என் மலர்
அசாம்
- விபத்து தகவல் அறிந்து விரைந்த ரட்டாபரி காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீஸ் குழு உள்ளூர் மக்களின் உதவியுடன் மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டது.
- இறந்தவர்கள் அஃப்தாப் உதின் லஸ்கர் மற்றும் பிஸ்வஜித் லோஹர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அசாம் மாநிலம் ஹைலகண்டி மாவட்டத்தில் உள்ள கட்லிச்சேரா பகுதிக்கு இளைஞர்கள் சிலர் வாகனத்தில் சுற்றுலா சென்றுக் கொண்டிருந்தனர்.
கரீம்கஞ்ச் மாவட்டம் ரதாபரி பகுதி அருகே வாகனம் சென்றுக் கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த ரட்டாபரி காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீஸ் குழு உள்ளூர் மக்களின் உதவியுடன் மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டது. விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். இதில், இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மேலும், இறந்தவர்கள் அஃப்தாப் உதின் லஸ்கர் மற்றும் பிஸ்வஜித் லோஹர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
படுகாயமடைந்தவர் முதலில் கட்லிச்சேராவில் உள்ள உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கிருந்து அவர்கள் சில்சார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
- குஜராத்தில் பா.ஜனதா மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது.
- பூபேந்திர படேலின் சிறந்த நிர்வாகத்துக்கு கிடைத்த வெற்றி இது.
கவுகாத்தி :
குஜராத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து உள்ளது. இந்த வெற்றி வருகிற 2024-ம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில், 'குஜராத் வெற்றி, இந்தியாவுக்கு. பிரதமர் மோடிஜி மீது கொண்ட அன்பு மற்றும் நம்பிக்கையால் இந்த வரலாற்று தீர்ப்பை அளித்துள்ளதன் மூலம், மக்கள் 2024-க்கான பாதையைக் காட்டியுள்ளனர்' என குறிப்பட்டு இருந்தார்.
மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வை, மத்திய மந்திரி அமித்ஷாவின் வியூகம், பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டாவின் வழிகாட்டுதல் மற்றும் முதல்-மந்திரி பூபேந்திர படேலின் சிறந்த நிர்வாகத்துக்கு கிடைத்த வெற்றி இது எனவும் அசாம் முதல்-மந்திரி கூறியுள்ளார்.
- அதிக குழந்தைகளை பெற்றெடுப்பது ஒரு பெண்ணுக்கு உடல் ரீதியாக பாதிக்கும்.
- பெண் ஒன்றும் குழந்தை பெற்று தரும் தொழிற்சாலை கிடையாது.
கவுகாத்தி:
மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்கான சட்டம் வேண்டும் என்ற பாஜகவின் கோரிக்கை பற்றி அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி தலைவர் பத்ருதீன் அஜ்மல் அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்துக்களும், முஸ்லீம்களின் பார்முலாவை பின்பற்றி தங்களது பிள்ளைகளுக்கு இளம் வயதிலேயே திருமணம் செய்து வைக்க வேண்டும். ஆண்களுக்கு 20-22 வயதில், பெண்களுக்கு 18-20 வயதில் திருமணம் செய்து வைத்தால் நிறைய குழந்தைகள் பிறக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா பதில் அளித்துள்ளார். பொங்காய்காவன் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் கூறியுள்ளதாவது: பத்ருதீன் பேச்சில் கவனம் செலுத்த வேண்டாம். 2 குழந்தைகளுக்கு மேல் பெற்று கொள்ள வேண்டாம் என்று எனது முஸ்லிம் சகோதரிகளிடம் கூறி கொள்ள விரும்புகிறேன்.
ஒரு பெண் அதிக குழந்தைகளை பெற்றெடுத்தால், அது அந்த பெண்ணை உடல்ரீதியாக பாதிக்கும். நம்முடைய சமூகத்திற்கும் அது பாதிப்பு ஏற்படுத்தும். பெண் ஒன்றும் குழந்தை பெற்று தரும் தொழிற்சாலை அல்ல. வாக்கு வங்கி அரசியலுக்காக ஒரு குறிப்பிட்ட சமூக பிரிவை திருப்திப் படுத்துவதற்காக இதுபோன்ற சில பேச்சுகளை பத்ருதீன் வெளியிடுகிறார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- பள்ளிகளில் மாணவர்கள் வாந்தி எடுப்பதாகவும், வயிற்று வலி இருப்பதாகவும் பள்ளி அதிகாரிகளிடம் இருந்து சுகாதார குழுவினருக்கு தகவல் கிடைத்தது.
- நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
அசாம் மாநிலம் சரைடியோ மாவட்டத்தில் உள்ள இரண்டு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு, சுகாதாரத் துறை ஊழியர்கள் வழங்கிய இரும்பு சத்து மாத்திரையை உட்கொண்டதால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாட்சாகு பிளாக் ஆரம்ப சுகாதார நிலையத்தின் கீழ் உள்ள படாவ் துணை மையத்தைச் சேர்ந்த சுகாதார பணியாளர்கள் குழு கெரானிபதர் கீழ்நிலைப் பள்ளியின் 75 மாணவர்களுக்கும், நிமாலியா கீழ்நிலைப் பள்ளியின் 26 மாணவர்களுக்கும் இரும்பு சத்து மாத்திரைகளை வழங்கியுள்ளது.
ஆசிரியர்கள் முன்னிலையில் வழங்கப்பட்ட இந்த மாத்திரைகளை குழந்தைகள் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில் மாத்திரை எடுத்துக் கொண்ட சிறிது நேரத்தில், பள்ளிகளிலிருந்து மாணவர்கள் சிலர் வாந்தி எடுப்பதாகவும், வயிற்று வலி ஏற்பட்டுள்ளதாகவும் பள்ளி அதிகாரிகளிடம் இருந்து சுகாதார குழுவினருக்கு தகவல் கிடைத்தது.
அவர்கள் உடனடியாக சோனாரி சிவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர், மேலும் 48 குழந்தைகள் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
- மேகாலய பகுதியில் இருந்து வந்திருந்த ஏராளமானோர் ஆயுதங்களுடன் குவிந்தனர்
- கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்கும்படி வலியுறுத்தியதால் மோதல்
கவுகாத்தி:
அசாமில் இருந்து மேகாலயா நோக்கி இன்று அதிகாலையில் ஒரு லாரி சென்றுகொண்டிருந்தது. அந்த லாரியை மேகாலயா எல்லையில் அசாம் வனத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அப்போது லாரி டிரைவர் வேகமாக லாரியை ஓட்டி தப்பிச் செல்ல முயன்றுள்ளார். இதனையடுத்து வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் லாரி டயர் பஞ்சர் ஆகி நின்றுவிட்டது. டிரைவர் உள்ளிட்ட 3 பேரை அதிகாரிகள் சிறைப்பிடித்தனர். மற்றவர்கள் தப்பிச் சென்றுவிட்டனர். அந்த லாரியில் மரங்களை கடத்தியது தெரியவந்தது.
இதுபற்றி அருகில் உள்ள ஜிரிகெண்டிங் காவல் நிலையத்திற்கு வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்து, போலீஸ் படையை அனுப்பும்படி கேட்டுக்கொண்டனர். போலீசார் அங்கு சென்றபோது மேகாலய பகுதியில் இருந்து வந்திருந்த ஏராளமானோர் ஆயுதங்களுடன் அந்த இடத்தில் குவிந்திருந்தனர்.
வனத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாரை சூழ்ந்துகொண்ட அவர்கள், கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்கும்படி வலியுறுத்தினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தில் வன காப்பாளர் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு உயர் அதிகாரிகள் விரைந்துள்ளனர்.
- இந்திய நேரப்படி பிற்பகல் 3.46 மணிக்கு சந்திர கிரகணம் தொடங்கியது.
- கிரகணம் 6 மணி 19 நிமிடங்களுக்கு முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கவுகாத்தி:
சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகிய மூன்று கோள்களும் ஒரே நேர்கோட்டில் இருக்கும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. முழு சந்திரன் பூமியின் நிழலின் கீழ் வரும்போது முழு சந்திர கிரகணமும், சந்திரனின் ஒரு பகுதி பூமியின் நிழலின் கீழ் வரும் போது பகுதி நேர சந்திர கிரகணமும் ஏற்படும்.
அதன்படி இன்று முழு சந்திர கிரகணம் இந்திய நேரப்படி பிற்பகல் 3.46 மணிக்கு தொடங்கியது. இந்த கிரகணம் 6 மணி 19 நிமிடங்களுக்கு முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரகணம் இந்தியாவில் 5 மணி 12 நிமிடங்களுக்கு தெரியும் என கூறப்பட்டது. அதன்படி அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் சந்திர கிரகணத்தின் இறுதி நிலையை காண முடிந்தது.
சென்னையில் மாலை 5.39 மணி சந்திர கிரகணம் தெரியும் என கணிக்கப்பட்டது. சந்திர கிரகணத்தை பொதுமக்கள் பார்வையிட அறிவியல் கோளரங்கங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
- போலீசார் பள்ளிக்கு விரைந்து வந்து தலைமை ஆசிரியரை பிடித்து விசாரித்தனர்.
- பட்டாக்கத்தியுடன் வந்தபோது பதிவு செய்யப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது
கவுகாத்தி:
அசாம் மாநிலம் சச்சார் மாவட்டத்தில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பள்ளிக்கு பட்டாக்கத்தியுடன் வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திரிதிமேதா தாஸ் (வயது 38) என்ற அந்த ஆசிரியர் சில்சார் மாவட்டம் தாராப்பூர் பகுதியைச் சேர்ந்தவர். 11 ஆண்டுகளாக அந்த பள்ளியில் வேலை பார்த்து வரும் அவர் கோபத்தில் கத்தியுடன் வந்ததைப் பார்த்து, போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் பள்ளிக்கு விரைந்து வந்து தலைமை ஆசிரியரை பிடித்து விசாரித்தனர்.
மற்ற ஆசிரியர்களின் முறைகேடுகளால் கோபம் மற்றும் விரக்தி அடைந்ததாகவும், கத்தியைக் காட்டி அவர்களை எச்சரிக்க முயன்றதாகவும் தலைமை ஆசிரியர் கூறியிருக்கிறார்.
ஆசிரியர் பட்டாக்கத்தியுடன் வந்தபோது பதிவு செய்யப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஆனால் அவர் மீது யாரும் புகார் கொடுக்காததால் கைது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
- போதைப் பொருள் அடங்கிய சோப்பு கவர்களை பறிமுதல் செய்தனர்.
- தப்பியோடிய வாகன ஓட்டுனரை போலீசார் தேடி வருகின்றனர்.
அசாம் மாநிலம் கரிம்கஞ்ச் மாவட்டம் பதர்காண்டி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட அஷிம்கஞ்ச் பகுதியில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். சந்தேகத்திற்குரிய வகையில் இருந்த வாகனத்தை போலீசார் சோதனையிட்டபோது, அந்த வாகனத்தின் ஓட்டுநர் அங்கிருந்து தப்பினார்.
பின்னர் வாகனத்தில் இருந்து 676 கிராம் ஹெராயின் என்கிற போதைப் பொருள் அடங்கிய சோப்பு கவர்களை போலீசார் பறிமுதல் செய்தனர். சோப்பு கவர்களில் ஹெராயினை அடைத்து அவற்றை, ஸ்பீக்கர் பாக்சுக்குள் மறைத்து வைத்திருந்தனர்.
கைப்பற்றப்பட்ட போதைப் பொருளின் சந்தை மதிப்பு ரூ.5 கோடி எனவும், மிசோரமில் இருந்து பதர்கண்டி நோக்கி வாகனம் சென்று கொண்டிருந்தபோது பிடிபட்டது என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தப்பியோடிய வாகன ஓட்டுனரை தேடி வருகின்றனர்.
- நன்றாக படிக்கும் மாணவ மாணவிகளுக்கு ஸ்கூட்டர் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
- இந்தத் திட்டத்திற்காக ரூ.258.9 கோடி நிதி ஒதுக்கி உள்ளது.
கவுகாத்தி:
அசாம் மாநிலத்தில் நன்றாக படிக்கக்கூடிய, தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறும் மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கவும், தொடர்ந்து உயர் கல்வியை கற்கவும் ஏதுவாக ஸ்கூட்டர் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
கவுகாத்தி நகரில் ஜனதா பவனில் முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையில் நடந்த மாநில அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இதற்காக மொத்தம் ரூ.258.9 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இந்நிலையில், தகுதிவாய்ந்த 35,800 மாணவ மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 12-வது வகுப்பில் 60 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்கள் வாங்கிய 29 ஆயிரத்து 748 மாணவிகளுக்கும், 75 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்கள் வாங்கிய 6 ஆயிரத்து 52 மாணவர்களுக்கும் ஸ்கூட்டர்கள் வழங்கப்படும்.
ஸ்கூட்டர்கள் வழங்கும் நிகழ்ச்சி நவம்பர் 30-ம் தேதி நடைபெறும். காம்ரூப் மாவட்டத்தில் உள்ள காம்ரூப் பெருநகரில் நிகழ்ச்சி நடத்தப்படும் என அசாம் மந்திரி ஜெயந்த மல்லா பருவா தெரிவித்துள்ளார்.
- வடகிழக்கு மாநிலங்களில் சாலை மற்றும் ரயில் இணைப்பில் மத்திய அரசு சிறப்பு கவனம்.
- இது வர்த்தகம் மற்றும் சுற்றுலா வாய்ப்புகளை அதிகரிக்கும்.
கவுகாத்தி:
அசாம் மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்ட குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, கவுகாத்தியில் உள்ள சங்கர்தேவ் கலாசேத்ரா அரங்கில் இருந்து காணொலி மூலம் மாநில மற்றும் மத்திய அரசுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். நிறைவடைந்த திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் கூறியுள்ளதாவது: எந்தவொரு மாநிலத்தின் வளர்ச்சிக்கும் சிறந்த உள்கட்டமைப்புதான் அடிப்படை.இன்று தொடங்கப்பட்டுள்ள சுகாதாரம், கல்வி, ரயில்வே, சாலை, பெட்ரோலியம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் தொடர்பான திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தினால், அசாம் உட்பட வடகிழக்கு பிராந்தியம் முழுவதும் வணிகம், வேலை வாய்ப்புகள், போக்குவரத்து வசதிகள் அதிகரிக்கும், இதனால் பொருளாதாரம் வலுவடையும்.

நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் உள்கட்டமைப்பு, சாலை, ரயில் இணைப்பு மற்றும் தகவல் தொடர்பு இணைப்பு ஆகியவற்றில் மத்திய அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இது இப்பகுதியில் வர்த்தகம் மற்றும் போக்குவரத்தை மேம்படுத்துவதுடன் சுற்றுலா வாய்ப்புகளை அதிகரிக்கும்.
அசாம் மாநில வளர்ச்சி, முழு வடகிழக்கு பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும். இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் உற்பத்தியில் அசாம் 13 சதவீத பங்களிப்பை வழங்குகிறது. நாட்டின் மொத்த இயற்கை எரிவாயு உற்பத்தியில் 15 சதவீதம் வடகிழக்கு பிராந்தியத்தில் இருந்து கிடைக்கிறது.
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பே நாகரீக சமுதாயத்தின் அடையாளம். அசாமில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சேவைகளை வலுப்படுத்த 3000 மாதிரி அங்கன்வாடி மையங்கள் தொடங்கப்பட்டது பாராட்டுக்குரிய முயற்சி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- ஜொனாய் சப்-டிவிஷனுக்குட்பட்ட கங்கன் சபோரி பகுதிக்கு அருகில் இரண்டு குழந்தைகள் உட்பட 7 பேரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது.
- குழந்தையை மீட்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அசாமின் தேமாஜி மாவட்டத்தில் உள்ள லாலி ஆற்றில் நாட்டு படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. ஜொனாய் சப்-டிவிஷனுக்குட்பட்ட கங்கன் சபோரி பகுதிக்கு அருகில் இரண்டு குழந்தைகள் உட்பட 7 பேரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது.
இதையடுத்து, மாநில பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் தேமாஜி மாவட்டத்தின் தீயணைப்புப் படையினர் தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில், 6 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் ஒரு வயது குழந்தை காணாமல் போயுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனால், குழந்தையை மீட்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- பல ஆண்டுகளாக மூன்று பெரிய தடைகள் இருந்தன.
- முந்தைய அரசுகள் வடகிழக்கு பகுதி வளர்ச்சியில் ஆர்வம் காட்டவில்லை.
கவுகாத்தி:
வடகிழக்கு கவுன்சிலின் 70வது கூட்டம் அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்றது. வடகிழக்கு பிராந்தியத்தின் கலாச்சாரம், சுற்றுலா மற்றும் மேம்பாட்டுக்கான மத்திய மந்திரி ஜி. கிஷன் ரெட்டி மற்றும் வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சக இணை மந்திரி பி.எல்.வர்மா, வடகிழக்கு மாநிலங்களின் ஆளுநர்கள் மற்றும் முதலமைச்சர்கள், மத்திய மற்றும் வடகிழக்கு மாநிலங்களைச்சேர்ந்த பல்வேறு துறைகளின் மூத்த அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு தலைமை வகித்த மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா பேசியதாவது:
வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிப் பாதையில் பல ஆண்டுகளாக மூன்று பெரிய தடைகள் இருந்தன. வன்முறை, தீவிரவாத குழுக்களால் அமைதியின்மை, ரயில், சாலை மற்றும் விமான போக்குவரத்து இணைப்பு இல்லாதது ஆகியவையே அந்த தடைகள்.

முந்தைய அரசுகள் வடகிழக்கு பகுதி வளர்ச்சியில் ஆர்வம் காட்டவில்லை. வடகிழக்கு வளர்ச்சிக்கு அவை ஒருபோதும் முன்னுரிமை வழங்கவில்லை ஆனால், பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசு கடந்த 8 ஆண்டுகளில் வடகிழக்கில் அமைதியை ஏற்படுத்தவும், அனைத்து போக்குவரத்து இணைப்புகளையும் அதிகரிக்கவும், வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கவும் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
வெள்ளக் கட்டுப்பாடு, நீர்ப்பாசனம், சுற்றுலா, காடு வளர்ப்பு, விவசாயம் ஆகியவற்றில் வடகிழக்கு நிலப்பயன்பாட்டுக் கவுன்சிலின் தரவுகளை வடகிழக்கு மாநிலங்களின் முதலமைச்சர்கள் முழுமையாகப் பயன்படுத்தி பயனடைய வேண்டும். இதற்காக தங்களது மாநிலங்களில் ஒரு தொடர்பு அதிகாரியை நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.






