என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    • சிலருக்கு இடுப்பு எலும்பில் ஜவ்வு விலகியிருந்தால் கழுத்து எலும்பு, நரம்பு வலி ஏற்படும்.
    • காயங்கள், விபத்துக்கள் இவைகளைத் தொடர்ந்தும் தண்டுவடப் பிரச்சினைகள் ஏற்படுகிறது.

    தண்டுவட எலும்புகள் ஒவ்வொன்றின் இடையேயும் ஒரு சதையாலான 'டிஸ்க்' இருக்கும். இந்தப் பகுதியில் எண்ணெய் போன்ற `சைனோவியல்' என்ற திரவம் இருக்கும். இரண்டு எலும்புகள் உராய்வில்லாமல் செயல்படவும், உடல் அசைவிற்கும் இது உதவுகிறது.

    நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்கள், மற்றும் வயதானவர்களுக்கு அதிகமாக தண்டுவட பாதிப்புகள் ஏற்படுகிறது. மேலும், காயங்கள், விபத்துக்கள் இவைகளைத் தொடர்ந்தும் தண்டுவடப் பிரச்சினைகள் ஏற்படுகிறது.

    சித்த மருத்துவத் தீர்வுகள்:

    1. அமுக்கரா சூரணம் 1 கிராம், சண்டமாருதச் செந்தூரம் 100 மி.கி பவள பற்பம் 200 மி.கி, குங்கிலிய பற்பம் 200 மி.கி போன்றவற்றை ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட வேண்டும். (அல்லது)

    அமுக்கரா சூரணம் 1 கிராம், ஆறுமுகச் செந்தூரம் 200 மி.கிமுத்துச்சிப்பி பற்பம் 200 மி.கி, குங்கிலிய பற்பம் 200 மி.கி போன்றவற்றை ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட வேண்டும்.

    2. அமுக்கரா சூரணம் 1 கிராம், அயக்காந்த செந்தூரம் 200 மிகி, முத்துச் சிப்பி பற்பம் 200 மி.கி, குங்கிலிய பற்பம் 200 மி.கி மூன்று வேளை சாப்பிட வேண்டும்.

    3.தண்டுவட பிரச்சினைகளுக்கு எண்ணெய் மசாஜ், வர்ம மசாஜ் மிகவும் சிறந்தது. இதற்காக வாத கேசரித் தைலம், சிவப்பு குக்கில் தைலம், விடமுட்டி தைலம், சுக்குத் தைலம், கற்பூராதி தைலம், உளுந்து தைலம் இவைகளில் ஏதேனும் ஒன்றை கழுத்தில் இருந்து முதுகு, இடுப்பு, கால்கள் வரை நன்றாகத் தேய்த்து விட வேண்டும். வெந்நீரில் குளிப்பது நல்லது.

    4.வாதமடக்கி, வாதநாராயணன், முடக்கற்றான், தழுதாழை, நொச்சி, பழுத்த எருக்கம் இலை இவைகளை எண்ணெய்யில் வதக்கி வலியுள்ள இடங்களில் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.

    5. உணவில் கால்சியம், வைட்டமின் டி சத்து அதிகமுள்ள பிரண்டைத் தண்டு, முருங்கை கீரை, முடக்கத்தான் கீரை, முட்டை வெண் கரு, பால், தயிர், பசலைக்கீரை, பாதாம், வாதுமை, வெந்தயம், உளுந்து இவைகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    சித்த மருத்துவ   நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    • கம்ப்யூட்டரினால் பாதிப்பு ஏற்பட பல காரணங்கள் உள்ளன.
    • கண் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கும் முறைகளை பார்க்கலாம்.

    கம்ப்யூட்டரை அதிக நேரம் உபயோகிப்பதால் ஏற்படும் கண் பிரச்சினைகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம் என அழைக்கப்படுகிறது. இந்த பாதிப்பு உள்ளவர்களிடம் காணப்படும் முக்கிய அறிகுறிகள்

    கண் சோர்வு, கண் வலி, தலைவலி, கண் எரிச்சல், கண் நீர் வடிதல், பார்வை கோளாறு, கழுத்து மற்றும் தோள்பட்டை வலி போன்றவை ஆகும்.

    யாருக்கு பாதிப்பு ஏற்படும்

    தினமும் 3-4 மணி நேரத்திற்கு மேல் கணினி உபயோகிப்பவர்களில் 75 சதவீதத்தினருக்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது. கம்ப்யூட்டரினால் பாதிப்பு ஏற்பட பல காரணங்கள் உள்ளன. அவைகளில் முக்கியமானவை கம்ப்யூட்டர் மற்றும் அருகில் உள்ள விளக்குகளில் இருந்து ஏற்படும் ஒளி சிதறல்கள். கண் சிமிட்டாமல் மானிட்டரை பார்ப்பது, கண் பார்வை கோளாறு உள்ளவர்கள் அதற்குரிய சரியான கண்ணாடி அணியாமல் வேலை செய்வது போன்றவை ஆகும்.

    கண் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கும் முறைகள்

    கம்ப்யூட்டர் மானிட்டர் கண்களில் இருந்து 25 இன்ச்க்கு மேலான தொலைவில் இருக்கவேண்டும். மானிட்டர் கண்களில் மட்டத்தில் இருந்து 6 இன்ச் தனிவாக இருக்க வேண்டும்.

    20-20-20 விதி

    கம்ப்யூட்டரில் தொடர்ந்து வேலை செய்பவர்கள் 20 நிமிடத்திற்கு ஒரு முறை, 20 வினாடிகளுக்கு, 20 அடிக்கு மேலான தொலைவில் உள்ள பொருட்களை பார்க்க வேண்டும். தொலைவில் பார்ப்பது கண்களுக்கு ஓய்வு தரும். கண்ணில் எரிச்சல், நீர் வடிதல், கண்கள் உலந்து இருப்பது போல் உணருதல் போன்ற பிரச்சினைகள் உள்ளவர்கள் மருத்துவரை ஆலோசித்து சொட்டு மருந்துகள் உபயோகிக்கலாம். கம்ப்யூட்டரை தவிர்ப்பது மிகவும் கடினம். ஆனால் அதனால் ஏற்படக் கூடிய இந்த கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோமை நிச்சயம் தவிர்க்கலாம். கம்ப்யூட்டரை கவனமாக பயன்படுத்துங்கள்! கண்களை பாதுகாத்து கொள்ளுங்கள்.

    Dr. B.மேஷாக் பீட்டர், MBBS, D.O.,கண் மருத்துவ நிபுணர் ராஃபா கிளினிக்தென்காசி.

    • அரிசியில் பல வகைகள் உள்ளன.
    • சிவப்பு அரிசி புரதச்சத்து அதிகம் நிறைந்த ஒரு தானியமாகும்.

    அரிசியில் பல வகைகள் உள்ளன. அதில் ஒவ்வொன்றும் உடலுக்கு பல நன்மைகளை தருபவையாக இருக்கிறது. அந்த அரிசி வகைகளில் ஒன்றான சிவப்பு அரிசி சாப்பிடுவதால் உண்டாகும் பயன்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

    உண்ணும் உணவு சுலபமாக செரிப்பதற்கு உணவில் நார்ச்சத்து அதிகம் இருப்பது அவசியமாகும். மாமிசம், வறுக்கப்பட்ட உணவுகளில் நார்ச்சத்து இல்லாததால், அதை உண்ணும் போது செரிமான உறுப்புக்கள் அந்த உணவுகளை ஜீரணிக்க அதிகம் சிரமப்படுகிறது. நார்ச்சத்து அதிகம் உள்ள சிவப்பு அரிசி உணவுகளை அவ்வப்போது சாப்பிட்டு வருவது செரிமான உறுப்புகளின் நலத்தை மேம்படுத்தும்.

    சிவப்பு அரிசி புரதச்சத்து அதிகம் நிறைந்த ஒரு தானியமாகும். உடலின் சீரான இயக்கத்திற்கும், பிராணவாயு உடலின் அனைத்து திசுக்களுக்கும் சென்று சேர்ப்பதையும் நாம் உண்ணும் உணவில் இருக்கும் புரதச்சத்து செய்கிறது. தினமும் சிவப்பு அரிசி கொண்டு செய்யப்பட்ட பதார்த்தங்களை காலை உணவாக கொள்வது நாள் முழுவதும் மிகுந்த உற்சாகமாக இருக்கும் தன்மை நமது உடல் பெறுகிறது.

    குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கவும், நல்ல உடல் மற்றும் மன வளர்ச்சி பெறவும் அவர்கள் சத்து நிறைந்த ஆரோக்கியமான உணவு உண்ண வேண்டும். சிவப்பு அரிசி கொண்டு செய்யப்பட்ட சிவப்பரிசி கஞ்சி, சிவப்பரிசி இட்லி, புட்டு, இடியாப்பம் போன்றவற்றை குழந்தைகளுக்கு அடிக்கடி உண்ண கொடுப்பதால் அவர்களின் உடல் பலம் பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அவர்களின் உடலில் அதிகரிக்கும்.

    உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் அல்லது குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்கள் கொழுப்பு அதிகம் இல்லாத உணவுகளை சாப்பிடுவதோடு, உடற்பயிற்சியையும் மேற்கொள்ள வேண்டும். இப்படிப்பட்டவர்கள் விரைவில் உடல் எடை குறைக்க காலை உணவாக சிவப்பு அரிசி புட்டு, இடியப்பம் உணவுகளை அதிகம் உண்ண வேண்டும். இதில் இருக்கும் வேதிப்பொருட்கள் பசி அதிகம் ஏற்படுவதை கட்டுப்படுத்துவதால் உடல் எடை சீக்கிரத்தில் குறைக்க முடிகிறது.

    சிவப்பு அரிசியில் "புரதம், நார்ச்சத்து, போன்ற வேதி கலவைகள் அதிகம் இருப்பதால் உடலில் சிவப்பு ரத்த அணுக்கள் பிராண வாயுவை கிரகிக்கும் தன்மையை அதிகப்படுத்துகிறது. இதனால் உடலுக்கு அதிக உற்சாகமும், எளிதில் உடல் சோர்வு அடையாத நிலையை தருகிறது.

    மனிதர்களின் உடல் எப்போதும் சராசரியான உடல் வெப்பத்தை கொண்டிருக்க வேண்டும். கோடை காலங்களில் எல்லா மனிதர்களுக்கும் உடல் சூடு அதிகரித்து, அதிகம் வியர்த்து உடலின் சில அத்தியாவசிய சத்துக்கள் வியர்வை வழியாக வெளியேறிவிடுகிறது. இந்த சமயங்களில் சிவப்பு அரிசியுடன் நாட்டு சர்க்கரை சேர்த்து சாப்பிடுவதால் உடல்உஷ்ணம் அதிகரிப்பதை தடுத்து உடலை குளிரச்செய்யும்.

    குழந்தை பெற்ற பெண்களுக்கு உடலில் சக்தி அதிகம் தேவைப்படுகிறது. தாய்ப்பால் அருந்தும் வயதில் இருக்கும் குழந்தைகளை கொண்ட பெண்கள் சிவப்பு அரிசி கொண்டு செய்யப்பட்ட புட்டு மற்றும் இதர வகையான உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும். தாய்மார்களுக்கும் உடல் சக்தி பெருகும். தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளின் ஆரோக்கியமும் மேம்படும்.

    நீரிழிவு நோய் தாக்கம் கொண்டவர்கள் சர்க்கரை சத்துக்கள் அதிகமுள்ள வெள்ளை அரிசி போன்றவற்றை அதிகம் சாப்பிட கூடாது. ஆனால் அந்த அரிசிக்கு மாற்றாக நீரிழிவு நோயை நன்கு கட்டுப்படுத்தும் ஆற்றல் வாய்ந்த சிவப்பு அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை காலை மற்றும் மதிய வேளைகளில் சாப்பிட்டு வருவது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த நிவாரணம் அளிக்கும்.

    இன்றைய காலங்களில் உலகெங்கிலும் இருக்கும் மக்கள் ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவிக்கும் உணவுகளையே அதிகம் உண்கின்றனர். இதனால் மனிதர்களுக்கு பல்வேறு விதமான புற்று நோய்கள் வருகின்றன. அதில் ஒன்று தான் குடல் புற்று. சிவப்பு அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை தினந்தோறும் ஒரு முறையேனும் உட்கொள்பவர்களுக்கு குடல் புற்று ஏற்படுவது தடுக்கப்படுவதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.

    முப்பது வயதை கடக்கின்ற ஆண்களும், பெண்களும் ரத்த கொதிப்பு மற்றும் ரத்த அழுத்தம் சம்பந்தமான நோய்களுக்கு உள்ளாகும் வாய்ப்புகள் அதிகமாகிறது. சிவப்பு அரிசி ரத்தத்தில் இறுக்கத்தன்மையை தளர்த்தி பிராணவாயு கிரகிப்பை அதிகப்படுத்துவதால் உயர் ரத்த அழுத்தம் போன்றவை ஏற்படும் வாய்ப்பை தடுக்கிறது. ரத்தத்தில் இருக்கும் கழிவுகளை நீக்கி, ரத்தத்தை தூய்மைப்படுத்துகிறது. இதனால் உடல் சுறுசுறுப்பாக இயங்க முடிகிறது.

    • தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது.
    • இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது.

    நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும். இதை தயாரிக்கும் முறை:

    கிராம்பு - 2,

    ஏலம் - 2,

    சுருள் இலவங்கப்பட்டை - 1,

    அதிமதுரம் சிறுதுண்டு,

    சுக்கு சிறுதுண்டு,

    மிளகு - 10,

    மஞ்சள் சிறிதளவு

    இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும். இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.

    இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது.

    • சிறுகுடல் மற்றும் வயிற்றில் உள்ள வாயு முழுவதும் வெளியேறுவதை உடனடியாக உணரலாம்.
    • பெண்களுக்கு ஏற்படும் கால்சியம் குறைபாட்டிற்கு இது அரு மருந்து.

    வைரம் பிரண்டை சாற்றில் பொடி ஆகும் என்று போகர் சித்தர் பெருமான் கூறினார்.

    உலகிலேயே கடினமான பொருள் வைரம். வைரத்தில் உள்ள கார்பன் பிணைப்பை உடைக்கும் தன்மை பிரண்டை சாறுக்கு உண்டு!

    இருபது நாளில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்ட பின்பு கால் வலி, கை வலி சுத்தமாக இருக்காது என்பது மட்டும் அல்ல. உடல் சோர்வு அறவே இல்லாமல் செய்து விடும் பிரண்டை. ஏர் உழும் காலங்களில் கால் வலியை போக்க பிரண்டை, கொத்தமல்லித்தழை, தூதுவளை, கறிவேப்பிலை சேர்த்து துவையல் செய்து தந்த பொற்காலத்தை நாம் மறந்து விட்டோம்.

    பிரண்டையில் உள்ள மிகையான சுண்ணாம்பு சத்து(கால்சியம்) தான் எலும்பு மஞ்ஞையில் திரவம் அதிகமாக சுரக்க செய்யும். அது மட்டும் இன்றி வாயில் ஆரம்பித்து ஆசனவாய் வரை உருவாகும் 300 விதமான நோய்க்கும் சிறந்த மருந்து பிரண்டை என போகர் நிகண்டுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    குறிப்பாக சிறுகுடலில் ஏற்படும் குறைபாடுகள் பிரண்டையால் உடனடியாக நிவர்த்தி ஆகும்.பிரண்டை உப்பை சுமார் 300 மி.கி. தேனில் அல்லது நெய்யில் தினமும் சாப்பிட்டு வர உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றப்பட்டு உடல் குறைப்பு ஏற்படுகிறது.

    சிறுகுடல் மற்றும் வயிற்றில் உள்ள வாயு முழுவதும் வெளியேறுவதை உடனடியாக உணரலாம். பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் இடுப்புவலி மற்றும் வயிற்று வலிக்கு பிரண்டை துவையல் அல்லது உப்பை பயன்படுத்தினால் வலி இல்லாமல் போகும். பெண்களுக்கு ஏற்படும் கால்சியம் குறைபாட்டிற்கு இது அரு மருந்து.

    நிறைய குறைபாடுகள் பிரண்டையால் குணமாகும் போது எதற்கு கால்சியம் மாத்திரை சாப்பிட்டு சிறுநீரகத்தை டயாலிசிஸ் பண்ண வேண்டும் என்று சம்மந்தப்பட்டவர்கள் யோசியுங்கள்.

    பிரண்டையின் மற்றொரு பெயர் "வஜ்ஜிரவல்லி" தேகத்தை வஜ்சிரம் ஆக்கும்.

    • காலைத் தொங்கவைத்து அமர்வதால் நமக்குப் பல உடல் உபாதைகள் உருவாகிறது.
    • முடிந்த வரை காலை தொங்கவைத்து அமர்வதை தவிருங்கள்.

    நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்கவைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம். இரண்டு சக்கர வாகனத்தில் பயணிக்கும் பொழுது, பேருந்தில், ரெயில் வண்டிகளில், சினிமா தியேட்டரில், பள்ளிகளில், அலுவலகங்களில், வீடுகளில், சோபாக்களில், கட்டில், நாற்காலி இப்படி நன்றாக யோசித்துப் பார்த்தால் நாம் அதிகநேரம் காலைத் தொங்க வைத்துக்கொண்டே இருக்கிறோம்.

    இப்படிக் காலைத் தொங்கவைத்து அமர்வதால் நமக்குப் பல உடல் உபாதைகள் உருவாகிறது. இதற்குக் காரணம் என்னவென்றால் காலைத் தொங்கவைத்து அமரும்பொழுது, நமது உடலில் இரத்த ஓட்டம் இடுப்பிற்குக் கீழ்ப்பகுதியில் மட்டுமே அதிகமாக செல்கிறது. நாம் காலை மடக்கி சம்மணம் போட்டு அமரும்பொழுது இடுப்புக்கு மேலே ரத்த ஒட்டம் அதிகமாகவும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. நமது உடலில் இடுப்புக்கு கீழே உள்ள கால்களுக்கு நடக்கும்பொழுது மட்டும் இரத்த ஓட்டம் சென்றால் போதும்.

    மிக முக்கியமான உறுப்புகளாகிய சிறுநீரகம், கணையம், நுரையீரல், மூளை, கண், காது ஆகியவை இடுப்புக்கு மேல்ப்பகுதியில்தான் இருக்கிறது. எனவே ஒருவர் காலை தொங்கப்போடாமல் சம்மணங்கால் போட்டு அமர்ந்திருந்தால் அவருக்கு சக்தியும், ஆரோக்கியமும் அதிகமாக கிடைக்கிறது. எனவே, சாப்பிடும் பொழுதாவது கீழே உட்கார்ந்து காலை மடக்கி அமர்ந்துதான் சாப்பிட வேண்டும்.

    ஏனென்றால், இடுப்புக்கு கீழே ரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும்பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது. சாப்பிடும்பொழுது காலைத் தொங்க வைத்து நாற்காலியில் அமர்வதனால் ரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாக செல்கிறது. இந்திய வகை கழிவறை செல்லும்போது மட்டும்தான் காலை மடக்கி அமர்கிறோம் யுரோப்பியன் கழிவறையில் அமரும் பொழுது குடலுக்கு அதிக அளவு அழுத்தம் கொடுத்தால் மட்டுமே கழிவு வெளியேறும், அதனால் தான் இப்பொழுது சிறுகுழந்தைகள் கூட யுரோப்பியன் வகையினை பயன்படுத்துவதால் அவர்களால் தரையில் சுக ஆசனத்தில் அமர்வதற்கு முடியாமல் தவிக்கிறார்கள். ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களால் சம்மணங்கால் போட்டுக்கூட தரையில் உட்கார முடியவில்லை என்றால் இந்த உடம்பை எந்த அளவிற்கு கெடுத்து வைத்திருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்....

    எனவே முடிந்த வரை காலை தொங்கவைத்து அமர்வதை தவிருங்கள். எனவே யுரோப்பியன் வகை கழிவறைகளை தவிருங்கள். கட்டிலிலோ, ஷோபாவிலோ அமரும்பொழுது சம்மணம் இட்டே அமருங்கள்.

    சாப்பிடும் பொழுது தரையில் ஏதாவது ஒரு விரிப்பை விரித்து அதன்மேல் சம்மணங்கால் போட்டு அமர்ந்து சாப்பிட்டால் சாப்பாடு நன்றாக ஜீரணிக்கும்.

    சில வீடுகளில் அதற்கு வாய்ப்பில்லை என்று இருந்தால் டைனிங் டேபிளில் அமர்ந்து காலை மடக்கி வைத்து அமர்ந்து சாப்பிட்டுக் கொள்ளுங்கள்...

    சாப்பிடும் முறை...!

    (1) நின்று கொண்டு சாப்பிடும் பழக்கத்தை மாற்றி. குடும்பத்துடன் அமர்ந்து ஒன்றாய் சாப்பிடுங்கள்.

    (2) எந்த வகை சாப்பாடாக இருந்தாலும் நன்றாக மென்று, கூழாக்கி சாப்பிடுங்கள்.

    (3) பேசிக் கொண்டு, தொலைக்காட்சி, புத்தகம் பார்த்து கொண்டே சாப்பிட கூடாது.

    (4) சாப்பிடும் பொழுது இடையில் தேவையில்லாமல் தண்ணீர் குடிக்காதீர்கள். கடைசியில் தண்ணீர் குடிக்க மறக்காதீர்கள்.

    போதிய அளவில் தண்ணீர் பருகுங்கள்.

    (5) அவசர அவசரமாக சாப்பிட வேண்டாம்.

    (6) பிடிக்காத உணவுகளை கஷ்டப்பட்டு சாப்பிட வேண்டாம்.

    (7) பிடித்த உணவுகளை அளவுக்கு அதிகமாகவும் சாப்பிட வேண்டாம்.

    (8) ஆரோக்கிய உணவுகளை அதிகம் சாப்பிட பழகவும்...

    (9) இரவு உணவில், முள்ளங்கி மற்றும் கீரை உணவுகளை சேர்க்க வேண்டாம்.

    (10) சாப்பாட்டுக்கு அரை மணிநேரம் முன்பு பழங்கள் சாப்பிடுங்கள்... பின்பு பழங்கள் சாப்பிட வேண்டாம்...

    (11) சாப்பிடும் முன்பு சிறிது நடந்துவிட்டு பின்பு சாப்பிடவும். இரவு சாப்பிட்ட பின், நடப்பது நலம்...

    (12) சாப்பிட வேண்டிய நேரம்.

    காலை - 7 மணி முதல் 9 மணிக்குள்

    மதியம் - 1 மணி முதல் 3 மணிக்குள்

    இரவு - 7 மணி முதல் 9 மணிக்குள்

    (13) சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து தான் தூங்க வேண்டும்.

    (14) சாப்பிடும் முன்பும் பின்பும் கடவுளுக்கு நன்றி சொல்ல மறக்காதீர்கள்.

    அமருங்கள் சம்மணமிட்டு.

    • வாயுத்தொல்லை இருப்பதாக பலர் கூற கேட்டு இருப்போம்.
    • அதற்கு பல காரணங்கள் உள்ளன.

    வயிற்றை அரைப் பங்கு உணவு, கால் பங்கு நீர், கால் பங்கு வெற்றிடமாக வைத்துக்கொள்வதே சிறந்தது.

    வாயுத்தொல்லை இருப்பதாக பலர் கூற கேட்டு இருப்போம். அதற்கு பல காரணங்கள் உள்ளன.

    சர்க்கரை, கொழுப்பு, ரத்த அளவு, உப்புச்சத்து, எலக்ட்ரோலைட்ஸ் ஆகியவற்றை டாக்டர் ஆலோசனை பெற்று பரிசோதனை செய்துகொள்ளுங்கள். ரத்தத்தில் ஏதாவது குறைபாடு இருந்தாலும், உணவுப்பாதை சரிவரச் சுத்தம் இல்லாமல் இருந்தாலும், நாள்பட்ட வயிற்றுப் புண், மலக்கட்டு பிரச்சினை இருந்தாலும், நேரம் தவறிச் சாப்பிடுவது, நேரம் தவறி உறங்குவது, முறையற்ற உணவுப் பழக்கவழக்கம், மன உளைச்சல் இருந்தாலும், பொரித்த உணவு, எண்ணெய், நெய், இனிப்பு, கார வகை பலகாரங்களை அடிக்கடி உண்பது, மது, புகைப்பழக்கம் இருந்தாலும் வாயுத் தொல்லை வரக்கூடும். இது, உடலின் பல பகுதிகளில் தசைப்பிடிப்பாக வெளிப்பட வாய்ப்புள்ளது.

    மலக்கட்டு இருந்தால் திரிபலா சூரண மாத்திரை காலை, மாலை இரண்டும், அல்லது நிலாவரை சூரண மாத்திரை இரவில் இரண்டும் எடுத்துக்கொள்ளலாம். வாயுத்தொல்லை, செரிமானமின்மை, வயிற்றுப் பொருமல், பசியின்மை போன்ற பிரச்சினை இருந்தாலும், அஜீரணம் இருந்தாலும் பஞ்ச தீபாக்கினி சூரண மாத்திரை (சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய், சீரகம் கலந்தது) வேளைக்கு ஒன்று அல்லது இரண்டு மாத்திரை ஆகாரத்துக்கு முன்போ பின்போ எடுத்துக்கொள்ளலாம். இஞ்சி லேகியம், அஸ்வகந்தி லேகியம் காலை 5 கிராம், இரவு 5 கிராம் ஆகாரத்துக்குப் பிறகு சாப்பிடலாம். ஓமநீர் காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் 10 மி.லி. சாப்பிடலாம்.

    உடலின் தசைத்துடிப்பு தீர, தலை நடுக்கம் தீர, மேற்கண்ட மருந்துகளுடன் அமுக்கரா சூரண மாத்திரை இரண்டைக் காலை, இரவு சாப்பிடலாம் எனவும் கூறுகிறார்கள்.

    • கொரோனா காலங்களில் தனியாக வசித்த முதியோர் உணவு கூட சரியாக கிடைக்காமல் சிரமப்பட்டனர்.
    • இந்தியாவில் 80 சதவீதம் பேர் முதுமையில் கஷ்டத்தையே சந்திக்கின்றனர்.

    இளமை காலத்தில் இனிக்கிற வாழ்க்கை பலருக்கு முதுமையில் கசப்பாகி விடுகிறது. அதுவும் தனிமையில் வாழும் போது தவிப்பாகி விடுகிறது. ஏனெனில் பரபரப்பான உலகில் பாச உணர்வுகள் உள்ளங்களில் இருந்தாலும் பிள்ளைகள் இல்லங்களில் சேர்ந்து வாழ்வதற்கான சூழல் இல்லை என்கிற நிலை.

    தனிமையில் தள்ளாடும்...

    இதனால் சிலர் தங்களது பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுவது என்பதும் காலத்தின் கட்டாயம் என்கின்றனர். ஆனால் வயதான பெற்றோர் பலர் முதியோர் இல்லத்துக்குள் செல்லாமல் தங்களது இல்லத்திலேயே தனிமையில் தள்ளாடும் வயது வரை காலத்தை தள்ளி விடுகின்றனர். எப்போதாவது வந்து செல்லும் பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளின் நினைவுகளை தாங்கியபடி அவர்களின் பயணம் தொடர்கிறது.

    உதாரணமாக மாநகராட்சி அந்தஸ்தை பெற்ற கடலூரில் திரும்பிய பக்கமெல்லாம், பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியோர் சுற்றித்திரிவதே சான்று. மேலும் வீடுகளில் தனிமையில் வாழ முடியாமல் தவிக்கும் பெரும்பாலான முதியோர் நகரில் உள்ள அனைத்து முதியோர் இல்லங்களிலும் தங்கியுள்ளனர்.

    ஆரம்பத்தில் பிள்ளைகளுடன் இருக்கும் இவர்கள், வேலை விஷயமாக பிள்ளைகள் வீட்டை விட்டு செல்லும் போது முதுமை தம்பதிகள் தனிமையிலே வாழ்கின்றனர்.

    பாதுகாப்பு இல்லை

    உள்ளூர் என்றால் உறவினர்களின் உறவு இருக்கும். வெளியூர் என்பதால் பக்கத்து வீட்டுக்காரர்களின் பரிவை எப்போதும் எதிர்பார்க்க முடியாது அல்லவா. அவர்களுக்கும் பரபரப்பான வேலை இருப்பதால் முதுமையில் தனிமையை தவிர இனிமையை காண முடிவதில்லை. முதியவர்கள் தனிமையில் வசிப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. தங்களுடைய மகன் அல்லது மகள் வெளிநாடுகளில் குடும்பத்துடன் வாழும் போது முதியவர்கள் தனியாக வசிக்கும் நிலை ஏற்படுகிறது. குழந்தை இல்லாதவர்கள், விபத்து அல்லது வேறு காரணங்களால் வாரிசுகளை இழந்த முதியோர்களும் தனிமையில் வசிக்கும் நிலை உருவாகிறது.

    இவ்வாறு வசிக்கும் முதியவர்களுக்கு உரிய பாதுகாப்பு இருப்பதில்லை. கொரோனா காலங்களில் தனியாக வசித்த முதியோர் உணவு கூட சரியாக கிடைக்காமல் சிரமப்பட்டனர். என்னதான் மனதை இளமையாக வைத்திருந்தாலும், உடலை முதுமையில் இருந்து விலக்க முடிவதில்லையே. இதனால் முதுமை காலத்தில் பாதுகாப்புகள், தேவைகள், உதவிகள், எதிர்பார்ப்புகள், ஏக்கங்கள் என்று இருக்கத்தானே செய்யும்.

    இத்தகைய முதியோர்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள் என்ன என்பது குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-

    பிறரை சார்ந்து வாழும் நிலை

    அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட துணைத்தலைவர் கருணாகரன்: அனைத்து துறைகளிலும் நாம் என்னதான் வளர்ச்சியடைந்திருந்தாலும் மூத்த குடிமக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் ஏராளம். ஒன்றுக்கு தீர்வுகண்டால் மற்றொரு பிரச்சினை முளைக்கின்றது. கடைசி காலத்தில் முதியவர்களை கவனிக்க யாருமில்லை என்ற நிலையே உள்ளது. பொதுவாக முதுமை காலத்தில் உடல் ரீதியான பிரச்சினைகள், சர்க்கரை நோய், ரத்தஅழுத்தம், காது கேளாமை, கண்புரை நோய், முதுகுவலி, கழுத்துவலி, மனசோர்வு உள்ளிட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் நிதி பாதுகாப்பு இருப்பதில்லை. முதுமையில் வாட்டும் தனிமை பலரை உணர்ச்சி வசப்படுத்துகிறது. இந்தியாவில் 80 சதவீதம் பேர் முதுமையில் கஷ்டத்தையே சந்திக்கின்றனர். 20 சதவீத மக்களே சுகமாக கடைசிகாலத்தில் வாழ்வதாக அறியவருகிறது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் உடல் பலவீனமடைவதால், அவர்களது வேலையை அவர்களால் கவனித்து கொள்ள இயலாத நிலைமையில் பிறரை சார்ந்து வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். மூத்தோர் உடல் உறுதியுடன் இருக்கவும், மனரீதியான பிரச்சினையின்றி வாழவும் வழிவகை செய்ய வேண்டும். அவர்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள நிதிஆதாரம் வேண்டும். மேலும் முதியவர்களை கட்டாய மருத்துவ பரிசோதனைக்கு பரிந்துரைக்க வேண்டும். மூத்தகுடிமக்கள் நாட்டின் வழிகாட்டிகள், அவர்கள் இந்த நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர்கள், இளைஞர்கள் அவர்களது அறிவுறைபடி செயல்பட வேண்டும். முதியவர்களை மதித்து மனிதாபிமானத்துடன் நடத்தி அவர்கள் மகிழ்ச்சியுற வாழவும், அவர்களது தனிமையை போக்கி முடிந்தபோதெல்லாம் அவர்களுக்காக சிறிதுநேரம் ஒதுக்கி அவர்களோடு செலவிடுவது நல்லது.

    குழந்தை போல் மாறும் முதியவர்கள்

    சிதம்பரம் முதியோர் இல்ல காப்பாளர் சுகுமார்: இன்றைய காலத்தில் பெரிய கூட்டுக் குடும்பங்களாக வாழ்ந்தவர்கள் எல்லாம் தனித்தனி குடும்பமாக பிரிந்து வாழ்கின்றனர். பெரும்பாலான இளைஞர்கள், தங்கள் பெற்றோருடன் வசிக்காமல் வெளிமாவட்டம், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கின்றனர். இதனால் பல முதியவர்கள் தனிமையில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. முதியவர்கள் தங்கள் வாழ்நாட்களை தங்களது குழந்தைகளுக்காக உழைத்து விட்டு, கடைசி காலத்தில் தனக்கென்று பணம் சேர்த்து வைக்காமல் இருந்து விடுகின்றனர். 60 வயதுக்கு மேல் தங்களால் பணம் ஈட்ட முடியாத நிலையில் சிறு சிறு தேவைகளுக்கு மகனையோ, மகளையோ எதிர்பார்க்க வேண்டிய நிலையில் உள்ளனர். வீடுகளில் முதியவர்கள் சிலர் குழந்தையின் குணத்தை போன்று மாறி விடுகின்றனர். இவர்களது சில செயல்களை மகன் அல்லது மகள்கள் பெரிய இடையூறாக நினைக்கிறார்கள். 60 வயதாகி விட்டாலே ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் முதியவர்களை வாட்ட தொடங்கி விடுகிறது. மாத்திரை, மருந்துகள் மற்றும் சில்லறை தேவைகளுக்கு மகன் அல்லது மகளை எதிர்பார்க்க வேண்டிய நிலையில் உள்ளனர். இதனால் ஏற்படும் சிறு சிறு மன உளைச்சல்களால் முதியவர்கள் வீட்டை விட்டு வெளியேறி வந்து விடுகின்றனர். இன்றைய இளைய தலைமுறையினர் முதியவர்களிடம் அன்புடனும், அனுசரணையுடன் இருந்தாலே பெரும் பிரச்சினைகளை தவிர்த்து விடலாம்.

    பராமரிப்பில் வைப்பது சிறந்தது

    பெண்ணாடம் எறையூர் கலியன்: 82 வயதான நான் வீட்டில் தனிமையிலே வசிக்கிறேன். இளமையில் ஓடியாடி வேலை பார்த்து குடும்பத்தை கரை சேர்த்த, எங்களை கரை சேர்க்க யாரும் இருப்பதில்லை. இதனால் என்னை போன்ற பலர் முதுமையில் ஓய்வெடுக்க கூட முடியாமல், மனஅழுத்தத்திலேயே இருக்கின்றனர். வாழ்க்கையின் கடைசி கால கட்டம் தான் முதுமை. ஆனால் இந்த வாழ்க்கையில் பலரின் அன்பையும், ஆதரவையும் பெற வேண்டும் என்ற ஏக்கத்திலே வாழ்க்கை முடிந்து விடுகிறது. தனிமையில் இருப்பவர்கள் நம்மை பற்றி யாராவது விசாரிக்க வேண்டும், தமது அன்பை புரிந்து கொள்ள வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள். வெளியூர்களில் குடும்பத்துடன் இருக்கும் பிள்ளைகள் தங்களுடன் பேச மாட்டார்களா?, வீட்டுக்கு வந்து செல்லமாட்டார்களா? பேரக்குழந்தைகளை பார்க்க முடியவில்லையே? என முதுமையில் ஏங்கி தவிக்கின்றனர். எனவே முடிந்தவரை பெற்றோர்களையும், முதியவர்களையும் பராமரிப்பில் வைப்பது சிறந்தது.

    • BE FAST- என்கிற அறிகுறிகளே 90-95 சதவீதம் பக்கவாத பாதிப்பு இருப்பதை உறுதி செய்யும் கூறுகளாகும்.
    • இந்த நோயால் பெரும்பாலும் 50 வயதிற்கு மேற்பட்டவர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

    மூளை... மனித உடலின் தலைமைச் செயலகம் இதுதான்.

    நமது உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளையும் ஓர் ஒழுங்கமைவு செயல்பாட்டில் இயங்கச்செய்யும் மைய செயலகமாக மூளை செயல்பட்டு வருகிறது. உடலில் இருக்கும் நாளமில்லா சுரப்பிகளின் மூலம் உறுப்புகளை இயங்கச்செய்யும் இதன் செயல்பாடுகள் ரத்த ஓட்டத்தை சார்ந்தே நடைபெறுகிறது.

    எலும்பு மற்றும் தசையால் சூழப்பட்ட உடலின் அனைத்து உறுப்புகளும் இயங்குவதற்கு ரத்த குழாய்களும், நரம்பு மண்டலமும் முக்கியமானதாகும். இந்த ரத்த குழாய்களில் ஏற்படும் திடீர் அடைப்பும், ரத்த கசிவும் பக்கவாதம் எனும் (உடல் செயல்பாடு இழப்பு) நோயை உருவாக்குகிறது.

    மைய செயலகமான மூளைக்கு செல்லும் ரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்பு காரணமாகவே 85 சதவீதம் பாதிப்பு உண்டாவதாக கூறப்படுகிறது. இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களை 4 மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது அவர்களின் உயிருக்கு மிகவும் பாதுகாப்பானது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எந்தவொரு முன் அறிகுறியும் இன்றி உருவாகும் இந்த நோயால் பெரும்பாலும் 50 வயதிற்கு மேற்பட்டவர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

    உடலின் செயல்பாடுகளை அசைவற்று நிறுத்தி, ஓரிடத்தில் இயக்கமில்லாமல் முடங்கச் செய்யும் பக்கவாதமானது, உலகில் அதிகளவில் உயிரிழப்பை ஏற்படுத்தும் இரண்டாவது நோயாக கருதப்படுகிறது. சர்க்கரை நோய், இதய கோளாறு, சீரற்ற ரத்த அழுத்தம் உள்ளிட்ட முக்கிய காரணங்களால் ஏற்படும் பக்கவாத நோயினால் உலகில் ஆண்டுக்கு 6 கோடி பேர் பாதிக்கப்படுவதாகவும் அதில் ஒன்றரை கோடி பேர் மரணத்தை சந்திப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

    BE FAST- என்கிற அறிகுறிகளே 90-95 சதவீதம் பக்கவாத பாதிப்பு இருப்பதை உறுதி செய்யும் கூறுகளாகும்.

    B- Balance- நிதானமின்றி செயல்படுதல்

    E- Eye vision- பார்வை மங்குதல்

    F- Face- முகத்தில் ஒரு பகுதி அசைவற்றும் மறுபகுதி அதிக அசைவுடனும் இயங்குதல்

    A- Arm- கை, தோள்பட்டைகள் முழுமையாக செயல்படாமல் போவது

    S- Speech- பேச்சு குளறல்

    T- Time- விரைந்து நேரத்தில் மருத்துவமனை அணுகுதல்

    இவ்வாறு அதிகப்படியான பாதிப்பை உருவாக்கும் பக்கவாத நோய் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கோடும் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 29-ந் தேதி உலக பக்கவாத தடுப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    உடல் உறுப்புகளின் செயலினை நிறுத்தி உயிரை பறிக்கும் பக்கவாத நோயிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளவும், அதை பற்றிய விழிப்புணர்வை அனைவரிடத்திலும் ஏற்படுத்த இந்நாளில் இருந்து நாமும் செயலாற்றுவோம்.

    • பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரத்தில், 32 சதவீதம் பால்தான் ஜீரணமாகும்.
    • தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91 சதவீதம் ஜீரணிக்கப்பட்டுவிடும்.

    பாலைவிட தயிர் பலமடங்கு சிறப்பானது, ஆரோக்கியம் நிறைந்தது. ஆம்...! தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும். தயிர் குளிர்ச்சியானது மட்டுமல்ல, நல்ல ஜீரண சக்தியை தரக்கூடியதாகும்.

    பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரத்தில், 32 சதவீதம் பால்தான் ஜீரணமாகும். ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில்91 சதவீதம் ஜீரணிக்கப்பட்டுவிடும். பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா, குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது.

    தயிரில் இருக்கும் பாக்டீரியா ஜீரண சக்தியை அதிகரித்து, நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது. எனவே தான் வயிறு சரியில்லாத பொழுது வெறும் தயிர் சோறு மட்டுமாவது உணவாக உட்கொள்ளும்படி மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

    தயிரை தினமும் உணவின் ஒரு அங்கமாக சேர்த்துக்கொள்வதால் பல நன்மைகளைப் பெறலாம். குறிப்பாக தயிரில் வைட்டமின் பி-12, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் தாது உப்புகள் உள்ளன. இவை உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துகளாகும்.

    தயிரில் நிறைவாக உள்ள கால்சியம் சத்து எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு உதவும். மன அழுத்தம், சோர்வை உண்டாக்கும் கார்டிசோல் என்னும் ஹார்மோன் சுரத்தலை தயிர் கட்டுப்படுத்துகிறது.

    தயிரில் வைட்டமின் பி-12,

    கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் தாது உப்புகள் உள்ளன. இவை உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துகளாகும்.

    எப்போது, எதனுடன் சேர்த்து சாப்பிடுவது?

    தயிரை சாப்பிட சிறந்த நேரம் மதியம். இரவு நேரத்தில் தயிர் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஆனால் முடியாத பட்சத்தில், தயிருடன் சர்க்கரை அல்லது சிறிது மிளகுத்தூள் சேர்த்து சாப்பிடலாம். இதனால் செரிமானம் மேம்படும். கோடை மற்றும் குளிர் காலங்களில் தயிர் சாப்பிடலாம். தயிருடன் தேன் சேர்த்து சாப்பிட்டால், வாய்ப்புண், பல் வலி குணமாகும். காரணம், இதில் ஆன்டிபாக்டீரியல் தன்மைகள் ஏராளமான அளவில் உள்ளன.

    தயிருடன் ஓமம் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் அசிடிட்டி பிரச்சினையில் இருந்து விடுபடலாம். தயிருடன் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால், உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கும். இது சிறுநீரக பிரச்சினைகளில் இருந்து விடுபட உதவும். தயிருடன் மிளகுத்தூள் சேர்த்து சாப்பிட்டால், அதில் உள்ள புரோபயோடிக் பாக்டீரியாக்கள், பெப்ரைன் ஆகியவை மலச்சிக்கல் மற்றும் அஜீரண பிரச்சினையில் இருந்து விடுவிக்கும்.

    தயிர் மற்றும் ஆரஞ்சு ஜூஸ் மூட்டு வலியைக் குறைக்க உதவும். இதில் வைட்டமின்-சி அதிகம் உள்ளதால், முதுமையையும் தடுக்கும்.

    • உடல் ஆரோக்கியத்திற்கு புரோட்டீன் அவசியமான ஒன்று.
    • சராசரியாக ஒரு மனிதனுக்கு தினமும் 56 கிராம் புரோட்டீன் தேவை.

    உடல் இயக்கத்தில், புரோட்டீன்களின் பங்கு மிக முக்கியமானது. அதேபோல உடல் ஆரோக்கியத்திற்கும், புரோட்டீன் அவசியமான ஒன்று. சரி..! புரோட்டீன் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோமா...?

    * புரோட்டீன் என்றால் என்ன?

    நம் உடலுக்குத் தேவையான சத்துக்களில் முதன்மையானது புரோட்டீன். இது `புரோட்டிலோஸ்' என்ற கிரேக்க மொழி வார்த்தையில் இருந்து வந்தது. இதன் அர்த்தம், 'அடிப்படை' அல்லது 'முதல் இடம்'. 1883-ம் ஆண்டில்தான் புரோட்டீன் என்ற வார்த்தை முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது. நமது உணவை சமநிலைப்படுத்தி நம்மை ஆரோக்கியமாக வைத்திருப்பது இந்த சத்துதான். சராசரியாக ஒரு மனிதனுக்கு தினமும் 56 கிராம் புரோட்டீன் தேவை.

    * எந்த வயதில், எவ்வளவு புரோட்டீன் தேவை?

    மூன்று வயது வரை 13 கிராம் புரோட்டீன் அவசியம். 4 முதல் 8 வயது வரை 19 கிராம் புரோட்டீன் அவசியம். 9 முதல் 13 வயது வரை 34 கிராம் அவசியம். 14 முதல் 18 வயது வரையுள்ள சிறுமிகளுக்கு 46 கிராம் புரோட்டீனும், 14 முதல் 18 வயது வரையுள்ள பையன்களுக்கு 52 கிராம் புரோட்டீன் சத்தும் அவசியம். 19 வயதைத் தாண்டிய பெண்களுக்கு 46 கிராமும், 19 வயதைக் கடந்த ஆண்களுக்கு 56 கிராமும் தேவை.

    * புரோட்டீன் நிறைந்த உணவுகள்

    இறைச்சி, மீன், முட்டை, சீஸ், பால் சம்பந்தப்பட்ட உணவுப் பொருட்கள், சோயா பீன்ஸ், பட்டாணி, துவரம் பருப்பு, பாதாம் பருப்பு, முந்திரி, பாதாம் நெய், சோயா பால், கோதுமை ரொட்டி, பசலைக்கீரை, சூரியகாந்தி விதை... இதில் அதீத புரோட்டீன் நிறைந்திருக்கும்.

    * புரோட்டீன் வகைகள்

    நமது உடலில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வகை புரோட்டீன்கள் உள்ளன. ஒவ்வொரு புரோட்டீனுக்கும் ஒரு குறிப்பிட்ட தேவையும் வேலையும் உண்டு. உதாரணமாக, தலைமுடி கெரோடின் என்ற புரோட்டீனால் ஆனது. அதேபோல நமது மொத்த உடல் எடையில் 18 முதல் 20 சதவீதம் புரோட்டீன்களால் ஆனது. நாம் சாப்பிடும் உணவின் மூலம் பெறப்படும் புரோட்டீன், பொதுவாக 2 அல்லது அதற்கும் குறைவான நாள்தான் உடலில் இருக்கும்.

    அளவுக்கு மீறினால் அமுதும் நஞ்சு என்பார்கள். அது புரோட்டீனுக்கும் பொருந்தும். நமது உடலுக்கும் வயதுக்கும் ஏற்றபடி அளவோடு சாப்பிடுவது நல்லது.

    • பொதுவாக 40 வயதில் இந்த சவ்வு தேயத்தொடங்கும்.
    • ‘செர்விகல் ஸ்பாண்டிலைட்டிஸ்’ என்று அழைக்கப்படும் கழுத்து வலி பற்றி தெரிந்துகொள்ளலாம்.

    'செர்விகல் ஸ்பாண்டிலைட்டிஸ்' என்று அழைக்கப்படும் கழுத்து வலி பற்றி தெரிந்துகொள்ளலாம். கால் நூற்றாண்டுக்கு முன்புவரை இந்த நோய் வயதானவர்களுக்கு மட்டுமே வரும் நோயாக இருந்தது. இப்போதோ இது வளரிளம் பருவத்தினருக்கும்கூட வந்துவிடுகிறது.

    கழுத்து வலிக்கு முக்கிய காரணம், கழுத்துப் பகுதியில் உள்ள தசைகள் சோர்ந்துபோவதுதான். அப்போது கழுத்தை தசையால் தாங்கிப்பிடிக்க முடிவதில்லை. அதன் வெளிப்பாடுதான் கழுத்து வலி. அதிக சுமையை தலையில் தாங்குவது, நீண்ட நேரம் கழுத்தை அசைக்காமல் ஒரே நிலையில் வைத்துக்கொண்டிருப்பது போன்றவை இந்த மாதிரியான கழுத்து வலிக்கு அடித்தளம் அமைக்கும்.

    கழுத்து எலும்புகளில் தேய்வு, இடைச்சவ்வு விலகுவது அல்லது அது வீங்கி அருகிலுள்ள நரம்பை அழுத்துவது போன்ற காரணங்களால் கழுத்து வலி ஏற்படலாம். பொதுவாக 40 வயதில் இந்த சவ்வு தேயத்தொடங்கும். ஆனால், இப்போதோ இளம் வயதிலேயே இது தேயத்தொடங்கி விடுகிறது. காரணம், பலரும் உட்கார்ந்துகொண்டே வேலை செய்வது இப்போது அதிகமாகிவிட்டதுதான். கணினி முன்னால் அதிக நேரம் தொடர்ந்து வேலை செய்வதை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.

    இதுபோல் தொடர்ந்து பல மணி நேரத்துக்கு டி.வி. பார்ப்பது, படுத்துக்கொண்டே படிப்பது, படுத்துக்கொண்டே டி.வி. பார்ப்பது, கழுத்தை கோணலாக வைத்துக்கொண்டு உறங்குவது, தலையணைகளை தலைக்கு அடுக்கிவைத்து உறங்குவது, வேலைக்கு செல்ல பல மணிநேரம் பயணிப்பது, பயணங்களில் உட்கார்ந்துகொண்டே உறங்குவது போன்றவையும் கழுத்து வலிக்கு பாதை அமைப்பவைதான். இப்போதெல்லாம் பலரும் இரு சக்கர வாகனங்களை ஓட்டிச் செல்லும்போதும் செல்போனில் பேசுகிறார்கள்.

    அப்போது கழுத்தை ஒரு பக்கமாக சாய்த்துக்கொண்டு பேசுகிறார்கள். இந்த தவறான பழக்கம், நாளடைவில் கழுத்து வலியை ஏற்படுத்திவிடும். குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் அடிக்கடி பயணிப்பதும் கழுத்து வலியைச் சீக்கிரத்தில் கொண்டுவந்துவிடும். கழுத்தை எக்ஸ்ரே, சி.டி. ஸ்கேன் அல்லது எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்துப் பார்த்து நோயைப் புரிந்துகொள்ளலாம். ஆரம்ப நிலையில் உள்ள கழுத்து வலியைச் சாதாரண வலி மாத்திரைகள், களிம்புகளால் குணப்படுத்திவிடலாம்.

    நோய் நீடிக்கிறது என்றால் மருத்துவரின் ஆலோசனைப்படி கழுத்தில் பட்டை அணிந்துகொள்வது, பிசியோதெரபி போன்றவை பலன் தரும். நோயின் தன்மையை பொறுத்து சிலருக்கு அறுவை சிகிச்சையும் தேவைப்படலாம். உங்களுக்கு மன அழுத்தம் இருந்தால் ஏற்கனவே இருக்கும் எந்த ஒரு வலியும் அதிகமாகவே உணரப்படும். புதிதாகவும் வலி தோன்றலாம். எனவே, கழுத்து வலிக்கு முறையான சிகிச்சை எடுத்துக்கொண்டு, தேவைப்பட்டால் உளவியல் சிகிச்சையும் எடுத்துக்கொள்ளலாம் என டாக்டர்கள் கூறுகிறார்கள்.

    ×