search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    மரபணு மாற்றங்களால் ரத்தபுற்றுநோய் ஏற்படும்...!
    X

    மரபணு மாற்றங்களால் ரத்தபுற்றுநோய் ஏற்படும்...!

    • ரத்த தானம் செய்வது மிகவும் ஆரோக்கியமான செயல்.
    • அறிகுறிகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக அமையும்.

    ரத்தம் என்பது திரவ இணைப்பு திசு ஆகும். இது `எரித்ரோசைட்டுகள்' (ஆர்.பி.சி.) 'லூகோசைட்டுகள்' (டபிள்யூ.பி.சி.), `துரோமோசைட்டுகள்' (பிளேட்லெட்டுகள்) மற்றும் புரதம், உப்பு, தண்ணீர் ஆகியவற்றை உள்ளடக்கிய 'பிளாஸ்மா' போன்ற பல்வேறு உயிரணுக்களால் ஆனது. இது ஊட்டச்சத்து, ஹார்மோன்கள், சுவாச வாயுக்கள் போன்றவற்றை எடுத்துச்செல்கிறது.

    ரத்த புற்றுநோய் முக்கியமாக மரபணுவில் ஏற்படும் மாற்றங்கள் அல்லது குறைபாடுகளால் ஏற்படுகிறது. புகைப்பழக்கம், அதிகப்படியாக மது அருந்துதல் மற்றும் சில வகையான ரசாயனம், கதிர்வீச்சு பாதிப்பு இந்த நோய்க்கு காரணமாக அமைகிறது. பெண்களை விட ஆண்களுக்கே அதிக அளவில் ரத்த புற்றுநோய் உண்டாகிறது. பொதுவாக வேறு ஏதேனும் ஒரு நோய்க்காக ரத்த பரிசோதனை செய்யும் போதுதான் தற்செயலாக இது கண்டறியப்படுகிறது.

    ரத்த புற்றுநோய் ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் மற்றும் `பிளாஸ்மா' செல்களை தாக்கி அழிக்கிறது. இது உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவி அவற்றின் செயல்பாடுகளை முடக்குகிறது.

    ரத்த புற்றுநோயில் `லூகேமியா', 'லிம்போமா', `மைலோமா' என்று 3 வகைகள் உள்ளன. 'லூகேமியா'வில் எலும்பு மஜ்ஜையை அசாதாரண வெள்ளை அணுக்கள் தாக்கி அழிக்கின்றன. தொற்று நோய்களுக்கு எதிராக செயல்படும் நிணநீர் மண்டலங்களையும், மண்ணீரலையும் பாதிக்கும் ரத்த புற்றுநோய் `லிம்போமா' எனப்படுகிறது. 'மைலோமா' வகை புற்றுநோய் செல்கள் பிளாஸ்மா செல்களில் பாதிப்பை உண்டாக்கி நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனமடையச் செய்கின்றன.

    ரத்த புற்றுநோய் ஏற்பட்டால் அதற்கான அறிகுறிகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக அமையும். சிலருக்கு உடல் சோர்வு, மூட்டு வலி, காரணமின்றி உடல் எடை குறைதல், இரவு நேரத்தில் அதிகப்படியான வியர்வை, லேசாக காயம் ஏற்பட்டாலும் அதிக அளவில் ரத்தம் வெளியேறுதல், தோலில் தடிப்புகள் ஏற்படுவது, அடிக்கடி உண்டாகும் தொற்று நோய் போன்றவை ரத்த புற்றுநோய்க்கான அறிகுறிகளாக இருக்கலாம்.

    ரத்த புற்றுநோய் மரபணுவில் ஏற்படும் மாற்றங்களால் உண்டாவதால் அதை எளிதில் தடுக்க இயலாது. ரத்த தானம் செய்வதால் ரத்த புற்றுநோய் ஏற்படும் என்று சிலர் கருதுவது தவறானது என்றும், ரத்த தானம் செய்வது மிகவும் ஆரோக்கியமான செயல் என்றும் டாக்டர்கள் கூறுகிறார்கள்.

    புற்றுநோயின் வகை, அதன் தீவிரத்தன்மை, நோயாளியின் வயது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு புற்றுநோய்க்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது. அந்த வகையில் பொதுவாக கதிர்வீச்சு சிகிச்சை, ஸ்டெம்செல் மாற்று அறுவை சிகிச்சை, கீமோதெரபி ஆகிய 3 வகையான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

    Next Story
    ×