என் மலர்
ஆந்திர பிரதேசம்
- பா.ஜ.க. பிரமுகரிடம் காவல்துறை அதிகாரி நடந்து கொண்ட விதம் ஆட்சியாளர்களின் மனநிலையைப் பிரதிபலிக்கிறது.
- ஜனநாயகத்திற்கு எதிரான இந்த அடக்குமுறை நடவடிக்கைகளை நாங்கள் கண்டிக்கிறோம்.
திருப்பதி:
ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி நேற்று முன்தினம் நெல்லூர் மாவட்டம், காவாலிக்கு வந்தார். அப்போது பா.ஜ.க.வினர் முதல்-அமைச்சரின் காரை மறிக்க முயற்சி செய்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த டி.எஸ்.பி. வெங்கட் ரமணா பா.ஜ.க. பிரமுகர் மொகராலா சுரேஷின் கழுத்தில் காலால் மிதித்து தாக்கினார். இந்த சம்பவத்திற்கு பல்வேறு எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் ஆந்திராவில் பிரபல நடிகரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் நேற்று டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
அதில் எதிர்ப்புக் குரல்களை அடக்கி, காலடியில் மிதித்தால் அது சர்வாதிகாரம். பா.ஜ.க. பிரமுகரிடம் காவல்துறை அதிகாரி நடந்து கொண்ட விதம் ஆட்சியாளர்களின் மனநிலையைப் பிரதிபலிக்கிறது.
ஜனநாயகத்திற்கு எதிரான இந்த அடக்குமுறை நடவடிக்கைகளை நாங்கள் கண்டிக்கிறோம். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசின் ஊழலுக்கு எதிரான சுரேஷின் போராட்டத்திற்கு நாங்கள் துணை நிற்கிறோம் என்று கூறியுள்ளார்.
- அன்னதானத்தில் தரமான அரிசியை பயன்படுத்தி வருகிறோம்.
- உணவின் தரம் தொடர்ந்து பரிசோதிக்கப்படுகிறது.
திருமலையில் உள்ள அன்னமயபவனில் பக்தர்களிடம் இருந்து தொலைப்பேசி மூலம் குறைகள் கேட்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில் தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி பங்கேற்று பக்தர்கள் தெரிவித்த புகார்கள், குறைகள், ஆலோசனைகளுக்கு பதில் அளித்துப் பேசினார்.
பக்தர்கள் தெரிவித்த குறைகளும், அதற்கு அதிகாரி ஏ.வி.தர்மாரெட்டி அளித்த பதில்களும் வருமாறு:-
கோபிச்சாரி, குண்டூர்: திருப்பதி தேவஸ்தான இணையதளம் மற்றும் மொபைல் ஆப் பயன்பாடு நன்றாக உள்ளது. ஸ்ரீவாரி சேவைக்காக ஆன்லைனில் முன்பதிவு செய்யும்போது ப்ரொபைல் பைலாக வருகிறது. அதை சரி செய்ய வேண்டும்.
அதிகாரி: நாங்கள் போன் செய்து விவரம் தெரிவிப்போம்.
அபர்ணா, அனந்தபுரம்: அங்கப்பிரதட்சண டோக்கன்கள் 2 மட்டும் ஆன்லைனில் பதிவாகி வருகிறது. அதை 4 ஆக அதிகரிக்க வேண்டும்.
அதிகாரி: ஒரு பக்தர் ஆன்லைனில் 2 அங்கப்பிரதட்சண டோக்கன்களை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். இந்த டோக்கன் பெற முடியாத பக்தர்கள் வேறு வழிகளில் தரிசனம் செய்யலாம். நீங்கள் ஒவ்வொரு மாதமும் 18 முதல் 20 வரை ஆர்ஜித சேவைகளின் லக்கி டிப்புக்கு பதிவு செய்யலாம். 20-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை டிப் டிக்கெட் பெற்றவர்கள் பணத்தைச் செலுத்தி டிக்கெட் வாங்க வேண்டும். பிற ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் 21-ந்தேதி வெளியாகிறது. ஸ்ரீவாணி, அங்கப்பிரதட்சண, முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தரிசன டிக்கெட் 23-ந்தேதி வெளியிடப்படுகிறது. அதேபோல் ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் 24-ந்தேதி, அறைகள் ஒதுக்கீடு 25-ந்தேதி வெளியிடப்படும். இதைக் கருத்தில் கொண்டு பக்தர்கள் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
சீனிவாஸ், சிலக்கலூரிபேட்டை: கல்யாண உற்சவத்தில் குழந்தைகள் பங்கேற்க அனுமதிப்பார்களா?
அதிகாரி: கல்யாண மண்டபத்தில் இடம் குறைவாக உள்ளதால் கோவிலில் அதிக மக்களை அனுமதிக்க வாய்ப்பில்லை. மைனர்கள் பெற்றோருடன் அனுமதிக்கப்படுகிறார்கள்.
ஜெயஸ்ரீ, ஐதராபாத்: மே மாதம் திருமலைக்கு வந்தோம். வெயிலின் வெப்பத்தால் சாலையில் நடந்தது சிரமமாக இருந்தது. தரை விரிப்புகள் போடுங்கள்.
அதிகாரி: கோடையில் கோவில் தெருக்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பகுதிகளில் குளிர்ச்சியாக இருக்க நாங்கள் கூல் பெயிண்ட் மற்றும் மேட்களை போடுகிறோம். அடிக்கடி தண்ணீர் தெளித்து வருகிறோம். ஏதேனும் பிழைகள் இருந்தால் சரி செய்யப்படும்.
அசோக், சென்னை: மகா அங்கப்பிரதட்சணம் செய்யும் பக்தர்கள் நீராட புஷ்கரணிக்கு சென்றால், அங்கு இரவில் புஷ்கரணியை மூடி வைத்துள்ளனர். மேலும் திருமலை நம்பி கோவில் வாசலில் கேட் அமைத்துள்ளனர்.
அதிகாரி: மகா அங்கப்பிரதட்சணம் செய்யும் பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் இரவில் புஷ்கரணி திறந்து வைக்கப்படும். திருமலைநம்பி கோவில் வாசலில் உள்ள கேட் அகற்றப்பட்டு காவலர்கள் நிறுத்தப்படுவார்கள்.
வெங்கட், காக்கிபாரா: லட்டு தரம் சரியில்லை. அன்னதானத்தில் அரிசியின் தரம் சரியில்லை.
அதிகாரி: லட்டு தயாரிக்கும் தரமான மூலப்பொருட்களை டெண்டர் மூலம் வாங்கி வருகிறோம். சிறந்த தரத்துக்கான பரிந்துரைகளை போட்டு ஊழியர்களுக்கு வழங்குவோம். அன்னதானத்தில் தரமான அரிசியை பயன்படுத்தி வருகிறோம். உணவின் தரம் தொடர்ந்து பரிசோதிக்கப்படுகிறது.
மேற்கண்டவாறு பக்தர்கள் தெரிவித்த குறைகளுக்கு அதிகாரி பதில் அளித்தார்.
- கடந்த 3 நாட்களாக கணவன்- மனைவி இடையே மீண்டும் சண்டை நடந்து வந்தது.
- போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது ஷோபா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், சூர்யா பேட்டை மாவட்டம் முனகலுவை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 41). இவர் வனஸ்தலிபுரம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக வேலை செய்து வருகிறார்.
இவரது மனைவி ஷோபா (38). இவர்களுக்கு சாத்விக் (14), நித்தின் (9) என 2 மகன்கள் உள்ளனர். ஷோபா வீட்டிலேயே தையல் தொழில் செய்து வந்தார்.
ராஜ்குமார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புவனகிரி போலீஸ் நிலையத்தில் வேலை செய்த போது அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் கள்ளத்தொடர்பில் இருந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இதுகுறித்து ஷோபா தனது பெற்றோருக்கு தெரிவித்தார் அவரது பெற்றோர் ராஜ்குமார் குறித்து போலீஸ் டி.ஜி.பி.யிடம் புகார் செய்தனர். அவர் ராஜ்குமாரை அழைத்து அறிவுரைகளை வழங்கி அனுப்பி வைத்தார். இருப்பினும் அவரது நடத்தையில் மாற்றம் ஏற்படவில்லை.
கடந்த 3 நாட்களாக கணவன்- மனைவி இடையே மீண்டும் சண்டை நடந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலை முடித்துவிட்டு ராஜ்குமார் வீட்டிற்கு வந்தார்.
அப்போது ஷோபா முதல் மாடியில் இருந்து படிக்கட்டில் கீழே இறங்கி வந்தார். இதனை கண்ட ராஜ்குமார் ஆத்திரத்தில் மனைவியை பிடித்து கீழே தள்ளினார். கத்தியை எடுத்து ஷோபாவின் கழுத்தை அறுத்தார்.
இதனைக் கண்ட அவர்களது மூத்த மகன் சாத்வித் தந்தையை தடுத்து நிறுத்தினான். ராஜ்குமார் மகனையும் கத்தியால் வெட்டினார்.
இதில் காயம் அடைந்த சாத்விக் ரத்த காயங்களுடன் வனஸ்தலிபுரம் போலீஸ் நிலையத்திற்கு சென்று தகவல் தெரிவித்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது ஷோபா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார். போலீஸ்காரர் ராஜ்குமார் அங்கிருந்து தப்பி ஓடினார்.
போலீசார் ஷோபாவை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஷோபா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள ராஜ்குமாரை தேடி வருகின்றனர்.
- பெண் ஒருவர் 3 இளம்பெண்களிடம் அதிக அளவில் பணம் கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து வந்தார்.
- போலி சாமியார் தங்களை ஏமாற்றியதால் விரக்தி அடைந்த இளம்பெண்கள் சாலையோரம் நின்று அழுது கொண்டிருந்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், பொன்னே கல்லுவை சேர்ந்தவர் 35 வயது போலி சாமியார். இளம் பெண்களை வைத்து நிர்வாண பூஜை செய்தால் அதிக அளவில் பணம் கிடைக்கும் என கூறி வந்தார். இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தார்.
இதனை கண்ட சிலக்கலூருபேட்டையை சேர்ந்த பெண் ஒருவர் போலி சாமியாரை தொடர்பு கொண்டார். அப்போது போலி சாமியார் நிர்வாண பூஜைக்காக பெண்களை அழைத்து வந்தால் அதிக அளவில் பணம் கொடுப்பதாக தெரிவித்தார்.
அந்த பெண் கர்னூல் மாவட்டம், ஆத்மகூரு பகுதியை சேர்ந்த 3 இளம்பெண்களிடம் அதிக அளவில் பணம் கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து வந்தார்.
இதையடுத்து போலி சாமியார் 3 இளம்பெண்களையும் விஜயவாடா, ஓங்கோல், குண்டூர், பொன்னே கல்லு உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று அங்கு நிர்வான பூஜை செய்து பலாத்காரம் செய்தார்.
பின்னர் போலி சாமியார் இளம்பெண்களை காரில் ஏற்றி கொண்டு குண்டூர் அருகே உள்ள அமராவதி சாலையில் இறக்கி விட்டு தப்பி சென்றார்.
போலி சாமியார் தங்களை ஏமாற்றியதால் விரக்தி அடைந்த இளம்பெண்கள் சாலையோரம் நின்று அழுது கொண்டிருந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் இதனைக் கண்டு நல்ல பாடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அனைத்து மகளிர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இளம்பெண்களை மீட்டு விசாரணை நடத்தினர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து போலி சாமியார், அவருக்கு உடந்தையாக இருந்த பெண் மற்றும் 3 வாலிபர்களை தேடி வருகின்றனர்.
- கொதிக்கும் தார் சாலையில் தலைக்குப்புற விழுந்த சுரேஷ் கழுத்தில் மிதித்ததால் வலி தாங்க முடியாமலும், மூச்சு விட முடியாமலும் வேதனை அடைந்தார்.
- பா.ஜ.க. பிரமுகரை டி.எஸ்.பி. காலால் மிதித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி அரசியல் கட்சியினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் காவாலியில் நேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்க முதல்-அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி காரில் வந்தார்.
அப்போது பா.ஜ.க.வினர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் ஊழல் பெருகி விட்டதாகவும், அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து உதயகிரி சந்திப்பில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்பகுதியில் டி.எஸ்.பி. வெங்கடரமணா ரெட்டி தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
அப்போது முதல்-அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் கான்வாய் வாகனங்கள் அணிவகுத்து வந்தன.
இதனைக் கண்ட பா.ஜ.க. மாவட்ட தலைவர் குண்டலப்பள்ளி பர நாயக்கா, ராமி ரெட்டி பிரதாப் குமார் ரெட்டி எம்.எல்.ஏ, பொறுப்பாளர்கள் முகிராளா சுரேஷ் வெங்கடேஸ்வரன் ஆகியோர் போலீசாரின் தடுப்பையும் மீறி வாகனங்களை தடுத்து நிறுத்த முயன்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த போலீசார் பா.ஜ.க.வினரை தாக்கினர். மேலும் முதல்-அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி காரை மறிக்க முயன்ற சுரேஷை டி.எஸ்.பி. வெங்கடரமணா கீழே தள்ளி 2 கை, கால்களையும் மடித்துக்கொண்டு கழுத்தில் 2 கால்களால் மிதித்தார்.
கொதிக்கும் தார் சாலையில் தலைக்குப்புற விழுந்த சுரேஷ் கழுத்தில் மிதித்ததால் வலி தாங்க முடியாமலும், மூச்சு விட முடியாமலும் வேதனை அடைந்தார்.
இதனைக் கண்ட பா.ஜ.க.வினர் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் சுரேஷை விடுவித்தனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
பா.ஜ.க. பிரமுகரை டி.எஸ்.பி. காலால் மிதித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி அரசியல் கட்சியினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- ஏர் உழவு பணியின் போது கலப்பையில் தொட்டில் கட்டி அதில் குழந்தையை படுக்க வைக்கின்றனர்.
- ஏர் உழும்போது மாடுகளின் ஆனந்த நடையில் மணி ஓசை கேட்கிறது. தொட்டில் தானாக அசைந்து தாலாட்டுவது போல உள்ளது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம், பொல்லாவரத்தை சேர்ந்தவர் மது. இவரது மனைவி ஷிரவாணி. விவசாய கூலி வேலை செய்து வருகின்றனர்.
தம்பதிக்கு 5 மாத பெண் குழந்தை உள்ளது. அவர்களது குழந்தையை கவனித்துக் கொள்ள வீட்டில் யாரும் இல்லை. தினமும் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது.
இதனால் மது தம்பதியினர் விவசாய பணிக்கு செல்லும் போது தங்களது குழந்தையையும் உடன் எடுத்துச் செல்கின்றனர்.
ஏர் உழவு பணியின் போது கலப்பையில் தொட்டில் கட்டி அதில் குழந்தையை படுக்க வைக்கின்றனர்.
ஏர் உழும்போது மாடுகளின் ஆனந்த நடையில் மணி ஓசை கேட்கிறது. தொட்டில் தானாக அசைந்து தாலாட்டுவது போல உள்ளது.
குழந்தையை தொட்டிலில் போட்ட சிறிது நேரத்தில் தூங்கி விடுகிறது. மது தம்பதியினரும் தங்களது பணிகளை இடையூறு இன்றி செய்து வருகின்றனர்.
குழந்தை பசிக்கு அழும்போது மட்டும் குழந்தையை தொட்டிலில் இருந்து தூக்கி ஷிரவாணி பால் கொடுக்கிறார்.
மீண்டும் தொட்டிலில் போட்டவுடன் குழந்தை தூங்கி விடுகிறது. இதனை காணும் அப்பகுதி மக்கள் மது தம்பதியினரை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
மேலும் குழந்தையை ஜாக்கிரதையாக பார்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினர்.
- திருமலைச் செல்லும் இரண்டு மலைப்பாதை சாலைகள் மற்றும் நடைபாதையாக பக்தர்கள் பயன்படுத்தும் சாலைகளையும் முழுவதுமாக சுத்தம் செய்தனர்.
- பக்தர்கள் விட்டுச் செல்லும் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் ஆகியவற்றை அப்புறப்படுத்தினர்.
திருப்பதி ஏழுமலையான் கோவில் வளாகம், மலைப்பாதை மற்றும் நடைபாதைகளில் பக்தர்கள் கொண்டுவரும் உணவு தண்ணீர் பாட்டில்களால் அதிக அளவில் குப்பை சேருகின்றன.
இவற்றை அகற்ற திருப்பதியில் மாதத்தில் ஒருநாள், சுத்த திருமலை, 'சுந்தர திருமலை என்ற பெயரில் சுத்தம் செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இதில் பங்கேற்க முக்கியமான பிரமுகர்கள், பக்தர்கள், தேவஸ்தான அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் அழைப்பு விடுத்தது.
அதன்படி முதன் முறையாக மே மாதத்திற்கான சுத்தப்படுத்தும் பணி இன்று நடந்தது.
இந்தத் தூய்மைப் பணியை சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி ரமணா தொடங்கி வைத்தார். தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி, கலெக்டர் தேவஸ்தான ஊழியர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பக்தர்கள் உட்பட 2000 பேர் பங்கேற்றனர்.
திருமலைச் செல்லும் இரண்டு மலைப்பாதை சாலைகள் மற்றும் நடைபாதையாக பக்தர்கள் பயன்படுத்தும் சாலைகளையும் முழுவதுமாக சுத்தம் செய்தனர்.
அந்தப் பகுதிகளில் பக்தர்கள் விட்டுச் செல்லும் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் ஆகியவற்றை அப்புறப்படுத்தினர்.
அவர்களுடன் கோவிலுக்கு வந்த பக்தர்களும் ஆர்வத்துடன் இணைந்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இந்தத் தூய்மைப் பணியில் ஈடுபட்ட நபர்களை குறிப்பிட்ட இடத்துக்குக் கொண்டு சேர்ப்பது, பணி முடிந்த பிறகு மீண்டும் அவர்களை அழைத்துச் செல்ல வாகன வசதி செய்யப்பட்டிருந்தது.
அவர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் போன்றவற்றை வழங்கினர். சேகரிக்கப்பட்ட குப்பைகளை உடனுக்குடன் அங்கிருந்து அகற்றப்பட்டது.
இது குறித்துப் பேசிய திருமலை தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி, 'திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள் போன்றவற்றைக் கொண்டு வருவதைத் தவிர்க்க வேண்டும்' என்று பக்தர்களிடம் வலியுறுத்தினார்.
- கூடுதலாக மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டன.
- போலீசார் வருவாய்த்துறையினர் குவிக்கப்பட்டு அசம்பாவித சம்பவங்கள் நிகழாதவாறு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், விஜயநகரம், கொவ்வாடா அக்ரகாரத்தில் நேற்று திருமணம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பகல் 12 மணி முதல் மதியம் 2 மணி வரை சுமார் 2,000 பேருக்கு கல்யாண விருந்து பரிமாறப்பட்டது.
சில மணி நேரத்தில் விருந்து சாப்பிட்டவர்களுக்கு அடுத்தடுத்து வாந்தி, வயிற்றுப்போக்கு, மயக்கம் ஏற்பட்டது.
இதனால் மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து 108 ஆம்புலன்சுகள் மூலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அங்குள்ள பதிரேகா ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
மேலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அதே பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளியில் மருத்துவ முகாம் அமைத்து சிகிச்சை அளித்தனர்.
மேல் சிகிச்சைக்காக துளாறு போகபுலா அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டனர். ஆஸ்பத்திரி முன்பாக பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், நண்பர்கள் ஏராளமானார் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கூடுதலாக மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டன.
போலீசார் வருவாய்த்துறையினர் குவிக்கப்பட்டு அசம்பாவித சம்பவங்கள் நிகழாதவாறு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
கல்யாண விருந்து சாப்பிட்ட 600 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஏப்ரல் மாதம் 20 லட்சத்து 95 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
- லட்டு பிரசாதம் ரூ.1 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
திருமலை :
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஏப்ரல் மாதம் 20 லட்சத்து 95 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். உண்டியல் வருமானமாக ரூ.114 கோடியே 12 லட்சம் கிடைத்துள்ளது. லட்டு பிரசாதம் ரூ.1 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அன்னப்பிரசாதம் பெற்ற பக்தர்களின் எண்ணிக்கை 42.64 லட்சம். தலைமுடி காணிக்கை செலுத்திய பக்தர்களின் எண்ணிக்கை 9.03 லட்சம் ஆகும்.
நேற்று முன்தினம் 67 ஆயிரத்து 853 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அங்குள்ள கல்யாணக்கட்டாக்களில் 33 ஆயிரத்து 381 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று ஒருநாள் உண்டியல் வருமானமாக ரூ.3 கோடியே 19 லட்சம் கிடைத்ததாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பத்திரப்பதிவு கட்டணம் மட்டுமே சுமார் ரூ.8 ஆயிரம் கோடி செலவாகியுள்ளது.
- இந்த 2,06,170 ஏக்கர் நிலத்தின் உரிமை பெற்றிருப்பதன் மூலம் 97,471 குடும்பங்கள் பயனடையும்.
நெல்லூர் :
ஆந்திராவில் ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே சரியான உரிமையாளரை அறியப்படாத நிலங்களாக லட்சக்கணக்கான ஏக்கர் நிலம் உள்ளது. இவை 'புள்ளியிடப்பட்ட நிலங்கள்' என வகைப்படுத்தப்பட்டு இருந்தன.
இந்த நிலத்தை பயன்படுத்தி வரும் விவசாயிகளே அந்த நிலத்தை சொந்தமாக்கிக்கொள்ள அனுமதிக்குமாறு அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டு வந்தது. நீண்ட காலமாக இருந்து வரும் இந்த கோரிக்கையை முந்தைய அரசுகள் இதுவரை கண்டுகொள்ளவில்லை.
எனினும் முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான தற்போதைய அரசு, இந்த நிலத்தின் பட்டாக்களை அந்தந்த விவசாயிகளுக்கு வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டது.
அதன்படி 12 ஆண்டுகளுக்கு மேல் நிலத்தை அனுபவித்து வரும் விவசாயிகளுக்கு அந்த நிலத்தின் பட்டா வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. இதற்காக கடந்த மார்ச் மாதம் சட்டசபையில் மசோதா ஒன்று நிறைவேற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து அந்த விவசாயிகளை கண்டறிவதற்காக மாவட்ட கலெக்டர்கள், வருவாய் அதிகாரிகளுக்கு மாநில அரசு உத்தரவிட்டது. இதற்கான வழிகாட்டுதல்களையும் அரசு வழங்கியது. இவ்வாறு அடையாளம் காணப்பட்ட சுமார் 1 லட்சம் விவசாயிகளுக்கு நேற்று ஒரே முறையாக பட்டாக்கள் வழங்கப்பட்டன.
நெல்லூர் மாவட்டத்தின் கவேலியில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி, பயனாளிகளுக்கு வழங்கினார். 2.06 லட்சம் ஏக்கர் நிலத்துக்கான பட்டாக்களை அவர் விவசாயிகளிடம் ஒப்படைத்தார்.
நிகழ்ச்சியில் பேசும்போது அவர், 'இந்த நிலங்களின் மதிப்பு உங்களுக்கு தெரியுமா? சந்தை மதிப்பு குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரம் கோடியாவது இருக்கும். பத்திரப்பதிவு கட்டணம் மட்டுமே சுமார் ரூ.8 ஆயிரம் கோடி செலவாகியுள்ளது. இந்த 2,06,170 ஏக்கர் நிலத்தின் உரிமை பெற்றிருப்பதன் மூலம் 97,471 குடும்பங்கள் பயனடையும்' என்று கூறினார்.
முன்னதாக இந்த நிலங்கள் குறித்து ஜெகன்மோகன் ரெட்டி வெளியிட்ட வீடியோ பதிவு ஒன்றில் கூறியிருந்ததாவது:-
தனியார் அல்லது அரசுக்குச் சொந்தமானது என உரிமையை தெளிவாக நிறுவ முடியாதபோது, இந்த நிலங்கள் 100 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் அரசாங்கத்தால் வருவாய் பதிவேடுகள் அல்லது ரீசர்வே பதிவேட்டில் வகைப்படுத்தப்பட்டு அப்படியே விடப்பட்டன.
இந்த சந்தேகத்தின் காரணமாக இந்த நிலங்களை பயன்படுத்தி வந்த விவசாயிகள், அவற்றை விற்பனை செய்யவோ, அடமானம் உள்ளிட்ட பிற நோக்கங்களுக்கு பயன்படுத்த முடியாமலோ அவதிப்பட்டனர்.
நெல்லூர் மாவட்டத்தில் மட்டுமே இவ்வாறு 43 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இருந்தன. அண்டை மாநிலமான பிரகாசத்தில் 37 ஆயிரம் ஏக்கர், கடப்பாவில் 22 ஆயிரம ஏக்கர் என அனைத்து மாவட்டங்களிலுமாக 2 லட்சம் ஏக்கருக்கு மேலான மேற்படி நிலங்கள் இருந்தன.
தற்போது இந்த பிரச்சினைக்கு ஒரே நடவடிக்கை மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு ஜெகன்மோகன் ரெட்டி கூறியுள்ளார்.
- யானைகளிடம் இருந்து பயிர்களை காப்பதற்காக விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் மின்வேலி அமைத்தனர்.
- சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், உயிரிழந்த யானைகளை மீட்டனர்
திருப்பதி:
ஒடிசாவில் இருந்த வந்த 6 காட்டு யானைகள் ஆந்திரம் மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் பாமினி மண்டலத்தில் சுற்றித்திரிந்தன.
இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளனர்.
இந்நிலையில், யானைகளிடம் இருந்து பயிர்களை காப்பதற்காக விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் மின்வேலி அமைத்தனர்.
இந்தநிலையில் இன்று காலை பார்வதிபுரம் அடுத்த கத்ரகெடா கிராமத்திற்குள் 6 யானைகள் புகுந்தன. உணவைத் தேடி விளைநிலங்களை நோக்கி வந்த யானைகள் மீது அங்கு அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் உரசியது இதில் மின்சாரம் பாய்ந்து 4 யானைகள் பலியாகின. 2 யானைகள் உயிர்தப்பின.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், உயிரிழந்த யானைகளை மீட்டனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பஸ்சில் சீட் பிடிப்பது சம்பந்தமாக இளம்பெண் ஒருவருக்கும் சப்-இன்ஸ்பெக்டரின் மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
- இளம்பெண்ணை பஸ்சிலிருந்து தரதரவென கீழே இழுத்து தள்ளினார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் சித்திபேட்டை அருகே உள்ள முக்தியால்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அணில்குமார். அங்குள்ள போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.
இவர் நேற்று தனது மனைவியுடன் பஸ்சில் சென்று கொண்டிருந்தார்.
கூட்டம் அதிகமாக இருந்ததால் பஸ்சில் ஏறும்போது பயணிகளுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பஸ்சில் சீட் பிடிப்பது சம்பந்தமாக இளம்பெண் ஒருவருக்கும் சப்-இன்ஸ்பெக்டரின் மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதனைக் கண்டு ஆத்திரம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் அனில்குமார் பஸ்சை நிறுத்தினார். இளம்பெண்ணை பஸ்சிலிருந்து தரதரவென கீழே இழுத்து தள்ளினார்.
இதனைக் கண்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து முக்தியால்பேட்டை டி.எஸ்.பி. அலுவலகத்தில் இளம்பெண் புகார் அளித்தார்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் சப்-இன்ஸ்பெக்டர் இளம்பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்டது தெரியவந்தது.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் அனில் குமார் மற்றும் அவரது மனைவி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் சப்-இன்ஸ்பெக்டர் அனில்குமாரை சஸ்பெண்டு செய்தனர்.






