என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Liver cancer"
- நவீன அறுவை சிகிக்சை மூலம் அகற்றும் வசதி உள்ளது.
- `டார்கெட்டட் தெரபி' என்ற அதிநவீன சிகிச்சை முறை உள்ளது.
புற்றுநோய்க்கான அதிநவீன சிகிச்சைகள் குறித்தும், நோய் வருவதை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் புற்றுநோய் மருந்தியல் சிகிக்சை நிபுணர் டாக்டர் அருண் ரமணன் கூறியதாவது:-
உலகில் புற்றுநோய் எந்த அளவுக்கு வேகமாக பெருகி வருகிறதோ, அந்த அளவுக்கு அதை கட்டுப்படுத்துவதற்கான புதிய மருந்துகளும், மருத்துவ சிகிச்சைகளும் வந்துள்ளன. அமெரிக்காவில் கிடைப்பது போன்ற உலகத்தரம் வாய்ந்த நவீன சிகிச்சை நம் நாட்டிலும் கிடைக்கிறது. தமிழகத்தில் சென்னையில் கிடைக்கும் சிகிச்சை வசதி தென் மாவட்டங்களிலும் உள்ளது. பரிசோதனையின் மூலம் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்கும் வசதியும் வந்துவிட்டது.
டாக்டரிடம் வரும் புற்று நோயாளிகளில் பலர், ''நான் நன்றாகத்தானே இருந்தேன் சார்... எனக்கு எப்படி இந்த நோய் வந்தது?'' என்று கேட்பார்கள். பொதுவாக இந்த நோய் தாக்கினால் ஆரம்பநிலையில் எந்த அறிகுறியும் தெரியாது. புற்றுநோய் தாக்கி, அது முற்றிய நிலைக்கு வரும் போதுதான் உடல்நிலை பாதிக்கும். அப்போதுதான் தெரியவரும்.
நோய் வந்த பின் குணப்படுத்துவதை விட, அது வராமல் தடுப்பது மிகவும் நல்லது. எனவே ஆரோக்கியமாக இருந்தாலும் 6 மாதம் அல்லது ஆண்டுக்கு ஒருமுறையாவது முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளவேண்டும். அப்படி செய்து கொள்ளும்பட்சத்தில், நோய் தாக்கி இருந்தால் அதை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து உரிய சிகிச்சை அளிப்பதன் மூலம் குணப்படுத்த முடியும். நோய் முற்றிய நிலையில் குணப்படுத்துவது கடினம்.
இப்போதெல்லாம் புற்றுநோய் தாக்கிய முழு உறுப்பையும் அகற்றாமல், பாதிக்கப்பட்ட பகுதியை மட்டும் நவீன அறுவை சிகிக்சை மூலம் அகற்றும் வசதி உள்ளது. ஏதாவது ஒரு உறுப்பை புற்றுநோய் தாக்கி இருந்தால், அந்த உறுப்பு பாதிக்காத வகையில் தாக்குதலுக்கு உள்ளான குறிப்பிட்ட இடத்துக்கு மட்டும் சிகிச்சை அளிக்கும் `டார்கெட்டட் தெரபி' என்ற அதிநவீன சிகிச்சை முறை உள்ளது. மேலும் புற்றுநோய் கிருமியை எதிர்த்து போராடும் `இம்மியூனோ தெரபி' சிகிச்சையும் வந்து இருக்கிறது.
புற்றுநோய் சிகிச்சைக்கு புதிதாக `டோஸ்டார்லிமாப்' என்ற மருந்து கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. இந்த மருந்தை, அமெரிக்காவில் பாதிக்கப்பட்ட 12 நோயாளிகளுக்கு கொடுத்து பரிசோதித்ததில் அவர்கள் குணம் அடைந்து இருக்கிறார்கள். இன்னும் ஆய்வு நிலையிலேயே இருக்கும் இந்த மருந்து, பல கட்ட சோதனைகளுக்கு பிறகே பயன்பாட்டுக்கு வரும்.
10 சதவீத புற்றுநோய் மரபு ரீதியாக, அதாவது தாத்தா-பாட்டி, அப்பா-அம்மாவுக்கு இருந்து பிள்ளைகளுக்கு வந்தாலும், மீதி 90 சதவீதம் வாழ்க்கை முறை, காற்று மாசு போன்ற சுற்றுச்சூழல் பாதிப்பு போன்றவற்றின் காரணமாகவே வருகிறது.
நாம் உண்ணும் உணவு, காய்கறி, பழங்கள், அருந்தும் தண்ணீர், பால் என எல்லாவற்றிலுமே ஏதாவது ஒருவகையில் ரசாயனம் கலந்து இருக்கிறது. பயிர்கள், செடிகளுக்கு பூச்சிமருந்து தெளிக்கப்படுகிறது. இதுபோன்ற ரசாயனம் ஏற்படுத்தும் பாதிப்பால் நோய் உண்டாகும் ஆபத்து இருக்கிறது. எனவே காய்கறிகளை நன்றாக கழுவிய பிறகே சமைக்கவேண்டும். பழங்களை நன்றாக கழுவி சுத்தம் செய்த பிறகே சாப்பிட வேண்டும்.
மேலும் எண்ணெயில் அதிகம் பொறித்த உணவு, செயற்கையாக அதிக நிறம் கலந்த உணவு ஆகியவையும் புற்றுநோய் உண்டாக வழிவகுக்கும் என்பதால் அவற்றை தவிர்ப்பது மிகவும் நல்லது. பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதால் `கார்ட்னோஜென்' என்ற ஒருவகை ரசாயனம் உருவாகும்.
இது நம் உடலுக்குள் புற்றுநோயை உண்டாக்குவதற்கான வேலைகளை செய்ய ஆரம்பித்துவிடும். எனவே இந்த விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பொதுவாக பொறித்த உணவை தவிர்த்து ஆவியில் வேகவைத்த, புரதச்சத்து நிறைந்த உணவையே உண்ண வேண்டும், கொழுப்பு, சர்க்கரை நிறைந்த உணவை தவிர்ப்பது மிகவும் நல்லது.
ரசாயன கலவை காரணமாக, அதிகம் மேக்கப் (ஒப்பனை) போட்டுக் கொள்வது, தலைக்கு சாயம் பூசுவது ('டை அடிப்பது'), அதிக சாயம் கொண்ட ஆடைகளை அணிவதுகூட புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தலாம்.
இதேபோல் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது, பிளாஸ்டிக் பையில் டீ வாங்கி குடிப்பது, டப்பாக்களில் அடைக்கப்பட்ட உணவுப் பண்டங்களை உண்பது கூட தீங்கு விளைவிக்கக்கூடியதுதான்.
நல்ல தூக்கம், நன்றாக உடற்பயிற்சி செய்து உடல் பருமன் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது, சுறுசுறுப்பாக இருப்பது, சத்தான உணவு போன்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் மூலம் புற்றுநோய் மட்டுமின்றி மற்ற நோய்களையும் தவிர்க்கலாம்.
இவ்வாறு டாக்டர் அருண் ரமணன் கூறினார்.
- புற்றுநோயை பற்றிய சில தவறான தகவல்கள் உள்ளன.
- புற்றுநோய் என்பது தொற்றுநோய் அல்ல.
புற்றுநோயை பற்றிய சில தவறான தகவல்கள் உள்ளன என்றும், அவற்றை நம்பக்கூடாது என்றும் டாக்டர்கள் சொல்கிறார்கள். `புற்றுநோய் என்பது தொற்றுநோய் அல்ல. இது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவாது. எனவே குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் இருந்தால், அவரை ஒதுக்கி வைக்காதீர்கள். அவர்களை பரிவுடன் கவனித்துக் கொள்ளுங்கள்' என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
ஆரம்ப நிலையிலேயே இந்த நோய்க்கு உரிய சிகிச்சை அளித்தால், இந்த நோயை குணப்படுத்திவிடலாம். எனவே சிகிச்சையும், மாத்திரைகளும் மட்டுமல்ல; பரிவான கவனிப்பும், நம்பிக்கையூட்டும் கனிவான வார்த்தைகளும் நோயாளிகளுக்கு மிகப்பெரிய மருந்து என்பதை மறந்து விடாதீர்கள்...
புற்றுநோயாளிகளுக்கு ஆதரவு அளிப்பதோடு, அந்த நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உலகம் முழுவதும் வண்ண ரிப்பன்கள் (பட்டைகள்) அடையாளமாக பயன்படுத்தப்படுகின்றன.
அமெரிக்காவில் 1990-களில் மார்பக புற்றுநோயில் இருந்து மீண்ட சார்லோட் ஹேய்லி என்ற 68 வயது பெண் இந்த ரிப்பன் முறையை அறிமுகப்படுத்தினார். அந்த வகையில் ஒவ்வொரு வகையான புற்றுநோய்க்கும் ஒவ்வொரு வண்ண ரிப்பன் பயன்படுத்தப்படுகிறது.
நுரையீரல் புற்றுநோய்க்கு வெள்ளை நிறமும், மூளை புற்றுநோய்க்கு சாம்பல் நிறமும், மார்பக புற்றுநோய்க்கு இளஞ்சிவப்பு நிறமும், கணைய புற்றுநோய்க்கு ஊதா நிறமும், எலும்பு புற்றுநோய்க்கு மஞ்சள் நிறமும், சிறுநீரக புற்றுநோய்க்கு ஆரஞ்சு நிறமும், கல்லீரல் புற்றுநோய்க்கு பச்சை நிறமும், பெருங்குடல் புற்றுநோய்க்கு அடர் நீலமும், தோல் புற்றுநோய்க்கு கருப்பு நிறமும் என பல நிறங்களில் வண்ண ரிப்பன்கள் பயன்படுத்தப்படுகின்றன.
- ரத்த தானம் செய்வது மிகவும் ஆரோக்கியமான செயல்.
- அறிகுறிகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக அமையும்.
ரத்தம் என்பது திரவ இணைப்பு திசு ஆகும். இது `எரித்ரோசைட்டுகள்' (ஆர்.பி.சி.) 'லூகோசைட்டுகள்' (டபிள்யூ.பி.சி.), `துரோமோசைட்டுகள்' (பிளேட்லெட்டுகள்) மற்றும் புரதம், உப்பு, தண்ணீர் ஆகியவற்றை உள்ளடக்கிய 'பிளாஸ்மா' போன்ற பல்வேறு உயிரணுக்களால் ஆனது. இது ஊட்டச்சத்து, ஹார்மோன்கள், சுவாச வாயுக்கள் போன்றவற்றை எடுத்துச்செல்கிறது.
ரத்த புற்றுநோய் முக்கியமாக மரபணுவில் ஏற்படும் மாற்றங்கள் அல்லது குறைபாடுகளால் ஏற்படுகிறது. புகைப்பழக்கம், அதிகப்படியாக மது அருந்துதல் மற்றும் சில வகையான ரசாயனம், கதிர்வீச்சு பாதிப்பு இந்த நோய்க்கு காரணமாக அமைகிறது. பெண்களை விட ஆண்களுக்கே அதிக அளவில் ரத்த புற்றுநோய் உண்டாகிறது. பொதுவாக வேறு ஏதேனும் ஒரு நோய்க்காக ரத்த பரிசோதனை செய்யும் போதுதான் தற்செயலாக இது கண்டறியப்படுகிறது.
ரத்த புற்றுநோய் ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் மற்றும் `பிளாஸ்மா' செல்களை தாக்கி அழிக்கிறது. இது உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவி அவற்றின் செயல்பாடுகளை முடக்குகிறது.
ரத்த புற்றுநோயில் `லூகேமியா', 'லிம்போமா', `மைலோமா' என்று 3 வகைகள் உள்ளன. 'லூகேமியா'வில் எலும்பு மஜ்ஜையை அசாதாரண வெள்ளை அணுக்கள் தாக்கி அழிக்கின்றன. தொற்று நோய்களுக்கு எதிராக செயல்படும் நிணநீர் மண்டலங்களையும், மண்ணீரலையும் பாதிக்கும் ரத்த புற்றுநோய் `லிம்போமா' எனப்படுகிறது. 'மைலோமா' வகை புற்றுநோய் செல்கள் பிளாஸ்மா செல்களில் பாதிப்பை உண்டாக்கி நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனமடையச் செய்கின்றன.
ரத்த புற்றுநோய் ஏற்பட்டால் அதற்கான அறிகுறிகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக அமையும். சிலருக்கு உடல் சோர்வு, மூட்டு வலி, காரணமின்றி உடல் எடை குறைதல், இரவு நேரத்தில் அதிகப்படியான வியர்வை, லேசாக காயம் ஏற்பட்டாலும் அதிக அளவில் ரத்தம் வெளியேறுதல், தோலில் தடிப்புகள் ஏற்படுவது, அடிக்கடி உண்டாகும் தொற்று நோய் போன்றவை ரத்த புற்றுநோய்க்கான அறிகுறிகளாக இருக்கலாம்.
ரத்த புற்றுநோய் மரபணுவில் ஏற்படும் மாற்றங்களால் உண்டாவதால் அதை எளிதில் தடுக்க இயலாது. ரத்த தானம் செய்வதால் ரத்த புற்றுநோய் ஏற்படும் என்று சிலர் கருதுவது தவறானது என்றும், ரத்த தானம் செய்வது மிகவும் ஆரோக்கியமான செயல் என்றும் டாக்டர்கள் கூறுகிறார்கள்.
புற்றுநோயின் வகை, அதன் தீவிரத்தன்மை, நோயாளியின் வயது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு புற்றுநோய்க்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது. அந்த வகையில் பொதுவாக கதிர்வீச்சு சிகிச்சை, ஸ்டெம்செல் மாற்று அறுவை சிகிச்சை, கீமோதெரபி ஆகிய 3 வகையான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.
- நம் உடல் கோடிக்கணக்கான உயிரணுக்களால் ஆனது.
- சில சமயங்களில் உடலில் தேவையற்ற புதிய உயிரணுக்கள் தோன்றுகின்றன.
நம் உடல் கோடிக்கணக்கான உயிரணுக்களால் ('செல்'கள்) ஆனது. இந்த உயிரணுக்கள் பிரிந்து வளர்ச்சி அடைந்து உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள தேவையான புதிய உயிரணுக்களை உருவாக்குகின்றன. சில சமயங்களில் உடலுக்கு தேவையற்ற புதிய உயிரணுக்கள் தோன்றுகின்றன. அதேசமயம், உடலில் உள்ள வயதான பழைய உயிரணுக்கள் இறக்க வேண்டிய நேரத்தில் செத்து வெளியேறாமல் உடலிலேயே தங்கிவிடுகின்றன.
இப்படி புதிதாக உருவாகும் தேவையற்ற உயிரணுக்களும், இறந்து வெளியேறாமல் இருக்கும் உயிரணுக்களும் சேர்ந்து உடலுக்கு கேடு தரும் கட்டியாக (கழலை) உருவெடுக்கின்றன. இப்படி உருவாகும் கட்டி தீங்கு இல்லாத கட்டியாக இருக்கும் பட்சத்தில், அதை உடலில் இருந்து நீக்கிவிடலாம். அப்படி நீக்கிய பின்பு, பெரும்பாலும் அவை மீண்டும் உருவாவது இல்லை.
ஆனால் சில சமயங்களில் உயிரணுக்கள் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வளர்ச்சி அடைந்து மீண்டும் கட்டி உருவாவதோடு, உடம்பின் மற்ற பகுதிகளுக்கும் பரவும். இதைத்தான் புற்றுநோய் என்கிறோம். இதனால்தான் உடலில் ஏதாவது கட்டி இருந்து அதை ஆபரேஷன் செய்து அகற்றினால், அந்த கட்டி சாதாரண கட்டிதானா? அல்லது புற்றுநோய் கட்டியா? என்பதை தெரிந்து கொள்ள டாக்டர்கள் பரிசோதனைக்கு ('பயாப்சி') அனுப்பி வைக்கிறார்கள்.
உடலின் எந்த பகுதியிலும் புற்றுநோய் வரலாம். அது வரும் இடத்தை பொறுத்து நுரையீரல் புற்றுநோய், இரைப்பை புற்றுநோய் பெருங்குடல் புற்றுநோய், ரத்த புற்றுநோய், தோல் புற்றுநோய் என வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. பெண்களுக்கு பொதுவாக மார்பகம், கர்ப்பப்பை வாய் ஆகிய இடங்களில் புற்று நோய் உண்டாகிறது. இதில் ரத்த புற்றுநோய் தவிர மற்ற புற்றுநோய்களில் பொதுவாக கட்டிகள் தோன்றும்.
புற்றுநோயின் ஆரம்ப நிலையில் எந்த அறிகுறிகளும் தெரிவது இல்லை. உடலில் கட்டிகள் தோன்றும் ஆரம்ப நிலையில் வலி இருக்காது. ஆனால் நோய் தீவிரம் அடையும் நிலையில் தான், அந்த இடத்தில் வலி தெரியும். அந்த கட்டி புண்ணாகும் பட்சத்தில் அதில் இருந்து ரத்தக்கசிவு ஏற்படலாம். நுரையீரலில் புற்றுநோய் கட்டி இருந்தால் இருமும் போது ரத்தம் வரும்.
இதேபோல் பெருங்குடலில் புற்றுநோய் கட்டி இருந்தால் மலம் கழிக்கும் போதும், சிறுநீர்ப் பையில் புற்றுநோய் இருக்குமானால் சிறுநீர் கழிக்கும் போதும் ரத்தம் வரலாம். கர்ப்பப்பையில் புற்றுநோய் கட்டி இருந்தால், ரத்தப்போக்கு ஏற்படும்.
உடலில் உண்டாகும் கட்டிகளில் அதிக அளவில் ஏற்படும் ரத்தப்போக்கு, நீண்ட நாட்களாக இருக்கும் இருமல், காரணம் தெரியாமல் திடீரென்று உடல் எடை குறைதல், மலம் கழிப்பதில் ஏற்படும் சிரமம் ஆகியவை புற்றுநோய்க்கான பொதுவான அறிகுறிகள் ஆகும். ஆனால் எந்த வகையான புற்றுநோய் என்பதற்கு ஏற்ப இந்த அறிகுறிகளும் மாறக்கூடும்.
எந்த வயதிலும் புற்றுநோய் ஏற்படலாம் என்றபோதிலும், வயதான காலத்தில் புற்றுநோய் தாக்கும் ஆபத்து அதிகம் இருப்பதாக ஆய்வின் மூலம் தெரியவந்து இருக்கிறது.
புகைப்பிடித்தல், புகையிலைப் பொருட்களை பயன்படுத்துதல், உடல் பருமன், தொடர்ந்து ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, எச்.ஐ.வி., ஈரல் அழற்சி மற்றும் சில வகையான தொற்று நோய்கள் புற்றுநோய் ஏற்படுவதற்கு காரணமாக அமைகின்றன. 22 சதவீத புற்றுநோய்க்கு புகைப்பிடித்தல் மற்றும் புகையிலை பொருட்களை பயன்படுத்துவது காரணமாக அமைந்து இருப்பதாக ஆய்வில் தெரியவந்து இருக்கிறது.
இதேபோல் 10 சதவீத புற்றுநோய்க்கு உடல் பருமன், திட்டமிடப்படாத உணவு முறை, அதிக மதுப்பழக்கம் ஆகியவை காரணமாக இருப்பதாகவும், 5 முதல் 10 சதவீத புற்று நோய் மரபு ரீதியாக வருவதாகவும் கண்டறியப்பட்டு உள்ளது.
புகைப்பிடிப்பதையும், புகையிலைப் பொருட்களையும், பதப்படுத்தப்பட்ட இறைச்சி உண்பதையும் தவிர்ப்பது, மது அருந்தாமல் இருப்பது, சூரிய ஒளியில் நீண்ட நேரம் நிற்காமல் இருப்பது, உரிய தடுப்பூசிகளை போட்டு தொற்றுநோய்கள் வராமல் பார்த்துக் கொள்வது, உடல் எடையை சரியான அளவில் வைத்துக் கொள்வது போன்றவற்றின் மூலம் புற்றுநோய் வருவதை தவிர்க்க முடியும்.
கர்ப்பப்பை வாய் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் ஆகியவற்றை உரிய பரிசோதனைகள் மூலம் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் எளிதில் மீண்டுவிடலாம் என டாக்டர்கள் கூறுகிறார்கள்.
பொதுவாக கர்ப்பப்பை புற்றுநோய் மாதவிடாய் நின்ற 50 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்களையே அதிகம் தாக்குகிறது. குறைந்த வயதில் பருவமடைவது, தாமதமாக திருமணம் செய்து கொள்வது, குழந்தை பிறப்பை தள்ளிப்போட மாத்திரை சாப்பிடுவது, தாமதமாக குழந்தை பெற்றுக் கொள்வது ஆகியவை பெண்களிடையே புற்றுநோய் அதிகரிப்பதற்கு முக்கிய காரணங்கள் ஆகும்.
ஒருவருக்கு வந்துள்ள புற்றுநோய் எந்த வகையானது? அது எந்த இடத்தில் வந்துள்ளது? எந்த நிலையில் இருக்கிறது? அவருக்கு எந்த வகையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது? என்பதை பொறுத்துத்தான் அவரை குணப்படுத்த முடியுமா? இயலாதா? என்பதை சொல்ல முடியும் என்கிறார்கள் டாக்டர்கள்.
இருவருக்கு ஒரே மாதிரியான புற்றுநோய் வந்தாலும் அவர்களில் ஒருவரை குணப்படுத்தவும், மற்றொருவரை குணப்படுத்த முடியாமல் போகும் வாய்ப்பு உள்ளது என்றும், எல்லா புற்றுநோய்களுக்கும் ஒரே மாதிரியான சிகிச்சை அளிக்க முடியாது என்றும் ஒவ்வொரு வகைக்குமான சிகிச்சை முறை மாறுபடுவதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.
நோயாளிக்கு சிறுநீரக விதைப்பை, தைராய்டு சுரப்பி, மார்பகம், தோல் ஆகிய இடங்களில் வரும் புற்றுநோய் ஆரம்ப நிலையில் இருக்கும் பட்சத்தில் அதை குணப்படுத்த முடியும் என்றும், கணிசமான ஆண்டுகள் அந்த நபர் உயிர்வாழ முடியும் என்றும் டாக்டர்கள் சொல்கிறார்கள்.
புற்றுநோயால் ஏற்படும் 50 சதவீத மரணங்களுக்கு நுரையீரல், மூச்சுக்குழாய், பெருங்குடல், கணையம், மார்பகம் ஆகிய இடங்களில் ஏற்படும் புற்றுநோயே காரணமாக உள்ளது.
கணையத்தில் வரும் புற்றுநோய்தான் மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது. அந்த இடத்தில் புற்றுநோய் வந்தால் விரைவில் உயிரிழப்பு ஏற்படுவதாகவும், 4 பேரில் ஒருவர் ஒரு மாதத்தில் இறந்துவிடுவதாகவும், 4 பேரில் 3 பேர் ஓர் ஆண்டுக்குள் இறந்துவிடுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
- நோய்களால் ஏற்படும் மரணங்களில் இதயநோய்தான் முதலில் இருக்கிறது.
- புற்றுநோயால் லட்சக்கணக்கான பேர் உயிர் இழக்கிறார்கள்.
`நதியின் வழியே நீரின் பயணம் என்பது போல், விதியின் வழியே வாழ்க்கை பயணம்' என்றார் ஓர் அறிஞர். மலையில் இருந்து கடலை நோக்கி பாய்ந்தோடும் நதிநீர் எண்ணிலடங்கா துளிகளை உள்ளடக்கியது. இதில் எல்லா துளிகளுமே கடலை சென்றடைவதில்லை. கணிசமான நீர் பயிர்களுக்கு பாய்கிறது; குடிநீராக பயன்படுகிறது, தொழிற்சாலைகளுக்கு உபயோகமாகிறது. கொஞ்சம் ஆவியாகவும் செய்கிறது. மீதமுள்ள துளிகள் மட்டுமே தனது முழு பயணத்தையும் நிறைவு செய்து கடலை சென்று அடைகின்றன.
இதுபோல்தான் மனித வாழ்க்கையும். மகிழ்ச்சியுடன் நீண்ட காலம் வாழ வேண்டும் என்றுதான் எல்லோரும் விரும்புகிறார்கள். ஆனால் நினைப்பது போல் எல்லாமே நடந்து விடுவதில்லை. நோய்நொடிகள், எதிர்பாராத விபத்துகள் மட்டுமின்றி மழை-வெள்ளம், பூகம்பம் போன்ற இயற்கை பேரிடர்களும் மனித வாழ்க்கையை திசைதிருப்பி விடுகின்றன.
உலக நாடுகளில் எந்த அளவுக்கு பொருளாதார மற்றும் சுகாதார வசதிகள் பெருகி மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்து இருக்கிறதோ அந்த அளவுக்கு நோய்களும் அதிகரித்து இருக்கின்றன என்பதை மறுக்க முடியாது.
இயற்கை மரணங்களை விட நோய்களால் நிகழும் மரணங்கள்தான் அதிகம். நோய்களால் ஏற்படும் மரணங்களில் இதயநோய்தான் முதலில் இருக்கிறது. இதயநோயால்தான் அதிகம் பேர் இறப்பதாகவும், இதற்கு அடுத்த இடத்தில் புற்றுநோய் (கேன்சர்) இருப்பதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுவனுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், ''இனி அவன் பிழைப்பது கடினம்'' என்று கைவிரித்துவிட, ''கங்கையில் நீராடினால் நோய் குணமாகலாம்'' என்று யாரோ சொன்னதை கேட்டு, கடைசி நம்பிக்கையாக பெற்றோர் அவனை ஹரித்துவார் அழைத்துச் சென்று இருக்கிறார்கள். அங்கு கங்கையில் அவனை மீண்டும் மீண்டும் மூழ்கச் செய்து குளிக்க வைத்ததில் அவன் மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்து போனான்.
புற்றுநோயுடன் தொடர்ந்து போராடினால் கூட அவன் இன்னும் சிறிது காலம் வாழ்ந்து இருக்கக்கூடும். என்ன செய்ய?...விதி முன்கூட்டியே அவன் வாழ்வில் விளையாடிவிட்டது.
இதேபோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பாடகி பவதாரிணியின் (இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள்) அகால மரணமும் ஈடுசெய்ய இயலாதது.
விஞ்ஞானமும், மருத்துவமும் எவ்வளவோ வளர்ந்துவிட்டது. ஆனால் உயிர்க்கொல்லி நோயான புற்றுநோய்க்கு இன்னும் சரியான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நோயால் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பேர் உயிர் இழக்கிறார்கள்.
புற்றுநோயால் ஏற்படும் மரணங்களை தடுத்து நிறுத்தும் வகையில், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 4-ந்தேதி (இன்று) உலகம் முழுவதும் புற்றுநோய் ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது.
- 8 லட்சம் பேர் ஹெபடைட்டிஸ் பி வைரஸ் பாதிப்பால் இறக்கின்றனர்.
- தாயிடமிருந்து குழந்தைக்கு தொற்று பரவுகிறது.
ஹெபடைட்டிஸ் பி வைரசால் கல்லீரல் அழற்சி, கல்லீரல் செயலிழப்பு மற்றும் கல்லீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. உலக அளவில் சுமார் 30 கோடி பேர் ஹெபடைட்டிஸ் பி வைரசால் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். வருடம்தோறும் 8 லட்சம் பேர் ஹெபடைட்டிஸ் பி வைரஸ் பாதிப்பால் இறக்கின்றனர். ஹெச்ஐவி வைரசை போலவே ஹெபடைட்டிஸ் பி வைரசும் ரத்தப் பரிமாற்றம், தொற்று பாதித்த ஊசியை பலர் பயன்படுத்துவது, பாதுகாப்பு இல்லாத உடலுறவு, தொற்று பாதித்த தாயிடமிருந்து குழந்தைக்குத் தொற்று என பிறருக்குப் பரவுகிறது. எனினும் ஹெபடைட்டிஸ் பி தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலம் ஹெபடைட்டிஸ் பி தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ளலாம்.
தாயிற்கு ஹெபடைட்டிஸ் பி தொற்று இருந்தால், குழந்தைக்கு பெரும்பாலும் பிரசவத்தின்போது நிகழும் தாய்-சேய் ரத்தக் கசிவினால், தாயின் ரத்தத்துடன் தொடர்பு ஏற்பட்டு, குழந்தைக்கு ஹெபடைட்டிஸ் பி தொற்று ஏற்படுகிறது. தாய்க்கு ஹெபடைட்டிஸ் பி தொற்று, கர்ப்பகாலத்தின் முதல் ஆறு மாதங்களில் ஏற்பட்டிருந்தால், குழந்தைக்கு 10 சதவிகிதம் நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
மாறாக, கர்ப்ப காலத்தின் இறுதி 3 மாதங்களிலோ, பிரசவ காலத்துக்கு மிக அருகிலோ ஹெபடைட்டிஸ் பி தொற்று ஏற்பட்டிருந்தால், குழந்தைக்குத் தொற்று ஏற்பட 90 சதவீதம் வாய்ப்பு இருக்கிறது.
எனவேதான், கர்ப்பகாலத்தில் அனைத்து கர்ப்பிணிகளுக்கும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கட்டாயமாக ஹெபடைட்டிஸ் பி ஆன்டிஜென் பரிசோதனை செய்கின்றனர். பரிசோதனை பாசிடிவ் எனில், தாய்க்கு கல்லீரல் செயல்பாடு பரிசோதனை மற்றும் 28 -30-வது வார கர்ப்பகாலத்தில் ஹெபடைட்டிஸ் பி எவ்வளவு உள்ளது போன்ற பரிசோதனைகள் செய்யப்படும். வைரஸ் லோடு மிக அதிகமாக இருப்பின் தாய்க்கு ஹெபடைட்டிஸ் பி-க்கு எதிராக சிகிச்சைத் தொடங்கப்படும்.
தாயிற்கு ஹெபடைட்டிஸ் பி இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தால், குழந்தை பிறந்தவுடன் உடனடியாக ஒரு காலில் ஹெபடைட்டிஸ் பி தடுப்பூசியும், மற்றொரு காலில் ஹெபடைட்டிஸ் பி இம்யூனோ குளோபுலின் ஊசியும் போட வேண்டும்.
குழந்தைக்கு ஹெபடைட்டிஸ் பி நோய்த்தொற்று பெரும்பாலும் பிரசவத்தின் போது நிகழும் தாய் - சேய் ரத்தக் கசிவின் போதுதான் ஏற்படுகிறது என்பதாலும், கர்ப்பகாலத்தில் நஞ்சுக்கொடி வழியாக ஹெபடைட்டிஸ் பி வைரஸ் தொற்று 4 சதவிகிதத்துக்கு கீழாகவே ஏற்படுகிறதென்பதால், ஹெபடைட்டிஸ் பி தடுப்பூசி மற்றும் இம்யூனோகுளோபுலின் பிறந்தவுடன் உடனடியாக போடப்பட்டு விட்டால், குழந்தைக்கு ஹெபடைட்டிஸ் பி நோய்த்தொற்றை 95 சதவிகிதத்துக்குக் குறைத்துவிடலாம்.
ஹெபடைட்டிஸ் பி இம்யூனோகுளோபுலினில் ஹெபடைட்டிஸ் பி வைரசுக்கு எதிரான ஆன்டிபாடிகள் உள்ளதால், குழந்தை பிறந்த 12 மணி நேரத்துக்குள் போடப்பட்டுவிட்டால், தாயின் ரத்தத்தில் இருந்து குழந்தைக்கு பிரசவ நேரத்தில் ஹெபடைட்டிஸ் பி கிருமி சென்றிருந்தால்கூட, அதை அழித்துவிடும். ஹெபடைட்டிஸ் பி இம்யூனோகுளோபுலின் ஊசியை முடிந்தவரை பிறந்த 12 மணி நேரத்துக்குள்ளும், அதிகபட்சமாக 48 - 72 மணி நேரத்துக்குள்ளும் கட்டாயமாகப் போட வேண்டும்.
ஹெபடைட்டிஸ் பி இம்யூனோகுளோபுலின் ஊசியின் விலை ரூ.4 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரை இருக்கும். ஆனால், இதைப்பற்றிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால், பல குழந்தைகளுக்கு ஹெபடைட்டிஸ் பி இம்யூனோகுளோபுலின் கிடைக்காமல் போவதால், அவர்களுக்கு ஹெபடைட்டிஸ் பி பாதிப்பு ஏற்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்