அல்லது மிக பிற்படுத்தப்பட்டோர் அல்லது சிறுபான்மையின மக்களாக இருத்தல் வேண்டும். வயது 18 முதல் 60-க்குள் இருத்தல் வேண்டும். ஆண்டு வருமானம் கிராமப்புறமாயின் ரூ.81 ஆயிரம், நகர்ப்புறமாயின் ரூ.ஒரு லட்சத்து 3 ஆயிரத்திற்கு உட்பட்டும் இருக்க வேண்டும். மேலும், ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டும் கடனுதவி வழங்கப்படும்.
கடன் விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை நகல், சாதிச் சான்றிதழ் அல்லது பள்ளி மாற்றுச் சான்றிதழ், வருமான சான்றிதழ் மற்றும் திட்ட தொழில் அறிக்கை ஆகியவை இணைக்கப்பட வேண்டும். மேலும், அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவுகடன் சங்கங்களில் விண்ணப்பங்கள் பெற்று பயன்பெறுமாறு கலெக்டர் ரத்னா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.






