என் மலர்
அரியலூர்
- நவராத்திரி விழா தொடங்கியது.
- அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
அரியலூர்
அரியலூர் மாவட்டம், தா.பழூர் விசாலாட்சி அம்மன் சமேத விஸ்வநாதர் கோவிலில் நவராத்திரி விழா தொடங்கியது. நவராத்திரியை முன்னிட்டு அமாவாசை தினமான ஞாயிற்றுக்கிழமை அன்று அம்மனை கோவிலுக்கு அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. நவராத்திரி விழாவின் முதல் நாளான நேற்று விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. கொலுமண்டபத்தில் எழுந்தருளிய விசாலாட்சி அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு மங்கள ஆரத்தி நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு சோடச உபசாரங்கள் நடைபெற்றன. விசாலாட்சி அம்மனுக்கு அஷ்டோத்திர அர்ச்சனையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
- தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- இரண்டு மகள்கள் உள்ளனர்
அரியலூர்
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள அகரம் மேல தெருவை சேர்ந்தவர் முருகன்(வயது 42). கூலித்தொழிலாளியான இவருக்கு மேனகா என்ற மனைவியும், ஜெயசூர்யா என்ற மகனும், ஜோதிகா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது தனிமையில் இருந்த முருகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆண்டிமடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்."
- இந்திய கம்யூனிஸ்டு கட்சி புதிய கிளை தொடக்க விழா நடைபெற்றது.
- அரசியல் பற்றி விளக்கி பேசினார்
அரியலூர்
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள குண்டவெளி கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் புதிய கிளை தொடக்க விழா நடைபெற்றது. இதற்கு ஒன்றிய செயளாலர் ராஜாபெரியசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயளாலர் ராமநாதன் முன்னிலை வகித்தார். மூத்த தோழர் உலகநாதன் கட்சியின் கொடியை ஏற்றிவைத்து இன்றைய அரசியல் பற்றி விளக்கி பேசினார். கூட்டத்தில் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
- மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு
- எதிர்பாராதவிதமாக மின்வேலியில் சிக்கினார்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் குவாகம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 55) செம்மறி ஆடுகள் வளர்த்து வருகிறார். இரவு நேரங்களில் ஆடுகளை நாய்கள் கடித்து விடுவதால் ஆட்டுக் கொட்டகையைச் சுற்றி மின்வேலி அமைப்பது வழக்கம் எனக்கூறப்படுகிறது.
இந்நிலையில் அவரிடம் வேலை பார்த்து வந்த கீழ குவாகம் கிராமத்தைச் சேர்ந்த இளங்கோவன் மகன் அருண்குமார் (17) நேற்று அதிகாலை எதிர்பாராதவிதமாக மின்வேலியில் சிக்கி அதே இடத்தில் உயிரிழந்தார். தகவலறிந்து குவாகம் போலீசார் சென்று அருண்குமார் உடலை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- ஊர்க்காவல் படையில் பணிபுரிய இளைஞர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
- அரியலூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. தகவல்
அரியலூர் :
அரியலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள ஊர்க்காவல் படையினருக்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அரியலூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 25 ஆண்கள் மற்றும் 3 பெண் பணியிடங்களை பூர்த்தி செய்யவதற்கான விண்ணப்பங்கள் செப்டம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் வழங்கப்படுகிறது. இந்த இரு தினங்களிலேயே விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.
ஊர்க்காவல் படையில் சேர விருப்பம் உள்ளவர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பெறாதவர்களாக இருக்கலாம். ஆண்கள் மற்றும் பெண்கள் இரு பாலரும் சேரலாம். உடல் ஆரோக்கியமாகவும் தேர்வு நடைபெறும் நாட்களில் 20 வயது நிறைந்தவராகவும், 45 வயது நிறைவடையாதவராகவும், உடல் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும்.
கல்விச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், ஆதார் அட்டை ஆகியன அசல் மற்றும் நகல்கள் ஒன்று எடுத்து வர வேண்டும். தற்போது எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 2 எடுத்து வர வேண்டும்.
இந்திய குடியுரிமை பெற்றவராகவும், அரசியல் கட்சி தொடர்பு இல்லாதவராகவும் இருக்க வேண்டும். மேலும் உடல் தகுதிகள் காவல்துறையை போன்றது. ஆண்களில் பி.சி., எம்.பி.சி. போன்ற பிரிவினருக்கு 170 செ.மீ. உயரமும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 167 செ.மீ. உயரமும் இருக்க வேண்டும்.
மார்பளவு அனைவருக்கும் சாதாரணமாக 81 செ.மீ. விரிந்த நிலையில் 86 செ.மீ. இருக்க வேண்டும். பெண்களில் பி.சி., எம்.பி.சி. பிரிவினுருக்கு 159 செ.மீ. உயரமும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 157 செ.மீ. உயரமும் இருக்க வேண்டும். இப்பணிக்கு மாதம் ஊதியம் எதுவும் இல்லை. பணி நாட்களுக்கு உரிய படித்தொகை மட்டும் தரப்படும்.
பணியில் சேர விருப்பமுள்ளவர்கள் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். ஊர்க்காவல் படைக்கு மூன்று ஆண்டுகள் கட்டாயம் தொடர்ந்து வருகை தர வேண்டும். தேர்வு நாளன்று எவ்வித பயணப்படியும் வழங்கப்பட மாட்டாது. 45 நாட்கள் கவாத்து பயிற்சி நடைபெறும்.
அரசு பணியில் உள்ளவர்கள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- பனை விதை நடும் நிகழ்ச்சி நடந்தது
- வாய்க்கால் மதகு பகுதிகளில் நடப்பட்டது
அரியலூர் :
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட குருவாடி கிராமத்தில் காமராசர் கல்வி குழுவினர் மற்றும் பள்ளி மாணவர்கள், கிராம பொதுமக்கள் இணைந்து கொள்ளிடம் ஆற்றில் இருந்து கங்கைகொண்ட சோழபுரத்தில் சோழகங்கம் என்றழைக்கப்படும் பொன்னேரிக்கு செல்லும் வாய்க்கால் கரை பகுதிகளில் சுமார் 1000 பண்ணை விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் காமராசர் கல்வி குழுவினர் அருள் தலைமையில் ஆனந்தகுமார், மணிகண்டன், முல்லை வேந்தன், பாலமுருகன். மற்றும் குணா ஆகியோர் முன்னிலையில் பகுதிகளிலும், பொன்னேரிக்கு செல்லும் வாய்க்கால் மதகு பகுதிகளிலும் சுமார் 1000 பனை விதைகள் நடப்பட்டது.
- டெங்கு, இன்புளூயன்சா விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
- சிறுவலூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்தது
அரியலூர்
அரியலூர் மாவட்டம் சிறுவலூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் டெங்கு, இன்புளூயன்சா விழிப்புணர்வு முகாம் பள்ளி தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமையில் நடைபெற்றது. இதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அருண் பிரகாஷ் கலந்து கொண்டு பேசுகையில் தமிழகம் முழுவதும் தற்போது டெங்கு, இன்புளூயன்சா தொற்று பரவி வருகிறது. பள்ளி மாணவர்களுக்கு இருமல், காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவமனைக்கு சென்று உரிய மருந்து, மாத்திரைகளை எடுத்துக்கொண்டால் 3 அல்லது 4 நாட்களில் குணமாகிவிடும். காய்ச்சல் பற்றி பொதுமக்களோ, மாணவர்களோ அச்சப்பட தேவையில்லை. தற்போது மழைக்காலம் நெருங்குவதால் பள்ளி மற்றும் வீடுகளின் சுற்றுப்புறங்களில் நீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஏடிஎஸ் கொசுக்கள் மூலம் டெங்கு காய்ச்சல் பரவுவதால் கொசுக்கடியில் இருந்து கொசுவலை, கொசு மருந்து கிரீம்களை பயன்படுத்தி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றார். இதையடுத்து, சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன், அருண்குமார் ஆகியோர் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- தண்ணீர் வரத்து இல்லாததால் நாற்று நட முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.
- தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க கோரிக்கை
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பொன்னாறு ஓடுகிறது. இந்த பொன்னாற்று பாசனம் மூலம் சுமார் 10 ஆயிரம் ஹெக்டர் விவசாயம் செய்யப்படுகிறது. இந்நிலையில் மதகை மூடி வைத்ததால் ஏற்பட்ட மணல் திட்டு காரணமாக பொன்னாற்றில் தண்ணீர் வரத்து இல்லாமல் சம்பா சாகுபடி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த மாதங்களில் பெய்த மழையின் காரணமாக பொன்னாற்றில் தண்ணீர் வந்த நிலையில், விவசாயிகள் சம்பா நடவுக்காக இயந்திர நடவு செய்வதற்கு கை நடவு மற்றும் நேரடி நெல் விதைப்பு உள்ளிட்டவர்களுக்கு வயல்வெளிகளை சரி செய்து தண்ணீர் விட்டு சேர் அடித்து வந்த நிலையில், நடவு பணி தொடங்கும் தருவாயில், கடந்த சில நாட்களாக தண்ணீர் வராத காரணத்தினால் சேர் இறுகும் நிலையில் பறித்த நாற்றுகள் கருகும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
பொன்னாற்றில் தண்ணீர் வராததால் வாய்க்கால்கள் வறண்டு காணப்படுகிறது. இதனால் தற்போது தயார் நிலையில் உள்ள நாற்றுகள் கருகும் நிலை ஏற்படுவதால் சம்பா சாகுபடி பாதிக்கப்படும் நிலை உள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் கூறுகின்றனர்.
இதுபற்றி அதே பகுதியை சேர்ந்த விவசாயி தட்சிணாமூர்த்தி கூறும்போது:-
சம்பா சாகுபடிக்காக வயல்களை சேர் அடிச்சு தயார் நிலையில் வைத்திருக்கின்றோம். இந்த நேரத்தில் பொன்னாற்று வாய்க்காலில் தண்ணி வராத காரணத்தால் நடவு பாதிக்கப்பட்டு நிற்கின்றது. நாற்றுகள் வயலில் வைத்ததெல்லாம் காய்ந்து வருகிறது. வயலில் சேர் அடித்ததும் காய்ந்து கிடக்கிறது. தற்பொழுது விதைக்க முடியாத சூழல் உள்ளது. எனவே சம்பா சாகுபடி செய்யும் வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பயிர் செய்யும் வகையில் பொன்னாற்று வாய்க்காலில் முறையாக தடுப்பணையை கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். என தெரிவித்தார்.
- போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது
- மாதிரி தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.
அரியலூர்:
அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக மத்திய, மாநில அரசு வேலைவாய்ப்பு போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தற்போது எஸ்.எஸ்.சி. என்னும் ஸ்டாப் செலக்ஷன் கமிஷன், பாரத ஸ்டேட் வங்கியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கான போட்டித் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதற்கான இலவசப் பயிற்சி வகுப்பு இன்று (26-ந்தேதி) முதல் அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளும் இளைஞர்களுக்கு மாதிரி தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.
இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் அலுவலகத்திலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கால்நடைகளின் கால்களை கட்டி மேய்ச்சலுக்கு அனுப்பக்கூடாது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- கால்நடை போக்குவரத்து விதியின் படி குறைந்த பட்சம் 2 சதுரமீட்டர் இடவசதி
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் விவசாயிகள் தங்களது பசுக்கள், எருமைகள், மற்றும் வெள்ளாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பும் போது கால்நடைகளின் முன்னங்காலை கழுத்துடன் கயிற்றால் கட்டி அனுப்பி விடுகின்றனர். இதனால் அந்த கால்நடைகள் மிகவும் துன்பத்துக்கு உள்ளாகின்றன.
மேலும் சாலைகளை கடக்கும் போது வேகமாக செல்ல முடியாமலும் திரும்ப முடியாமலும் பல விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே கால்நடைகளின் கால்களை கட்டி மேய்ச்சலுக்கு அனுப்ப கூடாது. கால்நடைகளை தெருக்களில் திரிய அனுமதிக்கும் கால்நடையின் உரிமையாளருக்கு அதிகப்படியான அபராதம் விதிக்க பிராணிகள் வதை தடுப்புச் சட்டத்தில் வரையறை செய்யப்பட்டுள்ளது. இதை மீறி செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் கால்நடைகளை வாகனங்களில் ஏற்றி செல்லும் போது கால்நடை போக்குவரத்து விதியின் படி குறைந்த பட்சம் 2 சதுரமீட்டர் இடவசதி மற்றும் குடிநீர் வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடை பெற்றது.
- தா.பழூர் அருகே உள்ள கோடாலி கருப்பூர் ராமநாராயண பெருமாள் கோவிலில் சீதாதேவி- லட்சுமணர் சமேத ராம நாராயண பெருமாளுக்கு பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.
அரியலூர் :
புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு அரியலூர் பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடை பெற்றது.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடாலி கருப்பூர் ராமநாராயண பெருமாள் கோவிலில் சீதாதேவி- லட்சுமணர் சமேத ராம நாராயண பெருமாளுக்கு பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராமநாராயண பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பெருமாளுக்கு மங்கல ஆரத்தி உள்ளிட்ட உபச்சாரங்கள் நடைபெற்றன.
அதுபோல் தா.பழூர் அருகே உள்ள தாதம்பேட்டை பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் வரதராஜ பெருமாள், பெருந்தேவி தாயார், ஆண்டாள் உள்ளிட்ட தெய்வங்களுக்கு பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.
பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு வரதராஜ பெருமாள் எழுந்தருளி சேவை சாதித்தார். பெருமாளுக்கு வேத மந்திரங்கள் முழங்க மங்கல ஆரத்தி, மகா தீபாராதனை நடைபெற்றது.
தா.பழூர் பால ஆஞ்சநேயர் கோவிலில் சஞ்சீவிராயர், பால ஆஞ்சநேயருக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பால ஆஞ்சநேயர் சுவாமிக்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
- ஆட்டோவில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், போதை பாக்குகள் என 32 மூட்டைகள் இருந்தன.
- இதையடுத்து புகையிலை பொருட்களுடன் 2 சரக்கு ஆட்டோக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
அரியலூர் :
அரியலூர் மாவட்டம் திருமானூர் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதேவி தலைமையிலான போலீசார் ஏலாக்குறிச்சி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியே வந்த 2 சரக்கு ஆட்டோக்களை தடுத்து சோதனை நடத்தினர். ஆட்டோவில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், போதை பாக்குகள் என 32 மூட்டைகள் இருந்தன.
இதையடுத்து புகையிலை பொருட்களுடன் 2 சரக்கு ஆட்டோக்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சரக்கு ஆட்டோக்களை ஓட்டி வந்த மேலவரப்பங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த நீதிமொழி (வயது 32), முருகேசன் (50) ஆகியோரை கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் 2 பேரும் அரியலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.






