என் மலர்
அரியலூர்
- உடையார்பாளையம் தெற்கு காலனித் தெருவைச் சேர்ந்த நடராஜன் என்பவரது மகன் இளந்தமிழன் (25). ஆட்டோ டிரைவர்.
- இவர் தஞ்சாவூர் மாவட்டம் கொடியாத்தம் கெளத்தூர் பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரியை (20) கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்தார்.
அரியலூர் :
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உடையார்பாளையம் தெற்கு காலனித் தெருவைச் சேர்ந்த நடராஜன் என்பவரது மகன் இளந்தமிழன் (25). ஆட்டோ டிரைவர்.
இவர் தஞ்சாவூர் மாவட்டம் கொடியாத்தம் கெளத்தூர் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகள் மகேஸ்வரியை (20) கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்த நிலையில், பெண்ணின் பெற்றோர்களிடம் பெண் கேட்டதாகவும், அவர்கள் பெண் கொடுக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து காதல் ஜோடி உடையார்பாளையம் தெற்கு தெரு மாரியம்மன் கோயிலில் வைத்து திருமணம் செய்துள்ளனர்.
பின்னர் புதுமணத் தம்பதிகள் இருவரும் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி புதுமணத் தம்பதிகளிடம் விசாரணை செய்து இரு தரப்பு பெற்றோர்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்த பெண்ணின் பெற்றோர்கள் மகேஸ்வரியை அழைத்துள்ளனர். அவர் வர மறுத்து இளந்தமிழனோடுதான் செல்வேன் என்று கூறியுள்ளார். இதனால் பெண்ணின் பெற்றோர்கள் திரும்பி சென்று விட்டனர். இதையடுத்து இளந்தமிழனின் பெற்றோர்களை அழைத்து அவர்களுக்கு அறிவுரைகள் கூறி காதல் ஜோடியான புதுமண தம்பதிகளை அவர்களோடு அனுப்பி வைத்தனர்.
- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம்ஊராட்சி ஒன்றிய தெற்கு பள்ளியில் தமிழக ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் தேர்வு கூட்டம் நடை பெற்றது.
- இதில்100 மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
அரியலூர் :
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம்ஊராட்சி ஒன்றிய தெற்கு பள்ளியில் தமிழக ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் தேர்வு கூட்டம் அரியலூர் வருவாய் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் உடையார்பாளையம் கல்வி மாவட்ட செயலாளருமான பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் தேர்தல் ஆணையாளராக வட்டார தலைவர் தேர்தல் ஆணையாளர் பிரபாகரன், வட்டார பொருளாளர் இணை ஆணையாளர் ராஜ்குமார் ஆகியோர் தேர்தல் அதிகாரிகளாக இருந்து தலைவர் செயலாளர் பொருளாளர் உள்ளிட்ட பொறுப்பாளர்களை தேர்வு செய்தனர்.
இதில் வட்டத் தலைவராக ஆறுமுகமும், செயலாளராக அரங்கநாதனும், பொருளாளராக பாலசுப்பிரமணியனும், மகளிர் அணி செயலாளராக செல்வியும், துணை தலைவர்களாக சரண்சிங், ராமலிங்கம், உமா, துணை செயலாளராக ராஜேந்திரன், சேரன் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதில்100 மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
- ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவத்திற்கு வரும் தாய்மார்கள் மீண்டும் அவர்களுடைய வீட்டுக்கு போக சிரமமாக இருப்பதாக ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணனிடம் பொதுமக்கள், தாய்மார்கள் மனு அளித்தனர்.
- தாய்மார்களின் கோரிக்கையை ஏற்று ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் தாய் சேய் நல ஊர்தி சேவையை கண்ணன் எம்.எல்.ஏ. துவங்கி வைத்தார்.
அரியலூர் :
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவத்திற்கு வரும் தாய்மார்கள் மீண்டும் அவர்களுடைய வீட்டுக்கு செல்ல சிரமமாக இருப்பதாக ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணனிடம் பொதுமக்கள், தாய்மார்கள் மனு அளித்தனர்.
மேலும் தலைமை மருத்துவர் டாக்டர் உஷா தாய் சேய் வாகனம் தேவை என சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை வைத்தார்.
அதன் அடிப்படையில் தாய்மார்களின் கோரிக்கையை ஏற்று ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் தாய் சேய் நல ஊர்தி சேவையை கண்ணன் எம்.எல்.ஏ. துவங்கி வைத்தார்.
மேலும் மருத்துவமனையில் அனைத்து வார்டுகளிலும் சென்று நோயாளிகளுக்கு தேவையான உபகரணங்கள் சரியான முறையில் நோயாளிகளுக்கு கிடைக்கிறதா என ஆய்வு செய்தார். அப்போது மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள் அவரிடம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.
இதில் மருத்துவர்கள் செந்தில்குமார், ராஜா, கீதா நவீன் குமார் மற்றும் செவிலியர்கள் திமுக நகர செயலாளர் கருணாநிதி கவுன்சிலர் புகழேந்தி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் ரூ.7.46 கோடியில் புதிய கட்டுமானப் பணிகள் தொடங்கின
- அமைச்சர் சிவசங்கர் பூமி பூஜையுடன் தொடங்கி வைத்தார்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், அரியலூர் மற்றும் ெஜயங்கொண்டம் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் ரூ.7.46 கோடி மதிப்பீட்டில் புதிய பணிமனைகள் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
பொதுப் பணித்துறை சார்பில் நடைபெற்ற பூமி பூஜையில் கலந்து கொண்ட போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், தலா ரூ.3.73 கோடி என மொத்தம் ரூ.7.46 கோடி மதிப்பீட்டில் இரண்டு புதிய கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். எம்.எல்.ஏ.க்கள் சின்னப்பா, கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் பேசுகையில், இந்த பணிமனைகள் ஒவ்வொன்றின் தரைத்தளம் தலா 982.25 ச.மீ பரப்பளவு கொண்டது. இந்த தரைத்தளத்தில் நான்கு வகுப்பறைகள், பணிமனை அரங்கம், கூட்டரங்கம், பணியாளர் அறை, கணினி அறை மற்றும் கழிவறை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளுடன் எழிலுற கட்டப்படவுள்ளது என்றார்.
செந்துறை-சேலம் பேருந்து சேவை தொடக்கம்... செந்துறையில், நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் சிவசங்கர், செந்துறையில் இருந்து அரியலூர், குன்னம், பெரம்பலூர், துறையூர், நாமக்கல் வழியாக சேலத்துக்கு பேருந்து சேவையை கொடியசைத்து தொடக்கி வைத்தார். தொடர்ந்து அய்யூர் துணை மின்நிலையத்தில் இருந்து புக்குழி கிராமத்துக்கு மின் விநியோகத்தை இயக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி செயற்பொறியாளர்கள் தேவேந்திரன், அன்பரசி மற்றும் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
- 10-ம் வகுப்பு படித்துவந்தார்
அரியலூர்
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள சூரக்குடி ஜே.ஜே.நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 60). கூலித்தொழிலாளியான இவர், அதே பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு பயிலும் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையிலான போலீசார் போக்சோவில் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து ராஜேந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மனைவியை கொலை செய்ய முயன்ற கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
- திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது.
அரியலூர்
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள மத்துமடக்கி கிராமத்தைச் சேர்ந்தவர் சிலம்பரசன். இவரது மனைவி அருள் (வயது26). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ஹரிபிரசாத்(1½) என்ற ஆண் குழந்தை உள்ளது. இவர்கள் நேற்று குவாகம் பகுதியில் உள்ள சிறைமீட்டார் கோவில் கும்பாபிஷேகத்திற்கு சென்றுள்ளனர். கும்பாபிஷேகம் முடிந்து 2 பேரும் ஊருக்கு வந்துள்ளனர். அவர்கள் கொடுக்கூர் குவாகம் மருங்கூர் பென்பரப்பி இடையே உள்ள முந்திரி தோப்பு பகுதியில் வரும்போது இருவருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த சிலம்பரசன் தனது மனைவி அருள் கழுத்தில் கயிற்றைப் போட்டு முந்திரி மரத்தில் தூக்கு மாட்டி இழுத்துள்ளார். இதனால் அருள் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதில் அவர் இறந்து விட்டதாக நினைத்து அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இந்த நேரத்தில் அப்பகுதியில் பொக்லைன் ஓட்டிக் கொண்டு இருந்தவர்கள் சத்தம் கேட்டு சென்று பார்த்தபோது, அருள் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கே அவர் சிகிச்சை பெற்று வருகின்றார். இது குறித்த புகாரின் பேரில் செந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவியை கொலை செய்ய முயன்ற கணவனை வலைவீசி தேடி வருகின்றனர்.
- 2 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
- குற்றச்செயலில் ஈடுபட்டவர்களுக்கு உடந்தையாக இருந்தது என கூறி
அரியலூர்
அரியலூர் மாவட்டம், மேலப்பழுவூர் மற்றும் பூண்டி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து சுண்ணாம்புக்கல் மற்றும் கிராவல் மண் எடுத்து செல்லக்கூடிய லாரிகள் அதிவேகத்தில் செல்வதாகவும், அதிக பாரம் மற்றும் தார்ப்பாய் போடாமல் செல்வதாகவும் தொடர்ந்து வந்த புகாரின் பேரில் அரியலூர் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன் அப்பகுதியில் ஆய்வு பணியில் ஈடுபட்டார். அப்போது திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் மேலப்பழுவூர் அருகே சுண்ணாம்புக்கல் ஏற்றி வந்த லாரியை சோதனை செய்தபோது அதிக பாரம் ஏற்றிக்கொண்டு தார்ப்பாய் போடாமல் வந்தது தெரிய வந்தது. மேலும் சுண்ணாம்புக்கல் எடுத்து செல்வதற்கான உரிய அனுமதி இல்லாததை அறிந்த கோட்டாட்சியர் லாரியை பறிமுதல் செய்து கீழப்பழுவூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
அதேபோல் பூண்டி கிராமத்தின் வழியாக கிராவல் மண் ஏற்றி வந்த லாரியை சோதனை செய்ததில், அதிகபாரம் ஏற்றிக்கொண்டு தார்ப்பாய் போடாமல் வந்தது மற்றும் உரிய அனுமதி இல்லாதது தெரியவந்தையடுத்து அந்த லாரியையும் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். மேலும் இது குறித்து மேலப்பழுவூர் கிராம நிர்வாக அலுவலர் ஜார்ஜ் வாஷிங்டன் மற்றும் பூண்டி கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரிடம் கீழப்பழுவூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்குமாறு கோட்டாட்சியர் உத்தரவிட்டார். இதனையடுத்து அவர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 லாரிகளுக்கும் அபராதம் விதித்து லாரியை விடுவித்தனர். கிராம நிர்வாக அலுவலர்கள் உரிய அனுமதி இன்றி பாரம் ஏற்றி வந்தது குறித்து எவ்வித தகவலும் தெரிவிக்கவில்லை என அறிந்த அரியலூர் கோட்டாட்சியர் முறையான புகார் அளிக்காதது, குற்றச்செயலில் ஈடுபட்டவர்களுக்கு உடந்தையாக இருந்தது என கூறி 2 கிராம நிர்வாக அலுவலர்களையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்
- பால் கொள்முதல் விலையை உயர்த்த கோரிக்கை விடுக்கப்பட்டது.
- கால் நடைகள் தீவனங்கள் விலை உயர்ந்துவிட்டதால்
அரியலூர்:
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி தலைமை வகித்தார்.
கூட்டத்தில் அரியலூர் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் செங்கமுத்து கூறுகையில், மாவட்டத்தில் நிலவும் உரத்தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த உரத்தட்டுப்பாட்டை பயன்படுத்தி அதிக விலைக்கு விற்கும் தனியார் உரக்கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில், விவசாயிகளிடமிருந்து 40 கிலோ மூட்டை ஒன்றுக்கு ரூ.30 வாங்குவதை தடுக்க வேண்டும். அத்மா திட்டத்தை மீண்டும் செயல்படுத்தி விவசாயிகளுக்கு மாவட்ட, மாநில அளவில் பயிற்சி அளிக்க வேண்டும். ஒரு வாரத்துக்குள் கூட்டுறவுத் துறை பயிர்கடன்களை வழங்க வேண்டும் என்றார்.
பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்
காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்டத் தலைவர் தூத்தூர் தங்க.தர்மராஜன் கூறுகையில், கடந்த மாதம் கொள்ளிடத்தில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் திறந்து விடப்பட்டதால் குருவாடு, தூத்தூர், வைப்பூர், முத்துவாஞ்சேரி, சாத்தம்பாடி, கோவிந்தபுத்தூர், ஸ்ரீபுரந்தான், அரங்கோட்டை, அணைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சூரியக்காந்தி, பருத்தி, நெல், சோளம் உள்ளிட்ட பயிர்கள் முற்றிலும் சேதமடைந்தது. இதனை வேளாண் துறையினர் கண்க்கீடு செய்து, அந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
பால் கொள்முதல் விலையை தனியார் பால் பண்ணைகள் உயர்த்தினாலும், 2018 ஆண்டுக்கு பிறகு ஆவின் நிறுவனம் இன்னும் உயர்த்தப்படாமலே உள்ளது. ஆகவே கால் நடைகள் தீவனங்கள் விலை உயர்ந்துவிட்டதால், ஆவின் நிறுவனம் உடனடியாக பால் கொள்முதல் விலையை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். வடக்கிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு அனைத்து வரத்து பாசன வடிக்கால் வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என்றார்.
தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்த வருவாய் அலுவலர் கலைவாணி, அவைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். கூட்டத்தில் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் பழனிசாமி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- மோசடியில் ஈடுபட்ட 14 பேர் கும்பல் கைது செய்யப்பட்டனர்.
- ஆசை வார்த்தை கூறி சோப்புகளை விற்பனை செய்துள்ளனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் கீழப்பழூர் அருகே உள்ள பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் ரோஸ்லின். இங்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சோப்பு விற்பனை செய்வதற்காக ஒரு கும்பல் வந்துள்ளது. அவர்களிடம் சோப்பு வாங்கினால் கூப்பன் வழங்கப்படும். கூப்பனில் பரிசுகள் விழுந்தால் 50 சதவீத தள்ளுபடி விலையில் குக்கர், குத்துவிளக்கு, ஸ்கூட்டர் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் என ஆசை வார்த்தை கூறி சோப்புகளை விற்பனை செய்துள்ளனர்.
சோப்புகளை வாங்கியவர்களிடமிருந்து அவர்களை நம்பச்செய்யும் வகையில், செல்போன் எண்ணையும் வாங்கி சென்றனர். இந்தநிலையில் போனில் தொடர்பு கொண்ட சோப்பு விற்பனை செய்த நபர்கள் தங்களது செல்போன் எண்ணிற்கு ஸ்கூட்டியும், தங்க காசும் விழுந்து உள்ளதாகவும் அதற்கான ஜிஎஸ்டி தொகையான, 14,860 ரூபாயை மட்டும் அனுப்ப வேண்டும் என கூறி வங்கி கணக்கு எண்ணை கூறியுள்ளனர்.
இதனையடுத்து ரோஸ்லின் அவர்களுடைய வங்கி கணக்கிற்கு ரூ.14,850 செலுத்தியுள்ளார். ஆனால் அவர்கள் கூறியவாறு பொருட்களை அனுப்பவில்லை. அதன் பிறகு தான் அவர் ஏமாந்ததாக அறிந்தார். இது குறித்து ரோஸ்லின் கீழப்பழுவூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் கீழப்பழுவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாயம் அன்பரசு மற்றும் சைபர் கிரைம் போலீசார் அடங்கிய தனிப்படை போலீசார் மர்ம நபர்களின் செல்போன் நம்பரை தொடர்பு கொண்டு அவர்கள் இருப்பிடம் தெரிந்து கொண்டனர். பின்னர் அவர்களை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் சேலம் குறிஞ்சி நகரைச் சேர்ந்த குறவர்கள் என்பதும், அவர்களது உறவினர்களான பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சண்முகவேல், சின்ன ராமசாமி, மாரியப்பன், ஜெயக்குமார், விவேகானந்தன், சுரேஷ்குமார், சின்ன சுடலை, குருநாதன், மாடசாமி, இசக்கிமுத்து, ரஞ்சித் குமார், முப்புடாதி, காளிமுத்து என்பது தெரியவந்தது. இவர்கள் பல்வேறு மாவட்டங்களில் இது போன்று மோசடியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
இதனையடுத்து 14 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து குக்கர், 15 செல்போன், 9 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களது வங்கி கணக்குகளை கைப்பற்றி பணத்தை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
- 200 டிரைவர்கள் கலந்து கொண்டனர்.
அரியலூர்
அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவுபடி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. அண்ணா சிலையில் தொடங்கிய இந்த ஊர்வலம் மாதா கோவில் சந்திப்பு வரை சென்று நிறைவடைந்தது. இதில் சுமார் 200 டிரைவர்கள் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலத்தை அரியலூர் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் கணேஷ் தொடங்கி வைத்து, டிரைவர்கள் விபத்தில்லா சாலை பயணம் மேற்கொள்வதுடன், அதிவேகமாக வாகனத்தை இயக்குவது மற்றும் மதுபோதையில் வாகனத்தை இயக்குவது உள்ளிட்டவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என எடுத்துரைத்தார். இதில் அரியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத், நகர போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போக்குவரத்து போலீசார் பலர் கலந்து கொண்டனர்"
- மது விற்ற முதியவர் கைது செய்யப்பட்டார்.
- 30 மது பாட்டில்கள் பறிமுதல்
அரியலூர்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சுற்று வட்டார பகுதிகளில் போலீசார் பதுக்கி வைத்து மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சின்னவளையம் ஏரி அருகே பதுக்கி வைத்து மது பாட்டில்களை விற்றுக்கொண்டிருந்த முதியவரை பிடித்து விசாரித்ததில் அவர் சின்னவளையம் வடக்கு காலனி தெருவை சேர்ந்த சம்பந்தம் (வயது 67) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் விற்பனைக்காக வைத்திருந்த 30 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்த போலீசார், சம்பந்தம் மீது வழக்குப்பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்."
- மத்திய அரசு பணியிடங்களுக்கான தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.
- மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட உள்ளது.
அரியலூர்
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி.) மற்றும் பாரத ஸ்டேட் வங்கியால் அறிவிக்கப்பட்டுள்ள 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கான தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு வருகிற 26-ந்தேதி முதல் அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் தொடங்க உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் இளைஞர்களுக்கு மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட உள்ளது. இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மேற்குறிப்பிட்ட பணிக்காலியிடங்களுக்கு விண்ணப்பித்த விண்ணப்ப நகல்களுடன், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், தங்களது ஆதார் அட்டை நகல் மற்றும் சுயவிவரக்குறிப்புகளுடன் அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தினை நேரில் தொடர்பு கொள்ளலாம். மேற்காணும் பணிக்காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள இளைஞர்கள் https://ssc.nic.in, www.sbi.co.in/careers என்ற இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளைப் பின்பற்றி விண்ணப்பிக்கலாம். இந்த தகவல் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






