search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    ஆஸ்துமா பிரச்சினைக்கு சித்த மருத்துவத்தில் மருந்துகள் உள்ளதா?
    X

    ஆஸ்துமா பிரச்சினைக்கு சித்த மருத்துவத்தில் மருந்துகள் உள்ளதா?

    • நுரையீரலுக்குள் நூற்றுக்கணக்கான காற்றுக் குழாய்கள் உள்ளது.
    • ஆஸ்துமா என்பது மூச்சு விடுவதற்கு சிரமத்தை தருகின்ற நோய் ஆகும்.

    இரைப்பு நோய் (ஆஸ்துமா) என்பது மூச்சு விடுவதற்கு சிரமத்தை தருகின்ற நோய் ஆகும். நுரையீரலுக்குள் நூற்றுக்கணக்கான காற்றுக் குழாய்கள் உள்ளது. பெரிதாக உள்ள காற்று குழாய்களுக்கு பிராங்கை (Bronchi) என்றும், சிறிய காற்றுக் குழாய்களுக்கு பிராங்கியோல்ஸ் (Bronchioles) என்றும் பெயர். இந்த காற்றுக் குழாய்களை இயக்கும் தசைகள் தான், இவை சுருங்கவும் விரியவும் செய்கிறது.

    நாம் சுவாசிக்கும் காற்றானது இந்த காற்றுக் குழாய்களின் வழியே சென்று நுரையீரல்களில் உள்ள கோடிக்கணக்கான மிகச்சிறிய பலூன் போன்ற காற்றுப் பைகளுக்குள் நிரம்புகிறது. இந்தச்சிறிய காற்றுப் பைகளுக்கு 'ஆல்வியோலை' (Alveoli) என்று பெயர். இரைப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மூச்சுக்காற்றை சுவாசித்து, வெளிவிடுவதற்கு முயற்சிக்கும் போது காற்றுக் குழாய்கள் விரிவடைவதற்கு பதிலாக, தசைகளின் இறுக்கத்தால் சுருங்கி விடுகின்றன. இதற்கு 'பிராங்கோஸ்பாசம்' (Bronchospasm) என்று பெயர். இதனால் மூச்சு விடுவதற்கு மிகவும் சிரமமாக இருக்கும். இதையே இரைப்பு (ஆஸ்துமா) என்கிறோம்.

    நோய் காரணங்கள்: 1) பாரம்பரியம், 2) காற்றிலுள்ள தூசிகளின் ஒவ்வாமை (மகரந்தத் தூள், கழிவுப்பொருட்கள், சில ரசாயனப் பொருட்கள்), 3) புகை, பனி, குளிர் காற்று, காற்று மாசுபாடு, வாசனைப் பொருட்கள், குறிப்பிட்ட உணவுகள், 4) ஹிஸ்டமின் (Histamine), அசைட்டைல் கோலைன் (Acetyl choline) போன்றவை ரத்தத்தில் அதிகரிக்கும் போது, 5) உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பில் உள்ள மாறுபாடுகளால் ரத்தத்தில் 'இம்யூனோகுளோபுலின் ஈ' அதிகரித்து இருப்பது, 6) தீவிர உடற்பயிற்சி, மலைப்பகுதிகளில் பயணம் செய்வது, தீவிர இதய மற்றும் சிறுநீரக நோய், நுரையீரலை தீவிரமாக பாதிக்கும் பாக்டீரியா, வைரஸ் நோய்கள் போன்ற பல காரணங்களால் இந்த நோய் வருகிறது. இரைப்பு நோயைக் குணப்படுத்த துளசி, ஆடாதோடை, கஞ்சாங்கோரை, கரிசலாங்கண்ணி, கண்டங்கத்திரி, தூதுவளை, நஞ்சறுப்பான் என்று ஏராளமான மூலிகைகள் சித்த மருத்துவத்தில் உள்ளது.

    சித்த மருந்துகள்: 1) தாளிசாதி சூரணம் ஒரு கிராம், கஸ்தூரி கருப்பு 100 மி.கி., சிவனார் அமிர்தம் 100 மி.கி., பவள பற்பம் 100 மி.கி., இவைகளை தேன் அல்லது வெந்நீரில் மூன்று வேளை உணவுக்குப் பின் சாப்பிட வேண்டும்.

    2) சுவாசகுடோரி மாத்திரை 1 அல்லது 2 வீதம் காலை, மதியம், இரவு 3 வேளை உணவுக்குப் பின் சாப்பிட வேண்டும்.

    3) கஸ்தூரி மாத்திரை 1 அல்லது 2 வீதம் இருவேளை சாப்பிட வேண்டும்.

    4) கண்டங்கத்திரி லேகியம், தூதுவளை நெய், ஆடாதோடை மணப்பாகு இவைகளில் ஒன்றை காலை, இரவு உணவுக்கு பின் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    5) குளிர்ந்த பொருள்கள் சாப்பிடுதல், பனிக்காற்றில் நடமாடுதல், ஊதுபத்தி, கொசுவர்த்தி சுருள்களின் புகை, புகைப்பழக்கம், ஒட்டடை அடித்தல் போன்றவற்றை இரைப்பு நோய் உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.

    சித்த மருத்துவ    நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    Next Story
    ×