என் மலர்tooltip icon

    அரியலூர்

    • மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.
    • 350 விண்ணப்பங்கள் பெறப்பட்டது

    அரியலூர்

    மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைகளை மாற்றுத்திறனாளிகள் பெறுவதற்கான சிறப்பு முகாம் மீன்சுருட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. இந்த முகாமில் 350 விண்ணப்பங்கள் பெறப்பட்டு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் வழங்கப்படும் தேசிய அடையாள அட்டைகள் 295 பேருக்கு வழங்கப்பட்டது. உபகரணங்கள் பெறுவதற்கு 10 பேரும், 102 பேர் புதிய விண்ணப்பமும் முகாமில் அளித்தனர். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இந்த முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சாமிநாதன் தலைமையிலான எலும்பு முறிவு, மனநலம், கண், காது, மூக்கு, தொண்டை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தேவையான சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கினர். முகாமில் முட நீக்க வல்லுனர் ‌ராமன், செயல் திறன் உதவியாளர் பிச்சாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மாற்றுத்திறனாளி பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் சிறை விதிக்கப்பட்டுள்ளது
    • கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த சம்பவம்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே வாய்பேச முடியாத பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    ஆண்டிமடம் அடுத்த சூரக்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் வீராசாமி மகன் செந்தில்(வயது 43). இவர், அதே பகுதியைச் சேர்ந்த வாய்பேச முடியாத 32 வயது பெண்ணை கடந்த 2016 ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

    இதேபோல் தொடர்ந்து அவர், மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதால், பெண் கர்ப்பமடைந்தார். இது குறித்து அப்பெண்ணின் உறவினர், ெஜயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், செந்திலை கைது செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதி விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், குற்றவாளி செந்திலுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபாரதமும் விதித்து நீதிபதி ஆனந்தன் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்குரைஞர் ம.ராஜா ஆஜரானார்.

    • சொத்து தகராறில் ஏற்பட்ட மோதலில் தந்தை-மகன் கைது செய்யப்பட்டனர்.
    • ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே நாகமங்கலம் அண்ணா நகரை சேர்ந்தவர் மணிவேல்(வயது 63). இவரது மகன் செல்வமணி(35). தந்தை மகனான இவர்கள் இருவருக்கிடையே சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று மணிவேலின் வீட்டிற்கு வந்த செல்வமணி சொத்தை பிரித்து தரும்படி மணிவேலிடம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது வாய்த்தகராறு முற்றிய நிலையில், ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். அப்போது அங்கு வந்த மணிவேலின் மனைவி செல்லம்மாள்(55), மகன் செல்வகுமார் (32), உறவினர் சேட்டு (42), மேலும் செல்வமணி மனைவி தேவி(26) ஆகியோரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீசில் இருதரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில், விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன், 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து மணிவேல் மற்றும் செல்வமணி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
    • முன் விரோதம் இருந்து வந்தது.

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள பிலிச்சிக்குழி கிராமத்தை சேர்ந்தவர் பாலச்சந்தர்(வயது 50). விவசாயி. இவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் ராஜகோபால் மகன் சுப்பிரமணியன் (38) என்பவருக்கும் இடப் பிரச்சினை சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று பாலச்சந்தர் தனது ஊரில் இருந்து உடையார்பாளையம் கடைவீதியில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு மீண்டும் வேலையை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளை எடுக்க முயன்றபோது சுப்பிரமணியன், பாலச்சந்தரை தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாலச்சந்தர் உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து சுப்பிரமணியனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கைக்குழந்தையுடன் பெண் மாயமானார்
    • விவசாய கூலித்தொழிலாளி.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள காஞ்சிகாங்குடி கிராமம் காந்தி நகரை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 40). விவசாய கூலித்தொழிலாளி. இவருக்கும், சுகுணாவுக்கும் (22) திருமணமாகி 5 வயதில் செல்வலெட்சுமி என்ற மகளும், மூன்றரை வயதில் செல்வதுரை என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று தனது கைக்குழந்தையுடன் சுகுணா திடீரென காணாமல் போனார். பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால் செந்தில்குமார் இதுகுறித்து ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது
    • திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர் வழங்கினார்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில், சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட காவல் அலுவலக்தில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில், திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர் கலந்து கொண்டு, அரியலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி சிலை ஊர்வலத்தில் சிறப்பாக செயல்பட்ட தனிப்பிரிவு ஆய்வாளர் செல்வகுமாரி, சைபர் கிரைம் வழக்குகளில் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கண்டுபிடித்த ஆய்வாளர் செங்குட்டுவன், உதவி ஆய்வாளர் மணிகண்டன், உதவி ஆய்வாளர் (தொழில்நுட்பம்) சிவனேசன், கஞ்சா வழக்குகளில் சிறப்பாக செயல்பட்ட உதவி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன், தலைமை காவலர் ரவி, முதல் நிலைக் காவலர் தமிழ்ச்செல்வன் மற்றும்

    காவலர்கள் முகமது தஸ்லீம், சிவாஜி, விமல் ராஜ், ஐயப்பன், மேலும் கொலை மற்றும் கற்பழிப்பு வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்த காவலர்களான பெண் தலைமை காவலர் வரலட்சுமி, முதல்நிலைப் பெண் காவலர்கள் வனிதா மற்றும் லதா ஆகியோருக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.

    முன்னதாக, அரியலூர் மாவட்ட குற்ற பதிவேடுகள் பிரிவில் ஆய்வு செய்த அவர், அந்த பதிவேடுகளை பராமரிக்க தேவையான அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் அலுவலர்களுக்கு வழங்கினார். இந்நிகழ்வின் போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா உடனிருந்தார்.

    • காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது
    • 215 மாணவர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது.


    அரியலூர்:

    தமிழகத்தில் பருவநிலை மாற்றத்தின் காரணமாக ஏராளமான மக்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை ஆரம்ப நிலையில் கண்டறிந்து குணப்படுத்தும் வகையில் மாநிலம் தழுவிய அளவில் இன்று ஆயிரம் இடங்களில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.

    அதன்படி திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட திடீர்குப்பம் சிறப்பு மாதிரி பள்ளி மற்றும் கீழப்பலூர் சுகாதார நிலையம் மலத்தான் குளம் மானிய துவக்கப்பள்ளி. அங்கன்வாடி வளாகம். போன்ற இடங்களில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது.

    இதில் நிலவேம்பு குடிநீர் வழங்குதல், ரத்த மாதிரி பரிசோதித்தல், புகை மருந்து அடித்தல், குடிநீர் தொற்று நீக்க ஆய்வு செய்தல், குடிநீர் குழாய் பழுது நீக்குதல், நலக் கல்வி வழங்குதல். மேலும் 215 மாணவர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது.

    12 மாணவர்களுக்கு ரத்த மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டது, மேலும் பள்ளி வளாகங்கள் விடுதி வளாகங்கள் அங்கன்வாடி மையங்கள் போன்ற இடங்களில் கொசு மருந்து புகை அடித்தல் பணி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருமானூர் மருத்துவ அலுவலர் அருண் பிரசாத் தலைமை வகித்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வகீல் சுகாதார ஆய்வாளர் ராமமூர்த்தி மற்றும் கருப்பண்ணன். செவிலியர்கள் சுமையா. மற்றும் தேவிஆகியோர் கலந்து கொண்டனர்.

    பள்ளி வளாகங்களில் கொசு மருந்து அடிக்கும் போது எடுத்த படம்.

    • தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது

    அரியலூர்

    அரியலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆறாவது மற்றும் ஏழாவது மத்திய ஊதியக்குழு ஊதியத்தை அமல்படுத்த வேண்டும். பள்ளிக் கல்வித்துறை ஆணையர் பணியிடத்தை ரத்து செய்து பழைய நிலையிலான பதவி உயர்வு வழி பள்ளிக் கல்வி இயக்குனர் பணியிடத்தை தொடரச்செய்ய வேண்டும். ஒரே நாடு, ஒரே கொள்கை என்ற ஏழாவது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். இதற்கான நிதியை மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் மாவட்ட தலைவர் அசோகன் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவரும், மாவட்ட செயலாளருமான எழில் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். மாவட்ட துணைத்தலைவர் சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன், முன்னாள் மாவட்ட பொருளாளர் மார்ட்டின் ஆரோக்கியராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

    • ஓய்வு பெற்ற ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • கோரிக்கைகள் வலியுறுத்தி நடந்தது

    அரியலூர்

    அரியலூர் அண்ணா சிலை அருகே தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 1.1.2022 முதல் 20.6.2022 வரை மத்திய அரசு வழங்கிய அகவிலைப்படி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை தொடர்ந்து அமல்படுத்த வேண்டும். சத்துணவு அமைப்பாளர், அங்கன்வாடி, வருவாய் கிராம ஊழியர், ஊராட்சி உதவியாளர் ஆகிய ஓய்வு பெற்றவர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும். தேர்தல் வாக்குறுதிப்படி 70 வயது முடிந்த ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியத்தில் 10 சதவீதம் சேர்த்து வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் துரைவேலுசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மகாலிங்கம் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். துணைத் தலைவர் ராமசாமி, மாவட்ட இணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் தமிழரசன், வட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்."

    • மது விற்ற முதியவர் கைது செய்யப்பட்டார்
    • ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தத்தனூர் கீழவெளி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் (வயது 62) என்பவரது வீட்டின் பின்புறம் டாஸ்மாக் மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்று சோதனை செய்த போலீசார், பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிந்து சுப்பிரமணியனை கைது செய்தனர்

    • அரசு பள்ளியில் சமூக அறிவியல் மன்றம் தொடங்கப்பட்டது.
    • முப்பெரும் விழாவாக நடந்தது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், நாகமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் மன்றம், தொன்மை பாதுகாப்பு மன்றம் மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு மன்றம் ஆகிய 3 மன்றங்களின் தொடக்க விழா முப்பெரும் விழாவாக நடந்தது. பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயராஜ் தலைமை தாங்கினார். ஆசிரியை செல்வராணி வரவேற்றார். விழாவில் 9-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் சுற்றுச்சூழல் மாசுபாடு பற்றிய நாடகம் மற்றும் தொன்மை பாதுகாப்பு பற்றிய நாடகத்தை நடத்தினர். மேலும் புராதன சின்னங்கள், வரலாற்று ஆளுமைகள் மற்றும் வாக்காளர்களின் உரிமைகளும், கடமைகளும் ஆகிய தலைப்புகளின் கீழ் மாணவ, மாணவிகள் பேசினார்கள். முன்னதாக சமூக அறிவியல் ஆசிரியை தமிழ் இலக்கியா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கணித ஆசிரியர் செல்வமுருகன் மற்றும் ஆங்கில ஆசிரியை சத்தியப்பிரியா ஆகியோர் வாழ்த்தி பேசினர். முடிவில் ஆசிரியர் கலையரசன் நன்றி கூறினார்.

    • விஷ வண்டுகள் கடித்து பசுமாடு உயிரிழந்தது
    • மாடுகள் இரண்டும் மேய்ந்து கொண்டிருந்தன.

    அரியலூர்:

    ஜெயங்கொண்டம் அருகே உள்ள சின்ன வளையம் தெற்கு தெருவில் அடிக்கடி கால்நடைகள் மற்றும் பொதுமக்களை துரத்தி விஷ வண்டுகள் கடித்து விடுகின்றன.

    அரியலூர் மாவட்டம் சின்ன வளையம் தெற்கு தெருவை சேர்ந்தவர் வைத்தியநாதன் மகன் செல்வராஜ். இவருடைய மாடுகள் இரண்டும் அவரது வீட்டு தோட்டத்திற்கு பின்புறம் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது அப்பகுதியில் பனைமரத்தில் கூடுகட்டியிருந்த விஷ வண்டுகள் மாடுகளை கடித்தன. இதில் மாடுகள் அரண்டு ஓடுவதைக் கண்ட பொதுமக்களும் வண்டுகள் துரத்துவதை கண்டு ஓடினர். வண்டுகள் கடித்து ஒரு மாடு இறந்தது மற்றொரு மாட்டுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்ததை அடுத்து ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன்ராஜ் தலைமையிலான வீரர்கள் 20 அடி உயரத்தில் பனை மரத்தில் கூடு கட்டி இருந்த விஷ வண்டுகளை அழித்தனர்.

    ×