என் மலர்
மகாராஷ்டிரா
- கர்நாடகத்தில் அதிகளவில் கோவில்கள் உள்ளன.
- கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா தோல்வியை சந்தித்துள்ளது.
மும்பை :
ரூ.2 ஆயிரம் நோட்டு தடை முடிவு குறித்து உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சியை சேர்ந்த சஞ்சய் ராவத் எம்.பி.யிடம் நிருபர்கள் பேட்டி கண்டனர். அப்போது அவர் பதிலளித்து கூறியதாவது:-
கர்நாடகம் ஒரு முக்கியமான தென் மாநிலம். அங்குள்ள மக்கள் பல்வேறு நம்பிக்கை கொண்ட பண்டிகைகளை கொண்டாடுகிறார்கள். கர்நாடகத்தில் அதிகளவில் கோவில்கள் உள்ளன. மக்கள் தங்கள் நம்பிக்கையையோ, மத விருப்பத்தையோ மறைக்க மாட்டார்கள். இருந்தபோதிலும், கர்நாடக மக்கள் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பா.ஜனதாவை நிராகரித்துள்ளனர். சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா தோல்வியை சந்தித்துள்ளது. அதை ஏற்றுக்கொள்வதில் பா.ஜனதாவுக்கு ஏன் இவ்வளவு சிரமம் என்று தெரியவில்லை. தோல்வியை ஏற்றுக்கொள்ள பா.ஜனதா கற்றுக்கொள்ள வேண்டும்.
பா.ஜனதா அல்லது பிரதமர் மோடி மீது எதிர்மறை உணர்வுகள் வெளிப்படும்போது, அவற்றை நீர்த்து போகச் செய்ய சில அதிரடி முடிவுகள் எடுக்கப்படுகின்றன. அப்படி எடுக்கப்பட்ட முடிவு தான் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை திரும்ப பெற்றது ஆகும். பிரதமர் மோடி தன்னிச்சையான முறையில் இந்த முடிவை எடுத்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்தி நடிகர் ஆதித்ய சிங் மர்மமான முறையில் வீட்டில் பிணமாக மீட்கப்பட்டார்.
- நடிகர் ஆதித்ய சிங் ஆதி கிங், மாம் அன்ட் டாட் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
மும்பை:
இந்தி நடிகரும், மாடலுமான ஆதித்ய சிங் ராஜ்புத் (33) மும்பை அந்தேரி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 11-வது மாடியில் வசித்து வந்தார்.
நடிகர் ஆதித்ய சிங் ஆதி கிங், மாம் அன்ட் டாட் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ராஜ்புத்னா, கோட்ரெட், ஏ ஹே யாஷிகி உள்ளிட்ட டி.வி. நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார்.
இந்நிலையில், நேற்று மதியம் நடிகரை தேடி நண்பர் ஒருவர் அவரது வீட்டுக்குச் சென்றார். வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. நண்பர் வெகுநேரமாக தட்டியும் யாரும் கதவை திறக்கவில்லை. எனவே அவர் மாற்று சாவி மூலம் வீட்டை திறந்து உள்ளே சென்றார்.
அப்போது குளியலறையில் நடிகர் ஆதித்ய சிங் மூச்சு பேச்சின்றி கிடந்தார். உடனடியாக நண்பர், கட்டிட காவலாளி உதவியுடன் நடிகரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு நடிகரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர். நடிகரின் மரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது.
- இது எதிர்க்கட்சிகளுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக அமைந்துள்ளது.
மும்பை:
கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடித்து 5 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி மீட்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. இந்த வெற்றி எதிர்க்கட்சிகளுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக அமைந்துள்ளது.
இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் புனேவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
வயநாடு தொகுதியின் முன்னாள் எம்.பி.யான ராகுல் காந்தி நடத்திய பாதயாத்திரைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது கர்நாடக தேர்தல் வெற்றி.
ராகுல் காந்தி சித்தாந்தத்தை மக்கள் வலுப்படுத்துவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் படிப்படியாக நிலைமை மாறி வருவதை நமக்கு காட்டுகிறது. அங்கு சாமானிய மக்களின் அரசு பதவியேற்றுள்ளது.
கர்நாடக சட்டசபை தேர்தலில் நாம் பார்த்ததை நாட்டின் பிற இடங்களிலும் பிரதிபலிக்க முடியும் என தெரிவித்தார்.
ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி பாரத் ஜோடோ யாத்திரையை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- முதலில் ஆடிய ஐதராபாத் அணி 200 ரன்களை குவித்தது.
- அடுத்து ஆடிய மும்பை அணி 201 ரன்கள் எடுத்து வென்றது.
மும்பை:
ஐபிஎல் தொடரில் மும்பையில் இன்று நடைபெறும் 69-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 200 ரன்களை குவித்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் விவாந்த் சர்மா, மயங்க் அகர்வால் இருவரும் அரை சதம் கடந்தனர்.
முதல் விக்கெட்டுக்கு 140 ரன்கள் சேர்த்த நிலையில், விவாந்த் சர்மா 69 ரன்னில் வெளியேறினார். அடுத்து மயங்க் அகர்வால் 83 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
மும்பை அணியின் ஆகாஷ் மத்வால் 4 விக்கெட் கைப்பற்றினார்.
இதையடுத்து, 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷன் 14 ரன்னில் அவுட்டானார்.
அடுத்து கேப்டன் ரோகித் சர்மாவுடன் கேமரூன் கிரீன் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிக்சர், பவுண்டரிகளாக விளாசி அரை சதம் கடந்தனர்.
2வது விக்கெட்டுக்கு 128 ரன்கள் சேர்த்த நிலையில் ரோகித் சர்மா 56 ரன்னில் ஆட்டமிழந்தார். கேமரூன் கிரீன் சதமடித்து 100 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இறுதியில், மும்பை அணி 201 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. 16 புள்ளிகள் பெற்ற மும்பை அணி அடுத்து நடைபெற உள்ள ஆர்.சி.பி. அணியின் முடிவுக்காக காத்திருக்கிறது.
- மனைவி அபூர்வாவும் உடல் உறுப்பு தானத்திற்கு சம்மதம் தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தானமாக அளிக்கப்படும் உறுப்புகளால் குறைந்தது 11 பேருக்கு மறு வாழ்வு கிடைக்கும்.
மகாராஷ்டிரா மாநிலம், பால்கர் மாவட்டத்தில் உள்ள விராரைச் சேர்ந்த மருத்துவ தம்பதியினர் மோட்டார்சைக்கிள் விபத்தில் உயிரிழந்த தங்களின் 30 வயது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர்.
பெங்களூரு அருகே கடந்த வெள்ளிக்கிழமை நடந்த விபத்தில் டாக்டர் தம்பதியின் மகன் சாகேத் தண்ட்வாட் என்பவர் உயிரிழந்தார். இதையடுத்து, ஐஎம்ஏவின் விரார் தலைவரான அவரது தந்தை டாக்டர் வினீத் தாண்டாவதே, தனது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தார்.
ஐந்து மாதங்களுக்கு முன்புதான் சாகேத்திற்கு திருமணம் நடந்துள்ளது. அவரது மனைவி அபூர்வாவும் உடல் உறுப்பு தானத்திற்கு சம்மதம் தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மகாராஷ்டிரா இந்திய மருத்துவ சங்கத்தின் (ஐஎம்ஏ) உறுப்பு தானக் குழுவின் தலைவரான டாக்டர் கதம் கூறுகையில், "தானமாக அளிக்கப்படும் உறுப்புகளால் குறைந்தது 11 பேருக்கு மறு வாழ்வு கிடைக்கும்.
சாகேத்தின் பெற்றோர் டாக்டர் வினீத் மற்றும் டாக்டர் சுமேதா ஆகியோர் இறந்த தங்கள் மகனின் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தனர்.
நாட்டில் ரத்த தானம் குறித்து நல்ல விழிப்புணர்வு உள்ள நிலையில், உறுப்பு தானம் குறித்து அதிக விழிப்புணர்வு தேவை" என்றார்.
- வாலிபரும், பெண்ணும் நடுரோட்டில் ஸ்கூட்டியில் அமர்ந்து குளிப்பதை காண முடிந்தது.
- தானே நகர போலீசாரும் சம்பந்தப்பட்ட வாலிபர் மீதும், அந்த பெண் மீதும் நடவடிக்கை எடுக்க உள்ளதாக பதில் அளித்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் உலாஸ் நகரில் நடைபெற்ற வினோதமான சம்பவத்தில் ஒரு வாலிபரும், இளம்பெண்ணும் நடுரோட்டில் ஸ்கூட்டியில் குளித்து கொண்டு செல்வது போன்று ஒரு வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
டுவிட்டரில் பகிரப்பட்ட இந்த வீடியோ தானே நகரத்தில் உள்ள உல்காஸ் நகரின் 17-வது பிரிவு பகுதியில் எடுக்கப்பட்டுள்ளது. அதில் வாலிபரும், பெண்ணும் நடுரோட்டில் ஸ்கூட்டியில் அமர்ந்து குளிப்பதை காண முடிந்தது.
அந்த பெண் தன் முன்னால் ஒரு வாளியை வைத்திருந்தார். மற்ற பயணிகள் பார்த்து கொண்டிருக்கும் போது அந்த ஆண் மீதும், தன் மீதும் அந்த பெண் தண்ணீரை ஊற்றி குளிப்பது போன்று காட்சிகள் உள்ளது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் கடும் கண்டனம் விமர்சன கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதற்கிடையே வீடியோ வைரலானதால் தானே நகர போலீசாரும் சம்பந்தப்பட்ட வாலிபர் மீதும், அந்த பெண் மீதும் நடவடிக்கை எடுக்க உள்ளதாக பதில் அளித்துள்ளனர்.
- இந்திய கலாசாரத்தை மனதில் வைத்து செயல்படுங்கள்.
- கோவிலின் புனிதம் காக்கப்பட வேண்டும்.
உஸ்மனாபாத்தில் உள்ள துல்ஜாப்பூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற துல்ஜா பவானி கோவிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபாட்டுக்காக வருகை தருகின்றனர். இந்த கோவிலுக்குள் நுழைய ஆடை கட்டுப்பாடுகளை கோவில் நிர்வாகம் விதித்துள்ளது.
இது குறித்து அறிவிப்பு பலகை கோவிலில் வைக்கப்பட்டு உள்ளது. மராத்தி மொழியில் வைக்கப்பட்டுள்ள இந்த அறிவிப்பு பலகையில், "கோவிலுக்கு அநாகரீகமாக உடல் பாகங்கள் தெரியும் வகையிலான ஆடைகள், அரை பேன்ட் மற்றும் பெர்முடாஸ் போன்றவற்றை அணிந்துவரும் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். தயவு செய்து நமது இந்திய கலாசாரத்தை மனதில் வைத்து செயல்படுங்கள்" என்று எழுதப்பட்டு உள்ளது.
இது குறித்து கோவிலின் மக்கள் தொடர்பு அதிகாரி நாகேஷ் ஷிடோல் கூறுகையில், "அறிவிப்பு பலகை மக்களின் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது. நாம் பக்தியுடன் கோவிலுக்கு செல்கிறோம். கோவிலின் புனிதம் காக்கப்பட வேண்டும். எனவே துல்ஜா பவானி கோவிலில் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. இதுபோன்ற விதிமுறைகள் நாடு முழுவதும் பல்வேறு கோவில்களில் ஏற்கனவே உள்ளது" என்றார்.
துல்ஜா பவானி கோவிலில் பிரார்த்தனை செய்ய சோலாப்பூரில் இருந்து வந்த பக்தரான பிரதிபா மகேஷ் கோவிலின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்தார். அவர் கூறுகையில், "இந்த முடிவு நமது கலாசாரத்தை பாதுகாக்க உதவும். நான் அதை வரவேற்கிறேன்" என்றார்.
- மும்பை தாக்குதல் சதிகாரன் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க கோர்ட்டு ஒப்புதல் அளித்து உள்ளது.
- ராணாவை இங்கு அழைத்து வந்து ஜெயிலில் போடுவதால் எதுவும் நடக்க போவதில்லை.
மும்பை :
மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ந் தேதி அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தானை சேர்ந்த 10 பயங்கரவாதிகள் நடத்திய கோரத் தாக்குதலில் 166 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். உலகையே உலுக்கிய இந்த பயங்கரவாத தாக்குதல் சதிகாரனான பாகிஸ்தானை சேர்ந்த கனடா தொழில் அதிபர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க கோர்ட்டு ஒப்புதல் அளித்து உள்ளது.
இந்த தாக்குதலின்போது வலது காலில் குண்டு காயம் அடைந்த தேவிகா நட்வர்லால் கூறியதாவது:-
சம்பவம் நடந்தபோது நான் 9 வயது சிறுமி. வழக்கில் மிகக்குறைந்த வயதான சாட்சி நான் தான். தாக்குதலின்போது என் மீதும் குண்டு பாய்ந்தது. என் கண்முன்னே பலர் கொல்லப்பட்டனர். தாக்குதலில் தொடர்புடைய ராணா இந்தியாவுக்கு கொண்டு வரப்பட உள்ளார். இதற்கு அனுமதி வழங்கிய அமெரிக்க கோர்ட்டின் உத்தரவை வரவேற்கிறேன். அவர் இந்தியாவுக்கு கொண்டு வரப்படுவது நல்லது தான். ஆனால் அவர் தூக்கில் போடப்பட்டாலோ அல்லது கடும் தண்டனை வழங்கப்பட்டால் மட்டுமே நான் மகிழ்ச்சி அடைவேன்.
ராணாவை இங்கு அழைத்து வந்து ஜெயிலில் போடுவதால் எதுவும் நடக்க போவதில்லை. தாக்குதல் தொடர்பான விவரங்கள் அவர் மூலம் வெளி வரவேண்டும். 10 பயங்கரவாதிகள் நமது நகருக்குள் நுழைந்து கண்மூடித்தனமாக சுட்டார்கள். டேவிட் ஹெட்லியுடன் சேர்ந்து தாக்குதலுக்கு திட்டம் போட்ட பயங்கரவாதி ராணா கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும்.
அவர் தண்டிக்கப்படுவதை பார்த்து வேறு யாரும் நமது நாட்டில் எந்த பகுதியிலும் பயங்கரவாத செயலில் ஈடுபட முயற்சி செய்ய கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தெரு நாய் மும்பையில் உள்ள போரிவிலி பகுதியில் இருந்து பயணிகள் ரெயிலில் ஏறுகிறது.
- இதுவரை 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ள வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மனிதர்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல மெட்ரோ அல்லது பயணிகள் ரெயிலில் வாடிக்கையாக செல்வதை பார்த்திருக்கிறோம். ஆனால் மும்பையில் தெரு நாய் ஒன்று தினமும் பயணிகள் ரெயிலில் பயணம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த தெரு நாய் மும்பையில் உள்ள போரிவிலி பகுதியில் இருந்து பயணிகள் ரெயிலில் ஏறுகிறது. பின்னர் அந்தேரியில் இறங்கி செல்கிறது. ரெயில் சென்று கொண்டிருக்கும் போது நாய் வெளியே பார்த்து கொண்டே இருப்பது போன்று காட்சிகள் உள்ளது. இதுவரை 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ள இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அதில் ஒரு பயனர், இது அவரது உலகம், நாங்கள் அதில் ஒரு பகுதி என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு பயனர், அவர்கள் சுதந்திரமாக சுற்றித்திரிவதை பார்க்க விரும்புகிறேன், இலவச ரெயில் சவாரி செய்து நிம்மதியாக இருக்கட்டும் என கூறி உள்ளார்.
- கைதான விஞ்ஞானியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
- இவர் அரசு பணி நிமித்தமாக 5 முதல் 6 வெளிநாடுகளுக்கு பயணம் செய்துள்ளார்.
புனே :
டி.ஆர்.டி.ஓ. என அழைக்கப்படும் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்துக்கு சொந்தமான ஆய்வகம் மராட்டிய மாநிலம் புனேயில் உள்ளது. இதில் இயக்குனராக பணியாற்றி வந்தவர் பிரதீப் குருல்கர்.
இவர் பாகிஸ்தானை சேர்ந்த உளவு அமைப்பு ஏஜென்டுடன் வாட்ஸ்அப் மூலம் தொடர்பில் இருந்ததாக கடந்த 3-ந் தேதி மராட்டிய பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். கைதான விஞ்ஞானியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.
பாகிஸ்தான் உளவு அமைப்பை சேர்ந்தவர்கள் பெண்ணை வைத்து ஆபாசமாக பேசி விஞ்ஞானியை அவர்களது வலையில் வீழ்த்தி உள்ளனர். பின்னர் அதன் மூலம் அவர்கள் விஞ்ஞானியிடம் இருந்து இந்திய ராணுவம் குறித்த ரகசிய தகவல்களை கறந்தது தெரியவந்தது.
இவர் அரசு பணி நிமித்தமாக 5 முதல் 6 வெளிநாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். இந்த பயணத்தின் போது அவர் யார், யாரை எல்லாம் சந்தித்தார் என்ற தகவல்களை சேகரித்து விசாரிக்க இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் விஞ்ஞானியின் விசாரணை காலம் முடிந்ததை அடுத்து அவரை நேற்று போலீசார் புனேயில் உள்ள சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட்டு விஞ்ஞானியை வருகிற 29-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டது. அதன்படி அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
முன்னதாக கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட விஞ்ஞானி தனக்கு ரத்த உயர் அழுத்தம் இருப்பதால் அதற்கான மருந்து மாத்திரைகளை ஜெயிலுக்கு எடுத்து செல்லவும், வீட்டில் இருந்து உணவு கொடுத்துவிடவும் அனுமதி கேட்டார். ஆனால் மருந்து மாத்திரை எடுத்து செல்ல அனுமதி அளித்த கோர்ட்டு, வீட்டு உணவுக்கு அனுமதி மறுத்துவிட்டது.
- ஸ்ரேயாசிங் என்பவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த வீடியோவில் இளம்பெண் ஆடுவதை மற்ற பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து ரசிக்கின்றனர்.
- வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பொது இடத்தில் இது தேவையற்றது என்ற கருத்தை பதிவிட்டனர்.
ரெயில் நிலையங்களில் நாகரீகத்தை கடைபிடிக்க வேண்டும் என அதிகாரிகள் எவ்வளவுதான் அறிவுரை கூறினாலும் சிலர் கேட்பதில்லை. இந்நிலையில் மும்பை ரெயில் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் நடனமாடும் காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது. அந்த வீடியோவில், ரீமிக்ஸ் பாடல் ஒன்றுக்கு இளம்பெண் நடமாடுகிறார். ஸ்ரேயாசிங் என்பவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த இந்த வீடியோவில் இளம்பெண் ஆடுவதை மற்ற பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து ரசிக்கின்றனர்.
ஆயிரக்கணக்கான பார்வைகளை பெற்றுள்ள இந்த வீடியோ பல்வேறு கருத்துக்களையும் பெற்றுள்ளது. வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பொது இடத்தில் இது தேவையற்றது என்ற கருத்தை பதிவிட்டனர். சிலர், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இன்னும் சிலர் அந்த பெண்ணின் நடன திறமை மற்றும் தைரியத்தை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- உலகம் அதிவேக மாற்றத்தை கண்டு வருகிறது.
- பாதுகாப்பு துறையும் மாறி வருகிறது.
புனே :
2047-ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் என்று ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பேசினார்.
மராட்டிய மாநிலம் புனேயில் 'டெபன்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் அட்னான்ஸ்டு டெக்னாலஜி'யின் பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கி பேசியதாவது:-
உலகம் அதிவேக மாற்றத்தை கண்டு வருகிறது. பாதுகாப்பு துறையும் மாறி வருகிறது. இந்த துறையில் பல தொழில்நுட்ப மாற்றங்களை காண்கிறோம். மேலும் பாதுகாப்பு துறையில் பல பிரச்சினைகள் எழுகின்றன. குறிப்பாக சைபர்பேஸ் மிரட்டல்கள் அதிகரிக்கின்றன.
மாற்றத்துக்கு ஏற்ப தொழில்நுட்பத்தில் நாம் முன்னேற வேண்டும். தொழில்நுட்பத்தை மேம்படுத்த முயற்சிகள் முன்வைக்கப்பட வேண்டும்.
பாதுகாப்பு உபகரணங்கள் ஏற்றுமதி அதிகரித்து உள்ளது. 2014-ம் ஆண்டுக்கு முன்பு இந்த துறையில் ரூ.900 கோடியாக ஏற்றுமதி இருந்தது. அது தற்போது ரூ.16 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது.
பொருளாதார நிபுணர்களின் கணிப்பின்படி, 2027-ம் ஆண்டுக்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடத்தை பிடித்து சாதனை படைக்கும். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறும். நமது நாடு தற்போது சுயசார்பு தன்னிறைவு பெற்று வருகிறது. உலக பொருளாதாரத்தில் இந்தியா முதல் இடத்தை பிடிப்பதையும் மறுக்க முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.






