என் மலர்tooltip icon

    உத்தரகாண்ட்

    • ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி.
    • பத்ரிநாத் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் முகேஷ் அம்பானி கலந்து கொண்டார்.

    பத்ரிநாத் :

    ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி நேற்று உத்தரகாண்டின் பத்ரிநாத் கோவிலுக்கு சென்றார்.

    இமயமலையில் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு ஹெலிகாப்டரில் சென்ற அவர், அங்கு நடந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார்.

    பின்னர் பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் கோவில்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ.5 கோடி நன்கொடை வழங்கினார்.

    • மொராதாபாத் போலீசார் அங்கு சென்றபோது மோதல் ஏற்பட்டதால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
    • பாஜக தலைவர் புல்லார் குற்றவாளியை மறைக்க முயன்றதாக மொரதாபாத் போலீஸ் அதிகாரி குற்றம்சாட்டினார்.

    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலத்தின் ஜஸ்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், சுரங்க மாபியாவைச் சேர்ந்த ஜாபர் என்பவரை பிடிப்பதற்காக உத்தர பிரதேச போலீசார் அந்த கிராமத்தை நேற்று சுற்றி வளைத்தனர். அப்போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். ஆனால் துப்பாக்கி குண்டு உள்ளூர் பாஜக தலைவர் குர்தாஜ் புல்லாரின் மனைவி குர்பீரித் கவுர் (வயது 28) மீது பாய்ந்தது. 5 உ.பி. போலீஸ்காரர்கள் காயமடைந்தனர். இந்த சம்பவம் இரு மாநில காவல்துறைகளுக்கிடையே பிரச்சனையை உருவாக்கி உள்ளது.

    உத்தர பிரதேசத்தின் மொராதாபாத்தில் இருந்து ஜாபரை போலீசார் பிடிக்க முயன்றபோது அவர் அங்கிருந்து தப்பி, எல்லை வழியாக அண்டை மாநிலமான உத்தரகாண்ட்டில் புகுந்து பாஜக தலைவர் புல்லாரின் பண்ணை வீட்டில் தஞ்சம் புகுந்துள்ளார். மொராதாபாத் போலீசார் அங்கு சென்றபோது மோதல் ஏற்பட்டதால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் புல்லாரின் மனைவி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. உ.பி. போலீசார் மீதும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

    பாஜக தலைவரின் மனைவி இறந்ததையடுத்து கோபமடைந்த கிராமத்தினர், 4 போலீஸ்காரர்களை சிறைப்பிடித்து அவர்களிடம் இருந்த ஆயுதங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

    மிகவும் அலட்சியமாக துப்பாக்கி சூடு நடத்தி பெண்ணை கொலை செய்தது தொடர்பாக உ.பி. போலீசார் மீது உத்தரகாண்ட் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    பாஜக தலைவர் புல்லார் குற்றவாளியை மறைக்க முயன்றதாக மொரதாபாத் போலீஸ் அதிகாரி குற்றம்சாட்டினார். ஆனால் இந்த குற்றச்சாட்டை புல்லார் மறுத்தார். உள்ளூர் மக்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் எதுவும் ஏற்படவில்லை, போலீசார் வந்ததும் துப்பாக்கியால் சுட்டனர். நாங்கள் அவர்களை சிறைப்பிடிக்கவில்லை, உத்தரகாண்ட் போலீசில் அவர்களை ஒப்படைத்தோம் என புல்லார் விளக்கம் அளித்தார்.

    இந்த களேபரத்துக்கு மத்தியில், போலீசார் தேடிச் சென்ற குற்றவாளி ஜாபர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

    • பனிச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு பிரதமர், உள்துறை மந்திரி இரங்கல் தெரிவித்தனர்.
    • பனிச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்தது.

    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில் மலையேறுதல் பயிற்சிக்கான அரசு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தைச் சேர்ந்த 34 பயிற்சி மலையேறு வீரர்கள், 7 பயிற்சியாளர்கள் என மொத்தம் 41 பேர் இமயமலையின் திரவுபதி கா தண்டா-2 சிகரத்தில் இருந்து பயிற்சியை முடித்துக் கொண்டு முகாமிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென அப்பகுதியில் பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் அவர்கள் அனைவரும் சிக்கிக் கொண்டனர்.

    தகவலறிந்த இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்பு படையினர், தேசிய, மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் பனிச்சரிவில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர்கள் உதவியுடன் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே, பனிச்சரிவில் சிக்கிய சிலர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், 10 பேர் உயிரிழந்துள்ளனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.

    இந்த துயர நிகழ்விற்கு பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.

    இந்நிலையில், உத்தராகண்ட் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த 16 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. பனிச்சரிவில் சிக்கி காணாமல் போன எஞ்சியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது என உத்தர்காசி மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

    • திருமணத்துக்குச் சென்றவர்களின் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.
    • இதில் 33 பேர் பலியாகினர், 19 பேர் காயமடைந்தனர் என போலீசார் தெரிவித்தனர்.

    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலம் பவுரி கர்வால் மாவட்டம் லால்தாங் பகுதியில் இருந்து நேற்று இரவு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 50 பேர் அதில் பயணம் செய்தனர். பிரோகல் பகுதியில் சிம்ரி என்ற இடத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதில் 25 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என தகவல் வெளியானது.

    தகவலறிந்த காவல்துறையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர் உதவியுடன் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். 21 பேர் இரவோடு இரவாக உயிருடன் மீட்கப்பட்டனர் என டிஜிபி அசோக்குமார் தெரிவித்தார். காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், உத்தராகாண்டில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது என்றும் காயமடைந்த 19 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என போலீசார் தெரிவித்தனர்.

    விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமி இரங்கல் தெரிவித்ததுடன், அவர்கள்து குடும்பத்துக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் அளித்து உத்தரவிட்டார்.

    • திருமண நிகழ்ச்சிக்கு சென்றவர்கள் விபத்தில் சிக்கிய சோகம்.
    • 21 பேர் மீட்கப்பட்டனர், காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி.

    பவுரி கர்வால்:

    உத்தரகாண்ட் மாநிலம் பவுரி கர்வால் மாவட்டம், லால்தாங் பகுதியில் இருந்து நேற்றிரவு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அந்த பேருந்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 50 பேர் பயணம் மேற்கொண்டிருந்தனர். பிரோகல் பகுதியில் சிம்ரி என்ற இடத்தில் ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 25 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    தகவல் அறிந்த அந்த பகுதி காவல்துறையினர் தேசிய பேரிடர் மீட்பு படையினர் உதவியுடன் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். 21 பேர் இரவோடு இரவாக உயிருடன் மீட்கப்பட்டதாக டிஜிபி அசோக் குமார் தெரிவித்தார். காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    • பயிற்சியை முடித்துக் கொண்டு முகாமிற்கு வீரர்கள் திரும்பும் வழியில் பனிச்சரிவு.
    • பனிச்சரிவில் சிக்கியுள்ள 28 பேர்களை மீட்கும் நடவடிக்கை தீவிரம்.

    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில் மலையேறுதல் பயிற்சிக்கான அரசு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தை சேர்ந்த 34 பயிற்சி மலையேறு வீரர்கள், 7 பயிற்சியாளர்கள் என மொத்தம் 41 பேர் இமயமலையின் திரவுபதி கா தண்டா-2 சிகரத்தில் இருந்து பயிற்சியை முடித்துக் கொண்டு முகாமிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

    அப்போது, திடீரென அந்த பகுதியில் பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் அவர்கள் அனைவரும் சிக்கிக் கொண்டனர். தகவலறிந்த இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்பு படையினர், தேசிய, மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் பனிச்சரிவில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர்கள் உதவியுடன் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 


    இந்த பனிச்சரிவில் சிக்கிய சிலர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 28 பேர் இன்னும் பனிச்சரிவில் சிக்கியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


    இந்த துயர நிகழ்விற்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வருத்தம் தெரிவித்துள்ளார். உத்தர்காசியில் ஏற்பட்ட பனிச்சரிவு சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது, இது தொடர்பாக அதிகாரிகளிடம் பேசினேன். உள்ளூர் நிர்வாகம், தேசிய பேரீடர் மீட்புக்குழு, இந்தோ-தீபெத் எல்லைப்பாதுகாப்பு படை மற்றும் ராணுவக் குழுக்கள் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் உடனடியாக ஈடுபட்டு வருகின்றன, இவ்வாறு அமித்ஷா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    இதேபோல் உத்தரகாண்ட் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தில் பனிச்சரிவு ஏற்பட்டு பல உயிர்களை பலி வாங்கியுள்ளது என்ற செய்தி வருத்தமளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு இதயப்பூர்வமான இரங்கல், காணாமல் போனவர்கள் பாதுகாப்பாக திரும்பவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்தனை செய்கிறேன். இவ்வாறு ராகுல் தெரிவித்துள்ளார்.

    • கேதார்நாத் கோவில் பகுதியின் பின்புறம் கடுமையான பனிச்சரிவு ஏற்பட்டது.
    • உத்தரகாண்ட் மாநிலத்தில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக கோவிலுக்கு செல்லும் பாதையில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.

    கேதார்நாத்:

    உத்தரகாண்ட் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோவில் அமைந்துள்ளது. பஞ்சகேசார தலங்களில் ஒன்றாக திகழும் இக்கோவில் வடக்கு இமயமலை மலைத்தொடரில் அமைந்துள்ளது.

    இன்று காலை இந்த கோவில் பகுதியின் பின்புறம் கடுமையான பனிச்சரிவு ஏற்பட்டது. இதனால் உயிர்சேதமோ கோவிலுக்கு எந்தவித பாதிப்போ ஏற்படவில்லை என கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    உத்தரகாண்ட் மாநிலத்தில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக கோவிலுக்கு செல்லும் பாதையில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    • முதல்வரின் உத்தரவின் பேரில் புல்கிட் ஆர்யாவின் ரிசார்ட் இடிக்கப்பட்டது.
    • பாஜக தலைவர் வினோத் ஆர்யா கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்

    ஹரித்வார்:

    உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான வினோத் ஆர்யாவின் மகன் புல்கிட் ஆரியாவின் ஓய்வு விடுதி உள்ளது. இங்கு வரவேற்பாளராக பணியாற்றிய 19 வயது இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    இளம்பெண்ணின் உடல் கால்வாய் ஒன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்ட நிலையில், இது தொடர்பான செய்தி சமூக வலைதளங்களில் நேற்று வைரலானது. இதைத் தொடர்ந்து போலீசார் விசாரணையை விரைவு படுத்தினர்.

    விசாரணையில் அந்த பெண்ணின் கொலையில், அந்த பெண் வேலைபார்த்த விடுதியின் முதலாளியான புல்கிட் ஆர்யாவுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து புல்கித் ஆர்யா, விடுதி ஊழியர்கள் இரண்டு பேர் என மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். முதல்வரின் உத்தரவின் பேரில் நேற்று நள்ளிரவில் புல்கிட் ஆர்யாவின் ஓய்வு விடுதியும் இடிக்கப்பட்டது.

    இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பாஜக மீதான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதையடுத்து பாஜக தலைவர் வினோத் ஆர்யா மற்றும் அவரது மற்றொரு மகன் அன்கிட் ஆர்யா ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

    இந்த கொலை வழக்கு தொடர்பாக விசாரிக்க, சிறப்பு விசாரணைக்குழுவை அமைத்து முதல்வர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டுள்ளார். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

    • கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
    • காயமடைந்த 3 பேரை ரிசிகேஷியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள நியூ டெஹ்ரி பகுதியில் பத்ரிநாத் நோக்கி சென்றுக்கொண்டிருந்தபோது கார் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் பலியாகியுள்ளனர். மேலும், 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    மும்பையை சேர்ந்த ஆறு பேர், காரில் பத்ரிநாத் கோயிலுக்கு சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

    இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த மூத்த துணை ஆய்வாளர் ரமேஷ் குமார் சாயினி மற்றும் துணை ஆய்வாளர் ஆஷிஷ் சர்மா ஆகியோருடன் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. காயமடைந்த 3 பேரை ரிசிகேஷியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    • வினாத்தாள் கசிவு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பா.ஜ.க. பிரமுகர் ஹகம் சிங்கை அக்கட்சி நீக்கியது.
    • தேர்வு முறைகேடு விவகாரம் தொடர்பாக பப்ளிக் சர்வீஸ் கமிஷனின் செயலாளர் சந்தோஷ் படோனி, தனது பொறுப்பில் அலட்சியம் காட்டியதற்காக அவரை சஸ்பெண்டு செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநில அரசின் சார்பில் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் சார்பில் கடந்தாண்டு 854 பணியிடங்களுக்கான தேர்வு நடத்தப்பட்டது.

    இந்தத் தேர்வில் முறைகேடு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சிலர் மீது டேராடூன் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி தலைமையில் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வில் நடந்த முறைகேடு குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.

    இதை தொடர்ந்து தேர்வை ரத்து செய்வதாக முதல்-மந்திரி அறிவித்தார். மேலும், இந்த தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் மற்றும் பணமோசடி தடுப்புச் சட்டம் (பிஎம்எல்ஏ) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டார்.

    அதன் தொடர்ச்சியாக வினாத்தாள் கசிவு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பா.ஜ.க. பிரமுகர் ஹகம் சிங்கை அக்கட்சி நீக்கியது. இதற்கிடையே தேர்வு முறைகேடு விவகாரம் தொடர்பாக பப்ளிக் சர்வீஸ் கமிஷனின் செயலாளர் சந்தோஷ் படோனி, தனது பொறுப்பில் அலட்சியம் காட்டியதற்காக அவரை சஸ்பெண்டு செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    இந்த வினாத்தாள் மோசடியில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. கசிந்த வினாத்தாள்கள் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு விற்கப்பட்டு உள்ளது. ஒரு வினாத்தாளை ரூ.10 முதல் 15 லட்சம் வரை விற்றுள்ளனர். அந்த வகையில் ரூ.200 கோடி வரை சுருட்டப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் இதுவரை 32 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    லக்னோவை தலைமையாக கொண்ட டெக்-சொல்யூஷன்ஸ் தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் பணியாளர் மூலம் காகிதத்தின் நகல் கசிந்ததாகக் கூறப்படுகிறது.

    இந்த மோசடிக்கு ஹகம் சிங், அவரது நெருங்கிய உதவியாளரும் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த கேந்திரபால், சந்தன் மன்ரல், மனோஜ் ஜோஷி மற்றும் ஜகதீஷ் கோஸ்வாமி ஆகியோர் மூளையாக செயல்பட்டுள்ளனர். இவர்கள் மோசடி செய்த பணத்தில் ரூ.50 கோடி வரை சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளனர்.

    ஹகம்சிங் உத்தரகாசி மாவட்டத்தை சேர்ந்தவர். இந்த வழக்கில் அவர் 18-வது நபராக கைது செய்யப்பட்டு உள்ளார். 2002-ம் ஆண்டு மாஸ்திரேட்டு ஒருவரிடம் சமையல்காரராக வேலைக்கு சேர்ந்த இவர் தனது மோசடிகள் மூலம் பல கோடிக்கு அதிபதி ஆகியுள்ளார். அவர் ஹரித்வாரில் தங்கியிருந்தபோது சில அரசியல்வாதிகளை சந்தித்து படிப்படியாக அரசியலில் நுழைந்தார்.

    உத்தர்காஷி ஜிலா பஞ்சாயத்தில் உறுப்பினராவதற்கு முன்பு, ஹகம் 2008-2013 வரை உத்தரகாசியில் உள்ள லிவாரி கிராமத்தின் தலைவராக இருந்தார். புனித நகரத்தில் வசிக்கும் போது, ​​2011-ம் ஆண்டு, உ.பி.யைச் சேர்ந்த கேந்த்ராபாலையும் சந்தித்தார். அவரது உதவியுடன், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள்களை அதிக தொகைக்கு தேர்வர்களிடம் விற்கத் தொடங்கினார். சாதாரண சமையல்காரராக இருந்து இன்று பல கோடி மதிப்புள்ள சொத்துக்களுக்கு அதிபதி ஆகியுள்ளார்.

    கைதான மோசடி மன்னன் கேந்திரபால் உ.பி., தாம்பூரில் வசிப்பவர். வினாத்தாள் மோசடியில் கைது செய்யப்பட்ட 24-வது நபர்.

    கேந்திரபால் 1996-ம் ஆண்டு ஆட்டோ டிரைவராக வாழ்க்கையை தொடங்கினார். பின்னர் அவர் தாம்பூரில் உள்ள ஒரு ஜவுளிக் கடையில் பணிபுரிந்தார். பின்னர் 2011-ல் சொந்தமாக ஜவுளி தொழிலைத் தொடங்கினார். ஹகம்சிங்கை ஒரு ஓட்டலில் சந்தித்த இவர் அவருடன் சேர்ந்து வினாத்தாள் மோசடியில் ஈடுபட்டு 3.3 ஏக்கர் நிலம் மற்றும் தாம்பூரில் உள்ள ஒரு ஆடம்பரமான மாளிகையை உள்ளிட்ட கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளார்.

    கைது செய்யப்பட்ட மற்றொரு குற்றவாளியான சந்தன் மன்ரால் நைனிடால் மாவட்டத்தில் உள்ள ராம்நகரில் வசிப்பவர். மன்ரல் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு பெட்டல்காட்-ராம்நகர் வழித்தடத்தில் பஸ் கண்டக்டராக வேலை செய்து வந்தார்.

    பின்னர் அவர் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பணம் சேகரித்து தனக்கு சொந்தமாக பஸ் வாங்கினார். மேலும் குமாவுன் பகுதியில் ஒரு போக்குவரத்து நிறுவனத்தைத் தொடங்கினார், பின்னர் 19 பஸ்களைச் வைத்து தொழில் செய்து வந்தார்.

    கேந்திராபாலைச் சந்தித்து மோசடி கும்பலுடன் சேர்ந்த பிறகு, அவரது சொத்து பல மடங்கு அதிகரித்தது, மேலும் அவர் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் கல் உடைக்கும் ஆலையைத் தொடங்கினார். இவர் தனது போக்குவரத்து நிறுவனம் மூலம் சுமார் 30 மல்டி யூட்டிலிட்டி வாகனங்களை பல்வேறு அரசுத் துறைகளுக்கு வாடகைக்கு விட்டு இருந்தார்.

    2019-ம் ஆண்டில் கேந்திராபால் ஜெகதீஷ் கோஸ்வாமி என்பவரை உத்தரகாண்டில் உள்ள ஒரு கோவிலில் சந்தித்தார். அல்மோராவில் வசிக்கும் கோஸ்வாமி, இந்த வழக்கில் கடந்த 21-ந் தேதி கைது செய்யப்பட்ட 22-வது நபர் ஆவார். அவர் கைது செய்யப்படும் போது பாகேஷ்வர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்.

    அவர் உத்தரகாண்டின் மிகவும் பிரபலமான நாட்டுப்புற பாடகர்களில் ஒருவரான கோபால் பாபு கோஸ்வாமியின் மகன் ஆவார், இவர் கரீனா கபூர் நடித்த 'ஜப் வி மெட்' போன்ற பாலிவுட் திரைப்படங்களில் பணியாற்றினார்.

    கசிந்த வினாத்தாள்களைத் பணத்தை பொற்றுக்கொண்டு கை மாற்றுவதற்காக, தனது பகுதியில் இருந்து தேர்வு எழுதுபவர்களைக் தாம்பூரிலுள்ள வாடகை விடுதிக்கு அழைத்துச் சென்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்றொருவர் அல்மோரா மாவட்டத்தைச் சேர்ந்த மனோஜ் ஜோஷி ஆவார். இந்த வழக்கில் முதலில் கைது செய்யப்பட்ட 6 பேரில் இவரும் ஒருவர். பிராந்தியா ரக் ஷக் தளம் அமைப்பின் முன்னாள் ஊழியர் ஆவார்.

    பணியில் முறைகேடு காரணமாக 2018-ல் அவர் பணியில் இருந்து நிறுத்தப்பட்டார். கசிந்த வினாத்தாள்கள் மூலம் ஜோஷி, அவரது குடும்ப உறுப்பினர்கள் 5 பேருக்கு அரசு வேலை கிடைக்க உதவியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கைதான கும்பல் ரூ.200 கோடிக்கு மேல் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளனர். கைதானவர்களின் சொத்துக்கள் குறித்த விவரங்கள் அமலாக்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

    அவற்றை முடக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். கைதானவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, மோசடி மூலமாக சம்பாதித்த பணத்தில் சேர்க்கப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்வோம் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    2013-ம் ஆண்டு மத்தியப் பிரதேசத்தில் நடந்த 'வியாபம்' ஊழலை மிஞ்சும் அளவுக்கு இந்த மோசடி நடந்துள்ளது. இது நாட்டில் நடந்த மிகப்பெரிய நுழைவுத் தேர்வு மோசடியில் ஒன்றாகும்.

    • மேக வெடிப்பு காரணமாக கொட்டிய மழையால் பல ஆறுகள் நிரம்பி வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • பேரிடர் மீட்புகுழுவினர் உடனடியாக அங்கு விரைந்து சென்று கிராமத்தில் சிக்கி இருந்த மக்கள் அனைவரையும் மீட்டனர்.

    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் மாவட்டத்தில் உள்ள ராய்ப்பூர் பகுதியின் சர்கெட் கிராமத்தில் இன்று அதிகாலை 2.45 மணியளவில் மேக வெடிப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு பலத்த மழை கொட்டியது. பல ஆறுகள் நிரம்பி வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதை தொடர்ந்து பேரிடர் மீட்புகுழுவினர் உடனடியாக அங்கு விரைந்து சென்று கிராமத்தில் சிக்கி இருந்த மக்கள் அனைவரையும் மீட்டனர். சிலர் அருகில் உள்ள ரெசார்ட்டில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

    • கொரோனா தொற்று பரிசோதனைக்காக சிறையில் 425 கைதிகளின் மாதிரிகள் எடுக்கப்பட்டன.
    • ஜூலை 28 மற்றும் 29ம் தேதிகளில் சிறை வளாகத்தினுள் ஹெபடைடிஸ் மற்றும் பிற நோய்த் தொற்றுகளை பரிசோதிக்கும் முகாம் நடத்தப்பட்டது.

    உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்வாரில் உள்ள மாவட்ட சிறையில் உள்ள ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு சில கைதிகளுக்கு தொடர்ந்து காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில், 43 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

    இதுகுறித்து மாவட்ட சிறை அதிகாரி கூறுகையில், " கொரோனா தொற்று பரிசோதனைக்காக சிறையில் 425 கைதிகளின் மாதிரிகள் எடுக்கப்பட்டன. இதில், 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தனி அறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்" என்றார்.

    இதற்கிடையே, கடந்த ஜூலை 28 மற்றும் 29ம் தேதிகளில் சிறை வளாகத்தினுள் ஹெபடைடிஸ் மற்றும் பிற நோய்த் தொற்றுகளை பரிசோதிக்கும் முகாம் நடத்தப்பட்டதாகவும் அதிகாரி கூறினார்.

    ×