search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஜி 20 பிரதிநிதிகள் இன்று புதுவை வருகை- நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு
    X

    ஜி 20 பிரதிநிதிகள் இன்று புதுவை வருகை- நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு

    • 75 பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்கின்றனர் பிரதிநிதிகள் தங்கும் விடுதியை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    • பேனர்களின் நாட்டின் கலை, கலாசாரம், பண்பாடு ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் படங்களும், வாசகங்களும் இடம் பெற்றுள்ளது.

    புதுச்சேரி:

    ஜி 20 நாடுகளின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது.

    இந்தியா முழுவதும் 200 நகரங்களில் பல்வேறு தலைப்புகளில் சர்வதேச அளவில் ஜி20 உறுப்பு நாடுகள், நட்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் மாநாடுகள் நடைபெற உள்ளது.

    புதுவையில் நாளை (திங்கட்கிழமை) ஜி20 தொடக்க நிலை மாநாடு நடைபெறுகிறது. கூட்டத்தில் பருவநிலை மாற்றம் குறித்து விவாதிக்கப்படுகிறது. இதில் பல நாட்டு பிரநிதிகள் பங்கேற்கின்றனர்.

    மாநாட்டில் பங்கேற்கும் பிரதிநிதிகளை தங்க வைக்க நகர பகுதியில் 2 நட்சத்திர விடுதிகளும், சின்ன வீராம்பட்டினம் பீச் ரெசார்டும் முழுமையாக ஒதுக்கப்பட்டுள்ளது.

    75 பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்கின்றனர். மாநாட்டில் பங்கேற்க இன்று பிற்பகலில் பிரதிநிதிகள் வர தொடங்கினர். விமான நிலையத்தில் அவர்களை அரசு அதிகாரிகள் வரவேற்று அழைத்து சென்று ஒதுக்கப்பட்ட விடுதியில் தங்க வைத்தனர்.

    பிரதிநிதிகள் தங்கும் விடுதியை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தங்கும் விடுதி, விமான நிலையம், மாநாட்டு அரங்கம் ஆகியவை அமைந்துள்ள பகுதிகளை சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நகர பகுதிகளிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மரப்பாலம் சுகன்யா கன்வென்சன் சென்டரில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் நாளை மாநாடு நடைபெறுகிறது. இதனால் சுகன்யா கன்வென்சன் சென்டர் போலீஸ் வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    நாளை மறுநாள் (செவ்வாய்கிழமை)மாநாட்டு பிரதிநிதிகள் புதுவையை யடுத்து தமிழக பகுதியில் அமைந்துள்ள ஆரோவில்லுக்கு செல்கின்றனர். ஆரோவில் நகரை சுற்றி பார்ப்பதுடன், அங்கு நடைபெறும் நிகழ்வுகளிலும் பங்கேற்கின்றனர்.

    மாநாட்டையொட்டி ஜி20 சின்னத்தை மக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில் பல்வேறு நடவடிக்கையை புதுவை அரசு எடுத்து வருகிறது. ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற ஜி20 மைய கருத்தை முன்வைத்து பல்வேறு போட்டிகள் மாணவர்களுக்கு நடத்தப்பட்டது.

    அதேபோல் புதுவை பாரம்பரிய கட்டிடங்களான சட்டமன்ற வளாகம், தலைமை செயலகம், புதிய மேரி கட்டிடம், டி.ஜி.பி. அலுவலகம், பாரதி பூங்கா, கவர்னர் மாளிகை, மற்றும் தலைவர்களின் சிலைகளும் மின் விளக்குகளால் ஜொலிக்கின்றன.

    மேலும், நகர பகுதியில் முக்கிய இடங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. புதுவையின் பாரம்பரியத்தை உலகிற்கு எடுத்து சொல்லும் வகையிலும், சுற்றுலாவை வெளிப்படுத்தும் வகையிலும் நகரம் பொலிவுபடுத்தப் பட்டுள்ளது.

    மாநாட்டையொட்டி நகரம் முழுவதும் பிரதிநிதிகளை வரவேற்று பேனர்கள் அமைக்கப்பட்டுள்ளது. பேனர்களின் நாட்டின் கலை, கலாசாரம், பண்பாடு ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் படங்களும், வாசகங்களும் இடம் பெற்றுள்ளது.

    நிகழ்ச்சி நடைபெறும் அரங்கில் தீ விபத்து தடுப்பு ஒத்திகை உள்ளிட்ட பாதுகாப்பு ஒத்திகைகள் நடந்தது. இதில் அரக்கோணத்தில் இருந்து வந்த தேசிய பேரிடர் மீட்பு படையின் 37 குழுவினர் பங்கேற்றனர். மாவட்ட கலெக்டர் வல்லவன் தலைமையிலான அதிகாரிகள் மேற்பார்வையிட்டனர்.

    அப்போது தீயணைப்பு வாகனம் அபாய அலாரம் அடித்தபடி அரங்கிற்குள் வந்தபோது அங்கே பணியில் இருந்த தாசில்தார் மகாதேவன் குறுக்கே வந்துவிட்டார். தீயணைப்பு வாகன டிரைவர் திடீரென பிரேக் போட்டார். இதில் தாசில்தார் மீது தீயணைப்பு வாகனம் மோதி கீழே விழுந்தார்.

    ஆனால், அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. இந்நிலையில் பாதுகாப்பு ஒத்திகையில் இருந்த தேசிய பேரிடர் மீட்புக்குழுவிழுனர் அவரை உடனடியாக முதல் உதவி சிகிச்சையளித்து ஆம்புலன்ஸில் ஏற்றி அனுப்பினர். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×