search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    உத்தரகாண்ட் மாநிலத்தில் பனிச்சரிவு- மலையேறும் வீரர்கள் 10 பேர் பலி:  அமித்ஷா, ராகுல்காந்தி இரங்கல்
    X

    உத்தரகாண்ட் பனிச்சரிவு

    உத்தரகாண்ட் மாநிலத்தில் பனிச்சரிவு- மலையேறும் வீரர்கள் 10 பேர் பலி: அமித்ஷா, ராகுல்காந்தி இரங்கல்

    • பயிற்சியை முடித்துக் கொண்டு முகாமிற்கு வீரர்கள் திரும்பும் வழியில் பனிச்சரிவு.
    • பனிச்சரிவில் சிக்கியுள்ள 28 பேர்களை மீட்கும் நடவடிக்கை தீவிரம்.

    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில் மலையேறுதல் பயிற்சிக்கான அரசு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தை சேர்ந்த 34 பயிற்சி மலையேறு வீரர்கள், 7 பயிற்சியாளர்கள் என மொத்தம் 41 பேர் இமயமலையின் திரவுபதி கா தண்டா-2 சிகரத்தில் இருந்து பயிற்சியை முடித்துக் கொண்டு முகாமிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

    அப்போது, திடீரென அந்த பகுதியில் பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் அவர்கள் அனைவரும் சிக்கிக் கொண்டனர். தகவலறிந்த இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்பு படையினர், தேசிய, மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் பனிச்சரிவில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர்கள் உதவியுடன் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


    இந்த பனிச்சரிவில் சிக்கிய சிலர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 28 பேர் இன்னும் பனிச்சரிவில் சிக்கியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


    இந்த துயர நிகழ்விற்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வருத்தம் தெரிவித்துள்ளார். உத்தர்காசியில் ஏற்பட்ட பனிச்சரிவு சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது, இது தொடர்பாக அதிகாரிகளிடம் பேசினேன். உள்ளூர் நிர்வாகம், தேசிய பேரீடர் மீட்புக்குழு, இந்தோ-தீபெத் எல்லைப்பாதுகாப்பு படை மற்றும் ராணுவக் குழுக்கள் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் உடனடியாக ஈடுபட்டு வருகின்றன, இவ்வாறு அமித்ஷா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    இதேபோல் உத்தரகாண்ட் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தில் பனிச்சரிவு ஏற்பட்டு பல உயிர்களை பலி வாங்கியுள்ளது என்ற செய்தி வருத்தமளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு இதயப்பூர்வமான இரங்கல், காணாமல் போனவர்கள் பாதுகாப்பாக திரும்பவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்தனை செய்கிறேன். இவ்வாறு ராகுல் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×