என் மலர்
குஜராத்
- மத்திய மந்திரி ஜெய்சங்கர் குஜராத்தில் போட்டியிடுகிறார்.
- குஜராத்தில் 3 மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கு தேர்தல் நடக்கிறது.
காந்திநகர் :
கோவா, குஜராத், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 10 எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. அதனால் அந்த இடங்களை நிரப்ப இம்மாதம் 24-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
பதவிக்காலம் முடிவடையும் எம்.பி.க்களில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரும் ஒருவர். அவர், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, குஜராத் சட்டசபையில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடன், குஜராத்தில் இருந்து மாநிலங்களவைக்கு பா.ஜனதா சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜுகல்ஜி தாகோர், தினேஷ் அனவாடியா ஆகியோரின் பதவிக்காலமும் முடிவடைகிறது.
எனவே, குஜராத்தில் 3 மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கு தேர்தல் நடக்கிறது.
இந்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மீண்டும் குஜராத்தில் போட்டியிட பா.ஜனதா மேலிடம் வாய்ப்பு அளித்துள்ளது. அதன்படி, ஜெய்சங்கர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
அவருடன் குஜராத் மாநில முதல்-மந்திரி பூபேந்திர படேல், மாநில பா.ஜனதா தலைவர் சி.ஆர்.பட்டீல் ஆகியோரும் சட்டசபை வளாகத்துக்கு வந்தனர். அவர்கள் முன்னிலையில், தேர்தல் அதிகாரி ரீட்டா மேத்தாவிடம் ஜெய்சங்கர் வேட்புமனுவை அளித்தார்.
பின்னர், ஜெய்சங்கர் நிருபர்களுக்கு அளித்த ேபட்டியில் கூறியதாவது:-
மாநிலங்களவைக்கு குஜராத்தில் இருந்து போட்டியிட எனக்கு மீண்டும் வாய்ப்பு அளித்ததற்காக பிரதமர் மோடி, பா.ஜனதா தலைமை மற்றும் குஜராத் மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
பிரதமர் மோடி தலைமையில் கடந்த 4 ஆண்டுகளில் வெளியுறவு கொள்கையில் செய்யப்பட்ட மாற்றங்களில் நானும் ஒரு அங்கமாக இருந்துள்ளேன். நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிப்பேன் என்று நம்புகிறேன்.
மோடி ஆட்சியில் கடந்த 9 ஆண்டுகளில் நேபாளம், பூடான், வங்காளதேசம், இலங்கை ஆகிய அண்டை நாடுகளுடான உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வர்த்தகம் மற்றும் போக்குவரத்தை அதிகரித்துள்ளோம். பாதுகாப்பு அம்சத்திலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
ஒரு அண்டை நாடு, பயங்கரவாத அச்சுறுத்தல் விடுத்துள்ளது. நாம் அந்த சவாலை வலிமையாக எதிர்கொண்டுள்ளோம். நாட்டை பாதுகாப்பாக வைத்திருக்க முடியும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
மீதம் உள்ள 2 இடங்களுக்கு பா.ஜனதா இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு போதிய எம்.எல்.ஏ.க்கள் இல்லாததால், இந்த தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தவில்லை.
இதுபோல், மேற்கு வங்காளத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளும் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த செய்தித்தொடர்பாளர் டெரிக் ஓ பிரையன், டோலா சென், சுகேந்து சேகர் ரே, சுஷ்மிதா தேவ், சாந்தா சேத்ரி உள்பட 6 பேரின் பதவிக்காலம் முடிவடைவதால், 6 காலியிடங்களுக்கு தேர்தல் நடக்கிறது.
6 இடங்களுக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நேற்று வேட்பாளர்களை அறிவித்தது.
டெரிக் ஓ பிரையன், டோலா சென், சுகேந்து சேகர் ரே, சமிருல் இஸ்லாம், பிரகாஷ் சிக் பரைக், சாகேத் கோகலே ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
- ராகுல் காந்தி மீது 10-க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் நாடு முழுவதும் நிலுவையில் உள்ளன.
- புனே கோர்ட்டில் சாவர்கர் மகன் தொடுத்துள்ள மனுவும் நிலுவையில் இருக்கிறது.
அகமதாபாத்:
கர்நாடக மாநிலத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மோடி பெயர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார்.
இதுதொடர்பாக ராகுல் காந்தி மீது குஜராத் பா.ஜ.க. எம்.எல்.ஏ. பூர்னேஷ் மோடி குற்றவியல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் பெருநகர மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. அதனால் அவர் தனது மக்களவை எம்.பி. பதவியை இழந்தார்.
அதை எதிர்த்து சூரத் செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த ராகுல் காந்தி, அவதூறு வழக்கு தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க கோரி மனு தாக்கல் செய்தார்.
ஆனால் அவருக்கு ஜாமீன் வழங்கிய செசன்ஸ் கோர்ட்டு, தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது. அதையடுத்து குஜராத் ஐகோர்ட்டை ராகுல் காந்தி நாடினார்.
கடந்த மே மாதம் நடந்த விசாரணையின்போது, அவதூறு வழக்கு தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்த ஐகோர்ட்டு நீதிபதி ஹேமந்த் பிரச்சாக், கோடைகால விடுமுறைக்குப்பின் இறுதித்தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்தார்.
இந்த நிலையில் குஜராத் ஐகோர்ட்டு நேற்று வெளியிட்ட வழக்கு அட்டவணையின்படி, ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கில் இன்று (வெள்ளிக்கிழமை) பகல் 11 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்பட்டது. தீர்ப்பில் நீதிபதி கூறி இருப்பதாவது:-
ராகுல் காந்தி மீது 10-க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் நாடு முழுவதும் நிலுவையில் உள்ளன. புனே கோர்ட்டில் சாவர்கர் மகன் தொடுத்துள்ள மனுவும் நிலுவையில் இருக்கிறது. இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ள வேண்டி உள்ளது.
ராகுல் காந்திக்கு சூரத் கோர்ட்டு வழங்கிய 2 ஆண்டு சிறை தண்டனை தீர்ப்பு சரியானதுதான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே அந்த தீர்ப்பில் ஐகோர்ட்டு தலையிட முடியாது.
மேலும் இந்த வழக்கில் 2 ஆண்டு தண்டனை விதிப்பது என்பது நியாயமானதும் கூட. சரியானது. சட்டபூர்வமான ஒன்றாகவும் இதை கருதலாம்.
2 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை கேட்ட மனுதாரர் அதற்கு உரிய காரணங்களை குறிப்பிடவில்லை. அவர் தெரிவித்துள்ள காரணங்களை கோர்ட்டால் ஏற்க இயலாது.
எனவே ராகுலின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. 2 ஆண்டு தண்டனையை நிறுத்தி வைக்க இயலாது.
இவ்வாறு நீதிபதி கூறினார்.
குஜராத் கோர்ட்டு தீர்ப்பு குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது:-
ராகுல் காந்திக்கு அளிக்கப்பட்டுள்ள 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்திவைக்க குஜராத் ஐகோர்ட்டு மறுத்தது எதிர்பார்த்ததுதான். குஜராத் மண்ணில் ஒருபோதும் நீதி கிடைக்காது.
சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும். அங்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜ.க. தலைவர் நாராயணன் திருப்பதி கூறுகையில், 'கேர்ட்டு தீர்ப்பை ராகுல் தலைவணங்கி ஏற்க வேண்டும்' என்றார்.
- சுவர் இடிந்து விழுந்தது உள்ளிட்ட மழை பாதிப்புகளால் இதுவரை 11 பேர் பலியாகி உள்ளனர்.
- இன்றும் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
குஜராத் மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் கடந்த 2 நாட்களுக்கு மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நகரம், கிராமங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியுள்ளது. கனமழை, மிக கனமழை காரணமாக ஜூனாகத், ஜாம்நகரர், மோர்பி, கட்ச், சூரத் மற்றும் கபி மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
அகமதாபாத் உள்ளிட்ட நகரங்களில் சாலைகளில் மழைநீர் சூழ்ந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது. 37 தாலுகாக்களில் 100 மில்லி மீட்டருக்கு மேலாக மழை பதிவாகி உள்ளது. ஜூனாகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 398 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
சுவர் இடிந்து விழுந்தது உள்ளிட்ட மழை பாதிப்புகளால் இதுவரை 11 பேர் பலியாகி உள்ளனர்.
கட்ச், நவ்காரி, ஜாம்நகர், ஜூனாகத் ஆகிய மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும், மாநில மீட்பு குழுவினரும் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கிய மக்கள் ரப்பர் படகு மூலம் மீட்கப்பட்டு வருகிறார்கள்.
வெள்ளம் அதிகமாக காணப்பட்டதால் இந்திய விமான படையின் ஹெலிகாப்டர்களும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளன. ஜூனாகத் மாவட்டம் சட்ரெஜ் கிராமத்தில் வெள்ளத்தில் தவித்தவர்கள் விமான படை ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.
இன்றும் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
ஜூனாகத், அம்ரேலி, நவ்காரி, வல்சாத் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 5-ந் தேதி வரை குஜராத்தில் லேசானது முதல் மிதமான மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள பச்சாம் என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நடந்தது.
- இந்த சம்பவத்தில் இரு தரப்பிலும் 10 பேர் காயமடைந்தனர்.
ஆமதாபாத் :
பெண்ணின் உள்ளாடை திருட்டு விவகாரம், கோஷ்டி மோதலாக மாறி மண்டை உடைப்பு வரை போயிருக்கிறது.
இந்த சம்பவம் நடந்தது, குஜராத் மாநிலம் ஆமதாபாத் மாவட்டத்தில் உள்ள பச்சாம் என்ற கிராமத்தில்.
அங்கு வசிக்கும் ஒரு 30 வயது பெண், மொட்டை மாடியில் காயப்போடும் தனது உள்ளாடைகள் தொடர்ந்து காணாமல் போனதால் திகைத்து வந்தார். ஒரு நாள், இரு நாளல்ல... கடந்த 8 மாதங்களாக இந்த உள்ளாடைத் திருட்டு நடந்துவந்திருக்கிறது.
வெறுத்துப்போன அந்தப் பெண், தானே ஒரு ரகசிய கேமரா நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்தார். தனது செல்போன் வீடியோவை 'ஆன்' செய்து மாடியில் ரகசியமாக மறைத்துவைத்தார். பின்னர் அவர் அதை எடுத்து பார்த்தபோது, காயப்போட்ட உள்ளாடைகளை உருவிச் சென்றது பக்கத்து வீட்டுக்காரர்தான் என தெரியவந்தது.
மறுநாள் தானே மறைந்திருந்து கண்காணித்த அந்தப் பெண், உள்ளாடைகளை பக்கத்து வீட்டுக்காரர் திருடுவதை நேரில் கண்டார். அந்த நபரை பின்தொடர்ந்து அவரது வீட்டுக்குள் சென்று பார்த்த அந்தப் பெண், அதிர்ந்தார்.
அங்கு மலை போல அவரது உள்ளாடைகளை அந்த ஆசாமி குவித்து வைத்திருந்தார்.
அதுகுறித்து அந்த நபரிடம் அப்பெண் விசாரித்தார். தனது குட்டு உடைபட்டதால் கோபமடைந்த அவர், அந்தப் பெண்ணை தாக்கினார். அவரை மானபங்கம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
அந்தப் பெண்ணின் அழுகுரல் கேட்டு அங்கு வந்த அவரது குடும்பத்தினர், பக்கத்து வீட்டுக்காரரையும், தட்டிக் கேட்ட அவரது குடும்பத்தினரையும் தடிகளால் நையப் புடைத்தனர்.
சிறிது நேரம் கழித்து சுதாரித்த உள்ளாடை திருட்டு பேர்வழியின் உறவினர்கள், உள்ளாடைகளை இழந்த பெண்ணின் குடும்பத்தினர் மீது எதிர்த்தாக்குதல் தொடுத்தனர்.
கோஷ்டி மோதலாக மாறிய இந்த சம்பவத்தில் இரு தரப்பிலும் 10 பேர் காயமடைந்தனர். சிலருக்கு மண்டை உடைந்தது. பரஸ்பர புகாரின் பேரில், இரு தரப்பிலும் 20 பேரை கைது செய்து போலீசார் விசாரித்துவருகின்றனர்.
- கடந்த 30 மணி நேரத்தில் பல இடங்களில் 200 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பதிவாகியுள்ளது.
- அகமதாபாத் உள்பட பல்வேறு நகரங்களில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.
அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கடந்த 30 மணி நேரத்தில் பல இடங்களில் 200 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பதிவாகியுள்ளது.
கட்ச் பகுதியில் பலத்த மழை காரணமாக, காந்திதாம் ரெயில் நிலையத்தில் மழைநீர் புகுந்தது. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். கனமழை தொடர்பான விபத்துகளில் கடந்த 3 நாளில் 9 பேர் பலியாகி உள்ளனர்.
ஜூனாகத், ஜாம்நகர், கட்ச், வல்சாத், நவ்சாரி, மெஹ்சானா மற்றும் சூரத் ஆகிய இடங்களில் பல கிராமங்கள் மற்றும் நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின.
அகமதாபாத் உள்பட பல்வேறு நகரங்களின் முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
- குஜராத் மாநிலத்தின் சோம்நாத் மாவட்டத்தில் உள்ளது கிர் தேசிய பூங்கா.
- இது உலகப் புகழ்பெற்ற ஆசிய சிங்கங்களுக்கான தேசியப் பூங்கா ஆகும்.
அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தின் சோம்நாத் மாவட்டத்தில் உள்ளது கிர் தேசிய பூங்கா. இது உலகப் புகழ்பெற்ற ஆசிய சிங்கங்களுக்கான தேசியப் பூங்கா ஆகும்.
இந்நிலையில், கிர் வனப்பகுதியில் சிங்கம் ஒன்று பசு மாடு ஒன்றை இரையாக்க முயற்சித்தது. இதனைக் கண்ட பசுவின் உரிமையாளர் தடுத்துக் காப்பாற்றிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதுதொடர்பான வீடியோவை பா.ஜ.க.வை சேர்ந்த விவேக் கோடாடியா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில், சாலையில் மேய்ந்து கொண்டிருந்த பசுமாட்டை பெண் சிங்கம் ஒன்று தாக்குகிறது. பசு மாட்டின் கழுத்தை இறுகப் பிடித்துக்கொண்ட அந்தச் சிங்கம் அதை இழுக்க முயற்சிக்கிறது.
அச்சமயம் அங்கு வந்த பசு மாட்டின் உரிமையாளரான விவசாயி திடீரென ஒரு செங்கலை எடுத்து சிங்கத்தை நோக்கி வீசினார். இதைக் கண்டதும் சிங்கம் பிடியை தளர்த்துவிட்டு காட்டுக்குள் ஓடுகிறது. பசுவும் உயிர் பிழைக்கிறது.
இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. பசுவைக் காப்பாற்றிய விவசாயியை பலரும் பாராட்டி வருகின்றனர்.
- வீடியோ காட்சிகள் வைரலானதை தொடர்ந்து அகமதாபாத் போலீசார் ஸ்கூட்டர் எண்ணை வைத்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட வாலிபரை கைது செய்தனர்.
- வாலிபர் தனது சாகச பயணத்தின் போது ஹெல்மெட் கூட அணிந்திருக்கவில்லை.
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் பரபரப்பான சிந்து சாலையில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் நடுரோட்டில் சாகசம் செய்வது போன்று வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின. அதில், சாலையில் ஸ்கூட்டரை ஓட்டி சென்ற வாலிபர் திடீரென அதன் மீது ஏறி நின்று பயணம் செய்வது போன்றும், ஆபத்தான முறையில் சென்றதால் முன்னால் சென்ற கார் மீது மோதுவது போலவும் காட்சிகள் இருந்தன.
மேலும் ஸ்கூட்டர், கார் மீது மோத இருந்த நேரத்தில் அந்த வாலிபர் ஹேண்டில்பாரை பிடித்து மீண்டும் இருக்கைக்கு வந்து ஸ்கூட்டரை ஓட்டுவது போன்றும் இருந்த காட்சிகள் இணைய பயனர்களை பதைபதைக்க வைத்தது. இந்த காட்சிகள் வைரலானதை தொடர்ந்து அகமதாபாத் போலீசார் ஸ்கூட்டர் எண்ணை வைத்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட வாலிபரை கைது செய்தனர். அவர் தனது சாகச பயணத்தின் போது ஹெல்மெட் கூட அணிந்திருக்கவில்லை. அதற்கும் சேர்த்து அபராதம் விதித்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
- அக்டோபர் 15-ந்தேதி இந்தியா- பாகிஸ்தான் அணிகள் அகமதாபாத்தில் மோதல்
- 3 ஆயிரம் ரூபாயாக இருந்த வாடகை 27,233 ஆக உயர்த்தப்பட்டுள்ளது
ஐசிசி உலகக்கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அக்டோபர் மாதம் 5-ந்தேதி தொடங்கி நவம்பர் 19-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்கான அட்டவணை நேற்றுமுன்தினம் வெளியிடப்பட்டது.
இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் அக்டோபர் 15-ந்தேதி நடைபெறுகிறது.
போட்டி அட்டவணை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதும் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் குறித்து ரசிகர்கள் பேச ஆரம்பித்துவிட்டனர். அகமதாபாத் மைதானத்தில் சுமார் ஒரு லட்சம் ரசிகர்கள் அமர்ந்து போட்டியை ரசிக்கலாம். இதனால் அன்றைய தினம் அகமதாபாத் ரசிகர்கள் படையால் திருவிழா போன்று ஜொலிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இதற்கிடையே ரசிகர்கள் அக்டோபர் 15-ந்தேதி அகமதாபாத்தில் கூடும் வாய்ப்பை பயன்படுத்தி அங்குள்ள நட்சத்திர ஓட்டல்கள் ரூம் வாடகைகளை தாறுமாறாக உயர்த்தியுள்ளன.
5 ஆயிரம் ரூபாய் வாடகை கொண்ட ரூம் வாடகை, அக்டோபர் 15-ந்தேதியன்று 10 மடங்கு அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் ரூம்கள் புக் செய்யும் இணையதளம் மூலம் இந்த உயர்வு தெரியவந்துள்ளது. அப்படி விலை உயர்த்தப்பட்ட நிலையிலும் ரூம்கள் அனைத்தும் புக் ஆகிவிட்டதாக தெரிகிறது.
ஆடம்பர ஓட்டல்களில் ஒருநாள் ரூம் வாடகை 5 ஆயிரம் ரூபாய் முதல் 8 ஆயிரம் ரூபாய் வரை அகமதாபாத் நகரில் இருக்கிறது. தற்போது அந்த வாடகை 40 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
அகமதாபாத் நகரில் உள்ள ஐடிசி ஓட்டல்களின் வெல்கம் ஓட்டலில் ஜூலை 2-ந்தேதி ரூம் வாடகை 5,699 ரூபாய். அதுவே அக்டோபர் 15-ந்தேதி 71,999 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
எஸ்.ஜி. ஹைவேயில் உள்ள ரெனாய்ஸ்சான்ஸ் அகமதாபாத் ஓட்டலில் தற்போது 8 ஆயிரம் ரூபாயாக உள்ளது. அதுவே அக்டோபர் 15-ந்தேதி 90,679 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. பிரைடு பிளாசா ஓட்டல், ரூம் வாடகையை 36,180 ரூபாயாக உயர்த்தியுள்ளது.
பட்ஜெட் விலையான 3 ஆயிரம் ரூபாயாக இருந்த வாடகை 27,233 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
விலை விண்ணைத்தொடும் அளவிற்கு உயர்ந்தாலும் பல நட்சத்திர ஓட்டல்களில் ரூம்கள் அனைத்தும் புக் ஆகிவிட்டதாம்.
ஓட்டல் மற்றும் ரெஸ்டாரன்ட் சங்கத்தின் அதிகாரி ஒருவரிடம் இதுகுறித்து கேட்டபோது. வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் மற்றும் வெளி மாநிலங்களில் வசிக்கும் உயர் நடுத்தர இந்திய ரசிகர்கள் அதிக அளவில் ரூம்களை புக் செய்ய ஆர்வம் காட்டி வருவதால் வாடகை உயர்த்தப்பட்டள்ளது.
குறிப்பிட்ட நாளில் தேவை மிகவும் அதிகமாக இருப்பதால், ஓட்டல் உரிமையாளர்கள் வாடகையை உயர்த்தி கூடுதல் வருமானம் பார்க்கலாம் என நினைத்திருக்கலாம். விலை உயர்த்தப்பட்டாலும் ரூம்கள் அனைத்தும் நிரம்பி விடும் என்பதில் அவர்கள் உறுதியாக இருப்பதுதான் அதற்கு காரணம். தேவை குறைந்தால் வாடகை தானாக குறைக்கப்படும்.
இந்தியா- பாகிஸ்தான் போன்ற சுவாரஸ்ரமான கிரிக்கெட் போட்டியை பார்க்க வெகு தூரத்தில் இருந்து வர தயங்காத ரசிகர்கள் ஆடம்பர ஓட்டல்களை விரும்புகின்றனர்'' என்றார்.
நட்சத்திர அந்தஸ்து இல்லாத ஓட்டல்களில் ரூம் வாடகை பெரிய அளவில் உயர்த்தப்படவில்லை. போட்டி நாள் நெருங்கும் நேரத்தில் வாடகை உயர்வுக்கு வாய்ப்புள்ளது.
- தெருவோர வியாபாரி தனது வாடிக்கையாளர்களுக்கு வாழைப்பழம் கலந்து பானிபூரி தயார் செய்து வழங்குகிறார்.
- வீடியோவை பார்த்த பயனர்கள் கடும் விமர்சன கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
வட இந்திய உணவு வகைகளில் ஒன்றான பானிபூரி தற்போது நாடு முழுவதும் மக்கள் விரும்பி சாப்பிடும் ஒன்றாக மாறி வருகிறது. குறிப்பாக சிறுவர்களை அதிகம் கவர்ந்துள்ள பானிபூரிக்கு வேக வைத்த உருளைக்கிழங்கு, புளிப்பு, காரம் கலந்த மசாலா தண்ணீர் சேர்த்து வழங்கப்படும். சிலர் பானிபூரிக்கு கூடுதலாக வெங்காயம் சேர்த்து சாப்பிடுவார்கள். சமூக வலைதளங்களில் பானிபூரி தயாரிப்பு தொடர்பாக பல்வேறு வீடியோக்கள் வெளியாகிறது. அவற்றில் சில வீடியோக்கள் உணவு பிரியர்களிடையே கடும் விமர்சனங்களை சந்திக்கிறது. அது போன்ற ஒரு வீடியோ தற்போது பரவி வருகிறது.
குஜராத்தை சேர்ந்த முகம்மது பியூச்சர் வாலா என்ற டுவிட்டர் பயனரால் பகிரப்பட்ட அந்த வீடியோவில், தெருவோர வியாபாரி தனது வாடிக்கையாளர்களுக்கு வாழைப்பழம் கலந்து பானிபூரி தயார் செய்து வழங்குவதை காண முடிகிறது. வேக வைத்த உருளைக்கிழங்கிற்கு பதிலாக அவர் வாழைப்பழங்களை பயன்படுத்தி உள்ள நிலையில், வீடியோவை பார்த்த பயனர்கள் கடும் விமர்சன கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அதில் ஒரு பயனர், என்னடா இது பானிபூரிக்கு வந்த சோதனை என பதிவிட்டுள்ளார்.
Hurting the food sentiments of Pani Puri lover's on the TL
— Mohammed Futurewala (@MFuturewala) June 22, 2023
Presenting Banana Chana Pani Puri? pic.twitter.com/961X9wnuLz
- விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர்.
- இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 3 பெண்கள் உட்பட 5 பேரை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.
குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள சாதனா காலனி பகுதியில் 30 ஆண்டுகள் பழைமையான கட்டிடம் ஒன்று பாழடைந்த நிலையில் இருந்தது.
இந்த நிலையில் இந்த கட்டிடம் நேற்று திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் ஜெய்பால் ஸ்வாதியா (35), மிட்டல் ஸ்வாதியா (35), சிவராஜ் (4) என அடையாளம் காணப்பட்டனர்.
இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 3 பெண்கள் உட்பட 5 பேரை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.
அவர்கள் குருகோபிந்த் சிங் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இடிபாடுகளுக்குள் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என தெரியவந்ததை அடுத்து தேடுதல் மற்றும் மீட்பு பணியை மேற்கொள்ள நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
- குஜராத் முதலமைச்சருடன் இணைந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு மேற்கொண்டார்.
- குஜராத்தில் புயலின் சேதம் குறித்து ஆய்வு செய்த பிறகு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேட்டி அளித்தார்.
அரபிக்கடலில் கடந்த 5-ந் தேதி உருவான பிபோர்ஜோய் புயல் அதிதீவிர புயலாக உருமாறியது. இது நேற்று மாலை குஜராத் மாநிலம் ஜாகவ் துறைமுகம் அருகே கரையை கடந்தது.
பிபோர்ஜோய் புயலின் கோர தாண்டவத்தில் ஜாகவ் துறைமுக பகுதி, பவ்நகர் மாவட்டங்களில் சுமார் 940 கிராமங்களில் கடும்பாதிப்பு ஏற்பட்டது. இங்குள்ள கட்டிடங்களின் கூரைகள் தூக்கி வீசப்பட்டன. ராட்சத மரங்களும் வேரோடு சரிந்து விழுந்தது.
சிறியதும், பெரியதுமாக சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்தது. மேலும் சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் 500-க்கும் மேற்பட்ட மின்கம்பங்களும் சரிந்து விழுந்தன. மரங்கள், மின்கம்பங்கள், கட்டிடங்கள் இடிந்ததில் அப்பகுதியில் இருந்த வாகனங்களும் சேதமானது.
இதைதொடர்ந்து, புயலால் குஜராத் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை குஜராத் முதலமைச்சருடன் இணைந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு மேற்கொண்டார்.
குஜராத்தில் புயலின் சேதம் குறித்து ஆய்வு செய்த பிறகு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:- பிபர்ஜாய் புயலால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. புயல் காரணமாக 47 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. சுமார் 234 விலங்குகள் உயிரிழந்துள்ளனர்.
1,600 கிராமங்களில் மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது மற்றும் ஜூனாகத் மற்றும் போர்பந்தர் மாவட்டங்களில் முழுமையாக சீரமைக்கப்பட்டுள்ளது.
பயிர்கள், பழத்தோட்டங்கள் மற்றும் மீன்பிடி படகுகளுக்கு ஏற்பட்டுள்ள சேதம் குறித்து மாநில அரசு விரைவில் கணக்கெடுப்பு நடத்தி, நிவாரணப் தொகை குறித்து அறிவிக்கும்.
புயலை எதிர்கொள்ள மாநில மற்றும் மத்திய அரசுகள் இணைந்து வெற்றிகரமாக செயல்பட்டன.
முகாமில் தங்க வைக்கப்பட்டவர்கள் ஓரிரு நாட்களில் அவர்களது வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள். பிரதமர் நரேந்திர மோடி உள்துறை அமைச்சகம், குஜராத் அரசு மற்றும் அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் தொடர்ந்து வழிகாட்டி வருகிறார். இந்த பேரழிவிலிருந்து குறைந்தபட்ச சேதத்துடன் வெளிவருவது பயனுள்ள குழுப்பணிக்கு சிறந்த எடுத்துக்காட்டு.
இவ்வாறு அவர் கூறினார்.
- எட்டு மாவட்டங்களில் இருந்து சுமார் 1,171 கர்ப்பிணி பெண்களில் 1,152 கர்ப்பிணி பெண்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
- கரையோரத்தில் வசித்து வந்த சுமார் ஒரு லட்சம் பேரை வெளியேற்றி முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
அரபிக்கடலில் கடந்த 5-ந் தேதி உருவான பிபோர்ஜோய் புயல் அதிதீவிர புயலாக உருமாறியது. இது நேற்று மாலை குஜராத் மாநிலம் ஜாகவ் துறைமுகம் அருகே கரையை கடந்தது.
புயலின் மையப்பகுதி நேற்று நள்ளிரவில் கரையை கடந்த போது ஜாகவ் துறைமுக பகுதியில் 125 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியது. புயல் கரையை கடக்கும்போது பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு லட்சத்திற்கும் அதிகமான கடலோர கிராம மக்கள் பாதுகாப்பு முகாம்களுக்கு மாற்றப்பட்டனர்.
பிபோர்ஜோய் புயலின் கோர தாண்டவத்தில் ஜாகவ் துறைமுக பகுதி, பவ்நகர் மாவட்டங்களில் சுமார் 940 கிராமங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இங்குள்ள கட்டிடங்களின் கூரைகள் தூக்கி வீசப்பட்டன. ராட்சத மரங்களும் வேரோடு சரிந்து விழுந்தது. சிறியதும், பெரியதுமாக சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்தது. மேலும் சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் 500-க்கும் மேற்பட்ட மின்கம்பங்களும் சரிந்து விழுந்தன. மரங்கள், மின்கம்பங்கள், கட்டிடங்கள் இடிந்ததில் அப்பகுதியில் இருந்த வாகனங்களும் சேதமானது.
புயல் முன்னெச்சரிக்கை காரணமாக ஜாகவ், பவ் மாவட்டங்களை சேர்ந்த 1000 கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளன.
இவ்வளவு இடர்பாடுக்கு மத்தியில், பிபோர்ஜோய் புயலின்போது குஜராத்தில் 700 குழந்தைகள் பிறந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. குஜராத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கரையோரத்தில் வசித்து வந்த சுமார் ஒரு லட்சம் பேரை வெளியேற்றி முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
இதில் எட்டு மாவட்டங்களில் இருந்து சுமார் 1,171 கர்ப்பிணி பெண்களில் 1,152 கர்ப்பிணி பெண்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இதில், 707 கர்ப்பிணி பெண்கள் வெற்றிகரமாக குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளனர்.
குறிப்பாக கட்ச் மாவட்டத்தில் இருந்து அதிகபட்சமாக 308 குழந்தைகள் பிறந்துள்ளன. ராஜ்கோட் மாவட்டத்தில் நூறு குழந்தைகளும், தேவ்பூமி துவாரகா மாவட்டத்தில் 93 குழந்தைகளும் பிறந்துள்ளன.
இதுகுறித்து குஜராத் அரசு சார்பில் வெளியிட்ட அறிக்கைியல், " குஜராத் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களில் 707 குழந்தைகள் வெற்றிகரமாக பிறந்துள்ளன. புயல் எதிரொலியால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 302 அரசு வாகனங்கள் மற்றும் 202 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் இருந்தன. ஒவ்வொன்றும் மருத்துவ பணியாளர்களுடன், இரவும் பகலும் விடாமுயற்சியுடன் பணியாற்றின" என்று குறிப்பிட்டிருந்தது.






