என் மலர்
குஜராத்
- குஜராத் மாநிலத்தில் நேற்று முன்தினம் முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது.
- இரண்டாம் கட்ட தேர்தல் வரும் 5-ம் தேதி நடைபெற உள்ளது.
அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தில் இரண்டாம் கட்ட சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பனஸ்கந்தா மாவட்டம் கங்ரேஜ் கிராமத்துக்கு பிரதமர் மோடி சென்றார். அங்குள்ள அகர்நாத் கோவிலில் வழிபட்டபின், தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
காங்கிரஸ் கட்சிக்கு தடுப்பது, தாமதப்படுத்துவது, திசைதிருப்புவது ஆகியவற்றில்தான் நம்பிக்கை. நர்மதை ஆற்று நீரை இந்த வறண்ட பகுதிக்கு கொண்டு வருவதாக காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது வயதானவர்களுக்கு தெரியும். ஆனால் எதுவுமே செய்யவில்லை.
சர்தார் சரோவர் அணை கட்டுவதை காங்கிரஸ் தடுக்க முயன்றது. அந்த திட்டத்துக்கு எதிராக மனு மேல் மனு போட்டு தாமதப்படுத்தியவர்களை ஆதரித்தது. இந்த பாவத்தை செய்த காங்கிரசுக்கு மன்னிப்பே கிடையாது. நீங்கள் மன்னிக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
பணம் சம்பாதிக்க வாய்ப்புள்ள திட்டங்களில் மட்டுமே காங்கிரஸ் அக்கறை செலுத்தும். பணம் சம்பாதிக்க முடியாத திட்டங்களில் கவனம் செலுத்தாது. பா.ஜக. தான் நர்மதை நீரை இங்கு கொண்டு வந்தது. விடுபட்ட பகுதிகளுக்கும் தண்ணீரை கொண்டு செல்வோம்.
நாடு முழுவதும் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நிறுத்தப்பட்ட 99 குடிநீர் திட்டங்களை முடிக்க எனது அரசு ரூ.1 லட்சம் கோடி அளித்துள்ளது.
ஏழை மக்களை கொள்ளையடித்தவர்கள், ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்னை திட்டுகிறார்கள். ஏழைகளுக்கு செல்ல வேண்டிய உணவு தானியங்கள் வேறு எங்கோ திருப்பி விடப்பட்டன. அதனால், 4 லட்சம் போலி ரேஷன் கார்டுகளை ஒழித்தோம்.
ஏழைகளைக் கொள்ளையடித்தால், மோடி நடவடிக்கை எடுப்பான். அத்தகையவர்கள் பிடிபடும்போது என்னை திட்டுகிறார்கள்.
குஜராத்தில் முதல் கட்ட தேர்தலில் மக்கள் திரண்டு வந்ததைப் பார்க்கும்போது பா.ஜ.க. அமோக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவித்துள்ளார்.
- மகாராஷ்டிரா கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 108 ரன்கள் குவித்தார்.
- சவுராஷ்டிரா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அகமதாபாத்:
38 அணிகள் பங்கேற்றுள்ள விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்தது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் சவுராஷ்டிரா - மகாராஷ்டிரா அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற சவுராஷ்டிரா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களம் இறங்கி முதலில் விளையாடிய மகாராஷ்டிரா அணியில் தொடக்க வீரரும் கேப்டனுமான ருதுராஜ் கெய்க்வாட், 7 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 108 ரன்கள் குவித்தார்.

அசிம் காசி 37 ரன்னும், சத்யஜீத் பச்சாவ் 27 ரன்னும் அடித்தனர். நவ்ஷாத் ஷேக் 31 ரன் எடுத்த நிலையில் களத்தில் இருந்தார். 50 ஓவர் முடிவில் மகாராஷ்டிரா அணி 9 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்களை குவித்தது.
இதையடுத்து 249 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய சவுராஷ்டிரா அணியில் தொடக்க வீரர் ஹர்விக் தேசாய் அரை சதம் அடித்து அவுட்டானார். மற்றொரு தொடக்க வீரர் ஷெல்டன் ஜாக்சன் 133 ரன்கள் குவித்து கடைசிவரை களத்தில் இருந்தார். இதில் 12 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் அடங்கும். சிராக் ஜானி 30 ரன்கள் அடித்தார். இதையடுத்து 46.3 ஓவர் முடிவில் சவுராஷ்டிரா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் குவித்து வெற்றி பெற்றதுடன் விஜய் ஹசாரே கோப்பையை 2வது முறையாக தட்டிச் சென்றது.
- தபி மாவட்டத்தில் அதிகபட்சமாக 72.32 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
- மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு வருகிற 5-ந்தேதி தேர்தல் நடக்கிறது.
அகமதாபாத்:
182 சட்டசபை தொகுதிகளை கொண்ட குஜராத் மாநிலத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. முதற்கட்டமாக 19 மாவட்டங்களில் உள்ள 89 தொகுதிகளுக்கு அமைதியான முறையில இன்று வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. இன்றைய தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 59.24 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 5 மணிக்கு முன்னதாக வந்து வரிசையில் காத்திருந்தவர்கள் வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டது. எனவே, இறுதி வாக்குப்பதிவு சதவீதம் சற்று அதிகமாக இருக்கும்.
தபி மாவட்டத்தில் அதிகபட்சமாக 72.32 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. பழங்குடியின மக்கள் அதிகம் உள்ள இந்த மாவட்டத்தில் வியாரா மற்றும் நிசார் ஆகிய தொகுதிகள் உள்ளன. நர்மதா மாவட்டத்தில் 68.09 சதவீத வாக்குகள் பதிவாகின. பாவ்நகரில் மிகக்குறைந்த அளவாக 51.34 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. நர்மதா தவிர நவ்சாரி (65.91 சதவீதம்), தாங் (64.84 சதவீதம்), வல்சாத் (62.46 சதவீதம்) மற்றும கிர் சோம்நாத் (60.46 சதவீதம்) ஆகிய மாவட்டங்களில் 60 சதவீதத்தை தாண்டி வாக்கு பதிவாகி உள்ளது.
முதற்கட்ட தேர்தலில் 70 பெண்கள் உள்பட மொத்தம் 788 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு வருகிற 5-ந்தேதி (திங்கட்கிழமை) தேர்தல் நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை 8- ந்தேதி நடக்கிறது.
நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி என மும்முனை போட்டி நிலவுகிறது
- அகமதாபாத்தில் இருந்து தொடங்கிய பிரசார பேரணி காந்திநகர் தெற்கு தொகுதியில் நிறைவடைகிறது.
- குஜராத்தில் 7வது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் முனைப்புடன் பாஜக களப்பணியாற்றி வருகிறது.
அகமதாபாத்:
குஜராத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதற்கட்ட தேர்தல் இன்று நடந்து முடிந்துள்ள நிலையில், இரண்டாம் கட்ட தேர்தல் வரும் 5ம் தேதி நடக்க உள்ளது. இதற்காக தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி வாகன பிரசாரத்தை இன்று தொடங்கினார். வாகன பிரசாரத்தில் அவருடன் ஏராளமான நிர்வாகிகள் அணிவகுத்து செல்கின்றனர். மொத்தம் 16 தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
அகமதாபாத்தின் நரோதா காமில் இருந்து தொடங்கிய பிரசார பேரணி காந்திநகர் தெற்கு தொகுதியில் நிறைவடைகிறது. 3 மணி நேரத்தில் 50 கிமீ தூரம் சென்று பிரசாரம் செய்கிறார் மோடி. இந்த பிரசாரத்தின்போது வழியில் உள்ள பண்டிட் தீனதயாள் உபாத்யாய், சர்தார் வல்லபாய் படேல் மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் நினைவிடங்களில் சிறிது நேரம் வாகனம் நிறுத்தப்பட்டு, பிரசாரம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
2017 சட்டமன்றத் தேர்தலில் 99 இடங்களைக் கைப்பற்றிய பாஜக, இந்த முறை அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று குஜராத்தில் 7வது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் முனைப்புடன் களப்பணியாற்றி வருகிறது. இந்த முறை, 182 இடங்களைக் கொண்ட குஜராத் சட்டசபையில், 140 இடங்களைக் கைப்பற்றும் நோக்கத்தில் உள்ளது.
டிசம்பர் 8-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும்.
- இளம் வாக்காளர்கள் முதன் முதலாக ஓட்டு போடுவதற்காக ஆர்வத்துடன் வந்திருந்தனர்.
- மாற்றுத்திறனாளிகள் ஓட்டு போட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
அகமதாபாத்:
பிரதமர் மோடி , மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரின் சொந்த மாநிலமான குஜராத்தில் 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது. மொத்தம் 182 சட்டசபை தொகுதிகளை கொண்ட குஜராத்தில் இன்று (1-ந்தேதி) முதல் கட்டமாக 19 மாவட்டங்களில் உள்ள 89 தொகுதிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடந்தது.
இதையொட்டி 14,382 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தது. இன்று காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டு போட்டு வருகின்றனர். பல வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் அதிகாலையில் இருந்தே ஜனநாயக கடமையாற்றுவதற்காக திரண்டு இருந்தனர். பெண்கள் ஓட்டுபோட அதிக ஆர்வம் காட்டினார்கள்.
இளம் வாக்காளர்கள் முதன் முதலாக ஓட்டு போடுவதற்காக ஆர்வத்துடன் வந்திருந்தனர். ஓட்டு போட்டபின் அவர்கள் கையில் வைத்த மையுடன் செல்போனில் செல்பி எடுத்து தங்கள் நண்பர்களுக்கு அனுப்பி மகிழ்ந்தனர்.
கிராம புறங்களில் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மாற்றுத்திறனாளிகள் ஓட்டு போட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
மத்திய பிரதேச கவர்னர் மங்குபாய் பட்டேல் தனது மனைவியுடன் நவ்காரி பகுதி வாக்குச்சாவடிக்கு வந்து ஓட்டு போட்டார்.
கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா மனைவி ரிவாபா ஜாம்நகர் வடக்கு தொகுதியில் பாரதிய ஜனதா சார்பில் போட்டியிடுகிறார். அவர் இன்று காலை ராஜ்கோடு வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார்.
காலை 9 மணி நிலவரப்படி 4.92 சதவீத ஓட்டுகளும், 11 மணி நிலவரப்படி 18.95 சதவீத ஓட்டுகளும் பதிவாகி இருந்தது.
பிற்பகல் 3 மணி நிலவரப்படி 48.48 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தன. தொடர்ந்து ஓட்டுப்பதிவு நடக்கிறது.
27,978 தலைமை அதிகாரிகளும்,78, 985 வாக்குப்பதிவு அதிகாரிகளும் தேர்தல் பணியில் ஈடுபட்டு உள்ளனர். வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு ஓட்டுப்பதிவு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
முதல் கட்ட தேர்தலையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பதட்டமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.
இன்று மாலை 5 மணியுடன் ஓட்டுப்பதிவு முடிவடைகிறது. பின்னர் ஓட்டு பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்புடன் ஓட்டு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
இன்று நடந்து வரும் முதல்கட்ட தேர்தலில் 70 பெண்கள் உள்பட மொத்தம் 788 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம் 2.39 கோடி வாக்காளர்கள் ஓட்டு போட உள்ளனர். இதில் ஆண்கள் 1,24 கோடி பேர். பெண்கள் 1.15 கோடி பேர். மூன்றாம் பாலினத்தவர்கள் 497 பேர் உள்ளனர்.
குஜராத்தில் மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு வருகிற 5-ந்தேதி (திங்கட்கிழமை) இறுதி கட்ட தேர்தல் நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை 8- ந்தேதி நடக்கிறது.
நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த தேர்தலில் மும்முனை போட்டி நிலவி உள்ளது. கடந்த 27 ஆண்டுகளாக யாரும் அசைக்க முடியாத அளவுக்கு பாரதிய ஜனதா தொடர்சியாக 6 முறை வெற்றி பெற்று சாதனை படைத்தது. இதனால் 7-வது தடவையாக வெற்றி கனியை பறிக்கும் வகையில் பா.ஜ.க. தீவிரமாக உள்ளது. அதற்கு ஏற்றாற் போல் அக்கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா, தேசிய தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் பா.ஜ.க. ஆளும் மாநிலத்தை சேர்ந்த முதல்-மந்திரிகள் , மத்திய மந்திரிகள் முகாமிட்டு வலுவான பிரசாரத்தை மேற்கொண்டனர்.
இன்று நடக்கும் சட்ட சபை தேர்தலில் பாரதிய ஜனதா, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் 89 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. கடும் போட்டியை ஏற்படுத்தி உள்ள ஆம் ஆத்மி கட்சி 88 தொகுதிகளில் களம் இறங்கி உள்ளது. இதைதவிர பகுஜன் சமாஜ் கட்சி பாரதிய பழங்குடியினர் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.
ஆம் ஆத்மி கட்சியின் முதல்-மந்திரி வேட்பாளர் இசுதான் கட்வி, அக்கட்சியின் மாநிலத்தலைவர் கோபால் இட்டாலியா, ரவீந்திரஜடஜாவின் மனைவி ரிவபா மற்றும் 5 முறை எம்.எல்.ஏ.வாக உள்ள புருஷோத்தமன் சோலங்கி உள்ளிட்டவர்கள் முக்கிய வேட்பாளர்கள் ஆவார்கள்.
இன்று தேர்தல் நடந்து வரும் கட்ச் மற்றும் சவுராஷ்டிரம் பகுதியில் மட்டும் 54 தொகுதிகள் உள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பாரதிய ஜனதா 23 இடங்களிலும் காங்கிரஸ் 30 இடங்களிலும் வெற்றி பெற்று இருந்தது.
இதனால் இந்த தொகுதிகளை மீண்டும் கைப்பற்ற இரு கட்சிகளும் மும்முரமாக பிரசாரத்தில் ஈடுபட்டது. தெற்கு குஜராத்தில் சூரத் மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் பாரதிய ஜனதா கட்சியின் கோட்டையாக திகழ்ந்து வருகிறது. இம்முறை ஆம் ஆத்மி கட்சியும் முழு பலத்துடன் களம் இறங்கி உள்ளதால் கடுமையான போட்டி நிலவி வருகிறது.
தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளில் பாரதிய ஜனதாவே மீண்டும் ஆட்சி அமைக்கும் என தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
- 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் பிரதமர் மோடி அழைப்பு.
- முதல் முறை வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை பதிவு எண்ணிக்கையில் பயன்படுத்துமாறு அழைக்கிறேன்.
குஜராத்தில் இன்று முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் அனைவரும் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
குஜராத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வாக்களிக்கும் அனைவரையும், குறிப்பாக முதல் முறை வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை பதிவு எண்ணிக்கையில் பயன்படுத்துமாறு அழைக்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
- குஜராத் முதல்கட்ட தேர்தல் நடக்கிற தொகுதிகளில் 14 ஆயிரத்து 382 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
- 89 தொகுதிகளிலும் தேர்தலை நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடத்துவதற்கு ஏதுவாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆமதாபாத்:
பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா ஆகியோரின் சொந்த மாநிலமான குஜராத்தில், 182 இடங்களை கொண்டுள்ள சட்டசபைக்கு டிசம்பர் 1, 5-ம் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது.
இந்த தேர்தல் மூலம் கால் நூற்றாண்டாக அங்கு நடக்கிற தனது ஆட்சியைத் தொடர்வதற்கு பா.ஜ.க. வரிந்து கட்டுகிறது. இழந்த ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் முழு முனைப்புடன் களம் இறங்கி இருக்கிறது. இவ்விரு கட்சிகளுக்கும் இடையே டெல்லி மற்றும் பஞ்சாபை ஆளும் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் களம் புகுந்து மும்முனை போட்டி நிலவுகிறது.
அங்கு முதல்கட்டமாக தெற்கு குஜராத், கட்ச்-சவுராஷ்டிரா பகுதிகளில் 19 மாவட்டங்களில் அமைந்துள்ள 89 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் இன்று நடக்கிறது. பா.ஜ.க.வும், காங்கிரசும் 89 தொகுதிகளிலும் தங்கள் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன. ஆம் ஆத்மி வேட்பாளர்கள் 88 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது.
இந்த தேர்தலில் மொத்தம் 788 வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது. இவர்களில், 339 பேர் சுயேச்சை வேட்பாளர்கள் 70 பேர் பெண் வேட்பாளர்கள் ஆவார்கள்.
இன்று தேர்தலை சந்திக்கிற முக்கிய வேட்பாளர்கள் பட்டியலில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்-மந்திரி வேட்பாளர் இசுதான் காத்வி (கம்பாலியா), மாநிலத்தலைவர் கோபால் இதாலியா (கட்டர்காம்), கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா (ஜாம்நகர் வடக்கு பா.ஜ.க.) இடம்பெற்றுள்ளனர்.
7 முறை எம்.எல்.ஏ. பதவி வகித்த பழங்குடி இனத்தலைவர் சோட்டு வசவா (ஜாகடியா-பாரதீய பழங்குடி கட்சி), 5 முறை எம்.எல்.ஏ.வாக இருந்த பர்சோத்தம் சோலங்கி (பாவ்நகர் ஊரகம்-பா.ஜ.க.) ஆகியோரும் இன்று தேர்தலை சந்திக்கிறார்கள்.
இன்று முதல் கட்ட தேர்தல் நடக்கிற தொகுதிகளில் 14 ஆயிரத்து 382 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 3,311 நகர்ப்புறங்களிலும், 11 ஆயிரத்து 71 கிராமப்புறங்களிலும் உள்ளன.
89 மாதிரி வாக்குச்சாவடிகளும், முற்றிலும் பெண் ஊழியர்கள் பணியாற்றும் 611 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் 2 கோடியே 39 லட்சத்து 76 ஆயிரத்து 670 வாக்காளர்கள் வாக்கு அளிக்க உள்ளனர்.
இந்நிலையில் குஜராத்தில் இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இடைவெளியின்றி 5 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. 89 தொகுதிகளிலும் தேர்தலை நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடத்துவதற்கு ஏதுவாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
- குஜராத்தில் 2-ம் கட்ட தேர்தல் வருகிற 5-ந்தேதி நடக்கிறது.
- வருகிற 8-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும்.
அகமதாபாத்:
குஜராத்தில் சட்டசபை தேர்தல் 2 கட்டங்களாக நடக்கிறது. பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரின் சொந்த மாநிலமான குஜராத்தில் மொத்தம் 182 சட்டசபை தொகுதிகள் உள்ளன.
இதில் 89 தொகுதிகளுக்கு நாளை (1-ந்தேதி) முதல்கட்ட தேர்தல் நடக்கிறது. மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு வருகிற 5-ந்தேதி 2-வது கட்ட தேர்தல் நடக்கிறது.
முதல்கட்ட தேர்தல் நடக்கும் இடங்களில் தெற்கு குஜராத், கட்ச், சவுராஷ்டிரா பகுதிகளில் உள்ள 19 மாவட்டங்கள் அடங்கும். இந்த பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே அனல் பறக்கும் தீவிர பிரசாரம் நடைபெற்றது.
குஜராத் தேர்தலில் ஆளும் பா.ஜனதா கட்சி, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளிடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் அனைத்து கட்சி தலைவர்களும் சூறாவளி பிரசாரம் செய்தனர். பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோர் பிரசாரம் செய்தனர்.
காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல்காந்தி, சத்தீஸ்கர் முதல்-மந்திரி பூபேஷ் பாகல், ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் ஆகியோர் பிரசாரம் செய்தனர்.
ஆம் ஆத்மி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா ஆகியோர் பிரசாரம் செய்தனர். நேற்று முக்கிய தலைவர்கள் இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 89 தொகுதிகளிலும் நேற்று மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது.
முதல்கட்ட தேர்தலில் பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகள் 89 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. புதிய வரவான ஆம் ஆத்மி கட்சி 88 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது.
சூரத் கிழக்கு தொகுதியில் அந்த கட்சியின் வேட்பாளர் கடைசி நாளில் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி 57 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பாரதிய பழங்குடியினர் கட்சி 14 தொகுதிகளிலும், சமாஜ்வாடி கட்சி 12 தொகுதிகளிலும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி 4 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. மேலும் 339 சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். மொத்தம் 788 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்களில் 70 பேர் பெண் வேட்பாளர்கள் ஆவர். பா.ஜனதா 9 பெண் வேட்பாளர்களையும், காங்கிரஸ் 6 பெண் வேட்பாளர்களையும், ஆம் ஆத்மி கட்சி 5 பெண் வேட்பாளர்களையும் நிறுத்தி உள்ளன.
நாளை நடைபெற உள்ள முதல் கட்ட தேர்தலில் முக்கிய வேட்பாளர்களான ஆம் ஆத்மி கட்சியின் முதல்-மந்திரி வேட்பாளர் இசுதான் கட்வி, கம்பாலியா தொகுதியிலும், முன்னாள் மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான பர்சோத்தம் சோலங்கி பாவ்நகர் புறநகர் தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள். மோர்பி பால விபத்தின் போது மீட்பு பணியில் ஈடுபட்டு பிரபலமடைந்த பா.ஜனதா முன்னாள் எம்.எல்.ஏ. காந்திலால் அம்ருதியா, மோர்பி தொகுதியிலும், பா.ஜனதா சார்பில் நிறுத்தப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவபா ஜாம்நகர் வடக்கு தொகுதியிலும், குஜராத் மாநில ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கோபால் இட்டாலியா, கதர்காம் தொகுதியிலும் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் ஆவர்.
குஜராத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 4 கோடியே 91 லட்சத்து 35 ஆயிரத்து 400 ஆகும். முதல்கட்ட தேர்தல் நடைபெறும் 89 தொகுதிகளில் 2 கோடியே 39 லட்சத்து 76 ஆயிரத்து 760 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 1 கோடியே 24 லட்சத்து 33 ஆயிரத்து 362 பேர் ஆண்கள். 1 கோடியே 15 லட்சத்து 42 ஆயிரத்து 811 பேர் பெண்கள். 497 பேர் மூன்றாம் பாலினத்தவர் ஆவர்.
முதல் கட்ட தேர்தலுக்காக 25 ஆயிரத்து 434 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 34 ஆயிரத்து 324 வாக்குப்பதிவு எந்திரங்கள், அதே எண்ணிக்கையிலான கட்டுப்பாட்டு கருவிகள், 38 ஆயிரத்து 749 வாக்கு ஒப்புகை சீட்டு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. 27 ஆயிரத்து 978 தலைமை அதிகாரிகள், 78 ஆயிரத்து 985 வாக்குப்பதிவு அதிகாரிகள் உள்ளிட்ட மொத்தம் 2 லட்சத்து 20 ஆயிரத்து 288 பேர் தேர்தல் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
குஜராத்தில் முதல்கட்ட தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. முதல்கட்ட தேர்தலையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. தேர்தல் பாதுகாப்பு பணியில் போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் ஈடுபடுகிறார்கள். பதட்டம் நிறைந்த வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்புகளும் போடப்பட்டுள்ளன.
குஜராத்தில் 2-ம் கட்ட தேர்தல் வருகிற 5-ந்தேதி நடக்கிறது. வருகிற 8-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும்.
- காங்கிரசாரின் வெறுப்புணர்வுக்கு கார்கேயின் பேச்சே உதாரணமாகிறது.
- கார்கே கூறியது கண்டனத்துக்கு உரியது.
அகமதாபாத்:
குஜராத் சட்டசபை தேர்தல், நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. நாளை (டிசம்பர் 1-ந் தேதி) முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது.
ஆமதாபாத் நகரில் நடந்த காங்கிரஸ் பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசினார்.
அனல் வீசிய அவரது பேச்சில், பிரதமர் மோடியை, ராவணனுடன் ஒப்பிட் டார். அவர் பேசியதாவது:-
பிரதமர் மோடி, மக்களிடம் எல்லாவற்றையும் புறக்கணித்து விட்டு, உங்கள் கண்களில் என் முகத்தை நிறுத்தி, பா.ஜ.க.வுக்கு ஓட்டு போடுங்கள் என்கிறார். நாங்கள் எத்தனை முறைதான் உங்கள் முகத்தைப் பார்ப்பது? உங்கள் முகத்தை மக்கள் மாநகராட்சி தேர்தலில் பார்க்கிறார்கள். அடுத்து சட்டசபை தேர்தலின்போது பார்க்கிறார்கள். நாடாளுமன்ற தேர்தலின்போதும் பார்க்கிறார்கள். எல்லா இடங்களிலும் உங்கள் முகத்தை நாங்கள் பார்க்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். ஏன்? உங்களுக்கு எத்தனை முகங்கள் இருக்கின்றன? நீங்கள் என்ன 100 தலைகளைக் கொண்ட ராவணனா?
இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார்.
இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
குஜராத் முதல்-மந்திரி பூபேஷ் படேல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், "குஜராத் மக்கள் மீதான அவர்களின் (காங்கிரசாரின்) வெறுப்புணர்வுக்கு கார்கேயின் பேச்சே உதாரணமாகிறது. அவர்கள் நடந்துகொள்ளும் விதத்துக்காக இந்த முறையும் குஜராத் மக்கள் அவர்களை நிராகரிப்பார்கள்" என கூறி உள்ளார்.
இதை பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் சம்பிட் பத்ரா சாடி உள்ளார்.
அவர், "காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா மற்றும் ராகுல் காந்தியின் கருத்துகளை பிரதிபலிக்கிறார் கார்கே. 2007-ல் நடந்த குஜராத் சட்டசபை தேர்தலின்போது சோனியா, மோடியை மரண வியாபாரி என அழைத்து இத்தகைய தனிப்பட்ட தாக்குதலை தொடங்கினார். கார்கே கூறியது கண்டனத்துக்கு உரியது. அவரது வார்த்தைகள், பிரதமர் மோடி மீதான அவமதிப்பு மட்டுமல்ல, ஒவ்வொரு குஜராத்தி மீதான அவமதிப்பும் ஆகும்" என தெரிவித்தார்.
- குஜராத்தில் முதல் கட்டமாக 89 தொகுதிகளில் டிசம்பர் 1-ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது.
- ஆம் ஆத்மி கட்சியும் 181 வேட்பாளர்களை களமிறக்கி உள்ளதால் அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது.
அகமதாபாத்:
182 இடங்களைக் கொண்ட குஜராத் சட்டசபைக்கு டிசம்பர் 1 மற்றும் 5-ம் தேதி என இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக 89 தொகுதிகளில் 1-ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது.
பா.ஜ.க., காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி ஆகியவை போட்டியிடுவதால் அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது.
இந்த தேர்தலில் மொத்தம் போட்டியிடுகிற 1,621 வேட்பாளர்களில் 139 பேர் பெண்கள். அவர்களில் 38 பேர் மட்டுமே 3 முக்கிய அரசியல் கட்சிகளின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
சூரத் நகரில் பிரதமர் மோடி ஓட்டு வேட்டையாடினார். சூரத் விமான நிலையத்தில் இருந்து மோட்டா வரச்சா என்ற இடம் வரையில் 25 கி.மீ. தொலைவுக்கு பிரமாண்ட வாகன பேரணி (ரோடு ஷோ) நடத்தி ஆதரவு திரட்டினார்.
காங்கிரசுக்காக சத்தீஸ்கர் முதல் மந்திரி பூபேஷ் பாகல், பாலிடானா என்ற இடத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.
ஆம் ஆத்மிக்காக, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் சூரத்தில் முற்றுகையிட்டு தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டார்.
இந்நிலையில், குஜராத்தில் முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 89 தொகுதிகளில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வந்தது.
- குஜராத்தில் முதல் கட்ட தேர்தல் டிசம்பர் 1-ம் தேதி நடைபெறுகிறது.
- குஜராத்தின் மகனை காங்கிரஸ் அவமதித்து விட்டது என பா.ஜ.க. கண்டனம் தெரிவித்தது.
அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓயும் நிலையில், அங்கு தேர்தல் பிரச்சாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில், அகமதாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
மாநகராட்சி தேர்தலாக இருந்தாலும் சரி, எம்.எல்.ஏ. தேர்தலாக இருந்தாலும் சரி, எம்.பி. தேர்தலாக இருந்தாலும் சரி. அனைத்து இடங்களிலும் மோடியின் முகம்தான் உள்ளது.
உங்கள் முகத்தை நாங்கள் எத்தனை முறைதான் பார்ப்பது? உங்களுக்கு எத்தனை வடிவங்கள் உள்ளன? ராவணனுக்கு 10 தலை இருந்தது போல் மோடிக்கு 100 தலையா இருக்கு? என காட்டமாக கேள்வி எழுப்பினார்.
குஜராத்தின் மகனை காங்கிரஸ் அவமதித்து விட்டது என பா.ஜ.க. கண்டனம் தெரிவித்துள்ளது.
- குஜராத்தில் 7-வது முறையாக ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள பா.ஜனதா தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
- கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களை விட இந்த தேர்தலில் பிரதமர் மோடி அதிக நாட்கள் முகாமிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
காந்திநகர்:
குஜராத்தில் கடந்த 1995-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 6 முறையாக பா.ஜனதா ஆட்சியே நடந்து வருகிறது.
தற்போது குஜராத்தில் 7-வது முறையாக ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள பா.ஜனதா தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களை விட இந்த தேர்தலில் பிரதமர் மோடி அதிக நாட்கள் முகாமிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
பா.ஜனதா வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், 20 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும். பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும். 100 இடங்களில் ரூ.5-க்கு உணவு வழங்கப்படும். கல்லூரி மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டர், பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.
இதில் 5 ரூபாய்க்கு உணவு வழங்கப்படும் என்ற பா.ஜனதாவின் அறிவிப்புக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும். விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும். மாதத்துக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.
ஆம் ஆத்மியின் தேர்தல் அறிக்கையில், டெல்லியில் அமல்படுத்தப்பட்டுள்ள அனைத்து மானிய திட்டங்களும் குஜராத்திலும் அமல் படுத்தப்படும்.
கல்வி, சுகாதார சேவைகள் இலவசமாக வழங்கப்படும். 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.
வருகிற 1-ந்தேதி முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் நிலையில் குஜராத் தேர்தல் களத்தில் விறுவிறுப்பு ஏற்பட்டுள்ளது.






