என் மலர்
செய்திகள்

வடவாற்றில் சேதமடைந்த படித்துறையை படத்தில் காணலாம்.
அணைக்கரை கீழணை அருகே வடவாற்றில் உடைந்து சேதமடைந்த படிக்கட்டுகள்- சீரமைக்க கோரிக்கை
அணைக்கரை கீழணை அருகே வடவாற்றில் உடைந்து சேதமடைந்த படிக்கட்டுகளை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள அணைக்கரை கீழணை அருகில் வடவாறு உள்ளது. சென்னை- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இந்த ஆற்றின் வழியாகத்தான் வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த தண்ணீர் சென்னைக்கு வீராணம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.
இந்த ஆற்றில் சுமார் 500 முதல் 2 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் திறந்து விடப்படும். இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள், இந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் இந்த ஆற்றில் இறங்கி குளித்து விட்டு செல்வார்கள். தற்போது கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளில் அளிக்கப்பட்டுள்ள தளர்வின் காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் அந்த வழியாக செல்கின்றனர். அவர்களும், அப்பகுதி பொதுமக்களும் இந்த ஆற்றில் குளித்துவிட்டு செல்கின்றனர்.
இந்நிலையில் வடவாற்றில் இரண்டு புறமும் உள்ள படிக்கட்டுகள் உடைந்து சேதமடைந்து உள்ளது. குளிக்க வருபவர்கள் உடைந்த படிக்கட்டுகளில் கால் தவறி கீழே விழ வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே உடைந்து சேதமடைந்த படிக்கட்டுகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு, சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story






