என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    • கால் விரல் இடுக்குகளில் புண்கள் ஏற்பட்டு அரிப்பு அதிகமாக இருக்கும்.
    • நடக்க முடியாத அளவிற்கு துன்பம் ஏற்படும்.

    'சேற்றுப்புண்' தண்ணீரில் இருக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் நுண் கிருமிகளின் மூலம் வரக்கூடியது. சேற்றுப் புண்ணை சாதாரணமாக நினைத்து அலட்சியப்படுத்தி விட்டால் அது மேலும் அதிகமாகி வலியை உண்டாக்கி விடும். கால் விரல் இடுக்குகளில் புண்கள் ஏற்பட்டு அரிப்பு அதிகமாக இருக்கும். இதனால் நடக்க முடியாத அளவிற்கு துன்பம் ஏற்படும். குறிப்பாக சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு சேற்றுப்புண் வந்தால் விரைவில் ஆறவே செய்யாது என்பதால் அவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வீட்டில் இருக்கும் இந்த இரண்டு பொருட்களை கொண்டு ஒரே நாளில் சேற்றுப்புண் பிரச்சனையிலிருந்து நிவாரணம் காண முடியும்.

    ஈரப்பதமான இடங்களில் அதிக நேரம் நின்று கொண்டு வேலை செய்வதும், அழுக்கு படிந்த நீரில் காலை வைத்து நடந்து செல்வதும் சேற்றுப்புண் வர காரணமாக அமைகிறது. விரல் இடுக்குகளில் இருக்கும் பகுதியில் அரிப்பையும், எரிச்சலையும் உண்டாக்கும். இதனை அப்படியே கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால் நாளடைவில் மற்ற கால் விரல்களுக்கும் பரவி அதிகமாகிவிடும். இதனால் ஆரம்பத்திலேயே கவனித்துக் கொள்வது நல்லது.

    இது சேற்றுப்புண் அல்லது 'அத்தலட்ஸ்' புண் என்று அழைக்கப்படும் 'டீனியா பெடிஸ்' என்னும் பூஞ்சை வகை நோய். இது வயல்களில் வேலை செய்பவர்கள் மற்றும் மழைக்காலங்களில் செருப்பு இல்லாமல் நடப்பவர்களுக்கு அதிகமாக வரும். கால் விரல் இடுக்குகளில் வெளுத்த நிறமுடைய புண் ஏற்பட்டு அரிப்பு, தினவு அதிகமாக இருக்கும். சொரிந்த பிறகு எரிச்சல் காணப்படும்.

    இதற்கான சித்த மருந்துகள்:

    1) பறங்கிப்பட்டை சூரணம் ஒரு கிராம், கந்தக பற்பம் 200 மி.கி., சிவனார் அமிர்தம் 200 மி.கி., பலகரை பற்பம் 200 மி.கி. வீதம் காலை, இரவு இருவேளை சாப்பிட வேண்டும்.

    2) சேற்றுப் புண் உள்ள பகுதிகளில் அமிர்த மெழுகு, கிளிஞ்சல் மெழுகு, வங்க வெண்ணெய் இவைகளில் ஒன்றைப்பூசி வர வேண்டும்.

    3) கடுக்காய், மாசிக்காய், தான்றிக்காய் போன்ற துவர்ப்புள்ள பொடிகளால் புண்ணைக்கழுவி வர வேண்டும். 4) புண்ணைக் கழுவுவதற்கு புளியந்தளிர் அவித்த நீர், படிகார நீர், வேப்பந்தளிர் அவித்த நீரையும் பயன்படுத்தலாம்.

    5) கால்களை காலை, இரவு வெந்நீரில் கழுவி சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

    சித்த மருத்துவ   நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    • 40-50 வயதை கடந்த பெண்களும், ஆண்களும் அதிகப்படியாகவே அவதிப்பட்டு வருகின்றனர்.
    • மூட்டு தேய்மானத்தில் நான்கு நிலைகள் உள்ளன.

    இன்றைய காலக்கட்டத்தில் அவசர உலகத்தில் இயந்திர தனமாக அனைவரும் ஓடிக் கொண்டே பூமியை விட வேகமாக சுழன்று கொண்டிருக்கின்றோம். இந்நிலையில் நாம் நிற்க நடக்க, உட்கார வேலை செய்ய வாகனங்களை இயக்க என எல்லா விதத்திலும் நமக்கு கால்கள் மிகவும் அவசியம். அவ்விதத்தில் முழங்கால் மூட்டு வலி (Knee Pain) என்பது அனைவருக்கும் தவிர்க்க முடியாத ஒரு பிரச்சினையாக உள்ளது. அதிலும் 40-50 வயதை கடந்த பெண்களும், ஆண்களும் சற்று அதிகப்படியாகவே அவதிப்பட்டு வருகின்றனர்.

    மூட்டு தேய்மானத்தை எவ்வாறு அறிந்து கொள்ளலாம்

    மூட்டு தேய்மானத்தில் நான்கு நிலைகள் உள்ளன. அதனை கதிர்வீச்சு (X-Ray) பரிசோதனை மூலமாகவே அறிந்து கொள்ளலாம். பாதிக்கப்பட்டவரின் மூட்டு தேய்மானம் எந்த நிலையில் உள்ளது என்பதை பொறுத்து சிகிச்சை முறைகள் மாறுபடும்.

    சிகிச்சை முறைகள்:

    மூட்டு தேய்மானத்தில் முதல் மற்றும் இரண்டாம் நிலையில் வலி நிவாரணி மாத்திரைகள், இயன்பயிற்சிகள், வாழ்கை முறை மாற்றத்தின் மூலமாகவே தீர்வு காணலாம். சில சமயங்களில் அறிகுறிகள் ஏதும் இல்லாமலே அடுத்தடுத்த மூட்டு தேய்மான நிலைகளுக்கு செல்லலாம். ஏன்பதனை தெரிந்து கொள்வது மிக அவசியம் எனவே மூட்டுகளில் ஏற்படும் வலிகளுக்கான காரணங்கள், உதாரணத்திற்கு தரையில் சம்மணமிட்டு அமர்வது, அடிக்கடி படிக்கட்டுகள் ஏறுவது, அதிக நேரம் நிற்பது அல்லது நடப்பது போன்ற அறிகுறிகள் ஏற்படும் பொழுது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

    மூன்றாவது நிலையில் உள்ள தேய்மானத்திற்கு மூட்டு பகுதியல் ஊசி (Intra articular injection), HTP (High Tibial Osteotomy) போன்ற சிகிச்சை முறைகள் மூலம் தீர்வு காணலாம். தற்சமயம் அதிநவீன சிகிச்சையாக Stem Cell Therapy (குருத்தணு) மிகவும் பயன் உள்ளதாக கருதப்படுகின்றது. Stem Cell Therapy (குருத்தணு) எனும் சிறப்பு சிகிச்சை பலரும் அறிந்திராத ஒன்று Stem Cell Therapy (குருத்தணு) என்பது இயற்கையாகவே இறந்த செல்களுக்கு பதிலாக புதிய செல்களை செலுத்துவதாகும். இதன் படி பாதிக்கப்பட்ட மூட்டு பகுதியில் புதிய செல்களை ஊசி மூலமாக பாதிக்கப்பட்ட இடத்தில் செலுத்தி (Regeneration) சரி செய்யும் எளிய முறையாகும். இந்த சிகிச்சை முறையில் வலி நிவாரணம் என்பது மிக குறுகிய காலத்தில் கிடைப்பதுடன் மிகவும் பாதுகாப்பானதாகவும், உடனடியாக நடக்கவும் இயலும். அதுமட்டுமின்றி, தழும்புகள் இன்றியும் மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியமும் இல்லை. அதிகப்படியான வலி நிவாரணி மாத்திரைகள் எடுப்பதையும் தவிர்க்கலாம்.

    இந்த சிகிச்சை முறையானது முக்கியமாக இளம் வயதினர் மற்றும் முழு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியாத சூழ்நிலையில் உள்ள வயது முதிர்ந்தவர்களுக்கும் இந்த சிகிச்சை மிகவும் பயன் உள்ளதாக அமைகிறது. இந்த குருத்தணு சிகிச்சை முறை முழங்கால் மூட்டிற்கு மட்டுமின்றி உடலில் மற்ற மூட்டு பகுதிகளுக்கும் ஜவ்வு பாதிப்பு (Cartilage Demage) தசை பாதிப்பு (Muscle Injury) போன்ற பிரச்சினைகளுக்கும் இதன் மூலம் தீர்வு காணலாம். நான்காவது நிலையில் உள்ள தேய்மானத்திற்கு இந்த சிகிச்சை முறைகள் எதுவும் பயனளிக்காத நிலையில் அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. இதில் முழு மூட்டு மாற்று அறுவை சிகிச்சையை பற்றி நாம் நன்றாக அறிந்திருப்போம். இந்த முழு மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் பாதிக்கப்பட்ட சிதைந்த மூட்டை மாற்றி செயற்கை உலோகம் பொருத்தி அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சை முறை மிகவும் வெற்றிகரமாகவும் சில வாரங்களிலேயே இயல்பு நிலைக்கு திரும்பலாம். மணிசுந்தரம் மருத்துவமனையில் அனைத்து விதமான எலும்புகள் தொடர்பான பிரச்சனைகளுக்கும் சிறப்பான மேம்பட்ட சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    மேலும் விவரங்களுக்கு: மணிசுந்தரம் மெடிக்கல் மிஷன், 0416-2256007, 2254007, செல்: 9994756090 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

    • 2030-ம் ஆண்டில் இந்தியாவின் மிக முக்கிய நோயாக இதய நோய்தான் உருவெடுக்குமாம்.
    • இதய நோய் வந்துவிட்டால் அதற்கு பைபாஸ் சர்ஜரிதான் இன்றிருக்கும் மிகச் சிறந்த சிகிச்சை.

    இந்தியாவில் இதயநோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அண்மைக்காலத்தில் பல மடங்கு அதிகரித்துள்ளது. 2030-ம் ஆண்டில் இந்தியாவின் மிக முக்கிய நோயாக இதய நோய்தான் உருவெடுக்குமாம். அப்போது, ஆண்களில் நோய்வாய்ப்பட்டு மரணம் அடைபவர்களில் 34 சதவிகிதம் பேரும், பெண்களில் 32 சதவிகிதம் பேரும் இதய நோயால் மரணம் அடைவார்கள் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

    மன அழுத்தம், அதிக அளவு கொலஸ்ட்ரால், உடற் பயிற்சி ஏதும் இல்லாத நிலை, நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், கூடுதல் எடை, புகைப் பழக்கம் மற்றும் மது அருந்துவதாலும் இதயம் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது.

    ''இதய நோய் வந்துவிட்டால் அதற்கு பைபாஸ் சர்ஜரிதான் இன்றிருக்கும் மிகச் சிறந்த சிகிச்சை. ஆனால், அப்படிப்பட்ட பைபாஸ் சர்ஜரியை தவிர்க்கலாம்... உணவுப் பழக்கத்தை மட்டும் கொஞ்சம் மாற்றிக் கொண்டால் போதும். இதய நோயை ஓட ஓட விரட்டி விடலாம்'' என்கிறார் அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவரான டீன் ஆர்னிஷ்.

    அமெரிக்க மருத்துவ அசோசியேஷனின் பத்திரிகையான 'ஜாமா'வில் இவரது விரிவான ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.

    ''இன்றைய தேதியில் இதய நோயைக் கட்டுப்படுத்தும் என்று அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட ஒரே உணவுக் கட்டுப்பாட்டுத் திட்டம் இதுதான்'' என்கிறார்கள் பிரபல மருத்துவர்கள்.

    ''பெரும்பாலானவர்களின் பரிந்துரை போல் நாங்கள் முற்றிலுமாக சைவத்துக்கு மாறச் சொல்வதில்லை. மீன் எண்ணெய் உள்ளிட்ட கொழுப்பற்ற அசைவத்தை அவ்வப்போது சேர்த்துக் கொள்ளச் சொல்கிறோம். சர்க்கரை, மதுபானம் உள்ளிட்டவற்றைக் கூட நிறுத்தச் சொல்லாமல் குறைத்துக் கொள்ளவே பரிந்துரைக் கிறோம்.

    70 முதல் 75 சதவீத கலோரியை கார்போஹைட்ரேட்ஸ் மூலமும் 15 முதல் 20 சதவீத கலோரியை புரோட்டீன்கள் மூலமும், பெறுவதே எங்கள் உணவுத் திட்டத்தின் நோக்கம். அதோடு கொஞ்சம் மனப் பயிற்சியும் அவசியம்'' என்கிறார் டாக்டர் டீன் ஆர்னிஷ்.

    இந்த உணவுத் திட்டத்தைப் பின்பற்றுபவர்களுக்கு இதயநோய் வராது என்பதோடு, மாரடைப்பின் விளிம்பு நிலையில் இருப்பவர்களைக் கூட மெல்ல மெல்ல குணமாக்கி, மாத்திரை கூடத் தேவைப்படாத நார்மல் மனிதர்களாக்கி விடுகிறதாம் இது.

    இன்று உலகம் முழுவதும் பிரபலமடைந்திருக்கும் இந்த உணவுத்திட்டத்தையும் மனப் பயிற்சியையும் டீன் உருவாக்கியது எப்படித் தெரியுமா? இந்தியாவைப் பார்த்துத்தான்.

    ''உலகின் மிக முக்கிய பிரச்சினைகளும், அதற்கான தீர்வுகளும் இந்தியாவில் இருந்தே தொடங்குகிறது. இந்தியர்களை அடிப்படையாக வைத்தே, இந்த பிரச் சினைக்கும் தீர்வு கண்டிருக்கிறோம்'' என்று டாக்டர் டீன் ஆர்னிஷே குறிப்பிட்டிருக்கிறார்.

    • பழங்களை எந்த வடிவத்தில் சாப்பிட்டாலும் அவை உடலுக்கு ஆரோக்கியம்தான்.
    • உலர்ந்த பழங்கள், பிரஷ் பழங்கள் இவற்றில் எது சிறந்தது என்பது குறித்து பார்ப்போம்.

    பழங்கள், உலர் பழங்கள் இவற்றில் எதை சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்ற குழப்பம் நிறைய பேருக்கு இருக்கிறது. பழங்களை எந்த வடிவத்தில் சாப்பிட்டாலும் அவை உடலுக்கு ஆரோக்கியம்தான். 'பிரஷ்ஷாக' கிடைக்கும் பழங்களில் நீர்ச்சத்து நிறைந்திருப்பதோடு அவை ஊட்டச்சத்துக்களாலும் நிரப்பப்பட்டிருக்கும். இருப்பினும் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் எவற்றில் அதிகமாக இருக்கிறதோ அதை சாப்பிடுவது சிறந்தது. உலர்ந்த பழங்கள், பிரஷ் பழங்கள் இவற்றில் எது சிறந்தது என்பது குறித்து பார்ப்போம்.

    வைட்டமின்கள்: பிரஷ் பழங்களில் ஏ, பி மற்றும் சி நிறைந்திருப்பதோடு அவை உடலில் நீரிழப்பை தடுக்கும் தன்மை கொண்டவை. உலர்ந்த பழங்களில் நீர்ச்சத்து இருக்காது. சில நேரங்களில் வெப்ப உணர்திறன் காரணமாக அவற்றில் இருந்து வைட்டமின்களும் அகற்றப்பட்டிருக்கும். ஆதலால் வைட்டமின்களை உள்ளடக்கி இருப்பதில் உலர் பழங்களை விட பிரஷ் பழங்கள் சிறந்தவை.

    சர்க்கரை: பிரஷ் பழங்களுடன் ஒப்பிடும்போது உலர் பழங்களில் அதிக சர்க்கரை உள்ளடங்கி இருக்கும். பெரும்பாலும் உலர்ந்த பழங்களில் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை சேர்க்கப்படுகிறது. அதனால் உடலில் சர்க்கரை அளவை குறைக்க விரும்புபவர்கள் உலர் பழங்கள் உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது.

    ஊட்டச்சத்து அடர்த்தி:உலர் பழங் களை விட பிரஷ் பழங்களில் ஊட்டச்சத்து மதிப்பு அதிகமாக இருக்கும். அனைத்து ஊட்டச்சத்துக்களும் அப்படியே இருப்பதால் பிரஷ் பழங்கள் சதைப்பற்றுடன் காணப்படும். உலர்ந்த பழங்களை பொறுத்தவரை, நீர்ச்சத்து பிரித்தெடுக்கப்பட்டு வெப்பநிலையில் உலரவைக்கப்படுகின்றன. அதனால் சில சமயங்களில் அதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் குறையக்கூடும்.

    உலர் பழங்களுடன் ஒப்பிடும்போது பிரஷ் பழங்களே சிறந்தவை என்பதில் சந்தேகமில்லை. அதற்காக உலர்ந்த பழங்கள் மோசமானவை அல்ல. நீர்ச்சத்து இல்லாவிட்டாலும் ஆயுளை அதிகரிக்க செய்யும் தன்மை கொண்டவை. எனினும் அன்றாடம் உடலுக்கு அத்தியாவசியமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை நிவர்த்தி செய்வதில் பிரஷ் பழங்கள்தான் முக்கிய பங்கு வகிக்கின்றன.

    தினமும் உலர் பழங்கள் சாப்பிட்டாலும் கட்டாயம் பிரஷ் பழங்களையும் சாப்பிட வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். சில இடங்களில் பழ சாகுபடி குறைவாக இருக்கும். குறிப்பிட்ட சீசனில் மட்டும்தான் பழங்கள் விளையும். அதனால் அங்குள்ள மக்களால் பிரஷ்ஷாக பழங்களை சாப்பிட முடியாது. அப்படிப்பட்ட சமயங்களில் உலர் பழங்களை சாப்பிடலாம். பழங்களை எந்த வடிவில் உட்கொண்டாலும் அவை உடலுக்கு நன்மை அளிக்கும்.

    • நீரிழிவு நோயை சில மூலிகைகளால் கட்டுப்படுத்த முடியும்.
    • மூலிகைகள் பற்றிய விவரம் பின்வருமாறு....

    துளசி

    துளசிக்கு மருத்துவ குணம் அதிகம் என்பது அறிந்ததே. சிறந்த ஆக்சிஜனேற்றத் தடுப்பானாகவும், இன்சுலின் உணர்திறனை அதிகரித்து ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கக்கூடியதாகவும் விளங்குகிறது. .இதை வெறும் வயிற்றில் சாறாகவும் அல்லது இலைகளாகவும் (3 - 4) எடுத்துக் கொள்ளலாம்.

    கற்றாழை

    உடலில் உள்ள நச்சுக்களை கற்றாழை நீக்குகிறது. ஒவ்வொரு முறை உணவு உண்பதற்குமுன், அதன் கஞ்சி போன்ற சத்தான பகுதியை உட்கொள்வதால் உடலில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கிறது.

    நெல்லிக்காய்

    உடல்நலனை காக்கும் சிறப்புமிக்க மூலிகை நெல்லி ஆகும். நெல்லிக்காயில் வைட்டமின்-சி உள்ளிட்ட சத்துகள் நிறைந்துள்ளன.

    அஸ்வகந்தா

    சர்க்கரை அளவை குறைப்பதில் அஸ்வகந்தா சிறந்து விளங்குவதோடு உடல் ஊட்டத்திற்கு சிறந்ததாக விளங்குகிறது.

    வேங்கை

    வேங்கை மரத்தின் பட்டையை பொடியாக்கி மருந்தாக உபயோகப்படுத்தலாம். ரத்தத்தில் சர்க்கரைைய குறைக்கும் இயல்பு வேங்கையில் உள்ளது.

    வில்வம்

    உலர்ந்த வில்வ இலையை கொண்டு செய்த பொடி இயல்பாகவே ரத்ததில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.

    ஆவாரை

    நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவும் மற்ற மூலிகைப் போல ஆவாரையும் சர்க்கரை அளவை குறைக்க உதவும். பொதுவாக இது தோல் பிரச்சினைக்கும் மருந்தாகிறது.. ஆவாரை வேரை பொடித்து உண்பதன் மூலம் இன்சுலின் சுரப்பை மேம்படுத்தலாம்.

    வேம்பு

    வேம்பு நோய் எதிர்ப்புத் திறன் மாற்றியாகவும் அழற்சி நீக்கியாகவும், ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கவும், குடல் புண்ணை ஆற்றவும், மலேரியாவை எதிர்க்கவும், பாக்டீரியா, நச்சுயிர் எதிர்ப்பு பொருளாகவும் விளங்குகிறது.

    நாவல்பழம்

    நாவல்பழத்தின் விதைகளின் பொடியானது, நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் சிறந்த மருந்தாக விளங்குகிறது. நாவல் இரும்புச்சத்தின் சிறந்த ஆதாரமாக விளங்குவதோடு இதயம் மற்றும் கல்லீரல் சம்பந்தமான பிரச்சினைகளுக்கும் அருமருந்தாக விளங்குகி்றது.

    நித்யகல்யாணி

    நித்யகல்யாணி மூலிகையானது, மறதி நோய்க்கு சிறந்த மருந்தாகும். மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை தணிக்கிறது. நீரிழிவு நோய்க்கும் மருந்தாகிறது. .

    மஞ்சள்

    புற்றுநோயை எதிர்க்கும் மூலிகையாக மஞ்சள் உள்ளது. நீரிழிவு ேநாய்க்கு எதிராகவும் செயல்படக்கூடியது.

    • இரவு உணவை 9 மணிக்குள் சாப்பிட்டு 11 மணிக்குள் தூங்க வேண்டும்.
    • கண்கள் பார்வை குறையாமல், எளிதில் சோர்வடையாமல் இருக்கக் கீழ்க்கண்டவற்றைப் பின்பற்ற வேண்டும்.

    நமது உடல் உறுப்புகளில் மிக முக்கியமானது கண்கள். கம்ப்யூட்டரில் அதிக நேரம் வேலை செய்வதால் கண்கள் சூடாகவும், பார்வை மங்கலாகவும் மாறும். கண்கள் பார்வை குறையாமல், எளிதில் சோர்வடையாமல் இருக்கக் கீழ்க்கண்டவற்றைப் பின்பற்ற வேண்டும்.

    1) பண்ணைக் கீரை, முருங்கைக்கீரை, சிறு கீரை, கறிவேப்பிலை கீரை, வெந்தயக்கீரை இவைகளில் ஒன்றை தினமும் சாப்பிட வேண்டும். உணவில் கேரட், பப்பாளிப் பழம், பாதாம், மீன், முட்டை இவைகளை அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    2) பொன்னாங்கண்ணிக் கீரையைப் புளி சேர்க்காமல் சமைத்து நாற்பது நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

    3) இரவு நேரங்களில் தூங்குவதற்கு முன்பு இரு உள்ளங்கால்களின் நடுவிலும் பசுவின் நெய்யைத் தேய்த்து தூங்க வேண்டும்.

    4) சந்திர தரிசனம்: இரவு உணவுக்குப்பின் ஒவ்வொரு கண்ணிலும் தலா மூன்று துளி சுத்தமான நீர் விட்டு, இமைகளை தேய்த்து, சந்திரனை (நிலவைப்) பார்ப்பது நல்லது. வானம் சுத்தமாக உள்ள காலத்தில் இரு கை விரல்களை சேர்த்து சதுரம் போல செய்து அதன் மூலம் சந்திரனை சுமார் 20 நிமிட நேரம் பார்த்தல் 'சந்திர தரிசனம்' ஆகும். இது நமது சித்தர்கள் அரு ளிய வழிமுறையாகும். இதை தொடர்ந்து செய்து வந்தால் கண் ஒளி கூடும், கண் குளிர்ச்சி பெறும்.

    5) இரவு படுக்கும் முன் தினமும் திரிபலா சூரணம் ஒரு கிராம் வீதம் சாப்பிட்டு வர வேண்டும்.

    6) தான்றிக்காய் தோல் பொடி 500 மி.கி. கிராம் வீதம் தேனில் சாப்பிட்டு வர கண் ஒளி கூடும்.

    7) தூதுவளைக் காய் மற்றும் கீரையை சமைத்து நெய் சேர்த்து சாப்பிட்டு வர கண்ணில் உண்டாகும் பித்த நீர் முதலான நோய்கள் நீங்கும்.

    8) சந்தனாதி தைலம், திரிபலா தைலம், பொன்னாங்கண்ணித் தைலம் இவைகளில் ஒன்றை வாரம் ஒரு முறை தலைக்கு தேய்த்து குளிக்க வேண்டும்.

    9) பஞ்ச கற்ப விதி: கடுக்காய் தோல், நெல்லி வற்றல், கஸ்தூரி மஞ்சள், வேப்பம் வித்து, மிளகு இவற்றை பொடித்து பசும்பாலில் காய்ச்சி தலைக்கு தேய்த்து வாரம் ஒருமுறை குளித்து வந்தால் கண் ஒளி பெறும். உடல் சூடு குறையும்.

    10) இரவு உணவை 9 மணிக்குள் சாப்பிட்டு 11 மணிக்குள் தூங்க வேண்டும். அதிகாலை 4-5 மணிக்குள் எழ வேண்டும். தினமும் குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

    சித்த மருத்துவ    நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    • வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட இரண்டு நாட்களுக்கு பின்னர்தான் இந்த அறிகுறிகள் தென்படும்.
    • இருமல் இரண்டு வாரங்களுக்கும் மேலாக நீடிக்கும்.

    உலக மக்களுக்கு மரண பயத்தை உண்டாக்கி உலுக்கிய கொரோனா மூன்றாம் அலையிலிருந்து இந்தியா சிறிது காலம் ஓய்வுபெற்ற நிலையில் தற்போது மீண்டும் இன்புளூயென்சா வைரஸ் தொற்று மக்களிடையே பரவலாக காணப்பட்டு வருகிறது.

    சாதாரணமான சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகளாக தென்பட்டாலும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த குழந்தைகள் பெரியவர்களுக்குத்தான் மிகுந்த பாதிப்பினை ஏற்படுத்துகிறது. இந்நோய்க்கு நவீன மருத்துவத்தில் ஆன்டிபயாட்டிக் உபயோகம் தடை செய்யப்பட்டிருக்கும் தருணத்தில் வைரஸ் தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள வேறு உடல் பாதிப்புகள் ஏற்படாதவாறு சித்த மருத்துவம் பல வழிமுறைகளை அறிவுறுத்துகிறது.

    இன்புளூயென்சா எனப்படுவது புளூ என பொதுவாக அழைக்கப்படும் ஒரு தொற்று நோயாகும். இதில் பல்வேறு வகை உண்டு. இதில் ஏ, பி, சி, டி என நான்கு வகையான வைரஸ் காணப்பட்டாலும், முதல் மூன்று வகை மட்டுமே மனிதர்களை தாக்குகின்றன.

    இன்புளூயென்சா வைரஸ் தொற்று இருக்கும் நபர்களில் ஏறக்குறைய 33 சதவீதம் நபர்களுக்கு எந்தவிதமான அறிகுறிகளும் காணப்படுவதில்லை, வெளியில் தெரிவதும் இல்லை.

    இன்புளூயன்சா நோய் தாக்கினால் அதிக காய்ச்சல் (100 முதல் 103 பாரன்ஹீட்), மூக்கிலிருந்து நீர் வடிதல், தொண்டை வலி, தசை வலி, தலைவலி, தொடர் இருமல், உடல் சோர்வு, அசதி, கைகால் தளர்ச்சி, வலி போன்றவை பொதுவான அறிகுறிகளாக இருக்கும்.

    வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட இரண்டு நாட்களுக்கு பின்னர்தான் இந்த அறிகுறிகள் தென்படும். குறைந்தது ஒரு வாரத்திற்கு இந்த அறிகுறிகளுடன் நோயின் தாக்கம் இருக்கும். இருமல் இரண்டு வாரங்களுக்கும் மேலாக நீடிக்கும்.

    இந்த நோய் தொற்றுள்ள ஒருவர் இருமும் போதும் தும்மும் போதும் அதன் வழியாக வைரஸ் காற்றின் மூலம் பரவுகிறது. எனவே நோய் தொற்று ஏற்பட்டவர்கள் பிறருக்கு பரவாமல் தடுக்க முகக்கவசம் அணிவது பரவுவதை தடுக்க உதவும்.

    தொண்டை சளி அல்லது மூக்கு பரிசோதனையின் மூலம் தொற்று நோய் பாதிப்பை உறுதிப்படுத்தப் படலாம். சளி பரிசோதனை, ரத்த பரிசோதனை மூலம் என்ன நோய் என்று எளிதாக கணிக்க முடியும். விரைவு பரிசோதனை விரைவில் குணமடைய உதவும்.சித்த மருத்துவத்தில் இன்புளூயன்சா காய்ச்சல், இருமல் சளி தீர்க்கும் எளிய மருந்து மாத்திரைகள் உள்ளன. நம் உடலில் இரண்டு வகை நோய் எதிர்ப்பு திறன் உள்ளன. அதில் இன்னேட் இம்யூனிட்டி என்பது இயல்பாகவே நம் உடலில் உள்ளது. அக்கொயர்டு இம்யூனிட்டி என்பது நோய் தொற்றினால் உண்டாவது.

    இந்த இரண்டாம் வகை நோய் எதிர்ப்பு சக்தி இரண்டு வகைப்படும். செல்வழி நோய் தற்காப்பு, எதிர்ப்பு பொருள் வழி நோய் தற்காப்பு. உடலில் நோய் தொற்றினாலோ, தடுப்பூசிகளினாலோ இரண்டாம் வகை நோய் எதிர்ப்பு சக்தி உருவாவதை இந்த வைரஸ் கிருமிகள் திசை திருப்புவதால் செல்வழி நோய் தற்காப்பை நாம் அதிகரிக்க வேண்டும்.

    இதற்கு சித்த மருத்துவத்தில் அநேக மருந்துகள் உள்ளன. அவற்றில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 1.அமுக்கரா சூரணம்-மாத்திரை, 2.நெல்லிக்காய் லேகியம், 3.திரிபலா சூரணம்-மாத்திரை.

    காய்ச்சல், சளி, இருமலுக்கு 1.பிரம்மானந்த பைரவ மாத்திரை, 2.பாலசஞ்சீவி மாத்திரை, 3.வசந்த குசுமாகர மாத்திரை, 4.சாந்த சந்திரோதய மாத்திரை, 5.தாளிசாதி சூரணம், 6.திரிகடுகு சூரணம், 7.சீந்தில் சூரணம், 8.நிலவேம்பு குடிநீர், 9.கபசுர குடிநீர், 10.திப்பிலி ரசாயனம், 11.பூரண சந்திரோதயம், 12.முத்து பற்பம், 13.பவள பற்பம், 14.முத்து சிப்பி பற்பம், 15.ஆடாதோடை மணப்பாகு முதலிய மருந்துகள் முக்கியமாக இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சலால் மற்றும் பிற வகை காய்ச்சல்களுக்கும் கைகொடுக்கும், குணப்படுத்தும் பக்க விளைவு இல்லாத, விலை குறைந்த மருந்துகளாகும்.

    எந்த வகையான காய்ச்சலாக இருந்தாலும் நிலவேம்பு குடிநீர் மிகச்சிறந்த மருந்து. இது அனைவரின் வீட்டிலும் இருக்க வேண்டியது அவசியம். நோயாளர் வயது, குறிகுணங்கள், நோயின் வகை, நோயின் தீவிரம் ஆகியவற்றை ஆராய்ந்து தெரிந்து சித்த மருத்துவர் மருந்துகளை தேர்ந்தெடுத்து வழங்கி இவ்வைரஸ் தொற்றின் தாக்கத்தை குறைத்து நோயாளர் விரைந்து குணமடைய வழிவகை செய்வர். மேலும் நோய் வராமல் தடுக்க தொற்றியிருந்தது பாதுகாத்துக்கொள்ள பொது இடங்களுக்கு செல்லும்போது முகக்கவசம் அணிதல், கைகளை அடிக்கடி கழுவுதல், சமச்சீர் உணவுகளை அதாவது சத்தான அறுசுவை உணவுகளை சரியான நேரத்தில் உட்கொள்ளுதல், வேண்டிய அளவு நீர் அருந்துதல், மலத்தை சரியான நேரத்தில் காலை மாலை அடக்காமல் வெளியேற்றுதல், தூக்கத்தை அடக்காமல் இருப்பது, நேரத்தில் தூங்குதல், எல்லா காலங்களிலும் தண்ணீரை கொதிக்கவைத்து ஆறிய பின் குடிப்பது, துரித உணவுகளை தவிர்ப்பது போன்றவற்றுடன் மாறுபட்ட குறிகுணங்கள் உடலில் தோன்றியதுமே உடனே மருத்துவரிடம் சென்று சந்தித்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    இச்சமயங்களில் உடலில் நீர்ச்சத்து குறையாமல் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். மருந்து கடைகளில் குறிகுணங்களைக்கூறி தயவுசெய்து யாரும் மருந்து வாங்கி சாப்பிடவேண்டாம். மேலும் மருந்துக்கடை உரிமையாளர்களும் மருத்துவர் பரிந்துரை இல்லாமல் பணத்திற்காக மருந்தை விற்பதுடன் விலை மதிப்பில்லா உயிரோடு விளையாட வேண்டாம்.

    உடல், உயிர் பாதிப்பிற்கு நாம் காரணமாக இருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் கொசு கடிக்காத வண்ணம் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

    மேற்கண்ட தகவலை திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் எஸ்.காமராஜ் தெரிவித்துள்ளார்.

    • சைனஸ் வெற்றிடங்களில் காற்று நிரம்பி இருக்கும்.
    • குளிர்ந்த உணவு வகைகளை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

    சைனஸ் என்பவை நாசிக் குழிகளில் அமைந்துள்ள வெற்றிடங்கள் ஆகும். நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள குளிர்த்தன்மையை நீக்குதல், நாசிக்குழிகளில் உருவாகும் சளியை மூக்கின் வழியே வெளியேற்றுதல், நாம் பேசும் ஒலியின் தன்மையை அதிகரித்தல் போன்றவை சைனஸ்சின் செயல்பாடுகள் ஆகும்.

    சைனசைட்டிஸ் காரணங்கள்: சாதாரணமாக, சைனஸ் வெற்றிடங்களில் காற்று நிரம்பி இருக்கும். தொற்றுகளின் போது அதில் நீர், சளி கோர்த்து இருமல், காய்ச்சலை ஏற்படுத்தும். பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை தொற்றுக்கள், மூக்கினுள் வளரும் சளிச்சவ்வு வளர்ச்சிகள் (பாலிப்கள்), தூசு, தட்பவெப்பம், உணவுப் பொருட்களினால் ஏற்படும் ஒவ்வாமை, இரண்டு மூக்குத் துளைகளையும் பிரிக்கும் குருத்தெலும்பு வளைந்து காணல், நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பது, அதிக வெப்பமான நேரங்களில் குளிர்ந்த பொருட்களை குடித்தல், திடீர்மழையில் நனைதல் போன்றவை இதற்கான காரணங்கள் ஆகும்.

    நோய்க்கான அறிகுறிகள்: மூக்கிலிருந்து தண்ணீர் போன்று அல்லது மஞ்சள், இலை பச்சை நிறத்தில் கட்டியாக சளி வெளிவருதல். மூக்கடைப்பு , மூச்சுவிட சிரமப்படுதல், தலைவலி, பல்வலி, காதடைப்பு, சுவை மற்றும் வாசனை தெரியாமல் இருத்தல், இருமல், உடல் சோர்வு, காய்ச்சல், மூச்சு விடும்போதும், பேசும்போதும் கெட்ட வாடை வீசுதல் (ஹாலிடோசிஸ்), கண்களில் அழுத்தம், வலி போன்றவை ஆகும். இந்த அறிகுறிகள் 12 வாரங்களுக்கு உட்பட்டிருந்தால், திடீர் சைனசைட்டிஸ் என்றும், 12 வாரங்களுக்கு மேலும் தொடர்ந்தால், நாட்பட்ட சைனசைட்டிஸ் என்றும் கூறப்படுகிறது.

    இந்த நோய்-பிராண்டல், எத்மாய்டல், ஸ்பினாய்டல், மாக்சில்லரி என்று நான்கு வகைப்படும். 1) மாக்சில்லரி சைனஸ்: சைனஸ்களில் இதுதான் மிகப்பெரியது. இது கண்ணுக்குக் கீழாக மேல்தாடை எலும்பில் அமைந்துள்ளது, 2) பிராண்டல் சைனஸ்: இது கண்களுக்கு மேலாக நெற்றி எலும்பில் அமைந்துள்ளது, 3) எத்மாய்டல் சைனஸ்: இது மென்மையான எலும்புப் பகுதியான மேல்மூக்கில் இரு கண்களுக்கிடையே உள்ளது, 4) ஸ்பினாய்டல் சைனஸ்: இது இரண்டு பெரிய ஸ்பினாய்டு எலும்புகளில் கண்களின் ஓரத்தில் அமைந்துள்ளது.

    இதில் எந்த வகை சைனஸ் உங்களை பாதித்துள்ளது என்பதை இந்த அறிகுறிகள் மூலம் அறியலாம். 1) பிராண்டல் சைனஸ்: நெற்றியில் வலி, தலைவலி. 2) மாக்சில்லரி சைனஸ்: கன்னங்களில் வலி, பல்வலி, முகம் வீங்கிக்காணுதல். 3) எத்மாய்டல் சைனஸ்: கண்களில் வலி, கண் சிவத்தல், கண்ணீர் வடிதல். 4) ஸ்பினாய்டல் சைனஸ்: கண்களைச் சுற்றி வலியால் துடிப்பது போன்ற உணர்வு.

    சைனசைடிஸ் எனப்படும் நீர்க்கோவை குணமடைய பழக்க வழக்கங்கள் மற்றும் சித்த மருத்துவ தீர்வுகள்:

    1) சுத்தமான உப்பு நீர்க்கரைசலை ஒரு மூக்குத்துளையில் விட்டு இன்னொரு மூக்குத் துளை வழியே வெளியேற்றலாம். 2) நன்றாகக் கொதிக்க வைத்த நீரில் மஞ்சள் தூள் போட்டு போர்வையால் நன்கு மூடி ஆவி பிடிக்க வேண்டும். அதுபோல, நொச்சி இலைகளை நன்றாகத் தண்ணீரில் கொதிக்கவைத்து ஆவிபிடிக்கலாம். 3) தும்பைப்பூ மலர்களை கசக்கி ஒரு சொட்டு வீதம் இரு மூக்குத்துளைகளிலும் விடலாம். 4) நீர்க்கோவை மாத்திரையை நீரில் உரசி நெற்றி, கன்னத்தில் பற்றிடலாம். 5) தாளிசாதி சூரணம் ஒரு கிராம் அல்லது திரிகடுகு சூரணம் ஒரு கிராம், இதனுடன் சிவனார் அமிர்தம் 100 மி.கி., பலகரை பற்பம் 200 மி.கி., கஸ்தூரி கருப்பு 100 மி.கி. இவற்றை தேன் அல்லது வெந்நீரில் சாப்பிட வேண்டும். 6) சுக்குத்தைலம், அரக்குத்தைலம், பீனிசத் தைலம், நாசிரோக நாசத்தைலம் போன்ற மருந்துகளை வாரம் இருமுறை தலைக்கு தேய்த்து வெந்நீரில் குளிக்கலாம்.

    சைனசைட்டிஸ் தடுப்புமுறைகள்: கடும் வெயில் நேரங்களில் குளிர்ந்த உணவு வகைகளை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், உடல் வெப்பத்துடன் குளிர் சேரும்போது உடலில் நீர்க்கோவை (சைனசைட்டிஸ்) நிலையை ஏற்படுத்தும். தலை வியர்க்கும் போதும், தலைக்கு குளித்த உடனும் நன்கு ஈரம் காய தலையை துடைத்து, தலைவாரிக் கொள்ள வேண்டும்

    இளவெதுவெதுப்பான வெந்நீர், மிளகு கலந்த பால், சுக்கு கலந்த பால் போன்றவற்றை குடிப்பது நல்லது. நோய் எதிர்ப்பு சக்திக்குரிய கீரைகள், பழங்கள், பால், முட்டை, பயறுவகைகள் போன்றவற்றை தினசரி உட்கொள்ள வேண்டும்.

    சித்த மருத்துவ   நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    • ஊட்டச்சத்துமிக்க உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிடும் வழக்கத்தை பின்பற்றவேண்டும்.
    • நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு கடைப்பிடிக்கவேண்டிய உணவு, பழக்கவழக்கங்கள் குறித்து பார்ப்போம்.

    ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும், ஆயுளை அதிகரிக்க செய்வதிலும் ஊட்டச்சத்துக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நோய் பாதிப்புகளுக்கு இலக்காகாமல் நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு கடைப்பிடிக்கவேண்டிய உணவு, பழக்கவழக்கங்கள் குறித்து பார்ப்போம்.

    அதிகம் சாப்பிடக்கூடாது: ஊட்டச்சத்துமிக்க உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிடும் வழக்கத்தை பின்பற்றவேண்டும். அதேவேளையில் அதிகம் உண்பது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. மனம், உடல் ஆரோக்கியத்திற்கு உணவு கட்டுப்பாடு இன்றியமையாதது. ஊட்டச்சத்து அதிகம் கொண்ட உணவாகவே இருந்தாலும் அதிகம் சாப்பிடுவது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை பெறுவதற்கு மிதமான அளவில் சாப்பிட வேண்டும்.

    கலோரிக்கும், ஆயுட்காலத்திற்கும் இடையே வலுவான உறவு உள்ளது. சாப்பிடும் கலோரிகளின் அளவை 10 முதல் 15 சதவீதம் வரை குறைப்பதன் மூலம் ஆயுளை அதிகரிக்கச்செய்ய முடியும் என்று ஆய்வுகளும் சுட்டிக்காட்டுகின்றன. குறைந்த கலோரி கொண்ட உணவுகளை உட்கொள்வது நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ வழிவகை செய்யும். தினமும் சாப்பிடும் உணவை முன்கூட்டியே திட்டமிடுவது, அதில் இருக்கும் கலோரிகளின் எண்ணிக்கையை கணக்கிடுவது நலம் சேர்க்கும்.

    காபி, டீ பருகுங்கள்: தினமும் காபி, டீ அதிகம் பருகுவது நல்லதல்ல என்ற கருத்து நிலவுகிறது. அதேவேளையில் தினமும் ஒரே ஒரு கப் டீயோ, காபியோ பருகுவது நாள்பட்ட நோய்களில் இருந்து பாதுகாக்க உதவும். அவற்றில் காபின் தவிர கேடெக்சின்கள், பாலிபீனால்கள் உள்ளன. அவை பல சுகாதார நன்மைகளை வழங்கக்கூடியவை. இதய நோய், நீரிழிவு நோய், புற்றுநோய் வராமல் தடுக்க கிரீன் டீ பருகுவது சிறப்பானது. டீ மற்றும் காபி பருகுவது நல்லது என்று தினமும் பல கப் அருந்துவது சரியானதல்ல. அதில் இருக்கும் காபினை அதிகமாக நுகரும்போது தூக்கமின்மை, பதற்றம் ஏற்படும்.

    நட்ஸ் அதிகம் சாப்பிடலாம்: உடலுக்கு எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் சூப்பர் உணவாக நட்ஸ் கருதப்படுகிறது. அதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள், ஆன்டி ஆக்சிடென்டுகள் வளர்சிதை மாற்றம், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய், புற்றுநோய் போன்ற நோய்களை தடுக்க உதவும். நட்ஸ் சாப்பிடுவது அகால மரணங்களை குறைக்கக்கூடியது என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    சைவ உணவு: காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், கடலை, பருப்பு, விதைகள் போன்றவற்றை சாப்பிடுவது நோய் பாதிப்பை குறைத்து ஆயுட்காலத்தை அதிகரிக்க வழிவகுக்கும். இதய நோய்கள், புற்றுநோய், மன அழுத்தம், அகால மரணம் போன்ற பாதிப்புகள் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கும். ஆயுட்காலத்தை அதிகரிப்பதற்கு அசைவ உணவுகளை விட சைவ உணவுகளே சிறந்தது.

    சூப்பர் உணவுகள்: நீண்ட காலம் வாழ உதவும் சில உணவுகள் உள்ளன. அவை உடலை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளவும், ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்கவும் உதவும். நோய் அபாயத்தை குறைக்கவும் செய்யும். பச்சை காய்கறிகளின் சாலட், நட்ஸ், பெர்ரி பழங்கள், மாதுளை, காளான், வெங்காயம், பூண்டு, பீன்ஸ் தக்காளி ஆகியவற்றை தவறாமல் சாப்பிட வேண்டும்.

    ஊட்டச்சத்துமிக்க உணவுகள் மட்டுமே ஆரோக்கியத்தை தீர்மானித்துவிடாது. உடல் உழைப்பும் தேவை. தினமும் குறைந்தபட்சம் 30 நிமிடமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். அன்றாடம் மேற்கொள்ளும் உடற்பயிற்சிகள் நீண்ட ஆயுளுக்கு வித்திடும். அகால மரணம் ஏற்படும் அபாயத்தை குறைக்கும். நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்ய முடியும் என்றால் தினமும் ஒன்றரை மணி நேரத்தை அதில் செலவிடலாம்.

    மருத்துவ பரிசோதனை: வருடத்திற்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது அவசியமானது. பெரும்பாலானோர் அதனை கவனத்தில் கொள்வதில்லை. ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை, ஹிமோகுளோபின், கொலஸ்ட்ரால் போன்றவற்றின் அளவுகள் சீராக இருக்க வேண்டும். அவற்றில் ஏதேனும் ஒன்று சரியில்லாவிட்டாலும் உணவு பழக்கத்தை மாற்றியமைக்க வேண்டும்.

    தூக்கம் அவசியம்: தூங்குவதற்கு முன்பு மன அழுத்தம் மற்றும் கவலைகளை ஒதுக்கி வைத்து விட வேண்டும். சரியான ஓய்வும், நல்ல உறக்கமும் மனதிற்கும் உடலுக்கும் அவசியம் தேவை. தூக்கம் உடல் ஆரோக்கியத்திற்கு உதவும். எனவே தூக்கத்துடன் சமரசம் செய்யக்கூடாது. தினமும் உடலுக்கு 5 முதல் 7 மணி நேரம் ஓய்வு கொடுத்தால், மீண்டும் புத்துணர்வு பெற முடியும்.

    மது, புகைப்பழக்கம் கூடாது: புகைப்பழக்கத்தை தொடர்வது ஆயுளில் 10 ஆண்டுகளை குறைத்துவிடும். புற்றுநோய் மற்றும் நாள்பட்ட வியாதிகள் ஏற்பட வழிவகுத்துவிடும். மதுவும் ஆயுளை குறைக்கக்கூடியது. அகால மரணத்தை ஏற்படுத்தக்கூடியது.

    மஞ்சள் தரும் ஆரோக்கியம்: மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற ரசாயனப் பொருள் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. அது இதயம், மூளை, நுரையீரல் ஆரோக்கியத்துடனும் தொடர்புடையது. குர்குமின் எலிகளின் ஆயுளை அதிகரிக்கும் என்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. அதனால் மனிதர்களின் ஆயுளை கூட்டும் சக்தியும் அதில் இருப்பதாக நம்பப்படுகிறது. தினமும் உணவில் மஞ்சளை சேர்த்து கொள்வது அவசியமானது. இரவில் மஞ்சள் பால் பருகலாம்.

    • நுரையீரலுக்குள் நூற்றுக்கணக்கான காற்றுக் குழாய்கள் உள்ளது.
    • ஆஸ்துமா என்பது மூச்சு விடுவதற்கு சிரமத்தை தருகின்ற நோய் ஆகும்.

    இரைப்பு நோய் (ஆஸ்துமா) என்பது மூச்சு விடுவதற்கு சிரமத்தை தருகின்ற நோய் ஆகும். நுரையீரலுக்குள் நூற்றுக்கணக்கான காற்றுக் குழாய்கள் உள்ளது. பெரிதாக உள்ள காற்று குழாய்களுக்கு பிராங்கை (Bronchi) என்றும், சிறிய காற்றுக் குழாய்களுக்கு பிராங்கியோல்ஸ் (Bronchioles) என்றும் பெயர். இந்த காற்றுக் குழாய்களை இயக்கும் தசைகள் தான், இவை சுருங்கவும் விரியவும் செய்கிறது.

    நாம் சுவாசிக்கும் காற்றானது இந்த காற்றுக் குழாய்களின் வழியே சென்று நுரையீரல்களில் உள்ள கோடிக்கணக்கான மிகச்சிறிய பலூன் போன்ற காற்றுப் பைகளுக்குள் நிரம்புகிறது. இந்தச்சிறிய காற்றுப் பைகளுக்கு 'ஆல்வியோலை' (Alveoli) என்று பெயர். இரைப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மூச்சுக்காற்றை சுவாசித்து, வெளிவிடுவதற்கு முயற்சிக்கும் போது காற்றுக் குழாய்கள் விரிவடைவதற்கு பதிலாக, தசைகளின் இறுக்கத்தால் சுருங்கி விடுகின்றன. இதற்கு 'பிராங்கோஸ்பாசம்' (Bronchospasm) என்று பெயர். இதனால் மூச்சு விடுவதற்கு மிகவும் சிரமமாக இருக்கும். இதையே இரைப்பு (ஆஸ்துமா) என்கிறோம்.

    நோய் காரணங்கள்: 1) பாரம்பரியம், 2) காற்றிலுள்ள தூசிகளின் ஒவ்வாமை (மகரந்தத் தூள், கழிவுப்பொருட்கள், சில ரசாயனப் பொருட்கள்), 3) புகை, பனி, குளிர் காற்று, காற்று மாசுபாடு, வாசனைப் பொருட்கள், குறிப்பிட்ட உணவுகள், 4) ஹிஸ்டமின் (Histamine), அசைட்டைல் கோலைன் (Acetyl choline) போன்றவை ரத்தத்தில் அதிகரிக்கும் போது, 5) உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பில் உள்ள மாறுபாடுகளால் ரத்தத்தில் 'இம்யூனோகுளோபுலின் ஈ' அதிகரித்து இருப்பது, 6) தீவிர உடற்பயிற்சி, மலைப்பகுதிகளில் பயணம் செய்வது, தீவிர இதய மற்றும் சிறுநீரக நோய், நுரையீரலை தீவிரமாக பாதிக்கும் பாக்டீரியா, வைரஸ் நோய்கள் போன்ற பல காரணங்களால் இந்த நோய் வருகிறது. இரைப்பு நோயைக் குணப்படுத்த துளசி, ஆடாதோடை, கஞ்சாங்கோரை, கரிசலாங்கண்ணி, கண்டங்கத்திரி, தூதுவளை, நஞ்சறுப்பான் என்று ஏராளமான மூலிகைகள் சித்த மருத்துவத்தில் உள்ளது.

    சித்த மருந்துகள்: 1) தாளிசாதி சூரணம் ஒரு கிராம், கஸ்தூரி கருப்பு 100 மி.கி., சிவனார் அமிர்தம் 100 மி.கி., பவள பற்பம் 100 மி.கி., இவைகளை தேன் அல்லது வெந்நீரில் மூன்று வேளை உணவுக்குப் பின் சாப்பிட வேண்டும்.

    2) சுவாசகுடோரி மாத்திரை 1 அல்லது 2 வீதம் காலை, மதியம், இரவு 3 வேளை உணவுக்குப் பின் சாப்பிட வேண்டும்.

    3) கஸ்தூரி மாத்திரை 1 அல்லது 2 வீதம் இருவேளை சாப்பிட வேண்டும்.

    4) கண்டங்கத்திரி லேகியம், தூதுவளை நெய், ஆடாதோடை மணப்பாகு இவைகளில் ஒன்றை காலை, இரவு உணவுக்கு பின் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    5) குளிர்ந்த பொருள்கள் சாப்பிடுதல், பனிக்காற்றில் நடமாடுதல், ஊதுபத்தி, கொசுவர்த்தி சுருள்களின் புகை, புகைப்பழக்கம், ஒட்டடை அடித்தல் போன்றவற்றை இரைப்பு நோய் உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.

    சித்த மருத்துவ    நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    • இந்தியாவில் 12 கோடி பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
    • கூட்டமாக இருக்கும்போதும்கூட தனித்திருப்பதாக உணர்வது.

    இந்தியாவில் நான்கில் ஒரு பெண், பத்தில் ஒரு ஆண் மன அழுத்தத்தால் அவதிப்படுகிறார். இந்தியாவில் 12 கோடி பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தியர்களில் மன அழுத்தத்துக்கான முதல் அறிகுறி வெளிப்படும் சராசரி வயது 31.9. வளர்ந்த நாடுகளில் இது இன்னும் குறைவான வயதாக இருந்தாலும், இந்தியாவில் இந்த சராசரி வயது தற்போது குறைந்து வருவது கவலையளிக்கிறது. பதின்பருவ வயதினரில் மன அழுத்த அறிகுறிகளை கொண்டிருப்பவர்களில் 45 சதவீதத்தினர் மது அல்லது போதைப்பொருளை நாடுகின்றனர். மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 67 சதவீதத்தினர் தற்கொலை மனப்பான்மையை கொண்டிருக்கின்றனர். 17 சதவீதத்தினர் தற்கொலைக்கு முயற்சி செய்கிறார்கள்.

    எதைப் பார்த்தாலும் எதிர்மறை மனோபாவத்தை வெளிப்படுத்துவது, சோக உணர்வில் மூழ்கிக் கிடப்பது, எப்போதும் அதிக எரிச்சலுடன் இருப்பது, எல்லாவற்றின் மீதும் திடீர் ஆர்வக்குறைவு, மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நடத்தை, குழு, கூட்டமாக இருக்கும்போதும்கூட தனித்திருப்பதாக உணர்வது.

    மன அழுத்தத்தால் மூளைக்குள் என்னதான் நடக்கிறது? மூளை பின்மேடு பகுதிதான் உணர்ச்சிகள், மனநிலை, நினைவு போன்றவற்றைக் கட்டுப்படுத்துகிறது. மன அழுத்த நோயாளிகளிடம் இந்தப் பகுதியின் அளவு சுருங்கியிருக்கிறது. நார்எபிநெப்ரின் என்பது நரம்பு கடத்தி ஹார்மோன். இது அதிகமாக இருந்தால் சீஸோபிரெனியா (மனச்சிதைவு), குறைவாக இருந்தால் மன அழுத்தம் ஏற்படும். செரடோனின் என்ற ஹார்மோன் குறைவாக இருந்தால் மன அழுத்தம், மனக்கலக்கக் கோளாறுகள் ஏற்படலாம்.

    மூளையின் முன்பகுதியில் உள்ள பெருமூளை, திட்டமிடுதல், முடிவெடுத்தல் போன்றவற்றில் பங்களிக்கிறது. மன அழுத்தம் கொண்டவர்களிடம் இது இயல்புக்கு மாறாக சோர்வடைந்து விடுகிறது. முன்தலை பெருமூளையின் வலது பாதி, எதிர்மறை உணர்ச்சியை உருவாக்க காரணமாக இருக்கிறது. மன அழுத்தம் கொண்டவர்களிடம் மிகவும் பலவீனமாக இருக்கிறது.

    • இன்றைய காலக்கட்டத்தில் சிறுநீரக கற்கள் பிரச்சினையால் ஏராளமானவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
    • ஓமியோபதி மருத்துவம் உலக அளவில் 2-வது பெரிய மருத்துவ முறையாக உள்ளது.

    சிறுநீரக கல் பிரச்சினைக்கு ஓமியோபதி மருத்துவத்தில் தீர்வு உள்ளதாக வேலூரை சேர்ந்த பி.பீ.ஆர். மருத்துவமனை நிறுவனரும், 30 ஆண்டு அனுபவமிக்க ஓமியோபதி மருத்துவரும், தென்னிந்திய ஓமியோபதி மருத்துவ சங்க மாநில தலைவருமான பி.பீ.ஆர். என்.பாலாஜி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    நமது உடல் சீராக இயங்க வேண்டும் என்றால் அதற்கு சிறுநீரகங்களின் பங்கு முக்கியமானதாக அமைகிறது. நமது உடலில் இருக்கும் நச்சு கழிவுகள் சிறுநீரில் வெளியேற்றப்பட்டால் தான் உடலின் அனைத்து பாகங்களும் ஒழுங்காக செயல்படும். இன்றைய காலக்கட்டத்தில் சிறுநீரக கற்கள் பிரச்சினையால் ஏராளமானவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த பிரச்சினைக்கு ஓமியோபதி மருத்துவத்தில் நிரந்தர தீர்வு உள்ளது.

    ஓமியோபதி மருத்துவம் உலக அளவில் 2-வது பெரிய மருத்துவ முறையாக உள்ளது. இந்த ஓமியோபதி மருத்துவம் மூலம் சிறுநீரக கற்கள் பிரச்சினைக்கு தீர்வு காணலாம். கோடைக்காலம் தொடங்கி விட்டது. இக்காலக்கட்டத்தில் தான் பலருக்கு சிறுநீரக கல் பிரச்சினை ஏற்படுகிறது.

    துரித உணவுகள்

    சிறுநீரக பாதையில் அமார்பஸ் பாஸ்பேட் உப்பு அல்லது கால்சியம் ஆக்சலேட் உப்பு போன்ற தாதுக்கள் சிறிய வடிவில் நெருஞ்சி முள் போன்ற உருண்டையாக உருவாகிறது. உடலில் உருவாகும் தேவையற்ற அதிகப்படியான கால்சியம் போன்ற வகை உப்புகள் சிறுநீர் வழியாக வெளிறே வேண்டும். சிறுநீரகத்தில் அமிலத்தன்மை, காரத்தன்மை சமநிலையின்மையால் இவை வெளியேறாமல் சிறுநீரகப்பாதையை அடைத்துக் கொண்டு நிற்கும்போது அவை படிமங்களாக படிந்து நாளடைவில் கற்களாக உருவாகிறது. அவை நகர்வதால் கடுமையான வலி வருகிறது. இதனை சிறுநீரக கல் நோய் என்று கூறுகிறோம்.

    அவ்வாறு உருவாகும் கற்களில் பல வகைகள் உண்டு. ஜங்க் புட் எனப்படும் துரித உணவுகள் அதிகமாக சாப்பிடுதல், மன அழுத்தம், தைராய்டு சுரப்பி நீர் கோளாறு, சரியாக குடிநீர் அருந்தாமை, உடல் பருமன், தூக்கமின்மை, கிருமி தொற்று போன்ற காரணங்களாலும் இந்த கல் உருவாகிறது.

    கல் இருப்பது உறுதியானால் உணவில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். எதை தவிர்க்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டால் ஆபத்தில்லாமல் கற்களை வெளியேற்றிவிடலாம். மேலும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மற்றும் சி.டி. ஸ்கேன் செய்வதன் மூலம் கற்கள் இருப்பதை உறுதிப்படுத்தலாம்.

    திரவ ஆகாரம்

    கற்கள் பெரிதாக இருக்கும்போது வலி முதுகுபுறத்தில் இருந்து தொடங்க ஆரம்பிக்கும். சிலருக்கு வயிற்றில் கடுமையான வெட்டும் வலி, வாந்தி, அதிகமாக வியர்த்தல், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் போன்றவை அறிகுறிகளாகும். கற்கள் சிறிதாக இருக்கும் பட்சத்தில் அதை வெளியேற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள் திரவ ஆகாரத்தை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் 2 லிட்டருக்கு அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீருக்கு இணையான பழச்சாறுகளும், அவ்வப்போது எடுத்துக் கொள்ளலாம். தினமும் இளநீர், பார்லி வேகவைத்த நீர், நீர்மோர் போன்றவை நன்மை பயக்கும். நீர்ச்சத்து நிறைந்த வெள்ளரிக்காய், வாழைத்தண்டு, பரங்கிக்காய் உள்ளிட்டவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். வாழைத்தண்டு சாறு, முள்ளங்கிச்சாறு குடிக்கலாம். சிறுதானியங்களையும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். ஆரஞ்சு பழம், சாத்துக்குடி, திராட்சை, வாழைப்பழம், அன்னாசி பழம் போன்ற பழங்கள் சாப்பிடுவதும், எலுமிச்சை சாறு சேர்ப்பதும் நல்லது.

    மதுஅருந்தக் கூடாது

    கல் பிரச்சினை இருப்பவர்கள் உலர் பழங்கள், தயிர், வெண்ணெய், பாலாடைக்கட்டி, தினை வகையில் கேழ்வரகு, கீரையில் பசலை கீரை இவற்றை தவிர்ப்பது நல்லது. ஐஸ்கிரீம், சாக்லேட் வகைகளையும், செயற்கை குளிர்பானங்களையும் தவிர்க்க வேண்டும்.

    கால்சியம் மாத்திரைகள் எடுத்துக்கொள்பவர்கள் சிறுநீரக கல் இருப்பது உறுதியானால் மருத்துவர் ஆலோசனையுடன், அவரது பரிந்துரையின் பேரில் அதை தவிர்ப்பது நல்லது. உணவில் உப்பினை அதிகமாக சேர்த்துக் கொள்ளக் கூடாது. எடை அதிகமாக இருப்பது கூட சிறுநீரக கற்கள் உண்டாக காரணமாக அமைகிறது. எனவே அதிகளவு கொழுப்பு இருக்கும் உணவுகளை சாப்பிடக்கூடாது.

    மதுவுக்கு சிறுநீரக கற்கள் உருவாக்கத்தில் எந்த ஒரு நேரடி தொடர்பும் இல்லை. ஆனால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகும் அபாயத்தை ஏற்படுத்தும் தன்மை மதுவுக்கு உண்டு. ஆல்கஹாலில் இருக்கும் பியூரின், யூரிக் அமில கற்கள் உருவாக காரணமாக இருக்கலாம்.

    20 மில்லி மீட்டர் அளவுள்ள கற்களையும் ஓமியோபதி மருந்துகள் மூலம் அறுவை சிகிச்சையின்றி கரைத்து விடலாம். ஓமியோபதி மருத்துவத்தில் உணவு பத்தியம் இல்லை. பெண்கள் கர்ப்பகாலத்திலும் ஓமியோபதி மருந்துகளை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளவர்கள் ஆங்கில மருந்துகளுடன் சேர்த்து ஓமியோபதி மருந்துகளை உட்கொள்ளலாம். சிறுநீரக கற்கள் திரும்ப வராமல் நிரந்தரமாக தடுக்க ஓமியோபதி மருத்துவம் சிறந்தது மற்றும் பாதுகாப்பானது. பின்விளைவுகள் அற்ற மருத்துவமாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×