என் மலர்tooltip icon

    தெலுங்கானா

    • 5-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது.
    • சுமார் ரூ.5 கோடி மதிப்பிலான 14 கார்கள் எரிந்து சேதம் அடைந்தன.

    பெங்களூரு:

    பெங்களூரு கஸ்தூரி நகரில் தனியாருக்கு சொந்தமான கார் பழுது பார்க்கும் மையம் உள்ளது.

    சந்த் பாஷா மற்றும் தபேராஸ் பாஷா ஆகியோருக்கு சொந்தமான இந்த மையத்தில் இன்று அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. காற்று பலமாக வீசியதால் தீ பற்றி எரிந்தது. மளமள என எரிந்த தீ அந்த மையம் முழுவதும் பரவியது.

    இதனால் அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்த விபத்தில் கார் ஷெட்டில் நின்ற ஏராளமான கார்கள் எரிந்து சேதம் அடைந்தன.

    ஊழியர் ஒருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே இதுபற்றி தகவல் கிடைத்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    5-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் சுமார் ரூ.5 கோடி மதிப்பிலான 14 கார்கள் எரிந்து சேதம் அடைந்தன. தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தீ விபத்தில் காயம் அடைந்த ஊழியர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    ஏற்கனவே கடந்த வாரம் பெங்களூரு மட்டிகெரே அருகே உள்ள தேவனாரப்பள்ளியில் உள்ள கார் கேரேஜில் தீ விபத்து ஏற்பட்டு 3 பழைய கார்கள் எரிந்து நாசமானது என்பது குறிபிடத்தக்கது.

    • போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயன்படுத்துதல் தொடர்பான பல வழக்குகளை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
    • கடந்த 6 மாதங்களாக போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்த நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.

    மங்களூரு:

    போதைப்பொருள் நடமாட்டம் உடுப்பியில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக புகார்கள் எழுந்தன. அதன்பேரில் இதுபற்றி விசாரணை நடத்த போலீஸ் அதிகாரிகளுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அக்ஷய் மச்சீந்திரா உத்தரவிட்டார். இதுதொடர்பாக அவர் தனது அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மணிப்பால் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயன்படுத்துதல் தொடர்பான பல வழக்குகளை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இந்த வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் மாணவர்கள் தான். எனவே, அந்த மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட கல்வி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தோம்.

    அதன்பேரில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 2 மாணவர்களை அந்தந்த கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது. மற்ற கல்லூரி அதிகாரிகளும் இதேபோல் மாவட்ட காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கடந்த 6 மாதங்களாக போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்த நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். நீதிமன்றத்தில் வழக்கு முடியும் வரை 2 மாணவர்களும் இடைநீக்கத்தில் இருப்பார்கள்.

    இதுபோன்ற குற்றச்செயல்களில் யாரேனும் சிக்கிக் கொண்டால், அவர்கள் எந்த நிறுவனத்தாலும் ஆதரிக்கப்பட மாட்டார்கள் என்பதை அனைவரும் அறிந்திருக்க வேண்டும்.

    மற்ற கல்வி நிறுவனங்களும் இதுபோன்ற செயல்களில் மாணவர்கள் சிக்கும்போது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மணிப்பால் மருத்துவக்கல்லூரியில் படித்து வரும் வேறு மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர், தனது சொந்த நெட்வொர்க் மூலம் கஞ்சாவை பார்சல் மூலம் கொண்டு வந்துள்ளார்.

    அந்த மாணவரை பிடித்து விசாரித்து வருகிறோம். மேலும் மணிப்பால் மருத்துவக்கல்லூரி நிர்வாகமும் அந்த மாணவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இனிமேல் போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த ஆன்லைன் வர்த்தகம் மூலம் வரும் பார்சல்களும் கண்காணிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஐதராபாத் தெருக்களில் மத்திய பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து நூதன முறையில் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர்.
    • ஐதராபாத் நகர பகுதியில் உள்ள பஸ் நிறுத்தங்களில் போஸ்டர்கள் அதிக அளவில் ஒட்டப்பட்டுள்ளன.

    திருப்பதி:

    பிரதமர் நரேந்திர மோடி வருகிற 13-ந் தேதி ஐதராபாத் நகருக்கு வருகிறார். செகந்திராபாத் ரெயில் நிலையத்தை நவீன மயமாக்குதல் மற்றும் பிற ரெயில்வே திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.

    பிரதமர் மோடி வருகை தருவதை முன்னிட்டு, ஐதராபாத் தெருக்களில் மத்திய பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து நூதன முறையில் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர்.

    குறிப்பாக ஐதராபாத் நகர பகுதியில் உள்ள பஸ் நிறுத்தங்களில் இந்த போஸ்டர்கள் அதிக அளவில் ஒட்டப்பட்டுள்ளன.

    "இந்தியாவின் வளர்ச்சிக் கதை என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ள போஸ்டர்களில் விஷ பட்ஜெட் பை பை மோடி" என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

    மேலும் 2014-ல் முழுவதுமாக வளர்ந்த தலைமுடியும், 2023-ல் வழுக்கையுடைய நபரின் படங்களும் அதில் உள்ளன.

    போதை பட்ஜெட்டுக்கு நன்றி மோடிஜி-தெலுங்கானா நடுத்தர வர்க்க மக்கள்" என்று எழுதப்பட்டிருந்தது.

    இந்த போஸ்டர்கள் ஐதராபாத் நகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விடுதியில் தங்கியிருக்கும் மாணவிகளுக்கு தினமும் 3 வேளை உணவு வழங்கப்பட்டு வருகிறது.
    • உணவை சாப்பிட்ட மாணவிகளில் பலருக்கு நேற்று திடீரென்று வாந்தி, மயக்கம், தலைசுற்று, வயிற்று வலி ஏற்பட்டது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு சக்திநகர் பகுதியில் சிட்டி நர்சிங் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் தட்சிண கன்னடா மட்டுமின்றி, வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலத்தை சேர்ந்த ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த மாணவிகள் தங்குவதற்காக கல்லூரியில் விடுதி உள்ளது.

    இந்த விடுதியில் தங்கியிருக்கும் மாணவிகளுக்கு தினமும் 3 வேளை உணவு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இரவு வழக்கம் போல உணவு வழங்கப்பட்டது. அந்த உணவை சாப்பிட்ட மாணவிகளில் பலருக்கு நேற்று திடீரென்று வாந்தி, மயக்கம், தலைசுற்று, வயிற்று வலி ஏற்பட்டது.

    இதனால் மாணவிகள் கூச்சலிட்டு கதறினர். இதை பார்த்த கல்லூரி மற்றும் விடுதி நிர்வாக அதிகாரிகள் அவர்களை மீட்டு மங்களூருவில் உள்ள வெவ்வேறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மொத்தம் 137 மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

    இவர்களில் ஏ.ஜே. மருத்துவமனையில் 52 பேரும், கேஎம்சி ஜோதி மருத்துவமனையில் 18 பேரும், யூனிட்டி மருத்துவமனையில் 14 பேரும், சிட்டி மருத்துவமனையில் 8 பேரும், மங்களா மருத்துவமனையில் 3 பேரும், பாதர் முல்லர் மருத்துவமனையில் 42 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மங்களூரு நகர போலீஸ் கமிஷனர் சசிகுமார், மத்திய சப்-டிவிஷன் உதவி போலீஸ் கமிஷனர் ராஜேந்திர குமார் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் மருத்துவமனைக்கு சென்று ஆய்வு நடத்தினர். விடுதிக்கும் போலீசார் சென்று விசாரணை நடத்தினர்.

    உணவு விஷமாக மாறியதே காரணம் என்று கூறப்படுகிறது.மாணவிகளின் உயிருக்கு எந்தவிதமான பாதிப்பு இல்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தால் மங்களூரு நகரில் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மாணவிகளின் பெற்றோர் மற்றும் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிட்டி மருத்துவமனை முன்பு திரண்டனர். மங்களூரு தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வேதவியாஸ் காமத் மருத்துவமனைக்கு சென்று மாணவிகளிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்து ஆறுதல் கூறினார்.

    • நிலநடுக்கத்தை உணர்ந்த பொதுமக்கள் பீதியடைந்து வீட்டில் இருந்து வெளியே ஓடினார்கள்.
    • ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவதால் அங்குள்ள பொதுமக்கள் மிகுந்த பீதி அடைந்து வருகின்றனர்.

    தெலுங்கானா மாநிலம், நிஜாமாபாத் நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.

    ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவானது. நிலநடுக்கம் ஏற்பட்டதால் வீட்டில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பாத்திரங்கள் உருண்டு கீழே விழுந்தது.

    நிலநடுக்கத்தை உணர்ந்த பொதுமக்கள் பீதியடைந்து வீட்டில் இருந்து வெளியே ஓடினார்கள். அனைவரும் சாலையில் தஞ்சம் அடைந்தனர். வீட்டுச் சுவர்களில் லேசான விரிசல் ஏற்பட்டது.

    உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படாததால் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

    சமீபகாலமாக ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. நிலநடுக்கம் ஏன் ஏற்படுகிறது என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். ஜஹீராபாத் மண்டலம் பிலாபூரில் கடந்த ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி நிலநடுக்கம் ஏற்பட்டது.

    பலத்த சத்தத்துடன் வீடுகள் குலுங்கியதால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஓடினர். அதேபோல் கடந்த 2021, அக்டோபர் 2-ந் தேதி அன்று, ராம குண்டம், மஞ்சிரியாலா மற்றும் கரீம்நகர் ஆகிய இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது நிலநடுக்கத்தின் அளவு 4.0 விக்டர் அளவுகோலாக இருந்தது.

    கடந்த ஆண்டு அக்டோபர் 15-ந் தேதி அடிலாபாத் மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 2021 நவம்பர் 1-ந் தேதி தெலுங்கானா, குமுரபிம் மாவட்டம் மற்றும் மான்சிரியாலா மாவட்டத்தில் சிறிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

    ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவதால் அங்குள்ள பொதுமக்கள் மிகுந்த பீதி அடைந்து வருகின்றனர்.

    எப்போது என்ன நடக்குமோ என்ற அச்சம் பொதுமக்களிடையே நிலவி வருகிறது. எனவே புவியியல் துறை ஆராய்ச்சியாளர்கள் நில நடுக்கத்திற்கான காரணத்தை கண்டறிந்து பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • நிசாமாபாத்துக்கு வடமேற்கில் 120 கி.மீ. தொலைவில் பதிவான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவானது.
    • பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்தனர்.

    தெலுங்கானா மாநிலம் நிசாமாபாத் அருகே இன்று காலை 8.12 மணிக்கு லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. நிசாமாபாத்துக்கு வடமேற்கில் 120 கி.மீ. தொலைவில் பதிவான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவானது.

    பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்தனர்.

    இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • கடந்த 2 நாட்களில் மட்டும் 2,257 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • குழந்தை திருமணத்திற்கு எதிரான அசாம் அரசின் நடவடிக்கையை அசாதுதீன் ஒவைசி கண்டித்துள்ளார்.

    ஐதராபாத்:

    அசாமில் குழந்தை திருமணம் அதிகரித்து வருவதை தடுக்க மாநில அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. குழந்தை திருமணத்தில் ஈடுபடுவோர், திருமணத்தை நடத்தி வைப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவித்தார். அதன்படி போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    கடந்த 2 நாட்களில் மட்டும் மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையில் 4,004 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, 2,257 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 51 நபர்கள் மத குருக்கள் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    போலீசாரின் கைது நடவடிக்கையால் ஆத்திரமடைந்த பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கைது செய்யப்பட்ட கணவன் மற்றும் மகன்களை விடுவிக்க வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

    இந்நிலையில், குழந்தை திருமணத்திற்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் அசாதுதீன் ஒவைசி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பேசிய அசாதுதின் ஒவைசி, கணவர்கள் கைது செய்யப்பட்ட பிறகு திருமணம் செய்து கொண்ட சிறுமிகளை யார் கவனிப்பார்கள் என கேள்வி எழுப்பினார்.

    • தெலுங்கானா மாநிலத்தின் அசாதாரண வெற்றிக்கு மக்களின் ஆசியே காரணம்.
    • ரிது பந்து திட்டத்தின் கீழ் 65 லட்சம் விவசாயிகளுக்கு முதலீட்டு உதவித்தொகையாக ரூ.65 ஆயிரம் கோடியை வழங்கிய ஒரே மாநிலம் தெலுங்கானா.

    ஐதராபாத்:

    தெலுங்கானா சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதன் கூட்டுக்கூட்டத்தில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உரையாற்றினார். அப்போது முதல்-மந்திரி சந்திரசேகர்ராவ் தலைமையிலான பாரத ராஷ்டிர சமிதி அரசின் சாதனைகளை பட்டியலிட்டு பேசினார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    தெலுங்கானா மாநிலத்தின் அசாதாரண வெற்றிக்கு மக்களின் ஆசியே காரணம். முதல்-மந்திரின் திறமையான நிர்வாகமும், மக்கள் பிரதிநிதிகளின் கடின உழைப்பும், அரசு ஊழியர்களின் அர்ப்பணிப்பும் மாநிலத்தை வளர்ச்சியின் பாதையில் கொண்டு சென்று வருகின்றன.

    இன்று, மாநிலம் பொருளாதார ரீதியாக வலுவாக உள்ளது மட்டுமின்றி, நலன் மற்றும் வளர்ச்சியில் நாட்டிலேயே சிறந்து விளங்கும் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக உள்ளது.

    மாநிலத்தின் தனிநபர் வருமானம் கடந்த 2014-15-ல் ரூ.1,24,104 ஆக இருந்தது. இது 2022-23-ல் ரூ.3,17,115 ஆக அதிகரித்துள்ளது. 2014-15-ல் மாநிலம் உருவானபோது, தெலுங்கானாவில் 20 லட்சம் ஏக்கருக்கு மட்டுமே பாசன வசதி இருந்தது. இது தற்போது 73,33,000 ஏக்கராக அதிகரித்துள்ளது.

    ரிது பந்து திட்டத்தின் கீழ் 65 லட்சம் விவசாயிகளுக்கு முதலீட்டு உதவித்தொகையாக ரூ.65 ஆயிரம் கோடியை வழங்கிய ஒரே மாநிலம் தெலுங்கானா ஆகும்.

    மாநிலம் உருவானபோது 7,778 மெகாவாட் ஆக இருந்த மாநில மின் உற்பத்தி திறன், 18,453 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது. கடந்த 8½ ஆண்டுகளில் 2,21,774 பணியிட நியமனங்களை அரசு மேற்கொண்டுள்ளது.

    இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

    தெலுங்கானாவில் அரசுக்கும், கவர்னருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரை தொடங்கி வைக்க வருமாறும், பட்ஜெட் ஆவணத்துக்கு ஒப்புதல் அளிக்குமாறும் கடந்த 30-ந்தேதி அரசு சார்பில் கவர்னரை சந்தித்து வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து இந்த கூட்டத்தொடரில் தமிழிசை சவுந்தரராஜன் உரையாற்றியது குறிப்பிடத்தக்கது.

    • சங்கராபரணம் உள்ளிட்ட பல சிறந்த படங்களை இயக்கியவர் கே.விஸ்வநாத்.
    • தாதா சாகேப் பால்கே விருது மற்றும் பத்ம ஸ்ரீ விருது வழங்கி இந்திய அரசு இவரை கவுரவித்துள்ளது.

    ஐதராபாத்:

    இந்தியத் திரையுலகின் மூத்த இயக்குனர்களுள் ஒருவர் கே.விஸ்வநாத் (92). வயது மூப்பால் கடந்த சில காலமாகவே சினிமாவில் இருந்து விலகி ஐதராபாத்தில் தனது குடும்பத்துடன் ஓய்வெடுத்து வந்தார்.

    இந்நிலையில், ஐதராபாத் இல்லத்தில் கே.விஸ்வநாத் நேற்று நள்ளிரவில் காலமானார். அவரது மறைவுக்கு இந்திய திரையுலகினர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    1965-ம் ஆண்டில் இயக்குனராக அறிமுகமான கே.விஸ்வநாத், தான் இயக்கிய முதல் படமான ஆத்ம கவுரவம் படத்துக்கு சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த படத்துக்கான நந்தி விருதை வென்றார்.

    தமிழில் சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து ஆகிய படங்களை இயக்கியுள்ளார். மேலும், குருதிப்புனல், முகவரி, ராஜபாட்டை, யாரடி நீ மோகனி, லிங்கா, உத்தம வில்லன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

    இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது மற்றும் பத்ம ஸ்ரீ'விருது வழங்கி இந்திய அரசு கவுரவித்துள்ளது. 7 முறை நந்தி விருது, 5 முறை தேசிய விருது வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பெங்களூரு ஹட்சன் சர்க்கிள் அருகே மாநகராட்சியின் தலைமை அலுவலகம் உள்ளது.
    • மாநகராட்சியில் ஒவ்வொரு மாதமும் கவுன்சிலர்கள், அதிகாரிகள் கூட்டம் நடைபெறுவது உண்டு.

    பெங்களூரு:

    பெங்களூரு ஹட்சன் சர்க்கிள் அருகே மாநகராட்சியின் தலைமை அலுவலகம் உள்ளது. மாநகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகள் மற்றும் அங்கு வரும் பொது மக்கள் தங்களது வாகனத்தை நிறுத்துவதற்காக போதுமான வாகன நிறுத்தம் இல்லை. அதேநேரத்தில் மாநகராட்சி வார்டுகளின் எண்ணிக்கையும் 198-ல் இருந்து 243 ஆக உயர்த்தப்படுகிறது. இதனால் மாநகராட்சி கவுன்சிலர்களின் வாகனங்களையும் நிறுத்துவதற்கு கூடுதல் இடவசதி தேவைப்படுகிறது.

    மாநகராட்சியில் ஒவ்வொரு மாதமும் கவுன்சிலர்கள், அதிகாரிகள் கூட்டம் நடைபெறுவது உண்டு. அந்த சந்தர்ப்பத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கு பெரும் சிரமம் எற்படுகிறது. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கண்ணாடி மாளிகை முன்பாக புதிதாக வாகனம் நிறுத்தம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது கண்ணாடி மாளிகைக்கு முன்பாக சுரங்கம் அமைத்து இந்த வாகன நிறுத்தம் அமைக்க தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது.

    அதாவது கண்ணாடி மாளிகை முன்பாக சுரங்கத்தில் 3 அடுக்குகளில் இந்த வாகனம் நிறுத்தம் அமைய இருக்கிறது. இதன்மூலம் அந்த வாகன நிறுத்தத்தில் 150 கார்களை எந்த பிரச்சினையும் இல்லாமல் நிறுத்த முடியும் என்றும், தேவைப்பட்டால் கூடுதலாக 50 கார்களை நிறுத்துவதற்கான வசதிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் கூறுகையில், மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் வாகனங்கள் நிறுத்த பிரச்சினை இருப்பதால், டாக்டர் ராஜ்குமார் கண்ணாடி மாளிகை முன்பாக 150 கார்களை நிறுத்தும் விதமாக சுரங்கம் அமைத்து புதிய வாகன நிறுத்தம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி அரசுடன் ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார்.

    • கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று காலை ராஜ்பவனில் தேசிய கொடியை ஏற்றி வைத்து பேசினார்.
    • கருத்து வேறுபாடு காரணமாக ஐகோர்ட்டு உத்தரவையும் மீறி முதலமைச்சர் சந்திரசேகர ராவ் குடியரசு தின விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்பதி:

    குடியரசு தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் தெலுங்கானா மாநிலம், செகந்திராபாத்தில் உள்ள போலீஸ் பயிற்சி மைதானத்தில் குடியரசு தின விழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு குடியரசு தின விழா ரத்து செய்யப்பட்டது.

    இந்த நிலையில் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவிற்கும், கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக விரிசல் ஏற்பட்டது. இதனால் இந்த ஆண்டும் கொரோனாவை காரணம் காட்டி செகந்திராபாத்தில் குடியரசு தின விழாவை மாநில அரசு ரத்து செய்தது. இதுகுறித்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு மாநில அரசு சார்பில் தகவல் அனுப்பி இருந்தனர். அதில் ராஜ் பவனில் தனியாக குடியரசு தின விழாவை நடத்திக் கொள்ளலாம் என தெரிவித்து இருந்தனர்.

    இதுகுறித்து ஐதராபாத்தை சேர்ந்த சீனிவாஸ் என்பவர் தற்போது கொரோனா தொற்று பரவல் இல்லாத நிலையில் மாநில அரசு வேண்டும் என்றே கவர்னரை தவிர்க்க வேண்டும் என்பதற்காக கொரோனாவை காரணம் காட்டி குடியரசு தின விழாவை ரத்து செய்துள்ளது எனவே குடியரசு தின விழாவை நடத்த உத்தரவு வழங்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தார். அவரது வழக்கை விசாரித்த ஐதராபாத் ஐகோர்ட்டு வழக்கம்போல் குடியரசு தின விழாவை செகந்திராபாத்தில் நடந்த வேண்டுமென உத்தரவிட்டது.

    இருப்பினும் இன்று காலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ராஜ்பவனில் தேசிய கொடியை ஏற்றி வைத்து பேசினார். குடியரசு தின விழாவில் முதலமைச்சர் சந்தரசேகர ராவ் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். நிகழ்ச்சியில் மாநில அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் சந்திரகுமாரி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    கருத்து வேறுபாடு காரணமாக ஐகோர்ட்டு உத்தரவையும் மீறி முதலமைச்சர் சந்திரசேகர ராவ் குடியரசு தின விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.
    • சமரச பேச்சுவார்த்தையில் எங்கள் கோரிக்கைகளுக்கு எந்த உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை.

    ஐதராபாத் :

    வாரத்தில் 5 நாட்கள் வேலை, தேசிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல், ஓய்வூதியத்தை மாற்றி அமைத்தல், சம்பள உயர்வு குறித்த பேச்சுவார்த்தையை தொடங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு, வருகிற 30 மற்றும் 31-ந் தேதிகளில் வங்கிகள் வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.

    இதற்கிடையே, மும்பையில் துணை தலைமை தொழிலாளர் ஆணையாளர் முன்னிலையில் நேற்று சமரச பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், எந்த உறுதியான முடிவும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து அகில இந்திய வங்கி பணியாளர்கள் சம்மேளன பொதுச்செயலாளர் சிஎச்.வெங்கடாசலம் கூறியதாவது:-

    சமரச பேச்சுவார்த்தையில் எங்கள் கோரிக்கைகளுக்கு எந்த உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்புடன் 15 நாட்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்துவதாக இந்திய வங்கிகள் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    எனவே, எந்த உத்தரவாதமும் அளிக்கப்படாததால், வங்கி ஊழியர்கள் அனைவரும் திட்டமிட்டபடி வேலைநிறுத்தத்தில் ஈடுபடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×