என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
வெற்றியூரில் மயானத்தில் அமர்ந்து பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்
வெற்றியூரில், ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி மயானத்தில் அமர்ந்து பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெற்றியூர் கிராமத்தில் உள்ள மயானம் மற்றும் அதற்கு செல்லும் சாலை ஆகியவற்றில் பல்வேறு ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனால் ஆக்கிரமிப்புகளை அகற்றி அவற்றை மீட்டு தரக்கோரி வெற்றியூர் கிராம மக்கள், கருப்பு கொடிகளை ஏந்தியபடி மயானத்திலேயே அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் ஜாகீர் உசேன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, போராட்டத்தை கைவிட வலியுறுத்தினார். அப்போது நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தங்க சண்முக சுந்தரம், கீழப்பழுவூர் போலீசார், வெற்றியூர் ஊராட்சி மன்ற தலைவர் தவமணி சுப்ரமணியன், வெற்றியூர் கிராம முன்னேற்ற குழு ஒருங்கிணைப்பாளர்கள் காமராஜ், சிவநேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தையின்போது, மயானத்தையும், மயான சாலையையும் நில அளவை செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி, அவற்றை மீட்டுத்தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மயானத்தில் இறுதிச்சடங்கு செய்வதற்கு அடிபம்பு ஒரு வார காலத்திற்குள் அமைத்து தரப்படும் என்றும், ஒரு மாத காலத்திற்குள் மயான சாலையின் இருபுறமும் வடிகால் வாய்க்கால் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரி உறுதி அளித்தார். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு, கலைந்து சென்றனர்.
Next Story