என் மலர்tooltip icon

    உத்தரப் பிரதேசம்

    • விஜய் ஷர்மா வீட்டில் வளர்த்து வந்த அவரது செல்ல கிளி நீலம் ஷர்மாவின் கொலைக்கு பிறகு சாப்பிடாமல் அமைதியாக இருந்தது.
    • விஜய் ஷர்மா கொலையை கிளி நேரில் பார்த்திருக்கலாம் என சந்தேகப்பட்டார்.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்த விஜய் ஷர்மா என்பவரது மனைவி நீலம் ஷர்மா கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி 20-ந்தேதி வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    விஜய் ஷர்மா தனது மகன், மகளுடன் வெளியே சென்றிருந்த போது வீட்டில் தனியாக இருந்த நீலம் ஷர்மாவை மர்மநபர்கள் கூர்மையான ஆயுதத்தால் கொலை செய்தது தெரியவந்தது.

    மேலும் வீட்டில் இருந்த பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. ஆனாலும் கொலையாளிகள் பற்றி எந்த தடயமும் கிடைக்கவில்லை.

    இந்நிலையில் விஜய் ஷர்மா வீட்டில் வளர்த்து வந்த அவரது செல்ல கிளி நீலம் ஷர்மாவின் கொலைக்கு பிறகு சாப்பிடாமல் அமைதியாக இருந்தது. இதைப்பார்த்த விஜய் ஷர்மா கொலையை கிளி நேரில் பார்த்திருக்கலாம் என சந்தேகப்பட்டார்.

    இதனால் அவர் சந்தேகப்படும் சில நபர்களின் பெயர்களை ஒவ்வொன்றாக கிளியிடம் கூறினார். அப்போது அவர் தனது மருகமன் ஆசு பெயரை கூறிய போது கிளி ஆவேசமடைந்து ஆசு.. ஆசு... என கத்தியது.

    இதுகுறித்து விஜய் ஷர்மா போலீசாரிடம் கூறினார். உடனே போலீசாரும் கிளி முன்பு பலரின் பெயர்களை கூறிய நிலையில் ஆசுவின் பெயரை கூறிய போது மட்டும் கிளி கத்தியது.

    இதையடுத்து போலீசார் ஆசுவை பிடித்து விசாரித்தனர். அப்போது ஆசு தனது நண்பர் ரோனியுடன் சேர்ந்து நீலம் ஷர்மாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

    இந்த வழக்கு கோர்ட்டில் நடந்து வந்த நிலையில் சிறப்பு நீதிபதி முகமது ரஷீப் தீர்ப்பு கூறினார். அப்போது குற்றம் சாட்டப்பட்ட ஆசு, ரோனி மாசி ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் 2 பேருக்கும் தலா ரூ.72 ஆயிரம் அபராதம் விதித்தும் அவர் தீர்ப்பு கூறினார்.

    • கடந்த 9 ஆண்டுகளில் காசநோய்க்கு எதிரான போராட்டத்தில் இந்தியா மக்கள் பங்கேற்பின் மூலம் சிறப்பான பணியை செய்து உள்ளது.
    • காசநோயை ஒழிப்பதற்காக உலகளாவிய இலக்கு 2030-ம் ஆண்டு ஆகும்.

    வாரணாசி:

    பிரதமர் மோடி இன்று உத்தரபிரதேச மாநிலம் வாரணாசிக்கு சென்றார். அங்கு உலக காசநோய் தினத்தையொட்டி நடந்த ஒரே உலகம் காசநோய் மாநாட்டில் பங்கேற்றார். இதில் காசநோய் இல்லா பஞ்சாயத்து முன்னெடுப்பு பராமரிப்பு மாதிரி போன்ற முயற்சிகளை தொடங்கி வைத்தார்.

    காசநோய்க்கான தேசிய தடுப்பு சிகிச்சை, இந்தியாவில் காசநோய் 2023 ஆண்டறிக்கை ஆகியவற்றை வெளியிட்டார். காசநோய் தடுப்பு பணிகளில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு விருதுகள் வழங்கினார். மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:-

    இந்த உச்சி மாநாடு காசியில் நடப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சில காலத்திற்கு முன்பு இந்தியா ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம் என்ற பார்வையை முன்னெடுத்து செல்ல முயற்சி எடுத்தது. தற்போது ஒரே உலக காச நோய் உச்சி மாநாடு மூலம் இந்தியா உலகளாவிய நன்மைக்கான மற்றொரு தீர்மானத்தை நிறைவேற்றுகிறது.

    கடந்த 9 ஆண்டுகளில் காசநோய்க்கு எதிரான போராட்டத்தில் இந்தியா மக்கள் பங்கேற்பின் மூலம் சிறப்பான பணியை செய்து உள்ளது.

    காசநோயை ஒழிப்பதற்காக உலகளாவிய இலக்கு 2030-ம் ஆண்டு ஆகும். ஆனால் இந்தியா 2025-ம் ஆண்டுக்குள் காசநோயை முடிவுக்கு கொண்டு வரும் இலக்கில் செயல்பட்டு வருகிறது. 80 சதவீத காச நோய் மருந்துகள் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன.

    இது உலக நன்மைக்காக செயல்படும் நமது மருந்தின் திறமையை வெளிப்படுத்துகிறது.

    இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

    • வாரணாசியில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் 59 புதிய குடிநீர் திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளார்.
    • நமாமி கங்கா திட்டத்தின் கீழ் பகவான்பூரில் ரூ.300 கோடியில் கட்டப்படும் 55 கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

    வாரணாசி:

    பிரதமர் மோடி அவரது சொந்த தொகுதியான வாரணாசியில் இன்று சுற்றுப்பயணம் செய்கிறார்.

    வாரணாசியில் இன்று மத்திய சுகாதாரதுறை சார்பில் உலக காசா நோய் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகிறார்.

    அப்போது காசா நோயை கட்டுப்படுத்த சிறப்பான நடவடிக்கை எடுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு விருது வழங்குகிறார். தேசிய காசா நோய் ஒழிப்பு நடவடிக்கை குறித்தும், இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது. இதில் 30 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள்.

    மேலும் வாரணாசியில் சுற்றுலா பயணிகள் வசதிக்காக வாரணாசி காண்ட் நிலையத்தில் இருந்து கோடோவ்லியா வரையிலான 3.75 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரோப் காரில் சுற்றுலா பயணிகள் சென்று வரலாம்.

    இதற்காக வாரணாசி கோடோவ்லியா இடையே 5 நிலையங்கள் அமைக்கப்படுகிறது. ரூ.645 கோடி செலவில் இந்த திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இதற்கும் பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

    மேலும் வாரணாசியில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் 59 புதிய குடிநீர் திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளார். இதுதவிர கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் சிகாரா ஸ்டேடியத்தில் 2-வது மற்றும் 3-வது ஸ்டேடியம் கட்டுமான பணிகளையும் தொடங்கி வைக்கிறார்.

    நமாமி கங்கா திட்டத்தின் கீழ் பகவான்பூரில் ரூ.300 கோடியில் கட்டப்படும் 55 கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கும் பிரதமர்மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

    வாரணாசியில் ரூ.1780 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சி அங்குள்ள சமஸ்கிருத பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெறுகிறது.

    • காசநோயை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக முயற்சிகளை மேற்கொண்ட மாநிலங்களுக்கு விருது.
    • இன்று நண்பகல் 12 மணியளவில் சம்பூர்ணானந்த சமஸ்கிருத பல்கலைக்கழக மைதானத்தில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு.

    பிரதமர் நரேந்திர மோடி 1,780 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், புதிய திட்டங்களை தொடங்கி வைக்கவும் இன்று வாரணாசி வருகிறார்.

    முதலாவதாக, பிரதமர் மோடி இன்று காலை 10.30 மணியளவில், ருத்ராகாஷ் மாநாட்டு மையத்தில் உலக காசநோய் உச்சி மாநாட்டில் உரையாற்றுகிறார். இந்த உச்சிமாநாட்டை சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் மற்றும் ஸ்டாப் டிபி பார்ட்னர்ஷிப் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.

    இந்நிகழ்ச்சியில், காசநோயை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக முயற்சிகளை மேற்கொண்ட மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு பிரதமர் மோடி விருதுகளை வழங்குகிறார்.

    பின்னர் நண்பகல் 12 மணியளவில் சம்பூர்ணானந்த சமஸ்கிருத பல்கலைக்கழக மைதானத்தில் ரூ.1780 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    • இனிவரும் நாட்களில் எதிர்க்கட்சி கூட்டணி வடிவம் எடுக்கும்.
    • நாடு முழுவதும் பா.ஜனதா தோற்பதை சமாஜ்வாடி உறுதி செய்யும்.

    லக்னோ :

    சமாஜ்வாடி கட்சி தலைவரும், உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரியுமான அகிலேஷ் யாதவ் ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-

    2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணியை அமைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, தெலுங்கானா மாநில முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் ஆகியோர் இதற்காக தத்தமது முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இனிவரும் நாட்களில் எதிர்க்கட்சி கூட்டணி வடிவம் எடுக்கும். அக்கூட்டணி, பா.ஜனதாவுக்கு எதிராக மோதும். அதில் என்ன பங்கு வகிப்பது என்பதை காங்கிரஸ்தான் முடிவு செய்ய வேண்டும்.

    பல மாநிலங்களில் மாநில கட்சிகள்தான், பா.ஜனதாவுக்கு எதிராக தீவிரமாக போராடி வருகின்றன. அங்கெல்லாம் களத்திலேயே காங்கிரஸ் இல்லை. மாநில கட்சிகள்தான், பா.ஜனதாவுடன் மோதுகின்றன.

    பா.ஜனதாவை தோற்கடிப்பதில் மாநில கட்சிகள் முக்கிய பங்கு வகிக்கும். எதிர்க்கட்சி கூட்டணியில் காங்கிரசையும் சேர்க்க வேண்டும் என்று தி.மு.க., ஐக்கிய ஜனதாதளம், ராஷ்டிரீய ஜனதாதளம் போன்ற கட்சிகள் கோருவது உண்மைதான். அக்கட்சிகள் ஏற்கனவே காங்கிரசுடன் கூட்டணியில் உள்ளன.

    இது ஒரு பெரிய போர். இதில் என்ன பங்கு வகிப்பது என்பதை காங்கிரஸ்தான் முடிவு செய்ய வேண்டும்.

    எதிர்க்கட்சி கூட்டணியின் முகமாக யார் செயல்படுவது என்பதை தேர்தலுக்கு பிறகு முடிவு செய்து கொள்ளலாம். அது இப்போது பொருத்தமான கேள்வி அல்ல.

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றிபெற வேண்டுமானால், உத்தரபிரதேசத்தில் வெற்றிபெற வேண்டும். ஆனால், உத்தரபிரதேசத்தில் மட்டுமின்றி, நாடு முழுவதும் பா.ஜனதா தோற்பதை சமாஜ்வாடி உறுதி செய்யும். அதற்கான எந்த வாய்ப்பையும் விட்டுவிட மாட்டோம். தற்போதைய கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து போட்டியிடுவோம். அமேதியில் எங்கள் கட்சி தொண்டர்கள் கொல்லப்படுகிறார்கள். அவர்களுக்கு காங்கிரசார் ஆதரவாக நிற்பது இல்லை. எங்கள் தொண்டர்களே ஒருவருக்கொருவர் உதவியாக இருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 3 எந்திரங்கள் உத்தரபிரதேசத்தில் திறக்கப்பட்டு உள்ளன.
    • 30 வினாடிகளில் இந்த நடைமுறை அனைத்தும் முடிவடையும்.

    லக்னோ :

    ரேஷன் கடைகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து உணவு பொருட்கள் வாங்கி வருகின்றனர். இந்த சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில் நாட்டின் சில மாநிலங்களில் தானியங்கி எந்திரங்கள் நிறுவப்பட்டு உள்ளன.அதாவது, பணம் எடுக்கும் ஏ.டி.எம். போல, ரேஷன் வழங்குவதற்காக தானிய ஏ.டி.எம். எந்திரங்கள் நிறுவப்பட்டு உள்ளன.

    நாடு முழுவதும் 7 எந்திரங்கள் இதுவரை செயல்பாட்டில் இருக்கும் நிலையில், இதில் 3 எந்திரங்கள் உத்தரபிரதேசத்தில் திறக்கப்பட்டு உள்ளன. மாநில தலைநகர் லக்னோவின் ஜானகிபுரம் பகுதியில் கடந்த 15-ந்தேதி தானிய ஏ.டி.எம் நிறுவப்பட்டது. இந்த எந்திரம் மூலம் நேற்று வரை சுமார் 150 ரேஷன் கார்டுதாரர்களுக்கு உணவு தானியம் வழங்கப்பட்டு உள்ளது.

    ஏ.டி.எம். மையத்தில் இருக்கும் விரல் பதிவு எந்திரத்தில் ரேஷன்கார்டு தாரரின் விரல் அடையாளம் வைக்கப்பட்டவுடன், அந்த எந்திரத்தில் இருந்து அரிசி மற்றும் கோதுமை வெளிவருகிறது. 30 வினாடிகளில் இந்த நடைமுறை அனைத்தும் முடிவடைவதால், ரேஷன் பொருட்கள் வாங்க காத்திருப்பு என்ற நிலை மாறியிருப்பதாக பொதுமக்கள் கூறியுள்ளனர். இது அவர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    • கடந்த செப்டம்பர் 9-ந் தேதி 100-வது முறையாக வாரணாசி சென்றிருந்தார்.
    • இது அவரது 113-வது வாரணாசி பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.

    வாரணாசி :

    உத்தரபிரதேசத்தின் முதல்-மந்திரியாக கடந்த 2017-ம் ஆண்டு பதவியேற்றார் யோகி ஆதித்யநாத். அதுமுதல் சராசரியாக 21 நாட்களுக்கு ஒருமுறை புகழ்பெற்ற காசி விசுவநாதர் கோவிலில் அவர் சாமி தரிசனம் செய்து வருகிறார். அந்தவகையில் கடந்த 6 ஆண்டுகளில் 100-வது முறையாக நேற்று அவர் சாமி தரிசனம் செய்தார். அங்கு அவர் விசுவநாதருக்கு சிறப்பு வழிபாடும் செய்தார். இதன் மூலம் காசி விசுவநாதர் கோவிலில் 100 முறை சாமி தரிசனம் செய்த முதலாவது முதல்-மந்திரி என்ற பெருமையை யோகி ஆதித்யநாத் பெற்றுள்ளார்.

    யோகி ஆதித்யநாத் மாதத்துக்கு குறைந்தபட்சம் ஒருமுறையாவது காசிக்கு சென்று வருவதுடன், நகரில் நடந்து வரும் வளர்ச்சிப்பணிகளையும் ஆய்வு செய்து வருகிறார். கடந்த செப்டம்பர் 9-ந் தேதி அவர் 100-வது முறையாக வாரணாசி சென்றிருந்தார். அப்போது 88-வது முறையாக விசுவநாதர் கோவிலில் தரிசனம் செய்திருந்தார். தற்போதும் அவர் 2 நாள் பயணமாக வாரணாசி சென்றுள்ளார். இது அவரது 113-வது வாரணாசி பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை அதிகாரிகள் மோப்ப நாய்களை பயன்படுத்தி தேடி வருவதாக தெரிவித்தனர்.
    • விபத்து தொடர்பாக 4 பேரிடம் விசாரணை நடத்தி வருவதாகவும், தலைமறைவான முக்கிய குற்றவாளியை தேடி வருவதாகவும் தகவல்.

    உத்தரப் பிரதேசம் மாநிலம், சம்பலின் சந்தௌசி பகுதியில் உள்ள உருளைக்கிழங்கு குளிர்சாதன கிடங்கின் மேற்கூரை இடிந்து விழுந்து பயங்கர விபத்து ஏற்பட்டது.

    விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார், தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை குழுவினர் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.

    இந்த சம்பவத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. அவர்களை அதிகாரிகள் மோப்ப நாய்களை பயன்படுத்தி தேடி வருவதாக தெரிவித்தனர்.

    மேலும் கிடங்கின் உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை கண்காணிப்பாளர் சம்பல் சக்ரேஷ் மிஸ்ரா கூறியுள்ளார்.

    விபத்து தொடர்பாக 4 பேரிடம் விசாரணை நடத்தி வருவதாகவும், தலைமறைவான முக்கிய குற்றவாளியை தேடி வருவதாகவும் தெரிவித்தனர். இடிபாடுகள் அகற்றப்பட்ட பின்னரே கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான உண்மையான காரணத்தை கூற முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.

    • கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கு வாரணாசியில் உள்ள கன்ஜாரி என்ற பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
    • கிரிக்கெட் மைதானம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உத்தரபிரதேச மாநிலத்தில் பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் புதிதாக சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இந்த மைதானம் ரூ.300 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கு வாரணாசியில் உள்ள கன்ஜாரி என்ற பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    அந்த இடத்திற்கு பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷா, துணை தலைவர் ராஜீவ் சுக்லா ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

    உத்தர பிரதேசத்தில் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானம், லக்னோவில் உள்ள ஏகானா மைதானம் ஆகியவற்றைத் தொடர்ந்து 3வதாக வாரணாசியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட உள்ளது.

    இந்த மைதானம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • அடுத்த ஆண்டு ஜனவரி 3-வது வாரத்தில் ராமர் சிலை நிறுவப்படும்.
    • அன்றைய தினம் முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

    லக்னோ:

    அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணியை ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது.

    இந்நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி 3-வது வாரத்தில் ராமர் சிலை நிறுவப்படும். அன்றைய தினம் முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ்சரி மகாராஜ் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், ராமர் கோவில் கட்டும் பணி 70 சதவீதம் நிறைவடைந்துள்ளது. 2024 ஜனவரி மாதம் 3-வது வாரத்தில் ராமர் சிலை நிறுவப்பட்டு பக்தர்கள் வழிபடுதலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ராமர் கோவில் கட்டுவதற்கும் 2024 பாராளுமன்ற தேர்தலுக்கும் தொடர்பு இல்லை. நாங்கள் எங்கள் வேலையை செய்துள்ளோம் என தெரிவித்தார்.

    • பொது இடங்களில் தகாத முறையில் ஆடை அணிய வேண்டாம் என்று பலமுறை எச்சரித்தும் சப்னா கேட்வில்லை.
    • சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உத்தரப்பிரதேசம் மாநிலம் பர்லா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காஜிபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மோஹித் குமார். இவரது மனைவி சப்னா (28). இவர்களுக்கு 4வயது மகன் உள்ளார்.

    இந்நிலையில், சப்னா ஆடை உடுத்துவது தொடர்பாக அவருக்கும் கணவர் மோஹித்துக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதுபோல் நேற்றும் சப்னா தகாத முறையில் ஆடை உடுத்தியதாக தெரிகிறது. இதனால், இருவருக்குள்ளும் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

    இதில் ஆத்திரமடைந்த மோஹித் குமார், சப்னாவை கத்தியால் கழுத்தில் குத்தி கொலை செய்துள்ளார். பக்கத்து வீட்டு நபருக்கு இதுகுறித்து சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சப்னாவின் சடலம் அருகிலேயே அமர்ந்திருந்த மோஹித் குமாரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

    இதில், பொது இடங்களில் தகாத முறையில் ஆடை அணிய வேண்டாம் என்று பலமுறை எச்சரித்தும் சப்னா கேட்வில்லை என்றும் இதனால் ஏற்பட்ட தகராறின்போது ஆத்திரத்தில் கொலை செய்துவிட்டதாகவும் மோஹித் போலீசிடம் தெரிவித்துள்ளார்.

    சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் அக்காள் - தங்கை இருவரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
    • அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள சகோதரிகளின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    பாதேப்பூர்:

    உத்தரபிரதேச மாநிலம் உசேன்குஞ்ச் மாவட்டம் பாதேப்பூர் கிராமத்தை சேர்ந்த 15 மற்றும் 16 வயது கொண்ட சகோதரிகள் பக்கத்தில் சென்பூர் என்ற இடத்தில் நடந்த திருவிழாவை பார்க்க சென்றனர்.

    திருவிழாவை பார்த்து விட்டு இரவு அவர்கள் வீடு திரும்பிக்கொண்டு இருந்தனர். அப்போது அவர்களை 8 பேர் கும்பல் பின் தொடர்ந்து வந்தது. ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வந்த போது அந்த கும்பல் திடீரென அக்காள்-தங்கையை மிரட்டி கடத்தி சென்றனர். மறைவான இடத்துக்கு 2 பேரையும் தூக்கி சென்ற அந்த கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டது.

    ஒருவர் பின் ஒருவராக அவர்கள் சகோதரிகளை கற்பழித்தனர். காம கொடூர கும்பலிடம் சிக்கி தவித்த 2 பேரும் எங்களை விட்டு விடுங்கள், என கதறினார்கள். ஆனாலும் அந்த கும்பல் அவர்களை விடவில்லை. இதனால் உதவி கேட்டு சகோதரிகள் சத்தம் போட்டனர்.

    இதை கேட்ட பக்கத்து கிராமத்தை சேர்ந்தவர்கள் அங்கு ஓடி வந்தனர். கிராம மக்களை பார்த்ததும் அந்த கும்பல் அங்கிருந்து தப்ப முயன்றது. ஆனாலும் பொதுமக்கள் அவர்களில் 6 பேரை மடக்கி பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு விரைந்து வந்து 6 பேரையும் கைது செய்தனர். கைதான 6 பேரும் 22 வயதில் இருந்து 26 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவார்கள். தலைமறைவான அவர்களது நண்பர்கள் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் அக்காள் - தங்கை இருவரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். உடனடியாக அவர்கள் அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    போலீசார் நடத்திய விசாரணையில் பாலியல் வழக்கில் சிக்கிய கும்பல் சம்பவம் நடப்பதற்கு முன்பு திருவிழா பார்க்க சென்ற சகோதரிகளிடம் அத்து மீறியதும், அவர்களிடம் இருந்து செல்போனை பறித்ததும் தெரியவந்தது. அதன் பிறகு தான் அவர்கள் பின் தொடர்ந்து சென்று இந்த காமவேட்டையை அரங்கேற்றி உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.

    உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 15 வயது சிறுமி கூட்டுப்பலாத்காரம் செய்யப்பட்டார். அடுத்தடுத்து நடந்து வரும் இந்த சம்பவங்கள் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×