என் மலர்tooltip icon

    ஆந்திர பிரதேசம்

    • ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்காக அத்தனை எம்.எல்.ஏ.க்களும் கடுமையாக உழைத்து ஆட்சி அமைத்து உள்ளனர்.
    • ஜெகன்மோகன் ரெட்டி மீது அவரது கட்சி எம்.எல்.ஏ.வே குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருப்பதி:

    ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி எதிர்க்கட்சி தலைவர்களின் செல்போன்களை ஒட்டு கேட்பதாக ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

    இதேபோல் ஐகோர்ட்டு நீதிபதிகளின் செல்போன்களையும் ஒட்டு கேட்பதாக கூறி கடந்த 2020 ஆம் ஆண்டு பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி ஆளும் கட்சி இதுபோல் செல்போன்களை ஒட்டு கேட்க கூடாது என கூறி இருந்தார்.

    இந்நிலையில் நெல்லூர் மாவட்டம், உதயகிரி எம்.எல்.ஏ. மேகவதி சந்திரசேகர் ரெட்டி நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஆந்திராவில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களாக உள்ள 35 பேர், 4 எம்.பி.களின் செல்போன் எண்கள் ஒட்டு கேட்கப்படுகிறது.

    மேலும் அவர்களது செல்போன் உரையாடல்களை டிராக் செய்து ரெக்கார்டிங் செய்யப்படுகிறது. நான் எனது நண்பருடன் பேசிய பேச்சை பதிவு செய்ததற்கான ஆதாரத்தை வெளியிட்டுள்ளேன்

    ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்காக அத்தனை எம்.எல்.ஏ.க்களும் கடுமையாக உழைத்து ஆட்சி அமைத்து உள்ளனர். அப்படி இருக்கையில் தங்களுடைய கட்சி எம்எல்ஏக்கள் செல்போன் உரையாடலை ஒட்டு கேட்பது வருத்தம் அளிக்கிறது.

    எங்கள் மீது சந்தேகம் இருக்கும் போது நாங்கள் எப்படி கட்சிக்கு உண்மையாக பாடுபட முடியும் என்றார்.

    ஜெகன்மோகன் ரெட்டி மீது அவரது கட்சி எம்.எல்.ஏ.வே குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அந்தச் செயலியால் தேவஸ்தான தகவல்கள், சேவைகளை தெரிந்து கொள்ளலாம்.
    • தரிசன டிக்கெட்டுகள் பெறலாம்.

    திருமலை :

    திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மன் காணொலி காட்சி மூலம் தேவஸ்தான பிற துறை அதிகாரிகள், துணைக் கோவில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பாக அறிமுகப்படுத்தப்பட்ட 'டிஜிட்டல் கேட்வே' என்ற செல்போன் செயலியை பற்றி அதிக பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில், தகவல் மையங்கள், தேவஸ்தான கோவில்களில் அதிகாரிகள் காட்சிப்படுத்த வேண்டும். அந்தச் செயலியை ஒரே நாளில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

    அந்தச் செயலியால் தேவஸ்தான தகவல்கள், சேவைகளை தெரிந்து கொள்ளலாம். தரிசன டிக்கெட்டுகள் பெறலாம். அறைகள் முன்பதிவு செய்யலாம்.

    புவனேஸ்வரம் பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு தொடங்கப்பட்ட கோவிலில் புதிய சேவைகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவஸ்தான சேவைகள், பிற தகவல்களை அந்தந்தக் கோவிலில் காட்சிப்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    புவனேஸ்வரம் கோவிலின் வளர்ச்சிக்கு உள்ளூர் ஆலோசனைக் குழுவிடம் அவ்வப்போது ஆலோசனைகள் பெற வேண்டும். பல்வேறு ஊர்களில் நிலுவையில் உள்ள தேவஸ்தான கல்யாண மண்டபப் பணிகளை விரைந்து முடித்து பக்தர்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும்.

    உபமாகா கோவிலில் மார்ச் மாதம் முதல் வாரத்தில் நடக்க இருந்த சீனிவாச கல்யாண உற்சவம் இம்மாதம் நடத்தப்படும். கோவிலுக்கு பக்தர்களின் வருகையை அதிகரிக்க போக்குவரத்து வசதி செய்து தர அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகளுடன் ஆலோசிக்க வேண்டும்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலின் துணைக் கோவில்களான ஒண்டிமிட்டா கோதண்டராமர் கோவிலின் வளர்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். திருப்பதி கபிலேஸ்வரர் கோவில், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவில், தொண்டமாநாடு வெங்கடேஸ்வரர் கோவில்களில் பிரம்மோற்சவ விழா விரைவில் நடத்தப்படும்.

    பிரம்மோற்சவ விழா தொடர்பான விவர அறிக்கைக்கும், டெண்டர்களுக்கும் முன் அனுமதி பெற வேண்டும். ஒவ்வொரு கோவிலிலும் கோபூஜைக்கு பசு, கன்றுக்குட்டிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவற்றை அதிகாரிகள் முறையாகப் பராமரிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கொரோனா தொற்று பரவல் காலத்தில் உண்டியல் வருமானம் மிகக் குறைவாக இருந்தது.
    • நாளுக்குநாள் உண்டியல் வருமானம் அதிகரித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

    திருமலை :

    ஆந்திராவில் கொரோனா தொற்று இயல்பு நிலைக்குத் திரும்பியதை அடுத்து, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. உண்டியல் காணிக்கையும் குவிந்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் உண்டியல் வருமானம் ரூ.123 கோடி கிடைத்துள்ளது.

    அதில் ஜனவரி மாதம் 2-ந்தேதி ஒருநாள் உண்டியல் வருமானமாக ரூ.7 கோடியே 68 லட்சம் கிடைத்தது. இது, தேவஸ்தான வரலாற்றில் அதிகமாகும். உண்டியல் வருமானத்தைபோல் ஏழுமலையானுக்கு இதர காணிக்கைகளும் பெரிய அளவில் பக்தர்கள் செலுத்தி வருகிறார்கள். அதில் கிலோ கணக்கில் தங்கத்தை பக்தர்கள் பிரதான உண்டியலில் காணிக்கையாகச் செலுத்துவது தொடர்கிறது. கொரோனா தொற்று பரவல் காலத்தில் உண்டியல் வருமானம் மிகக் குறைவாக இருந்தது.

    தற்போது நாளுக்குநாள் உண்டியல் வருமானம் அதிகரித்து வருகிறது குறிப்பிடத்தக்கது. கோவிலில் நேற்று முன்தினம் 60 ஆயிரத்து 939 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 20 ஆயிரத்து 203 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று ஒருநாள் உண்டியல் வருமானமாக ரூ.5 கோடியே 17 லட்சம் கிடைத்ததாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தேர்தலில் வெற்றி பெற்று ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியைப் பிடித்தார்.
    • 10,000 மேற்பட்ட விவசாயிகள் அமராவதியில் தலைமை செயலகம் அறிவிக்க வேண்டும் என மாநிலம் முழுவதும் நடைபயணம் சென்றனர்.

    திருப்பதி:

    கடந்த தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியில் இருந்தபோது ஆந்திராவை, ஆந்திரா, தெலுங்கானா என இரண்டு மாநிலங்களாக பிரிக்கப்பட்டன.

    அப்போது ஆட்சியில் இருந்த சந்திரபாபு நாயுடு ஆந்திராவின் தலைநகரமாக அமராவதியை அறிவித்து விவசாயிகளிடம் இருந்து நிலங்களை கையகப்படுத்தி தலைமைச் செயலகம் கட்டுப்பணி நடைபெற்று வந்தது.

    அதன் பின்னர் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தேர்தலில் வெற்றி பெற்று ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியைப் பிடித்தார்.

    அவர் ஆட்சிக்கு வந்ததும் ஆந்திராவில் நிர்வாக வசதிக்காக 3 தலைநகரங்கள் அமைக்கப்படும் என அறிவித்தார். அவரது அறிவிப்புக்கு தெலுங்கு தேசம், பாஜக, காங்கிரஸ், ஜனசேனா உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மற்றும் அமராவதியில் தலைமைச் செயலகம் கட்ட நிலம் கொடுத்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மேலும் 10,000 மேற்பட்ட விவசாயிகள் அமராவதியில் தலைமை செயலகம் அறிவிக்க வேண்டும் என மாநிலம் முழுவதும் நடைபயணம் சென்றனர்.

    இந்த நிலையில் நேற்று டெல்லியில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் நடந்தது.

    வரும் மார்ச் மாதம் 3 அல்லது 4 தேதியில் ஆந்திராவின் தலைநகராக விசாகப்பட்டினம் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

    அவரது அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தெலுங்கு தேசம் கட்சியின் மாநில பொறுப்பாளர் அச்சம் நாயுடு கூறுகையில்:-

    கடந்த 2019-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஆந்திராவில் ஒரே தலைநகரம் அமராவதி என தேர்தல் நேரத்தில் பேசி வந்த ஜெகன்மோகன் ரெட்டி தற்போது விசாகப்பட்டினம் தலைநகரம் என அறிவித்து நாட்டு மக்களிடையே பிளவை ஏற்படுத்தி மாநிலத்தை பிரிக்க பார்ப்பதாக குற்றம்சாட்டினார்.

    • 13-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெறவுள்ளது.
    • தற்போது கோவிலுக்குள் பக்தர்கள் வரிசையில் செல்ல ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.

    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருகிற 13-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெறவுள்ளது. இதற்காக கோவில் வளாகத்திலும், நகரின் முக்கிய பகுதிகளிலும் மின் விளக்கு அலங்கார வளைவுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஜல விநாயகர் கோவில் அருகில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் கலை அரங்கம் ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.

    மேலும் மகா சிவராத்திரி அன்று பக்தர்கள் எந்தவித இடையூறும் இல்லாமல் சாமி தரிசனம் செய்ய போலீசார் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு பல்வேறு பகுதிகளில் வரிசைகளில் சலசலப்பு ஏற்பட்டது. அதனால் தற்போது கோவிலுக்குள் பக்தர்கள் வரிசையில் செல்ல ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. மேலும் புதிதாக மாற்றங்கள் ஏதும் செய்ய வேண்டுமா என்பது குறித்தும் ஆலோசித்து வருகின்றனர்.

    கோவில் நுழைவு வாயிலில் இருந்து தட்சிணாமூர்த்தி சன்னதி வரை உள்ள வரிசை, மற்றொரு வரிசையுடன் இணைவதால் பக்தர்கள் அவதிக்குள்ளாகின்றனர். இந்த முறை அது போன்று நடக்காமல் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். சொர்ணமுகி ஆற்றில் நடக்க உள்ள திரிசூல ஸ்நானம் ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர்.

    மகா சிவராத்திரி உற்சவத்திற்கு முன்பு வருகிற 5-ந் தேதி மாசி மாத பவுர்ணமி அன்று ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் கோவிலில் இருந்து திரிசூலத்தை வேத பண்டிதர்கள் சாஸ்திர பூர்வமாக சொர்ணமுகி ஆற்றுக்கு ஊர்வலமாக கொண்டு வந்து அங்கு சிறப்பு பூஜைகள் செய்து, திரிசூல ஸ்நானம் நடத்துகிறார்கள். கடந்த ஆண்டு வரை சொர்ணமுகி ஆற்றின் கரையோரத்தில் சிறு பகுதியில் பக்தர்கள் புனித நீராடுதலுக்காக தண்ணீர் குட்டையை அமைத்தர். இந்த ஆண்டும் பக்தர்கள் புனித நீராடுவதற்கு தண்ணீர் குட்டை அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது.

    இந்தநிலையில் இன்று (புதன்கிழமை) திருப்பதி மாவட்ட கலெக்டர் வெங்கட்ரமணா ரெட்டி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளனர். இந்த கூட்டத்தில் அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். இதில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவத்திற்கு மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகள், நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் வெங்கட்ரமணா ரெட்டி அறிவுரை வழங்க உள்ளார்.

    விழாவையொட்டி முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்வது தொடர்பாக கோவில் அதிகாரிகள், அறங்காவலர் குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் நிர்வாக அதிகாரி சாகர்பாபு பேசியதாவது:-

    இந்த ஆண்டு நடக்கும் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழாவை பிரமாண்டமாக நடத்த வேண்டும். பிரம்மோற்சவ விழாவையொட்டி முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதிகாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். கோவில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு பிரம்மோற்சவ விழாவை சிறப்பாக நடத்த வேண்டும்.

    சிவன் கோவில் மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழாவை ஒவ்வொருவரும் தங்களின் வீட்டு விழாவாக கருதி செயல்பட வேண்டும். விழாவின்போது பக்தர்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, மகா சிவராத்திரி அன்று சாதாரணப் பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வி.ஐ.பி.பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கோவில் முழுவதும் மின்விளக்கு அலங்காரம், தோரண வாயில் அமைக்கப்பட வேண்டும். பக்தர்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் பிரசாதம் வழங்கப்படும். வீதி உலாவுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களை முன்கூட்டியே சீரமைத்துக் கொள்ள வேண்டும். அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படும். பிரம்மோற்சவ விழாவை வெற்றிகரமாக நடத்த அதிகாரிகளுக்கு, பக்தர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் கோவில் துணை நிர்வாக அதிகாரிகள், கண்காணிப்பாளர்கள், பொறியியல் துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.3 முதல் 5 கோடி வரை உண்டியலில் காணிக்கையாக வசூலாகிறது.
    • உண்டியல் காணிக்கை எண்ணும் இடத்தில் இட பற்றாக்குறை உள்ளதால் புதிய கட்டிடம் கட்ட தேவஸ்தானம் முடிவு செய்தது.

    திருப்பதி:

    திருப்பதியில் ஏழுமலையான் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் தங்களின் பிரார்த்தனையை நிறைவேற்றும் வகையாக அங்குள்ள உண்டியலில் தங்கம், வெள்ளி நகைகள், பணம் மற்றும் வெளிநாட்டு கரன்சி உள்ளிட்டவைகளை காணிக்கையாக செலுத்துகின்றனர்.

    இதனால் தினமும் திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.3 முதல் 5 கோடி வரை உண்டியலில் காணிக்கையாக வசூலாகிறது.

    ஆண்டுக்கு ரூ.1000 கோடி முதல் 1200 கோடி வரை கிடைக்கிறது. மேலும் ஒரு டன் எடையுள்ள தங்க நகைகள் காணிக்கையாக கிடைக்கின்றன.

    உண்டியலில் காணிக்கையாக வசூலாகும் சில்லரை நாணயங்கள், பணத்தை கோவிலுக்குள் உள்ள இடத்தில் தேவஸ்தான ஊழியர்கள் எண்ணி வருகின்றனர்.

    உண்டியல் காணிக்கை எண்ணும் இடத்தில் இட பற்றாக்குறை உள்ளதால் புதிய கட்டிடம் கட்ட தேவஸ்தானம் முடிவு செய்தது. அதன்படி பெங்களூருவை சேர்ந்த பக்தர் ஒருவர் நிதி உதவியுடன் கோவிலில் இருந்து 250 மீட்டர் தொலைவில் ரூ.23 கோடியில் புதிய பரகாமணி கட்டிடம் கட்டப்பட்டது. புதிய கட்டிடத்தை கடந்த பிரமோற்சவத்தின்போது திருமலைக்கு வந்த முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி திறந்து வைத்தார். ஏழுமலையான் கோவிலில் இருந்து உண்டியலை கிரேன் மூலம் எடுத்துச் சென்று உண்டியல் காணிக்கை எண்ணப்பட உள்ளது.

    உண்டியலை எடுத்துச் செல்லும் கிரேன் மற்றும் எந்திரங்கள் பொருத்தும் பணி நிறைவடைந்ததால் வரும் 5-ந் தேதி புதிய கட்டிடத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெறும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    உலகிலேயே பணக்கார கோவிலான திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முதன்முறையாக கோவிலுக்கு வெளியே உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடங்கப்பட உள்ளது.

    • 5-ந்தேதி மாத பவுர்ணமியையொட்டி கருட சேவை நடக்கிறது.
    • 16-ந்தேதி சர்வ ஏகாதசி வழிபாடு நடக்கிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாதம் நடக்கும் விழாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன் விவரம் வருமாறு:-

    1-ந்தேதி (இன்று) பீஷ்ம ஏகாதசி, 5-ந்தேதி ராமகிருஷ்ணதீர்த்த முக்கோட்டி உற்சவம், மாத பவுர்ணமியையொட்டி கருட சேவை, 7-ந்தேதி திருமழிசை ஆழ்வார் வருட திருநட்சத்திரம், 10-ந்தேதி கூரத்தாழ்வார் வருட திருநட்சத்திரம், 16-ந்தேதி சர்வ ஏகாதசி, 18-ந்தேதி கோகர்ப்பம் அணை அருகில் உள்ள சேத்திராபாலகர் கோவிலில் மகா சிவராத்திரி விழா நடக்கிறது.

    மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.

    • ராம் பகிச்சா மெயின் கேட் அருகில் இருந்து மாத வீதிக்கு 4 அடுக்கு பாதுகாப்பை மீறி தான் செல்ல வேண்டும்.
    • திருப்பதி தேவஸ்தானத்திற்கு நன்கொடை வழங்க வந்த கார் வழி தவறி மாட வீதிகளில் சென்று இருக்கலாம்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் உள்ளதால் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    மேலும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினால் அதை முறியடிக்கும் விதமாக ஆக்டோபஸ் படையை சேர்ந்தவர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று சிஎம்ஓ என்ற ஸ்டிக்கர் ஒட்டிய கார் ஒன்று கோவிலில் 4 அடுக்கு பாதுகாப்பையும் மீறி கடந்து மாட வீதி வழியாக புஷ்கரணி நடைபெறும் மண்டபம் வரை சென்றது.

    அங்கிருந்து வி.ஐ.பி. மற்றும் வி.வி.ஐ.பி. கார் நிறுத்தும் இடத்திற்கு சென்று நின்றது. அப்போது அங்கு இருந்த சிலர் கார் டிரைவரிடம் விசாரித்தபோது இந்த கார் அமைச்சரின் கார் என்றும் பின்னர் இல்லை வேறு ஒருவருடையது என்றும் தெரிவித்தார். இவ்வளவு பாதுகாப்பு குளறுபடிகள் நடந்தபோதும் பாதுகாப்பு அதிகாரிகள் யாரும் சம்பவ இடத்திற்கு வரவில்லை.

    ராம் பகிச்சா மெயின் கேட் அருகில் இருந்து மாத வீதிக்கு 4 அடுக்கு பாதுகாப்பை மீறி தான் செல்ல வேண்டும். விஐபி மற்றும் வி.வி.ஐ.பி.களின் கார்கள் ராம் பகிச்சா எதிரே உள்ள பார்க்கிங் வரை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. இந்த கார் மட்டும் பாதுகாப்பு விதிகளை மீறி எப்படி மாட வீதிக்கு சென்றது என பக்தர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

    ஏற்கனவே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பலத்த பாதுகாப்பையும் மீறி தனியார் நிறுவனத்தினர் பேடி ஆஞ்சநேயர் கோவிலிலிருந்து ஏழுமலையான் மூலவர் கோபுரம் வரை ட்ரோன் கேமரா மூலம் வீடியோவை பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதால் பக்தர்கள் மற்றும் வேத பண்டிதர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஆகம விதிகளின்படி திருமலையில் ஆளில்லா குட்டி விமானங்கள் பறக்க தடை உள்ள நிலையில் பாதுகாப்பு மீறி வீடியோ எடுத்தது எப்படி, பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டினர்.

    இந்த நிலையில் நேற்று மாட விதிகளில் கார் சென்றது குறித்து முதன்மை செயல் அலுவலர் தர்மாரெட்டி கூறுகையில்:-

    திருப்பதி தேவஸ்தானத்திற்கு நன்கொடை வழங்க வந்த கார் வழி தவறி மாட வீதிகளில் சென்று இருக்கலாம். பாதுகாப்பு அதிகாரிகள் எப்படி மாட வீதிக்கு காரை அனுமதித்தனர் என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தலைநகரை மாற்றி ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் அறிவிப்பு வெளியிட்டார்.
    • ஆந்திர மாநிலத்தின் தலைநகர் விசாகப்பட்டினம் என மாற்றம் செய்து அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் அறிவித்துள்ளார்.

    ஆந்திர மாநிலத்தின் தலைநகர் மாற்றம் செய்து ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    ஏற்கனவே தலைநகராக இருந்த விஜயவாடாவை மாற்றி அமராவதியை தலைநகராக முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்தார்.

    இந்நிலையில், ஆந்திர மாநிலத்தின் தலைநகர் விசாகப்பட்டினம் என மாற்றம் செய்து அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் அறிவித்துள்ளார்.

    • இலவச தரிசனத்திலும் டைம் ஸ்லாட் முறை கொண்டுவரப்பட்டு பக்தர்களுக்கு டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது.
    • திருமலை போலீசார் வழக்கு பதிவு செய்து நாகபூஷணம் மற்றும் கார் டிரைவர் நாகராஜ் ஆகியோரை கைது செய்தனர்.

    திருப்பதி:

    திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.

    பக்தர்கள் சிரமம் இன்றி காத்திருக்காமல் தரிசனம் செய்வதற்காக தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் ரூ.300 டிக்கெட்டுகள் ஆன்லைனில் மாதந்தோறும் வெளியிடப்பட்டு வருகிறது. தரிசன டிக்கெட்டுகள் பெற்ற பக்தர்கள் வரிசையில் காத்திருக்காமல் அவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு சென்று தரிசனம் செய்து வருகின்றனர்.

    இதேபோல் இலவச தரிசனத்திலும் டைம் ஸ்லாட் முறை கொண்டுவரப்பட்டு பக்தர்களுக்கு டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. ரூ.300 மற்றும் இலவச டைம்ஸ் லாக் டிக்கெட்டுகள் பெறாமல் திருமலைக்கு வரும் பக்தர்கள் எப்படியாவது சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்பதற்காக அங்குள்ள புரோக்கர்களை நாடி செல்கின்றனர்.

    இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் புரோக்கர்கள் தரிசன டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்கின்றனர். மேலும் சிலர் போலியான தரிசனம் டிக்கெட்டுகளை விற்று பக்தர்களை மோசடி செய்து வருகின்றனர்.

    இதுபோன்ற போலியான நபர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம் என திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் பலமுறை பக்தர்களுக்கு அறிவுரை வழங்கியும் ஒரு சிலர் இதுபோன்று பணத்தை இழந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் ஐதராபாத்தை சேர்ந்த சேஷா பட்டர் வசந்த் என்பவர் தனது குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் தரிசனத்திற்கு வந்திருந்தார்.

    ஆனால் அவரிடம் தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் இல்லாததால் தேவஸ்தானத்தில் தனியார் செக்யூரிட்டியாக வேலை செய்யும் நாகபூஷணம் என்பவரை அணுகினார். அவர் கார் டிரைவர் நாகராஜிடம் இருந்து ரூ.300 தரிசன டிக்கெட்டுகளை 7-ஐ ரூ.21 ஆயிரத்துக்கு வாங்கிக் கொடுத்தார்.

    இதுகுறித்து சேஷ பட்டர் வசந்த் தேவஸ்தான அதிகாரிகளிடம் புகார் செய்தார். விஜிலன்ஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்ட ஊழியர் ஒருவர் டிக்கெட்களை பெற்று தனியார் செக்யூரிட்டி ஊழியர் மூலம் டிக்கெட்டுகளை விற்பனை செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து திருமலை போலீசார் வழக்கு பதிவு செய்து நாகபூஷணம் மற்றும் கார் டிரைவர் நாகராஜ் ஆகியோரை கைது செய்தனர்.

    இதேபோல் விஜயவாடாவை சேர்ந்த பிரபாகர் ராவ் என்பவர் தனது குடும்பத்தினருடன் தரிசனத்திற்கு வந்தார். அவரிடம் தரிசனத்திற்கு உண்டான டிக்கெட்டுகள் இல்லாததால் திருமலையில் உள்ள சிலரிடம் தரிசன டிக்கெட் கிடைக்குமா என விசாரித்தார்.

    அப்போது அங்கிருந்த புரோக்கர் ஒருவர் வி.ஐ.பி. பிரேக் தரிசன டிக்கெட் உள்ளதாக கூறி 6 டிக்கெட்டுகளை ரூ.12 ஆயிரத்திற்கு விற்பனை செய்தார்.

    பிரபாகர் ரெட்டி தரிசனத்திற்கு செல்லும்போது அவரது டிக்கெட்டை சோதனை செய்த அதிகாரிகள் போலி என்பதை கண்டறிந்தனர்.

    இதையடுத்து தேவஸ்தான அதிகாரிகள் போலி தரிசன டிக்கெட்டுகளை விற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதியில் நேற்று 74, 242 பேர் தரிசனம் செய்தனர். 25,862 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 4.08 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • தொழிற்சாலையில் இருந்த ஊழியர்கள் அனைவரும் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், சித்தூர் புறநகர் பகுதியான சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி யாதமரி என்ற இடத்தில் தனியார் பேட்டரி தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ-வான கல்லா அருணகுமாரிக்கு சொந்தமான இந்த தொழிற்சாலையில் 3000-த்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 3 ஷிப்ட் முறையில் வேலை செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் டியூப்ளர் பேட்டரி தயாரிக்கும் பிரிவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனைக் கண்ட தொழிலாளர்கள் அங்கிருந்த தீயணைப்பான்கள் மூலம் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களது முயற்சி பலனளிக்காததால் தீ வேகமாக பற்றி எரிய தொடங்கியது.

    தொழிற்சாலையில் இருந்த ஊழியர்கள் அனைவரும் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். இதுகுறித்து சித்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் பெத்தி ரெட்டி தலைமையில் சம்பவ இடத்திற்கு வந்த 3 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை கட்டுப்படுத்த முயன்றனர். சித்தூர் டிஎஸ்பி சீனிவாச மூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    அதற்குள் தொழிற்சாலை முழுவதும் தீப்பற்றி எரிந்தது. அங்கிருந்த பேட்டரிகள் வெடித்து சிதறின. விண்ணை தொடும் அளவிற்கு புகை கிளம்பியதால் நள்ளிரவு வரை தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்பட்டது. பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக தொழிலாளர்கள் யாருக்கும் காயமோ உயிர் சேதமோ ஏற்படவில்லை. பல கோடி மதிப்பிலான எந்திரங்கள் மற்றும் பேட்டரிகள் எரிந்து நாசமானதாக தெரிவித்தார்.

    போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தொழிற்சாலையில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து நடந்தது தெரிய வந்துள்ளது. மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆந்திர முதல் மந்திரி சென்ற விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
    • இதனால் அந்த விமானம் கன்னாவரம் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

    அமராவதி:

    ஆந்திர மாநில முதல் மந்திரியாக பதவி வகித்து வருபவர் ஜெகன்மோகன் ரெட்டி. இவர் தலைநகர் டெல்லி செல்வதற்காக நேற்று தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    கிருஷ்ணா மாவட்டம் விஜயவாடாவில் உள்ள கன்னாவரம் விமான நிலையத்திலிருந்து அந்த விமானம் புறப்பட தயாரானது. அப்போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக விமானி தெரிவித்தார். இதையடுத்து. அந்த மீண்டும் அதே விமான நிலையத்தில் அவசர அவரசமாக தரையிறக்கப்பட்டது.

    முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×