என் மலர்tooltip icon

    அரியலூர்

    செந்துறை அருகே வெளிநாட்டில் இருந்து திரும்பியவர் வீட்டின் கதவை கடப்பாரையால் உடைத்து 10 பவுன் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள இலங்கைச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் இளையராஜா(வயது 32). இவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். சமீபத்தில் ஊருக்கு திரும்பிய இவர் தனது தாய் பூங்கோதையுடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வீட்டை பூட்டிவிட்டு மொட்டை மாடியில் இளையராஜா தூங்கினார்.

    இந்த நிலையில் நள்ளிரவில் வீட்டின் பின்புறம் உள்ள கதவை கடப்பாரை மூலம் உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், வீட்டில் இளையராஜாவுடைய தாயார் டிரங்பெட்டியில் வைத்திருந்த 10 பவுன் நகை மற்றும் இளையராஜா தனது அரையில் வைத்திருந்த ரூ.34 ஆயிரம் ஆகியவற்றை திருடிச்சென்றனர்.

    நேற்று காலை இளையராஜா எழுந்து பார்த்தபோது, பின்கதவு உடைக்கப்பட்டு நகை மற்றும் பணம் திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் வீட்டின் அருகே பொருட்கள் சிதறி கிடந்தன. இது குறித்து தகவல் அறிந்த செந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

    இதில், முதலில் மர்ம நபர்கள், அப்பகுதியில் உள்ள கணேசன் அய்யர் என்பவரது வீட்டிற்குள் புகுந்துள்ளனர். அங்கே எதுவும் கிடைக்காததால் அங்கிருந்து ஓடை வழியாக இளையராஜா வீட்டிற்கு வந்து பணம், நகைகளை திருடிக்கொண்டு தப்பி சென்றுள்ளனர், என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீஸ் மோப்ப நாய் மலர் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். கைரேகை நிபுணர்கள் வீட்டில் பதிவாகியிருந்த கைரேகைகளை சேகரித்தனர். மோப்பநாய் மலர் மோப்பம் பிடித்தபடி வீட்டின் பின்புறம் ஓடியது. பின்னர் அப்பகுதியில் உள்ள ஓடை வழியாக ஓடி கணேசன் வீடுவரை சென்று நின்றுவிட்டது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் அந்த வீட்டை சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு இருக்கலாம், என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தாலுகா அலுவலகம் அருகே உள்ள 2 வீடுகளில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. நடந்து வந்த பெண் ஒருவரிடம் நகை பறிப்பு சம்பவமும் நடந்துள்ளது. தொடர்ந்து தாலுகா அலுவலக பகுதியில் நடக்கும் கொள்ளை சம்பவங்களை தொடர்ந்து, போலீசார் உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    வெற்றியூரில், ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி மயானத்தில் அமர்ந்து பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    கீழப்பழுவூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெற்றியூர் கிராமத்தில் உள்ள மயானம் மற்றும் அதற்கு செல்லும் சாலை ஆகியவற்றில் பல்வேறு ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனால் ஆக்கிரமிப்புகளை அகற்றி அவற்றை மீட்டு தரக்கோரி வெற்றியூர் கிராம மக்கள், கருப்பு கொடிகளை ஏந்தியபடி மயானத்திலேயே அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் ஜாகீர் உசேன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, போராட்டத்தை கைவிட வலியுறுத்தினார். அப்போது நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தங்க சண்முக சுந்தரம், கீழப்பழுவூர் போலீசார், வெற்றியூர் ஊராட்சி மன்ற தலைவர் தவமணி சுப்ரமணியன், வெற்றியூர் கிராம முன்னேற்ற குழு ஒருங்கிணைப்பாளர்கள் காமராஜ், சிவநேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    பேச்சுவார்த்தையின்போது, மயானத்தையும், மயான சாலையையும் நில அளவை செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி, அவற்றை மீட்டுத்தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மயானத்தில் இறுதிச்சடங்கு செய்வதற்கு அடிபம்பு ஒரு வார காலத்திற்குள் அமைத்து தரப்படும் என்றும், ஒரு மாத காலத்திற்குள் மயான சாலையின் இருபுறமும் வடிகால் வாய்க்கால் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரி உறுதி அளித்தார். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு, கலைந்து சென்றனர்.
    அரியலூரில் கோவில் உண்டியலில் இருந்த பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    அரியலூர்:

    அரியலூரில் புறவழிச்சாலை அருகே உள்ள கணபதி நகரில் ஐந்துமுக விநாயகர் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடிந்த பின்னர் கோவில் நடை சாத்தப்பட்டு, பூட்டப்பட்டது. நேற்று காலை அர்ச்சகர் சண்முகம் கோவிலை திறக்க வந்தார்.

    அப்போது கோவிலின் கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த உண்டியலையும் காணவில்லை. இது பற்றி அரியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் அங்கு வந்து பார்வையிட்டனர். அப்போது கோவிலுக்கு பின்புறம் உண்டியல் கிடந்தது. மேலும் உண்டியலின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து முதல்நாள் இரவில் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள், உண்டியலை தூக்கிச்சென்று உடைத்து பணத்தை எடுத்துக்கொண்டு, உண்டியலை அங்கேயே போட்டுவிட்டு சென்றது, போலீசாருக்கு தெரியவந்தது. உண்டியலில் சுமார் ரூ.10 ஆயிரம் இருந்திருக்கும் என்று அர்ச்சகர் தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து அரியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோவிலில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்
    செந்துறை அருகே கூலிப்படை மூலம் மாமனாரை கொலை செய்ய முயன்ற மருமகள் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள விழுப்பணங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சி(வயது 56). இவரது மகன் வேல்முருகன். இவருக்கு கொளஞ்சியின் தங்கை மகள் சீதாவை(25) திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த வேல்முருகன், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து சீதா, அவரது மகன், மாமனார் கொளஞ்சி, மாமியார் ஆகியோர் ஒன்றாக வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் சீதாவிற்கு, அப்பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை கொளஞ்சி கண்டித்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் வராண்டாவில் கொளஞ்சி தூங்கிக்கொண்டிருந்தார். சீதா, அவருடைய மகன் ஆகியோர் வீட்டிற்கு உள்ளே தூங்கி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் மின்கம்பத்தில் இருந்து வயரில் கொக்கி மூலம் மின் இணைப்பு கொடுத்து, அதனை கொளஞ்சி மீது தூக்கி வீசி கொலை செய்ய முயன்றுள்ளனர். உடலில் மின்சாரம் பாய்ந்த அதிர்ச்சியில் அவர் கூச்சல் போட்டார்.

    சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம், பக்கத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள், 2 மர்ம நபர்களையும் விரட்டிச்சென்றனர். ஆனால் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளில் ஏறி, 2 மர்ம நபர்களும் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி சென்றனர். இது குறித்து கொளஞ்சி செந்துறை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் செந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி, இந்த சம்பவம் தொடர்பாக கொளஞ்சியின் மருமகள் சீதா மற்றும் விழுப்பணங்குறிச்சியை சேர்ந்த பாக்கியராஜ்(38) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    இதில் சீதா, தனது மாமனார் தன்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்ததால் பாக்கியராஜிடம் பணம் கொடுப்பதாக கூறி கொலை முயற்சியில் ஈடுபட சொன்னதாக, கூறியுள்ளார். சீதா பணம் கொடுத்து இந்த செயலை செய்ய சொன்னதாகவும், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த தனது நண்பர் உதவியுடன் கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், பாக்கியராஜ் கூறியுள்ளார்.

    இதைத்தொடர்ந்து 2 பேரையும் கைது செய்த செந்துறை போலீசார், அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் சீதாவை திருச்சி பெண்கள் சிறையிலும், பாக்யராஜை அரியலூர் சிறையிலும் அடைத்தனர். மேலும் பாக்யராஜின் நண்பரை வலைவீசி தேடி வருகின்றனர். நகரங்களை போன்று கிராமத்திலும் சொந்த தாய்மாமன் மற்றும் மாமனாரை மருமகள் கூலிப்படை வைத்து கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் விழுப்பணங்குறிச்சி கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அணைக்கரை கீழணை அருகே வடவாற்றில் உடைந்து சேதமடைந்த படிக்கட்டுகளை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    மீன்சுருட்டி:

    அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள அணைக்கரை கீழணை அருகில் வடவாறு உள்ளது. சென்னை- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இந்த ஆற்றின் வழியாகத்தான் வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த தண்ணீர் சென்னைக்கு வீராணம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.

    இந்த ஆற்றில் சுமார் 500 முதல் 2 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் திறந்து விடப்படும். இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள், இந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் இந்த ஆற்றில் இறங்கி குளித்து விட்டு செல்வார்கள். தற்போது கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளில் அளிக்கப்பட்டுள்ள தளர்வின் காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் அந்த வழியாக செல்கின்றனர். அவர்களும், அப்பகுதி பொதுமக்களும் இந்த ஆற்றில் குளித்துவிட்டு செல்கின்றனர்.

    இந்நிலையில் வடவாற்றில் இரண்டு புறமும் உள்ள படிக்கட்டுகள் உடைந்து சேதமடைந்து உள்ளது. குளிக்க வருபவர்கள் உடைந்த படிக்கட்டுகளில் கால் தவறி கீழே விழ வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே உடைந்து சேதமடைந்த படிக்கட்டுகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு, சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் கோரியம்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்தவர் பாலுசாமி. இவரது மகன் பாபா என்ற பிரபாகரன் (வயது 25). இவர் 17 வயதுடைய ஒரு சிறுமியை கடந்த 26-ந் தேதி, அந்த சிறுமியின் பெற்றோருக்கு தெரியாமல் கடத்தி சென்றார்.

    மேலும் அந்த சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்தினாராம். இந்நிலையில் சிறுமியை காணாமல் போனது குறித்து, அவரது தந்தை ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல்போன சிறுமியை தேடி வந்தனர். இந்த நிலையில் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கல்லாத்தூர் வடவீக்கம் பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, வடவீக்கம் பஸ் நிறுத்தம் அருகே மோட்டார் சைக்கிளில் பிரபாகரன் 17 வயது சிறுமியுடன் சென்றார்.

    இதனையடுத்து போலீசார், பிரபாகரனை பிடித்து விசாரித்ததில், அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும், வடவீக்கம் கிராமத்தில் ஒரு வீட்டில் தங்கி குடும்பம் நடத்தி வந்ததாகவும் தெரிய வந்தது. இதையடுத்து சிறுமியை கடத்தி திருமணம் செய்ததாக போலீசார் வழக்கு பதிந்து பிரபாகரனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். பின்னர் சிறுமியை அவரது விருப்பப்படி அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். அந்த சிறுமி 11-ம் வகுப்பு படித்து முடித்து, 12-ம் வகுப்பு செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்கியது. பெரம்பலூரில் மேலும் 13 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 1,368 பேர் கொரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்தனர். இதில், குணம் அடைந்த ஆயிரத்து 251 பேர் வெவ்வேறு தேதிகளில் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுவரையில், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 17 பேர் உயிரிழந்துள்ளனர். மற்ற 100 பேர் திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் உள்ள கொரோனா சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்தநிலையில், பெரம்பலூர் நகரை சேர்ந்த 5 பேர், கிராமிய பகுதிகளான ஆண்டி குரும்பலூர், ஆடுதுறை, வாலிகண்டபுரம், ஒதியம், சிறுவாச்சூர், கல்பாடி, சின்ன வெண்மணி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 8 பேர் என மொத்தம் 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, 13 பேரும் திருச்சி மற்றும் பெரம்பலூர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன்மூலம், பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்து 381 ஆக உயர்ந்துள்ளது.

    அரியலூர் மாவட்டத்தில் நேற்று மேலும் 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 8 பேருக்கும், அரியலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் 4 பேருக்கும், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 2 பேருக்கும், செந்துறை ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 7 பேருக்கும், தா.பழூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 3 பேருக்கும், ஆண்டிமடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 8 பேருக்கும், ஜெயங்கொண்டம் நகராட்சி மற்றும் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 26 பேருக்கும் என மொத்தம் 58 பேர் புதிதாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,967 ஆக உயர்ந்து 3 ஆயிரத்தை நெருங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை சிகிச்சையில் குணமடைந்து 1,972 பேர் வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சை பலனின்றி 31 பேர் இறந்துள்ளனர். நேற்று மொத்தம் 579 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    ஜெயங்கொண்டத்தில் வருகை குறைவால் பயணிகளுக்காக பஸ் நிலையத்தில் டிரைவர்கள், கண்டக்டர்கள் பயணிகளின் வருகைக்காக காத்திருக்கின்றனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து 22 புறநகர பஸ்கள், 7 நகர பஸ்கள் கடந்த 1-ந் தேதி முதல் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த 3 நாட்களாகவே டிரைவர்கள், கண்டக்டர்கள் பயணிகளின் வருகைக்காக காத்திருக்கின்றனர். 

    மேலும் பயணிகள் வருகை குறைவாக இருப்பதால் பஸ்களை அரைமணி நேரம், ஒரு மணி நேரம் என பயணிகள் வருகைக்காக நிறுத்தி வைக்கப்பட்டு, பயணிகள் வந்த பின்னர் அவர்களுக்கு கைகளில் கிருமி நாசினி கொடுத்து சுத்தம் செய்து, முக கவசம் அணிய செய்து பஸ்களில் ஏறச்செய்து வருகின்றனர். 

    இருப்பினும் பஸ்களில் போதிய பயணிகள் இல்லாமல் சில பஸ்களில் 5 முதல் 8 பேர் வரையும், சில பஸ்களில் 10 முதல் 15 பேர் வரையும் என குறைந்த அளவிலான எண்ணிக்கையில் மட்டுமே பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். இதனால் அரசுக்கு வருமான இழப்பும், டீசல் செலவும் ஏற்படுவதாக டிரைவர்களும், கண்டக்டர்களும் கூறுகின்றனர். வருகிற 7-ந் தேதி முதல் மாவட்டங்கள் இடையே பஸ்கள் ஓடும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அவ்வாறு மற்ற மாவட்டங்களுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டால், அதிக எண்ணிக்கையில் பயணிகள் பயணம் செய்வார்கள் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
    அரியலூர் அருகே பெரியார் சிலையில் தார் ஊற்றி அவமதித்த மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து சி.சி.டி.வி. காட்சி மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் வி. கைகாட்டி அருகே தேளூர் ஊராட்சிக்கு உட்பட்ட சமத்துவபுரத்தில் மார்பளவு பெரியார் சிலை உள்ளது. நேற்று அந்த சிலையின் கண்கள் மீது தார் ஊற்றப்பட்டு அவமதிக்கப்பட்டிருந்தது.

    இதையறிந்த திராவிடர் கழகத்தினர் மற்றும் தி.மு.க.வினர் அங்கு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த கயர்லாபாத் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தினர்.

    அப்போது சிலையை அவமதித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து தி.மு.க. மற்றும் திராவிடர் கழகக்தினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    நள்ளிரவில் மர்மநபர்கள் பெரியார் சிலை மீது தாரை ஊற்றி சென்றிருக்கலாம் என தெரிகிறது. அதில் ஈடுபட்டவர்கள் யாரென்று கண்டறிய போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை பார்வையிட்டு வருகின்றனர். தமிழகத்தில் தொடர்ந்து பெரியார் சிலை அவமதிக்கப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கீழப்பழுவூர் அருகே லாரி மோதி வாலிபர் பலியானார். இந்த நிலையில் அவரது உடலை உடனடியாக ஒப்படைக்க கோரி அவரது உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
    கீழப்பழுவூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக் குட்பட்ட கீழப்பழுவூர் அருகே உள்ள திடீர்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவரது மகன் சங்கர் (வயது 28). இவர் கீழப்பழுவூரில் உள்ள தனியார் சிமெண்டு ஆலையில், கிரஷரில் ஆப்ப ரேட்டராக வேலை செய்து வந்தார்.

    நேற்று முன்தினம், சங்கர் அரியலூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் வி.கைகாட்டியில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அஸ்தினாபுரம் அருகே சென்ற போது, அந்த வழியாக வந்த லாரி சங்கர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை, அந்த பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந் தார்.

    இந்த நிலையில் நேற்று மாலை வரை சங்கர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக் கப்படவில்லை. இதனால், ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் உடலை பிரேத பரிசோதனை செய்து உட னடியாக ஒப்படைக்கக்கோரி கீழப்பழுவூர் அடுத்த திடீர்குப்பம் பகுதியில் தஞ்சை-அரியலூர் சாலையில் நேற்று மாலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த கீழப்பழுவூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும் உடலை உடனடியாக ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை அடுத்த அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே 4 பேர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து பெண்கள் உள்பட 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    தா.பழூர்:

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள அழிசுகுடி அய்யனார் கோவில் அருகே ராஜசேகர் என்பவர் தனது நண்பர்கள் சிரஞ்சீவி, ரஞ்சித் மற்றும் ஜீவா(வயது 20) ஆகியோருடன் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த அதே ஊரை சேர்ந்த ரகு என்ற ரகுவரன், சுந்தரபாண்டியன் ஆகியோர், ராஜசேகர் மற்றும் அவருடைய நண்பர்களை தகாத வார்த்தைகளால் திட்டி அங்கிருந்து போகச்சொல்லி சண்டை போட்டதாக கூறப்படுகிறது. ஆனால் ராஜசேகர் உள்ளிட்ட 4 பேரும் அங்கிருந்து போக மறுத்துள்ளனர். இதையடுத்து மறுநாள் அய்யனார் கோவில் அருகே ராஜசேகர் மற்றும் அவருடைய நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தபோது, அவர்களை ரகு, சுந்தரபாண்டியன், ராதாகிருஷ்ணன், ராணி, அமுதா, சுப்ரமணியன், கலியபெருமாள், ஜெயலட்சுமி ஆகியோர் தகாத வார்த்தைகளால் திட்டி, உருட்டுக் கட்டைகளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த ஜீவா ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மற்ற 3 பேரும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாக தெரிகிறது. இது குறித்து ராஜசேகர், தா.பழூர் போலீசில் அளித்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் பெண்கள் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    ஜெயங்கொண்டம்:

    ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிறு, குறு விவசாயிகளுக்கு 3 தவணைகளாக ரூ.6 ஆயிரம் வழங்கும் மத்திய அரசு திட்டத்தில் போலியான பெயர்களை சேர்த்து மோசடி செய்த வேளாண்மை துறை அதிகாரிகளை கண்டித்தும், அவர்களை சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்த உத்தரவிட வேண்டும். மேலும் வழக்குப்பதிவு செய்து, கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

    50 டன்னுக்கு மேலாக சுண்ணாம்புக்கல் உள்ளிட்ட பொருட்களை ஏற்றிக்கொண்டு அரியலூர், ஜெயங்கொண்டம் வழியாக ஆண்டிமடம் செல்லும் கனரக வாகனங்களால் தேசிய நெடுஞ்சாலை வீணாவதுடன், ஜெயங்கொண்டம் 4 ரோடு சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் இளவரசன் தலைமை தாங்கினார். 

    ஒன்றியக்குழு உறுப்பினர் அன்பழகன் முன்னிலை வகித்தார். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் மகாராஜன் கண்டனம் தெரிவித்து பேசினார். ஒன்றிய செயலாளர் சங்குபாலன், விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகி ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில் ஜெயங்கொண்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
    ×