என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • கணவர் மீது மனைவி போலீசில் புகார்
    • மழை விட்டதும் கொண்டு வந்து விடுவதாக பூம்பொழில் கூறியுள்ளார்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த திரு.பட்டினம் காமன்கோவில் தெருவைச்சேர்ந்தவர் பூம்பொழில் (வயது 37). இவருக்கும், சீர்காழி தென்பாதியைச்சேர்ந்த சிவா (40) என்பவருக்கும், கடந்த 2011-ல் திருமணம் ஆனது. இவர்களுக்கு நித்திக் சூரியா(12), பிரணவ் சூரியா(4) என்ற 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன், கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். அதனால், பூம்பொழில் தனது தந்தை ஊமைத்துரை, தாய் அமுதா ஆகியோருடன் தனியே வசித்து வருகிறார். கணவர் சிவா, திரு.பட்டினம் வரதராஜப்பெருமாள் கோவில் தெருவில் 2 குழந்தைகளுடன் தனியே வசித்து வருகிறார். இந்நிலையில், பூம்பொழிலுக்கு கடந்த 29-ந் தேதி பிறந்தநாள் வந்ததால், 2 மகன்களையும் தனது வீட்டில் கொண்டு வந்து விடும்படி, கணவர் சிவாவிடம் பூம்பொழில் கேட்டுள்ளார்.

    அதன்படி, மதியம் பள்ளி விட்டதும், இளைய மகன் பிரணவ் சூரியாவை சிவா பூம்பொழில் வீட்டில் கொண்டு சென்று விட்டுள்ளார். மாலை மூத்த மகனுடன் சென்ற சிவா, இளைய மகனை அனுப்பும்படி கூறியுள்ளார். அப்போது மழை பெய்ததாலும், இளைய மகன் தன்னை விட்டு செல்ல மறுத்ததாலும், மழை விட்டதும் கொண்டு வந்து விடுவதாக பூம்பொழில் கூறியுள்ளார்.இதனால் கோபம் அடைந்த சிவா, வீட்டுக்குள் நுழைந்து, பூம்பொழிலை தகாதவார்த்தைகளால் திட்டி, அடித்து கீழே தள்ளியுள்ளார். தடுக்க வந்த மாமனார், மாமியாரையும் சிவா தாக்கி விட்டு, 2 மகன்களுடன் தனது வீட்டுக்கு சென்று விட்டார். 

    இதில் காயம் அடைந்த பூம்பொழில் மற்றும் அவரது தாய், தந்தை ஆகியோர் திரு.பட்டினம் அரசு ஆரம் சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு, அவர்கள் கொடுத்த புகாரின் பேரில், திரு.பட்டினம் போலீசார், சிவா மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • 38-வது கண் தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • விழிப்புணர்வு பதாகைகளை எடுத்துச் சென்றனர்.

     புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்ட நலவழித்துறை சார்பில், காரைக்காலை அடுத்த அம்பகரத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 38-வது கண் தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, நிலைய டாக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். செவிலிய அதிகாரி ஜெகதீஷ் அனைவரையும் வரவேற்றார். சித்த மருத்துவர் மலர்விழி, திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளி துணை முதல்வர் ஞான பிரகாசி, சுகாதார உதவி ஆய்வாளர் அய்யனார் ஆகியோர் முன்னில வகித்தனர். தொடர்ந்து, மருத்துவ அதிகாரி அரவிந்த் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    விழிப்புணர் பேரணியில் கலந்து கொண்ட அம்பகரத்தூர் திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் கண்தானத்தை ஊக்குவிக்கும் விதமாக பார்வை இழந்தோர் பார்த்து மகிழ கண்களை தானம் செய்யுங்கள் என்று தங்கள் கண்களை கருப்பு ரிப்பன்னால் கட்டிக்கொண்டு பார்வையற்றவர்கள் நடப்பது போல் நடந்து விழிப்புணர்வு பதாகைகளை எடுத்துச் சென்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கிராமப்புற செவிலியர் பரமேஸ்வரி, விவேதா மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் செய்திருந்தனர். நிகழ்ச்சி இறுதியில் கண்தான விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது.. முடிவில் பள்ளி தமிழ் ஆசிரியர் வெங்கடேஷ் நன்றி கூறினார்.

    • கிராமமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியும் நடவடிக்கை எடுக்க வில்லை.
    • தொடர் பேச்சுவார்த்தைக்கு பிறகு அனைவரும் கலைந்து சென்றனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் திருநள்ளாறை அடுத்த செல்லூர் கிராமத்தில், கடந்த பல ஆண்டுகளாக சாலைகள் சேதம் அடைந்து, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. மேற்கண்ட சாலையை சரிசெய்ய வலியுறுத்தி, கிராமமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியும் நடவடிக்கை எடுக்க வில்லை. இந்நிலையில், 25-க்கும் மேற்பட்டோர் காரைக்கால்- கும்பகோணம் சாலையில் முன் அறிவிப்பு இன்றி, திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விபரம் அறிந்த போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் எடுத்து கூறுவதாக உறுதியளித்தும் சாலை மறியலை தொடர்ந்ததால், 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர் பேச்சுவார்த்தைக்கு பிறகு அனைவரும் கலைந்து சென்றனர்.

    இது குறித்து, அப்பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மாதவன் கொடுத்த புகாரின் பேரில், போக்குவரத்து மற்றும் பாதசாரிகளுக்கு இடை யூறாக நின்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட, செல்லூர் தமிழ்மணி (வயது20), சுபாஷ் (20), பாலசந்தர் (53), ஜான்மதியழகன் (28), யோகேஷ் (21), நிரஞ்சன் (19), மணிகண்டன் (20), வீ.மணிகண்டன் (20) சந்துரு (20), மனோகர் (20), ஐஸ்வரியா (40), சசி (41), ஜோதி (43), மர்லீஸ் (41), சுதா (41), வனிதா (41) உள்ளிட்ட 10 ஆண்கள், 6 பெண்கள் என மொத்தம் 16 பேர் பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • மூதாட்டியிடம் பேசிக்கொண்டிருந்த சிலம்பரசன் திடீரென கையில் வைத்திருந்த தடியால் அவரை தாக்கினார்.
    • புகாரின் பேரில் பாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலம்பரசனை கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை எல்லை பகுதியான பாகூர் பகுதியை சேர்ந்த 63 வயது மூதாட்டி ஒருவர் கடந்த ஆண்டு ஜனவரி 30-ந் தேதி தனது வயலில் வேலை செய்து கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு குடிபோதையில் வந்த கடலூர் பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த உலகநாதன் மகன் சிலம்பரசன் (வயது 25) மூதாட்டியிடம் செல்போன் கேட்டுள்ளார்.

    பின்னர் மூதாட்டியிடம் பேசிக்கொண்டிருந்த சிலம்பரசன் திடீரென கையில் வைத்திருந்த தடியால் அவரை தாக்கினார். இதில் மயங்கி விழுந்த மூதாட்டியை ஈவு இரக்கமின்றி அருகில் உள்ள புதருக்குள் இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.

    இதை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டிய அவர், மூதாட்டி காதில் கிடந்த தங்க கம்மலையும் பறித்து கொண்டு தப்பி சென்றார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் பாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலம்பரசனை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு புதுச்சேரி 2-வது கூடுதல் மாவட்ட கோர்ட்டில் நீதிபதி இளவரசன் முன்னிலையில் நடைபெற்று வந்தது.

    வழக்கு விசாரணை அனைத்தும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு கூறப்பட்டது. சிலம்பரசன் மீதான குற்றம் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.

    மேலும் தங்க நகையை பறித்ததற்காக 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், கொலை மிரட்டல் விடுத்ததற்காக 2 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவு பிறப்பித்தார். 

    • கொள்ளையடித்த பணத்தில் 2 நாட்களாக மதுபார், ஓட்டல்களில் வாரி இறைத்து கணபதி செலவு செய்துள்ளார்.
    • பணத்தை பறிகொடுத்த சங்கருக்கு பெற்றோரின் சொத்து பாகம் பிரிக்கப்பட்டு செட்டில்மென்டாக ரூ.10 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை முதலியார் பேட்டையில் இன்ஸ்பெக்டர் இனியன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    கருமாரியம்மன் கோவில் வீதியில் வாலிபர் ஒருவர் மதுபோதையில் மயங்கி கிடந்தார். போலீசார் அங்கு சென்று பார்த்தபோது அவரின் அருகில் கைப்பை கிடந்தது. அதை சோதித்தபோது கட்டுக்கட்டாக பணம் இருந்தது. அந்த நபரை எழுப்பி விசாரித்தபோது, உப்பளம் நேதாஜி நகரை சேர்ந்த பெயிண்டர் கணபதி (வயது 32) என்பதும், பணத்தை பற்றி கேட்டபோது முன்னுக்கு பின் முரணாகவும் பதில் கூறினார்.

    இதையடுத்து அவரை போலீஸ்நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது பக்கத்து வீட்டில் சங்கர்(34) என்பவர் வசித்து வருகிறார். எல்.ஐ.சி. ஏஜெண்டான அவர் வெளியூர் சென்றிருந்தபோது அவரது வீட்டு கதவை இரும்பு ராடால் உடைத்து ரூ.10 லட்சத்தை கணபதி கொள்ளையடித்துள்ளார். அந்த பணத்தைத்தான் கணபதி செலவு செய்து வந்துள்ளார்.

    கொள்ளையடித்த பணத்தில் 2 நாட்களாக மதுபார், ஓட்டல்களில் வாரி இறைத்து கணபதி செலவு செய்துள்ளார். மது பார்களுக்கு பணப்பையுடன் சென்ற அவர் தனக்கு பிறந்தநாள் எனக்கூறி, எல்லோருக்கும் பணத்தை சினிமாவில் வழங்குவது போல கட்டுக்கட்டாக வாரி வழங்கியுள்ளார். ஓட்டல்களுக்கு சென்று விதவிதமாக சாப்பிட்டுள்ளார்.

    2 நாட்களில் மட்டும் ரூ.4 லட்சத்து 71 ஆயிரத்தை தண்ணீராக செலவு செய்துள்ளார் என தெரியவந்தது.

    பணத்தை பறிகொடுத்த சங்கருக்கு பெற்றோரின் சொத்து பாகம் பிரிக்கப்பட்டு செட்டில்மென்டாக ரூ.10 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. அந்த பணத்தைத்தான் கணபதி திருடியுள்ளார். இதில் ரூ.4 லட்சத்து 71ஆயிரம் செலவு செய்தது போக எஞ்சிய ரூ.5. லட்சத்து 29 ஆயிரத்தை போலீசார் மீட்டனர். சங்கர் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து கணபதியை கைதுசெய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • போலி பத்திரத்தை பதிவு செய்த சார்பதிவாளர் சிவசாமி உட்பட 15 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.
    • சென்னையில் பதுங்கியிருந்த பாலாஜியை சிறப்பு அதிரடிப்படை போலீசார் கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் காமாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி மதிப்பிலான 64 ஆயிரம் சதுரடி நிலம், ரெயின்போ நகர் 7-வது குறுக்கு தெருவில் உள்ளது. கோவில் நிலத்திற்கு போலி ஆவணம் தயாரித்து விற்பனை செய்யப்பட்டது.

    இதுகுறித்த புகாரின் பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தனி புலனாய்வு குழு அமைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், போலி ஆவணம் தயாரித்து 2 பிரிவாக நிலங்களை விற்பனை செய்தது தெரிய வந்தது.

    இதையடுத்து போலி பத்திரத்தை பதிவு செய்த சார்பதிவாளர் சிவசாமி உட்பட 15 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். மேலும் வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக இருந்த அப்போதைய தாசில்தார் பாலாஜி, நில அளவைத்துறை இயக்குனர் ரமேஷ் ஆகியோரையும் கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

    இதன்பின் 2 அதிகாரிகளும் குற்றவாளிகளாக வழக்கில் சேர்க்கப்பட்டனர். இதையடுத்து அவர்கள் 2 பேரும் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். இந்த நிலையில் அதிகாரிகள் 2 பேரும் திடீரென தலைமறைவாகினர். இருவரும் ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர்.

    இந்த மனுக்களை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்த நிலையில் சென்னையில் பதுங்கியிருந்த பாலாஜியை சிறப்பு அதிரடிப்படை போலீசார் கைது செய்தனர். அவரை புதுவைக்கு அழைத்து வந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தலைமறைவாக உள்ள மற்றொரு அதிகாரி ரமேசை தேடி வருகின்றனர். தற்போது பாலாஜி மீன்வளத்துறை இயக்குனராக பணியாற்றி வருகிறார். நில மோசடி வழக்கில் அதிகாரி கைது செய்யப்பட்டிருப்பது புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மீன்பிடி தொழில் செய்து வரும் இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.
    • சுவரின் கீழே சிக்கிய 2 குழந்தைகளையும் மீட்டு, அருகில் உள்ள காரைக்கால் மேடு அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்திற்கு தூக்கி சென்றனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால்மேடு சிங்காரவேலர் வீதியைச்சேர்ந்தவர் சரவணன். மீன்பிடி தொழில் செய்துவரும் இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு யோஹனா(12), சஞ்சுஸ்ரீ(9), சஞ்சனா(7), சாய் (5) ஆகிய 4 குழந்தைகள் உள்ளனர். இரவு சஞ்சனா மற்றும் சாய் ஆகிய இருவரும், வழக்கம் போல், வாசல் இரும்பு கேட்டில் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது, சுவர் இடிந்து இரும்பு கேட்டுடன் விழுந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தந்தை மற்றும் உறவினர்கள், சுவரின் கீழே சிக்கிய 2 குழந்தைகளையும் மீட்டு, அருகில் உள்ள காரைக்கால் மேடு அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்திற்கு தூக்கி சென்றனர். மேல் சிகிச்சைக்காக, காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றனர். இதில், சஞ்சனா சிகிச்சை பலனின்றி இறந்து போனார். சாய் லேசான காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து காரைக்கால் நகர போலீசில் சரவணன் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசரித்து வருகின்றனர்.

    • 4 ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த 2012-ல் உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார்.
    • அக்காவை நினைத்து புலம்பி வந்துள்ளார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மரியம் அவன்யூவைச்சேர்ந்தவர் முகம்மது இசாக். இவருக்கு இஸ்மத் நாச்சியாள் (வயது33) என்ற ஒரு பெண் குழந்தையும், அப்துல்ரஹ்மான் (32), ஜாகிர் உசேன் (31) ஆகிய 3 குழந்தைகள். இதில், இஸ்மத் நாச்சியாளுக்கு திருமணம் நடந்து, 4 ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த 2012-ல் உடல்நிலை சரியில்ல மால் இறந்துவிட்டார். இதனால், ஜாகிர் உசேன் மனவே தனையில் இருந்துவந்தார். அடிக்கடி அக்காவை நினைத்து புலம்பி வந்தார். வெளிநாடுக்கு வேலைக்கு அனுப்பி வைத்தால் சரியாகிவிடுவான் என நினைத்து, தந்தை முகம்மது இசாக், ஜாகிர் உசேனை, கடந்த 3 ஆண்டு களுக்கு முன், சவுதிக்கு டிரைவர் வேலைகாக அனுப்பி வைத்தார்.

    அங்கு சென்றும், அக்காவை நினைத்து புலம்பி வந்துள்ளார். திருமணம் செய்துவைத்தால் சரியாகிவிடுவான் என நினைத்து, பெண் பார்த்தனர். ஆனால், ஜாகிர் உசேன் திருமணம் வேண்டாம் என மறுத்துவிட்டார். இந்நிலையில், கடந்த 22-ந் தேதி ஜாகிர் உசேன் வாந்தி எடுத்தார். தந்தை மற்றும் உறவினர்கள், ஜாகிர் உசேனை காரைக்கால் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் விசாரித்தபோது, எலி பேஸ்டை, கூல்டிரிங்சில் கலந்து குடித்துவிட்டதாக கூறியுள்ளார். தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த ஜாகிர் உசேன் சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இது குறித்து, காரைக்கால் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • காதலர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
    • போலீசார் பிரியதர்ஷினியை தற்கொலைக்கு தூண்டியதாக பிரதீப் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    புதுச்சேரி:

    ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்தவர் பிரியதர்ஷினி (வயது 21). இவர் புதுச்சேரி மதகடிப்பட்டு பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் விடுதியில் தங்கி 4-ம் ஆண்டு படித்து வந்தார்.

    திருபுவனை பகுதியை சேர்ந்தவர் பிரதீப் (31). இவர் என்ஜினீயரிங் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தியவர். இவர் தனது நண்பரை பார்ப்பதற்காக பிரியதர்ஷினி படித்த தனியார் மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கடி சென்றுள்ளார். அப்போது பிரியதர்ஷினியை சந்தித்த நிலையில் இருவரும் காதலித்துள்ளனர்.

    இந்த நிலையில் காதலர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த பிரியதர்ஷினி கடந்த 16.5.2012 அன்று விடுதி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து மாணவியின் பெற்றோர் திருபுவனை போலீசில் புகார் செய்தனர். போலீசார் பிரியதர்ஷினியை தற்கொலைக்கு தூண்டியதாக பிரதீப் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இது தொடர்பான வழக்கு விசாரணை புதுச்சேரி தலைமை குற்றவியல் கோர்ட்டில் நீதிபதி மோகன் முன்னிலையில் நடந்து வந்தது.

    இந்த வழக்கில் விசாரணை அனைத்தும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு கூறப்பட்டது. இதில் பிரதீப் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.

    • மும்பை, டெல்லி, கோவா, காரைக்குடி என நாடு முழுவதுமிலிருந்து இந்த கார்கள் பங்கேற்றன.
    • கடற்கரை சாலையில் அணிவகுத்து நின்ற கார்களின் கண்காட்சியை முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    புதுவை சுற்றுலாத்துறை மற்றும் சென்னை பாரம்பரிய வாகன கழகம் சார்பில் கடந்த 2010-ம் ஆண்டு முதல் புதுவையில் ஆண்டுதோறும் பாரம்பரிய கார்களின் கண்காட்சி நடைபெற்று வந்தது.

    பின்னர் கொரோனா காலத்தில் கண்காட்சி நடைபெறவில்லை. இந்த நிலையில் மீண்டும் பாரம்பரிய கார் கண்காட்சி புதுவை கடற்கரை சாலையில் நேற்று மாலை நடந்தது.

    கண்காட்சியில் 1926 முதல் 1980 வரையில் பயன்பாட்டில் இருந்த ரோல்ஸ் ராயல், நாட்டிலே தனித்துவமான பழமையான ஒரே போர்டு பேன்சி, ஜாக்குவார், எம்.ஜி. டார்ஜ், செவர்லெட், போர்டு, பியுசியட், ஆஸ்டின் மற்றும் மெர்சடஸ் பென்ஸ் போன்ற உலக புகழ்பெற்ற கார் நிறுவனங்களின் 36 கார்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

    மும்பை, டெல்லி, கோவா, காரைக்குடி என நாடு முழுவதுமிலிருந்து இந்த கார்கள் பங்கேற்றன.

    அதேபோல் முந்தைய கால 10 மோட்டார் சைக்கிள்களும் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. ஒவ்வொரு காரிலும் அந்தந்த கார்களின் உரிமையாளர், தயாரிக்கப்பட்ட ஆண்டு போன்ற விவரங்களும் குறிப்பிடப்பட்டிருந்தன.

    கடற்கரை சாலையில் அணிவகுத்து நின்ற கார்களின் கண்காட்சியை முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் லட்சுமிநாராயணன், பாஸ்கர் எம்.எல்.ஏ, தலைமைச் செயலர் ராஜீவ் வர்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    பழமையான கார்களை பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

    மேலும், அந்த கார்கள் முன்பு நின்றபடி செல்பி எடுத்துக்கொண்டனர். இந்த கார்கள் அனைத்தும் இன்று காலை புதுவையில் இருந்து புறப்பட்டு சென்றன.

    • பாலில் இருந்து வெண்ணெய், நெய், ஐஸ்கிரீம், சாக்லெட், குளிர்ந்த பாதாம் பால் போன்றவை தயாரித்து மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது.
    • பாண்லே நிறுவனத்தில் ஏற்கனவே உற்பத்தி செய்த பொருட்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி குருமாம்பேட் பகுதியில் கூட்டுறவு பால் உற்பத்தி (பாண்லே) நிறுவனம் இயங்கி வருகிறது.

    இங்கு 1500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிறுவனத்தின் மூலம் புதுவை மக்களுக்கு நாள் ஒன்றுக்கு 1 லட்சத்து 10 ஆயிரம் லிட்டர் பால் விநியோகம் செய்யப்படுகிறது.

    இந்த நிறுவனத்துக்கு புதுவை விவசாயிகளிடமிருந்து 55 முதல் 60 ஆயிரம் லிட்டர் வரை கொள்முதல் செய்யப்படுகிறது. மீதமுள்ள 40 முதல் 50 ஆயிரம் லிட்டர் பால் தமிழகம், பெங்களூரு உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்யப்படுகிறது.

    பிறகு கொள்முதல் செய்யப்பட்ட பாலை கொழுப்பு சத்து அடிப்படையில் தரம் பிரித்து நீலம், பச்சை, ஆரஞ்சு உள்ளிட்ட நிறங்களில் பால் பாக்கெட் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    மேலும் பாலில் இருந்து வெண்ணெய், நெய், ஐஸ்கிரீம், சாக்லெட், குளிர்ந்த பாதாம் பால் போன்றவை தயாரித்து மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளி மாநிலங்களில் இருந்து பால் கொள்முதல் செய்யப்படும் பாலுக்கு பணம் கொடுக்காததால் பால் கொள்முதல் குறைந்தது. இதனால் பால் தட்டுப்பாடு ஏற்பட்டது.

    பிறகு அவர்களிடம் சமாதானம் பேசி, பணத்தை கொடுத்தப் பின் மீண்டும் பால் அனுப்பினர். தற்போது மீண்டும் வெளிமாநிலங்களில் கொள்முதல் செய்யப்படும் பாலுக்கு நிலுவை தொகை செலுத்தாததால் கடந்த சில நாட்களாக வெளிமாநிலங்களில் இருந்து வரும் பால் காலதாமதமாக வருகிறது.

    மேலும் கடைகளுக்கும் காலதாமதமாக செல்கிறது. மேலும் நிலுவை தொகையை வழங்க வேண்டும் என கிடுக்குப்பிடி செய்து வருகின்றனர்.

    தற்போது வெளி மாநிலங்களில் இருந்து குறைந்த அளவே பால் கொள்முதல் செய்யப்படுவதால் பொதுமக்களுக்கு தேவையான அளவு பால் கிடைப்பதில்லை. இதனால் புதுவையில் மீண்டும் பால் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

    மேலும் உள்ளூர் கூட்டுறவு கடன் சங்கம் மூலம் கொள்முதல் செய்யப்படும் பாலுக்கு கடந்த 3 மாதங்களாக பணம் கொடுக்காததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலை நீடித்தால் கால்நடை விவசாயிகள் அனைவரும் வெளி மார்க்கெட்டில் பால் விற்பனை செய்யும் நிலை ஏற்படும்.

    தற்போது பாண்லே நிறுவனம் பால், பாட்டில், அட்டை பெட்டி, பிளாஸ்டிக் பாக்கெட் போன்றவை கொள்முதல் செய்ததில் ரூ.25 கோடி கடன் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

    இதனால் பாண்லே நிறுவனத்தில் ஏற்கனவே உற்பத்தி செய்த பொருட்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.

    இதனால் உற்பத்தி குறைந்து கடைகளில் போதிய அளவு பாதாம் பால், குல்பி, சாக்லேட் போன்றவை இருப்பு இல்லாமல் உள்ளது. சில பூத் ஏஜெண்டுகள் சில தனியார் நிறுவனத்தின் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.

    • பொதுக்குழு, தொகுதி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டனர்.
    • புதுவை மாநில தி.மு.கவின் 15-வது உட்கட்சித் தேர்தலில் முதல் கட்டமாக மாநில நிர்வாகம், தலைமைச் செயற்குழு,

    தி.மு.க. கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை புதிய நிர்வாகிகள் அறிவிப்பு

    புதுச்சேரி,ஆக.27-

    புதுவை மாநில தி.மு.கவின் 15-வது உட்கட்சித் தேர்தலில் முதல் கட்டமாக மாநில நிர்வாகம், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு, தொகுதி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டனர்.

    புதிய நிர்வாகிகள்

    அடுத்த கட்டமாக 23 அணிகளுக்கான புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் பெறப்பட்டு, நேர்காணல் நடத்தப்பட்டது.

    பின்னர் புதுச்சேரி மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏவின் பரிந்துரையின்படி முதல் கட்டமாக இளைஞர், மீனவர் அணி, இலக்கிய அணிக்கு நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு, தற்போது கலை, இலக்கிய பகுத்தறிவுப் பேரவைக்கு புதிய நிர்வா கிகளை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஒப்புதலுடன் கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலாளர், வாகை சந்திரசேகர் அறிவித்துள்ளார்.

    அதன்படி, புதுச்சேரி மாநில கலை, இலக்கிய பகுத்தறிவுப் பேரவைத் தலைவராக புலவர் பா. கிருஷ்ணமூர்த்தி, துணை தலைவராக சேவியர் ராஜேஷ், அமைப்பாளராக சிவசங்கரன், துணை அமைப்பாளர்களாக அன்பு மாறன்,ஸ்ரீதர், உத்திராபதி, தேசிகன், ஏழுமலை, வீரமணி, தியாகராஜன், வெங்கடஜலபதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    வாழ்த்து

    புதிதாக நியமிக்கப்பட்ட கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை நிர்வாகிகள் தி.மு.க. அமைப்பாளர் சிவாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    ×