என் மலர்tooltip icon

    அரியலூர்

    அரியலூர் மாவட்டத்தில் இயங்கும் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள விற்பனையாளர்கள் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்ந்தெடுப்பதற்கான நேர்முகத்தேர்வு 25-ந்தேதி நடைபெற உள்ளது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் இயங்கும் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள விற்பனையாளர்கள் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்ந்தெடுப்பதற்கான நேர்முகத்தேர்வு நடைபெற உள்ளது. இந்த நேர்முகத்தேர்வு வருகிற 25-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை (விடுப்பு நாளான 29-ந் தேதி நீங்கலாக) உள்ள 5 வேலை நாட்களில் அரியலூர் ராஜாஜி நகரில் உள்ள அரியலூர் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடத்தப்பட உள்ளது.

    தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு நேர்முக தேர்வுக்கான அழைப்பாணை விண்ணப்பதாரரால் தெரிவிக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் குறுஞ்செய்தி மூலமாகவும் தகவல் தரப்பட்டுள்ளது.

    இந்த தகவலை அரியலூர் மாவட்ட ஆள்சேர்ப்பு பணி நிலைய தலைவரும், மண்டல இணைப்பதிவாளருமான செல்வகுமரன் தெரிவித்துள்ளார்.
    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே வடிகால் வாய்க்கால் இல்லாததால் தெருவில் தேங்கும் மழைநீரால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள பிச்சனூர் 6-வது வார்டு மாரியம்மன் கோவில் அருகே தெருவின் இருபுறமும் வடிகால் வாய்க்கால்கள் இல்லாததால் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. அந்த வழியாக நடந்து செல்ல முடியாமலும், வாகனங்களை இயக்க முடியாமலும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.

    தொடர்ந்து மழை பெய்தால் வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்து நாசம் ஆகும் சூழ்நிலை உள்ளது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு இருபுறமும் வடிகால் வாய்க்கால்களை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    உடையார்பாளையம் அருகே புகையிலை விற்பனை செய்த 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உடையார்பாளையம்:

    உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாசிலாமணி மற்றும் போலீசார் கடைவீதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சோழங்குறிச்சியை சேர்ந்த உலகநாதன் (வயது 45), தத்தனூர் குடிகாடு கிராமத்தை சேர்ந்த தேசியப்பன் (43) , சுத்தமல்லியை சேர்ந்த சேகர் (52), அதே பகுதியை சேர்ந்த எட்வார்ட்ஸ்ராயர் (57), உடையார்பாளையம் மூர்த்தியான் தெருவைச் சேர்ந்த சரவணன் (39) ஆகிய 5 பேரும் அவர்களது பெட்டிக்கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. 

    இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து 5 பேரையும் கைது செய்து அவரிடம் இருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட இலந்தைகூடம் மற்றும் திருமானூர் ஆகிய 2 இடங்களில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    கீழப்பழுவூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட இலந்தைகூடம் மற்றும் திருமானூர் ஆகிய 2 இடங்களில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

    ஆர்ப்பாட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கும் மாத உதவித்தொகையாக ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும், தனியார் நிறுவனங்களில் 5 சதவீத வேலை வாய்ப்பு, இட ஒதுக்கீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், அரசு பணிகளில் உள்ள காலியிடங்களில் மாற்றுத் திறனாளிகளை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. 

    ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், சங்க ஒருங்கிணைப்பாளர்கள் வெங்கடாசலம், சோலமுத்து உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

    உடையார்பாளையம் அருகே மது விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உடையார்பாளையம்:

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் லோகநாதன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தத்தனூர் பொட்டக்கொல்லை கிராமத்தை சேர்ந்த அன்புமணி (50), தத்தனூர் குடிகாடு கிராமத்தை சேர்ந்த உலகநாதன் (44) ஆகிய 2 பேரும் அப்பகுதியில் டாஸ்மாக் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்றனர். 

    போலீசார் இருவரையும் கைது செய்து, பதுக்கி வைத்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாமிதுரை மற்றும் போலீசார் சாத்தம்பாடி பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு மதுவிற்ற சாத்தம்பாடி மெயின் ரோட்டை சார்ந்த முருகன் (38) என்பவரை கைது செய்தனர்.

    ஜெயங்கொண்டத்தில் தெருநாய்களால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகர பகுதி சாலைகளில் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகிறது. இந்தநாய்கள் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களை துரத்தி செல்வதாலும், ஒன்றையொன்று சண்டையிட்டுக் கொண்டு சாலையின் குறுக்கே செல்வதாலும் அடிக்கடி விபத்து நடைபெற்று வருகிறது.

    சிலசமயங்களில் பெற்றோர்களுடன் நடந்து செல்லும் குழந்தைகளையும் துரத்தி கடித்து மருத்துவமனை சென்று திரும்பிய சம்பவமும் நடந்துள்ளது. முன்பெல்லாம் வீட்டுக்கு ஒரு நாயை மட்டுமே வளர்த்து அதனை முறையாக பராமரித்து வந்தனர். தற்பொழுது ஒரு விட்டுக்கு 5-க்கும் மேற்பட்ட நாய்களை வளர்த்து வருகின்றனர். அவ்வாறு வளர்க்கும் பட்சத்தில் அந்த நாய்களுக்கு உணவு அளிக்காமல் தெருக்களில் திரிய விட்டுவிடுகின்றனர். இதனால் அந்த நாய்கள் சாலையில் பல்வேறு இடங்களில் உணவுக்காக சுற்றித்திரியும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    மேலும் உணவுக்காக ஒன்றை ஒன்று கடித்துக்கொள்வதால் சொறி நாய்களாக உருவெடுத்து அது காலப்போக்கில் வெறி நாய்களாக மாறி விடுகிறது. அந்த நாய்கள் சாலையில் செல்லும் பாதசாரிகளுக்கு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே தெரு மற்றும் சாலைகளில் சுற்றித் திரியும் நாய்களை பிடிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், வாகன ஓட்டிகளும், கோரிக்கை விடுத்துள்ளனர்.
    உடையார்பாளையம் அருகே சேறும், சகதியுமாக சாலை மாறியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
    உடையார்பாளையம்:

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை விரிவு படுத்தும் பணி கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது. ஆங்காங்கே சிறுபாலமும் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக தற்காலிக மாற்று பாதை அமைக்கப்பட்டுள்ளது. கட்சி பெருமாள் கிராமத்தில் இருந்து 1 கிலோ மீட்டர் வரை சர்வீஸ் சாலையில் கிராவல் மண், ஜல்லி கற்க்களை கொட்டி உயரப்படுத்தும் பணியும் நடக்கிறது. இந்த பணி ஆமைவேகத்தில் நடைபெற்று வருகிறது.

    தற்போது மழைபெய்து வருவதால், இந்த சாலையில் மண் சூழ்ந்து சேறும், சகதியுமாக மாறி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துடன் சென்று வருகின்றனர். மேலும் கனரக வாகனங்களில் உதிரிபாகங்கள் கழன்று விழுந்து, வாகனங்கள் பழுது அடைந்துநிற்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கட்சி பெருமாள் கிராமத்தை கடந்து செல்வது பெரும் சவாலாக உள்ளது.

    இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் வருபவர்கள் கீழே விழுந்து காயம் ஏற்பட்டு செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே ஆமை வேகத்தில் நடை பெறும் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    வண்ணம்புத்தூரில் இழப்பீடு கேட்டு மக்காச்சோளம் பயிரிட்டுள்ள வயலில் இறங்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    கீழப்பழுவூர்:

    அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வண்ணம்புத்தூர் கிராமத்தில் மழை பெய்யாமலும் பயிர் குறுகியும் வளர்ச்சி பெறாமல் கதிர் வரவேண்டிய நிலையில் கதிர் வராமலும் படைப்புழு தாக்குதலாலும் மக்காச்சோளப் பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. இதற்கு பயிர் காப்பீடு செய்ய கடந்த அக்டோபர் மாதம் 31-ந் தேதிக்குள் வெறும் 3 நாட்கள் அவகாசத்தை அரசு கொடுத்தது. பின்னர் விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து இந்த மாதம் 2 நாட்கள் கால அவகாசத்தை நீட்டித்தது.

    இருப்பினும் விவசாயிகளுக்கு போதுமான கால அவகாசத்தை கொடுக்காததை கண்டித்தும், அனைத்து மக்காச்சோளப் பயிர் சாகுபடி செய்தவர்களுக்கும் காப்பீடு செய்ய கால அவகாசத்தை நீட்டிக்க கோரியும், மேலும் மக்காச்சோளப் பயிர் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு இடைக்கால நிவாரணமாக தமிழக அரசு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் இழப்பீட்டு தொகையாக வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து, மக்காச்சோளப் பயிர் வயலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டத்திற்கு வண்ணம்புத்தூர் மக்காச்சோளப் பயிர் சாகுபடியாளர்கள் சார்பில் விவசாயி தனவேல் தலைமை தாங்கினார். அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாய பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம் உள்ளிட்ட அப்பகுதி விவசாயிகள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். இது குறித்து தகவல் அறிந்த வேளாண்மை இணை இயக்குனர் லதா போராட்டம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்து விவசாயிகளிடம் போராட்டத்தை கைவிடக் கோரியும், அவர்களின் கோரிக்கைகளை மனுவாக எழுதி தரும்படியும் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் விவசாயிகள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அனைத்து விவசாயிகள் சார்பில் கொடுத்தனர்.
    அரியலூர் மாவட்டத்தில் 5 லட்சத்து 11 ஆயிரத்து 627 வாக்காளர்கள் உள்ளதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் உள்ள (149) அரியலூர் சட்டமன்ற தொகுதி மற்றும் (150) ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி ஆகியவற்றுக்கான வரைவு வாக்காளர் பட்டியலினை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் ரத்னா, நேற்று வெளியிட்டார். அப்போது அவர் தெரிவித்ததாவது;-

    அரியலூர் சட்டமன்ற தொகுதியில் 1,27,186 ஆண் வாக்காளர்களும், 1,27,370 பெண் வாக்காளர்களும், 4 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2,54,560 வாக்காளர்கள் உள்ளனர். ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் 1,27,621 ஆண் வாக்காளர்களும், 1,29,443 பெண் வாக்காளர்களும், 3 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2,57,067 வாக்காளர்கள் உள்ளனர். இம்மாவட்டத்தில் 2,54,807 ஆண் வாக்காளர்களும், 2,56,813 பெண் வாக்காளர்களும், 7 இதர வாக்காளர்களும் என மொத்தம் 5 லட்சத்து 11 ஆயிரத்து 627 வாக்காளர்கள் உள்ளனர்.

    வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணிகள், நேற்று முதல் அடுத்த மாதம் (டிசம்பர்) 15-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 1.1.2021-ஐ தகுதி நாளாக கொண்டு 18 வயது நிரம்பிய நபர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கும் மற்றும் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம், பெயர் திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளும் பொருட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளது. மேலும் வருகிற 21, 22, அடுத்த மாதம் 12, 13-ந் தேதி ஆகிய நான்கு தினங்களில் அந்தந்த பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 20-ந் தேதி அன்று வெளியிடப்படவுள்ளது.

    எனவே, 18 வயது நிரம்பிய (1.1.2003 அன்றோ அல்லது அதற்குமுன் பிறந்தவர்கள்) தகுதியான நபர்கள் அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கும் மற்றும் வாக்காளர் பட்டியலில் திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் பெயர் நீக்கம் ஆகியவற்றிற்கு விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன், திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) சுந்தர்ராஜன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரவிச்சந்திரன் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்கள் உள்பட அனைத்து கட்சி பிரமுகர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    விக்கிரமங்கலம் அருகே மொபட் மீது கார் மோதிய விபத்தில் விவசாயி அதே இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    விக்கிரமங்கலம்:

    அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள சுண்டக்குடி செட்டியார் தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(வயது 60). விவசாயியான இவர் நேற்று முன்தினம் சொந்த வேலையின் காரணமாக சுண்டக்குடியில் இருந்து மொபட்டில் அரியலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். நாகமங்கலம் மாதா கோவில் அருகே உள்ள ஒரு வளைவில் திரும்பியபோது அரியலூரில் இருந்து வந்த கார் எதிர்பாராதவிதமாக கோவிந்தராஜின் மொபட் மீது மோதியது. 

    இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுபற்றி அவ்வழியாக சென்றவர்கள் விக்கிரமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற விக்கிரமங்கலம் போலீசார், கோவிந்தராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காரை ஓட்டி வந்த தேளூர் கிராமத்தை சேர்ந்த அசோக்குமாரை(38) விக்கிரமங்கலம் போலீசார் கைது செய்து, காரை பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மீன்சுருட்டி பகுதியில் மது விற்ற பெண்கள் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மீன்சுருட்டி:

    அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் வளையாபதி, கோவிந்தராஜ், சுபா, ரமேஷ், ராஜதுரை மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மீன்சுருட்டி அருகே உள்ள இளையபெருமாள் நல்லூர் காலனி தெருவை சேர்ந்த சங்கர் (வயது 50) என்பவர், வீட்டின் பின்புறம் மது விற்றது தெரியவந்தது. இதையெடுத்து சங்கரை, போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 3 குவார்ட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் மது விற்ற காடுவெட்டி மெயின் ரோடு தெருவை சேர்ந்த தமிழ்செல்வனிடம்(61) 3 குவார்ட்டர் மதுபாட்டில்கள், தாமரைக்கனியிடம்(31) இருந்து 4 குவாட்டர் பாட்டில்கள், மீன்சுருட்டி செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்த குணசேகரன் (48) என்பவரிடம் இருந்து 4 குவார்ட்டர் பாட்டில்கள், இறவாங்குடி கீழத்தெருவை சேர்ந்த மாரிமுத்து (69) என்பவரிடம் இருந்து 3 குவார்ட்டர் பாட்டில்கள், மெய்காவல்புத்தூரை சேர்ந்த கோவிந்தராஜ் (70) என்பவரிடம் இருந்து 3 குவார்ட்டர் பாட்டில்கள், குருவாலப்பர்கோவில் பள்ளர் தெருவை சேர்ந்த சாந்தி (65) என்பவரிடம் இருந்து 3 குவார்ட்டர் பாட்டில்கள், வெத்தியார்வெட்டு இந்திரா காலனி தெருவை சேர்ந்த தனகோபால்(41) என்பவரிடம் இருந்து 4 குவார்ட்டர் பாட்டில்கள் மற்றும் வீரசோழபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கமலி (50) என்பவரிடம் இருந்து 4 குவார்ட்டர் பாட்டில்கள் என மொத்தம் 31 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரையும் கைது செய்தனர்.

    செந்துறை அருகே பட்டாசு வெடித்த தகராறில் போலீசார் மண்டை உடைந்தது. இந்த சம்பவத்தில் பா.ம.க. செயலாளர் கைது செய்யப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டது.

    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள இலைக்கடம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் உலக சாமிதுரை. இவர் பா.ம.க. பெரம்பலூர் மாவட்ட செயலாளராக உள்ளார். அதே ஊரைச் சேர்ந்தவர் சாமிநாதன். இவர் தமிழக வாழ்வுரிமைக் கட்சி அரியலூர் மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார்.

    இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்கனவே முன் விரோதம் இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று தீபாவளியை முன்னிட்டு பா.ம.க.வினர் சாமிதுரை வீடு அருகே ஒரு பகுதியிலும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் சாமிநாதன் வீட்டிற்கு முன்பும் வெடி வெடித்து கொண்டு இருந்தனர். அப்பகுதியில் ரோந்து சென்ற செந்துறை போலீஸ் இன்ஸ் பெக்டர் ராஜ்குமார் பா.ம.க. தரப்பினரை கலைந்து போகுமாறு கூறினார்.

    அதனைத் தொடர்ந்து பா.ம.க.வினர் இலைக் கடம்பூரில் இருந்து செந்துறை நோக்கி வந்து கொண்டு இருந்தனர். அப்போது சாமிநாதன் வீட்டிற்கு முன்பு அவர்கள் பட்டாசு வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கண்டித்தனர். இதனால் இரண்டு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

    அவர்கள் உருட்டு கட்டைகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். அப்போது அதனை தடுக்க முயன்ற தனிப்பிரிவு காவலர் துரைமுருகன் மண்டை உடைந்தது. அவரை போலீசார் உடனடியாக செந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், துணைப் போலீஸ் சூப்பிரண்டு மதன் உள்ளிட்ட போலீசார் திடீரென பெரம்பலூர் மாவட்ட பா.ம.க. செயலாளர் உலக சாமிதுரை, நமங்குணம் ஊராட்சி மன்ற தலைவர் காட்டுராஜா, பா.ம.க. ஒன்றிய செயலாளர் ராஜா ஆகியோரை கைது செய்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்த பா.ம.க. மாநில துணைப் பொதுச் செயலாளர் திருமாவளவன் தலைமையில் பா.ம.க.வினர் நூற்றுக்கணக்கில் திரண்டு வந்து செந்துறை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது என்றும் உடனடியாக பா.ம.க. மாவட்ட செயலாளரை விடுதலை செய்ய வேண்டும் என்று கோ‌ஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அங்கு பதட்டம் ஏற்பட்டதால் திருச்சி சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அப்போது நடத்தப்பட்ட விசாரணையில் பா.ம.க. மாவட்ட செயலாளர் உலக சாமிதுரை நேரடி மோதலில் ஈடுபட வில்லை என்று தெரியவந்தது. பின்னர் பேச்சுவார்த்தையை தொடர்ந்து கைது செய்யப்பட்ட உலக சாமிதுரை உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டனர். மேலும் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பா.ம.க.வினரும் அமைதியாக கலைந்து சென்றனர்.

    இதற்கிடையே பா.ம.க. மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த 2 தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் செந்துறை போலீசார் வழக்குபதிவு செய்து 8 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பா.ம.க. மாவட்ட செயலாளர் திடீர் கைது காரணமாக செந்துறை பகுதியில் நள்ளிரவில் பெரும் பதட்டம் ஏற்பட்டது.

    ×