என் மலர்
இந்தியா

பிரதமர் மோடி
நாட்டின் எதிர்காலத்திற்கு ஏற்ற கல்வி முறையை மத்திய அரசு உருவாக்கி வருகிறது- பிரதமர் மோடி
- நாட்டில் கல்வி உள்கட்டமைப்பை விரிவுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
- குருகுல கல்வி முறை மாணவர்களை நற்பண்புகளுடன் மேம்படுத்துகிறது.
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சுவாமி நாராயண் குரு குல நிறுவனத்தின் 75வது ஆண்டு விழாவில் காணொலி மூலம் பிரதமர் உரையாற்றினார் அப்போது அவர் கூறியுள்ளதாவது:
நமது குருகுலங்கள் பல நூற்றாண்டுகளாக சமத்துவம், சேவை உணர்வை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. புதிய கண்டுபிடிப்பும் ஆராய்ச்சியும் இந்திய வாழ்க்கை முறையின் ஒரு அங்கமாக இருந்தது. இந்தியாவின் ஒளிமயமான எதிர்காலத்தை வடிவமைப்பதில் கல்வி அமைப்பு மற்றும் கல்வி நிறுவனங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன.
நாட்டில் கல்வி உள்கட்டமைப்பை விரிவுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது ஐஐடி, ஐஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் ஆகியவற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 2014க்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடும்போது அறுபத்தைந்து சதவீதம் அதிகரித்துள்ளது. புதிய கல்விக் கொள்கையின் மூலம், நாடு எதிர்காலத்திற்கு ஏற்ற கல்வி முறையை உருவாக்கி வருகிறது. இதன் விளைவாக, புதிய முறையில் கல்வி கற்கும் புதிய தலைமுறையினர் நாட்டின் சிறந்த குடிமக்களாக மாறுவார்கள்.
குருகுல கல்வி முறை மாணவர்களை நல்ல எண்ணத்துடனும், நற்பண்புகளுடனும் மேம்படுத்துகிறது. குருகுல கல்வி முறையில் படிக்கும் மாணவர்கள் குறைந்தபட்சம் 15 நாட்களுக்கு வடகிழக்கு இந்தியாவுக்குப் பயணம் செய்து, தேசத்தை மேலும் வலுப்படுத்த மக்களுடன் இணைய வேண்டும். பெண் குழந்தைகளைப் பாதுகாத்தல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றுடன் ஒரே பாரதம் உன்னத பாரதத்தின்கீழ் மக்கள் ஒன்றிணைய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.






