என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோசடியில் ஈடுபட்ட 14 பேர் கும்பல் கைது
    X

    மோசடியில் ஈடுபட்ட 14 பேர் கும்பல் கைது

    • மோசடியில் ஈடுபட்ட 14 பேர் கும்பல் கைது செய்யப்பட்டனர்.
    • ஆசை வார்த்தை கூறி சோப்புகளை விற்பனை செய்துள்ளனர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் கீழப்பழூர் அருகே உள்ள பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் ரோஸ்லின். இங்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சோப்பு விற்பனை செய்வதற்காக ஒரு கும்பல் வந்துள்ளது. அவர்களிடம் சோப்பு வாங்கினால் கூப்பன் வழங்கப்படும். கூப்பனில் பரிசுகள் விழுந்தால் 50 சதவீத தள்ளுபடி விலையில் குக்கர், குத்துவிளக்கு, ஸ்கூட்டர் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் என ஆசை வார்த்தை கூறி சோப்புகளை விற்பனை செய்துள்ளனர்.

    சோப்புகளை வாங்கியவர்களிடமிருந்து அவர்களை நம்பச்செய்யும் வகையில், செல்போன் எண்ணையும் வாங்கி சென்றனர். இந்தநிலையில் போனில் தொடர்பு கொண்ட சோப்பு விற்பனை செய்த நபர்கள் தங்களது செல்போன் எண்ணிற்கு ஸ்கூட்டியும், தங்க காசும் விழுந்து உள்ளதாகவும் அதற்கான ஜிஎஸ்டி தொகையான, 14,860 ரூபாயை மட்டும் அனுப்ப வேண்டும் என கூறி வங்கி கணக்கு எண்ணை கூறியுள்ளனர்.

    இதனையடுத்து ரோஸ்லின் அவர்களுடைய வங்கி கணக்கிற்கு ரூ.14,850 செலுத்தியுள்ளார். ஆனால் அவர்கள் கூறியவாறு பொருட்களை அனுப்பவில்லை. அதன் பிறகு தான் அவர் ஏமாந்ததாக அறிந்தார். இது குறித்து ரோஸ்லின் கீழப்பழுவூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் கீழப்பழுவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாயம் அன்பரசு மற்றும் சைபர் கிரைம் போலீசார் அடங்கிய தனிப்படை போலீசார் மர்ம நபர்களின் செல்போன் நம்பரை தொடர்பு கொண்டு அவர்கள் இருப்பிடம் தெரிந்து கொண்டனர். பின்னர் அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    விசாரணையில் அவர்கள் சேலம் குறிஞ்சி நகரைச் சேர்ந்த குறவர்கள் என்பதும், அவர்களது உறவினர்களான பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சண்முகவேல், சின்ன ராமசாமி, மாரியப்பன், ஜெயக்குமார், விவேகானந்தன், சுரேஷ்குமார், சின்ன சுடலை, குருநாதன், மாடசாமி, இசக்கிமுத்து, ரஞ்சித் குமார், முப்புடாதி, காளிமுத்து என்பது தெரியவந்தது. இவர்கள் பல்வேறு மாவட்டங்களில் இது போன்று மோசடியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

    இதனையடுத்து 14 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து குக்கர், 15 செல்போன், 9 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களது வங்கி கணக்குகளை கைப்பற்றி பணத்தை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×