என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    • பற்பல நோய்களை நீக்கி சுகம் அளிக்கும் குணத்தையும் கொண்டது.
    • நேர்நிலையான அதிர்வலைகள் இருந்து கொண்டே இருக்கும்.

    இன்றைய தேதியிலும் எம்மில் பலர் வட இந்தியாவில் உள்ள புனித தலமான கங்கை நதியின் நீரை அஞ்சல் வழியாகவோ அல்லது நாம் பயணம் மேற்கொள்ளும் போதோ அல்லது எம்முடைய உறவினர்கள், நண்பர்கள் யாரேனும் கங்கைக்கு சென்று வழிபட்டு திரும்பும் போது புனித நீரை பரிசாக எமக்கு வழங்கி இருப்பர்.

    புனித நீர் எம்முடைய இல்லங்களில் உள்ள பூஜையறையில் இருக்கும் வரை.. பூஜையறை மட்டுமல்லாமல் எம்முடைய இல்லம் முழுவதும் நேர்நிலையான அதிர்வலைகள் இருந்து கொண்டே இருக்கும். சூழல் காரணமாகவோ அல்லது விவரிக்க இயலாத காரணத்திற்காகவோ இத்தகைய புனித நீரை நாம் பயன்படுத்தாமல் தவறவிட்டிருந்தால்.., அதற்காக வருத்தப்பட வேண்டாம். எம்முடைய ஆன்மீக பெரியோர்கள் புனித தீர்த்தத்தை எம்முடைய இல்லங்களில் நாமே தயாரிக்கும் அரிய முறை ஒன்றை சொல்லி இருக்கிறார்கள்.

    இந்த புனித தீர்த்தம் காயகற்ப சஞ்சீவியை போல் எமக்கு ஏற்படும் பற்பல நோய்களை நீக்கி சுகம் அளிக்கும் குணத்தையும் கொண்டது என்பதால், இதனை நாம் ஒரு முறை தயாரித்து அதன் பயனை உணர்வோம்.

    தேவையான பொருட்கள்

    ஏலக்காய்

    கருவாப் பட்டை

    வால் மிளகு

    ஜாதி பத்திரி

    பச்சைக் கற்பூரம்

    ஏலக்காய், கருவாப்பட்டை, வால்மிளகு, ஜாதிபத்ரி என ஒவ்வொன்றிலும் ஒரு குறிப்பிட்ட ஒரே அளவிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றில் கால்பங்கு அளவிற்கு பச்சை கற்பூரத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    இந்த பொருட்களை தேவையான அளவு எடுத்து வைத்துக்கொண்டு, அதனை உலர்த்தி இடித்து பொடியாக மாற்றி வைத்துக் கொள்ளவும். இதன் பிறகு பச்சை கற்பூரத்தை பொடியாக ஆக்கி, இதனுடன் கலந்து கொள்ளவும். இதனை ஒரு போத்தலில் பதனமிட்டு பூஜை அறையில் வைத்து விட வேண்டும்.

    இந்த பொடியை சிறிதளவு எடுத்து ஒரு தாமிர கோப்பையில் தண்ணீரில் கலந்து முதல் நாள் இரவு வைத்து விட வேண்டும். மறுநாள் காலையில் எழுந்து குளித்து முடித்து, எதையும் அருந்தாமலும், சாப்பிடாமலும் பூஜை முடிந்த உடன், இந்த புனித தீர்த்தத்தை அருந்த வேண்டும். இதனால் எம்முள் இருக்கும் சகல நோய்களும் விலகி, உடல் வலிமை பெறும்.

    சிவனை வழிபடுபவர்கள் இதனுடன் வில்வ இலையையும் இணைத்து அருந்தலாம்.

    பெருமாளை வழிபடுபவர்கள் இதனுடன் துளசி இலையையும் இணைத்து அருந்தலாம்.

    இந்த புனித தீர்த்தத்தை அருந்திய பிறகு இதயம், இரைப்பை வலிமை அடையும். கண்களைப் பற்றிய கோளாறு நீங்கும். நரம்பு தளர்ச்சி, சளி தொல்லை, சுவாசக் கோளாறு ஆகியவை நீங்கும். குருதி சுத்தமடையும். பித்தத்துடன் தொடர்புடைய குறைபாடுகள், வாந்தி, தலைசுற்றல், மயக்கம், வாய் கசப்பு, வயிற்று வலி, நெஞ்சக வலி போன்றவை நீங்கும். இந்த மருந்து சஞ்சீவி முறையிலான மருந்தாகும். இதனை தொடர்ந்து அருந்தும் போது உங்கள் ஆரோக்கியம் மேம்படுவதை உங்களால் உணர இயலும்.

    • சுற்றுச்சூழல் காரணமாக நம் உடலில் பலவிதமான நச்சுக்கள் சேர வாய்ப்புள்ளது.
    • உணவுகள் கழிவுகள் சரியாக வெளியேறாமல் தேங்கினால் மலச்சிக்கல் ஏற்படும்.

    நாம் சாப்பிடும் உணவுகள் மற்றும் நம் சுற்றுச்சூழல் காரணமாக நம் உடலில் பலவிதமான நச்சுக்கள் சேர வாய்ப்புள்ளது. இதனால் நம் உடல் பலவித பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். அதில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது மிகவும் அவசியம். நம் உடலில் தங்கி இருக்கும் நச்சுக்களை இயற்கை மருத்துவம் மூலம் எவ்வாறு வெளியேற்றலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

    * நாம் உண்ணும் உணவுகள் கழிவான பிறகு, அது சரியாக வெளியேறாமல் உடலில் தேங்கினால் மலச்சிக்கல் முதல் செரிமானக்கோளாறு வரை ஏராளமான நோய்கள் ஏற்பட அதுவே காரணமாகலாம். அந்த கழிவுகள் அல்லது நச்சுக்களை நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளைக் கொண்டே மிக எளிதாக அகற்றிவிடலாம்.

     * இஞ்சியை மையாக அரைத்துச் சாறு எடுத்து வெறும் வயிற்றில் குடித்தால், குடலில் தேங்கியிருக்கும் கழிவுகள் வெளியேறும். சிலர் காலையில் அருந்தும் டீயில் இஞ்சி சேர்த்து அருந்தி வந்தாலும் அவை உடலைச் சுத்தமாக்கும்.

     * காலையில் கண் விழித்ததும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் அரை எலுமிச்சை பழத்தின் சாற்றுடன் தேன் கலந்து குடித்தால் கழிவுகள் வெளியேறும். ரத்த நாளங்களில் தங்கியிருக்கும் நச்சுகள் அகலும்.

    * இஞ்சியை நீர் சேர்த்து, காய்ச்சி வடிகட்டி, தேன் கலந்து குடித்தால் கல்லீரலில் கழிவுகள் சேராமல் இருக்கும். முழு நெல்லிக்காயுடன் சிறு துண்டு இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து அரைத்து, எலுமிச்சைச் சாறு பிழிந்து, வடிகட்டி, தேன் கலந்து வெறும் வயிற்றில் குடித்தால் மலக்கழிவுகள் வெளியேறும்.

    * வெள்ளைப்பூண்டு நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும். உடலில் தங்கியிருக்கும் நச்சுகளை முற்றிலுமாக வெளியேற்றும். எனவே, நமது அன்றாட உணவில் பூண்டு சேர்த்துக்கொள்வது நல்லது.

    * கேரட்டுடன் சிறு துண்டு இஞ்சி, ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து அரைத்து, எலுமிச்சைச் சாறு சேர்த்து, சிறிது நீர் அல்லது தேங்காய்ப் பால் சேர்த்துக்கொள்ளலாம். இதை வாரம் ஒருநாள் குடித்தால், உடலில் தங்கியிருக்கும் நச்சுகள் வெளியேறும்.

    * கடுக்காய் நல்லதொரு கழிவகற்றி மட்டுமல்ல, நச்சகற்றியும் கூட. ஐந்து கிராம் கடுக்காய்த்தூளை வெந்நீரில் கலந்து இரவு தூங்கப்போவதற்கு முன்னர் குடித்தால் செரிமானப் பிரச்சினை சரியாகும். மலம் எளிதாக வெளியேறும். திரிபலா சூரணமும் கழிவுகளை அகற்றும்.

    • உடலில் சேரும் கொழுப்பு கரைவதில்லை.
    • நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் இருக்கிறது.

    தொழில்நுட்ப வளர்ச்சி உச்சம் தொட்டிருக்கும் இந்த காலத்தில், உடல் உழைப்பு என்றால் என்ன என்பதே தெரியாதவர்கள் அதிகமாகி விட்டார்கள். இதன் காரணமாகவே ஆரோக்கியக் குறைபாடுகளும் அதிகரித்துவிட்டது. வேலை முடிந்து அலுத்து, களைத்துப்போய் வீட்டிற்குள் வரும் பலரும், மீண்டும் தங்களை சாய்த்துக்கொள்வது நாற்காலியில்தான்.

    ஆனால், அவர்களின் களைப்புக்குக் காரணமே ஒரே இடத்தில், நீண்ட நேரமாக நாற்காலியில் உட்கார்ந்து வேலை செய்ததனால்தான் என்பது தெரிவதில்லை. ஆம், உடலுழைக்கச் செய்யும் வேலைகளை விட, ஒரே இடத்தில் அமர்ந்து செய்யும் வேலைகளால்தான் நமது உடல் அதிகமாக சோர்வடைகிறது. வீட்டிலும் சரி, வெளியிலும் சரி பெரும்பாலான நேரங்களில் நாம் உட்கார்ந்தபடியே வேலை செய்வது தற்போது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது.

     மேலும், வெளியில் பயணம் செய்யும்போதும் கூட நடந்து செல்லாமல் பைக், கார் என்றே பழகிவிட்டோம். ஆனால், உண்மையில் நீண்ட நேரம் உட்கார்ந்தே இருப்பதனால், உடலில் பல பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன. அவை என்னவென்பதை பார்ப்போம்.

     ஒரே இடத்தில் நாற்காலியை விட்டு நகராமல் நாம் வேலை செய்து கொண்டிருப்பதால், உடலில் சேரும் கொழுப்பு கரைவதில்லை. இதனால் இதயத்தை சுற்றி உருவாகும் கொழுப்பு அமிலங்கள் இதய நலனை சீர்குலையச் செய்கிறது. நீண்ட நேரம் உட்கார்ந்தே வேலை செய்யும் முறையானது, உடலில் ஹோர்மோன் சமநிலையை கெடுக்கிறது. இதனால் நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் இருக்கிறது. மேலும் இதேமுறை நீண்ட நாள்கள் தொடரும் பட்சத்தில் கணையத்தில் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகளும் உண்டு.

     உட்கார்ந்தே வேலை செய்வதால் ஏற்படும் உடல் நல உபாதையில், பெருங்குடல் புற்றுநோயும் ஒன்று. அதுமட்டுமின்றி நீண்டநேரம் உட்கார்ந்தே வேலை செய்வது மார்பக புற்றுநோய் மற்றும் கருப்பை புற்றுநோய் ஏற்படவும் காரணியாக இருக்கிறது. நாற்காலியில் 6-7 மணி நேரம் உட்கார்ந்தே வேலை செய்வது இடுப்பு எலும்பை வலுவிழக்கச் செய்கிறது.

    கால்களை தொங்கவிட்டபடி மணிக்கணக்கில் வேலை செய்வது உங்கள் கால் பகுதிகளுக்கு ரத்த ஓட்டம் சீராக செல்லாமல் தடைசெய்கிறது. இதனால், கால்களில் பிடிப்பு, வலி, அசெளகரியமாக உணர்தல் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.

     ஒரே இடத்தில் நாற்காலியைவிட்டு நகராமல் வேலை செய்பவர்களுக்கு திடீரென கழுத்தை திருப்ப கூட முடியாத அளவு கடினமான வலி ஏற்படும். இதனால் ஸ்போண்டிலோசிஸ் எனப்படும் பாதிப்பு ஏற்படலாம். மணிக்கணக்கில் உட்கார்ந்தே வேலை செய்பவர்களுக்கு ஏற்படும் முதல் பாதிப்பு தண்டுவட வலி. இது தண்டுவட எலும்புகளை வலுவிழக்க செய்கிறது. கணினியில் வேலை செய்யும்

    நபர்களுக்கு, கையை அசைக்காமல் ஓரே நிலையில் தட்டச்சுப் பலகையுடன் உறவாடும்போது இதுப்போன்ற தோள்பட்டை வலி அதிகமாக ஏற்படும் வாய்ப்புகள் இருக்கிறது.

    நாற்காலியில் நீண்டநேரம் அமர்வதைக் குறைக்க சில வழிமுறைகள்…

    அலுவலகத்தில் அமர்ந்துதான் வேலை செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இருந்தாலும், வெளியிடங்களில் நாற்காலியில் அமர்ந்து வேலை செய்வதைத் தவிர்க்கலாம்.

    ஒவ்வொரு இரண்டு மணி நேரத்துக்கும் இடையே, இருக்கையைவிட்டு எழுந்து 5 நிமிடங்கள் நடக்கலாம். சூரிய ஒளியில் செல்லும் வாய்ப்பு இருந்தால், சூரிய ஒளி உடலின் மீது படும்படி நடக்கலாம். சூரிய ஒளியில் இருந்து வரும் கதிர்கள் பகலில் உடல் சோர்வால் உண்டாகும் தூக்கத்தை விரட்டும். உடல் செல்கள் புத்துணர்வு பெற உதவும்.

    நாம் அமர்ந்திருக்கும் நாற்காலியை சரியாக வைத்துக்கொள்வது மிகவும் அவசியமான ஒன்று. அது, முதுகுத்தண்டுக்குச் சரியாகப் பொருந்தும் அளவுக்குச் சரியான உயரத்தில் இருக்க வேண்டும். சாப்பிட்ட பிறகு, உடனே நாற்காலியில் அமர்ந்து வேலை செய்யக்கூடாது. சில நிமிடங்கள் நிற்கலாம் அல்லது நடக்கலாம். நிற்கும்போதும் நடக்கும்போதும் நம் இதயத்துடிப்பு சீராகவும், அதிகமாகவும் இருக்கும். இதயம், சீரான ரத்த ஓட்டத்துக்கு ஓர் உந்துதலைக் கொடுக்கும். அது வளர் சிதை மாற்றத்துக்கு உதவும்.

    செல்போனில் பேசவேண்டி வந்தால், நடந்துகொண்டே பேசலாம். எழுந்து நடப்பதால், தசைகள் இயக்கம் பெற்றுக் காலில் ரத்தம் தேங்காமல், ரத்த ஓட்டம் சீராக இருக்க உதவும். நீண்ட நேரம் நாற்காலியில் அசையாமல் அமர்ந்திருக்கக்கூடாது.

    அதேபோல், நீண்ட நேரம் அசையாமல் நிற்கவும் கூடாது. இரண்டுமே ஆபத்தானவை. அலுவலகங்களில் லிஃப்டுக்குப் பதிலாக படிக்கட்டுகளை பயன்படுத்தலாம். வீட்டுக்குள் முடிந்தவரை தரையில் அமர்ந்து வேலைகளை செய்யப் பழகலாம். அருகில் உள்ள கடைகளுக்கு நடந்து சென்று பொருட்களை வாங்கலாம் அல்லது மிதிவண்டியில் செல்லலாம்.

    • 3 வகை ஒட்டுண்ணிப் புழுக்களால் உண்டாகிறது.
    • ரத்தத்தில் யானைக்கால் நோய் ஒட்டுண்ணிப்புழுக்கள் கலந்திருக்கும்.

    உயிருள்ள உடலினுள் வாழ்ந்துகொண்டு அந்த உடலினுள்ளேயே உணவையும் தேடி சாப்பிட்டுக் கொண்டு வாழும் ஒருவகை புழுக்களின் பெயர் `ஒட்டுண்ணிப்புழுக்கள்'. யானைக்கால் நோய் இந்த மாதிரி 3 வகை ஒட்டுண்ணிப் புழுக்களால் உண்டாகிறது. இந்த நோய் பாதித்தவரின் ரத்தத்தில் யானைக்கால் நோய் ஒட்டுண்ணிப்புழுக்கள் கலந்திருக்கும். பாதிக்கப்பட்டவரை கடிக்கும் கொசு இன்னொரு மனிதரை கடிக்கும் போது நோய் கிருமி பாதித்த ரத்தம் மூலம் அவருக்கு இந்த நோய் பரவுகிறது.

    நிணநீர் நாளங்கள் தான் நமது உடலில் சேரும் கழிவு மற்றும் விஷப்பொருட்களை வெளியேற்றும் வேலையைச் செய்கிறது. இந்தப் புழு நிணநீர் நாளங்களைப் பாதிக்கச் செய்வதால் ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டு கழிவுப்பொருட்கள் உடலைவிட்டு சரியாக வெளியேற முடியாமல் போய்விடுகிறது. இதனால் நிணநீர் தேங்கி வீக்கமாக மாறிவிடுகிறது. இந்த நோய் யாருக்கு வேண்டுமானாலும் எந்த வயதிலும் வரலாம்.

    இந்நோய் கால்கள், கைகள், பிறப்புறுப்புகள், மார்பகங்கள் போன்றவற்றை வீங்க வைக்கும். நிறையபேருக்கு கால்கள் தான் அதிகமாக வீங்கும். உடல் பாகங்கள் அதிகமாக வீங்கிப்போவ தால் அன்றாட வேலைகளைச் செய்ய, நடக்க சிரமமாகி விடும். கையோ காலோ நிணநீர் சேர்ந்து சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக வீங்கும். பின்பு மடிப்புகள் விழுந்து நீர் நிரம்பிய தோல் மடிப்புகள் தொங்க ஆரம்பித்துவிடும். 'ஊச்சரே ரியா பேங்க்ரப்டி' என்ற பெயருடைய ஒட்டுண்ணி உருளைப் புழு தான் இந்த நிணநீர் அடைப்பை ஏற்படுத்தி கால்களில் வீக்கத்தை உண்டாக்கும்.

    நீண்ட நாட்கள் உங்கள் கால்களில் வற்றாத வீக்கம் இருந்தால் உங்கள் குடும்ப டாக்டரைச் சந்தித்து இது சாதாரண வீக்கமா, யானைக்கால் நோய் வீக்கமா அல்லது வேறு ஏதாவது நோயினால் ஏற்பட்ட வீக்கமா என்று ஆலோசனை பெற்றுக்கொள்ளுங்கள். ஊசி, மருந்து, மாத்திரைகள், எலாஸ்டிக் கட்டு, அறுவை சிகிச்சைகள் போன்றவை இந்த நோய்க்கு தற்காலிக தீர்வைத் தரும்.

    • சித்தமருத்துவத்தில் பேராசன நரம்பு தாபிதம்' என்று அழைக்கப்படுகிறது.
    • சயாட்டிக் நரம்பு என்பது நம் உடலிலேயே நீளமான நரம்பாகும்.

    சயாட்டிகா' என்பது சித்தமருத்துவத்தில் பேராசன நரம்பு தாபிதம்' என்று அழைக்கப்படுகிறது. சயாட்டிக் நரம்பு என்பது நம் உடலிலேயே நீளமான நரம்பாகும். இது இடுப்பு தண்டுவடத்தில் எல் 4 பகுதியில் ஆரம்பித்து பிட்டம், தொடையின் பின்புறம், முழங்காலுக்கு பின்புறம் தசைநார்களுக்கு இடையே செல்கின்ற நரம்பு ஆகும். இது வலது பக்கம் மற்றும் இடது பக்கம் என இரண்டு நரம்புகளாகும்.

    சயாட்டிகா நோய்க்கான காரணங்கள்

    ஹெர்னியேட்டட் இன் டர்வெர்டெபிரல் டிஸ்க்:

    முதுகெலும்புகள் ஒன்றோ டொன்று உராய்வதை தடுப்பதற்கு எலும்புகளுக்கு இடையில் ஒரு தட்டையான மெத்தை போன்ற வட்டு இருக்கும். அதன் இடத்திலிருந்து இந்த வட்டு விலகி வெளியே வரும் போது, அருகிலுள்ள பகுதிகளில் அழுத்தத்தை கொடுக்கிறது. குறிப்பாக முதுகெலும்பின் நெடுவரிசையில் இருந்து உருவாகும் நரம்புகள் அழுத்தப்படுகிறது.

    ஸ்பைனல் ஸ்டெனோசிஸ்:

    முதுகெலும்பு பாதையில் ஏற்படும் சுருக்கம், இடுப்பில் ஏற்படும் விபத்துகள், காயங்கள், எலும்புமுறிவு அல்லது கட்டிகள், கர்ப்ப காலத்தில் ஏற்படும் எலும்புகளின் அசைவால் கூட இது ஏற்படும். மேற்கூறிய காரணங்களால் சயாட்டிக் நரம்பு அழற்சி அடைந்து வலி ஏற்படுகிறது.

    சயாட்டிகாவின் அறிகுறிகள்

    பிட்டம் பகுதியில் ஏற்படுகின்ற வலி தொடையின் பின்புறம், முழங்கால் மற்றும் காலின் பின்புறம் வரை நீடிக்கும். பாதிக்கப்பட்ட காலில் பலவீனம், கூச்ச உணர்வு, உணர்வின்மை மற்றும் எரியும் உணர்வு காணப்படும். இரவில் வலி அதிகமாக இருக்கும்.

     சித்த மருத்துவம்

    இந்த நோய்க்கு கீழ்கண்ட மருந்துகளை சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி எடுக்கலாம்.

    * அமுக்கரா சூரணம் 1 கிராம், சண்டமாருதம் 100 மி.கி. முத்துச்சிப்பி பற்பம் 200 மி.கி., குங்குலிய பற்பம் 200 மி.கி. ஆகியவைகளை மூன்று வேளை தேன் அல்லது வெந்நீரில் கலந்து சாப்பிட வேண்டும்.

    * ரச கந்தி மெழுகு மாத்திரையை காலை ஒன்று, இரவு ஒன்று வீதம் சாப்பிட்டு வர வேண்டும்.

    * சிவப்பு குங்குலியத்தைலம், விடமுட்டி தைலம், வாத கேசரி தைலம், வாத நாராயணன் தைலம் இவைகளில் ஒன்றை வலியுள்ள இடங்களில் தேய்த்து சிறிது நேரம் கழித்து வெந்நீரில் குளிக்க வேண்டும்.

    உடற்பயிற்சி

    கால்களை நன்றாக நீட்டி தரையில் படுத்துக்கொண்டு கால்களை நெஞ்சை நோக்கி உயர்த்த வேண்டும். இவ்வாறு சிறிது நேரம் செய்து வர வேண்டும்.

    • மருந்துகளால் மலச்சிக்கல் உண்டாகலாம்.
    • பச்சைக் காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    மலச்சிக்கல் என்பது ஒரு வாரத்தில் 3 அல்லது அதற்கும் குறைவான தடவை மலம் வெளியேறுவது அல்லது மிகவும் உலர்ந்தும், வலியுடனும் வெளியேறுவதாகும். சர்க்கரை நோயாளிகளில் 60 சதவீதம் பேர் மலச்சிக்கலால் அவதிப்படுகின்றனர். இதற்கு முக்கியகாரணம் ரத்த சர்க்கரை அளவு அதிகமாகும் போது ஏற்படும் குடற்பாதை நரம்புகளின் பாதிப்பாகும்.

    மேலும், சர்க்கரை நோயாளிகளுக்கு, நீரிழிவு நோய்க்காக பரிந்துரைக்கப்படும் மருந்துகளாலோ (டாப்பாகிளப்லோ சின் போன்ற எஸ்.ஜி. எல்.டி2 இன்ஹிபிட்டர்ஸ்) அல்லது கூடுதலாக உள்ள இதய நோய் அல்லது ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு பரிந்துரைக்கப்படும் மருந்துகளாலோ மலச்சிக்கல் உண்டாகலாம். (புரூஸிமைடு, கால்சியம் சேனல் பிளாக்கர்ஸ், இரும்பு சத்து மற்றும் கால்சியம் சத்து மாத்திரைகள்). புரூப்பன், ஆஸ்பிரின், ஒபியாட்ஸ் போன்ற வலி நிவாரண மருந்துகள் உட்கொள்பவர்களுக்கும் மலச்சிக்கல் ஏற்படலாம்.

    மலச்சிக்கலுக்கு தீர்வாக சர்க்கரை நோயாளி கள் நார்ச்சத்து அதிகமாக உள்ள பச்சைக் காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். மலச்சிக்கலுக்கு நீர் வறட்சி காரணம் என்பதால் குறைந்தது ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். மைதா போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். தினமும் நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

    எக்காரணம் கொண்டும் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மலச்சிக்கலுக்காக மலமிளக்கி மருந்துகளை உட்கொள்ளக்கூடாது.

    • நம்மை பாதுகாத்துக்கொள்ள சித்த மருத்துவம் பெரிதும் உதவுகிறது.
    • கொசுக்கள் கடிப்பதன் மூலம் டெங்கு காய்ச்சல் பரவுகிறது.

    மழைக்காலம் என்றாலே `ஜில்' என்ற உணர்வும், மகிழ்வும் தோன்றும். தென்றல் காற்று மெல்ல வாடைக்காற்றாக வீசி தேகத்தை சில்லென்று சிலிர்க்க வைக்கும். உள்ளம் குதூகலித்து உணர்ச்சிகள் பொங்கும். மழையில் நனைந்து ஆட்டம் போட விரும்புவர்களுக்கு இது உற்சாக காலம்.

    மழைக்காலத்தை பலர் விரும்பினாலும், அப்போது தோன்றும் சில நோய்கள் மக்களை வாட்டுவதும் உண்டு. மழைக்காலத்தை அனுபவிக்கும் அதேநேரத்தில், அந்தக்காலத்தில் வரும் நோய் ஆபத்துகள், பாதிப்புகளில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள சித்த மருத்துவம் பெரிதும் உதவுகிறது. நமது வீட்டின் சமையல் அறையின் அஞ்சறைப்பெட்டியில் உள்ள பொருட்களைக்கொண்டே நோய்களை நம் முன்னோர்கள் விரட்டியடித்துள்ளனர். அத்தகைய மகத்துவம் நிறைந்த சித்த மருத்துவம் எந்த அளவுக்கு மழைக்காலத்தில் நமக்கு பலன் தரும் என்பதை பார்ப்போம்.

    டெங்கு காய்ச்சல்

    ஏடீஸ் எஜிப்டி கொசுக்கள் கடிப்பதன் மூலம் டெங்கு காய்ச்சல் பரவுகிறது, இந்நோய் கடுமையான காய்ச்சல், வாந்தி, எலும்பு வலி, கண்களுக்குப் பின்னால் வலி போன்ற அறிகுறிகளைக் காட்டுகிறது. ரத்தத்தில் தட்டணுக்களின் எண்ணிக்கை குறைந்து காணப்படும். இந்நிலை தீவிரமானால் உயிரிழப்பு கூட ஏற்படும். ஆகவே காய்ச்சல் வந்தவுடன் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுவது மிக அவசியம்.

    உங்கள் சுற்றுப்புறத்தில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். கொசுக்கடியில் இருந்து பாதுகாக்க உதவும் ஆடைகளை அணியவும்.

    மருந்துகள்:

    சித்த மருத்துவத்தில் நிலவேம்பு குடிநீர் - பெரியவர்கள் 60 மி.லி. வீதம் இருவேளையும், சிறுவர்கள் 30 மி.லி. வீதம் இருவேளையும் தொடர்ந்து ஒரு வாரம் குடிக்க வேண்டும். ரத்த தட்டணுக்கள் குறைந்தால் கூடவே பப்பாளி இலைச்சாறு பெரியவர்கள் 30 மி.லி. வீதம் இருவேளை, சிறுவர்கள் 10 மி.லி. வீதம் இருவேளை சுவைக்காக தேன் கலந்து குடிக்க வேண்டும். இருமல் இருந்தால் ஆடாதோடை மணப்பாகு, பெரியவர்கள் 15 மி.லி. வீதம் இருவேளை, சிறுவர்கள் 5 மி.லி. வீதம் இருவேளை குடிக்க நல்ல பலனை தரும்.

    சிக்குன்குனியா

    மழைக்காலத்தில் வருகின்ற மற்றொரு நோய் சிக்குன்குனியா. ஏடிஸ் எஜிப்டி மற்றும் ஏடிஸ் அல்போபிக்டஸ் கொசுக்கள் கடித்த மூன்று முதல் ஏழு நாட்களுக்குள் காய்ச்சல் அடிக்கத்தொடங்கும். அப்போது, கடுமையான மூட்டு வலி, காய்ச்சல், உடல் சோம்பல், பலவீனம் காணப்படும்.

     மருந்துகள்:

    சிக்குன்குனியா காய்ச்சலுக்கு நிலவேம்பு குடிநீருடன், அமுக்கரா மாத்திரை, வாத ராட்சசன் மாத்திரை, விஸ்ணு சக்கர மாத்திரைகளை சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி எடுக்கலாம்.

    தலைபாரம், மூக்கடைப்பு, சைனஸ் தொந்தரவுகள்

    மழைக்காலத்தில் தலைநீர் கோர்ப்பதால் நீர்க்கோவை எனப்படும் சைனசைட்டிஸ் என்னும் நோய் ஏற்படுகிறது. இந்நோயில் கடுமையான தலைவலி, தலைபாரம், மூக்கடைப்பு, தும்மல், கண்களில் பாரம் போன்ற குறி குணங்கள் ஏற்படும்.

    மருந்துகள்:

    சுத்தமான உப்புநீர்க் கரைசலை ஒரு மூக்குத் துளையில் விட்டு இன்னொரு மூக்குத் துளை வழியே வெளியேற்ற வேண்டும். நன்றாக கொதிக்க வைத்த நீரில் மஞ்சள்தூள் போட்டு போர்வையால் நன்கு மூடிக்கொண்டு ஆவி பிடிக்க வேண்டும். அல்லது நொச்சி இலைகளை நன்றாகத் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆவி பிடிக்க வேண்டும். தும்பைப்பூ மலர்களை கசக்கி ஒரு சொட்டு வீதம் இரு மூக்குத்துளைகளிலும் விடலாம். நீர்க்கோவை மாத்திரையை நீரில் உரசி நெற்றி, கன்னத்தில் பற்றிடலாம்.

    தாளிசாதி சூரணம் 1 கிராம் அல்லது திரிகடுக சூரணம் 1 கிராம், சிவனார் அமிர்தம் 200 மி.கி., பலகரை பற்பம் 200 மி.கி., கஸ்தூரி கருப்பு 200 மி.கி. இவைகளை மூன்று வேளை தேன் அல்லது வெந்நீரில் கலந்து சாப்பிட வேண்டும். தலைக்கு தேய்த்து குளிக்க சுக்குத்தைலம், அரக்குத்தைலம், பீனிசத் தைலம், நாசிரோக நாசத்தைலம் இவற்றில் ஒரு மருந்தை பயன்படுத்தலாம்.

    சைனசைட்டிஸ் தடுப்புமுறைகள்:

    மழைநீரில் நனைந்தாலும் அல்லது தலைக்கு குளித்த உடனும் நன்கு ஈரம் காய தலையை துடைத்துக்கொள்ள வேண்டும். இளவெதுவெதுப்பான வெந்நீர், மிளகு கலந்த பால், சுக்கு கலந்த பால் போன்றவற்றை குடிப்பது நல்லது. நோய் எதிர்ப்பு சக்திக்குரிய கீரைகள், பழங்கள், பால், முட்டை, பயிறு வகைகள் போன்றவற்றை தினசரி உட்கொள்ள வேண்டும்.

    ஜன்னலோர பஸ் பயணம், மின்விசிறி காற்றுக்கு நேராக கீழே படுத்தல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இரவு ஆறு முதல் ஏழு மணி நேரம் தொடர்ச்சியாக தூங்கவேண்டும். பகல் தூக்கத்தைத் தவிர்க்க வேண்டும்.

    ஆஸ்துமா

    மழைக்காலம் மற்றும் பனிக்காலத்தில் ஆஸ்துமா பாதிப்புள்ளவர்கள் அதிக சிரமப்படுகிறார்கள். இரைப்பு நோய் (ஆஸ்துமா) என்பது மூச்சு விடுவதற்கு சிரமத்தை தருகின்ற நோய் ஆகும். தூசி, புகை, பனி, குளிர் காற்று, காற்று மாசுபாடு, மலைப்பகுதிகளில் பயணம் செய்வது, நுரையீரலை தீவிரமாக பாதிக்கும் பாக்டீரியா, வைரஸ் நோய்கள் போன்ற பல காரணங்களால் இந்த நோய் வருகிறது.

    இரைப்பு நோயை குணப்படுத்த துளசி, ஆடாதோடை, கஞ்சாங்கோரை, கரிசலாங்கண்ணி, கண்டங்கத்திரி, தூதுவளை, நஞ்சறுப்பான் என்று ஏராளமான மூலிகைகள் சித்த மருத்துவத்தில் உள்ளன.

    சித்த மருந்துகள்:

    1) தாளிசாதி சூரணம் ஒரு கிராம், கஸ்தூரி கருப்பு 100 மி.கி., சிவனார் அமிர்தம் 100 மி.கி., பவள பற்பம் 100 மி.கி. இவற்றை தேன் அல்லது வெந்நீரில் மூன்று வேளை உணவுக்குப் பின் சாப்பிட வேண்டும்.

    2) சுவாசகுடோரி மாத்திரை 1 அல்லது 2 வீதம் காலை, மதியம், இரவு 3 வேளை உணவுக்குப் பின் சாப்பிட வேண்டும்.

    3) கஸ்தூரி மாத்திரை 1 அல்லது 2 வீதம் இருவேளை சாப்பிட வேண்டும்.

    4) கண்டங்கத்திரி லேகியம், தூதுவளை நெய், ஆடாதோடை மணப்பாகு இவற்றில் ஒன்றை காலை, இரவு உணவுக்கு பின் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    5) குளிர்ந்த பொருள்கள் சாப்பிடுதல், பனிக்காற்றில் நடமாடுதல், ஊதுபத்தி, கொசுவர்த்தி சுருள்களின் புகை, புகைப்பழக்கம், ஒட்டடை அடித்தல் போன்றவற்றை இரைப்பு நோய் உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.

    பொதுவான நோய் தடுப்புமுறைகள்

    பாதுகாப்பான மற்றும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை குடிக்கவும். கொதிக்க வைத்த இள வெதுவெதுப்பான வெந்நீர் மிகச் சிறந்தது. பழங்கள் மற்றும் காய்கறிகள், கீரைகள் இவற்றை நன்கு கழுவிய பிறகு பயன்படுத்த வேண்டும்.

    கைகளை அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். முதல் நாள் மீதமான உணவை மறுநாள் சூடு செய்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஈ, பூச்சிகள் மொய்த்திருக்கும் தெரு உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். வீட்டுக்கருகில் நல்ல தண்ணீர் அல்லது அசுத்தமான தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டு ஜன்னல்கள், கதவுகளில் கொசு வலை பயன்படுத்துவது நல்லது.

    சேற்றுப்புண்

    மழைக்காலத்தில் வருகின்ற மற்றொரு பாதிப்பு, 'சேற்றுப்புண்' ஆகும். இந்நோயில் விரல் இடுக்குகளில் வெள்ளை நிறத்தில் புண்கள் மற்றும் நீர்க்கசிவு, அரிப்பு, வலி இவை காணப்படும். சேற்றுப்புண் பாதித்த பகுதிகளை தண்ணீரில் நன்றாகக் கழுவி படிகார நீர் விட்டு துடைத்து, கிளிஞ்சல் மெழுகு அல்லது வங்க வெண்ணெய் போட்டு வர, சேற்றுப்புண் ஆறி வரும்.

    தொண்டை வலி

    மழைக்காலத்தில் குளிர்ந்த தண்ணீர், சுகாதாரமற்ற குடிநீர் மற்றும் குளிர்பானங்கள் குடிப்பதால் டான்சிலைடிஸ் எனப்படும் உள்நாக்கு அழற்சி நோய் ஏற்படுகிறது. இந்நோயால் தொண்டைவலி, குரல் கம்மல் இவற்றுடன் சில நேரம் காய்ச்சலும் வரும். இந்நோய்க்கு சித்த மருத்துவத்தில் சிறப்பான மருந்துகள் உள்ளன.

    இளஞ்சூடான வெந்நீரை அடிக்கடி குடிக்க வேண்டும். உப்பு, மஞ்சள் கலந்து அந்த நீரை, தொண்டையில் படும்படியாக வாய் கொப்பளித்து வரவேண்டும். சூடாக தேநீர், காபி அடிக்கடி இந்நேரங்களில் குடிக்கலாம்.

    மருந்துகள்:

    பூண்டு சிறிதளவு எடுத்து, அதை இடித்து ஒரு வெள்ளைத் துணியில் முடிந்து லேசாக நெருப்பில் வாட்டிப் பிழிய, அதிலிருந்து சாறு வரும். அதனுடன், சிறிதளவு தேன் கலந்து உள்நாக்கு அழற்சி உள்ள பகுதியில் காலை, இரவு என இருவேளைகளில் தடவி வர, தொண்டை வலி, கரகரப்பு நீங்கும். உள்நாக்கு அழற்சியும் குணமடையும்.

    ஆடாதோடை, மிளகு, தேன் அல்லது பனங்கற்கண்டு கலந்து காலை, இரவு என இருவேளை மென்று சாப்பிடலாம். சின்ன வெங்காயத்துடன், நாட்டு வெல்லம் வைத்து சாப்பிட உள்நாக்கு அழற்சி வலி மாறும். வெற்றிலை, கிராம்பு, மிளகு இதனுடன் உலர் பழங்கள் அல்லது நாட்டு வெல்லம் வைத்து சாப்பிட்டு வரவேண்டும்.

    தாளிசாதி வடகம், துளசி வடகம் இரண்டு மாத்திரை வீதம் சாப்பிட்டு வர தொண்டை சதை அழற்சி நீங்கும். கற்பூரவல்லி இலைச்சாறுடன் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர, தொண்டை சதை வளர்ச்சி நீங்கும்.

    பாலுடன் மஞ்சள், மிளகு கலந்து காலை, இரவு அருந்தலாம். முட்டையை வேகவைத்து அதனுடன் மிளகு, மஞ்சள், சீரகம் கலந்து சாப்பிட்டு வரலாம். நாட்டுக்கோழி சூப், நண்டு சூப் வைத்து சாப்பிடலாம். நோயற்ற வாழ்வுக்கு எப்போதும் வெந்நீரையே அருந்த வேண்டும்.

    • பலர் ரத்த தானம் செய்வதற்கு தயங்குகிறார்கள்.
    • உடல் ஆரோக்கியம் கெட்டுப்போகும் என்று கருதுகிறார்கள்.

    ரத்த தானம் செய்வது உன்னத சேவையாக கருதப்படுகிறது. இருப்பினும் பலர் ரத்த தானம் செய்வதற்கு தயங்குகிறார்கள். ரத்த தானம் செய்தால் உடல் பலவீனமடையும், உடல் ஆரோக்கியம் கெட்டுப்போகும் என்று கருதுகிறார்கள். ஆனால் ரத்த தானம் செய்வது ஆரோக்கியத்திற்கு பலம் சேர்க்கும் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ரத்த தானம் செய்பவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. ரத்த தானம் பற்றிய பொதுவான கட்டுக்கதைகளில் சிலவற்றை பார்ப்போம்.

    ரத்த தானம் செய்வது நரம்புகளுக்கு வேதனையை ஏற்படுத்தும்

    உண்மை:

    ரத்தம் எடுப்பதற்காக நரம்புக்குள் செருகப்படும் ஊசி காயத்தை ஏற்படுத்தாது. நரம்புகளுக்கும் எந்த பாதிப்பையும் உண்டாக்காது. ஊசியால் துளையிடப்பட்ட இடம் ஓரிரு நாளிலேயே இயல்பாகிவிடும். ரத்த தானம் செய்த பிறகு சோர்வாக இருப்பதாக உணரலாம். பழம் அல்லது பழச்சாறு பருகுவதன் மூலம் அந்த சோர்வில் இருந்து சட்டென்று மீண்டு விடலாம். நிறைய தண்ணீர் குடிப்பதும் உடலுக்கு பலம் சேர்க்கும்.

    ரத்த தானம் செய்வது நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும்

    உண்மை:

    ரத்த தானம் செய்வது நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கும், உடலை பலவீனப்படுத்தும் என்பதில் உண்மை இல்லை. உடலில் உற்பத்தி செய்யப்படும் ரத்தத்தில் 30 சதவீதம் உடல் உறுப்புகளால் பயன்படுத்தப்படாமல்தான் இருக்கிறது. எனவே ரத்த தானம் செய்வதால் எந்த பாதிப்பும் நேராது. ரத்த தானம் செய்த சில மணி நேரங்களிலேயே ரத்த சிவப்பணுக்கள் மீண்டும் உருவாகிவிடும். புதிய ரத்தமும் உற்பத்தியாக தொடங்கிவிடும்.

    ரத்த தானம் செய்பவருக்கு நோய்த்தொற்று ஏற்படக்கூடும்

    உண்மை:

    ரத்த தானம் பெறும் ரத்த வங்கிகளுக்கு உலக சுகாதார நிறுவனமும், செஞ்சிலுவை சங்கமும் கடுமையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்திருக்கின்றன. கிருமி நீக்கம் செய்யப்பட்ட ஊசியைத்தான் பயன்படுத்த வேண்டும், பிறருக்கு பயன்படுத்திய ஊசியை பயன்படுத்தக்கூடாது போன்ற பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளும் பின்பற்றப்படுகின்றன. அதனால் ரத்த தானம் மூலம் நோய்த்தொற்று பரவுவதற்கு வாய்ப்பு இல்லை.

    நீரிழிவு நோயாளிகள் ரத்த தானம் செய்யக்கூடாது

    உண்மை:

    தினமும் இன்சுலின் செலுத்திக்கொள்பவர்கள், மருந்து மாத்திரைகளை அதிகம் உட்கொள்பவர்கள் ரத்த தானம் செய்வதை தவிர்க்கலாம். மற்றவர்கள் டாக்டரிடம் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கலாம்.

    பெண்கள் ரத்த தானம் செய்யக்கூடாது

    உண்மை:

    ரத்த தானம் செய்வதற்கு பெண்கள் முற்றிலும் தகுதியானவர்கள். ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைவாக இருப்பவர்கள், ரத்த சோகை பாதிப்புக்கு ஆளானவர்கள் ரத்த தானம் செய்யக்கூடாது. இது ஆண்களுக்கும் பொருந்தும். ரத்த தானம் செய்வதற்கு ஒரு டெசிலிட்டருக்கு 12.5 கிராம் ஹீமோகுளோபின் (லிட்டருக்கு 125 கிராம்) தேவைப்படுகிறது. அதற்கும் குறைவான இருப்பவர்கள் ரத்த தானம் செய்ய தகுதி இல்லை. அதேபோல் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் ரத்த தானம் செய்யக்கூடாது.

    வயதில் சிறியவராகவோ, முதுமை அடைந்தவராகவோ இருந்தால் ரத்த தானம் செய்யக்கூடாது

    உண்மை:

    ரத்த தானம் செய்வதற்கு சிறியவர், பெரியவர் என்ற வரைமுறை இல்லை. எனினும் ரத்த தானம் செய்வதற்கான குறைந்த வயது வரம்பு 18 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வயது வரம்பு 65. இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் கருத்துப்படி, ரத்த தானம் செய்பவர்களில் பெரும்பாலானோர் 50 மற்றும் 60 வயது உடையவர்களாக இருக்கிறார்கள்.

    • தினமும் சராசரியாக 100 முடிகள் உதிர்வது இயற்கை.
    • தினமும் சராசரியாக அரை மி.மீ. நீளத்துக்கு வளர்கிறது.

    முடி என்பது ஒரு புரத இழை. கரோட்டின் என்னும் புரதத்தால் ஆனது. `பாலிக்கிள்' எனும் முடிக்குழியில் இருந்து வளரக்கூடியது. நமது தலையில் சராசரியாக ஒரு லட்சம் முடிகள் இருக்கின்றன. தினமும் சராசரியாக 100 முடிகள் உதிர்வது இயற்கை. முடியின் வளர்ச்சி 3 பருவங்களை கொண்டது. `அனாஜன்' என்பது வளரும் முதல் பருவம்.

    ஒரு முடியானது தினமும் சராசரியாக அரை மி.மீ. நீளத்துக்கு வளர்கிறது. இந்த வளர்ச்சி பருவம் 3 முதல் 7 ஆண்டுகள் வரை நீடிக்கும். இதை தீர்மானிப்பது, பரம்பரையில் வரும் மரபணுக்கள். அடுத்தது `காட்டாஜன்' பருவம் ஆகும். இதில் முடி இயற்கையாகவே உதிர ஆரம்பிக்கும். இந்த பருவம் 2 வாரங்களுக்கு நீடிக்கும். மூன்றாவது பருவம் `டீலாஜன்'. இது முடி ஓய்வெடுக்கும் பருவம். இது சுமார் ௨ முதல் 4 மாதங்கள் வரை நீடிக்கும்.

    இந்த சுழற்சி முடிந்து மீண்டும் வளர்ச்சி பருவத்துக்கு திரும்பும். முடி உதிர்ந்த இடத்தில் புதிதாக வேறு முடி முளைக்கும். தலைமுடி ஒவ்வொன்றும் ஒவ்வொரு பருவத்தில் இருக்கும். பெரும்பாலான முடிகள் வளரும் பருவத்தில் இருந்தால், முடி தொடர்ந்து வளரும்.

    உதிரும் பருவத்தில் அதிக முடிகள் இருந்தால், முடி கொட்டும். வழுக்கை விழும். வயது, பரம்பரை, ஆன்ட்ரோஜன் ஹார்மோன் ஆகியவை தான் வழுக்கைக்கான முக்கிய காரணங்கள். உடல் வளர்ச்சி நியதியின்படி, வயது ஆக ஆக செல்கள் தங்களை புதுப்பித்துக் கொள்வதை தாமதப்படுத்தும். இதன் விளைவால் புதிய செல்களின் உற்பத்தி குறையும்.

    இது தலைமுடிக்கும் பொருந்தும். ஒரு கட்டத்தில் முடியின் வளர்ச்சியே நின்றுவிடும். முதுமையில் வழுக்கை விழுவது இப்படித்தான்.

    ஆண்களுக்கு மட்டுமே வழுக்கை விழுகிறது. பெண்களுக்கு ஏன் வழுக்கை விழுவதில்லை? இந்த சந்தேகம் அதிகம் பேருக்கு இருக்கிறது. டெஸ்டோஸ்டீரோன் ஹார்மோன் பெண்களிடம் அளவாகவே சுரக்கிறது. அதிகமாக சுரக்க வழியில்லை. இதனால் பெண்களுக்கு வழுக்கை விழுவது மிக அரிதாக இருக்கிறது.

     சிறு வயதில் இருந்து தலைமுடியை பராமரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். எண்ணெய் தேய்த்துக் குளிப்பது முக்கியம். சருமத்தையும் முடியையும் வறண்டு போகாமல் வைத்திருக்க எண்ணெய் நிச்சயம் உதவும்.

    • ஒளி உடலில் உள்ள ஹார்மோன்களின் செயல்பாடுகளை எளிதாக பாதிக்கிறது.
    • நீரிழிவு நோயில், ரத்த சர்க்கரையின் அளவு மிக அதிகமாகிறது.

    தினமும் நாம் கடந்து போகும் சாலைகளில் கட்டிடங்களில் மின்னும் எல்.இ.டி. விளக்குகள், லேசர் ஒளிக்கற்றைகள் போன்றவை நீரிழிவு நோயின் அபாயத்தை பன்மடங்கு அதிகரிப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது.

    இந்த ஆய்வின் படி இரவில் செயற்கை வெளிப்புற ஒளி உடலில் உள்ள ஹார்மோன்களின் செயல்பாடுகளை எளிதாக பாதிக்கிறது. இதன் காரணமாக நீரிழிவு ஆபத்து அதிகரிக்கிறது. நீரிழிவு நோயில், ரத்த சர்க்கரையின் அளவு மிக அதிகமாகிறது. இதன் காரணமாக சிறுநீரகம், இதயம் போன்ற அத்தியாவசிய உறுப்புகளில் அழுத்தம் அதிகரிக்கிறது. செயற்கையாக வானத்தை பிரகாசமாக்கும் லைட்டுகள் சர்க்கரை நோயை அதிகப்படுத்தி உள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    விளக்குகளால் அதிகம் பாதிக்கப்படும் நபரின் உடலில் உள்ள ஹார்மோன்களின் செயல்பாடுகள் மாறுகின்றன. இதனால் தூக்கம் வரவும், காலையில் விழித்துக்கொள்ள உதவும் மெலடோனின் மற்றும் கார்டிகோஸ்டிரோன் ஆற்றல் வித்தியாசமாக செயல்படுகின்றன. இதன் காரணமாக சர்க்காடியன் ரிதம் மோசமடைகிறது. இதன் விளைவாக, உடலில் சர்க்கரை உற்பத்தி அதிகரிக்கிறது. இரவில் நியான் அல்லது எல்.இ.டி. ஒளியால், குளுக்கோசின் வளர்சிதை மாற்றம் குறைவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதாவது சாதாரண மக்களை விட இரவில் செயற்கை வெளிப்புற ஒளி விளக்குகளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். குறிப்பாக அலுவலகம், மால் போன்ற இடங்களில் அழகுக்காக சற்று கூடுதலாகவே இருக்கும். இதுபோன்ற சூழலில் வசிப்பவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு 28 சதவீதம் அதிகரிக்கிறது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது உடலானது எல்.இ.டி. விளக்குகளால் இரவு, பகலுக்கு வித்தியாசம் தெரியாமல் இருப்பதால் பகலில் சுரக்கும் கார்டிசோல் இரவிலும் சுரக்கிறது. இதனால் சர்க்கரையின் அளவும் அதிகரிக்கிறது.

    ஆய்வில் கண்டறியப்பட்ட ஆச்சரியமான உண்மை என்னவென்றால் பிரகாசமான விளக்குகளின் வெளிப்பாடு அதிகமாக இருப்பதால், அந்த நபர்களின் பி.எம்.ஐ. அளவும் அதிகமாகும். இவர்கள் உடல் செயல்பாடுகளை செய்தாலும், அவர்களுக்கு சர்க்கரை நோய் வரும் அபாயம் உள்ளது.

    காலையில் அதிக கார்டிசோல் ஹார்மோன் காரணமாக, சர்க்கரையின் உற்பத்தி அதிகமாக உள்ளது. இதன் காரணமாக நாம் காலையில் அதிக உடல் உழைப்புடன் இருக்கிறோம். ஆனால் இரவில் நாம் பிரகாசமான வெளிச்சத்தில் இருக்கும்போது, கார்டிசோல் ஆதிக்கம் செலுத்தும் போது மெலடோனின் ஹார்மோன் அடக்கப்பட்டு அதிக சர்க்கரை உருவாவதை ஊக்குவிக்கிறது.

    • விதவிதமான வடிவங்களில் இ-சிகரெட்டுகள் வந்த வண்ணம் உள்ளன.
    • இ-சிகரெட்டில் சில நச்சுப் பொருட்கள் உள்ளன.

    நிகோடின்:

    புகைப்பழக்கம் கொண்டவர்களை ஈர்க்கும் விதமாக விதவிதமான வடிவங்களில் இ-சிகரெட்டுகள் வந்த வண்ணம் உள்ளன. அவை புகைப்பிடிப்பவர்களுக்கு உதவும் என்பதற்கு ஆதாரம் இல்லை என்றும், அதற்கு பதிலாக இளைஞர்களிடத்தில் நிகோடினால் ஏற்படும் பாதிப்பை அதிகரிக்க செய்யும் என்றும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. இ-சிகரெட்டில் சில நச்சுப் பொருட்கள் உள்ளன. அவை புற்றுநோயை உண்டாக்கும். இதயம் மற்றும் நுரையீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இ-சிகரெட்டுகள் ஏற்படுத்தும் முக்கியமான பாதிப்புகள் குறித்து பார்ப்போம்...

    வழக்கமான சிகரெட்டுகளில் காணப்படும் போதைப் பொருளான நிகோடின் பெரும்பாலான இ-சிகரெட்டுகளிலும் உள்ளது. மூச்சுக்குழாய் வழியாக ஊடுருவும் நிகோடின் நுரையீரலில் தங்கிவிடும். அது நுரையீரலை விட்டு நீங்காமல் நாளடைவில் நுரையீரல் சார்ந்த பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். இருமல், மூச்சுத்திணறல், சோர்வு, நெஞ்சு வலி ஆகிய பிரச்சினைகளை எதிர்கொள்ளக்கூடும். இறுதியில் மரணத்துக்கு வழிவகுத்துவிடும்.

    மூளை வளர்ச்சி:

    டீன் ஏஜ் பருவத்தினர் மற்றும் இளைஞர்களின் மூளை வளர்ச்சிக்கு நிகோடின் தடையாக அமையும். மூளைக்கு தீங்கு விளைவிப்பதோடு கற்றல் திறனை பாதித்துவிடும். கவனச்சிதறலையும் உண்டாக்கிவிடும்.

    மூச்சுக்குழாய் அழற்சி:

    இ-சிகரெட்டுகளில் ஏரோசோலில் டயசெடைல் போன்ற தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் உள்ளன. இவை கடுமையான நுரையீரல் நோயான மூச்சுக்குழாய் அழற்சிக்கு வித்திடும். ஆஸ்துமா போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தி உடல் நலனை மோசமாக்கிவிடும். மூச்சுப்பயிற்சி செய்வது போன்று தினமும் பலூன் ஊதி பயிற்சி செய்வதும் நல்லது. மூச்சுக்குழாய்க்கு சிறந்த பயிற்சியாக அமையும். அதன் ஆரோக்கியத்தை வலுப்படுத்தும்.

    இதய நோய்:

    இ-சிகரெட்டுகள் இதயம் மற்றும் ரத்த நாளங்களை சேதப்படுத்தும். மாரடைப்பு, பக்கவாதம் போன்ற இதயம் சார்ந்த நோய் அபாயத்தை அதிகரிக்கச்செய்துவிடும்.

    மன ஆரோக்கியம்:

    நிகோடின் உடலில் சேரும் நச்சு வகைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. உடலுக்குள் அதன் வீரியம் அதிகரிக்கும்போது கவலை, மனச்சோர்வு போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தும்.

    கர்ப்பிணி:

    இ-சிகரெட்டுகளில் ஏரோசோலில் நிகோடின் மற்றும் தீங்கு விளைவிக்கும் சில ரசாயனங்கள் உள்ளன. அதனை கர்ப்பிணிகள் நுகர்வது கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும்.

    விடுபட வழிமுறைகள்:

    புகைப்பழக்கத்தை கைவிடுவதற்கு முயற்சித்தாலும் சிகரெட்டில் இருக்கும் நிகோடின் அதற்கு இசைவு கொடுக்காது. அது உடலில் சேர்ந்து பழக்கப்பட்டுவிட்டதால் அதன் தேவையை எதிர்நோக்கிக்கொண்டிருக்கும். அதனால் மீண்டும் புகைப்பழக்கத்துக்கு அடிமைப்படுத்திவிடும். அதற்கு இடம் கொடுக்கக்கூடாது. புகைப்பிடிக்க வேண்டும் என்று நிகோடின் தூண்டிவிடும்போது கவனத்தை திசைதிருப்ப வேண்டும். உங்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்குகளில் ஈடுபடலாம். இசையை கேட்டு மகிழலாம்.

    புகைப்பிடிக்க வேண்டும் என்று தோன்றும் சமயங்களில் குடிநீர் பருகலாம். உடலை நீரேற்றமாக வைத்திருப்பது உடலில் சேர்ந்திருக்கும் நிகோட்டினை வெளியேற்ற உதவும். புகைப் பிடிக்கும் ஆசையை கட்டுப்படுத்தும். உடற்பயிற்சி செய்வதும் நிகோடின் ஏற்படுத்தும் புகைப்பழக்க பசியை கட்டுப்படுத்த உதவும். சூயிங்கம் போன்ற இனிப்பு இல்லாத மிட்டாய் வகைகளை சுவைத்தும் வரலாம்.

    புகைப்பழக்கத்தில் இருந்து சட்டென்று மீண்டு வருவது கடினமானது. புகைப்பிடிக்க வேண்டும் என்று விரும்பும் சமயங்களில் வேறு வேலைகளில் கவனம் செலுத்தலாம். அதற்கு மாற்றான பொருட்களை உபயோகப்படுத்தலாம்.

    அப்படியும் முடியாத பட்சத்தில் தினமும் ஒருமுறை மட்டும் புகைப்பிடிக்கும் வழக்கத்தை பின்பற்றலாம். ஒருவாரம் கடந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை என்று தீர்மானித்து படிப்படியாக புகைப்பழக்கத்தில் இருந்து மீண்டு வர முயற்சிக்கலாம்.

    • பார்வையற்றவர்களால் ஒளியை உணர முடியும்.
    • பிரகாசமான ஒளி பார்வையற்றவர்களை சுலபமாகப் பாதிக்கும்.

    கண் பார்வையற்றவர்களால் காட்சிகளைத்தான் காண முடியாது. ஆனால், ஒளியை உணர முடியும். பார்வையுடையவர்களை விட பார்வையற்றவர்களின் விழித்திரை எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியது. அதனால் பிரகாசமான ஒளி பார்வையற்றவர்களை சுலபமாகப்பாதிக்கும். கண் கூச்சம் மற்றும் எரிச்சலை உண்டாக்கும்.

     விழித்திரையின் மீது விழுகின்ற பிரகாசமான ஒளிக்கு தடுப்புச் சுவராக கருப்புக் கண்ணாடி செயல்படுகிறது. அதனாலேயே பெரும்பாலான பார்வையற்றவர்கள் கருப்புக் கண்ணாடியை அணிகிறார்கள். தாங்கள் பார்வையற்றவர்கள் என்று மற்றவர்களுக்குத் தெரிவிக்கும் ஓர் அடையாளமாகவும் கருப்புக் கண்ணாடி இருக்கிறது.

    ×