என் மலர்
அரியானா
- அரியானா மாநிலம் அம்பாலா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பஸ்சை டிரைவர் ஓரமாக நிறுத்த முயன்றார்.
- லாரி டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.
அம்பாலா:
உத்தரபிரதேசத்தில் இருந்து இமாசலபிரதேச மாநிலத்திற்கு தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது.
இன்று அதிகாலை 4.30 மணி அளவில் அரியானா மாநிலம் அம்பாலா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பஸ்சை டிரைவர் ஓரமாக நிறுத்த முயன்றார். அப்போது பின்னால் வேகமாக வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து பஸ் மீது மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 7 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர். 10 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டு உள்ளனர். லாரி டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
- பரிதாபாத்-குருகிராம் சாலையில் மாங்கர் போலீஸ் நிலையம் அருகே கார் சென்று கொண்டிருந்தது.
- விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர்.
பரிதாபாத்:
அரியானா மாநிலம் குரு கிராம் அருகேயுள்ள பல்வால் பகுதியைச் சேர்ந்தவர்கள் சிலர் ஒரு காரில் பரிதாபாத்துக்கு சென்று கொண்டிருந்தனர். பரிதாபாத்-குருகிராம் சாலையில் மாங்கர் போலீஸ் நிலையம் அருகே நேற்று இரவு கார் சென்று கொண்டிருந்தது. அப்போது வேகமாக வந்த டிப்பர் லாரி, கார் மீது மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த 6 பேர் பரிதாபமாக இறந்தனர். அவர்கள் பெயர் புதின், ஜதின், ஆகாஷ், சந்தீப், பல்ஜித், விஷால் என்று தெரிய வந்தது. இவர்கள் அனைவருமே 18 வயது முதல் 25 வயதுக்கு உள்ளிட்டவர்கள் ஆவர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகிறார்கள்.
- பூந்தொட்டிகளை காரில் வந்த 2 நபர்கள் திருடி காரில் ஏற்றிச் சென்றுள்ளனர்.
- சிலர் வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர்.
அரியானா மாநிலம் குருகிராம் நகரில் ஜி20 மாநாடு தொடர்பான கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு வெளிநாட்டு பிரதிநிதிகள் வருகை தர உள்ளனர்.
இதற்காக சாலைகளில் அலங்காரத்திற்காக பூந்தொட்டிகள் வைக்கப்பட்டு இருந்தன. இந்த பூந்தொட்டிகளை காரில் வந்த 2 நபர்கள் திருடி காரில் ஏற்றிச் சென்றுள்ளனர். இதனை சிலர் வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர்.
சமூக வலைத்தளங்களில் வைரலான வீடியோ காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கொரோனா குறைந்து விட்டது என்று கூறிய பிறகும் வீட்டை விட்டு வெளியே வர தொடர்ந்து மறுத்தார்.
- அதிர்ச்சி அடைந்த சுஜன், தன் வீட்டின் அருகிலேயே வாடகைக்கு வேறு ஒரு வீடு எடுத்து அங்கிருந்தபடி குடும்பத்தை கவனித்துள்ளார் .
குருகிராம்:
மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்தியவர் என்று ஒரு பேச்சு சொல் உண்டு. அதை நிரூபிக்கும் வகையில் கொரோனாவுக்கு பயந்து வீட்டை விட்டு வெளியே வராமல் முடங்கியுள்ளார் ஒரு பெண். அதுவும் ஒன்றல்ல... இரண்டல்ல... 3 ஆண்டுகள் தனது பத்து வயது மகனுடன் வீட்டிற்குள் முடங்கியவர், வேலைக்கு செல்லும் கணவரையும் வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை.
இந்த சம்பவம் நடந்திருப்பது அரியானா மாநிலத்தில் தான்.
அங்குள்ள குருகிராம் மாவட்டத்தில் உள்ள மாருதி கஞ்சி பகுதியில் வசிப்பவர் சுஜன் மஜி, என்ஜினியர். இவரது மனைவி முன்முன். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான்.
கடந்த 2020-ஆம் ஆண்டு உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவிய போது முன்முன் தனது மகனுடன் வீட்டுக்குள் முடங்கினார்.
அதன் பிறகு அவர் வீட்டை விட்டு வெளியே வரவே இல்லை. தனது பத்து வயது மகனையும் வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை. ஆனால் அவரது கணவர் சுஜன் வேலைக்காக வெளியில் சென்றதால், அவரை வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை முன்முன்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சுஜன், தன் வீட்டின் அருகிலேயே வாடகைக்கு வேறு ஒரு வீடு எடுத்து அங்கிருந்தபடி குடும்பத்தை கவனித்துள்ளார் . மனைவி மற்றும் மகனுடன் வீடியோ காலில் மட்டுமே அவர் பேசி வந்துள்ளார். அவர்களுக்கு தேவையான காய்கறி உள்ளிட்ட பொருட்களை வாங்கி வந்து, தனது வீட்டின் கதவருகே வைத்து விட்டு சென்று விடுவாராம். அதனை முன்முன் எடுத்து சமைத்து வந்துள்ளார்.
இப்படி 3 ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே இருந்துள்ளார். இப்போது கொரோனா குறைந்து விட்டது என்று கூறிய பிறகும் வீட்டை விட்டு வெளியே வர தொடர்ந்து மறுத்தார்.
இதனையடுத்து போலீசில் சுஜன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசாரும் சுகாதாரத்துறையினரும் நேற்று சுஜன் வீட்டுக்குச் சென்று கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அவர்கள் அங்கிருந்த முன்முன் மற்றும் அவரது 10 வயது மகனை வெளியே அழைத்து வந்தனர். பின்னர் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் அரியானா மாநிலம் மட்டுமின்றி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வாலிபர்கள் சாவில் பசு காவலர்கள் என்று அழைக்கப்படுவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
- ஜூனைத் மீது பசுக் கடத்தல் தொடர்பாக 5 வழக்கு இருப்பதாகவும் நசீர் மீது எந்த வழக்கும் இல்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.
சண்டிகர்:
அரியானா மாநிலம் பிவானி மாவட்டத்தில் கார் ஒன்று எரிந்த நிலையில் இருந்தது. காருக்குள் 2 பேரின் உடல்கள் கருகி கிடந்தன. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இரண்டு உடல்களை கைப்பற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் காருக்குள் பிணமாக கிடந்தவர்கள் ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டத்தை சேர்ந்த நசீர் (25), ஜூனைத் (35) என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இருவரையும் நேற்று முன்தினம் ஒரு கும்பல் கடத்தி சென்று விட்டதாக அவர்களது குடும்பத்தினர் போலீசில் புகார் செய்திருந்தனர். இதையடுத்து அந்த வாலிபர்களை போலீசார் தேடி வந்தனர்.
இது தொடர்பாக போலீசார் கூறும்போது, பிரேத பரிசோதனை மற்றும் டி.என்.ஏ. பகுப்பாய்வுக்கு பிறகு அவர்கள் யார் என்பது தெரிய வரும் என்றனர்.
இதற்கிடையே வாலிபர்கள் சாவில் பசு காவலர்கள் என்று அழைக்கப்படுவர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள். இது தொடர்பாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜூனைத் மீது பசுக் கடத்தல் தொடர்பாக 5 வழக்கு இருப்பதாகவும் நசீர் மீது எந்த வழக்கும் இல்லை என்றும் போலீசார் தெரிவித்தனர். வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள 5 பேரில் மோனு மானேசர், பஜ்ரங்தளம் அமைப்பை சேர்ந்தவர்.
- அரியானா அரசு மருத்துவமனை ஊழியர்கள் இனி ஜீன்ஸ், டீ-சர்ட் அணிய முடியாது.
- அதிகமான ஒப்பனை, வினோதமான முடி அலங்காரத்துக்கும் அனுமதி இல்லை.
சண்டிகர்:
அரியானா மாநிலத்தில் அரசு மருத்துவமனை ஊழியர்கள் இனி ஜீன்ஸ், டீ-சர்ட் அணிய முடியாது. அதிகமான ஒப்பனை, வினோதமான முடி அலங்காரத்துக்கும் அனுமதி இல்லை. இதற்கான தடையை அந்த மாநில அரசு விதிக்கிறது. இதுதொடர்பாக, சுகாதார மந்திரி அனில் விஜ் கூறியதாவது:
அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கான ஆடைக் கட்டுப்பாட்டு விதிமுறை தயாரிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது.
பணியில் இருக்கும் ஊழியர்கள் 24 மணி நேரமும் இந்த ஆடைக் கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும். வார இறுதிகள், மாலை மற்றும் இரவுப் பணிக்கும் இதில் விதிவிலக்கு கிடையாது. தவறும் ஊழியர்கள் குறிப்பிட்ட தினம் பணிக்கு வராததாக பதிவு செய்யப்படும்.
வினோதமான முடி அலங்காரம், அதிகமான நகை, அணிகலன்கள், ஒப்பனை அணிவதற்கும் தடை விதிக்கப்படுகிறது. நகங்களை ஒட்ட வெட்டி சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். காலணிகளும் தூய்மையாக இருக்கவேண்டும். பெண் ஊழியர்கள் குட்டை பாவாடை, கையில்லாத மேலாடை போன்றவற்றை அணியக்கூடாது. டெனிம், தோல் ஆடைகளுக்கு அனுமதியில்லை.
ஊழியர்கள் நேர்த்தியான, சுத்தமான ஆடையில் தங்களின் பெயர், பணி குறித்த பட்டியை அணிந்திருக்க வேண்டும். அரசு மருத்துவமனை ஊழியர்கள் இடையே ஒழுங்கு, ஒரே தன்மை, சமத்துவம் போன்றவற்றை கொண்டு வருவதற்காகவும், அரசு மருத்துவமனைகள் குறித்து பொதுமக்களிடம் ஒரு நன்மதிப்பை உருவாக்கும் விதமாகவும் இந்த ஆடைக் கட்டுப்பாட்டு கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.
பாதுகாவலர்கள், டிரைவர்கள், சமையலர்கள் உள்பட ஆஸ்பத்திரி அனைத்துப் பிரிவு ஊழியர்களும் முறையான சீருடையில் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
அரியானா மாநில அரசின் இந்த முடிவை பெரும்பாலான அரசு டாக்டர்களும், ஊழியர்களும் வரவேற்றுள்ளனர்
- ஊழலை ஒழிப்பதில் லஞ்ச ஒழிப்புத்துறை அரசின் முக்கிய அங்கமாக உள்ளது.
- நான் லஞ்ச ஒழிப்புத்துறையின் தலைவராக பணியாற்ற விரும்புகிறேன்.
சண்டிகார் :
நாட்டில் நேர்மையான அதிகாரிகள் ஒரே இடத்தில் நீண்ட காலம் பணியாற்ற முடிவதில்லை என்பது தீராத சோகம்தான்.
ஆனால் அதற்காக இப்படியா என்று கேட்கிற அளவுக்கு அரியானா மாநிலத்தில் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி 30 வருடங்களில் 56 பணியிட மாற்றங்களைச் சந்தித்துள்ளார்.
அவர், அசோக் கெம்கா.
கடந்த 9-ந் தேதி 56-வது பணியிட மாற்றத்தை சந்தித்துள்ளார். அறிவியல் தொழில்நுட்பத்துறையில் கூடுதல் தலைமைச்செயலாளராக பதவி வகித்த இவர், இப்போது ஆவணக்காப்பகத்துறையில் கூடுதல் தலைமைச்செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த ஆவணக்காப்பகத்துறைக்கு இவர் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது இது 4-வது முறை.
இவர் 1991-ம் ஆண்டின் அரியானா தொகுப்பு ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார்.
2012-ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுடன் தொடர்புடைய குருகிராம் நில பேரத்தின் மாற்றத்தை அதிரடியாக ரத்து செய்ததன் மூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வெளிச்சத்துக்கு வந்தார்.
தற்போது அவர் முதல்-மந்திரி மனோகர் லால் கட்டாருக்கு ஊழலை வேரறுக்க லஞ்ச ஒழிப்புத்துறையில் தலைவர் பதவியை நாடி கடிதம் ஒன்றை எழுதி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது:-
ஊழல் என்பது எப்படி பரவும் என்பது உங்களுக்கு தெரியும். ஊழலைப் பார்க்கும்போது என் உள்ளம் புண்படுகிறது. ஊழல் புற்றுநோயை வேரறுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில், எனது பணி வாழ்க்கையை தியாகம் செய்துள்ளேன்.
அரசின் கொள்கைப்படி ஊழலை வேரறுக்காமல், ஒரு குடிமகன் தனது உண்மையான திறனை அடைவதற்கான கனவை ஒருபோதும் நனவாக்க முடியாது. அவன் அன்றாடம் பிழைப்புக்காக போராடும் நிலைக்கு தள்ளப்படுவான்.
நான் எப்போதுமே ஊழலுக்கு எதிரான போராட்டக்களத்தில் முன்னின்று உள்ளேன். ஊழலை ஒழிப்பதில் லஞ்ச ஒழிப்புத்துறை அரசின் முக்கிய அங்கமாக உள்ளது.
எனது பணி வாழ்க்கை முடியும் நிலையில், நான் லஞ்ச ஒழிப்புத்துறையின் தலைவராக பணியாற்ற விரும்புகிறேன்.
எனக்கு அந்த வாய்ப்பு அளிக்கப்பட்டால், ஊழலுக்கு எதிராக உண்மையான போர் தொடுப்பேன். எவ்வளவு உயர்வானவராக இருந்தாலும், வல்லமை படைத்தவராக இருந்தாலும் ஊழல் செய்தால் விட்டு விட மாட்டேன்
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- அப்துல் கரீம் வீட்டில் சமையல் செய்த போது கியாஸ் கசிந்து சிலிண்டர் வெடித்து தீப்பிடித்தது. இதனால் அறை முழுவதும் தீ பரவியது.
- ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரும் சிலிண்டர் வெடித்து விபத்தில் இறந்தனர். தீயணைப்பு வீரர்கள் செல்வதற்குள் அவர்கள் தீயில் கருகி பலியானார்கள்.
பானிபட்:
அரியானா மாநிலம் பானிபட் மாவட்டம் டெசில் கேம்ப் பகுதியை சேர்ந்தவர் அப்துல் கரீம்.
மேற்கு வங்காளத்தை சேர்ந்த இவர் இங்கு புலம்பெயர் தொழிலாளியாக வசித்து வருகிறார். ஒரு அறை எடுத்து குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.
இந்தநிலையில் இன்று காலை 6.30 மணியளவில் அப்துல் கரீம் வீட்டில் சமையல் செய்த போது கியாஸ் கசிந்து சிலிண்டர் வெடித்து தீப்பிடித்தது. இதனால் அறை முழுவதும் தீ பரவியது.
இதில் அப்துல் கரீம் (வயது 48), அவரது மனைவி அப்ரோஜ் (45), மகள்கள் இஸ்ரத் (18), ரேஸ்மா (16), அப்சானா (8), மகன் ஷக்குர் (12) ஆகிய 6 பேர் பலியானார்கள்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரும் சிலிண்டர் வெடித்து விபத்தில் இறந்தனர். தீயணைப்பு வீரர்கள் செல்வதற்குள் அவர்கள் தீயில் கருகி பலியானார்கள். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேற்கு வங்களாவில் உள்ள அவர்களது உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
- தற்போது ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைபயணம் அரியானா மாநிலத்தில் நடைபெற்று வருகிறது.
- பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி ஆகியவை சிறு வர்த்தகர்களை நேரடியாக பாதித்தது என்று ராகுல் காந்தி கூறினார்.
ராகுல் காந்தி நாடு முழுவதும் பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். தற்போது ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைபயணம் அரியானா மாநிலத்தில் நடைபெற்று வருகிறது.
ஜோடோ யாத்திரைக்கு இடையே ராகுல் காந்தி கூறியதாவது:-
பாரத் ஜோடோ யாத்திரைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நாட்டில் பரப்பப்படும் அச்சம், வெறுப்புணர்வுக்கு எதிராக இந்த யாத்திரை நடைபெறுகிறது. விவசாயிகள் கவலையில் உள்ளனர். எரிபொருள் மற்றும் உரவிலை அவர்களை நேரடியாக பாதித்துள்ளது.
மத்திய அரசு திரும்ப பெற்ற விவசாய சட்டம் விவசாயிகளுக்கானது இல்லை. அவை விவசாயிகளை தாக்கும் ஆயுதமாக இருந்தது. பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி ஆகியவை சிறு வர்த்தகர்களை நேரடியாக பாதித்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
- சந்தீப் சிங்கை மந்திரி பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று இந்திய தேசிய லோக் தளம் கட்சி வலியுறுத்தியது.
- மந்திரி மீதான குற்றச்சாட்டையடுத்து முதல்-மந்திரி மனோகர்லால் கட்டார் உயர்மட்ட குழு கூட்டத்தை கூட்டினார்.
சண்டிகர்:
அரியானா மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அங்கு விளையாட்டு மந்திரியாக இருப்பவர் சந்தீப் சிங். முன்னாள் ஹாக்கி வீரரான இவர் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தார். ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்று உள்ளார்.
இந்தநிலையில் மந்திரி சந்தீப்சிங் மீது தடகள பெண் பயிற்சியாளர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறினார்.
ஆவணங்களை சமர்ப்பிப்பது தொடர்பாக மந்திரி சந்தீப்சிங் அவரது அலுவலகத்துக்கு வரவழைத்து தவறாக நடந்து கொண்டார் என்றும் நான் அங்கு அறையில் இருந்து தப்பித்து வெளியே ஓடி வந்ததாகவும் பெண் பயிற்சியாளர் தெரிவித்தார்.
இதுகுறித்து மாநில காவல்துறை தலைவர் உள்துறை அமைச்சர், முதல்-மந்திரியை சந்தித்து முயற்சித்தபோதும் சந்தீப் சிங்கின் தலையீட்டால் தனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
ஆனால் இந்த குற்றச்சாட்டை மந்திரி சந்தீப் சிங் திட்டவட்டமாக மறுத்தார். தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை என்று தெரிவித்தார்.
இந்த விவகாரம் அரியானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெண் பயிற்சியாளரின் புகார் தொடர்பாக விசாரிக்க சிறப்பு குழுவை நியமிக்க வேண்டும். சந்தீப் சிங்கை மந்திரி பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று இந்திய தேசிய லோக் தளம் கட்சி வலியுறுத்தியது.
இந்த நிலையில் பெண் பயிற்சியாளரின் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக மந்திரி சந்தீப்சிங் மீது சண்டிகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறை செய்தி தொடர்பாளர் கூறும் போது, பெண் பயிற்சியாளர் அளித்த புகாரின் பேரில் அரியானா மந்திரி சந்தீப் சிங் மீது 5 பிரிவுகளின் கீழ் சண்டிகரில் உள்ள செக்டார்-26 போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
மந்திரி மீதான குற்றச்சாட்டையடுத்து முதல்-மந்திரி மனோகர்லால் கட்டார் உயர்மட்ட குழு கூட்டத்தை கூட்டினார்.
இந்நிலையில், அமைச்சர் தனது இலாகாவை முதலமைச்சரிடம் ஒப்படைத்துள்ளார். மேலும் தன் மீதான குற்றச்சாட்டுகள் மீண்டும் நிராகரித்துள்ள அவர், இது தனது இமேஜைக் கெடுக்கும் முயற்சி என்று தெரிவித்தார். என் மீது சுமத்தப்பட்டுள்ள பொய்யான குற்றச்சாட்டுகள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என நம்புகிறேன் என்றும் அவர் கூறினார்.
- புத்தாண்டின் முதல் நாளான இன்று காலை டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
- நிலநடுக்கத்தால் யாருக்கும் காயங்களோ அல்லது சேதங்களோ இல்லை என தெரியவந்துள்ளது.
அரியானா மாநிலம் ஜஜ்ஜர் பகுதியில் இன்று அதிகாலை 1.19 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 3.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்தது.
புத்தாண்டின் முதல் நாளான இன்று காலை டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் யாருக்கும் காயங்களோ அல்லது சேதங்களோ இல்லை என தெரியவந்துள்ளது.
முன்னதாக நவம்பரில், நேபாள எல்லையில் உத்தரகாண்டில் ஏற்பட்ட, 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான நடுக்கம் உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- கொரோனா மீண்டும் பரவுவதால் பாத யாத்திரையை நிறுத்தவேண்டும் என மத்திய சுகாதாரத்துறை கூறியது.
- இந்த விஷயத்தில் காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசை கடுமையாக சாடினார்.
சண்டிகர்:
அரியானா மாநிலம் பரிதாபாத்தில் பாத யாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:
மத்திய சுகாதாரத்துறை மந்திரி எனக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில் கொரோனா மீண்டும் பரவுவதால் எனது பாத யாத்திரையை நிறுத்தவேண்டும் என கூறியிருக்கிறார். மற்ற இடங்களில் பா.ஜ.க.வினர் அவர்கள் விரும்பியபடி பொதுக்கூட்டங்களை நடத்துகின்றனர். ஆனால் இந்திய ஒற்றுமை பயணம் எங்கெல்லாம் செல்கிறதோ அங்கெல்லாம் கொரோனா பரவுமாம் என கடுமையாக தாக்கிப் பேசினார்.
இதேபோல், மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர் சந்திப்பின்போது பாஜக அரசை கடுமையாக சாடினார்.
இந்திய ஒற்றுமை பயணம் குறித்து அவதூறு பரப்பவும், யாத்திரையை தடம் புரளச் செய்வதற்கும் அரசாங்கம் கொரோனா நாடகத்தை திட்டமிட்டு நடத்துகிறது. அறிவியல்பூர்வ ஆலோசனையின் அடிப்படையிலான நெறிமுறைகளை காங்கிரஸ் கட்சி பின்பற்றும் என தெரிவித்தார்.






