என் மலர்
அரியலூர்
- அரியலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது
- தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாள்களாக பனிப் பொழிவு அதிகமாக இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை தூறலுடன் ஆரம்பித்த மழை அதன் பிறகு சாரல் காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீர் வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடியது. தாழ்வான இடங்களில் குளம் மழை நீர் தேங்கியது. திடீரென பெய்த மழையால் அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியடைந்தனர். அரியலூர் நகர் பகுதியான மார்க்கெட், வெள்ளாளத் தெரு,ராஜாஜி நகர், புதுமார்க்கெட்,கல்லூரி சாலை, செந்துறை சாலை, திருச்சி சாலைகளில் மழை நீருடன் சாக்கடை நீரும் கரைபுரண்டு ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.இதே போல் திருமானூர், கீழப்பழுவூர், தா.பழூர், ெஜயங்கொண்டம், ஆண்டிமடம், மீன்சுருட்டி, செந்துறை, பொன்பரப்பி, தளவாய் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது. இடைவிடாமல் பெய்த மழையால் மாவட்ட முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
- விளையாட்டு வீரர்கள் சிறப்பு உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
- 15 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
அரியலூர்:
சிறப்பு உதவித்தொகை பெற அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம் என அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
அரியலூர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டம் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை (ஒலிம்பிக்கில் இடம் பெற்றுள்ள விளையாட்டுக்கள் மட்டும்), பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம், வெற்றியாளர்கள் மேம்பாட்டுத்திட்டம் ஆகிய மூன்று வகைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த விளையாட்டு வீராங்கனைகளுக்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும்.
இத்திட்டங்களில் சேர்ந்து பயன்பெற விரும்பும் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணைய தளம் மூலம் தங்களது விண்ணப்பங்களை வரும் 15 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
இணைய வழியில் வரும் விண்ணப்பங்களைத் தவிர பிற விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்கப்படமாட்டாது.
மேலும் விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் குறித்த விவரங்களுக்கு இணையதளம் மற்றும் ஆடுகளம் தகவல் மையத்தினை அனைத்து வேலை நாள்களிலும் காலை 10 முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலரை 7401703499 என்ற கைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
- மாற்றுத்திறனாளிகள் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
- எம்.எல்.ஏ.தொடங்கி வைத்தார்
அரியலூர்:
மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா அருகே தொடங்கிய பேரணியை சட்டப் பேரவை உறுப்பினர் க.சொ.க.கண்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் சலுகைகளை கண்காணிக்க தனி அலுவலரை நியமிக்க வேண்டும். மற்ற விளையாட்டு வீரர்களுக்கு அளிக்கப்படும் சலுகைகள் மற்றும் அரசு வேலைகள் உட்பட அனைத்தும் தேசிய அளவில் வெற்றி பெற்ற பாரா ஒலிம்பிக் மாற்றுத்திறனாளி வீரர்களுக்கும் வழங்க வேண்டும். வேலைவாய்ப்பில், அரசு மற்றும் தனியார் துறைகளில் 4சதவீத இட ஒதுக்கீடு கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டவாறு சென்றனர்.
பேரணியானது பிரதான கடைவீதி வழியாகச் சென்று பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது. பேரணிக்கு, தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் ஆலோசனை வாரிய உறுப்பினர் சிவகாமி ஆபிரகாம் தலைமை வகித்தார். மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாமிநாதன் சிறப்புரையாற்றினார். தலைவர் ஆபிரகாம், செயலர் செல்வமணி, துணைச் செயலர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். முடிவில் பொருளாளர் பிரபாகர் நன்றி கூறினார்.
- பிள்ளைகளால் கைவிடப்பட்ட மூதாட்டிகளை மீட்ட போலீசார்
- முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டனர்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை அடுத்த கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் முன்பாக பலர், கோவிலுக்கு வருபவர்களிடம் யாசகம் பெறுவது குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து கோவிலுக்கு சென்ற போலீசார், அங்கு பிச்சை எடுத்துக் கொண்டிருந்த 3 மூதாட்டிகளை மீட்டு, ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது தங்களுக்கு பிள்ளைகள் இருந்தும் பிள்ளைகளால் கைவிடப்பட்டு பிச்சை எடுத்து பிழைப்பு நடத்துவதாக மூதாட்டிகள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர்கள் முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டனர்.
- மாளிகைமேடு மாதிரி கண்காட்சி அரங்கை ஆர்வத்துடன் மாணவ-மாணவிகள் பார்வையிட்டனர்.
- பண்டைய காலப்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது
அரியலூர்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 29-ந் தேதி அரியலூர் மாவட்டம், கொல்லாபுரத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவையொட்டி அமைக்கப்பட்டிருந்த கங்கை கொண்ட சோழபுரம் மாளிகைமேடு மாதிரி கண்காட்சி அரங்கை பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து அந்த அரங்கை 10 நாட்களுக்கு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பார்வையிடலாம் என்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், கண்காட்சி அரங்கில் மாளிகைமேட்டில் அகழ்வாராய்ச்சின்போது கிடைத்த செப்புப் பொருட்கள், செப்பு காசுகள், தங்க காப்பு, தந்தத்தினாலான பொருட்கள், இரும்பினாலான ஆணிகள், கண்ணாடி வளையல்கள், கண்ணாடி மணிகள், சீன பானை ஓடுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான 600-க்கும் மேற்பட்ட பண்டைய காலப்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கொல்லாபுரத்தில் உள்ள மாளிகைமேடு மாதிரி கண்காட்சி அரங்கினை பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் வந்து பார்வையிட்டு செல்கின்றனர். மேலும் இந்த அரங்கினை மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்களும் வந்து பார்வையிட்டு நமது முன்னோர்களின் வாழ்வியல் முறை, கலாசாரம், அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
- மணல் கடத்திய 3 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
- போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அரியலூர்:
விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் மற்றும் போலீசார் சாத்தம்பாடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாத்தம்பாடி கொள்ளிடம் ஆற்றுப்படுகை பகுதியில் இருந்து மணல் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அப்பகுதிக்கு சென்ற போலீசார் சாத்தம்பாடி கல்லேரி அருகே சென்ற 3 மாட்டு வண்டிகளை நிறுத்தி, சோதனை செய்ய முயன்றனர். இதனால் மாட்டு வண்டிகளை ஓட்டி வந்த 3 பேர், அந்த வண்டிகளை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டனர்.
பின்னர் போலீசார் அந்த வண்டிகளை சோதனை செய்தபோது, அவற்றில் சாத்தம்பாடி கொள்ளிடம் ஆற்றுப்படுகை பகுதியில் இருந்து ஆலம்பள்ளம் பகுதிக்கு மணல் கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து 3 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்த போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 3 பேரையும் தேடி வருகிறார்கள்.
- ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதாவினர் 99 பேர் கைது செய்யப்பட்டனர்
- திருமண மண்டபத்தில் அடைத்து மாலை விடுவித்தனர்.
அரியலூர்
திருச்சி புத்தூர் பகுதியில் மனமகிழ் மன்றம் தொடங்கப்படுவதை கண்டித்து திருச்சி மாநகர், மாவட்ட பா.ஜ.க. சா ர்பில் புத்தூர் நால்ரோடு பகுதியில சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை அவதூறாக பேசியதாக கூறி திருச்சி மாநகர், மாவட்ட பா.ஜ.க. தலைவர் ராஜசேகரன் உள்ளிட்ட 9 நிர்வாகிகளை உறையூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த கைது சம்பவத்தை கண்டித்து, அரியலூர், அறந்தாங்கி, கந்தர்வக்கோட்டை ஆகிய பகுதிகளில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டத்தில் 5 இடங்களில் பா.ஜ.க. வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் ஜெயங்கொண்டம் நான்குச் சாலை சந்திப்பு பகுதியில் மாவட்டத் தலைவர் அய்யப்பன் தலைமையில் நடைபெற்ற சாலை மறியலில் 24 பேரை போலீசார் கைது செய்தனர். திருமானூரில் ஒன்றியத் தலைவர் சுரேஷ் தலைமையில், மேற்கு ஒன்றிய துணை தலைவர் வடமலை, ஒன்றிய துணை செயலர் தனபால், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்டச் செயலர் ஆனந்தன் ஆகியோர் முன்னிலையில் மறியலில் ஈடுபட்ட 16 பேரை திருமானூர் காவல் துறையினர் கைது செய்தனர். இதே போல் செந்துறையில், ஒன்றிய தலைவர் புயல்.செல்வம் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 28 பேரையும், தா.பழூரில் ஒன்றியத் தலைவர் அரங்கநாதன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 16 பேரையும், ஆண்டிமடத்தில் மறியலில் ஈடுபட்ட ஒன்றியத் தலைவர் நீலமேகம் உள்பட 15 பேரையும் காவல்துறையினர் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.
- மகளிர் வாலிபால் போட்டி நடந்தது
- 14 அணிகள் பங்கேற்று விளையாடின
அரியலூர்,
அரியலூர் மாவட்டம் விளாங்குடி அண்ணா பொறியியல் கல்லூரியில், அண்ணா பல்கலைக்கழக இணைவுக் கல்லூரிகளுக்கு இடையேயான மாநில அளவில் 27 வயது மகளிருக்கான வாலிபால் போட்டிகள் கடந்த 2 நாள்களாக நடைபெற்றன. இந்த போட்டிகளில், பொறியியல் கல்லூரிகளை சேர்ந்த 14 அணிகள் பங்கேற்று விளையாடின. இதையடுத்து வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.கல்லூரி முதன்மையர்(டீன்)செந்தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டு சாம்பியன் கோப்பையை வழங்கினார்.
- பாடாலூர் யூனியன் வங்கியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
- முக்கிய ஆவணம் எதுவும் எரியவில்லை
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, பாடாலூர் கிராமத்தில் யூனியன் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று வங்கியில் இருந்து கரும்புகை வெளியே வந்தது. இதனை கண்ட அருகில் இருந்தவர்கள் வங்கி மேலாளருக்கு தகவல் தெரிவித்தனர். வங்கி மேலாளர் உடனே வந்து வங்கியை திறந்து பார்த்தபோது 4 குளிர்சாதன எந்திரங்கள் தீப்பிடித்து மளமளவென எரிந்தது. உடனே இதுகுறித்து வங்கி மேலாளர் தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் அங்கு விரைந்து வந்த பெரம்பலூர் தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைத்தனர். இதில் முக்கிய ஆவணம் எதுவும் எரியவில்லை. இதுபற்றி பாடாலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு 6 மையங்களில் எழுத்து தேர்வு நாளை நடக்கிறது.
- நுழைவுச்சீட்டு இல்லாமல் அனுமதிக்கப்பட மாட்டார்கள்
அரியலூர்
அரியலூர் மாவட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள 37 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. அரியலூர் வட்டத்திற்கு கீழப்பழுவூர் அருகே கருப்பூர் விநாயகா கல்வியியல் நிறுவனத்திலும், செந்துறை வட்டத்திற்கு செந்துறை செயின்ட் தெரசா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், ஜெயங்கொண்டம் வட்டத்திற்கு தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், மேலும் அதன் வளாகத்தில் உள்ள மீனாட்சி ராமசாமி பி.எட் கல்லூரியிலும், ஆண்டிமடம் வட்டத்திற்கு விளந்தை அரசு மேல்நிலைப்பள்ளியிலும், அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியிலும் ஆகிய 6 மையங்களில் எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது.
இணையவழியில் பதிவு செய்து ஏற்கப்பட்ட விண்ணப்பதார்களுக்கு எழுத்துத் தேர்வில் கலந்துக்கொள்ள விண்ணப்பத்தில் பதிவு செய்த செல்போன் எண், மின்னஞ்சல் முகவரிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். அதன் மூலம் தேர்வு மைய நுழைவு சீட்டினை விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது https://agaram.tn.gov.in/onlineforms/formpageopen.php?id=43-174 என்ற இணையதளத்தினுள் சென்று பதிவு எண்ணினையும், செல்போன் எண்ணையும் பதிவு செய்து நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். மாவட்ட வேலை வாய்ப்பகம் மற்றும் முன்னாள் படை வீரர் நல அலுவலகம் மூலம் பெறப்பட்ட பட்டியலில் உள்ள ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தபால் மூலம் பதிவஞ்சலில் தேர்வு நுழைவு சீட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் அனைவரும் காலை 9.30 மணிக்கு தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படுவர். விண்ணப்பதாரர்கள் எவரும் தேர்வு அறைக்குள் காலை 9.50-மணிக்கு பின்பும் மற்றும் காலை 10.50-மணிக்கு முன்பும் தேர்வு அறையை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்ட மாட்டார்கள். நுழைவுச்சீட்டு இல்லாமல் எந்த விண்ணப்பதாரர்களும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். விண்ணப்பதாரர்கள் செல்போன், புத்தங்கள், கைப்பைகள் மற்றும் வேறு எந்தவொரு மின்னணு சாதனங்களையும் தேர்வு மையத்திற்குள் கொண்டு வரக்கூடாது. இந்த தகவல் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது."
- பாதிக்கப்பட்ட 2 பேருக்கு ரூ.12.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
- தவறான சிகிச்சை
அரியலூர்:
அரியலூர் காந்தி நகரைச் சேர்ந்த கணேசன் மகள் எழில்செல்வி. இவரது கணவர் பிரபாகர் தற்போது வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 28.03.2018 அன்று எழில் செல்விக்கு பிரசவ வலி எற்பட்டு, அங்குள்ள ஒரு மகப்பேறு தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்று மதியமே அவருக்கு குழந்தை பிறந்து உள்ளது. எனினும் அவருக்கு தொடர்ந்து ரத்தப் போக்கு ஏற்படவே, உயர் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு 29.3.2018 அன்று எழில் செல்விக்கு ரத்தப்போக்கை கட்டுப்படுத்த அறுவை சிகிச்சையின் மூலம் அவரது கர்ப்பப்பை நீக்கப்பட்டுள்ளது. ஆனால் சிகிச்சை பலனின்றி அன்று மாலை அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து கடந்த 2018 ஆம் ஆண்டு எழில்செல்வி பெற்றோர் தொடுத்த வழக்கை விசாரித்து வந்த அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி வீ. ராமராஜ் தலைமையிலான அமர்வு, மருத்துவரின் அஜாக்கிரதையால் எழில்செல்வி உயிரிழந்ததற்கான ஆதாரங்கள் அனைத்தும் நிருபணமாகியுள்ளது.
எனவே உயிரிழந்த எழில் செல்வியின் 5 வயது மகளுக்கு ரூ.12 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், இந்த தொகை தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் இறந்தவரின் பெற்றோர்களை காப்பாளர் கொண்டு இழப்பீடு செய்ய வேண்டுமென்றும் உத்தரவிட்டனர்.
இதே போல் சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த பெரிடிநந்த் மனைவி சஹானா(32). இவர் தமது தாடையிலும், உதட்டிலும் வளர்ந்த முடியை அகற்றுவதற்காக தனியார் மருத்துவமனையை அணுகியுள்ளார். அங்கு கடந்த 18.4.2017 அன்று அவருக்கு லேசர் சிகிச்சை மூலம் முடிகள் அகற்றப்பட்டுள்ளது. அப்போது லேசர் கருவி வெப்பம் காரணமாக சஹானா முகத்தில் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை தெற்கு மாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் சஹானா தொடுத்த வழக்கு கடந்த ஜூலை மாதம் விசாரணைக்காக அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்துக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையில் சஹானாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை ரூ.50 ஆயிரம் இழப்பீடாக அவருக்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
- செந்துறை இ-சேவை மையத்துக்கு சீல் வைக்கப்பட்டது
- முறைகேடு புகாரை தொடர்ந்து
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டாட்சியர் அலுவலகம் அருகே பிரபு என்பவர் நடத்தி வரும் தனியார் இ பொது சேவை மையத்தில், பிறப்பு, இறப்பு, பட்டா மாற்றம், பட்டா உட்பிரிவு உட்பட பல்வேறு அரசு சார்ந்த பணிகளுக்கு இணையதளத்தில் மக்கள் விண்ணப்பிக்க செலுத்தும் பணத்தை முறையாக அரசுக்கு செலுத்தாமல், முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக எழுந்த குற்றச்சாட்டில், வட்டாட்சியர் பாக்கியம் விக்டோரியா ஆய்வு மேற்கொண்டார். இதில், முறைகேடு நடைபெறுவது உண்மை என்பது தெரியவந்தது. இதையடுத்து, செந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும், அந்த இ சேவை மையத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.






