என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    • மதிய வேளையில் சிறுதுயில் கொள்வது சிலரின் பழக்கம்.
    • மதிய நேர தூக்க கலக்கத்தை எப்படி துரத்தலாம்.

    மதிய வேளையில் சிறுதுயில் கொள்வது சிலரின் பழக்கம். அதை அவர்கள் அன்றாட வழக்கமாகவே வைத்திருப்பார்கள். எவ்வளவு நேரம் தொடர்ந்து வேலை பார்த்தாலும், மதியம் சிறிது நேர தூக்கம் இல்லாமல் அவர்களால் தொடர்ந்து இயங்க முடியாது.


    ஆனால் அலுவலகப் பணி போன்றவற்றில் இருப்பவர்களுக்கு, மதியம் தூக்கம் வருவது பிரச்சனையை ஏற்படுத்தும். அந்த மாதிரியானவர்கள், மதிய நேர தூக்க கலக்கத்தை எப்படி துரத்தலாம் என்று பார்க்கலாம்...


    லேசான, சத்தான உணவு

    மதிய உணவின்போது அதிகமான, எண்ணெய் நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது மந்தமான உணர்வை ஏற்படுத்துகிறது. தூக்கத்தை அழைத்து வருகிறது. அதற்குப் பதிலாக, புரதம், நார்ச்சத்து நிறைந்த மிதமான அளவு உணவை உட்கொள்ளலாம்.

    சாதத்தைக் குறைத்து, பச்சைக் காய்கறிகள், சாலட் மற்றும் பழங்களை மதிய உணவில் கூடுதலாக சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனால் உடலுக்கு ஆற்றல் கிடைக்கும், தூக்கம் குறையும்.


    டீ,காபி

    ஒரு கப் டீ அல்லது காபி பருகுவது. பிற்பகல் தூக்கத்தைத் துரத்த உதவும். ஆனால், உடனடி உற்சாக உணர்வை தோற்றுவிக்கும் இந்த பானங்களை அளவோடு அருந்துவதே நல்லது. காரணம். அதிகப்படியான காபீன், உடலில் நீரிழப்பை ஏற்படுத்தி, வழக்கமான இரவு தூக்கத்தை பாதிக்கும்.


    சிறிய இடைவெளி

    தொடர்ச்சியான வேலை. ஒருவரை சோர்வடையச் செய்யும். அந்நிலையில் தூக்கம் வருவது இயற்கையானது. ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 5 முதல் 10 நிமிட இடைவெளி எடுத்துக்கொள்வது. உடலை இயல்பாக்கும். இந்த சிறிய இடைவெளி, நம் மனதை புத்துணர்ச்சியடையச் செய்து தூக்கத்தை விரட்ட உதவும்.


    காற்றாட நடப்பது

    மதிய நேரம் தூக்கம் அதிகமாக தொந்தரவு படுத்தினால், உடனே காற்றாட வெளியே சிறிது தூரம் நடந்து செல்லுங்கள். புதிய காற்றும். லேசான சூரிய ஒளியும் ஒருவர் உடலுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும். தூக்க கலக்கத்தைப் போக்கும்.

    தண்ணீர் குடிப்பது

    மதியம் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது நமது உடலை நீரேற்ற மாக வைத்திருக்கும், சோம்பலைக் குறைக்கும். அதிக நேரம் தண்ணீர் பருகாதபோது. சோர்வு அதிகரித்து தூக்கம் வரும்.


    சிறிதுநேர ஓய்வு

    மதிய வேளையில் தூக்கத்தை தடுப்பது கடினமாகத் தோன்றினால், வாய்ப்பிருந்தால் சுமார் 10-15 நிமிடங்கள் கண்களை மூடி அறி துயில் ஓய்வு எடுக்கலாம். அதன் மூலம் புத்துணர்ச்சி பிறக்கும். உற்சாகமாக செயல் பட முடியும்.

    பொதுவாக, மதிய உணவுக்குப் பிறகு. நமக்கு அலுப்பு,சலிப்பூட்டுவதாகத் தோன்றும் வேலைகளை கொஞ்ச நேரம் ஒத்திவைத்து, விருப்பமான வேலைகளை செய்யலாம். இதனால், மதிய நேர உறக்கம் நம்மை ஆக்கிரமிப்பதை தவிர்க்கலாம்.

    • அதிக அளவில் காபி குடித்தால் நமது ஆயுட்காலம் அதிகரிக்கும் என்று ஆய்வு ஒன்று மூலம் தெரியவந்துள்ளது.
    • தினமும் காபி குடிப்பவர்களுக்கு சிறப்பான இருதய, மனநலன் மற்றும் நோயெதிர்ப்பு செயல்பாடுகள் இருக்கும்.

    காலையில் எழுந்தவுடன் சூடா... ஒரு காபியை குடித்தால்தான் அன்றைய பொழுதே சுறுசுறுப்பாக இருக்கும் என்பர் பலர். அந்த அளவுக்கு காபி குடிக்கும் பழக்கம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையுமே ஆட்கொண்டிருக்கிறது என்றால் அது மிகையல்ல.

    இந்நிலையில், அதிக அளவில் காபி குடித்தால் நமது ஆயுட்காலம் அதிகரிக்கும் என்று ஆய்வு ஒன்று மூலம் தெரியவந்துள்ளது.

    போர்ச்சுகல் நாட்டில் உள்ள கோயிம்ப்ரா பல்கலைக்கழகத்தில் ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஆசியாவை சேர்ந்த லட்சக்கணக்கான மக்களை வைத்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

    தினமும் மூன்று கப் காபி குடிப்பவர்களின் ஆயுட்காலம் 1.84 ஆண்டுகள் அதிகரிக்கிறது என்று இந்த ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.

    தினமும் காபி குடிப்பவர்களுக்கு சிறப்பான தசை, இருதய, மனநலன் மற்றும் நோயெதிர்ப்பு செயல்பாடுகள் இருக்கும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

    மேலும், அதிக அளவில் காபி குடிப்பவர்களுக்கு, வயதானவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளான இருதய நோய்கள், பக்கவாதம், சில புற்றுநோய்கள், நீரிழிவு நோய், மறதி நோய் (டிமென்ஷியா) ,மனச்சோர்வு ஆகியவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • எலும்புகளை வலுவிழக்கச் செய்கின்றது.
    • வைட்டமின் டி புற்றுநோய் செல் வளர்ச்சியை குறைக்கவும் உதவுகின்றது.

    உடலில் ஏற்படும் வைட்டமின் டி குறைபாடு எலும்புகளை வலுவிழக்கச் செய்கின்றது. வயதானவர்களுக்கு எலும்பு முறிவு எளிதாக ஏற்படவும் காரணமாகின்றது. 


    வைட்டமி டி குறைபாட்டின் அறிகுறிகள்

    அதிகப்படியான உடல் சோர்வு , வேலையில் கவனமின்மை, சுறுசுறுப்பாக வேலை செய்ய முடியாது. சாதாரணமாக கீழே விழுந்தாலும் எலும்பு முறிவு உண்டாவது.

    மெனோபாஸ் காலத்தில் பெண்களுக்கு எலும்புத்தேய்மானம் போன்றவை வைட்டமின் டி குறைப்பாட்டின் அறிகுறிகளாகும்.


    சூரிய ஒளி குறைவான இடங்களில் அதிக நேரம் வேலை செய்வது, அளவுக்கதிகமான சன் ஸ்க்ரீன் பயன்பாடு மற்றும் அதிகளவு மெலனின் உற்பத்தியுள்ளவர்களுக்கு வைட்டமின் டி குறைபாடு ஏற்படுகின்றது.

    உயரமான கட்டடங்களில் சூரிய ஒளி கிடைக்காத இடங்களில் அதிக நேரம் இருப்பதும் வைட்டமின் டி குறைபாட்டிற்கு வழிவகுக்கும். 

    வைட்டமின் டி இருந்தால் தான் எலும்புகள் வலுவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். மேலும் இந்த வைட்டமின் டி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகின்றது.

    வைட்டமின் டி , டுனா, சார்டைன்ஸ், கார்ட்லிவர் ஆயில், காளான், இறால் போன்ற உணவுப்பொருட்களில் கிடைக்கிறது. பால் பொருட்களான செறிவூட்டப்பட்ட பால், தானியங்கள், ஓட்ஸ் , தயிர் மற்றும் செறிவூட்டப்பட்ட ஆரஞ்சு பழச்சாற்றில் காணப்படுகின்றது.

    • சர்க்கரை நோயாளிகளில் கிட்டத்தட்ட 40 சதவிகிதம் பேருக்கு ஏற்படுகிறது.
    • உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.

    உங்களுக்கு ஏற்படும் நெஞ்சு எரிச்சல், உணவு எதிர்களித்தல் மற்றும் வாந்திக்கு காரணம் இரைப்பை உணவுக்குழாய் ரிப்ளக்ஸ் நோயாகும் (அமில பின்னோட்ட நோய்). இது ஆங்கிலத்தில் ஜி.ஈ.ஆர்.டி என்று அழைக்கப்படுகிறது. இது சர்க்கரை நோயாளிகளில் கிட்டத்தட்ட 40 சதவிகிதம் பேருக்கு ஏற்படுகிறது.

    பொதுவாக உணவுக் குழாயின் கீழ்ப்பகுதியில் உள்ள தசை நார்களும், இரைப்பையும் சந்திக்கும் இடத்தில் இயல்பாகவே இருக்கக்கூடிய வால்வு, நாம் விழுங்கும் உணவு மீண்டும் மேலே செல்வதை தடுக்கிறது.


    இந்த வால்வு தளர்வடையும் போது வயிற்றில் இருக்கும் உணவுகள், அமிலம் மற்றும் திரவங்கள் உணவு குழாய்க்குள் மேல் நோக்கி தள்ளப்படுகிறது. இது உணவுக் குழாயில் ஒரு அழற்சியை ஏற்படுத்தி அமில பின்னோட்ட நோய் உண்டாக வழிவகுக்கிறது.

    இந்நோய் ஏற்பட முக்கிய காரணங்கள் வருமாறு:

    சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் தன்னியக்க நரம்பு பாதிப்பு, உடல் பருமன், புகைப்பிடித்தல், மது பழக்கம். ஹையாட்டஸ் ஹெர்னியா (இரைப்பை ஏற்றம்), சில மருந்துகளின் பக்க விளைவுகள். (உதாரணமாக-செமாக்ளூட்டைட், லிராக்ளூட்டைட், அமிட்ரிப்டில்லின், டையசிபாம், ஆஸ்பிரின், இப்யூபுரூபன்).

    இந்த அமில பின்னோட்ட நோயை உதாசீனப்படுத்தினால் இது உணவுக்குழாய் இறுக்கம், பாரட்ஸ் உணவுக்குழாயாக மாறுதல் மற்றும் புற்றுநோய் போன்ற பக்க விளைவுகளை உண்டாக்கலாம்.


    இந்த நோயை குணப்படுத்துவதற்கு எச் 2 தடுப்பான்கள் அல்லது புரோட்டான் பம்ப் இன்ஹிபிட்டர்கள் போன்ற மருந்துகளை மருத்துவரிடம் கலந்தாலோசித்து பயன்படுத்த வேண்டும்.

    இதில் குணமடையவில்லை என்றால் பண்டோப்ளிகேஷன், லிங்க்ஸ் சாதனம் பொருத்துதல் போன்ற அறுவை சிகிச்சை முறைகள் பலனளிக்கும்.

    அமில பின்னோட்ட நோய் வராமல் தடுக்க சர்க்கரை நோயாளிகள் கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்:

    இடது புறமாக தூங்குவது, தலை மற்றும் உடலின் மேற்பாகம் உயரே இருக்குமாறு தலையணையை பயன்படுத்துதல், இரவில் குறைந்த அளவு உணவு உட்கொள்ளுதல், உறங்குவதற்கு மூன்று மணி நேரத்துக்கு முன்னர் உணவு அருந்துதல், காபி, சோடா, பாட்டிலில் உள்ள குளிர்பானங்கள், முட்டைக்கோஸ், வேர்க்கடலை, பூண்டு, பச்சை வெங்காயம், கொழுப்பு அல்லது வறுத்த உணவுகள் ஆகியவற்றை தவிர்த்தல் வேண்டும். உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.

    • ஆஸ்துமா சுவாசத்தை கடினமாக்குகிறது.
    • நுரையீரலுக்கு செல்லும் சுவாசப்பாதையில் உண்டாகும் அழற்சி ஆஸ்துமா.

    ஆஸ்துமா என்பது நுரையீரலுக்கு செல்லும் சுவாசப்பாதையில் உண்டாகும் அழற்சி நோயாகும். இது சுவாசத்தை கடினமாக்குகிறது. ஆஸ்துமாவை பற்றி நீங்கள் தெரிந்துகொள்வதற்கு முன்பு சுவாசிக்கும் பாதையில் என்ன நடக்கிறது என்பதை அறிவது அவசியம்.


    சுவாசத்தில் காற்று உங்கள் மூக்கு அல்லது வாய் வழியாக, உங்கள் தொண்டைக்குள் மற்றும் உங்கள் காற்றுப்பாதைக்குள் சென்று இறுதியில் நுரையீரலுக்கு செல்கிறது.

    நுரையீரலில் ஏராளமான காற்றுப்பாதைகள் உள்ளன அவை காற்றில் இருந்து ரத்த ஓட்டத்திற்கு தேவையான ஆக்சிஜனை வழங்குகின்றன. காற்றுப்பாதைகளில் புறணி வீங்கி அவற்றை சுற்றியுள்ள தசைகள் இறுக்கமடையும் போது ஆஸ்துமா அறிகுறிகள் உண்டாகின்றன. சளி காற்றுப்பாதைகளை அடைத்து காற்று உள் செல்லும் அளவை குறைக்கிறது.


    ஆஸ்துமாவே இல்லாமல் செய்ய முடியுமா என்றால் கண்டிப்பாக முடியாது. ஆனால் அதை கட்டுப்படுத்தி வைக்கலாம். ஆஸ்துமாவை தூண்டும் காரணங்களிலிருந்து தள்ளி இருக்கலாம்.


    அறிகுறிகள்

    ஆஸ்துமாவின் பொதுவான அறிகுறி மூச்சுத்திணறல் ஆகும். இது நீங்கள் சுவாசிக்கும் போது ஏற்படும் சத்தம் அல்லது விசில் சத்தம் என்று கூறலாம்.

    * இருமல் குறிப்பாக இரவில்

    * சிரிக்கும் போது அல்லது உடற்பயிற்சியின் போது மார்பில் இறுக்கம்

    * மூச்சுத்திணறல்

    * பேசுவதில் சிரமம்

    * கவலை அல்லது பீதி

    * சோர்வு

    * நெஞ்சு வலி

    * விரைவான சுவாசம்

    * அடிக்கடி தொற்று

    * தூங்குவதில் சிரமம்

    • நரம்புத்தளர்ச்சிக்குத் தேனைவிட சிறந்த மருந்து இல்லை.
    • சுவாசத்தொல்லை போன்றவைகளுக்கு தேன் மிகவும் நல்லது.

    * உணவு உண்பதற்கு இரண்டுமணி நேரத்திற்கு முன்பு இரண்டு ஸ்பூன் தேன் அருந்த வேண்டும். இவ்வாறு 10 தினங்கள் தொடர்ந்து செய்து வந்தால் குடல்புண்கள் ஆறிவிடும்.


    * கடுமையான வயிற்றுவலி, உள்ளவர்கள் கொதிக்கும் தண்ணீர் ஒரு கப் எடுத்து அதனுடன் ஒரு டீஸ்பூன் தேனை கலந்து ஆற்றவேண்டும். குடிப்பதற்கு போதுமான அளவு சூட்டுடன் அந்த நீரை குடிக்க வேண்டும். இவ்வாறு குடிப்பதனால் வயிற்றுவலி, நின்றுவிடும், ஜீரணக்கோளாறுகளும் குணமாகும்.

    * வயிற்றில் எரிச்சல், வயிற்றில் இரைச்சல் இருந்தால் உணவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு இரண்டு டீஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து சில நாட்களுக்கு அருந்தினால் வயிற்றில் ஏற்படும் எரிச்சல், இரைச்சல் ஆகியவை குணமாகிவிடும்.


    * இஞ்சியை சிறு துண்டுகளாக வெட்டி ஒரு பாத்திரத்தில் போட்டு அடுப்பில் வைத்து சிவக்கும்படி வறுக்கவேண்டும். அதில் ஒரு கப் நீரையும், இரண்டு ஸ்பூன் தேனையும் கலந்து காய்ச்சவேண்டும். சுண்டக்காய்ந்ததும் இறக்கி வடிகட்டி அருந்த வேண்டும். இப்படி இருவேளை அருந்தினால் செரிமானம் ஆகாமையால் ஏற்பட்ட பேதி நின்றுவிடும்.

    * ஒரு டீஸ்பூன் மிளகை தூள் செய்து மெல்லிய துணியில் சலித்துக்கொள்ள வேண்டும். அதில் அரை டீஸ்பூன் தூள் எடுத்து அதனுடன் தேன் கலந்து உட்கொள்ளவேண்டும். செரிமாக்கோளாறுகளால் ஏற்பட்ட வயிற்றுநோய் குணமாகும்.


    * அகத்திக்கீரையைக் காம்பு நீக்கி ஆய்ந்தெடுத்து ஆவியில் வேகவைக்கவேண்டும். அதை சாறுபிழிந்து எடுத்து அதனுடன் தேன் கலந்து அருந்தினால் எல்லாவித வயிற்றுக்கோளாறுகளும் குணமாகும்.

    * ஆலமரத்திலிருந்து ஒரு ஸ்பூன் பால் எடுத்து அதில் 1 ஸ்பூன் தேன் கலந்து அருந்த வேண்டும். இவ்வாறு அருந்தினால் வயிற்றிலுள்ள புழுக்கள் வெளியேறும், வயிற்றுப் புண்களும் குணமாகும்.

    * குப்பை மேனி செடியின் வேரை இடித்து கஷாயமாக்க வேண்டும். அந்த கஷாயத்தில் 30 மில்லி எடுத்து அதனுடன் சிறிது தேன் கலந்து அருந்தினால் வயிற்றுப் புழுக்கள் வெளியாகும்.

    * பத்து கொன்றை மரப்பூக்களை 100 மில்லி பசும்பாலில் இட்டு காய்ச்சி பூ நன்றாக வெந்ததும் வடிகட்டி அதனுடன் 1 டீஸ்பூன் தேன் கலந்து அருந்தலாம். இதனால் வயிற்றுக்கோளாறுகள், வயிற்றுப்புண், குடற்புண் ஆகியன குணமாகும்.

    * சீதளபேதியை குணப்படுத்த 100 மில்லி ஆட்டுபாலை ஒரு டீஸ்பூன் தேன் கலந்து அருந்தவேண்டும். 1 டம்ளர் வெந்நீரில் 1 ஸ்பூன் தேன் கலந்து பின்பு அதில் அரை எலுமிச்சை பழ சாற்றையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கும்.

    நுரையீரலில் சேர்ந்துள்ள சளி எல்லாம் கண் காணாத இடத்திற்கு ஓடிவிடும். குடல் மற்றும் வயிற்றுக்கோளாறுகள் நீங்கிவிடும். குளிர்ச்சியால் ஏற்படும் எல்லா வியாதிகளையும் உடல் எதிர்த்து நின்று தடுத்துவிடும்.

    இதய பாதிப்புகள் நீங்கி இதயம் பலம் பெறும். புதிய இரத்தம் உடம்பில் பாய்ந்தோடும் அதிகாலையிலும், படுக்கச்செல்வதற்கு முன்பும் பருகவேண்டும்.


    * நெல்லிக்காய்களைத் துண்டு துண்டாக்கி தேன், ஏலக்காய், ரோஜா இதழ்கள் சேர்த்து இரண்டு நாட்கள் வெயிலில் காயவைக்க வேண்டும். பின்பு 1 ஸ்பூன் வீதம் காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகிவிடும்.

    * என்றும் இளமையுடன் இருக்க வேண்டுமென விரும்புவோர் தினமும் தேனை அருந்த வேண்டும். 40 வயதை கடந்தவர்கள் தினமும் தேனை அருந்தலாம். ஒரு டீஸ்பூன் தேனை சாப்பிட்டு வந்தால் அரை மணி நேரத்தில் நரம்புகள் சுறுசுறுப்புடன் திகழும்.


    * சிலருக்கு கை, கால்கள், விரல்கள், மற்றும் உடல் நடுங்க ஆரம்பிக்கும் இவர்கள் தினமும் ஒரு டம்ளர் பாலில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நிச்சயம் குணம் காண்பார்கள்.

    * ஒரு மேஜைக்கரண்டி தேனை இரவில் படுக்கும் போது உண்டு வந்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை மாறும்.

    * நரம்புத்தளர்ச்சிக்குத் தேனைவிட சிறந்த மருந்து இல்லை.

    * தேனை துளசி சாறில் கலந்து உபயோகிப்பது சளி தொண்டை வீக்கம், பிராங்டீஸ் எனப்படும் சுவாசத்தொல்லை போன்றவைகளுக்கு மிகவும் நல்லது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உணவை உண்பதற்கும், பேசுவதற்கும் பயன்படுகிறது.
    • உமிழ்நீர் சுரக்க இனிப்பு உதவுகிறது.

    எச்சில் என்பது வாயில் ஊறும் உமிழ்நீர். அது உணவை செரிப்பதற்கும், வாயின் உள் பகுதியையும், தொண்டைக் குழியையும் ஈரப்பதமாக வைத்திருப்பதற்கும் உதவுகிறது.

    உடல் என்னும் வீட்டில் இருக்கும் ஒன்பது வாசல்களில் வாயும் ஒன்று. இது உணவை உண்பதற்கும், பேசுவதற்கும் பயன்படுகிறது. உமிழ்நீரை வெளியில் துப்புதல் ஆகாது என சித்தர்கள் முதல் தற்கால மருத்துவர்கள் வரை கூறுகின்றனர்.


    புளிப்பு, இனிப்பு இவற்றின் சுவையை உணர்ந்தால் வாயில் உமிழ்நீர் தானாக ஊறும். அதுபோல் உடலுக்கு ஒவ்வாமை ஏற்படுத்துகின்ற உணவுகளை சாப்பிட்டாலும் உமிழ்நீர் அதிகம் சுரக்கும். இதனாலேயே முதலில் இனிப்பை நம் பண்டைய உணவு முறைகளில் சாப்பிட வைத்தார்கள்.

    உமிழ்நீர் சுரக்க இனிப்பு உதவுகிறது என்ற நம் உணவுமுறை இன்று மாறி டெசர்ட் என்று கடைசியில் உணவு என்று மாற்றி தலைகீழாக பழக்கப்படுத்துகிறோம்.


    உடலில் உமிழ்நீர் சுரப்பிகள் மூன்று வகைகள் உள்ளன.

    பரோடிட் சுரப்பி:

    இது காதுகளுக்குக் கீழே அமைந்துள்ளது. இதன் நாளங்கள் வழியாக கன்னங்களின் உட்புறம் இரண்டு மேல் கடவாய் பற்களுக்கு மேல் இந்த சுரப்பு நாளங்களின் துவாரங்கள் உள்ளன. இந்த நாளங்களுக்கு ஸ்டென்சன்ஸ் நாளங்கள் என்று பெயர். இது மனித உடலில் நீர் வறட்சி ஏற்படும்போதெல்லாம் அதிகம் சுரந்து வறட்சியைக் குறைக்கிறது.

    சப்மாண்டிபுலர் சுரப்பி:

    இது பரோடிட் சுரப்பிகளுக்குக் கீழே அமைந்துள்ளது. இதன் நாளங்கள் நாக்கின் அடிப் பகுதியில் துவாரங்களாக அமைந்துள்ளன.

    சப்லிங்குவில் சுரப்பி

    கன்னங்களின் உள்ளே இரண்டு பக்கங்களிலும் அமைந்துள்ளன. இதன் துவாரங்கள் வாய் முழுவதும் அமைந்துள்ளன.


    உமிழ்நீரின் தன்மைகள்:

    உமிழ்நீர் காரத்தன்மை கொண்டது. இது அதிக என்சைம்களைக் கொண்டது. இதில் ஆண்டிபயாடிக் அதிகம் உள்ளது. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன.

    உமிழ்நீர் சராசரியாக ஒரு மனிதனுக்கு 1500 மி.லி. அளவு சுரக்கிறது. இந்த அளவு உண்ணும் உணவின் அளவைப் பொறுத்தும் மன எண்ணத்திற்கும் ஏற்றவாறு மாறுபடுகிறது. உமிழ் நீரின் முக்கிய பணி ஜீரணமாக்குவது.

    நொறுங்கத் தின்றால் நூறு வயது என்பது பழமொழி. நொறுங்க என்பது நன்றாக மென்று என்று பொருள். உணவை நன்கு மென்று சாப்பிட்டால் நோயின்றி நூறுவயதுக்கு மேல் வாழலாம் என்று கூறுகின்றனர்.

    உணவை மெல்லும்போது உமிழ்நீர் உணவுடன் நன்கு கலந்து அதில் உள்ள என்சைம்கள் உணவின் நச்சுத்தன்மையைப் போக்கி உணவுக் குழலுக்குச் செல்ல ஏதுவாகிறது.


    மேலும் இதில் கலந்துள்ள நொதி பித்தத்துடன் சேர்ந்து உணவை எளிதில் ஜீரணிக்க உதவுகிறது. பொதுவாகவே அஜீரணம், வாந்தி, தலைச்சுற்றல் உண்டானால் கூட உமிழ்நீர்தான் அதிகம் சுரந்து உடலை சீர்படுத்துகிறது.

    வாய்ப்புண்ணை ஆற்ற உதவுவதும் உமிழ்நீர்தான். உமிழ்நீர் சுரப்பியின் அளவு குறைந்தாலும், அதிகரித்தாலும் கடினத் தன்மை அடைந்தாலும் அது நோயின் அறிகுறியாகும்.

    சிலர் பாக்கு புகையிலை மற்றும் போதை வஸ்துக்களை உபயோகிப்பார்கள். அது உமிழ்நீருடன் சேர்த்து விஷநீராகி உடலைக் கெடுக்கிறது.

    மதக் கோட்பாடுகளில் விரதம் இருக்கும் காலங்களில் உமிழ்நீரை விழுங்காமல் வெளியே துப்பிவிடுவார்கள். இந்த உமிழ்நீரானது உள்ளே சென்றால் அதிகமாக பசியைத் தூண்டும் என்ற காரணத்தால் விரத காலங்களில் உமிழ்நீரை விழுங்குவதில்லை.

    இனியாவது போதை வஸ்த்துகளை வாயில் போட்டு மென்று, உமிழ்நீரை விஷநீராக மாற்றாமல், உடலை பாதுகாக்கும் அமிர்த நீராக மாற்றி உடலை பேணிக்காப்போம்.

    • உடலிலும், மனதிலும் மந்த தன்மையை உருவாக்குகிறது.
    • மதுபானங்களை தொடர்ந்து அருந்தும் ஒருவருக்கு மறதி ஏற்படும்.

    உலக அளவில் லட்சக்கணக்கான மக்கள் இறப்புக்கு மதுபானம் அருந்துவது காரணமாக உள்ளது. புள்ளி விவரப்படி அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் 88 ஆயிரத்திற்கும் அதிகமானோர் மதுபானங்கள் ஏற்படுத்தும் நோய்களால் இறக்கின்றனர்.

    மேலும் 1½ கோடி பேர் ஆல்கஹால் பாதிப்புகளால் ஏற்படும் நோய்களால் பாதிக்கப்படுகின்றனர் என தெரியவந்துள்ளது.


    பொதுவாக, மதுபானங்களுக்கு அடிமையாவது மனித ஆற்றலை அழிக்கிறது. சமூகத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு மது காரணமாக இருக்கிறது என்பது பொதுவான குற்றச்சாட்டு.

    குடிப்பழக்கம் குடும்பங்களில் பொருளாதார இழப்பை ஏற்படுத்துவதுடன் மகிழ்ச்சிகரமான குடும்ப சூழலை அழிக்கிறது.

    தனி மனிதர்களை பொறுத்தவரை தொடர்ச்சியாக மது அருந்தும் ஒருவருக்கு மன குழப்பம், சோர்வு, எதிலும் நாட்டமின்மை, மன அழுத்தம் ஆகியவை நிரந்தரமாக உருவாகி விடுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    தொடர்ந்து மது குடிப்பதால் மூளையின் ஆற்றல் சிதைந்து சிந்திக்கும் திறன் மற்றும் முடிவுகள் எடுக்கும் திறன் குறைந்து போவதாக கண்டறியப்பட்டுள்ளது.

    ஆல்கஹால் பொதுவாக மூளை மற்றும் உடலை பலவீனமாக்கி உடலிலும், மனதிலும் மந்த தன்மையை உருவாக்குகிறது. இதற்கு காரணம், ஆல்கஹால் மூளை செல்கள் புதிதாக உருவாவதை தடுப்பது தான்.


    மதுபானங்களை தொடர்ந்து அருந்தும் ஒருவருக்கு மறதி ஏற்படும். சமீபத்திய சம்பவங்களை கூட மீண்டும் நினைவுக்கு கொண்டு வருவதில் சிக்கல் ஏற்படும். நன்கு தெரிந்தவர்கள் பெயர் கூட மறந்து போவதும், தேவையில்லாத பழைய சம்பவங்கள் நினைவுக்கு வந்து குழப்பமான மனநிலையை உருவாக்கும்.

    மதுபானத்தால் மற்ற உறுப்புகளை விட மூளை மிக கடுமையாக பாதிக்கப்படும் போது அது மூளை தேய்மான பாதிப்பாக உருவெடுக்கிறது. இது அன்றாட வாழ்வில் பல பிரச்சனைகளை உருவாக்கி வேலை இழப்பு உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உடல் உழைப்பு இல்லாமல் இருந்தால் இதய நோய் ஏற்படும் அபாயம் இருக்கும்.
    • ஒரு நாளைக்கு 10.6 மணி நேரம் அமர்ந்திருப்பவர்களுக்கு இதயநோய் அபாயம்.

    மணிக்கணக்காக அமர்ந்து இருக்கிகிறீர்களா? அதிலும் வருகிறது ஆபத்து

    சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், நீண்ட நேரம் உட்கார்ந்து குறைந்த ஆற்றல் கொண்ட செயல்களைச் செய்பவர்கள் இதய செயலிழப்பு மற்றும் இதய நோயால் இறக்கும் அபாயத்தை அதிகரிப்பதாகக் கண்டறிந்துள்ளனர்.


    அதிக நேரம் உட்கார்ந்திருப்பவர்களின் மாதிரியில் இதய நோய் அபாயத்தைக் குறைக்க தீவிரமான உடற்பயிற்சி போதுமானதாக இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

    உடற்பயிற்சி மற்றும் உடல் உழைப்பு இல்லாமல் நீண்ட நேரம் செலவிட்டால் இதய நோய் ஏற்படும் அபாயம் அப்படியே இருக்கும்.

    உட்காரும் நேரத்திற்கும் எதிர்காலத்தில் மாரடைப்பு ஏற்படும் அபாயத்திற்கும் உள்ள தொடர்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன.


    நீண்ட நேரம் அமர்ந்திருப்பவர்களுக்கு மாரடைப்பு மற்றும் இதய நோயால் மரணம் ஏற்படும் அபாயம் அதிகம் என கண்டறியப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 10.6 மணி நேரம் அமர்ந்திருப்பவர்களுக்கு இதய செயலிழப்பு மற்றும் இதய நோயால் மரணம் ஏற்படும் அபாயம் 40 முதல் 60 சதவீதம் அதிகம்.

    எனவே பகலில் உட்காருவதைக் குறைத்து. அதிக நேரம் சுறுசுறுப்பாக இருக்க முயற்சி செய்ய வேண்டும். அதிகமாக உட்காருவது ஆபத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • விழி வெண்படல அழற்சி பச்சிளம் குழந்தைகள் முதல் அனைவரையும் பாதிக்கிறது.
    • சரியாக கவனிக்கப்படாவிட்டால் ஒருவாரம் முதல் பத்து நாட்கள் வரை இருக்கும்.

    கண் நோய் என அழைக்கப்படும் விழி வெண்படல அழற்சி பொதுவாக பச்சிளம் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் பாதிக்கிறது.

    வைரஸ் அல்லது பாக்டீரியாக்களால் உருவாக்கப்படும் இது குழந்தைகளைப் பரவலாக பாதிக்கிறது. கண்ணின் வெள்ளைப் பகுதியில் தோன்றும் இந்த பாதிப்பு, கண்ணையும் இமைகளையும் கலங்கிய வண்ணம் ஈரப்பதத்துடன் வைக்கிறது.

    இது ஆபத்தான ஒன்று இல்லையென்றாலும், சரியாக கவனிக்கப்படாவிட்டால் ஒருவாரம் முதல் பத்து நாட்கள் வரை தொந்தரவு தரக்கூடியது.


    * வில்வம் மரத்தின் இளம் தளிரை வதக்கி இளஞ்சூட்டில் கண்ணில் ஒத்தடம் கொடுத்து வந்தால் கண்வலி குறையும்.

    * ஒரு தூய்மையான துணியை எடுத்து குளிர்ந்த நீரில் (ஐஸ் வாட்டர்) நனைத்து லேசாக பிழிந்து அதனை கண்ணின் மீது போடுங்கள். இதை மாற்றி மாற்றி செய்து வாருங்கள். அவ்வப்போது துணியையும் நீரையும் மாற்றுங்கள்.

    * கருவேலம் கொழுந்து இலையுடன் சீரகத்தை சோ்த்து அரைத்து வலியுள்ள கண்ணை மூடச்செய்து அதன்மேல் வைத்து பின்பு ஒரு வெற்றிலையை அதன்மேல் வைத்து சுத்தமான துணியால் கட்டிவிடவேண்டும். இரவில் கட்டி காலையில் அவிழ்த்து விடவேண்டும். இவ்வாறு மூன்று நாட்கள் செய்து வந்தால் கண்வலி குறையும்.

    * கை நிறைய உலர்ந்த கொத்தமல்லியை எடுத்து நீரில் கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அதனை வடிகட்டி குளிர வைக்க வேண்டும். பின்னர் இந்த நீரால் கண்ணை நன்கு கழுவி அழுத்தம் கொடுக்க வேண்டும். இது எரிச்சலையும், வலி மற்றும் வீக்கத்தையும் குறைக்க வல்லது.

    * அருகம்புல் சமூலம், மிளகு, சீரகம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து இடித்து ஒரு லிட்டர் நல்லெண்ணெயில் போட்டு 15 நாட்கள் வெயிலில் வைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்நோய்கள் குறையும்.

    * பன்னீரில் மரமஞ்சள், மஞ்சள் மற்றும் படிகாரம் ஆகியவற்றை கலந்து இரவு ஊற வைத்து காலையில் வடிகட்டி அந்த நீரை கொண்டு முகம், கண்கள் ஆகியவற்றை கழுவி வந்தால் கண்ணில் ஏற்படும் கட்டிகள் குறைந்து கண் சிவப்பு, கண் வலி ஆகியவை குறையும்.


    * புளியம்பூவை அரைத்து கண்ணை சுற்றி பற்று போட்டால் கண்வலி, கண்ணில் ஏற்படும் சிவப்பு குறையும்.

    * ஒரு ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை நீரில் கலக்கவும். இதனை சிறிது பஞ்சில் நனைத்து கண்களைக் கழுவவும். மதர் எனப்படும் மாலிக் ஆசிட் கொண்டுள்ள ஆப்பிள் சீடர் வினிகர் பாக்டீரியத் தொற்றுக்களுடன் போராட வல்லது.

    * செண்பகப்பூ, அதிமதுரம், ஏலக்காய்,குங்குமப்பூ ஆகியவற்றை தண்ணீர் விட்டு அரைத்து கண் இமைகளின் மேலும், கீழும் பற்றுப்போட்டு ஒரு மணி நேரம் கழித்து குளிந்த நீரில் கழுவ கண் சிவப்பு குறையும்.

    • இயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு தற்காப்பு செயல்தான் சளி பிடிப்பது.
    • சளிக்கு நிறமும் நாற்றமும் உண்டு.

    நமது நெஞ்சுப் பகுதியிலுள்ள சுவாசக்குழாயிலும், நுரையீரல் பகுதியிலும் உருவாகும் ஒரு கெட்டியான ஜெல் போன்ற திரவம் சளி ஆகும். மருத்துவ ரீதியாக நோயைத் தடுக்க உடலில் இயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு தற்காப்பு செயல்தான் சளி பிடிப்பது.


    சளி சிலருக்கு வெறும் தண்ணீர் ஊற்றுவது மாதிரி மூக்கின் வழியாக வெளியே வரும். சிலருக்கு கெட்டியாக இருமும் போது வாய் வழியாக வெளியே வரும். சளிக்கு நிறமும் நாற்றமும் உண்டு. இந்த நிறத்தையும் நாற்றத்தையும் வைத்தே உடலில் என்ன நோய் ஏற்பட்டிருக்கிறது என்பதை ஓரளவு கண்டுபிடித்துவிடலாம்.

    சளி திரவ வடிவில் மூக்கு வழியாக வெளியேறினால் இரண்டொரு நாட்கள் இருந்துவிட்டு பின் சரியாகிவிடும். ஆனால் சளி நிறம் மாறி கெட்டியாக வாய் வழியாகவும் மூக்கு வழியாகவும் வெளியேறினால் சுவாச மண்டலத்தில் அதாவது நுரையீரலில் நோய் இருக்கிறது என்பதற்கான அறிகுறியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

    ஒருவருக்கு சளி பிடித்திருக்கிறது என்றால் அவரது குரல் மாறி தொண்டை கட்டிவிடும். வாய் கசப்பு, குமட்டல் இருக்கும். லேசான மூச்சுத்திணறல், தொண்டையை அடிக்கடி செருமி சரிசெய்யும் நிலை ஏற்படும். இவ்வளவு பிரச்சினைகளும் ஒன்றன்பின் ஒன்றாக வந்தால் கண்டிப்பாக காய்ச்சல் இருக்கும்.

    எனவே சளிதானே பிடித்திருக்கிறது என்று மூக்கைச் சீந்திவிட்டு துண்டில் துடைத்து விட்டு அவ்வளவுதான் என்று நினைக்காதீர்கள். உடனே உங்கள் குடும்ப மருத்துவரை சந்தித்து சளி, காய்ச்சல் ஏற்படுவதற்குண்டான காரணம் என்ன என்று கண்டுபிடியுங்கள்.


    வெறும் இருமல் என்றால் உங்களது நுரையீரலுக்குள் தேவையில்லாமல் தெரியாமல் நுழைந்த அந்நியப் பொருட்களை வெளியே தள்ள செய்யப்படும் முயற்சியே இருமல் ஆகும். ஆனால் சளியுடன் இருமல் இருந்தால் அது நோயாகும்.


    சளி பிடிக்காமல் இருக்க செய்யவேண்டியவை:

    * புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தால் அதை உடனே நிறுத்துங்கள். மாசு, தூசி ஆகியவற்றில் நிற்காதீர்கள். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள். தினமும் மூச்சுப்பயிற்சி, நடைப்பயிற்சி, நீச்சல் முதலியவைகளை செய்யுங்கள். அடிக்கடி வெந்நீர் குடியுங்கள்.

    * 2 வாரத்துக்கு மேல் இருமல் இருந்தாலோ, சளியின் நிறம் மாறி இருந்தாலோ, சளியுடன் காய்ச்சல் இருந்தாலோ, மூச்சுத் திணறல் இருந்தாலோ, மூச்சு விடுவதில் சிரமம் இருந்தாலோ, உடனே நுரையீரல் நோய் சிகிச்சை நிபுணரைச் சந்திக்கவும்.


    * நிறமற்ற வெறும் சளி துப்புவது ஆபத்தல்ல. நிறம் மாறிய சளி துப்புவது ஆபத்தானது. உடனடி கவனம் தேவை.

    • மனச்சோர்வை நீக்கி தன்னம்பிக்கையை தூண்டும்.
    • தாம்பத்தியத்தின் போது எண்டோர்பின்கள் இயற்கையாக வெளியிடப்படுகிறது.

    எண்டோர்பின்கள் மூளையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பி மற்றும் ஹைபோதாலமஸால் வெளியிடப்படும் நரம்பியக்க கடத்திகள் ஆகும். இது இயற்கை ஹார்மோன்களாக செயல்பட்டு வலி, மன அழுத்தத்தைக் குறைக்கவும், மனநிலையை மேம்படுத்தி, மகிழ்ச்சியை அதிகரிக்கவும் செய்கிறது.


    உடற்பயிற்சி, தாம்பத்தியம் போன்ற செயல்களைச் செய்யும்போது உடல் எண்டோர்பின்களை வெளியிடுகிறது. மனித உடல் 20 வகையான எண்டோர்பின்களை உற்பத்தி செய்கிறது.

    ஒவ்வொன்றும் குறிப்பிட்ட செயல்பாடுகளுடன் தொடர்புடையது. இவற்றில் பீட்டா எண்டோர்பின்கள் வலிமையான மன அழுத்த நீக்கியாகவும், வலி நிவாரணிகளாகவும் தனித்து செயல்படுகின்றன. இவை இயற்கையாகவே வலியைத் தாங்குவதற்கும், மகிழ்ச்சியான உணர்வு ஏற்படவும் உதவுகிறது.


    எண்டோர்பின் தரும் நன்மைகள்

    மனச்சோர்வை நீக்கி தன்னம்பிக்கையை தூண்டும், அன்பை மேம்படுத்தும். பிரசவத்தின் போது ஏற்படுகின்ற வலியை கட்டுப்படுத்த உதவுகிறது.

    ஆரோக்கியமான எடையை பராமரிக்க, பசியை கட்டுப்படுத்த உதவுகிறது. இயற்கையாக நாம் வலியை தவிர்ப்பதற்கும், நம்மை நன்றாக உணர வைப்பதற்கும் மூளையில் நரம்பு சமிக்ஞைகள் மூலமாக உதவுகிறது.


    எண்டோர்பின்களை அதிகரிப்பது எப்படி?

    உடற்பயிற்சி, நடத்தல், ஓடுதல், நீச்சல், நடனம், சைக்கிளிங், தியானம், ஆழ்ந்த சுவாசம் ஆகியவை எண்டோர்பின் உற்பத்தியை அதிகரிக்கிறது.

    நன்றாக சிரிப்பது, இசை கேட்பது போன்றவை எண்டோர்பின்களை வெளியிடுவதோடு செரட்டோனின் மற்றும் டோப்போமின் சுரக்கும் அளவையும் அதிகரிக்கிறது.

    காரமான உணவுகளில் உள்ள கேப்சின் மூளையை தூண்டி எண்டோர்பின்களை வெளியிட உதவுகிறது.

    நறுமண எண்ணெய்களான லாவண்டர், ரோஸ்மேரி, சிட்ரஸ், ரோஸ், இவைகளின் வாசனை எண்டோர்பின் வெளியீட்டை தூண்டும்.

    சூரியக்கதிரில் உள்ள புற ஊதா ஒளி தோலில் பீட்டா எண்டோர்பின் வெளியீட்டை தூண்டும். தாம்பத்தியத்தின் போது எண்டோர்பின்கள் இயற்கையாக வெளியிடப்படுகிறது.


    உணவு மற்றும் சித்த மருத்துவம்

    டார்க் சாக்லெட், வால்நட், காபி, சிட்ரஸ் பழங்கள், பால் பொருட்கள் போன்றவை எண்டோர்பின் சுரப்பை அதிகரிக்கிறது.

    இந்தியன் ஜின்செங் என்று அழைக்கப்படும் அமுக்கிரா கிழங்கு பொடியை பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் எண்டோர்பின் சுரப்பது அதிகரிக்கும்.

    சதாவரிக் கிழங்கு பொடி, மதன காமப் பூ பொடி, நிலப்பனைக்கிழங்கு பொடி ஆகியவற்றை சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிட்டு வந்தால் பலன் பெறலாம்.

    உடலில் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்யும் போது இயல்பாகவே எண்டோர்பின் உற்பத்தி அதிகரிக்கும்.

    ×