என் மலர்tooltip icon

    பெண்கள் மருத்துவம்

    வயது அதிகரிக்கும்போது பெண்களுக்கு உடலில் பிரச்சினைகளும் அதிகரிக்கும். ஆகவே வயது அதிகரிக்கும்போது அதற்கேற்ற ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
    வயது அதிகரிக்கும்போது பெண்களுக்கு உடலில் பிரச்சினைகளும் அதிகரிக்கும். இதற்கு காரணம், உடலில் உள்ள சத்துக்களின் அளவு குறைவதுதான். ஆகவே வயது அதிகரிக்கும்போது அதற்கேற்ற ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதிலும் இறுதி மாதவிடாய் நெருங்க நெருங்க உடலின் செயல்பாடுகள் குறையும்.

    ஹார்மோன் சமச்சீரின்மையால் உடல் பலமும் குறையும். இதனால் மூட்டு வலி, கால் வலி மற்றும் பல்வேறு உடல்நல பிரச்சினைகள் தோன்றும். இத்தகைய பிரச்சினைகளை எதிர்கொள்ள சரியான வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். பெண்களின் உடலுக்கு நலன் செய்யும் வைட்டமின்கள் பற்றி பார்ப்போம்!

    வைட்டமின் பி-12

    40 வயதான பெண்களுக்கு இன்றியமையாதது, வைட்டமின் பி-12. அதிலும் அறுவை சிகிச்சை நடந்திருந்த அல்லது இதயத்தில் பிரச்சினை இருந்தால் இச்சத்து மிகவும் முக்கியமானது. இறைச்சி மற்றும் முட்டையில் வைட்டமின் பி-12 அதிகம் உள்ளது.

    வைட்டமின்- பி

    இது மற்றொரு அவசியமான வைட்டமின். குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்களுக்கு முக்கியமான வைட்டமினாகும். ஏனெனில் இவை தான் உடலுக்கு தேவைப்படும் சக்தியை கொடுக்கிறது. பசலைக்கீரை, சால்மன் மீன்கள், உருளைக்கிழங்கு மற்றும் பருப்பு வகைகளில் இருந்து இச்சத்துக்களைப் பெறலாம்.



    வைட்டமின்- டி

    தினமும் காலையில் 15 நிமிடம் சூரிய ஒளி உடலில் படுமாறு இருந்தால், அது உடலில் ஏற்படும் சோர்வை போக்கி விடும். அதுமட்டுமல்லாமல் சால்மன் மீன், பால், பால் வகை உணவுகளை அதிகமாக எடுத்துக்கொண்டால் உடலுக்கு தேவையான வைட்டமின்-டி கிடைத்து விடும். பெண்கள் குளுகுளு அறைக்குள்ளே வாழ்க்கையை நகர்த்தினால் அவர்கள் உடலில் வைட்டமின் டி பற்றாக் குறை உருவாகும். அதனால் காலை வெயில் சிறிது நேரம் உடலில்படட்டும்.

    வைட்டமின் கியூ-10

    இந்த வைட்டமின் 40 வயதைக் கடந்த பெண்களுக்கு அவசியம். இந்த சத்து மீன் மற்றும் நவதானியங்களில் உள்ளது.

    இரும்புச்சத்து

    இறுதி மாதவிடாய் காலங்களில் பெண்களின் உடலில் இரும்புச் சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் பல பெண்கள் ரத்தசோகைக்கு உள்ளாவார்கள். எனவே இந்த நிலையை தவிர்க்க, பெண்கள் கீரைகளையும், ப்ராக்கோலியையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    வைட்டமின்- சி

    இந்த சத்து நிறைந்த உணவுகளை உட்கொண்டால், வயதான காலத்தில ஏற்படும் பார்வைக் கோளாறு பிரச்சினை ஏற்படாமல் தவிர்க்கலாம். ஆரஞ்சு பழத்தில் இந்த சத்து உள்ளது. ஆரஞ்சு பழச்சாறும் அடிக்கடி பருகலாம்.



    வைட்டமின்- ஏ

    இந்த சத்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சர்க்கரைவள்ளிக் கிழங்கு, கேரட் போன்றவற்றில் இது அதிகம் இருக்கிறது.

    மக்னீசியம்

    அவகேடோ மற்றும் வாழைப்பழத்தில் மக்னீசியம் சத்து அதிகம் உள்ளது. இந்த சத்துள்ள உணவை உட்கொண்டால், நரம்பு மண்டலமானது ஆரோக்கியமாக இயங்கும்.

    ஜிங்க்

    ஜிங்க் சத்து ஆண்களுக்குதான் மிக முக்கியமானது என்ற கருத்து நிலவுகிறது. இது பெண்களுக்கும் இன்றியமையாதது. காளான், பீன்ஸ் போன்றவற்றில் இந்த சத்து காணப்படுகிறது.

    வைட்டமின்- ஈ

    பருப்பு வகைகளிலும், ப்ராக்கோலியிலும் வைட்டமின் ஈ அளவுக்கு அதிகமாக இருப்பதால், வாரத்திற்கு ஒரு முறை பெண்கள் அவைகளை உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். வயதாவதால் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் பதற்றம் அதன் மூலம் குறையும்.
    பலராலும் கண்டுகொள்ளப்படாத மாதவிடாய்ச் சுழற்சியின் மறுபக்கமே, ஒழுங்கற்ற மாதவிடாய். இது இன்றைக்கு பல பெண்கள் சந்தித்து வரும் முக்கியமான பிரச்சனை.
    பலராலும் கண்டுகொள்ளப்படாத மாதவிடாய்ச் சுழற்சியின் மறுபக்கமே, ஒழுங்கற்ற மாதவிடாய். இது இன்றைக்கு பல பெண்கள் சந்தித்து வரும் முக்கியமான பிரச்சனை.

     * “பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் (Polycystic Ovarian Syndrome - PCOS): ஹார்மோன் சமநிலையில்லாமல் இருக்கும்போது, பி.சி.ஓ.எஸ் ஏற்படும். இது கருமுட்டைகளில் பாதிப்பை ஏற்படுத்தும். இதைக் கவனிக்காவிட்டால், பெண்களுக்குக் கருத்தரிப்பதில்கூட பாதிப்பை ஏற்படுத்தும்.

    மாதவிடாய்ச் சுழற்சியில் பாதிப்பு ஏற்படுத்துவது, இதன் மிக முக்கியமான அறிகுறி. பெரும்பாலும் பருவம் எய்திய பெண்களுக்கு, முதல் சில மாதங்களுக்கு இந்தப் பிரச்னை இருக்கும். தொடர்ந்து மாதவிடாய்ச் சுழற்சி ஒழுங்கற்று இருந்தால், இந்தப் பிரச்னை உருவாகும். உடற்பருமனாக இருப்பவர்களுக்கு இதற்கான வாய்ப்பு அதிகம். இவர்கள், உடல் எடை குறைப்பதன் மூலம் இதை சரிசெய்துவிடலாம்.

    * தைராய்டு பிரச்சனைகள் (Thyroid Problems): தைராய்டு சுரப்பிகள் சரியாக செயல்படாமல் இருக்கும்போது, மாதவிடாய் கால சுழற்சியில் பிரச்சனை ஏற்படும். இந்தப் பிரச்சனை உள்ளவர்களுக்கு, மாதவிடாய்ப் பிரச்னை மட்டுமன்றி உடல் எடை சட்டென அதிகரிப்பது அல்லது குறைவது போன்றவையும் ஏற்படும். இதில், ஹைப்போதைராய்டிஸ்ம் (Hypothyroidism) முக்கியமான ஒரு பிரச்சனை.  

    வளர்சிதை மாற்றத்தின் வளர்ச்சியை இது பாதிக்கும். இதனால், உடலின் செயல்பாடுகள் யாவும் குறைந்து, உடல் சோர்வடையும். மாதவிடாய்ச் சுழற்சி மட்டுமன்றி, உடல்பருமன், கரு உருவாவதில் சிக்கல், ஹைப்பர்-கொலெஸ்ட்ரோலீமியா (Hypercholesterolemia) ஏற்படும். இதய பாதிப்புகள் போன்ற பிரச்சனைகளையும் இது ஏற்படுத்தும்.



    * ஹார்மோன்  - இம்பேலன்ஸ் (Hormone imbalance) : புரொஜெஸ்ட்ரான் (Progesterone), ஈஸ்ட்ரோஜன் (Estrogen) போன்ற மாதவிடாய்க்கு உதவும் ஹார்மோன்களில் பாதிப்பு ஏற்படும்போது, மாதவிடாய்ச் சுழற்சியில் பாதிப்பை ஏற்படுத்தி உடல் அதை வெளிக்காட்டும்.

    * பெரிமெனோபாஸ் (Perimenopause): பெண்களுக்கு `மெனோபாஸ்’ எனப்படும் மாதவிடாய்ச் சுழற்சி முடியப்போகும் சில மாதங்களுக்கு முன்னர் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படும். 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மட்டுமே இதன் (Perimenopause) காரணமாக ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படும்.''

    அதிகமாக ஜங்க் ஃபுட் சாப்பிடுவது உடல் கோளாறுகளை ஏற்படுத்தி உடல்பருமனுக்குக் காரணமாகும். இது, மாதவிடாயில் பிரச்னையை ஏற்படுத்தும்.

    * அதிக மனஅழுத்தத்துக்கு உள்ளானவர்களுக்கு, அதன் காரணமாக, கருமுட்டை உற்பத்தி பாதிப்படையும். அலுவல்ரீதியான அழுத்தம் அல்லது குடும்பப் பிரச்னை காரணமாக அதிகளவு அழுத்தம் ஏற்படும்போது இந்தப் பிரச்னை தலைகாட்டும். நடைபயிற்சி செய்வது, சத்தான உணவுகளை சாப்பிடுவது, தேவையான அளவு தண்ணீர் குடிப்பது போன்ற வாழ்வியல் முறைகளில் மாற்றங்கள் ஏற்படுத்திக்கொள்வதன் மூலம் இதை சரிசெய்யலாம்.

    * புரதம், ஆன்டிஆக்ஸிடென்ட் சத்துகள் இருக்கும் உணவுகளை குறைந்த அளவில் சாப்பிடும்போது, அட்ரினல் மற்றும் தைராய்டு சுரப்பிகளில் பிரச்னை ஏற்படும். இவர்கள், சரியான உணவுப் பழக்கத்துக்கு மாறினாலே போதுமானது.
    கர்ப்ப காலத்தில் கூந்தல் உதிர்வைக் கண்டு பயந்து, அதை சரி செய்கிற முயற்சிகளாக கெமிக்கல் சிகிச்சைகளைச் செய்யக் கூடாது. இது குறித்து விரிவாக பாக்கலாம்.
    பிரசவத்துக்குப் பிறகான கூந்தல் உதிர்வு என்பதை அனேகமாக எல்லா பெண்களுமே உணர்வார்கள். உச்சி முதல் நகக் கண் வரை ஒவ்வொரு உறுப்பிலும் ஏதோ ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிற பருவம் கர்ப்ப காலம். எல்லா மாற்றங்களுமே மாறுதலுக்குட்பட்டவையே. சீக்கிரமே சகஜ நிலைக்குத் திரும்பக் கூடியவைதான்.

    ஆனாலும், ஒரு விஷயம் கர்ப்பிணிகளைப் பெரும் கவலையில் ஆழ்த்தக் கூடியது. அதுதான் கூந்தல் உதிர்வு. கர்ப்பத்தின் போதும் பிரசவமான உடனேயும் பெரும்பாலான பெண்கள் கூந்தல் உதிர்வை சந்திக்கிறார்கள். அதன் காரணங்கள், தீர்வுகள் பற்றி விளக்கமாக பார்க்கலாம்.

    ‘‘கர்ப்ப காலத்தில் கூந்தலில் உண்டாகிற மாற்றங்கள் ரொம்பவும் இயல்பானது. சில பெண்களுக்கு கூந்தல் வழக்கத்தைவிட அதிகம் வறண்டு, பொலிவிழந்து காணப்படும். சிலருக்கு இதற்கு நேரெதிராக திடீரென கூந்தல் ஆரோக்கியமாக மாறுவதையும் பார்க்கலாம். ஒரு சிலருக்கு எந்த மாற்றமும் இன்றி அப்படியே இருக்கலாம். இது ஒவ்வொரு பெண்ணுக்கும் வேறுபடலாம்.



    ஒருவருக்கே கூட முதல் பிரசவத்தில் ஒரு மாதிரியும், அடுத்த பிரசவத்தில் வேறு மாதிரியும் இருக்கலாம். பொதுவாக கர்ப்பத்தின் கடைசி 3 மாதங்களில் கூந்தல் ஆரோக்கியமாக இருப்பதாகவே பலரும் உணர்கிறார்கள். இவை எல்லாவற்றுக்குமே காரணம் கர்ப்ப கால ஹார்மோன் மாற்றங்கள். கர்ப்பத்தின் முதல் 3 மாதங்களில் கூந்தல் வழக்கத்தைவிட அதிக அடர்த்தியாக இருக்கும். கூந்தலானது மாதத்துக்கு அரை இஞ்ச் அளவே வளரக்கூடியது.

    கூந்தலின் வளர்ச்சியிலும் அடர்த்தியிலும் வியத்தகு மாற்றத்தை உணர ஒரு வருடமாவது தேவை. கர்ப்பத்தின் முதல் 3 மாத கூந்தல் வளர்ச்சிக்குக் காரணம் அதிகப்படியான ஈஸ்ட்ரோஜென் சுரப்பும், குறைகிற ஆன்ட்ரோஜென் சுரப்பும். இதன் காரணமாக கூந்தலின் வேர்ப் பகுதிகளில் சீபம் என்கிற எண்ணெய் சுரப்பானது குறைந்து, கூந்தல் முன்னைவிட அடர்த்தியாக இருப்பது போலத் தெரியும்.

    இது பார்ப்பதற்கு அழகாகத் தெரிந்தாலும் சீபம் குறைவதன் காரணமாக கூந்தல் வறட்சியும் அதிகமாகும். எனவே, கூந்தலை வறண்டு போகச் செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். சொரியாசிஸ் பிரச்னை இருக்கும் பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் அது திடீரென காணாமல் போகலாம். அதுவும் தற்காலிகமானதே. பிரசவமானதும் அந்தப் பிரச்னை மீண்டும் திரும்பும்.

    கர்ப்ப காலத்தில் ஈஸ்ட்ரோஜென் அதிகரிப்பதன் காரணமாக கூந்தலானது வளர்ச்சி நிலையான அனாஜனில் அதிக நாட்கள் இருக்கும். அதனாலும் கூந்தல் வளர்ச்சி அதிகரித்தது போலத் தெரியலாம். பிரசவத்துக்குப் பிறகான கூந்தல் உதிர்வு என்பதை அனேகமாக எல்லா பெண்களுமே உணர்வார்கள்.



    குழந்தை முகம் பார்த்து சிரிக்க ஆரம்பிக்கிற 3ம் மாதம் அப்படித்தான் முடி கொட்டும் எனப் பெரியவர்கள் சொல்வதைக் கேட்டிருக்கலாம். இதற்குக் காரணமும் அதே ஹார்மோன் மாறுதல்கள்தான். பிரசவத்துக்கு முன்பு உச்சத்தில் இருந்த ஹார்மோன்கள் எல்லாம் குழந்தை பிறந்ததும் பழைய நிலைக்குத் திரும்பத் தொடங்குவதே காரணம். கர்ப்ப காலத்தில் உதிர வேண்டிய முடிகள், பிரசவத்தின் போது மொத்தமாக கொட்டுவதைப் பார்க்கலாம்.

    கூந்தலின் நுண்ணறைகள் தம்மைத் தாமே புதுப்பித்துக் கொள்ளும் வேலையை முழுமையாகச் செய்து முடிக்கிற வரை, அதாவது, பிரசவத்தை அடுத்த 3-4 மாதங்களுக்கு இந்த முடி உதிர்வு சற்றே தீவிரமாகத்தான் இருக்கும். கொத்துக் கொத்தாக கையோடும் சீப்போடும் பிடுங்கிக் கொண்டு வருகிற முடிக் கற்றைகளைப் பார்த்துப் பயப்படத் தேவையில்லை. அது தற்காலிகப்பிரச்னையே... சில வாரங்களில் சரியாகி விடும்.

    கர்ப்பம் என்றில்லாமல் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்புடன் தொடர்புடைய வேறு சில நிகழ்வுகளின் போதும் முடி உதிர்வுப் பிரச்னையை உணர்வார்கள் பெண்கள். ஹார்மோன் அடங்கிய கருத்தடை மாத்திரைகளை உபயோகிப்பதை திடீரென நிறுத்தும் போதும், கருக்கலைப்பின் போதும், உடலில் உண்டாகிற ஹார்மோன் சமநிலையின்மையின் போதும் முடி உதிர்வு அதிகரிக்கலாம்.

    கர்ப்ப காலத்தில் கூந்தல் உதிர்வைக் கண்டு பயந்து, அதை சரி செய்கிற முயற்சிகளாக கெமிக்கல் சிகிச்சைகளைச் செய்யக் கூடாது. மகப்பேறு மருத்துவரின் ஆலோசனையின் பேரில் வைட்டமின் மற்றும் ஃபோலிக் ஆசிட், புரதம், தாதுச் சத்துகள் அடங்கியசப்ளிமென்ட்டுகளையும், காய்கறிகள், கீரைகள், பழங்களையும் சேர்த்துக் கொண்டாலே போதும்...’’
    ஆரம்பத்தில் பிடித்த உணவுகள் அல்லது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத உணவுகள் கர்ப்பமாக இருக்கும் போது பிடிக்காமல் போகும். இதை தவிர்க்கும் வழிமுறைகளை பார்க்கலாம்.
    குழந்தை பேறு பெண்களுக்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும். கருவுற்ற நாளிலிருந்து குழந்தை பிறக்கும் வரை நாளுக்கு நாள் அவர்களுக்கு பல்வேறு இடைஞ்சல்கள் ஏற்படும். அவற்றில் பொதுவானது உணவு ஒவ்வாமை. ஆரம்பத்தில் பிடித்த உணவுகள் அல்லது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத உணவுகள் கர்ப்பமாக இருக்கும் போது பிடிக்காமல் போகும். ஏன் சிலருக்கு அந்த சுவை கூட பிடிக்காது.

    கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் குழந்தைக்கு சேர்த்து அதிகளவு கலோரி எடுத்து கொள்ள வேண்டும் பொதுவாக ஒரு நாளைக்கு 2,200 கலோரி மதிப்புள்ள உணவை உட்கொள்பவர், கர்ப்பிணியாக இருக்கும் போது கூடுதலாக 300 கலோரி சத்துள்ள உணவு எடுத்துக் கொள்வது அவசியம்.

    முழு தானியங்கள் என்றால் அதிகம் பாலிஷ் போடாத கோதுமை மற்றும் அரிசி சாதம், கஞ்சி போன்றவை நல்லது. புழுங்கலரிசி உபயோகிப்பது உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. அதிக ரிஃபைன் செய்யப்பட்ட ஆட்டா, மைதா போன்றவற்றில் இயற்கையான நார்ச்சத்து இருக்காது. அதனை தவிர்த்திட வேண்டும். அதிக காரம், மசாலா பொருட்களைத் தவிர்ப்பது நல்லது. நிறையப் பழங்கள் சாப்பிட வேண்டும்.



    கர்ப்பிணிப்பெண்களுக்கு வாந்தி, குமட்டல் ஏற்படும் அச்சமயம் பழ ஜூஸ், வேகவைத்த காய்கறிகள், கஞ்சி வகைகளை அடிக்கடி சாப்பிடலாம். குமட்டல், வாந்தி குறைய, காலையில் அதிக நேரம் வெறும் வயிற்றோடு இருப்பதைத் தவிர்க்க வேண்டும். அதிகம் தண்ணீர் ஆகாரம் எடுத்துக்கொள்வது, மனத்துக்குப் பிடித்ததை சாப்பிடுவது நல்லது. அதிகமான புளிப்புச் சுவை, கொழுப்புச் சத்துள்ள உணவுகளைத் தவிர்க்கலாம்.

    கர்ப்பகாலத்தின் போது தண்ணீர் அதிகம் பருகவேண்டியது மிக அவசியமான ஒன்றாகும். ஒரு நாளைக்கு சராசரியாக எட்டு முதல் பன்னிரண்டு டம்ளர்கள் வரை தண்ணீர் குடிக்க வேண்டியதும் அவசியம். தண்ணீராகக் குடிக்காவிட்டாலும் அதற்கு இணையாக தயிர், மோர், பழச்சாறு, இளநீர் போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.

    மதிய நேர உணவில் தேங்காய் சேர்க்காத சமையலாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். சர்க்கரை நோய் ஏற்பட்டிருந்தால், காய்கறி சூப்புடன் ஆப்பிள், கொய்யா, சாத்துக்குடி, தர்பூசணி, பேரிக்காய் முதலிய பழங்களை கையளவு சேர்த்துக் கொள்ளலாம். கூல்டிரிங்க்ஸ், வெல்லம், பேரீச்சம்பழம், மாம்பழம், சீதாப்பழம், மைதாவில் செய்த பிரெட், பூரி, பரோட்டா, சேமியா, கிழங்கு வகைகள், வாழைக்காய், முட்டை மஞ்சள் கரு, கருவாடு போன்றவற்றை கட்டாயமாக தவிர்த்துவிட வேண்டும்.

    மாதவிடாய் காலகட்டத்தில் வயிறு தொடர்பான பிரச்சினைகளில் இருந்து விடுபட உணவு விஷயத்தில் பெண்கள் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும்.
    மாதவிடாய் நாட்களில் பெண்கள் சந்திக்கும் சிரமங்கள் அதிகம். சில பெண்களுக்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே அதற்கான அறிகுறிகள் வெளிப்பட தொடங்கிவிடும். அப்போது தலைவலி, மூட்டு வலி, முதுகுவலி, கை, கால் வலி போன்ற பிரச்சினைகள் தலைதூக்கும்.

    உடலில் சோர்வும் எட்டிப்பார்க்கும். முகப்பருக்களும் சிலருக்கு தோன்றும். ஆர்வமின்மை, கவனக்குறைவு, முன்கோபம், மனஅழுத்தம் போன்ற வைகளும் ஏற்படக்கூடும். தூக்கமின்றி அவதிப்பட நேரிடும். இது வழக்கமானதுதான். மாதவிடாய் நாட்களுக்கு பிறகு சரியாகிவிடும்.

    அந்த காலகட்டத்தில் வயிறு தொடர்பான பிரச்சினைகளில் இருந்து விடுபட உணவு விஷயத்தில் பெண்கள் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும். வயிறு நிரம்ப சாப்பிடாமல் உணவை நான்கு, ஐந்து முறையாக பிரித்து சாப்பிடவேண்டும். எளிதில் ஜீரணமாகும், சத்தான உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ணவேண்டும்.



    உணவில் உப்பின் அளவையும் குறைக்கவேண்டும். உப்பு அதிகம் சேர்த்து பதப்படுத்தப்படும் ஊறுகாய் வகைகள், பலகாரங்களை சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். எண்ணெயில் பொரித்த உணவுகள், துரித உணவுகள், நொறுக்கு தீனிகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். மாதவிடாய் சமயங்களில் இஞ்சி டீ பருகுவது நல்லது.

    அது வலியை கட்டுப்படுத்த உதவும். சத்தான காய்கறிகள், கீரை வகைகள், முழு தானியங்கள், பழங்களை சாப்பிட வேண்டும். பால் பருகி வருவதும் நல்லது. மதிய உணவில் முட்டை சேர்த்துக்கொள்ளலாம். தக்காளி, ப்ராக்கோலி, சோளம், எலுமிச்சை, ஆரஞ்சு, வேர்க்கடலை போன்றவற்றை சாப்பிட்டு வருவது உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும்.

    வாழைப்பழங்கள், வெண்ணெய், சர்க்கரைவள்ளி கிழங்கு ஆகியவற்றில் பொட்டாசியம் அதிகம் இருக்கிறது. அவைகளை சாப்பிட்டு வருவது நல்ல மனநிலைக்கு பெண்களை கொண்டுசெல்லும். குடல் இயக்கத்திற்கும் நலம் சேர்க்கும். கால்சியம், கார்போஹைட்ரேட் உள்ளடக்கிய உணவுகளையும் சாப்பிட வேண்டும். அவை சர்க்கரை அளவை கட்டுப்படுத்த துணை புரியும். போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். மூச்சுப்பயிற்சி, யோகா போன்றவற்றை செய்துவர வேண்டும். அவை தலைவலி, தூக்கமின்மை போன்ற பிரச் சினைகளை தவிர்க்க உதவும்.
    தூக்கமின்மையால் பாதிக்கப்படுகிற பெண்களை இரண்டாம் நிலை நீரிழிவு நோய், இதய நோய்கள், மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் தாக்கும் வாய்ப்புகள் அதிகம்.
    உலகில் இருக்கும் அனைத்து உயிர்களுக்கும் தூக்கம் என்பது அவசியமான ஒன்று. புதிதாய் பிறந்த குழந்தைகள் அதிக நேரம் தூங்குவார்கள். கடினமாக உடலால் உழைப்பவர்கள் 10 மணி நேரமும், மற்றவர்கள் 6 முதல் 8 மணி நேரம் வரை உறங்கினால் போதுமானது. ஆனால், இன்றைய காலத்தில் நிம்மதியான உறக்கம் என்பது கடிமான ஒன்றாகி விட்டது.

    தூக்கம் என்பது ஆண்களை விட பெண்களுக்கே அதிகம் தேவைப்படும் ஒன்று. ஆனால், போதுமான அளவு உறங்க அவர்களுக்கு நேரமில்லாமலும், சரியான உறக்கம் கிடைக்காமலும் பலர் அவதிப்படுகிறார்கள். தூக்கமின்மையால் பாதிக்கப்படுகிற பெண்களை இரண்டாம் நிலை நீரிழிவு நோய், இதய நோய்கள், மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் தாக்கும் வாய்ப்புகள் அதிகம்.

    வேலைக்கு செல்லும் பெண்களை தூக்கமின்மை பெரிதும் பாதிக்கிறது. இன்றைய பரபரப்பான சூழலில் ஓடக் கொண்டிருக்கும் அனைவருக்கும் தூக்கம் என்பது கனவாக மாறிக் கொண்டிருக்கிறது. தூங்க நேரம் இல்லாமல் பயண நேரத்தில் தூங்குபவர்களையும் பார்க்க முடிகிறது. தூக்கமின்மையால் பெண்களுக்கு ஏற்படும் உடல்நல பிரச்சனைகள் பற்றி இங்கு பார்க்கலாம்.

    எல்லா காலத்திலும் பெண்கள் தூக்கமின்மையால் அவதிப்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள். காலை எழுந்தது முதல் இரவு படுக்கச் செல்லும் வரை வீட்டு வேலை அலுவலக வேலை என அனைத்தையும் செய்வதிலேயே அவர்களது நேரம் முழுவதும் செலவிடப்படுகிறது. இதனால் பெண்களின் தூங்கும் நேரமானது குறைந்து கொண்டு இருக்கிறது. பெரும்பாலான பெண்களுக்கு தூக்கமின்மை பிரச்சனை இருப்பதையே அவர்கள் அறிவதில்லை.



    இன்று வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு ஓய்வு என்பதே கிடைப்பதில்லை. விடுமுறை நாட்களிலும் அவர்களது வேலைக்கு விடுமுறை என்பதே கிடையாது. அவர்களது வேலைகளை குடும்பத்தினர் பகிர்ந்து கொண்டாலும், அவர்களுக்கு அதிக வேலை இருக்கும் என்பது அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்றுதான். நேரம் தவறி தாமதமாக சாப்பிடுவதும், சாப்பிட்டவுடன் படுக்கச் செல்வதும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.

    இரவு நேரப் பணியில் ஈடுபடுவதும் உடல்நல பாதிப்பை ஏற்படுத்தும். பகலில் வேலைகளில் ஈடுபடுவதும், இரவில் உறங்குவதுமே நம் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத ஒன்று. இதை மாற்றி, பகலில் உறங்குவது, இரவில் பணிகளில் ஈடுபடுவதை நம் மனம் ஏற்றுக் கொண்டாலும் உடல் அதற்கு ஒத்துழைக்காது. மேலும், நம்மைத் தூங்க வைக்கும் ‘மெலட்டோனின்’ என்கிற ஹார்மோன் இரவில் அதிகமாகவும், பகலில் குறைவாகவும் சுரக்கும்.

    எனவே, தூக்க நேரத்தை தலைகீழாக மாற்றினால் உடல்நல மற்றும் மனநல பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக பெண்களுக்குத் தூக்கம் குறையும்போது, அவர்கள் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். சரியான தூக்கம் கிடைக்காத பெண்கள் காரணமில்லாமல் எரிச்சல் அடைவார்கள். அதன் தொடர்ச்சியாக கோபம், மனச்சோர்வு, நாள் முழுவதும் மந்தமாக உணர்வது, சிறிய பிரச்சனையைக்கூட பெரியதாக நினைத்து கவலைப்படுவது என மனரீதியான பதிப்பிற்குள்ளாகிறார்கள்.

    தூக்கமின்மை பிரச்சனையின் ஆரம்பத்தில் கண் எரிச்சல், தலைவலி, தீராத ஒற்றை தலைவலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவை தொடர்ந்து நீடிக்கும்பட்சத்தில் மாதவிடாய் சுழற்சிலும் மாற்றங்கள் ஏற்பட்டு, குழந்தையின்மை பிரச்சனைக்கு வித்திடும். இதில் கவனம் எடுத்துக் கொள்ளாவிட்டால், சிறிது காலத்திலேயே இரத்த அழுத்தம், இதயநோய், பக்கவாதம், நீரிழிவு என பல பாதிப்புகளை ஏற்படுத்தும்.

    பெண்கள் தூக்கமின்மையை பெரிதாக எடுத்து கொள்ளாமல் இருப்பதே, பல உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும். தூக்கமின்மையை சாதாரணமாக எடுத்து கொள்ளாமல், மருத்துவ ஆலோசனையை பெறுவதன் மூலம் இவற்றை தவிர்க்க முடியும்.
    ஒரே நேரத்தில் ஒரு குழந்தைக்கு மேல் வளர்க்கும் நிலைக்கு தயாராவது கடினம் என்றாலும் அதனை கையாளும் பக்குவத்தை இரட்டைக் குழந்தைகளின் பெற்றோர் பெற்றுக்கொள்ளவேண்டும்.
    இரட்டைக் குழந்தைகளை வளர்ப்பது கொஞ்சம் சவாலான விஷயம்தான். ஒரே நேரத்தில் ஒரு குழந்தைக்கு மேல் வளர்க்கும் நிலைக்கு தயாராவது கடினம் என்றாலும் அதனை கையாளும் பக்குவத்தை இரட்டைக் குழந்தைகளின் பெற்றோர் பெற்றுக்கொள்ளவேண்டும். கருவில் இருக்கும்போதே இரட்டைக் குழந்தைகள் பிறப்பது உறுதிப்படுத்தப்பட்டுவிடும் என்பதால் அப்போதே திட்டமிடலை தொடங்கிவிட வேண்டும்.

    * குழந்தைகளுக்கு இரண்டு வயது ஆகும் வரை குழந்தை வளர்ப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். ஆரம்பத்தில் துணி மாற்றுவது முதல் தாய்ப்பால் கொடுத்து தூங்க வைப்பது வரை இரட்டை சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

    * பெரும்பாலும் தங்கள் குழந்தைகள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றுதான் பெற்றோர்கள் விரும்புவார்கள். அதுவும் இரட்டைக்குழந்தைகள் என்றால் ஒரே மாதிரி செயல்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். இரட்டையர்கள் தோற்றத்தில் வேண்டுமானால் ஒரே மாதிரியாக இருக்கலாம். ஆனால் அவர்களின் அணுகுமுறைகள் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்பதில்லை.

    * இருவரும் ஒன்று போலவே, ஒரே மாதிரியான குணாதிசயத்துடன் வளர வேண்டிய அவசியமில்லை. இருவருமே மாறுபட்ட ஆளுமைத் திறனைக் கொண்டிருப்பார்கள்.

    * ஒரு குழந்தை மற்ற குழந்தையைவிட துடிப்புடன் செயல்படலாம். எந்தவொரு விஷயத்தையும் சட்டென்று புரிந்து கொள்ளும் திறன் கொண்டிருக்கலாம். வளரும் விதத்திலும் மாறுபடலாம். இதை எல்லாம் பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    * ஒவ்வொருவரிடத்திலும் ஒவ்வொருவிதமான தனித்துவம் உள்ளடங்கி இருக்கும். அதனால் இருவரையும் வேறு, வேறு நபராகவே அணுக வேண்டும். இருவருக்குமான விருப்பு, வெறுப்புகளை முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும்.

    * ஒரு குழந்தை அமைதியாகவும், மற்றொரு குழந்தை படுசுட்டியாகவும் இருக்கும். ஒரு குழந்தைக்கு இனிப்பு பிடிக்கும் என்றால் மற்றொரு குழந்தை காரத்தை விரும்பும். ஒரு குழந்தை ஊட்டி விட்டால்தான் சாப்பிடும் என்றால் மற்றொரு குழந்தை தானாகவே சாப்பிடவிரும்பும். இருவரும் ஒற்றுமையாக விளையாட மாட்டார்கள். ஒரு குழந்தையின் கையில் இருக்கும் பொருள் மற்ற குழந்தைக்கு பிடிக்கும். அதனை பிடுங்கி, இன்னொரு குழந்தையை அழ வைக்கும். அதே பொருளை இருவருக்கும் கொடுத்தாலும் ஒருவரிடமே இரு பொருளும் இருக்க வேண்டும் என்று விரும்பும். அதனால் இருவருக்கும் இடையே ஓயாமல் சண்டை நடந்து கொண்டிருக்கும். அந்த சமயத்தில் பெற்றோர் பொறுமையை கையாள வேண்டியது அவசியம். இரண்டிடமும் அன்பாக அணுகவேண்டும்.



    * எல்லா விஷயங்களையும் ஒரே நேரத்தில் இரு குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும். இரண்டு பேரிடமும் ஒரே மாதிரியான அணுகுமுறையையே பின்பற்ற வேண்டும்.

    * எப்போதும் ஒரே குழந்தையை கொஞ்சி மகிழ்ந்து கொண்டிருந்தால், மற்ற குழந்தை மனதில் அது ஏக்கமாக மாறிவிடும். அதனால் அது பெற்றோரிடம் நெருங்கி வருவதற்கு வேறு விதமான முயற்சிகளில் ஈடுபட தொடங்கிவிடும். இன்னொரு குழந்தையுடன் அடிக்கடி சண்டை போடவும் ஆரம்பித்துவிடும்.

    * ஒரு குழந்தையை மற்றொரு குழந்தையோடு ஒப்பிட்டுப் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். அது குழந்தைகளிடத்தில் பகையை உருவாக்கிவிடும். எனவே இந்த விஷயத்தில் பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும்.

    * ஒரு குழந்தைக்கு ஏதாவது உடல்நலக் கோளாறு ஏற்பட்டால் மற்றொரு குழந்தைக்கும் பரவிவிடும். அதனால் ஆரம்பத்திலேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துவிட வேண்டும். இருக்கும் இடத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். இருவரும் பயன்படுத்தும் பொருட்கள், சாப்பிடும் உணவு போன்ற விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

    * இரட்டைக் குழந்தைகளை வளர்க்கும் தாய்மார்கள் மனதில் எப்போதும் உற்சாகம் வெளிப்பட வேண்டும். எதிர்மறை எண்ணங்கள் தோன்றுவதற்கு இடம் கொடுக்கக்கூடாது. மற்றவர்களின் உதவி தேவைப்படும் பட்சத்தில் தயங்காமல் கேட்க வேண்டும். குழந்தைகளை கவனிக்கும் அனைத்து வேலைகளையும் தாயே செய்தால் அவருக்கு மன அழுத்தமும், உடல் சோர்வும் தோன்றிவிடும். இரட்டைக் குழந்தைகளை வளர்க்கும் தாய்மார்களின் மனதுக்கும்- உடலுக்கும் ஓய்வு மிக அவசியம்.

    * இரண்டு குழந்தைகளும் செய்யும் குறும்புகளை ரசிக்க வேண்டும். அது இரட்டைக் குழந்தை வளர்ப்புக்கான பாரத்தை குறைத்துவிடும். மன அழுத்தமும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும்.

    * குழந்தை வளர்ப்பில் கணவன்-மனைவி இருவரின் பங்களிப்பும் சம அளவில் இருக்க வேண்டும். அதிலும் கணவர், மனைவிக்கு தாமாகவே உதவிகளை செய்ய முன்வர வேண்டும். அப்போதுதான் இரட்டை குழந்தைகளை சுமுகமாக வளர்க்க முடியும்.

    * இரு குழந்தைகளின் தேவைகளையும் கண்டறிந்து நிறைவேற்ற வேண்டும். அதில் பாகுபாடு காண்பிக்கக்கூடாது. இருவரிடமும் ஒரே மாதிரியான திறமைகளை எதிர்பார்க்கக்கூடாது. இருவரும் வெவ்வேறு விஷயங்களில் தனித்துவம் பெற்றவர்களாக இருப்பார்கள். அதை கண்டறிந்து, ஊக்குவித்து அவர்களை சாதனையாளர்களாக மாற்றவேண்டும்.
    பெண்களின் இதயம் கர்ப்ப காலத்தில் முக்கிய மாற்றங்களுக்கு உள்ளவதாக கண்டறியப்பட்டுள்ளது. அம்மாற்றங்கள் என்னென்ன என்று அறிந்து கொள்ளலாம்.
    கர்ப்ப காலத்தில், பெண்களின் உடல் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகிறது. இம்மாற்றங்களால் பெண்களின் உடல் பலவித மாற்றங்களை, வடிவங்களை அடைகிறது; பெண்களின் மனமோ வார்த்தைகளால் விவரிக்க முடியாத மாற்றத்தை எட்டுகிறது. இந்நிலையில் பெண்களின் இதயம் கர்ப்ப காலத்தில் முக்கிய மாற்றங்களுக்கு உள்ளவதாக கண்டறியப்பட்டுள்ளது. அம்மாற்றங்கள் என்னென்ன என்று அறிந்து கொள்ளலாம்.

    * பெண்களே! உங்கள் இதயம் சாதாரண அளவை விட 12% பெரிதாவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் உங்கள் உடல் அதிக வேலையை செய்ய ஏற்படும்; உங்களுக்காக, உங்கள் குழந்தைக்காக..! இருதயத்தின் அதிகப்படியான மாற்றங்கள் 9 வது மாதத்தில் நிகழும்..

    * உங்கள் இதயம் சாதாரண நிலையை விட இருமடங்கு இரத்தத்தை பம்ப் செய்து, உடலின் மற்ற பாகங்களுக்கு அனுப்புகிறது. இது உங்கள் உடல் வளர்ச்சி மற்றும் குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

    * இதயத் துடிப்புகளும், இயக்கங்களும் கூட அதிகரிக்கின்றன; சாதாரண நிலையை விட. ஆரோக்கியான நிலையை கர்ப்பகாலத்தில் மேற்கொள்ள இந்த அதிகரிப்புகள் அவசியமே!

    இந்த கருத்துக்களை உங்களால் நம்ப முடியாமல் இருக்கலாம். ஆனால், இவை உண்மையே! ஆகையால், கர்ப்பகாலத்தில் இதயத்திற்கு பலம் தரும் உணவுகளில் கவனம் காட்டி, உண்டு ஆரோக்கியத்தை மேம்படுத்து கொள்ளுங்கள்.
    பெண்ணின் உடல் எப்படி இருக்க வேண்டும் என்ற சமூகத்தின் அபிப்ராயமும், சாப்பாடு பிரச்சினையும் பெண்களுக்கு முக்கியக் காரணமாக உள்ளது.
    உலக சுகாதார அமைப்பின் கருத்துப்படி பெண்கள் எதிர்கொள்ளும் மனநலப் பிரச்சினைகளில், பொதுவானது மன இறுக்கமாகும். அதே சமயம் ஆவணப்படுத்தப்படாத நிகழ்வுகள் ஏராளமாக இருக்கலாம். சில நாட்கள் நீடிக்கும் ஒரு பிரச்சினை மன இறுக்கமாகக் கருதப்படுகிறது. அவை தானாக சரியாகிவிடும் என்பதால் கண்டுகொள்ளப்படுவதில்லை.

    உண்மையில், மனதை வருத்தும் சோகமும், நம்பிக்கையின்மையும் இருக்கும் நிலையே மன இறுக்கமாகும். தினசரி செயல்பாடுகளில் ஆர்வம் குறைவது, மிக அதிக தூக்கம் அல்லது தூக்கம் குறைவு, அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது அல்லது சாப்பிடாமல் இருப்பது, நம்பிக்கை இழந்த உணர்வோடு காணப்படுவது, தன்னைப் பற்றிய மதிப்பின்றி இருப்பது, சோர்வாக இருப்பது போன்றவை மன இறுக்கத்தின் அறிகுறிகளாகும்.

    பெரிய செயல்களைச் செய்யும் முன்பு ஒருவருக்கு பீதியும், மனக் கலக்கமும் இருப்பது சகஜம். ஆனால் அந்த பயம் நீங்காமல் தொடர்ந்து இருப்பது உங்களை எச்சரிக்கும் அடையாளங்களாகும். இளம் மாணவர்கள் மற்றும் பணிபுரியும் பெண்களில் பலரும் பீதிக் கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் அதற்கு அவர்கள் சிகிச்சை எடுத்துக்கொள்வதில்லை என்று ஆய்வுகள் கூறுகின்றன.



    பதற்றம், பரபரப்பு, களைப்பு, தூக்கம் வராமை, தொடர்ந்து ஏதேனும் நினைவுகளை அசை போட்டபடி இருப்பது, கவலைப்படுவது போன்றவை மனக்கலக்க கோளாறுகளின் அறிகுறிகள். பயம் உள்ளவர்கள், திடீரென்று பீதியடைவார்கள், அந்த சமயங்களில் இதயத்துடிப்பு அதிகரிக்கும், சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும், மயக்கம் ஏற்படும், உளறுவார்கள், தொண்டை அடைத்துக்கொள்ளும்.

    பெண்ணின் உடல் எப்படி இருக்க வேண்டும் என்ற சமூகத்தின் அபிப்ராயமும், சாப்பாடு பிரச்சினையும் பெண்களுக்கு முக்கியக் காரணமாக உள்ளது. ஆண்களை விட, பெண்களுக்கே சாப்பிடுவது தொடர்பான கோளாறுகள் வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பெண்களுக்கு ஏற்படும் சாப்பிடுவது தொடர்பான பொதுவான கோளாறு பசியின்மையாகும். இந்தப் பிரச்சினை உள்ளவர்கள் உடல் மெலிந்து காணப்படுவார்கள், எடை குறைவாக இருக்கும், உடல் எடை கூடிவிடும் என்று அதிகம் பயப்படுவார்கள்.

    புலிமியா என்பது பெண்களுக்கு வரும் மற்றொரு பிரச்சினையாகும். இந்தப் பிரச்சினை உள்ளவர்கள் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவார்கள், பிறகு உடல் எடை கூடுவதைத் தடுப்பதற்காக வாந்தி எடுத்து உணவை வெளியேற்றுவார்கள். இளம் வயதினருக்கு அதிகமாக ஏற்படும் பிரச்சினைகளில் ஆஸ்துமா மற்றும் வகை 1 நீரிழிவு நோய்க்கு அடுத்த இடத்தில் இருப்பது பசியின்மை ஆகும். எனினும் மெலிந்து இருப்பவர்கள் எல்லோருக்கும் பசியின்மை பிரச்சினை உள்ளது என்று கருத முடியாது என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.
    கட்டிப்பிடிப்பது மந்தமான மனநிலையில் இருப்பவரை உற்சாகம் அடைய செய்கிறது, கவலையில் இருப்பவரை மீண்டெழச் செய்கிறது.
    கட்டிப்பிடித்துக் கொள்வதும் ஒருவகையான வைத்தியம் தான் என்கின்றனர் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள். கட்டிப்பிடிப்பது மந்தமான மனநிலையில் இருப்பவரை உற்சாகம் அடைய செய்கிறது, கவலையில் இருப்பவரை மீண்டெழச் செய்கிறது. இது மட்டுமல்லாது இதயம் சார்ந்த நோய்கள் வராமல் நம்மை காத்திடுகிறது.

    மேலும் கட்டிபிடிப்பதன் மூலம் அடையும் பயன்களை இங்கே பட்டியலிட்டுள்ளோம்..  

    கட்டிபிடிப்பதால், இருவருக்கும் மத்தியில் உள்ள பயம் மற்றும் தயக்கத்தை கட்டிப்பிடிக்கும் பழக்கம் போக்குகிறது. ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக் கொள்ளும் போது இறப்பைப் பற்றிய கவலையும் கலைகிறதாம்.

    ஒருவரை ஒருவர் கட்டிபிடித்து கொள்ளும் போது இதயம் இதமாக உணரப்படுகிறது இது இதயத்திற்கு நல்லது ஆகும். மற்றும் கட்டிப்பிடித்துக் கொள்ளும் போது இதயத்தில் உள்ள தசைகள் வலுவடைகின்றன.

    ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக் கொள்ளும் போது இரத்தக்கொதிப்பு கட்டுக்கடங்குகிறது. இதனால் எப்போது எல்லாம் உங்களுக்கு உயர் இரத்தக் கொதிப்பு வருகிறதோ, அப்போது உங்கள் அருகில் உள்ளவரை கட்டிபிடித்துக் கொண்டால் இரத்தக்கொதிப்பு சமநிலைக்கு வந்துவிடுமாம்.

    கட்டிப்பிடிப்பது மன இறுக்கத்தை குறைக்கிறது மற்றும் மனநிலையை அமைதியடைய செய்கிறது. இதனால் நீங்கள் மன அழுத்தத்தின் போது கட்டிப்பிடித்துக் கொண்டால் மனம் இலகுவாக உணர்வீர்கள்.



    நீங்கள் கட்டிப்பிடித்துக் கொள்ளும் போது உங்களது மூளையில் நேர்மறை எண்ணங்கள் அதிகமாய் உருவாகிறது அதனால் கட்டிப்பிடித்துக் கொள்வது உங்களது மனநிலையை நன்றாக வலுவடைய செய்யும்.

    கட்டிப்பிடிப்பதன் மூலம் வெளிப்படும் அன்பும், அக்கறையும் நமது மூளையை நன்கு செயலாக்கம் அடைய செய்கிறது இதன் மூலம் உடலும் நன்கு செயல்பட்டு நோய்களுக்கு எதிராய் போராட முற்படுகிறது.

    ஒருவருக்கு ஒருவர் கட்டிப்பிடித்துக் கொள்ளும் போது உடனடியாக மனதிற்கு தெம்பூட்டப்படுகிறது. இதனால் ஆக்ஸிடாஸின் அதிகரித்து தனிமையை உணர்பவர்களை அதிலிருந்து விடுப்படச் செய்கிறது.

    கட்டிப்பிடிப்பதன் மூலம் நாம் பெறும் மற்றொரு பயன் என்னவெனில் செரோடோனின் அளவு அதிகரிப்பதால் மகிழ்ச்சியான மனநிலை உருவாகிறது.  

    நீங்கள் கட்டிப்பிடித்துக் கொள்ளும் போது உங்களது உடல் தசைகள் இலகுவாகிறது மற்றும் உடலில் உள்ள வலி குறைகிறது.

    கட்டிப்பிடிப்பதன் மூலமாக நாம் அடையும் மற்றொரு பயன் என்னவெனில், இதன் மூலம் நமது நரம்பு மண்டலத்தை சமநிலைப்படுத்த உதுவுகிறது.
    கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஹார்மோன் மாற்றங்களால் பல்வேறு வகையான உடல் உபாதைகள் உண்டாகும். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    கர்ப்பக் காலத்தில் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு இரண்டுமே ஓரளவு இயல்பானவைதான். கர்ப்ப காலத்தின்போது தாயின் உடலில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுவதால் சிலருக்கு இந்தப் பிரச்சனைகள் உருவாகின்றன. இதனால், வயிற்றில் உள்ள கருவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. வயிற்றுப்போக்கு திடீரென ஏற்படுகிறது என்றால் நீங்கள் குடிக்கும் தண்ணீரில் ஏதேனும் பிரச்சனை இருக்கக்கூடும்.

    அசுத்தமான தண்ணீரை குடிக்கும்போதும் அதில் சமைக்கும்போதும் அதில் உள்ள பாக்டீரியா போன்ற நுண்ணியிர்களாலும் பிரச்சனை வந்திருக்கலாம். நன்கு காய்ச்சி வடிகட்டிய நீரையே எப்போதும் குடிக்கவும் சமைக்கவும் பயன்படுத்துங்கள். வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடல் சோர்வு ஏற்படும் என்பதால் உடனடியாக மருத்துவரை அணுகி அவசியப்பட்டால் ட்ரிப்ஸ் ஏற்றிக்கொள்ளுங்கள்.

    உடலுக்கு குளுக்கோஸை வழங்கும் இளநீர், பழச்சாறுகள் போன்றவற்றை எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் உடல் சோர்வடையும்போது அது குழந்தையையும் சோர்வாக்கும். ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்தலாம்.

    கர்ப்பிணிகள் வேலையே செய்யக்கூடாது என்று ஒரு தவறான கருத்து உள்ளது. உண்மையில் முதல் மூன்று மாதங்கள் மட்டுமே அலைச்சல், கடின உடல் உழைப்பு, பயணம் போன்றவை இல்லாமல் கவனமாக இருக்க வேண்டும். அதற்குப் பிறகு, அன்றாடம் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்யலாம். சோர்வாக இருந்தால் சிறிது ஓய்வு எடுத்துவிட்டுச் செய்யலாம். தினசரி ஸ்ட்ரெச்சிங் போன்ற உடற்பயிற்சிகளை செய்வது சுகப்பிரசவத்துக்கு வழிவகுக்கும். எனவே கர்ப்பிணிகள் வேலையே செய்யக் கூடாது என்பது தவறான கருத்து.
    உடலில் தோன்றும் ஒருசில அறிகுறிகள், சில விசித்திரமான சோதனைகள் மூலமாகவும் குழந்தையின் பாலினத்தை தெரிந்து கொள்ளலாம்.
    உடலில் தோன்றும் ஒருசில அறிகுறிகளை வைத்து கூட நமது முன்னோர்கள் பிறக்க போவது ஆணா, பெண்ணா என்பதை கண்டறிந்தனர். மேலும் அவர்கள் சில விசித்திரமான சோதனைகள் மூலமாகவும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்தனர்.

    நீங்கள் ஆண் குழந்தையை கருவில் சுமப்பவராக இருந்தால், உங்களது சருமம் வறட்சியாக இருக்கும். உங்களது சருமம் மிகவும் பளப்பளப்பாகவும், மிருதுவாகவும் இருந்தால், உங்களுக்கு பிறக்க போவது பெண் குழந்தை என்பதை கணிக்கலாம்.

    உங்களது தலைமுடி மிகவும் பளப்பளப்பாகவும், அடர்த்தியாகவும் இருந்தால், உங்களுக்கு பிறக்கப்போவது ஆண் குழந்தை என்பதை கண்டு பிடிக்கலாம். உங்களது தலைமுடி வறட்சியாகவும், அதிகமாக உதிர்ந்தாலும் உங்களுக்கு பிறக்க போது பெண் குழந்தையாக இருக்கும்.



    உங்களது உடலில் உள்ள முடிகள் மிகவும் வேகமாகவும், அடர்த்தியாகவும் வளர்ந்தால், உங்களுக்கு பிறக்க போவது ஆண் குழந்தை எனவும், உடலில் உள்ள முடிகள் குறைந்தால், பெண் குழந்தை எனவும் முன்னோர்கள் கணித்தார்கள்.

    மார்பகங்கள் ஒன்று சிறியதாகவும், மற்றொன்று பெரியதாகவும் இருக்கும். இது இயல்பானது தான். நீங்கள் கண்ணாடியில் பார்க்கும் போது, வலது மார்பகம் பெரியதாக இருந்தால் உங்களது கருவில் இருப்பது ஆண் குழந்தையாகவும், இடதுபுற மார்பகம் பெரியதாக இருந்தால் உங்களுக்கு பிறக்க போவது பெண் குழந்தையாகவும் இருக்கும்.

    நமது முன்னோர்கள் கர்ப்பிணி பெண்ணின் முகத்தை வைத்தே பிறக்க போவது ஆண் குழந்தையா..? இல்லை பெண் குழந்தையா என்பதை கண்டறிந்தனர். நீங்கள் மிகவும் அழகாகவும், பிரகாசமாகவு ஒரு தேவதை போல முன்பு எப்போதும் இல்லாதது போன்ற முகப்பொழிவுடன் இருந்தால் உங்களுக்கு பிறக்க போவது ஆண் குழந்தையாகவும், சோகமான கண்கள், பொழிவிழந்த முகத்துடன் இருந்தால் உங்களுக்கு பிறக்க போவது பெண் குழந்தையாகவும் இருக்க வாய்ப்புகள் அதிகம்.
    ×