என் மலர்
ஆந்திர பிரதேசம்
- மின்சார கட்டணம் கட்டுவதற்காக வீட்டில் வைத்திருந்த பணத்தை எடுத்துச் சென்று ரவி மது குடித்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமாறைவாக உள்ள ரவியை தேடி வருகின்றனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், ஏலூர் மாவட்டம், தேவரப் பள்ளியை சேர்ந்தவர் ரவி. லாரி டிரைவர். இவரது மனைவி ஏசு மேரியம்மாள் (வயது 35). ரவி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஏசு மேரியம்மாளை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.தம்பதிக்கு அகிலா (10) என்ற மகள் இருந்தார். அகிலா அங்குள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.
ரவி மதுவுக்கு அடிமையானதால் அவர் சம்பாதிக்கும் பணம் முழுவதும் மது குடிப்பதற்கு செலவு செய்து வந்தார். மேலும் சரிவர வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு ஊர் சுற்றி வந்ததால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது. இதையடுத்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஏசு மேரியம்மாள் தனது மகளை அழைத்துக் கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்று அங்கு வசித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த வாரம் மாமியார் வீட்டிற்கு சென்ற ரவி இனிமேல் மது குடிக்க மாட்டேன், மனைவியிடம் தகராறு செய்யாமல் நல்லபடியாக வைத்துக் கொள்வேன் என உறுதி கூறியதால் ஏசு மேரியம்மாள் மீண்டும் கணவர் வீட்டிற்கு வந்தார்.
இந்த நிலையில் மின்சார கட்டணம் கட்டுவதற்காக வீட்டில் வைத்திருந்த பணத்தை எடுத்துச் சென்று ரவி மது குடித்தார். மின்சார கட்டணம் கட்டாததால் ரவியின் வீட்டிற்கு மின் சப்ளை துண்டிக்கப்பட்டது. இதனால் மின்சாரம் இன்றி வீடு இருளில் மூழ்கியது. நேற்று முன்தினம் இரவு மது குடித்துவிட்டு வந்த ரவிக்கும் ஏசு மேரியம்மாளுக்கும் இடையே மீண்டும் தகராறு நடந்தது. இதையடுத்து ரவி வீட்டை விட்டு வெளியே சென்றார்.தாயும், மகனும் ஒரு அறையில் படுத்து தூங்கினார்.
வெளியே சென்ற ரவி மீண்டும் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து வீட்டில் இருந்த இரும்பு ராடை எடுத்து வந்து மனைவி, மகள் இருவரின் தலையிலும் ஓங்கி பலமாக தாக்கினார். இதில் இருவரின் மண்டையும் உடைந்து ரத்தம் பீறிட்டு கொட்டியது. சிறிது நேரத்தில் தாயும் மகனும் துடிதுடித்து பரிதாபமாக இருந்தனர். இதையடுத்து ரவி வீட்டை வெளிப்பக்கமாக பூட்டிக்கொண்டு தப்பி ஓடி விட்டார்.
ஏசு மேரியம்மாளின் தம்பி குரவைய்யா அவரை பலமுறை செல்போனில் தொடர்பு கொண்டார். அவர் போனை எடுக்காததால் சந்தேகம் அடைந்த குரவையா வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீடு வெளிப்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. ஜன்னல் வழியாக பார்த்த போது தாய், மகள் இருவரும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து நுஜி வீடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீஸ் சூப்பிரண்டு ராகுல் தேவசர்மா டி.எஸ்.பி அசோக்குமார் கவுண்ட், இன்ஸ்பெக்டர் அங்கபாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 2 பேரின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நுஜிவீடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமாறைவாக உள்ள ரவியை தேடி வருகின்றனர்.
- ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சிக்கு வந்ததும் தனியாரிடம் இருந்த மதுபான கடைகள் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன.
- மதுக்கடை மேற்பார்வையாளர்களுக்கு கேள்வித்தாள் அனுப்பப்பட்டது.
திருப்பதி:
ஆந்திராவில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை பிடித்து ஆட்சி அமைத்தது. ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சிக்கு வந்ததும் தனியாரிடம் இருந்த மதுபான கடைகள் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன.
பின்னர் மதுபானங்களின் விலை இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் போதைக்கு அடிமையானவர்கள் எப்போது அதிகம் குடிப்பார்கள்.
இன்னமும் அதிகமாக மது விற்பனை அதிகரிக்க என்ன செய்யலாம் என்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர். மேலும் மதுபான விற்பனை குறித்து கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.
அரசு மதுக்கடைகளுக்கு எந்த நேரத்தில் அதிக மக்கள் வருகிறார்கள்.
அதில் மதியம் 12 மணிக்கு முன்பாகவா, மதியம் 12-2 மணிக்குள், மதியம் 2-4 மணிக்குள், மாலை 4-6 மணிக்குள், மாலை 6 மணிக்குப் பிறகா. இரவு நேரத்தில் அதிகம் விற்பனை நடக்கிறதா.
எந்த வகையான ஆல்கஹால் குடிப்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.எந்த வயதினர் அதிகமாக வருகிறார்கள், 21-35, 36-50, 51-00,, எந்த வகையான ஆல்கஹால் பெரும்பாலும் வாங்கப்படுகிறது? பிராந்தி, விஸ்கி, ரம், வோட்கா, பீர். தேவைக்கு ஏற்ப மது சப்ளை செய்யப்படுகிறதா, இல்லையா? போன்ற தலைப்புகளில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது எங்கே குறைபாடுகள் உள்ளன என்பதை கண்டறிந்து அதற்கேற்ப சந்தைப்படுத்தல் உத்திகளை வகுத்து விற்பனையை அதிகரிப்பதே இந்த கணக்கெடுப்பின் நோக்கமாக உள்ளதாக விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன.
மதுக்கடை மேற்பார்வையாளர்களுக்கு கேள்வித்தாள் அனுப்பப்பட்டது. ஆன்லைனில் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சமீபத்தில் மதுபான உற்பத்தி கழக எம்டி வாசுதேவ ரெட்டி டெலிகான்பரன்ஸ் நடத்தி, இந்த கேள்வித்தாளுக்கு பதில் அனுப்புமாறு மேற்பார்வையாளர்களுக்கு உத்தரவிட்டார். மாவட்டப் பெயர், மதுபானக் கிடங்கு, மதுக்கடை உரிம எண் போன்ற விவரங்களை இணைத்து இந்தக் கணக்கெடுப்புக்கு கண்காணிப்பாளர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
+2
- துங்கபத்ராவில் இருந்து ஒருங்கிணைந்த அனந்தப்பூர் மற்றும் கடப்பா மாவட்டங்களில் உள்ள 3,78,124 ஏக்கர் விவசாயத்திற்கு 32.50 டிஎம்சி தண்ணீர் தர வேண்டும்.
- துங்கபத்ராவிலிருந்து ஆந்திராவுக்கு 66.50 டிஎம்சி தண்ணீர் ஒதுக்கீடு செய்யப்பட்டாலும் திட்டத்தில் கிடைக்கும் தண்ணீருக்கு ஏற்ப ஒவ்வொரு பருவத்திலும் ஒதுக்கீடு மாறுபடும்.
திருப்பதி:
கர்நாடகா அரசு மேற்கொண்டுள்ள அப்பர் பத்ரா திட்டத்தால் ராயலசீமா அச்சுறுத்தலை எதிர்கொள்ள உள்ளது. துங்க பத்ராவில் இருந்து 17.4 டி.எம்.சி தண்ணீர் பத்ரா நீர்த்தேக்கத்துக்கும், 2ம் கட்டமாக பத்ரா நீர்த்தேக்கத்தில் இருந்து 5.56 லட்சம் ஏக்கர் ஆயக்கட்டுக்கு மொத்தம் 29.50 டிஎம்சி தண்ணீரும் அனுப்பப்படும்.
இத்திட்டத்திற்காக மத்திய அரசு பட்ஜெட்டில் ரூ 5,300 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. துங்கபத்ரா நீர்த்தேக்கத்தில் போதிய தண்ணீர் இல்லாததால், ராயலசீமா மாவட்டங்கள் ஏற்கனவே சிரமத்தை சந்தித்து வருகின்றன.
சமீபத்திய இந்த திட்டத்தால், 3 மாவட்டங்களில், 7.94 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும். இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர மாநில அரசு விரைவில் சுப்ரீம் கோர்டில் வழக்கு தொடர உள்ளது.
துங்கபத்ரா நீர்த்தேக்கம் கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவை உள்ளடக்கியது. துங்கபத்ராவில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் கிருஷ்ணா தீர்ப்பாயம் ஒதுக்கிய அளவுக்கு பல சமயங்களில் தண்ணீர் கொடுக்க முடியவில்லை. கிடைக்கும் நீரை அந்தந்த விகிதாச்சாரப்படி மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்தாலும், குறைந்த அளவு மட்டுமே தண்ணீர் கிடைத்து வருகிறது.
ஒருங்கிணைந்த கர்னூல், கடப்பா மற்றும் அனந்தபூர் மாவட்டங்களில் சுமார் 7.94 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் துங்கபத்ராவை நம்பியுள்ளது. மேல் (எச்எல்சி), கீழ் (எல்எல்சி) மற்றும் கேசி கால்வாய்கள் மூலம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. ஆனால் ராயலசீமா மாவட்டங்களில் உள்ள நீர்த்தேக்கங்களுக்கு போதிய அளவு தண்ணீர் வருவது இல்லை.
எப்போதெல்லாம் வெள்ளம் வந்து கீழே உள்ள ஆற்றில் தண்ணீர் விடப்படுகிறதோ அப்போதெல்லாம் நீர்த்தேக்கத்தில் சாகுபடிக்கு போதிய தண்ணீர் இருப்பதில்லை. துல்லோவில் இருந்து அப்பர் பத்ராவுக்கு 28.50 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட்டால் இதுதான் நிலை.
துங்கபத்ராவில் இருந்து ஒருங்கிணைந்த அனந்தப்பூர் மற்றும் கடப்பா மாவட்டங்களில் உள்ள 3,78,124 ஏக்கர் விவசாயத்திற்கு 32.50 டிஎம்சி தண்ணீர் தர வேண்டும். துங்கபத்ராவிலிருந்து ஆந்திராவுக்கு 66.50 டிஎம்சி தண்ணீர் ஒதுக்கீடு செய்யப்பட்டாலும் திட்டத்தில் கிடைக்கும் தண்ணீருக்கு ஏற்ப ஒவ்வொரு பருவத்திலும் ஒதுக்கீடு மாறுபடும். கர்னூல் மாவட்டத்தில் 15,134 ஏக்கருக்கு 24 டிஎம்சி கொடுக்க வேண்டும். கூட்டு கர்னூல் மற்றும் கடப்பா மாவட்டத்தின் 2.85.628 ஏக்கருக்கு கால்வாய் மூலம் 10 டிஎம்சி தண்ணீர் விட வேண்டும்.
துங்காபத்ரா, விஜயநகரம் கிளை கால்வாய்களை நவீனமயமாக்கியதன் மூலம் 11.5 டிஎம்சியும், கிருஷ்ணா முதல் தீர்ப்பாயம் ஒதுக்கிய 734 டிஎம்சியில் 10 டிஎம்சியும், போலவரம் வழியாக வரும் கோதாவரியில் 24 டிஎம்சியும் வழங்க மத்திய நதிநீர் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்டை ஆந்திர அரசு அணுகவுள்ளது.
கிருஷ்ணா நதியின் துணை நதியான துங்கபத்ரா, வெள்ளத்தின் போது, துங்கபத்ரா அணையை உயர்த்தினால், ஸ்ரீசைலம் நீர்த்தேக்கத்திற்கு நேரடியாக தண்ணீர் செல்லும். ராயலசீமா மாவட்டங்களில் ஸ்ரீசைலம் நீர்த்தேக்கத்தின் நீரைச் சார்ந்து பல திட்டங்கள் உள்ளன.
மேல் கங்கை ஹந்த்ரினிவா, போத்திரெட்டிபாடு, எஸ்ஆர்பிசி மற்றும் தெலுங்கு கங்கை பாதிக்கப்படுகிறது. ஸ்ரீசைலம் நீர்த்தேக்கத்திற்கு எதிர்பார்த்த அளவு தண்ணீர் வரவில்லை என்றால், ராயலசீமா திட்டப்பணிகள் அனைத்தும் தோல்வி அடையும்.
- சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து வீடியோ பதிவிட்டவர் யார் என விசாரணை நடத்தினர்.
- விசாரணையில் முதலமைச்சரை அவதூறாக பேசி வீடியோ பதிவிட்டது வெங்கடேஸ்வரராவ் என கண்டுபிடிக்கப்பட்டது.
திருப்பதி:
ஆந்திரா மாநிலம் என்.டி.ஆர் மாவட்டம், சில்லக்கல்லு போலீஸ் நிலையத்தில் நெடுஞ்சாலை ரோந்து பிரிவில் வெங்கடேஸ்வரராவ் என்பவர் பணியாற்றி வந்தார்.
இவர் செல்போன் வீடியோவில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி குறித்து அவதூறு கருத்தை வெளியிட்டுள்ளார்.
போலீசாருக்கு 3 மாத சம்பளம் வழங்காவிட்டால் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி பதவியில் இருந்து இறக்கப்பட்டு கவர்னர் ஆட்சி கொண்டுவரப்படும் எனவும் மேலும் சில அவதூறான வார்த்தைகளை பேசி தனது நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில் வீடியோ பதிவு செய்தார்.
அவர்கள் மேலும் சிலருக்கு வீடியோவை அனுப்பி வைத்ததால் அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து வீடியோ பதிவிட்டவர் யார் என விசாரணை நடத்தினர்.
விசாரணையில் முதலமைச்சரை அவதூறாக பேசி வீடியோ பதிவிட்டது வெங்கடேஸ்வரராவ் என கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து சில்லக்கல்லு போலீசார் முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசி அவர் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக வழக்கு பதிவு செய்து வெங்கடேஸ்வரராவை கைது செய்தனர்.
அவரை ஜக்கையப்பேட்டை கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- ஆற்றை தாண்டி அப்பகுதி பொதுமக்களின் 400 ஏக்கர் விவசாயம் நிலம் உள்ளது.
- பொதுமக்கள் பாலம் கட்ட சொல்லி அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், நிர்மல் மாவட்டம், கட்காம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கிராமத்தையொட்டி ஆறு ஒன்று செல்கிறது.
ஆற்றை தாண்டி அப்பகுதி பொதுமக்களின் 400 ஏக்கர் விவசாயம் நிலம் உள்ளது. அவர்கள் ஆற்றைக் கடந்து தான் விவசாய நிலத்திற்கு செல்ல வேண்டும்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆற்றில் அதிக அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது ஆற்றைக் கடக்க முயன்ற 2 விவசாயிகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு இறந்தனர்.
அப்பகுதியில் பொதுமக்கள் பாலம் கட்ட சொல்லி அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் பொதுமக்கள் செய்வதறியாமல் திகைத்து நின்றனர். இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த விவசாயி நரேஷ் (வயது 25). விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆற்றைக் கடந்து செல்ல சிரமப்படுவதை கண்டு தனது சொந்த செலவில் கயிறு மற்றும் மர கட்டைகளை பயன்படுத்தி ரூ.50 ஆயிரம் செலவில் மரப்பாலத்தை கட்டினார்.
சொந்த செலவில் பாலம் கட்டிய நரேஷுக்கு அப்பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
- கடந்த மாதத்தில் 1 கோடியே 7 லட்சம் லட்டுகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன.
- லட்டுகள் விற்பனை மூலம் ரூ.7 கோடி வருமானம் கிடைத்தது.
திருமலை
திருமலையில் பக்தா்களிடம் குறைகள் கேட்கும் (டயல் யுவர் இ.ஓ) நிகழ்ச்சிக்குப் பிறகு முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திருமலையில் ரூ.120 கோடியில் புதிய தோற்றத்துடன் அதிநவீன எஸ்.வி.அருங்காட்சியகம் இந்த ஆண்டு இறுதியான டிசம்பர் மாதத்துக்குள் கட்டி முடிக்கப்பட்டு பக்தர்கள் பார்வையிட அனுமதிக்கப்படுவர். உலகத்திலேயே நம்பர் ஒன் அருங்காட்சியமாக இது இருக்கும். அருங்காட்சியகத்தில் 3டி இமேஜிங் முறையில் வெங்கடாசலபதியின் தங்க நகைகள் பக்தர்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்படும்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரமான, சரியான எடையில் லட்டு பிரசாதங்களை தயாரிப்பதற்காக ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.50 கோடியில் தானியங்கி எந்திரத்தை காணிக்கையாக வழங்க உள்ளது. அதன் மூலம் பக்தர்களுக்கு கூடுதலாக சுகாதாரமான, சுவையான லட்டு பிரசாதங்களை தயாரித்து வழங்க முடியும்.
ஆகாச கங்கை தீர்த்தம் பகுதியில் அஞ்சனாத்ரி கோவில் கட்டும் பணி பக்தர்களின் காணிக்கையில் ரூ.50 கோடியில் இருந்து ரூ.60 கோடி வரையிலான செலவில் நடந்து வருகிறது. புதிய பரகாமணி கட்டிடம் 5-ந்தேதி முதல் செயல்பட தொடங்கும்.
திருமலையில் உள்ள அக்கேசியா தோட்டம் விரைவில் மாற்றப்பட உள்ளது. அதற்கானப் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. அக்கேசியா தோட்டத்தில் பல வண்ண மரங்கள், செடி, கொடிகள் அமைக்கப்படும்.
அத்துடன் சேஷாசலம் வனப்பகுதியில் உள்ள அரிய வகை மரங்கள், செடி, கொடிகள், அரிய வகை மூலிகை தாவரங்கள் அக்கேசியாவுக்கு மாற்றப்படும். அதை, பக்தர்கள் பார்த்து மகிழலாம்.
கடந்த மாதத்தில் 20 லட்சத்து 78 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 37 லட்சத்து 38 ஆயிரம் பக்தர்கள் அன்னப்பிரசாதம் பெற்றுள்ளனர். 7 லட்சத்து 51 ஆயிரம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர்.
ஒருமாத உண்டியல் வருமானமாக ரூ.123.07 கோடி கிடைத்தது. 1 கோடியே 7 லட்சம் லட்டுகள் பக்தர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டுள்ளன. லட்டுகள் விற்பனை மூலம் ரூ.7 கோடி வருமானம் கிடைத்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பிரபல கொள்ளையனான கிரி தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்தார்.
- இரவு முழுவதும் தேடியும் கிரியை கண்டுபிடிக்க முடியவில்லை.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், பொட்டி ஸ்ரீ ராமுலு நெல்லூர் மாவட்டம், உப்பத்துறை பகுதியை சேர்ந்தவர் கிரி (வயது 32).
பிரபல கொள்ளையனான கிரி தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்தார்.
ஏ.எஸ். பேட்டை போலீசார் கிரி மற்றும் வேறு ஒரு நபரை கைது செய்தனர். அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக ஜீப்பில் அழைத்துச் சென்றனர்.
அப்போது கிரி போலீசாரிடம் என்னுடைய நண்பரும் இதே போல் செயின் பறிப்பில் ஈடுபட்டு வருகிறார்.அவரை நான் அடையாளம் காட்டுகிறேன் அவரையும் கைது செய்யுங்கள் என கூறினார். இதனை உண்மை என நம்பிய போலீசார் இரவு 7 மணி அளவில் கிரியின் நண்பரை கைது செய்வதற்காக கிரியை அழைத்து கொண்டு ஆத்மகூரூ வழியாக ஜீப்பில் சென்றனர். அப்போது ஆற்று பாலத்திற்கு முன்பாக வேகத்தடை இருந்தது.
இதனால் அந்த பகுதியில் ஜீப் மெதுவாக சென்றது. இதை பயன்படுத்திக்கொண்ட கிரி ஜீப்பில் இருந்து கீழே குதித்து ஓடினார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் கிரியை பிடிப்பதற்காக துரத்திச் சென்றனர். பாதி பாலத்திற்கு சென்ற கிரி திடீரென பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்தார்.
இதனை பார்த்து அதிர்ந்து போன போலீசார் செய்வது அறியாது திகைத்து நின்றனர். இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து நீச்சல் வீரர்களை அழைத்து வந்து கிரியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இரவு முழுவதும் தேடியும் கிரியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் கிரி ஆற்றில் மூழ்கி இறந்தாரா? அல்லது நீச்சல் அடித்து சென்று தப்பிவிட்டாரா? என போலீசார் குழப்பம் அடைந்தனர்.
தொடர்ந்து படகு மூலம் தேடும் பணியில் ஈடுபட்டனர். நகை பறிப்பு கொள்ளையன் போலீசாரை ஏமாற்றிவிட்டு ஆற்றில் குதித்து சினிமா பாணியில் தப்பிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சாட் மசாலாவை எளிய முறையில் வீட்டிலேயே செய்யலாம்.
- இதை செய்ய அதிக செலவும் ஆகாது.
தேவையான பொருட்கள் :
சீரகம், தனியா, அம்சூர் பவுடர் (மாங்காய்த்தூள் - பெரிய மளிகைக் கடைகளில் கிடைக்கும்) - தலா கால் கப்,
மிளகு - ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - அரை கப்,
கருப்பு உப்பு (பெரிய மளிகைக் கடைகளில் கிடைக்கும்) - ஒரு டீஸ்பூன்,
ஏலக்காய், லவங்கம் - தலா 5,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் கல், தூசி இல்லாமல் பார்த்து வெயிலில் 2 அல்லது 3 நாட்கள் நன்றாக காய வைக்கவும்.
நன்றாக காய்ந்ததும் அதை மிக்சியில் அல்லது கடையில் கொடுத்து நைசாக அரைத்து கொள்ளவும்.
இப்போது சூப்பரான சாட் மசாலா பொடி தயார்!
இதனை சாட் வகைகள் தயாரிக்கும்போது பயன்படுத்தலாம்.
- 5-ந்தேதி ராமகிருஷ்ண தீர்த்த முக்கோட்டி உற்சவம் நடக்கிறது.
- தங்கக் கருட வாகனத்தில் உற்சவர் மலையப்பசாமி எழுந்தருள்கிறார்.
சேஷாசலம் மலைத்தொடரில் 3 கோடி தீர்த்தங்கள் உள்ளது. அதில் 7 முக்கிய தீர்த்தங்களான ஏழுமலையான் கோவில் புஷ்கரணி, ஆகாச கங்கை, பாபவிநாசனம், தும்புரு தூர்த்தம், குமாரதாரா, பாண்டவர் மற்றும் ராமகிருஷ்ண தீர்த்தம் ஆகியவை ஆகும்.
ராமகிருஷ்ண தீர்த்தம் திருமலை கோவிலில் இருந்து 6 மைல் தொலைவில் உள்ளது. அங்கு 5-ந்தேதி ராமகிருஷ்ண தீர்த்த முக்கோட்டி உற்சவம் நடக்கிறது. அங்குள்ள ராமர் மற்றும் கிருஷ்ணர் சிலைகளுக்கு கோவில் அர்ச்சகர்கள் சிறப்புபூஜைகளை செய்து அங்கிருந்து திருமலைக்கு திரும்புவர்.
அன்று பவுர்ணமியையொட்டி இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை கருடசேவை நடக்கிறது. தங்கக் கருட வாகனத்தில் உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
- சந்திரசேகர ராவ் சொன்னபடி தலித் ஒருவரை முதல்வராக்க வேண்டும்.
- சந்திரசேகரராவ் தேர்தலின் போது பல வாக்குறுதிகளை அளித்து முதல்வரானார்.
திருப்பதி:
தெலுங்கானா ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவரும், ஜெகன் மோகன் ரெட்டி தங்கையுமான ஷர்மிளா தனது தாயுடன் சேர்ந்து தெலுங்கானா முழுவதும் பாதயாத்திரை நடத்தி வந்தார்.
அப்போது முதலமைச்சர் சந்திரசேகர ராவ் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார்.
இந்த நிலையில் கடந்த மாதம் பாதயாத்திரை சென்ற ஷர்மிளா மீது முதலமைச்சர் சந்திரசேகர ராவை அவதூறாக பேசியதாக கூறி அவரது பிரச்சார வாகனத்தின் மீது கற்களை வீசினர்.
பின்னர் பிரசார வாகனத்திற்கு தீ வைத்து எரித்தனர். இதனால் பாதயாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முதல்-அமைச்சர் சந்திரசேகர ராவுக்கு ஒரு ஜோடி ஷூக்களை அனுப்ப உள்ளதாக ஐதராபாத்தில் நிருபர்களிடம் ஷர்மிளா கூறினார்.
தனது ஆட்சி அற்புதமாக இருப்பதாக முதலமைச்சர் சந்திரசேகர ராவ் கூறி வருகிறார். தெலுங்கானாவில் எந்த பிரச்னையும் இல்லை என நிரூபித்தால் நான் அரசியலில் இருந்து விலகுகிறேன்.
இது உண்மை இல்லை என்றால் சந்திரசேகர ராவ் மக்களிடம் மன்னிப்பு கேட்டு முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும்.
சந்திரசேகர ராவ் சொன்னபடி தலித் ஒருவரை முதல்வராக்க வேண்டும். சந்திரசேகரராவ் தேர்தலின் போது பல வாக்குறுதிகளை அளித்து முதல்வரானார்.
ஆனால், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. சந்திரசேகர ராவுக்கு தைரியமும், ஆட்சியில் நம்பிக்கையும் இருந்தால் ஒரு நாள் பாத யாத்திரைக்கு என்னுடன் வர வேண்டும்.
இதற்காக தான் ஒரு ஜோடி ஷூக்களை முதலமைச்சர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கிறேன். ஷூ சைஸ் சரியாக இல்லாவிட்டால் எக்ஸ்சேஞ்ச் செய்து கொள்ள பில் கூட அனுப்புகிறேன்.
தொப்பி அணிந்து கொண்டு தனி விமானத்தில் சுற்றி வராமல் தங்களது கட்சிக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்த மக்களை பற்றி சிந்திக்க வேண்டும். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சியில் மக்கள் குறைகள் இன்றி வாழ்ந்தனர்.
பொதுமக்கள் முதல்வரை சந்தித்து குறைகளை தெரிவித்தனர். ஆனால் தற்போது முதலமைச்சரை பொதுமக்கள் யாரும் சந்திக்க முடியாத சூழ்நிலை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- 15-ந்தேதி கருடசேவை நடக்கிறது.
- 18-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா 11-ந்தேதியில் இருந்து 19-ந்தேதி வரை நடக்கிறது. அதையொட்டி 10-ந்தேதி அங்குரார்ப்பணம் நடக்கிறது. பிரம்மோற்சவ விழா நிகழ்ச்சி நிரல் அச்சிடப்பட்ட சுவரொட்டிகள் வெளியீட்டு விழா திருப்பதியில் தேவஸ்தான நிர்வாக அலுவலக கட்டிடத்தில் உள்ள இணை அதிகாரியின் அறையில் நடந்தது. இணை அதிகாரி வீரபிரம்மன் பங்கேற்று சுவரொட்டிகளை வெளியிட்டார்.
இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழாவை பெரிய அளவில் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. முக்கிய நிகழ்ச்சியாக 11-ந்தேதி கொடியேற்றம், 15-ந்தேதி கருடசேவை, 16-ந்தேதி தங்கத் தேர், 18-ந்தேதி தேரோட்டம், 19-ந்தேதி சக்கர ஸ்நானம் ஆகியவைகள் நடக்கிறது.
அப்போது தேவஸ்தான சிறப்பு நிலை துணை அதிகாரி வரலட்சுமி, கண்காணிப்பாளர் செங்கல்ராயலு, கோவில் ஆய்வாளர் கிரண்குமார் ரெட்டி மற்றும் பலர் உடனிருந்தனர்.
- பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க வேண்டும்
- தரையில் வண்ண ரங்கோலி கோலங்கள் வரையப்படுகிறது.
திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருகிற 13-ந்தேதியில் இருந்து 26-ந்தேதி வரை வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடக்கிறது.
அதையொட்டி திரிநேத்ரா விருந்தினர் மாளிகையில் கோவில் அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் வெங்கட்ரமணாரெட்டி தலைமை தாங்கி பேசினார்.
அவர் பேசியதாவது:-
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழாவின்போது முக்கிய நிகழ்ச்சிகளாக ஆதி தம்பதிகளான சிவன்-பார்வதி திருக்கல்யாண உற்சவம், கிரிவலம், தேர்த்திருவிழா ஆகியவை நடக்கின்றன. அந்த நாட்களில் அதிக பக்தர்கள் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்ய வேண்டும். சாதாரண பக்தர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
ஸ்ரீகாளஹஸ்தி நகராட்சி, பஞ்சாயத்து ராஜ் துறையினர் ஒருங்கிணைந்து நகரம் முழுவதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். பக்தர்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். வாகன நிறுத்துமிடத்தில் அடிக்கடி கொசு மருந்து தெளிக்க வேண்டும். அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் பலத்த போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க வேண்டும்
திருக்கல்யாண உற்சவம் அன்று நகரம் மற்றும் கிராமங்களில் குழந்தை திருமணங்கள் நடக்காமல் சமூக நலத்துறையினர், குழந்தைகள் நலத்துறையினர், போலீசார் தீவிர கவனம் செலுத்த வேண்டும். பக்தர்களுக்கு உடல் நலக் கோளாறு ஏற்பட்டால், அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். தயார் நிலையில் 108 ஆம்புலன்சுகள் நிறுத்தி வைத்திருக்க வேண்டும். பக்தர்களின் வசதிக்காக அரசு பஸ்கள் கூடுதலாக இயக்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
திருப்பதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரமேஸ்வர்ரெட்டி பேசுகையில், வாகனச் சேவையின்போது நிர்ணயிக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும். கோவில் அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோர் தங்களின் அடையாள அட்டையை பயன்படுத்த வேண்டும். பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு இடங்களில் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்களை பொருத்த ஏற்பாடு செய்யப்படும், என்றார்.
கூட்டத்தில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு, நிர்வாக அதிகாரி வி.சாகர்பாபு, திருப்பதி வருவாய் கோட்டாட்சியர் கனகநரசாரெட்டி மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
கோவிலின் 4 மாட வீதிகளில் ஊர்வலத்துக்காக பயன்படுத்தும் வாகனங்களுக்கும், கோவில் கோபுரங்களுக்கும் வா்ணம் பூசும் பணி நடக்கிறது. பக்தர்களை கவரும் வகையில் கோவில் வளாகம் முழுவதும் பல வண்ண மின்விளக்குகள் அலங்காரம் செய்யப்படுகிறது. தரையில் வண்ண ரங்கோலி கோலங்கள் வரையப்படுகிறது. அந்தப் பணிகளை கோவில் அதிகாரிகள் மேற்பார்வை செய்தனர்.






