search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவை சட்டசபை படிகட்டில் அமர்ந்து பா.ஜனதா எம்.எல்.ஏ. தர்ணா போராட்டம்- சபாநாயகர் சமரசம்
    X

    புதுவை சட்டசபை படிகட்டில் அமர்ந்து பா.ஜனதா எம்.எல்.ஏ. தர்ணா போராட்டம்- சபாநாயகர் சமரசம்

    • காலாப்பட்டு தொகுதி மக்களுக்கு பல ஆண்டாக மனைப்பட்டா கோரி வருகிறோம்.
    • எம்.எல்.ஏ.க்கள் கூறும் பணிகளை கலெக்டர் செய்வதில்லை என குற்றம்சாட்டினார்.

    புதுச்சேரி:

    புதுவை பா.ஜனதா எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் தனது தொகுதியில் இலவச மனைப்பட்டா வழங்குவது உள்ளிட்ட வருவாய்த்துறை சார்ந்த பணிகள் நடைபெறவில்லை என குற்றம்சாட்டியிருந்தார்.

    இதற்காக சட்டசபை கூடும் நாளில் தர்ணா போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்து சபாநாயகர் ஏம்பலம் செல்வத்திடம் கடிதம் அளித்திருந்தார்.

    இந்நிலையில் புதுவை சட்டசபை இன்று காலை கூடியது. காலை 9 மணிக்கு சட்டசபைக்கு வந்த பாஜனதா எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் சட்டசபையின் படிக்கட்டில் அமர்ந்து தர்ணா போராட்டத்தை தொடங்கினார்.

    9.10 மணியளவில் சுயேச்சை எம்.எல்.ஏ. அங்காளன் சட்டசபைக்கு வந்தார். அவரும் கல்யாண சுந்தரத்துக்கு ஆதரவாக படிக்கட்டில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

    தனது தொகுதியிலும் இதே பிரச்சினை நிலவுவதாக குற்றம்சாட்டினார்.

    9.30 மணிக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் சட்ட சபைக்கு வந்தார். அவர் தர்ணாவில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.களை சமரசம் செய்து, தனது அறைக்கு கையோடு அழைத்துச்சென்றார். இதனால் எம்.எல்.ஏ.கள் தர்ணா ½ மணி நேரத்தில் முடிவடைந்தது.

    முன்னதாக கல்யாண சுந்தரம் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறும்போது,

    காலாப்பட்டு தொகுதி மக்களுக்கு பல ஆண்டாக மனைப்பட்டா கோரி வருகிறோம்.

    ஆனால் அதற்கான பணிகள் எதுவும் நடைபெறவில்லை. வருவாய்த்துறை சார்ந்த எந்த பணிகளும் நடைபெறவில்லை. வருவாய்த்துறை செயலரான கலெக்டரை சந்திக்க முயற்சித்தால் அவர் எம்.எல்.ஏ.க்களை சந்திப்பது இல்லை. அவர் முதலமைச்சர் அருகிலேயே அமர்ந்து கொள்கிறார். எம்.எல்.ஏ.க்கள் கூறும் பணிகளை கலெக்டர் செய்வதில்லை என குற்றம்சாட்டினார்.

    Next Story
    ×