என் மலர்
புதுச்சேரி
- யோகக் கலை இறைவன் அருளியது. புதுவை மண்ணில் சித்தர்கள் வாழ்ந்துள்ளனர்.
- அமைதி உடலை காக்கும் அத்தகைய அமைதியை தருவதாக யோக கலை உள்ளது.
புதுச்சேரி:
புதுவை காமராஜர் மணிமண்டபத்தில் சுற்றுலா துறை சார்பில் சர்வதேச யோகா திருவிழா தொடங்கியது. இந்த திருவிழா வருகிற 7-ந் தேதி வரை நடக்கிறது.
தொடக்க விழா நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கினார். கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் யோகா திருவிழாவை தொடங்கி வைத்தார்.
சுற்றுலா துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் முன்னிலை வகித்தார். சுற்றுலா துறை செயலாளர் குமார் வரவேற்றார்.
நமது வாழ்க்கையுடன் யோகக்கலை ஒன்றிணைந்து உள்ளது. யோகக் கலையானது அனைத்து நோய்களுக்கும் பிரதான மருந்தாக உள்ளதை அனுபவ ரீதியாகவே உணரமுடியும், இந்தக் கலையை சர்வதேச அளவில் எடுத்துச் சென்றவர் பிரதமர் மோடி. இஸ்லாமிய நாடுகளிலும் யோகக் கலையைக் கடைப்பிடித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
யோகக் கலை இறைவன் அருளியது. புதுவை மண்ணில் சித்தர்கள் வாழ்ந்துள்ளனர். நமது கோவில்களில் இறைவன் யோக நிலையில் இருப்பதை காணலாம். மனதையும் உடலையும் நலமுடன் வைப்பதற்கு யோக கலை அவசியம். கோபம் உடல் நலத்தை கெடுக்கும். அமைதி உடலை காக்கும் அத்தகைய அமைதியை தருவதாக யோக கலை உள்ளது. மருத்துவமனை நோயாளிகளுக்கு யோக கலை பயிற்சி அளிக்க புதுவையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் விருப்பப்படும் மாணவகளுக்கு யோகா கற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முடிவில் சுற்றுலா துறை இயக்குனர் பிரியதர்ஷினி நன்றி கூறினார்.
- கார்த்திகேசன் வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது.
- வீட்டிலிருந்த சுமார் 50,000 மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகியது.
புதுச்சேரி:
காரைக்கால் அருகே நெடுங்காடு கூழ் குடித்த அக்ரஹாரம் கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் கார்த்திகேசன். இவரது வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது. அருகிலுள்ள குடும்பத்தார்கள் தீயை அணைக்க முயன்றும் முடியாததால், காரைக்கால் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்பு நிலைய அதிகாரி அசோக் குமார் தலைமையில், வீரர்கள் விரைந்து சென்று தீ மற்ற வீடுகளுக்கு பரவாமல் அணைத்தனர். இருந்தும் குடிசை வீடு முற்றிலுமாக எரிந்து சேதமானது. வீட்டிலிருந்த சுமார் 50,000 மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகியது.
விவரம் அறிந்த புதுச்சேரி போக்குவரத்து அமைச்சர் சந்திர பிரியங்கா சம்பவ இடத்திற்கு நேரில் சென்று, தீ விபத்தில் பாதிக்கப்பட்ட கார்த்திகேசன் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி நிவாரண பொருட்களை வழங்கினார். மேலும், கார்த்திகேசன் ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்தவர் என்பதால், இரண்டொரு நாளில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூபாய் 50,000 வழங்க அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். நிகழ்ச்சியில் வட்டாட்சியர் மற்றும் ஆதிதிராவிட நலத்துறை உதவி இயக்குனர் மதன்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா ஆட்சியில் நாட்டில் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது.
- புதுவையை குட்டிச்சுவராக்கும் வேலையை முதலமைச்சர், அமைச்சர்கள், கவர்னர் ஆகியோர் சேர்ந்து கூட்டாக செய்கின்றனர்.
புதுச்சேரி:
புதுவை மாநிலத்தில் காங்கிரஸ் மக்கள் சந்திப்பு யாத்திரை வருகிற 26-ந் தேதி முதல் மார்ச் 25-ந் தேதிவரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் புதுவையில் உள்ள தனியார் மகாலில் நடைபெற்றது. மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.
வைத்திலிங்கம் எம்.பி., வைத்தியநாதன் எம்.எல்.ஏ. மற்றும் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் யாத்திரைக்கான புதுவை பொறுப்பாளரும் முன்னாள் எம்.பி.யுமான அனுமந்தராவ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
இதில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-
நம்முடைய கூட்டணிக்கு வர தயக்கம் காட்டியவர்கள் எல்லாம் ராகுல் காந்தியை பிரதமராக அறிவித்தால் எங்களுடைய கட்சி ஆதரவு கொடுக்கும் என்று இன்று தானாக வருகின்ற சூழ்நிலையை அவரது பாதயாத்திரை உருவாக்கியுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா ஆட்சியில் நாட்டில் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. புதுவை முதலமைச்சர் பா.ஜனதாவுடன் கூட்டணி சேர முக்கிய காரணம் புதுவைக்கு மாநில அந்தஸ்து பெறுவதுதான் என்று தேர்தல் நேரத்தில் சொன்னார்.
வாக்குறுதி கொடுத்து 2 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை.
கோப்புகள் தூங்குகின்றன. அதிகாரிகள் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்று ரங்கசாமி புலம்புகிறார். சூப்பர் முதலமைச்சர் கவர்னர் தமிழிசை. டம்மி முதலமைச்சர் ரங்கசாமி. இதுதான் புதுவையின் நிலை சபாநாயகர், உள்துறை அமைச்சர், குடிமைபொருள் வழங்கல் துறை அமைச்சர் பா.ஜனதா தலைவர்கள் உள்பட பல முதலமைச்சர்கள் இந்த ஆட்சியில் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட அலங்கோலமான ஆட்சி புதுவையில் நடக்கிறது. இந்த ஆட்சியில் புதிய திட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை.
புதுவையை குட்டிச்சுவராக்கும் வேலையை முதலமைச்சர், அமைச்சர்கள், கவர்னர் ஆகியோர் சேர்ந்து கூட்டாக செய்கின்றனர்.
இந்த அவலத்தையும் மோடி அரசின் அவலங்களையும் மக்களிடம் கொண்டு செல்ல ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டனும் கடுமையாக உழைக்க வேண்டும்.
2024 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தான் புதுவையில் போட்டியிட வேண்டும் அவரை நாம் அனைவரும் சேர்ந்து வெற்றி பெற செய்ய வேண்டும்
இவ்வாறு அவர் பேசினார்.
- சிறுநீர் கழிப்பதற்காக நீண்ட வரிசையில் நின்று செல்ல வேண்டியுள்ளது.
- ஒரு கழிவறையை ஆசிரியர்களும், மற்றொன்றை மாணவிகளும் பயன்படுத்தி வருகின்றனர்.
புதுச்சேரி
புதுச்சேரி மாநிலத்தின் நெற்களஞ்சியமாகவும், 2-வது பெரிய நகரமாகவும் பாகூர் விளங்குகிறது. பாகூரின் முக்கிய பகுதியான மேரி வீதியில் தாலுகா, கொம்யூன், வங்கி, கருவூலம், பதிவு என பல முக்கிய அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதே பகுதியில் செயல்படும் அரசு பெண்கள் தொடக்கப்பள்ளி பல ஆண்டுகளாக போதிய இடவசதியின்றி குறுகிய கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் பாகூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த சுமார் 100 குழந்தைகள் படித்து வருகின்றனர். போதிய இடவசதி இல்லாததால் பள்ளியின் நுழைவாயில் பகுதியிலேயே 2 சிறிய கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. இதில் ஒரு கழிவறையை ஆசிரியர்களும், மற்றொன்றை மாணவிகளும் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் பள்ளியின் இடைவேளை நேரத்தில் மாணவிகள் சிறுநீர் கழிக்கவும், தண்ணீர் குடிக்கசெய்வதும் வழக்கம். ஆனால் இப்பள்ளியில் மாணவிகள் சிறுநீர் கழிப்பதற்காக நீண்ட வரிசையில் நின்று செல்ல வேண்டிய அவல நிலை இருந்து வருகிறது. இதனால் மாணவிகள் வெகுநேரம் காத்திருந்து சிறுநீர் கழிக்க வேண்டியது உள்ளது.
ஒரு சிறிய கழிவறையில் ஒரேநேரத்தில் 5 மாணவிகள் சென்று வருவதால் சுகாதாரம் என்பது அங்கு கேள்விக்குறியாக உள்ளது. இந்தநிலை தொடர்ந்து நீடிப்பதால் மாணவிகளுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு உடல்நிலை பாதிப்பு ஏற்படலாம் என்று பெற்றோர்கள் அச்சப்படுகின்றனர்.
அங்குள்ள அரசு ஆண்கள் நடுநிலைப்பள்ளியிலும் இதேநிலைதான் இருப்பதாக பெற்றோர்கள் குமுறுகின்றனர். எனவே கல்வித்துறை அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தி கூடுதல் கழிவறை கட்டித் தருவதுடன் மாற்று இடத்தில் அடிப்படை வசதிகளுடன் பள்ளி கட்டிடம் கட்டிக் கொடுக்க வேண்டும் என அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஓ.என்.ஜி.சி நிறுவனம் சார்பில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு 5 கிலோமீட்டர் தூர மாரத்தான் போட்டி இன்று காலை நடைபெற்றது.
- ஆண்கள், பெண்கள் என 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
காரைக்காலில் உள்ள ஓ.என்.ஜி.சி நிறுவனம் சார்பில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு 5 கிலோமீட்டர் தூர மாரத்தான் போட்டி இன்று காலை நடைபெற்றது. இந்த போட்டியை காரைக்கால் மாவட்ட கலெக்டர் முகமது மன்சூர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த மாரத்தான் போட்டியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உட்பட ஆண்கள், பெண்கள் என 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக இந்த மாரத்தான் போட்டி காரைக்காலில் உள்ள உள்விளையாட்டு அரங்கத்தில் தொடங்கி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் நிறைவு பெற்றது.
- பிளாஸ்டிக் மாற்றுப்பொருள் குறித்து ஊழியர்களுக்கு காட்சி ஊடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
- தொழிற்சாலை விழாக்கள், கூட்டங்களில் கண்டிப்பாக பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் வழிபாட்டு தலங்களில் புத்தாண்டு முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை தொழிற்சாலைகளிலும் கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான நடைமுறைகளை அறிவியல் தொழில்நுட்ப மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலர் முத்தம்மா, இயக்குனர் பிரியதர்ஷினி, உறுப்பினர் செயலர் ரமேஷ் ஆகியோர் வழிகாட்டுதலின்படி மாசுகட்டுப்பாட்டு குழுமம் வெளியிட்டுள்ளது.
இதன்படி பிளாஸ்டிக் மாற்றுப்பொருள் குறித்து ஊழியர்களுக்கு காட்சி ஊடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தொழிற்சாலை வளாகத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்த மாட்டோம், வாங்க மாட்டோம் என உறுதிமொழி ஏற்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை நீக்க அதிகாரி நியமிக்க வேண்டும்.
குடிநீர்பாட்டில் பயன்பாடை தடுத்து, கண்ணாடி பாட்டில் பயன்படுத்த வேண்டும். காவலாளிகள் தொழிலாளர்களை பரிசோதித்து பிளாஸ்டிக் கொண்டுவருவதை தடுக்க வேண்டும். பிளாஸ்டிக் இல்லாத தொழிற்சாலை அறிவிப்பை முகப்பில் வைக்க வேண்டும்.
தொழிற்சாலை விழாக்கள், கூட்டங்களில் கண்டிப்பாக பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறைகள் அனை த்து தொழிற்சாலைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.
- புதிய வகை கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது.
- அரசு பள்ளிகள் நோட்டீஸ் போர்டில் முககவசம் அணிந்து வரும்படி ஒட்டப்பட்டிருந்தது.
புதுச்சேரி:
புதுவையில் கிறிஸ்துமஸ் முதல் புத்தாண்டு வரை பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
அரையாண்டு விடுமுறைக்கு பின் இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. மாணவ, மாணவிகள் ஆர்வத்தோடு பள்ளிக்கு வந்தனர்.
புதிய வகை கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது.
மக்கள் அனைவரும் அனைத்து பொது இடங்கள், கடற்கரை சாலை, பூங்காக்கள் மற்றும் திரையரங்குகளில் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து சமூக விலகை கடைபிடிக்க வேண்டும்.
மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் அனைத்து மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் இதர ஊழியர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
கொரோனா கட்டுப்பாட்டு நடைமுறைகளின்படி செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் பெற்றோர்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் மாணவர்களை முககவசம் அணிந்து அனுப்பும்படி தகவல் தெரிவித்திருந்தனர். அரசு பள்ளிகள் நோட்டீஸ் போர்டில் முககவசம் அணிந்து வரும்படி ஒட்டப்பட்டிருந்தது.
இதனால் விடுமுறை முடிந்து பள்ளிக்கு வந்த மாணவர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து வந்தனர்.
- கடந்த 10 நாட்களாக புதுவை சுற்றுலாத்து றையின் கட்டுப்பாட்டில் உள்ள நோணாங்குப்பம் சுண்ணம்பாறு படகு குழாம்களை கட்டியிருந்தது.
- சுண்ணாம்பாறு படகு குழாமுக்கு கடந்த ஒரு வாரமாக தினமும் சரா சரியாக 4 ஆயிரம் பேர் வந்து சென்றுள்ளனர்.
புதுச்சேரி:
புதுவையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டை கொண்டாட வெளிமாநில பயணிகள் குவிந்திருந்தனர். அவர்கள் படகு குழாமுக்கு சென்று படகு சவாரி செய்தனர்.
இதனால் கடந்த 10 நாட்களாக புதுவை சுற்றுலாத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படகு குழாம் களை கட்டியிருந்தது. இதனால் புதுவை அரசுக்கும் கணிசமான வருவாய் கிடைத்தது.
நேற்று ஒரு நாள் மட்டும் ரூ.22 லட்சம் வசூலானது. நேற்று முன்தினம் ரூ.9.04 லட்சமும், கடந்த வெள்ளிக்கிழமை ரூ. 9.70 லட்சமும் வருவாய் கிடைத்தது. 23-ந்தேதி ரூ.4.29 லட்சமும், 24-ந்தேதி ரூ.8.69 லட்சமும், 25-ந்தேதி ரூ.10.97 லட்சமும், 26-ந்தேதி ரூ. 7.96 லட்சமும், 27-ந் தேதி ரூ.9.66 லட்சமும், 28-ந்தேதி ரூ.8.61 லட்சமும், 29-ந் தேதி ரூ.9.96 லட்சமும் வசூலாகியுள்ளது. ஒட்டுமொத்தமாக சுமார் ரூ.75 லட்சம் வசூலானது.
இந்த பணத்தை கொண்டு சுற்றுலா வளர்ச்சி கழக ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் நிலுவையில் இருந்த 2 மாத சம்பளமும், 8 மாத ஜி.எஸ்.டி. வரி பாக்கியும் சுற்றுலா வளர்ச்சி கழகம் செலுத்தியுள்ளது.
சுண்ணாம்பாறு படகு குழாமுக்கு கடந்த ஒரு வாரமாக தினமும் சரா சரியாக 4 ஆயிரம் பேர் வந்து சென்றுள்ளனர். புத்தாண்டை கொண்டாட நேற்று முன்தினமும், நேற்றும் சுமார் 2½ லட்சம் பேர் புதுவைக்கு வந்துள்ளனர் என்று சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண் இயக்குனர் பாலாஜி தெரிவித்தார்.
மேலும் படகு குழாமில் உள்ள கழிப்பறைகள் மேம்படுத்தும் பணியை தனியார் நிறுவனத்தினர் பெரு நிறுவன பங்களிப்பு திட்டத்தின் கீழ் செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
- புதுவையில் சாதாரண விடுதிகள் முதல் நட்சத்திர விடுதிகள் வரை அனைத்தும் நிரம்பி வழிந்தன.
- தாவரவியல் பூங்காவில் நேற்று ஒரே நாளில் மட்டும் ஆயிரத்து 500பேர் சிறுவர் ரெயிலில் பயணித்துள்ளனர்.
புதுச்சேரி:
புதுவையில் புத்தாண்டை கொண்டாட கிறிஸ்துமஸ் முதலே சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
அண்டை மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளி மாநிலங்கள், வட மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் புதுவையில் குவிந்தனர். சுற்றுலா பயணிகளின் வருகையில் புதுவை நகரமே ஸ்தம்பித்தது.
புதுவையில் சாதாரண விடுதிகள் முதல் நட்சத்திர விடுதிகள் வரை அனைத்தும் நிரம்பி வழிந்தன. ரூ.500 கட்டணம் வசூலித்த விடுதிகள்கூட ரூ.2 ஆயிரம் வரை கட்டணம் வசூலித்தன. புதுவைக்கு காரில் வந்த பெரும்பாலான சுற்றுலா பயணிகள் அறை கிடைக்காமல் ஆங்காங்கே சாலையிலேயே காரில் படுத்து தூங்கினர்.
பல்வேறு மாநிலம், மாவட்டங்களில் இருந்து புத்தாண்டை கொண்டாட குடும்பத்தோடு வந்திருந்தனர். நள்ளிரவில் கடற்கரையில் கூடிய கூட்டத்தை போலீசார் தடியடி நடத்தி கலைக்கும் சூழல் ஏற்பட்டது. கடற்கரையில் கூடிய மக்கள் ஒரே நேரத்தில் ஒட்டுமொத்தமாக வெளியேறியதால் நகர சாலைகளில் போக்குவரத்து நெரிசல் உருவானது.
மது போதையாலும் இளைஞர்கள் வேகமாக வாகனங்களை ஓட்டிச் சென்றனர். இதனால்பல இடங்களில் விபத்துகள் ஏற்பட்டது. நகர பகுதியில் மட்டும் 28 விபத்துகளில் 31 பேர் காயமடைந்தனர். 10 பேர் படுகாயத்துடன் அரசு ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டனர். 21 பேர் லேசான காயத்துடன் வீடு திரும்பினர்.
கதிர்காமம், மேட்டுப்பாளையம், கோரிமேட்டில் 8 விபத்துகளில் 8 பேர் காயமடைந்தனர். ஒருவர் ஜிப்மரில் சேர்க்கப்பட்டார். வில்லியனூர் சுற்று வட்டார பகுதியில் 4 விபத்துகள், கிருமாம்பாக்கத்தில் 4 விபத்துகளில் 8 பேர் காயடைந்தனர். மொத்தம் 44 விபத்துகளில் 47 பேர் காயமடைந்தனர்.
நேற்று அதிகாலை வரை சாலைகளில் மக்கள் நடமாட்டம் தொடர்ந்தது. நேற்று மாலை முதல் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர். இதனால் புதிய பஸ் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது. சென்னை, திருச்சி மார்க்கமாக செல்லும் பஸ்களுக்கு பயணிகள் அதிகளவில் காத்திருந்தனர்.
சென்னை பஸ்களில் முண்டியடித்து ஏறி இடம் பிடித்து சென்றனர். புதுவைக்கு காரில் வந்தவர்களும் புறப்பட்டதால் மொரட்டாண்டி டோல்கேட்டில் வாகனங்கள் அணிவகுத்து நின்றது. புதுவை மாநில எல்லைகள் நேற்று மாலை முதல் இரவு வரை நெரிசலாக இருந்தது.
புத்தாண்டு தினமான நேற்று புதுவை நேணாங்குப்பத்தில் நீண்ட வரிசையில் சுற்றுலா பயணிகள் காத்திருந்து படகு சவாரி செய்தனர். கடந்த 2 நாட்களில் மட்டும் படகு குழாமிற்கு ரூ.15 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.
தாவரவியல் பூங்காவில் நேற்று ஒரே நாளில் மட்டும் ஆயிரத்து 500பேர் சிறுவர் ரெயிலில் பயணித்துள்ளனர்.
புத்தாண்டையொட்டி நேற்று மதியம் ஓட்டல்களில் கூட்டம் அலைமோதியது.நட்சத்திர விடுதிகள் முதல் சாதாரண ஓட்டல்கள் வரை உணவருந்த சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மாலை 4 மணி வரை மதிய உணவுக்காக காத்திருந்து சாப்பிட்ட பின் சுற்றுலா பயணிகள் புதுவையிலிருந்து கிளம்பிச் சென்றனர்.
புதுவைக்கு வந்திருந்த பெரும்பாலான சுற்றுலா பயணிகள் கிளம்பிச்சென்றதால் புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டம் நிறைவு பெற்று இயல்பு நிலை திரும்பியுள்ளது.
- அ.தி.மு.க. 4 ஆக உடைந்து கிடக்கிறது.
- சிலர் விளம்பர அரசியல் செய்கிறார்கள்.
புதுச்சேரி :
புதுச்சேரியில் நடந்த பா.ம.க.வின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-
வருகிற புதிய ஆண்டு நமக்கு முக்கியமான ஆண்டாகும். தேர்தல் பணிக்கு நாம் தயாராக வேண்டும். இளைஞர்கள் அதிகம் உள்ள கட்சியாக பா.ம.க. உள்ளது. அவர்களை நல்வழியில் அழைத்துச் செல்வதுதான் நமது நோக்கம். பா.ம.க. வேகமாக வளர்ந்து வருகிறது.
நாம் இதுவரை ஆட்சிக்கு வரவில்லை. ஆனால் எத்தனையோ சாதனைகளை படைத்துள்ளோம். பா.ம.க. இல்லாவிட்டால் மக்களுக்கு சமச்சீர் கல்வி கிடைத்து இருக்காது. லாட்டரி ஒழிந்து இருக்காது. 20 சதவீத இடஒதுக்கீடு கிடைத்து இருக்காது. இந்தியாவில் 108 ஆம்புலன்சு வந்து இருக்காது. மது ஒழிப்பு பிரசாரமும் இருந்து இருக்காது. புகையிலை ஒழிந்து இருக்காது.
இப்படி ஆட்சியில் இல்லாமலேயே எத்தனையோ சாதனைகளை படைத்துள்ளோம். டாக்டர் ராமதாஸ் ஒரு அறிக்கை விட்டால் அதற்கு உடனடியாக பதில் கிடைக்கிறது. அவரது கோரிக்கைகளை நிறைவேற்ற அறிவிப்பு வெளியாகிறது. இதுதான் வளர்ச்சி அரசியல். வெற்றி அரசியல். டாக்டர் ராமதாஸ் கோரிக்கை வைத்தால் அதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றுகிறார். ஆனால் ஊடகங்கள் கூட்டணி என்று சொல்கிறார்கள். நமது இலக்கு தமிழகத்தின் வளர்ச்சிதான்.
சிலர் விளம்பர அரசியல் செய்கிறார்கள். என்னிடம் சிலர், ஒவ்வொரு அரசியல்வாதிகளையும் சுட்டிக்காட்டி தினமும் பேட்டி கொடுகிறார்கள். அறிக்கை விடுகிறார்கள் என்கிறார்கள். சிலர் வாட்ச்-ஐ காட்டுகிறார்கள். அது நமக்கு தேவையில்லை. மக்கள் மத்தியில் நமக்கான சூழ்நிலை நிலவுகிறது.
அ.தி.மு.க. 4 ஆக உடைந்து கிடக்கிறது. தி.மு.க. மீதான மக்களின் விமர்சனம் உங்களுக்கு தெரியும். மற்றவர்கள் சத்தம்தான் போடுகிறார்கள்.
தமிழகத்தில் 2 பெரிய சாதிகள் உள்ளன. ஒன்று ஆதிதிராவிடர். மற்றொன்று வன்னியர். இந்த இரு சமூகத்தினரும் தலா 20 சதவீதம் உள்ளனர். அதில் ஆதிதிராவிட மக்கள் முன்னேறி வருகிறார்கள். அவர்கள் இன்னும் முன்னேற வேண்டும். இந்த 2 சமுதாயமும் வளர்ந்தால்தான் தமிழகம் முன்னேறும்.
இவ்வாறு டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.
கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவ்வையின் ஆத்திசூடியை போன்று தானே எழுதிய ஆத்திசூடி ஒன்றை படித்தார்.
- வழிபாட்டுத் தலங்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளது.
- இதனால் புதுச்சேரியில் கூடுதலாக ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் கடந்த 2 ஆண்டாக கொரோனா பரவல் உள்ளிட்ட காரணங்களால் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
இந்த ஆண்டு புத்தாண்டை வரவேற்க புதுச்சேரி கோலாகலமாக தயாராகி வருகிறது. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் புதுச்சேரியில் குவிந்து வருகின்றனர்.
புத்தாண்டை சிறப்பாக கொண்டாட ஓட்டல்கள், மைதானங்கள், கடற்கரை உள்ளிட்ட இடங்களில் வண்ணமயமான ஒளிவிளக்கு அலங்காரங்கள், இசை மற்றும் நடன நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையே, புதுச்சேரியில் இரவு 1 மணி வரை புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், வழிபாட்டுத் தலங்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளதால் கூடுதாக ஒரு மணி நேரம் நீட்டித்து 2 மணி வரை புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது என கலெக்டர் வல்லவன் அறிவித்துள்ளார்.
- மாநில அந்தஸ்து விவகாரத்தில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா இடையே கருத்து வேறுபாடு உள்ளது.
- ஆண்களை குறிவைத்து நடந்த மது வியாபாரம் தற்போது பெண்களுக்கு குறிவைத்துள்ளது.
புதுச்சேரி:
புதுவை காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டுமா? வேண்டாமா? என முதலமைச்சரும், என்.ஆர்.காங்கிரசும் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். மாநில அந்தஸ்து பெற அரசு ரீதியாக என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்கள்? எனவும் தெரிவிக்க வேண்டும்.
மாநில அந்தஸ்து விவகாரத்தில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா இடையே கருத்து வேறுபாடு உள்ளது. புதுவையின் நிர்வாக தலைமையாக இருக்கும் கவர்னர் மாநில அந்தஸ்தில் கிடைப்பதெல்லம் இப்போதே கிடைக்கிறது என்கிறார். ஆனால் முதலமைச்சர் அதிகாரம் தேவை என கூறுகிறார்.
உண்மையிலேயே மாநில அந்தஸ்தை பெறுவதற்கான முயற்சியில்தான் ரங்கசாமி உள்ளாரா? இல்லை கவர்னரையும், மத்திய அரசையும் மிரட்டுவதற்காக மாநில அந்தஸ்தை ஆயுதமாக பயன்படுத்துகிறாரா? அண்ணன் தங்கையாக இருந்தாலே பாக பிரிவினை, பங்கு பிரிவினை இருக்கத்தான் செய்யும். வரும் ஆண்டிலாவது முதலமைச்சர் நிலையான முடிவை இவ்விவகாரத்தில் தெரிவிக்க வேண்டும்.
சுயேச்சை எம்.எல்.ஏ. வை தூண்டிவிடுவது, பிற கட்சியினரை தூண்டுவது போன்ற நிலைப்பாடை கைவிட வேண்டும். நேரடியாக முதலமைச்சரே களம் இறங்க வேண்டும். அப்படி முதலமைச்சர் ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுத்தால் பாராளுமன்றத்திலும், வெளியிலும் காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கும்.
வீதிக்கு வீதி திறக்கப்படும் மதுக்கடைகளால் மக்கள் போராட்டம் ஏற்பட்டுள்ளது. ரேஷன்கடை இருந்த இடமெல்லாம் மதுக்கடைகள் திறந்து வருகின்றனர். இதில் சில மதுக்கடைகளில் பெண்களுக்கு தனி வசதி என விளம்பரப்படுத்துகின்றனர். இதுவரை ஆண்களை குறிவைத்து நடந்த மது வியாபாரம் தற்போது பெண்களுக்கு குறிவைத்துள்ளது. இது மிகப்பெரும் கலாச்சார சீரழிவு. குடும்பங்களை அழிக்கும் முயற்சி.
எனவே மதுக்கடைகளின் எண்ணிக்கை, நேரத்தை குறைக்க வேண்டும். மாநில அந்தஸ்து கேட்பவர்கள் மீதும், மதுக்கடை எதிர்ப்பு போராளிகள் மீதும் கடுமையான சட்டங்கள் பாய்கிறது. மதுக்கடை உரிமையாளர்களுக்கு அரசு துணை செல்கிறதா? இதுதான் பிரதமர் மோடி அறிவித்த பெஸ்ட் புதுவையா? அமித்ஷா அறிவித்த எக்சலண்ட் புதுவையா? இதற்காகத்தான் மாநில அந்தஸ்து கேட்கிறார்களா?
இவ்வாறு அவர் கூறினார்.






