என் மலர்
பொது மருத்துவம்
- மூளையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுகள் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
- மனித உடலில் கொழுப்பால் ஆன முக்கிய உறுப்பும் மூளைதான்.
மனித மூளையைப் பற்றி ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வெளிவந்துவிட்டன. அதன் செயல்பாடுகள் குறித்த ஆய்வுகள் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. நரம்பு மண்டலத்தை கட்டுப்படுத்தும் மூளையின் எடை 1.37 கிலோ. 60 சதவீதம் கொழுப்புகளால் ஆன ஓர் உறுப்பு. அத்துடன் மனித உடலில் கொழுப்பால் ஆன முக்கிய உறுப்பும் மூளைதான்.
23 வாட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் மனித மூளையிடம் இருக்கிறது. உடலில் உற்பத்தியாகும் ரத்தம் மற்றும் ஆக்சிஜனில் 20 சதவீதத்தை மூளை எடுத்துக்கொள்கிறது. இன்னும் மூளையின் முக்கியத்துவத்தை அடுக்கிக்கொண்டே போகலாம்.

உடலின் மைய நரம்பு மண்டலத்தின் ஒரு பகுதிதான் நம்முடைய மூளை. தகவல்களை பெறுவதற்கும் அனுப்புவதற்கும் அதிக திறனை கொண்டுள்ளது மூளை பகுதி. மூளையின் அமைப்பானது 3 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அவை முன் மூளை, நடு மூளை, பின் மூளை என்று தனி தனியாக பிரிக்கப்பட்டுள்ளன. உடலில் அதிகமாக ஆற்றலை அதிகரிக்கக்கூடியது மூளை பகுதி தான்.
வயது வந்தவர்களின் மூளையானது சுமார் 1.4 கிலோ கிராம் எடை அளவிற்கு இருக்கும். மனிதரின் உடல் எடையில் மூளையானது 2 சதவிகிதத்தினை கொண்டுள்ளது.
பெண்கள் மூளையை விட 10% ஆண்களுடைய மூளையானது பெரியது. ஆண்களின் மூளையானது கிட்டத்தட்ட 1274 கன செ.மீ அளவிற்கு இருக்கும். சராசரியாக பெண்களின் மூளையின் அளவானது 1131 கன செ.மீ அளவு இருக்கும்.
மூளையின் முக்கியப் பகுதியாக இருப்பது பெருமூளை. மண்டை ஓட்டின் முன் பகுதியில் அமைந்துள்ள மூளையின் முக்கிய பகுதியாக விளங்கும் பெருமூளையின் எடை 85 சதவீதம் இருக்கும். மூளையானது 75 சதவீதம் நீரினை கொண்டது. அதனால் உடலில் நீர்ச்சத்து குறைந்து காணப்படும் போது மூளையின் செயல்பாடுகளில் எதிர்மறையான விளைவுகள் ஏற்படும்.
மனித மூளையானது சுமார் 18 வயதில் இருந்து வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கும். 25 வயதில் முழு முதிர்ச்சியை மூளை அடைகிறது. முதல் வருடத்தில் இதனுடைய வளர்ச்சி மூன்று மடங்கு அதிகமாக இருக்கும்.

கழுத்து பகுதி, தலையின் தசைகள் மற்றும் நரம்புகளுடன் சேர்ந்து மூளையில் ஏற்படக்கூடிய ரசாயன எதிர்வினை காரணமாக தலைவலி பிரச்சனை உண்டாகிறது. மனித மூளையில் சுமார் 10,000 கோடி நியூரான்கள் உள்ளது.
மனிதர்கள் தங்களுடைய மூளையில் 10 சதவீதம் மட்டுமே பயன்படுத்துகிறார்கள் என்பது தவறான விஷயம். உண்மையில் நாம் மொத்த மூளையையும் பயன்படுத்துகிறோம். இரவில் தூங்கும் பொழுது 10 சதவீதத்திற்கும் மேலாக மூளையை பயன்படுத்துகிறோம்.
நீங்கள் கண்களால் பார்க்கக் கூடிய, மனதால் நினைக்கக்கூடிய, செய்யக்கூடிய எல்லா தகவல்களும் உங்களுடைய மூளையில் உள்ள நியூரான்களுக்கு இடையில் நடைபெறுகிறது. நியூரான்கள் தகவல்களை வேறுபட்ட வேகத்தில் நகர்த்துகிறது. நியூரான்களுக்கு இடையில் தகவல்கள் அதிகபட்சமாக 402 கிலோமீட்டர்கள் வேகத்தில் அனுப்பப்படுகிறது.
மனித மூளையனாது 20 வயதிற்கு பிறகு சில நினைவு திறன மற்றும் அறிவாற்றல் திறனை இழக்க தொடங்குகிறது. நமக்கு வயது அதிகரிக்கும் போது மூளை பகுதியானது சிறியதாக தொடங்கும். மனித மூளையில் 160000 கிலோமீட்டர் நீளத்திற்கு ரத்த நாளங்கள் உள்ளது.
மூளையானது நமது உடலில் 20 சதவீதம் ஆக்சிஜன் மற்றும் ரத்தத்தை பயன்படுத்துகிறது. ஒவ்வொரு முறையும் இதயம் துடிக்கும் போது தமனிகள் உங்கள் ரத்தத்தில் 20 முதல் 25 சதவீதம் அளவிற்கு மூளைக்கு எடுத்துச் செல்கிறது. ஒவ்வொரு நிமிடமும் 750-ல் இருந்து 1000 மில்லி லிட்டர் ரத்தம் மூளை வழியாக செல்கிறது.
- ஆள்காட்டி விரலுக்கும் நடுவே அழுத்தம் கொடுத்தால், காது பிரச்சினைகள் சரியாகும்.
- கால் விரல்களை தரையில் ஊன்றியபடி நடந்தால் மூளையின் செயல்பாடு அதிகரிக்கும்.
`ரெஃப்லெக்சாலஜி' வகை அழுத்த சிகிச்சையை செய்துகொள்வதன் மூலம் மனம் அமைதி ஆவதுடன், உடலும் ரிலாக்ஸ் ஆகும். உறங்கப்போவதற்கு முன்னர் சுண்டு விரலுக்குக் கீழே உள்ள பகுதியில் இதமான அழுத்தம் கொடுப்பதன் மூலம் உடலும் மனமும் அமைதியாகும்.
மன அழுத்தம், உடல் சோர்வு போன்ற பிரச்சினைகளை நீக்குவதற்கும், நம் உடலில் புத்துணர்ச்சியையும், உற்சாகத்தையும் தக்க வைத்துக்கொள்வதற்கும் பாடி மசாஜ், அரோமாதெரபி போன்ற சிகிச்சைகள் எடுத்துக்கொள்வது வழக்கம்.
இதேபோல, உடலில் குறிப்பிட்ட சில பகுதியில் இருக்கும் புள்ளிகளுக்கு அழுத்தம் கொடுத்து, உடல் பிரச்சினைகளைக் குணப்படுத்தும் `ரெஃப்லெக்சாலஜி' சிகிச்சை முறையை பற்றி பார்க்கலாம்.

`ரெஃப்லெக்சாலஜி' அக்குபஞ்சர் போன்ற ஒரு சிகிச்சை முறையைக் கொண்டிருந்தாலும், இதில் ஊசிகளின் பயன்பாட்டிற்கு இடமில்லை. கை, கால், காது, கழுத்து போன்ற பகுதிகளில் இருக்கும் புள்ளிகளைத் தூண்டுவதன் மூலம் ரத்த ஓட்டம் சீராகி, உடலின் ஆற்றல் அதிகரிக்கும்.
நீண்ட நேரம் வேலை செய்வது, நின்றுகொண்டே வேலை செய்வது, அதிக தூரம் ஓடுவது போன்ற செயல்பாடுகளால் உடல் சோர்வடையும், அத்துடன் மன அழுத்தமும் அதிகரிக்கும். `ரெஃப்லெக்சாலஜி' வகை அழுத்த சிகிச்சையைச் செய்துகொள்வதன் மூலம் மனம் அமைதி ஆவதுடன், உடலும் தளர்வடையும். உறங்கப்போவதற்கு முன்னர் சுண்டு விரலுக்குக் கீழே உள்ள பகுதியில் இதமான அழுத்தம் கொடுப்பதன் மூலம் உடலும் மனமும் ரிலாக்ஸ் ஆகும்.
தலை, முதுகு, கை - கால் மூட்டுகளில் ஏற்படும் வலியில் இருந்து விடுபடுவதற்கும் `ரெஃப்லெக்சாலஜி' வகை அழுத்த சிகிச்சை செய்து கொள்ளப்படுகிறது. தலை மற்றும் கழுத்து பகுதியுடன் தொடர்புடைய ரிஃப்ளெக்ஸ் புள்ளிகளில் அழுத்தம் கொடுப்பதன் மூலம், அப்பகுதியில் ஏற்பட்டிருக்கும் இறுக்கத்தை குறைத்து, அடிக்கடி தலைவலி வருவதில் இருந்து நிவாரணம் தருகிறது.
மாதவிடாய்க் காலங்களில் பெண்களுக்கு இயல்பாய் வரக்கூடிய வயிற்று வலியைக் கூட ரெஃப்லெக்சாலஜி சிகிச்சையின் மூலம் குறைத்துக்கொள்ள முடியும் என்கிறார்கள் மருத்துவ வல்லுநர்கள்.
ரெஃப்லெக்சாலஜி சிகிச்சை செய்து கொண்டவர்களில் பல பேர் அவர்களின் தூக்க நிலை சீரானதாகக் கூறுகிறார்கள். மன அழுத்தம் குறைந்து, உடல் தளர்வாவதன் பயன் நிறைவான தூக்கத்திற்கு வழிவகுக்கும். ரெஃப்லெக்சாலஜி சிகிச்சை மூலம் அஜீரணம், மலச்சிக்கல் போன்ற வயிற்று பிரச்சினைகளுக்கும் தீர்வு காணலாம். அதேபோன்று, நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் வலுப்படுத்த உதவுகிறது இந்த சிகிச்சை.
* நடு விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் நடுவே உள்ள பகுதியில் அழுத்தம் கொடுத்தால், காது பிரச்சினைகள் சரியாகும்.
* கால் விரல்களை மட்டும் தரையில் ஊன்றியபடி நடந்தால் மூளையின் செயல்பாடு அதிகரிக்கும்.
* வளையல் அணிந்தால், மணிக்கட்டுப் பகுதியில் இருக்கும் புள்ளிகளில் அழுத்தம் ஏற்பட்டு, கர்ப்பப்பையின் செயல்பாடுகள்
தூண்டப்பட்டு, மாதவிடாய் பிரச்சினைகள் சீராகும்.
* விரல்களை மடக்கும்போது சுண்டு விரலுக்கு கீழ்ப்பகுதியில் ஏற்படும் மடிப்புப் பகுதியில் அழுத்தம் கொடுப்பதன் மூலம் தோள்பட்டை வலி நீங்கும்.
ஒருகாலத்தில் பள்ளிக்கூடங்களில் தோப்புக்கரணம் போடுவதைத் தண்டனையாகக் கொடுப்பார்கள். ஆனால், தோப்புக்கரணம் ஒருவித அழுத்த சிகிச்சை என்பது நம்மில் பலருக்கும் தெரியாத உண்மை. தோப்புக்கரணம் போடுவதால் மூளையின் செயல்பாடு அதிகரிக்கும்.
அதேபோன்று, தவறு செய்யும் குழந்தைகளின் காதைத் திருகுவது ஒரு தண்டனையாகவே பின்பற்றப்படுகிறது. காதைத் திருகுவதால், ஒட்டுமொத்த உடல் உறுப்புகளின் செயல்பாடுகளும் தூண்டப்படும்.
மோதிர விரல் மற்றும் நடுவிரலுக்கு நடுவே உள்ள பகுதியில் அழுத்தம் கொடுத்தால், கண் பார்வை சீராகும்.
கொலுசு அணிந்தால் கணுக்கால் பகுதியிலுள்ள புள்ளிகள் தூண்டப்பட்டு மாதவிடாய் பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். இதுபோல பல பிரச்சினைகளுக்கு அழுத்த சிகிச்சையில் தீர்வு உண்டு!
ரெஃப்லெக்சாலஜி, மசாஜ் போன்ற உடல்-அழுத்தம் நிறைந்த சிகிச்சைகளை மேற்கொள்ளும் போது முதலில் அதைச் செய்யும் இடம், செய்யும் நபர், அவரது அனுபவம் உள்ளிட்ட விவரங்களைக் கேட்டுத் தெரிந்து நம்பகமானதாக இருந்தால் செய்துகொள்ளுங்கள்.
பிறகென்ன, மொபைல் போன்கள், லேப்டாப்களை சிறிது நேரம் ஓரமாக வைத்து விட்டு ஜாலியோ ஜிம்கானாவென இந்த சிகிச்சையை மேற்கொள்ளுங்கள்… சிறிது நேரம் கவலைகளுக்கும், கடமைகளுக்கும் குட்பை சொல்லிவிட்டு தியான நிலையில் லயித்து இருப்போமே. என்ன சொல்கிறீர்கள்?!
- ஜீரணமாவதற்கு மிகவும் உதவியாக இருப்பது பித்த அமிலநீர்.
- பித்தநீர் அளவோடு சுரந்தால் தான் நல்லது.
நாம் சாப்பிடும் உணவு ஜீரணமாவதற்கு மிகவும் உதவியாக இருப்பது பித்த அமிலநீர் ஆகும். இது நமது வயிற்றில் வலது மேல் பகுதியில் இருக்கும் கல்லீரலில் உருவாகி, அதன் அடியிலுள்ள பித்தப்பையில் சேமித்து வைக்கப்படுகிறது. இது, நாம் சாப்பிடும் உணவிலுள்ள கொழுப்பை உடைத்து, நுண் கொழுப்புப் பொருளாக மாற்றி, பின்னர் உடலிலுள்ள பலவிதமான உயிரணுக்களுக்கும் தேவைப்படும் சக்தியாக மாற்றி அளிக்கிறது.
பித்தநீர் அளவோடு சுரந்தால் தான் நல்லது. அப்படி இல்லை என்றால், வாந்தி, குமட்டல், தலைசுற்றல், அஜீரணம், ஏப்பம் என்று பல பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
ரசாயனப் பொருட்கள் கலந்த உணவுகளை உண்பது, சுத்தமில்லாத எண்ணெய்யில் பொரித்த, வறுத்த, அரைகுறையாக சமைக்கப்பட்ட உணவுகளை உண்பது, அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது மற்றும் சில மருத்துவ ரீதியான நோய்களின் போதும் பித்த வாந்தி வருவதுண்டு.

பச்சையும், மஞ்சளும் கலந்த நிறத்தில் வாந்தி இருந்தால், அது பித்தநீர் கலந்த வாந்தி தான். பித்த நீர் அதிகமாக சுரக்கிறது என்றால், மேல் வயிற்றில் வலி இருக்கும். நெஞ்செரிச்சல் இருக்கும். நாக்கு கசக்கும். வாந்தி வருகிற மாதிரி இருக்கும். இருமல் இருக்கும். திடீரென்று உடல் எடை குறைந்துவிடும்.
நீங்கள் சாப்பிட்ட உணவில் அதிக அளவில் கொழுப்பு இருந்தால் உங்களது கல்லீரலில் பித்த நீரும் அதிக அளவில் சுரக்கும். இது பித்த அமில நீராகி உங்களது குடலுக்குள் செல்லும். இது உடலுக்கு நல்ல தல்ல.
பித்த அமில நீர் அதிகமான அளவில் சுரக்காமல் இருக்க...
* கொஞ்சம் கொஞ்சமாக உணவைப் பிரித்து சாப்பிட வேண்டும்.
* சாப்பிட்டவுடன் சுமார் அரை மணி நேரமாவது சாயாமல் நேராக உட்கார்ந்திருக்க வேண்டும், படுக்கவும் கூடாது.
* கொழுப்பு சத்துள்ள உணவுகள் வயிற்றுப் பிரச்சினையை உருவாக்கக் கூடிய உணவு மற்றும் பானங்களைத் தவிர்க்க வேண்டும்.
* மதுப்பழக்கம் நிறுத்தப்பட வேண்டும்.
* அளவுக்கு அதிகமாக உள்ள உடல் எடையைக் குறைக்க வேண்டும்.
* படுக்கையின் தலைப்பகுதி சற்று தூக்கலாக இருக்க வேண்டும்.
* நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை சாப்பிட வேண்டும், வெண்ணெய், எண்ணெய் அதிக அளவில் உபயோகிப்பதைக் குறைக்க வேண்டும்.
- எலும்புகள் அல்லது தசைகளுக்குள் ஏற்படும் காயங்களாலும் மூட்டுவலி வருகிறது.
- காலையில் எழுந்தவுடன் வலி ஏற்பட்டு நடக்க சிரமப்படுதல்
மூட்டுகளில் ஏற்படுகின்ற காயங்கள் அல்லது புண்கள், இவற்றால் வீக்கம் அல்லது வலி ஏற்படுகிறது. மூட்டுகளில் உள்ள குருத்தெலும்புகள், தசைநார்கள், எலும்புகள் அல்லது தசைகளுக்குள் ஏற்படும் காயங்களாலும் மூட்டுவலி வருகிறது. ஆனால் பெரும்பாலும் குருத்தெலும்பு தேய்வால் வருகின்ற கீல்வாதம் தான் அதிகம். எலும்பில் உள்ள குருத்தெலும்பு தேய்வால் வருகின்றது.
கீல்வாதம் (ஆஸ்டியோ ஆர்தரைடிஸ்):
இவ்வகை மூட்டுவலி வயதானவர்களையும், பெண்களையும் மிக அதிகமாக பாதிக்கிறது. இந்த வகை வாதத்தில், கால் மூட்டுகளில் உள்ள எலும்புகளின் முனைகளை, குஷன் போன்று பாதுகாக்கும் குருத்தெலும்பு படிப்படியாக பலவீனமடைந்து, இறுதியாக, குருத்தெலும்பு முற்றிலும் தேய்ந்துவிடுகிறது. மூட்டுகளிடையே உள்ள சினோவியல் திரவமும் அளவில் குறைகிறது. இதனால் கால் முட்டி எலும்புகள் ஒன்றுடன் ஒன்று உரசி, கடுமையான கால் வலி, வீக்கம், சூடு இவற்றை ஏற்படுத்துகிறது.
முடக்கு வாதம் (ருமட்டாய்டு ஆர்தரைடிஸ்):
முடக்கு வாதம் என்பது ஒரு தன்னுடல் தாக்கக் கோளாறு. நம் உடல் நோய் எதிர்ப்பு அமைப்பு நம் சொந்த உடலின் திசுக்களை தவறுதலாக தாக்கும்போது இது நிகழ்கிறது. இவ்வகை வாதத்தில் எலும்பில் தேய்வுகள் இருக்காது. ஆனால் வலி, வீக்கம், காலையில் எழுந்தவுடன் வலி ஏற்பட்டு நடக்க சிரமப்படுதல் போன்ற அறிகுறிகள் காணப்படும்.
யூரிக் அமிலம் அதிகமாவதால் ஏற்படும் கீல்வாதம்:
ரத்தத்தில் யூரிக் அமில அளவு அதிகரித்து, மூட்டு களில் உள்ள இடைவெளிகளுக்குள் அமிலம் படிந்து வீக்கம், வலியை ஏற்படுத்துகிறது.
பாக்டீரியா தொற்றால் ஏற்படும் செப்டிக் ஆர்தரைடிஸ்:
செப்டிக் ஆர்தரைடிஸ் என்பது பாக்டீரியா தொற்று காரணமாக உருவாகிறது. நம் மூட்டுகளிடையே உராய்வைத் தடுக்க சினோவியல் திரவம் உள்ளது. பாக்டீரியாக்கள் இந்த திரவத்தில் நுழையும் போது, அவை குருத்தெலும்புகளை சேதப்படுத்தி இறுதியில் மூட்டு வலி, வீக்கத்தை ஏற்படுத்துகிறது.
மேற்கூறிய வாத வகைகளில் பெரும்பாலும் லும்பு குருக் குருத்தெலும்பு தேய்வால் வருகின்ற ஆஸ்டியோ ஆர்தரைடிஸ் வகை வாதம் தான், வயதான ஆண்கள் மற்றும் மகளிரை அதிக மாக பாதிக்கிறது. மாதவிடாய் முடிந்த மகளிருக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறைபாட்டால் எலும்பு அடர்த்தி குறைவதும் முக்கிய காரணமாகும். இதற்கான மருத்துவ முறை பற்றி பார்ப்போம்.
தவிர்க்க வேண்டியவை:
உடல் பருமன் இருந்தால் அதை குறைக்க வேண்டும். எளிய உடற்பயிற்சிகள் செய்ய செய்ய வேண்டும். எலும்புகளின் அடர்த்திக்கு கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் டி சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். தினமும் அதிகாலை வெயில் அல்லது மாலை இளவெயிலில் சிறிது நேரம் நடக்கலாம். குளிப்பதற்கு வெந்நீர் சிறந்தது, புளிப்பு சுவை உணவுகளை அளவோடு எடுக்க வேண்டும்.
மருந்துகள்:
சித்த மருத்துவத்தில் இந்த நோய்க்கு சிறப்பான மருந்துகள் உள்ளது. இவைகளை சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிட வேண்டும்.
* அமுக்கரா சூரணம் 1 கிராம், குங்கிலிய பற்பம் 200 மி.கி, முத்துச்சிப்பி பற்பம் 200 மி.கி, ஆறுமுகச் செந்தூரம் 200 மி.கி. இவைகளை மூன்று வேளை, தேன் அல்லது வெந்நீரில் கலந்து சாப்பிட வேண்டும்.
* அமுக்கராச் சூரணம் 1 கிராம், பூரணச் சந்திரோதயம் 100 மி.கி., சங்கு பற்பம் 200 மி.கி. இவற்றை மூன்று வேளை தேன் அல்லது வெந்நீரில் கலந்து சாப்பிட வேண்டும்.
* நொச்சி இலை, பழுத்த எருக்கிலை, வாத நாராயணன் இலை, தழுதாழை இலை இவைகளை ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூட்டில் வலியுள்ள மூட்டுகளில் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.
* வாத கேசரிதைலம், கற்பூராதி தைலம், விடமுட்டி தைலம், சிவப்பு குங்கிலியத் தைலம் இவைகளில் ஒன்றை வலியுள்ள மூட்டுகளில் தேய்த்து வெந்நீர் ஒத்தடம் கொடுக்க வலி குறையும்.
- ஆண்களுக்கு புரோஸ்டெட் புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தும்.
- இதய பிரச்சினை மற்றும் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
பிராய்லர் கோழி அதிகமாக சாப்பிடுவதால் ஆண்களுக்கு புரோஸ்டெட் புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தும். வறுத்த கோழிகளை சாப்பிடும் போது உடலுக்கும் கெடுதல்களை ஏற்படுத்தும். இதனால் உடல் எடை அதிகரிக்கும்.
பிராய்லர் கோழிகள் விரைவில் வளர்ச்சி அடைய அதற்கு தீவனமாக ஹார்மோன்கள் கொடுக்கப்படுகிறது. இந்த ஹார்மோன்கள் நிறைந்த பிராய்லர் கோழி இறைச்சியை சாப்பிடும் போது உடல் எடை அதிகரித்து உடல்நல பிரச்சினைகளை உண்டுபண்ணுகிறது.
பிராய்லர் கோழியில் அதிகப்படியான கொழுப்புச்சத்துக்கள் உள்ளன. இதனை அதிகமாக எடுத்துக்கொள்ளும் போது உடலில் கொழுப்புகள் அதிகரித்து இதய பிரச்சினை மற்றும் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
பிராய்லர் கோழியில் உள்ள ரசாயனம் ஆண்களின் விந்தணுவை குறைத்து மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும். இதனால் பிராய்லர் கோழியை தவிர்ப்பது நல்லது. பெண்களும் பிராய்லர் கோழி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
பிராய்லர் கோழி சாப்பிடுவதால் பெண்களுக்கு கருப்பையில் பிரச்சினைகளை ஏற்படுத்தும். இதனால் தான் பெண்குழந்தைகள் சிறுவயதிலேயே பருவம் அடைகின்றனர். பிராய்லர் கோழியை வறுத்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். வேண்டுமென்றால் அதிக எண்ணெய் இல்லாமல் சமைத்து சாப்பிடலாம்.
குறைந்த பட்சம் 165 வெப்பநிலையில் இறைச்சியை சமைக்க வேண்டும். மேலும் பிராய்லர் கோழியில் சமைத்த உணவை மறுநாள் வைத்து சாப்பிடுவதை முற்றிலும் தவிர்த்துவிட வேண்டும்.
- குளிர்காலத்தில் காற்று உலர் தன்மை கொண்டிருக்கும்.
- எலக்ட்ரோ லைட்டுகளை வழங்கும் பானமாக இளநீர் விளங்குகிறது.
கோடை டை காலத்தில் பருவதற்கு சிறந்த பானமாக கருதப்படும் இளநீரை குளிர் காலத்திலும் ருசிக்கலாம். ஏனெனில் அதில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் ஏராளம் நிரம்பியுள்ளன. குளிர்கால நிலைக்கு ஏற்ப உடலை மேம்படுத்தவும், புத்துணர்ச்சியூட்டவும்உதவுகிறது. குளிர் காலத்தில் ஏன் இளநீர் பருக வேண்டும் என்பதற்கான காரணங்கள் குறித்து தெரிந்து கொள்வோம்.
நீரேற்றம்
குளிர்காலத்தில் காற்று உலர் தன்மை கொண்டிருக்கும். கோடை காலத்தை போல தாகத்தை உணர முடியாது. பொட்டாசியம், சோடியம் மற்றும் மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய எலக்ட்ரோ லைட்டுகளை வழங்கும் பானமாக இளநீர் விளங்குகிறது. இயற்கையாகவே உடல் நீரேற்றமாக இருக்க வழிவகை செய்கிறது.
எலக்ட்ரோலைட்
குளிர்காலத்தில் விளையாட்டு போட்டிகள் அல்லது உடற்பயிற்சிகளில் ஈடுபடும்போது நீரிழப்பு ஏற்படும். எலக்ட்ரோலைட் சமநிலையின்மைக்கும் வழிவகுக்கும். இளநீர் இயற்கையாகவே எலக்ட்ரோலைட்டுகளை கொண்டது. உடல் செயல்பாடுகளின் போது வியர்வை மூலம் இழக்கப்படும் திரவங்கள் மற்றும் தாதுக்களை நிரப்புவதற்கு இளநீர் சிறந்த தேர்வாக அமையும்.
வெப்பநிலை
குளிர்காலத்தில் உடல் வெப்பநிலையை சீராக பராமரிப்பது முக்கியம். இளநீர் உடல் வெப்ப நிலையை ஒழுங்குபடுத்தும் பணியை மேற்கொள் ளும். குளிர்ந்த ர்ந்த காலநிலையில் உடல் வெப்ப நிலையை சமநிலையில் பேணுவதற்கு வித்திடும்.
ஆற்றல்
இளநீரில் இயற்கையான சர்க்கரை மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் உள்ளன. அவை குளிர்பானங்களுக்கு ஆரோக்கியமான மாற்றாக விளங்குகின்றன. குளிர்காலங்களில் ஆட்கொள்ளும் சோர்வு மற்றும் சோம்பலை எதிர்த்து போராடும் பணியை இளநீர் மேற்கொள்ளும். உடலுக்கு விரைவான ஆற்றலையும், சக்தியையும் அளிக்கும்.
ஊட்டச்சத்துக்கள்
வைட்டமின்கள் (வைட்டமின் சி மற்றும் பி-காம்ப்ளக்ஸ்) மற்றும் தாதுக்கள் (பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம்) உள்ளிட்ட முக்கியமான ஊட்டச்சத்துக்கள் இளநீரில் உள்ளன. அவை ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்களிப்பை வழங்கும். குளிர் காலங்களில் நோய் தாக்கத்தை எதிர்த்து போராடுவதற்கு ஏற்ப உடலுக்கு சக்தியை வழங்கும் பயனுள்ள பணியை இளநீர் செய்யும்.
நோய் எதிர்ப்பு சக்தி
சளி மற்றும் காய்ச்சல் போன்ற குளிர்கால நோய்களை தடுக்க வலுவான நோய் எதிர்ப்பு அமைப்பு அவசியம். இளநீரில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும்.
செரிமானம்
குளிர்காலத்தில் விரும்பிய உணவுகளை பலரும் அதிகமாக சாப்பிட்டு விடுவார்கள். பிறகு செரிமான தொந்தரவுக்கு உள்ளாகி அவதிப்படுவார்கள். இளநீர் உணவு துகள்களை உடைத்து செரிமான செயல்பாடுகளை துரிதப்படுத்தி அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
- பச்சை மிளகாயில் கேப்சைசின் என்ற சேர்மம் உள்ளது.
- ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தன்மை பச்சை மிளகாய்க்கு உண்டு.
சளி, இருமல் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் காரமான உணவுகளை சாப்பிட ஆசைப்படுவார்கள். ஆனால் அதிக காரம் சளி, இருமலை அதிகப்படுத்திவிடும் என்று கருதி சாப்பிட தயங்குபவர்களும் இருக்கிறார்கள். சமையலில் காரம் சேர்க்க வேண்டும் என்றாலே இல்லத்தரசிகளுக்கு பச்சை மிளகாய்தான் நினைவுக்கு வரும். அது காரத்திற்காக மட்டும் சமையலில் சேர்க்கப்படவில்லை. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தன்மை பச்சை மிளகாய்க்கு உண்டு.
சளி, இருமல் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் பச்சை மிளகாயை சமையலில் சேர்த்துக்கொள்ளலாம். சளியின் வீரியத்தை குறைப்பதற்கு அது உதவும்.
குறிப்பாக பச்சை மிளகாயில் கேப்சைசின் என்ற சேர்மம் உள்ளது. அது சளியை வெளியேற்றவும், சுவாச பாதையை சீராக்கவும் உதவும். மேலும் பச்சை மிளகாயில் இருக்கும் பைட்டோநியூட்ரியண்ட்கள் சுவாச பாதையை தளர்த்தவும் துணை புரியும்.
வெட்டுக்காயம் உள்ளிட்ட காயங்களால் அவதிபடுபவர்களும் பச்சை மிளகாயை சமையலில் சேர்த்துக்கொள்ளலாம். காயங்களை விரைவாக குணப்படுத்துவதற்கான சிகிச்சை முறைகளை முடுக்கி விடுவதற்கு உதவும். வலியை கட்டுப்படுத்தவும் துணைபுரியும். மன நிலையை மேம்படுத்தும் ஆற்றலும் பச்சை மிளகாய்க்கு இருக்கிறது.
ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக பராமரிக்கவும், நெஞ்செரிச்சல் தொடர்பான வலியை குறைக்கவும் உதவும். அதேவேளையில் பச்சை மிளகாயை அதிகம் சேர்க்கக்கூடாது.
- நீரிழிவை ஒரு காலத்தில் பணக்கார நோய் என்று சொல்வார்கள்.
- நீரிழிவு என்பது நாள்பட்ட உடல் நலக்கோளாறு.
சர்க்கரை...
வாயில் போட்டால் இனிக்கும்; அதனால் எல்லோருக்கும் பிடிக்கும். அதுவே உடம்பில் இருந்தால் வாழ்க்கை வெறுத்துவிடும்.
சிலரிடம் கேட்டால் 'சர்க்கரை நோய்' என்ற `நீரிழிவு' ஒரு நோயே அல்ல என்பார்கள். ஆனால் விருந்தினர்களை வரவேற்பது போல் சிவப்பு கம்பளம் விரித்து பல நோய்களை வரவழைப்பதும் அதுதான். வந்த நோய்களை போக விடாமல் தடுத்து நிறுத்தி வைப்பதும் அதுதான்.
நீரிழிவை ஒரு காலத்தில் பணக்கார நோய் என்று சொல்வார்கள். அதாவது வசதி படைத்தவர்கள்-சொகுசான வாழ்க்கை வாழ்பவர்களுக்கு மட்டுமே சர்க்கரை நோய் வரும் என்ற ஒரு எண்ணம் அப்போது இருந்தது.
ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. வயது, தொழில், ஏழை-பணக்காரன் என்று எந்த வித்தியாசமும் இல்லாமல் எல்லோருக்கும் வருகிறது. சில குழந்தைகள் பிறக்கும் போதே சர்க்கரை நோயுடன் இந்த பூமிக்கு வரும் துரதிருஷ்டமும் நிகழ்கிறது. சர்க்கரை நோய் பற்றிய சில கசப்பான உண்மைகளை பார்ப்போம்...
நீரிழிவு என்பது நாள்பட்ட உடல் நலக்கோளாறு. நாம் உண்ணும் உணவை சக்தியாக மாற்றுவதை இது பாதிக்கிறது.

நாம் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரை (குளுக்கோஸ்) ரத்தத்தில் கலக்கிறது. உடலில் உள்ள கணையம் என்ற உறுப்பு உற்பத்தி செய்யும் `இன்சுலின்' என்ற `ஹார்மோன்' ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை ஒழுங்குபடுத்துகிறது.
கணையம் போதிய அளவு இன்சுலினை உற்பத்தி செய்யவில்லை என்றாலோ அல்லது உற்பத்தியாகும் இன்சுலினை உடல் சரிவர பயன்படுத்தி கொள்ளா விட்டாலோ ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். அப்படி அதிகரிப்பதைத்தான் நீரிழிவு நோய் என்கிறோம். இது ஒரு நாள்பட்ட தீராத நோய் ஆகும்.

ஒருவருக்கு மரபு ரீதியாகவோ அல்லது சுற்றுப்புற சூழலை பொறுத்தோ நீரிழிவு நோய் வரலாம்.
நீரிழிவு நோயில் முதல் வகை (டைப் 1), இரண்டாவது வகை (டைப் 2) என இரு வகைகள் உள்ளன. உடலில் காயங்கள் இருந்தால் மெதுவாக குணமடைவது, சரும அழர்ச்சி, மூக்கில் இருந்து நீர் வடிவது, வாந்தி, வயிற்று வலி ஆகியவை முதல் வகை நீரிழிவுக்கான அறிகுறிகள். இந்த அறிகுறிகள் தோன்றிய சில வாரங்கள் அல்லது மாதங்களில் நீரிழிவு நோய் வரும். எந்த வயதிலும் இந்த முதல் வகை நீரிழிவு வரலாம். குழந்தைகள், பருவ வயதினர், இளைஞர்களுக்கு முதல் வகை நீரிழிவு வருகிறது.
முதலாவது வகை நீரிழிவு இரண்டாவது நிலைக்கு வர பல ஆண்டுகள் ஆகலாம், ஆனால் பலருக்கு இதுபற்றிய எந்த அறிகுறியும் தெரியாது.
பெரும்பாலும் இளம் வயதில்தான் இரண்டாவது வகை நீரிழிவு தொடங்குகிறது. அதிக உடல் பருமன் உள்ளவர்கள், 45 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர், போதிய உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கு இரண்டாவது வகை நீரிழிவு ஏற்படுகிறது. குடும்பத்தில் பெற்றோர், சகோதரர் அல்லது சகோதரிக்கு இரண்டாவது வகை நீரிழிவு இருந்தாலும் ஒருவருக்கு அந்த வகை நீரிழிவு வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.
நீரிழிவு காரணமாக இதய மற்றும் சிறுநீரக நோய்கள், கண்பார்வை இழப்பு போன்றவை ஏற்படலாம்.
உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்வது, உடற்பயிற்சி, சுறுசுறுப்பாக ஏதாவது வேலை செய்வது, ஆரோக்கியமான உணவு போன்றவற்றின் மூலம் நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம் என்று டாக்டர்கள் கூறுகிறார்கள்.

நடைபயிற்சி சிறந்த உடற்பயிற்சி என்று சொல்வார்கள். தினமும் 45 நிமிடம் கையை வீசி வேகமாக நடக்க வேண்டும் என்றும் அப்படி செய்தால் நீரிழிவு வராமல் தடுக்க முடியும் என்றும், ஏற்கனவே இருந்தாலும் நோயை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும் என்றும் டாக்டர்கள் கூறுகிறார்கள்.
நடப்பதற்கு என்று தனியாக நேரம் ஒதுக்க முடியாதவர்கள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நடப்பதை ஒரு வழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், அலுவலகங்கள் மற்றும் பெரிய கட்டிடங்களில் மின்தூக்கியை (லிப்ட்) பயன்படுத்தாமல் படிகளில் ஏறிச்செல்வது ஆரோக்கியத்துக்கு நல்லது என்றும் அவர்கள் யோசனை தெரிவிக்கிறார்கள்.
பொதுவாக இருக்கையில் அமர்ந்து வேலை செய்பவர்கள், ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை எழுந்து 5 நிமிடம் நடப்பது மிகவும் நல்லது. இதனால் உடல் வெப்பத்தின் காரணமாக ஏற்படும் மூலநோயை தடுப்பதோடு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவையும் கட்டுப்படுத்த முடியும்.
ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கு ஒருமுறை 3 நிமிடம் மிதமான வேகத்தில் நடந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கணிசமாக குறைவதாக இங்கிலாந்து நாட்டில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டில் உலக அளவில் 10 பேரில் ஒருவருக்கு நீரிழிவு நோய் இருந்தது. அதாவது 53 கோடியே 70 லட்சம் பேர் நீரிழிவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த எண்ணிக்கை வருகிற 2030-ம் ஆண்டில் 64 கோடியே 30 லட்சமாகவும், 2045-ல் 78 கோடியே 30 லட்சமாகவும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பரிசோதனை செய்து கொள்ளாததால் தங்களுக்கு நீரிழிவு இருக்கிறது என்பது தெரியாமலேயே ஆண்களில் கிட்டத்தட்ட பாதி பேர் (44 சதவீதம்), அதாவது 24 கோடி பேர் அந்த நோயுடன் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும், அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு இரண்டாவது வகை பாதிப்பு இருப்பதாகவும் ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. அத்துடன் பரிசோதனை செய்து கொள்ளாததால், 90 சதவீதம் பேர் தங்களுக்கு இரண்டாவது வகை நீரிழிவு இருப்பது தெரியாமலேயே வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
2021-ம் ஆண்டில் மட்டும் நீரிழிவு காரணமாக உலகம் முழுவதும் 67 லட்சம் பேர் இறந்து இருக்கிறார்கள்.
உலகிலேயே அதிக அளவிலான நீரிழிவு நோயாளிகள் சீனாவில்தான் இருக்கிறார்கள். அங்கு 15 கோடி பேர் நீரிழிவுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இரண்டாவது இடத்தில் இந்தியா இருக்கிறது.
இந்தியாவுக்கு அடுத்ததாக பாகிஸ்தான், அமெரிக்கா, இந்தோனேசியா, பிரேசில், மெக்சிகோ, வங்காளதேசம், ஜப்பான், எகிப்து ஆகிய நாடுகள் உள்ளன.
இந்தியாவில் 10 கோடியே 10 லட்சம் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், இது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 11.4 சதவீதம் என்றும் மத்திய சுகாதார துறை அமைச்சகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் 15.3 சதவீதம் பேர் நீரிழிவு நோய் வருவதற்கு முந்தைய நிலையில் இருப்பதாகவும் கண்டறியப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் நீரிழிவுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 1990-ல் 2 கோடியே 50 லட்சமாகவும், 2016-ல் 6 கோடியே 50 லட்சமாகவும் இருந்தது. இப்போது அது 10 கோடியை தாண்டி இருப்பது, நாட்டில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு வேகமாக அதிகரித்து வருவதையே காட்டுகிறது.
நம் நாட்டில் உள்ள நீரிழிவு நோயாளிகளில் 90 முதல் 95 சதவீதம் பேர் இரண்டாவது வகை நீரிழிவு நோயாளிகளே.
இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு மரபு, போதிய உடலுழைப்பு இன்மை, உடல் பருமன், மனஅழுத்தம், வாழ்க்கை மற்றும் உணவு முறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் போன்ற பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. பெருநகரங்களில் மக்கள் மேற்கத்திய வாழ்க்கை முறைக்கு மாறுவதும், மனிதர்களின் பல வேலைகளை எந்திரங்களே செய்துவிடுவதும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.
1950-ம் ஆண்டில் இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 15 சதவீதம் பேர் மட்டுமே நகரங்களில் வசித்தனர். இப்போது 35 சதவீதம் பேர் நகரங்களில் வசிக்கிறார். வேலைவாய்ப்பை தேடி ஏராளமானவர்கள் நகரங்களுக்கு குடிபெயர்வதால் நகரங்களில் மக்கள் தொகை வேகமாக அதிகரித்து வருகிறது.
இதனால் நகரங்களில் வசிப்போருக்கு வீடு, குடிநீர், போக்குவரத்து பிரச்சினைகள், வாழ்க்கைச் செலவு அதிகரித்தல் போன்றவை காரணமாக மனஅழுத்தம் ஏற்படுகிறது. நகரங்களில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் 20 வயதுக்கு மேற்பட்ட 1 லட்சத்து 13 ஆயிரம் பேர்களிடம் நடத்திய ஓர் ஆய்வில் அதிகபட்சமாக கோவாவில் 26.4 சதவீதம் பேரும், அதற்கு அடுத்தபடியாக புதுச்சேரியில் 26.3 சதவீதம் பேரும், கேரளாவில் 25.5 சதவீதம் பேரும் நீரிழிவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.
மக்கள் தொகை அதிகமுள்ள உத்தரபிரதேசத்தில்தான் குறைந்த அளவாக வெறும் 4.8 சதவீதம் பேருக்கே நீரிழிவு உள்ளது. என்றாலும் அங்கு நீரிழிவு வரக்கூடிய நிலையில் 18 சதவீதம் பேர் இருக்கிறார்கள். இது தேசிய சராசரியை (15.3 சதவீதம்) விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
சீனா, இந்தியா மட்டுமின்றி எல்லா நாடுகளிலுமே நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதேநிலை நீடித்தால் இன்னும் 30 ஆண்டுகளில் உலகம் முழுவதும் 130 கோடி நீரிழிவு நோயாளிகள் இருப்பார்கள் என்று மதிப்பிடப்பட்டு இருக்கிறது.
அமெரிக்காவில் 3 கோடியே 73 லட்சம் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இது அந்த நாட்டின் மக்கள் தொகையில் 11.3 சதவீதம் ஆகும். நீரிழிவுக்கு ஆளானவர்களில் 2 கோடியே 64 லட்சம் பேர் 65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் ஆவார்கள்.
குழந்தைகளும் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகிறார்கள். சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு 2020-ம் ஆண்டு வெளியிட்ட தகவலின்படி, அமெரிக்காவில்தான் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் முதல் வகை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் இந்தியா 2-வது இடத்தில் இருக்கிறது.
இந்தியாவில் நிகழும் மரணங்களில் 2 சதவீதம் நீரிழிவு நோயால் ஏற்படுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்து இருக்கிறது. கடந்த 2020-ம் ஆண்டில் மட்டும் நீரிழிவு காரணமாக ஏற்படும் சிறுநீரக செயலிழப்பு போன்றவற்றால் 70 ஆயிரம் பேர் இறந்திருக்கிறார்கள்.
2019-ம் ஆண்டு சீனாவில் உருவாகி பல்வேறு நாடுகளுக்கும் பரவி உலகையே முடக்கிப் போட்ட கொரோனா பெருந்தொற்று, சர்வதேச அளவிலான சுகாதாரத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியதை நன்கு அறிவோம். மழை விட்டாலும் தூவானம் விடவில்லை என்பது போல் கொரோனாவின் அச்சுறுத்தல் முடிந்தாலும், அதன் பாதிப்பு ஏதாவது ஒருவகையில் இருந்து கொண்டுதான் இருக்கிறது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக மறதி ஏற்படுவதாக ஒரு கருத்து உள்ளது.
கொரோனா பெருந்தொற்றுக்கு பின், நீரிழிவு நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 10 சதவீதத்துக்கு மேல் அதிகரித்து இருக்கிறது. கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட மருந்துகள் மூலம் இன்சுலின் சுரப்பி பாதிக்கப்பட்டு அதன் காரணமாக நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் சிலர் தெரிவிக்கிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14-ந்தேதி உலக நீரிழிவு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அன்று நீரிழிவு நோய் வராமல் தடுப்பது குறித்தும், பாதிக்கப்பட்டவர்கள் நோயின் தாக்கத்தை எந்தெந்த வகையில் கட்டுப்படுத்தலாம் என்பது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
உணவு முறையின் மூலம் நீரிழிவை கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம் என்று டாக்டர்கள் கூறுகிறார்கள். அரிசி உணவை குறைத்துக்கொண்டு முடிந்தால் தவிர்த்து கம்பு, சோளம், சாமை போன்ற சிறுதானியங்களையும், பருப்பு வகைகளையும் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று சொல்கிறார்கள்.
சர்க்கரை நோய் ஓர் அழையா விருந்தாளி. அந்த விருந்தாளியை யாரும் விரும்புவதில்லை. ஆனால் வந்துவிட்டால் போவதும் இல்லை. எனவே சமாளித்துத்தான் ஆகவேண்டும்.
- சிலருக்கு கர்ப்ப காலத்தில் நீரிழிவு ஏற்படுவது உண்டு.
- 28 வாரங்களில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து நீரிழிவு ஏற்படும்.
நீரிழிவு நோய்க்கான அறிகுறிகள் வருமாறு:-
* இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல்.
* மிகவும் சோர்வாக உணர்தல்.
* தோல் உலர்வாக இருப்பது.
* கை அல்லது பாதங்களில் மரத்துப் போவது அல்லது உறுத்தல் ஏற்படுவது.
* புண் வந்தால் மெதுவாக ஆறுவது.
* வழக்கத்துக்கு மாறாக அடிக்கடி நோய்த்தொற்று ஏற்படுதல்.
பொதுவாக பெண்களில் சிலருக்கு கர்ப்ப காலத்தில் நீரிழிவு ஏற்படுவது உண்டு. அந்த காலகட்டத்தில் 24 முதல் 28 வாரங்களில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து நீரிழிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. முந்தைய பிரசவத்தின்போது நீரிழிவு இருந்தாலும், பிறந்த குழந்தையின் எடை 4 கிலோவுக்கு அதிகமாக இருந்தாலும் தாய்க்கு நீரிழிவு நோய் வரக்கூடும்.
அதிகபட்சமாக தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கர்ப்ப காலத்தில் 25.9 சதவீத பெண்களுக்கு நீரிழிவு காணப்படுவதாக சர்வதேச நீரிழிவு நோய் கூட்டமைப்பு தெரிவித்து இருக்கிறது.
அமெரிக்காவில் 2 முதல் 10 சதவீத பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் நீரிழிவு ஏற்படுவது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. பெரும்பாலும் பலருக்கு பிரசவத்துக்கு பின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு முந்தைய சாதாரண நிலைக்கு வந்துவிடும். ஆனால் சிலருக்கு இரண்டாவது வகை நீரிழிவு நோயாக மாறும் வாய்ப்பு இருப்பதாகவும், கட்டுப்பாடான உடற்பயிற்சி மற்றும் உணவுப்பழக்கம் மூலம் நீரிழிவை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும் என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
- குப்பைமேனி ஒரு காயகல்ப மூலிகை என்பது குறிப்பிடத்தக்கது.
- குப்பைமேனி இலை சாறு குடிப்பதால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
குப்பைமேடுகளில் எளிதாக கிடைக்கக்கூடிய மூலிகைதான் குப்பைமேனி. பெரும்பாலானோர் இந்த செடியை கண்டிப்பாக பார்த்திருப்போம். ஆனால் இதுதான் குப்பைமேனி என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதேபோல் குப்பைமேனி செடியை களலைச்செடியாக பலர் பிடுங்கி வீசுகின்றனர்.

பல வகையான நோய்களுக்கு தீர்வு அளிக்கும் குப்பைமேனி ஒரு காயகல்ப மூலிகை என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி குப்பைமேனி செடியின் அனைத்து பாகங்களும் சிறப்பு வாய்ந்தது. அதேபோல் பல வகையான நோய்களுக்கு மருந்தாக குப்பைமேனி பயன்படுகிறது.
குப்பைமேனி இலையின் சாறு பிழிந்து குடிப்பதால் சளி, இருமல், தொண்டை கட்டுதல் போன்ற நோய்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும். மேலும் உடல் வெப்பத்தையும் சரி செய்கிறது.
குப்பைமேனி இலையின் சாறு பிழிந்து, ஒரு ஸ்பூன் அளவு வெந்நீரில் கலந்து குடித்தால் வயிற்றில் உள்ள புழுக்கள் அனைத்தையும் வெளியேற்றி விடும். அதேபோல் குப்பைமேனி இலை பொடியை விளக்கெண்ணையில் கலந்து சாப்பிட்டாலும் வயிற்றுப் புழுக்கள் வெளியேறிவிடும்.
குப்பைமேனி இலை சாறு குடிப்பதால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதிலும் குறிப்பாக சைனஸ் எனப்படும் நோய்க்கு சிறந்த மருந்தாக உள்ளது.
சொத்தை பல் உள்ளவர்களுக்கு பல்லில் வலி 2 அல்லது 3 இலைகளை நன்றாக கழுவி விரல்களால் நசுக்கி வலிக்கும் பல்லில் வைத்தால் சொத்தை பல்லில் உள்ள கிருமிகள் வெளியேறி வலி நீங்கும்.
அதேபோல் படை, சிரங்கு, சொறி, அரிப்பு போன்ற தோல் நோய் உள்ளவர்கள் குப்பைமேனி இலையுடன் சேர்த்து மஞ்சள் மற்றும் கல் உப்பு சேர்த்து நன்கு அரைத்து தேய்த்து கழுவி வர அனைத்து நோய்களும் குணமாகும்.
உடலில் ஏற்படும் வலிகளை குணப்படுத்த குப்பைமேனி இலையின் சாற்றை நல்லெண்ணையோடு சேர்த்து காய்ச்சி உடலில் தேய்த்தால் குணமாகும். அதேபோல் வயதானவர்களுக்கு ஏற்படும் மூட்டு வலிகளுக்கு குப்பைமேனி இலையை சுண்ணாம்பு கலந்து பூசுவதால் நல்ல தீர்வு கிடைக்கிறது.
தேள், பூரான், விஷப்பூச்சி கடித்தால் குப்பைமேனி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து கடித்த இடத்தில் பூசினால் விஷம் முறியும்.
- மணலி கீரை அல்லது நவமல்லி கீரை என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது.
- இலை தண்டு அனைத்தும் மருத்துவ நன்மைகள் கொண்டது.
மணலிக்கீரை சமையலுக்கு ஏற்ற கீரைகளில் ஒன்று. இதனை மணலி கீரை அல்லது நவமல்லி கீரை என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது. இதன் இலை தண்டு என அனைத்தும் மருத்துவ நன்மைகளைக் கொண்டது. நம்முடைய முன்னோர்களின் மருத்துவ கீரைகளில் மணலிக்கீரையும் முக்கியத்துவம் வாய்ந்தது.
வயிற்றில் பூச்சிகள் இருந்தால் உடலுக்கு தேவையான அனைத்து சக்திகளையும் இவை உறிஞ்சி விடுவதால், உடல் பலவீனம் அடைந்து காணப்படுகின்றனர். இதற்கு வயிற்றில் உள்ள பூச்சிகள் தான் காரணம் இந்த வயிற்று பூச்சிகளை எளிதாக வெளியேற்ற மணலி கீரையை வாரத்திற்கு இருமுறை சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பூச்சிகள் அனைத்தும் வெளியேறும்.
பொதுவாக கீரைகள் அனைத்துமே மலச்சிக்கலை போக்கும் தன்மை கொண்டது. மணலிக்கீரையை பாசிப்பருப்புடன் கலந்து இருமுறை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குணமாகும். மார்புச் சளியை போக்க மணலி கீரையுடன், சின்ன வெங்காயம் பூண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால் மார்பு சளி நீங்கும்.
மேலும் மணலிக்கீரையை பொடியாக்கி அதனுடன் தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மார்புச்சளி குணமாகும்.
மனிதர்களுக்கு ஞாபக மறதி ஏற்படுவது இயல்புதான். ஆனால் இதற்கு காரணம் பித்த அதிகரிப்பு. இந்த குறையை போக்க மணலிக்கீரையை சாப்பிடுவதால் நல்ல தீர்வு கிடைக்கிறது.
மூளை பாதிப்புள்ள குழந்தைகளுக்கு மணலிக் கீரையை செய்து கொடுத்தால் மூளை நரம்புகள் நன்கு வலுபெறும். இதனால் மனதளவில் வலுவானவர்களாக இருப்பார்கள்.
- ஐரோப்பா பகுதியில் ஆலிவ் பழங்கள், பிரபலமான ஒன்று.
- உலகம் முழுக்க சுவைக்கப்படுகிறது.
தற்போது சூப்பர் மார்கெட்டுகளுக்குச் சென்றால் வித்தியாசமான பழங்களைக் காண்போம். ஆனால் அவற்றை நாம் வாங்க மாட்டோம். இதற்கு அதன் சுவை எப்படி இருக்கும் என்று தெரியாததோடு, அந்த பழங்களின் வெளித்தோற்றம் விசித்திரமாக இருப்பதும் காரணம். அதுமட்டுமின்றி அவை விலை அதிகமானதும் கூட. ஆனால் அவைகளில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளதால், அவற்றை உட்கொண்டால் நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவில் பலனைப் பெறலாம்.
மத்திய தரைக்கடல் பகுதியில் இருந்து வந்தது தான் ஆலிவ். இந்த ஆலிவ் பல்வேறு நிறங்களில் உள்ளது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறப்பான நன்மைகளை உள்ளடக்கியது. இருப்பினும் கருப்பு மற்றும் பச்சை நிற ஆலிவ்கள் தான் மிகவும் சிறந்தது. இவைகளை உட்கொண்டால் எலும்புகள் வலிமையடையும் மற்றும் புற்றுநோய்கள் தடுக்கப்படும்.
ஐரோப்பா பகுதியில் ஆலிவ் பழங்கள், பிரபலமான ஒன்று. அங்கிருந்துதான், உலகம் முழுக்க சுவைக்கப்படுகிறது. இதன் சுவை தனித்துவமானது என்பதால், பீட்சா உள்பட பல இத்தாலிய உணவுகளில் மிக முக்கிய அங்கமாக சேர்க்கப்பட்டு, சுவைக்கப்படுகிறது. அப்படிப்பட்ட, ஆலிவ் பழங்களின் ஆரோக்கிய நன்மைகளை தெரிந்து கொள்வோம்.
* அதிகப்படியான மன அழுத்தம் மாரடைப்பை ஏற்படுத்துகிறது. ஆனால் ஆலிவ்களில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் இதை தடுத்து நிறுத்துகின்றன. ஆலிவ்களில் கொழுப்பும் உள்ளது. ஆனால் இது நல்ல வகையான கொழுப்பு. ஆலிவ்களில் இருக்கும் ஒலிக் அமிலம் (மோனோசாச்சுரேட்டர் கொழுப்பு அமிலம்) வீக்கத்தை குறைத்து இதய நோய் அபாயத்தை குறைக்கிறது.
* ஆலிவ்களில் இருக்கும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் வைட்டமின்-ஈ மற்றும் பாலிபினால்களுடன் சேர்ந்து வீக்கம் மற்றும் அதனுடன் தொடர்புடைய காயங்களுக்கு எதிராக போராடுகின்றன.
* ஆலிவ்களில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் ஹைட்ராக்சிடைரோசோல் எலும்பு இழப்பை தடுக்க உதவுகிறது. இது எலும்புகளின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. எலும்புச்சிதைவு நோய் அறிகுறிகளுக்கு இதுசிறந்த தீர்வாக செயல்படுகிறது.
* இவை புரோபயாடிக் ஆற்றலை கொண்டுள்ளன. இது செரிமான ஆரோக்கியத்தை பராமரிக்க மிகவும் முக்கியமானது. ஆலிவ் புளிப்பு தன்மை கொண்டது. இது குடலுக்கு நன்மை செய்யும் லாக்டோபாகிலஸ் பாக்டீரியாவை உள்ளடக்கி உள்ளது.
* இதில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இது உடல் பருமன் அபாயத்தை குறைக்கும்.
* ஆலிவ் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. ஆரோக்கியமான எடை பராமரிப்புக்கு உதவுகிறது.
* மூளை பெரும்பாலும் கொழுப்பு அமிலங்களால் ஆனது. ஆலிவ்களில் இருக்கும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் நினைவாற்றலை அதிகரிக்க உதவுகின்றன. ஆலிவ் உட்கொள்வது மூளை உயிரணு இறப்பை தடுக்கவும் நினைவாற்றலை மேம்படுத்தவும் உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
* ஆலிவ்களில் உள்ள கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் சருமம் மற்றும் கூந்தல் இரண்டுக்கும் உதவுகின்றன. சருமத்தை புற ஊதாக்கதிர்வீச்சிலிருந்து பாதுகாக்கிறது. சுருக்கங்களை தடுக்க உதவுகிறது.
ஆலிவை எப்படி சேர்ப்பது?
கருப்பு பழுத்த ஆலிவ், பச்சை ஆலிவ், இயற்கை முறையில் பதப்படுத்தப்பட்ட ஆலிவ் என பல்வேறு வகையான ஆலிவ் பழங்கள் உள்ளன. ஆலிவ் எண்ணெய்யை சமையலுக்கு பயன்படுத்தலாம். இதை சிற்றுண்டிகளிலும் சேர்க்கலாம்.
தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், கர்ப்பிணிகள் ஆலிவ் பழத்திற்கு பதிலாக ஆலிவ் எண்ணெய் சேர்க்கலாம். நாள் ஒன்றுக்கு 5 முதல் 6 ஆலிவ் பழங்கள் வரை சாப்பிடுவது நல்லது.






