என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    • இரவில் நீரிழப்பு ஏற்பட்டால் உடல் சூடாகவோ அல்லது குளிராகவோ இருக்கும்.
    • தூங்க செல்வதற்கு முன்பு தண்ணீர் பருகுவது எல்லோருடைய உடல் நிலைக்கும் ஒத்துக்கொள்ளாது.

    இரவில் தூங்க செல்வதற்கு முன்பு செல்போன், டி.வி. உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்களை தவிர்ப்பது, காபி பருகுவது தூக்கத்தை பாதிக்கும். தூங்குவதற்கு முன்பு திரவ உணவுகளை சாப்பிடக்கூடாது என்பது மருத்துவ நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. தூங்க செல்லும்போது தாகம் எடுத்தால் தண்ணீர் பருகலாமா? என்ற சந்தேகமும் சிலருக்கு இருக்கிறது. அப்படி தண்ணீர் பருகுவது நல்ல தூக்கத்திற்கு உதவுவதாக சிலர் குறிப்பிடுகிறார்கள். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு இரவில் தண்ணீர் பருகுவது தூக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

    நிபுணர்களின் பரிந்துரை

    தூங்குவதற்கு முன்பு தண்ணீர் பருகுவது உடல் வெப்பநிலையை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். இரவில் நீரிழப்பு ஏற்பட்டால் உடல் சூடாகவோ அல்லது குளிராகவோ இருக்கும். தூங்குவதற்கு முன்பு தண்ணீர் பருகுவது உடலை சரியான வெப்பநிலையில் வைத்திருக்க உதவும். உடலில் நீர்ச்சத்து போதிய அளவில் இருப்பதும் உறுதி செய்யப்படும். உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டால், மன நிலையை எதிர்மறையாக பாதிக்கும். தூக்க சுழற்சிக்கும் இடையூறு ஏற்படும்.

    எனினும் தூங்க செல்வதற்கு முன்பு தண்ணீர் பருகுவது எல்லோருடைய உடல் நிலைக்கும் ஒத்துக்கொள்ளாது. சிலருக்கு தூக்கத்தில் தொந்தரவை ஏற்படுத்தலாம். அடிக்கடி எழுந்து சிறுநீர் கழிக்க நேரிடும். இரவில் அப்படி எழுந்திருப்பதை தவிர்க்க தூங்கச் செல்வதற்கு முன்பு திரவ வகைகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். தூங்குவதற்கு முன்பு தண்ணீர் பருகுவதன் மூலமாக சிறுநீர் பையில் அதிக அளவு சிறுநீரை தக்கவைத்துக்கொள்ள நேரிடும். இது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்பது நிபுணர்களின் பரிந்துரையாக இருக்கிறது.

    இரவில் ஏன் தண்ணீர் பருகக்கூடாது?

    தூங்குவதற்கு முன்பு தண்ணீர் பருகினால் இரவில் அடிக்கடி கழிவறைக்கு செல்ல நேரிடும். இரவில் தண்ணீரை தவிர்ப்பதன் மூலம் சிறுநீர் உற்பத்தி குறையும். அதனால் இரவில் ஆறு முதல் எட்டு மணி நேரம் தடையின்றி தூங்கலாம். தூங்குவதற்கு முன்பு தண்ணீர் பருகுவது தூக்க சுழற்சியை சீர்குலைக்கும். இதய ஆரோக்கியத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இரவில் நீர்ச்சத்து குறைபாடு, நீரிழப்பு ஏற்படுவதை தடுக்க பகலில் போதுமான தண்ணீர் பருக வேண்டும். அதன் மூலம் இரவில் தண்ணீர் பருக வேண்டிய தேவை எழாது. உடலுக்கு போதுமான அளவு தண்ணீர் கிடைத்தால் சிறுநீர் வெளிர் மஞ்சள் நிறமாக இருக்கும். அதுதான் சரியானது. சிறுநீர் மஞ்சள் நிறமாகவோ, வெண்மை நிறமாகவோ இருக்கக்கூடாது.

    இரவில் எப்போது தண்ணீர் பருகலாம்?

    இரவில் தூங்க செல்வதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பு திரவ உணவுகளை உட்கொள்வதை நிறுத்திவிட வேண்டும். தாகம் எடுப்பதாக உணர்ந்தால் தூங்க செல்வதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பு தண்ணீர் பருகலாம்.

    எந்த நீரை பருக வேண்டும்?

    இரவில் குளிர்ந்த நீர் பருகலாமா? வெதுவெதுப்பான நீர் பருகலாமா? என்ற குழப்பம் பலருக்கும் உள்ளது. குளிர்ந்த நீரை விட மிதமான சூடு கொண்ட வெதுவெதுப்பான நீரை பருகுவதுதான் சிறந்தது. அது இரவு முழுவதும் உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ள உதவும். ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். உடலில் உள்ள கழிவுகளை அகற்றும் செயல்முறையை எளிதாக்கும். நச்சுத்தன்மையையும் போக்க உதவும். மேலும் இரவில் வெதுவெதுப்பான நீர் பருகுவது வியர்வை அதிகமாக சுரக்க வித்திடும். அது சரும செல்களை சுத்தப்படுத்தவும், உடலில் படிந்துள்ள அதிக உப்பு தன்மை மற்றும் நச்சுக்களை வெளியேற்ற உதவும். இருப்பினும் சிறுநீரக மற்றும் இதய நோயாளிகள் மருந்துவரின் பரிந்துரைப்படி தண்ணீர் பருக வேண்டும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • ஒரு மனிதனுக்கு தினமும் 56 கிராம் புரோட்டீன் தேவை.
    • நமது மொத்த உடல் எடையில் 18 முதல் 20 சதவீதம் புரோட்டீன்களால் ஆனது

    நம் உடலுக்குத் தேவையான சத்துக்களில் முதன்மையானது புரோட்டீன். இது `புரோட்டிலோஸ்' என்ற கிரேக்க மொழி வார்த்தையிலிருந்து வந்ததாகும். இதன் அர்த்தம், 'அடிப்படை' அல்லது 'முதல் இடம்'.

    1883-ம் ஆண்டில்தான் புரோட்டீன் என்ற வார்த்தை முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது. நமது உணவை சமநிலைப்படுத்தி நம்மை ஆரோக்கியமாக வைத்திருப்பது இந்த சத்துதான். சராசரியாக ஒரு மனிதனுக்கு தினமும் 56 கிராம் புரோட்டீன் தேவை.

    மூன்று வயது வரை 13 கிராம்; 4 முதல் 8 வயது வரை 19 கிராம்; 9 முதல் 13 வயது வரை 34 கிராம்; 14 முதல் 18 வயது வரையுள்ளவர்களுக்கு 46 கிராம்; 14 முதல் 18 வயது வரையுள்ளவர்களுக்கு 52 கிராம்; 19 வயதைத் தாண்டியவர்களுக்கு 46 கிராம்; 19 வயதைக் கடந்த ஆண்களுக்கு 56 கிராம் தேவை.

    நமது மொத்த உடல் எடையில் 18 முதல் 20 சதவீதம் புரோட்டீன்களால் ஆனது. நாம் சாப்பிடும் உணவின் மூலம் பெறப்படும் புரோட்டீன், பொதுவாக 2 அல்லது அதற்கும் குறைவான நாள்தான் உடலில் இருக்கும்.

    நமது உடலுக்கு அல்புமின் என்ற புரோட்டீன் மிக மிக அவசியம். அது இல்லாவிட்டால் உடம்பு முழுவதும் வீங்கி விடும்.

    நமது உடலில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வகை புரோட்டீன்கள் உள்ளன. ஒவ்வொரு புரோட்டீனுக்கும் ஒரு குறிப்பிட்ட தேவையும் வேலையும் உண்டு. உதாரணமாக, தலைமுடி கெரோடின் என்ற புரோட்டீனால் ஆனது. அளவுக்கு மீறினால் அமுதும் நஞ்சு என்பார்கள். அது புரோட்டீனுக்கும் பொருந்தும்.

    நமது உடலுக்கும் வயதுக்கும் ஏற்றபடி அளவோடு சாப்பிடுவது நல்லது. புரோட்டீன் அதிகரித்தால் எலும்புச்சிதைவு நோய், புற்றுநோய், சிறுநீரகப் பிரச்சினைகள், சிறுநீரகத்தில் கல் சேர்வது போன்ற பாதிப்புகள் வரும்.

    புரோட்டீன் உணவுகள்

    1. சூரியகாந்தி விதை

    2. சோயா பீன்ஸ்

    3. பட்டாணி

    4. துவரம் பருப்பு

    5. பாதாம் பருப்பு

    6. முந்திரி

    7. பாதாம் நெய்

    8. சோயா பால்

    9. கோதுமை ரொட்டி

    10. பசலைக்கீரை (வேக வைத்தது)

    11. கோழி இறைச்சி

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    • கோடைக்காலத்தில் வியர்வையின் மூலம் அதிகளவு நீர் மற்றும் உப்புக்களை இழக்கிறோம்.
    • உடலில் ஓடும் ரத்தமும் நீர்தன்மை வாய்ந்ததே.

    நமது உடலில் உள்ள நீர்த்தன்மைதான் நமது உள்ளுறுப்புகளை சுறுசுறுப்பாக இயங்க வைக்கின்றன. உடலில் ஓடும் ரத்தமும் நீர்தன்மை வாய்ந்ததே. ஆனால் கோடைக்காலத்தில் நாம் அறியாமலேயே வியர்வையின் மூலம் அதிகளவு நீர் மற்றும் உப்புக்களை இழக்கிறோம்.

    பொதுவாக உடலில் இருந்து வெளியேறும் நீரின் அளவு உட்கொள்ளும் அளவை விட அதிகமாக இருந்தால், அது நீரிழப்புக்கு வழிவகுக்கிறது.

    இந்த நீரிழப்பு தன்மை ஒருவருக்கு ஏற்பட்டு விட்டால், அவரது வாய் மற்றும் நாக்கு வறட்சியாக மாறும். கடுமையான சோர்வு, பசியின்மை, தலைவலி ஏற்பட்டு விடும். இது தவிர காதுகளுக்கு முன்னால் உள்ள பரோடிட் சுரப்பி பாதிக்கப்படும். இதன் விளைவாக குறிப்பிடத்தக்க வீக்கம், காய்ச்சல் ஏற்படுகிறது. தொடர்ந்து சூடான அனல் காற்றை சுவாசிக்கும்போது, சுவாசப்பாதைகள் சுருங்கி, இருமல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்படுகிறது.

    நமது உடல் வெப்பநிலையைச் சரியான அளவில் பராமரிக்க, நம் மூளையிலுள்ள ஹைப்போதாலமாஸில் ஒரு தெர்மோஸ்டாட் இருக்கிறது. தேவைப்படும்போது நம் உடலின் வெப்பநிலையைக் குறைத்தும், அதிகப்படுத்தியும் நம் உடலின் வெப்பநிலையைப் பராமரிக்கும் வேலையை தெர்மாஸ்டாட் செய்கிறது.

    இந்த தெர்மாஸ்டாட் செயலிழந்துபோகும் நிலைக்குத்தான் ஹீட் ஸ்ட்ரோக் என்று கூறுகின்றனர். இதில் நான் எக்ஸ்டர்னல் ஹீட் ஸ்ட்ரோக், மற்றும் எக்ஸ்டர்னல் ஹீட் ஸ்ட்ரோக் என்று இரண்டு வகை.

    எந்த செயல்களிலும் ஈடுபடாமல், சாதாரண சுற்றுப்புறச்சூழலில் இருக்கிற வெப்பத்தின் தாக்கத்தால் மட்டும் ஏற்படுவதுதான் நான் எக்ஸ்டர்னல் ஹீட் ஸ்ட்ரோக். இது உடலில் சூரிய ஒளி படுவதால் மட்டுமே உண்டாகும். பெரும்பாலும் இந்த வகை ஸ்ட்ரோக் வயதானவர்களுக்குத்தான் ஏற்படும். ஆனால் இளவயது காரர்கள், விளையாட்டு வீரர்களுக்கு எக்ஸ்டர்னல் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படுகிறது. இதற்கு அவர்கள் வெயிலில் நீண்ட தூரம் ஓடுவது, விளையாடுவது, அந்த நேரங்களில் தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது போன்ற காரணங்களை சொல்லலாம்..

    கோடை வெயில் கொளுத்ததொடங்கினாலும், மதுக்கடைகளில் விற்பனைவெளுத்து வாங்குகிறது. குறிப்பாக மது பானங்கள் தவிர மதுப்பிரியர்களின் கிக் கேற்றும் குளிர்பானமாக திகழும் பீர் விற்பனை பொங்கி வழிகிறது. இதனால் அதற்கு சில வேளைகளில்தட்டுப்பாடும் உள்ளதாக கூறுகின்றனர்.

    இந்த நிலையில் வெயில் காலங்களில் பீர், மற்றும் மது பானங்களை அருந்துகிறவர்களுக்கு ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டு, உயிரிழப்பு ஏற்படும் அபாயங்கள் உள்ளதாக கூறுகின்றனர். வெயில் காலங்களில் மது அருந்தும்போது உடலில் உள்ள ரத்த குழாய்களின் அளவு அதிகரித்து நீர் சத்துக்கள் அதிகளவில் வெளியேறும்.

    இந்த நிலையில் போதையால் தாகம் தடைபடும்போதும், தவிர்க்கப்படும் போதும், தண்ணீர் அருந்தக்கூடிய உணர்வு ஏற்படுவதில்லை. இந்த நிலையில் போதையில் தண்ணீர் குடிக்காமல் இருக்கும்போது உடம்பில் இருந்து அதிகளவில் நீர் வெளியேறும். இதனால் ரத்த நாளங்களில் அதிக பாதிப்புஏற்படும்.

    இதனால் அடைப்புஏற்பட்டு இதயத்தில் பிரச்சினை ஏற்படும் என்கின்றனர். ஆகவே ஜில்பீர் மட்டுமின்றி, எந்த வகையான பீர் மற்றும் மது பானங்களை வெயில் காலத்தில் கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஏனெனில் ஆபத்தானது என்பது மருத்துவர்களின் ஆலோசனை.

    • தற்போதைய காலக்கட்டத்தில் சர்க்கரை நோய் என்பது எல்லோரிடத்திலும் பரவலாக காணப்படுகிறது.
    • மக்கள் முழுமையாக சர்க்கரையை தவிர்க்க வேண்டும் என்று செயற்கை சர்க்கரைகளை பயன்படுத்துகின்றனர்.

    தற்போதைய காலக்கட்டத்தில் சர்க்கரை நோய் என்பது எல்லோரிடத்திலும் பரவலாக காணப்படுகிறது. இதன் விளைவு மக்கள் சுகர் பிரீ உணவுப் பொருட்களை மட்டுமே நாடிச் செல்லத் தொடங்கியுள்ளனர். உண்மையில் இந்த சுகர் பிரீ உணவுப் பொருட்கள் பாதுகாப்பானதா இல்லையா என்பது கூட அவர்களுக்கு தெரிவதில்லை. அதிலும் சர்க்கரை நோயாளிகள் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். சாப்பிடும் பிஸ்கட்டிலிருந்து, காபி டீ என எல்லாவற்றிற்கும் சுகர் பிரீயைத் தான் பயன்படுத்துகிறார்கள்.

    சர்க்கரை சத்து பொதுவாக மாவு போன்ற கார்போஹைட்ரேட் உணவுப் பொருட்களில் காணப்படுகிறது. ஆனால் மக்கள் முழுமையாக சர்க்கரையை தவிர்க்க வேண்டும் என்று செயற்கை சர்க்கரைகளை பயன்படுத்துகின்றனர்.

    சுகர் பிரீ மாத்திரைகள் அல்லது செயற்கை இனிப்பூட்டிகள் இனிப்பு சுவை கொண்டவையாக இருந்தாலும் இவை கொடுக்கும் கலோரிகள் குறைவு. ஆஸ்பார்டேம், சுக்ரலோஸ், சாக்ரைன், ஸ்டிவ்யோசைடு, லீவுலோஸ் போன்றவை நீரிழிவு நோயாளிகளால் பொதுவாக பயன்படுத்தப்படும் செயற்கை இனிப்பூட்டிகள்.

    நீரிழிவு நோயாளிகள் செயற்கை இனிப்பூட்டிகள் பயன்படுத்தும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று உலக சுகாதார மையம் அறிவுறுத்தியுள்ளது. நீரிழிவு நோயாளிகள் செயற்கை இனிப்பூட்டிகளை பயன்படுத்தும்போது நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நீரிழிவு நோயாளிகள் தினமும் பயன்படுத்தும் செயற்கை இனிப்பூட்டியின் அளவு மிகக் குறைவு என்பதால் பக்க விளைவு குறித்து தேவையற்ற அச்சம் வேண்டாம்.

    பினைல்கீட்டோன்யூரியா நோய் உடையவர்கள் ஆஸ்பார்டேம் உள்ள செயற்கை இனிப்பூட்டிகளை தவிர்க்க வேண்டும். சல்பா அலர்ஜி உடையவர்கள் சாக்ரைன் உள்ள செயற்கை இனிப்பூட்டிகள் பயன்படுத்தும்போது ஒவ்வாமை ஏற்படுவதால் அதை தவிர்க்க வேண்டும். அதேபோல் சுக்ரலோஸ் உள்ள செயற்கை இனிப்பூட்டிகளை பயன்படுத்துவதால் குடலில் உள்ள நன்மை தரும் பாக்டீரியா அழிந்து குடல் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படலாம்.

    நிபுணர்களின் கூற்றுப்படி சுகர் பிரீயில் இயற்கையான பொருட்கள் இருந்தால் பாதுகாப்பானது. அதில் கெமிக்கல்கள் கலக்கும் போது மட்டுமே பாதிப்பு ஏற்படுகிறது. கெமிக்கல்கள் நிறைந்த சுகர் பிரீ எலும்புகளையும் பாதிக்க வல்லது. எனவே சுகர் பிரீயை வாங்குவதற்கு முன் அதில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்களின் பட்டியலை படித்துக் கொள்ளுங்கள்.

    நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா), காஞ்சிபுரம்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கொரோனாவால் ரத்தம் உறைகிற போக்கு அதிகரிக்கிறது.
    • தினமும் 6 முதல் 8 மணி நேரம் உறங்க வேண்டும்.

    சிம்லா :

    கொரோனா வைரஸ் பெருந்தொற்று தொடங்கி 4 ஆண்டுகளாகியும் இன்னும் முடிவுக்கு வந்து விடவில்லை. புதிது புதிதாக உருமாறிய வைரஸ்கள் தோன்றிப் பரவி வருகின்றன.

    இந்த நிலையில, கொரோனா வைரஸ் பெருந்தொற்று தொடர்பாக தேசிய தொற்று நோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் ஆலோசகர் டாக்டர் நரேஷ் புரோகித் கூறி இருப்பதாவது:-

    சமீபத்திய உலகளாவிய அறிவியல் ஆராய்ச்சிகள், கொரோனா வைரஸ் பெருந்தொற்றினால், இதய நோய்கள் அதிகரிக்கிற ஆபத்து இருப்பதாக கூறுகின்றன.

    கொரோனாவால் ரத்தம் உறைகிற போக்கு அதிகரிக்கிறது. இது மாரடைப்பு ஆபத்தை கூட்டுகிறது.

    நாட்டில் கடந்த 2 மாதங்களாக இதயம் செயலிழந்துபோவதால் திடீர் திடீரென ஏற்படுகிற இறப்புகள் அதிகரித்து இருக்கின்றன.

    இதில் இரண்டு வகையான இறப்புகள் நேரிடுகின்றன. ஒன்று, கடுமையான மாரடைப்பால் மரணம் நேருகிறது. குறிப்பாக சற்று வயதானவர்கள், பாரம்பரிய இதய நோய் ஆபத்து காரணி கொண்டவர்கள். அடுத்து மாரடைப்பின்றி, வேறு காரணங்களால் மரணம் ஏற்படுகிறது. இதயநோய் ஆபத்து காரணிகள் இல்லாமல் ஆரோக்கியமான நபர்களில் அரிதான நிகழ்வுகளாக இந்த மரணம் நேருகிறது.

    முதல் பிரச்சினையை இ.சி.ஜி., 2டி எக்கோ மற்றும் டி.எம்.டி. போன்ற பாரம்பரிய தடுப்பு இதய சோதனைகள் மூலம் கண்டறிய முடியும். இரண்டாவது பிரச்சினையைக் கண்டறிய நீண்ட கால இ.சி.ஜி. கண்காணிப்பு, மின் இயற்பியல் சோதனை மற்றும் மரபணு சோதனை போன்ற பல்வேறு கண்டறிதல் வழிமுறைகள் தேவைப்படுகின்றன.

    முன் எச்சரிக்கை நடவடிக்கைகளாக 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்கள் ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை மற்றும் உண்ணாவிரத கொழுப்பு சோதனையை மேற்கொள்ள வேண்டும். 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் எலக்ட்ரோ கார்டியோகிராம், எக்கோ கார்டியோகிராம் மற்றும் 'டிரெட்மில்' சோதனை உள்பட வருடாந்திர இதய பரிசோதனை செய்ய வேண்டும்.

    இளைஞர்கள் அதிரடியாக பழக்கம் இல்லாத உடற்பயிற்சிகளில் தீவிரமாக இறங்குவதற்கு தேவையில்லை.

    ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும். உடற்பயிற்சிகளை வழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். உடல் எடையை பராமரித்து வரவேண்டும். புகைப்பிடித்தல் கூடாது. மது அருந்துவதை குறைக்கவேண்டும். மன அழுத்தத்தைக் குறைக்க வேண்டும். தினமும் 6 முதல் 8 மணி நேரம் உறங்க வேண்டும்.

    யாருக்கேனும் அதிக மன அழுத்தம், நீரிழிவு, அதிகளவில் கொழுப்பு இருந்தால் அவற்றைக் கட்டுக்குள் வைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    கொரோனா தொற்றுக்கு பின்னர் மாரடைப்பு, இதயநோயால் இளைஞர்களில் சம்பவிக்கிற மரணம் தொடர்பாக ஆராய்ச்சிகள் மேற்கொள்வதற்கு சுகாதாரத்துறை அமைச்சகம் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், மக்களிடையே பீதியைக் குறைப்பதற்கு ஒவ்வொரு திடீர் மரணம் தொடர்பாகவும் குழு அமைத்து ஆராய வேண்டும் என்றும் டாக்டர் நரேஷ் புரோகித் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • நீரிழிவு நோய் கட்டுக்குள் இல்லாவிட்டால் இரவு நேரத்தில் தூக்கமின்மை நேரலாம்.
    • நீரிழிவு நோயாளிகளில் கிட்டத்தட்ட 30 சதவீதம் பேர் விழித்திரை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    உடல் நலம் தொடர்பான வாசகர்களின் கேள்விகளுக்கு நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா), காஞ்சிபுரம் பதில் அளிக்கிறார்.

    கேள்வி: ரத்தத்தில் உள்ள சர்க்கரை செல்களுக்குள் நுழைய முடியுமா? (மு.பெனாசிர் பேகம், தூத்துக்குடி)

    பதில்: ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் செல்களுக்கு உள்ளே செல்ல இன்சுலின் தேவைப்படுகிறது. பொதுவாக செல்களின் வெளிப்புறத்தில் உள்ள சவ்வு உறை (மெம்ப்ரேன்) நீரை வெறுக்கும் (ஹைட்ரோபோபிக்) தன்மையுள்ளது. ஆனால் குளுக்கோஸ் நீரை விரும்பும் (ஹைட்ரோபிலிக்) தன்மையுள்ளது. இதனால் குளுக்கோஸால் செல்களுக்குள்ளே நேரடியாக செல்ல முடிவதில்லை.

    இது செல்களுக்குள் மூன்று முக்கியமான புரதங்களின் மூலம் தான் செல்லமுடியும். அவை: 1. சோடியம் சார்ந்தில்லாத குளுக்கோஸ் டிரான்ஸ்போர்டர் (ஜி.எல்.யு.டி)புரதம், 2. சோடியம் சாராத குளுக்கோஸ் சிம்போர்டர்ஸ் (எஸ். ஜி. எல்.டி) புரதம், 3. குளுக்கோஸ் யுனிபோர்ட்டர் (ஸ்வீட் புரதம்)

    பெரும்பாலான செல்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட புரதங்கள் இருக்கும். பொதுவாக செல்களின் உள்ளே இருக்கும் ஜி.எல்.யூ.டி புரதம் செல்களின் மேலே வெளிப்படுவதற்கு இன்சுலின் தேவைப்படுகிறது. இன்சுலின் இல்லாமல் செல்களுக்கு உள்ளே குளுக்கோஸ் செல்ல முடிவதில்லை. அதனால் தான் 'செல்களுக்குள் குளுக்கோஸ் செல்ல உதவி புரியும் சாவி' என்று இன்சுலின் அழைக்கப்படுகிறது.

    கேள்வி: சர்க்கரை நோயினால் இரவு நேரங்களில் தூக்கமின்மை நேருமா? (உஷா, காஞ்சிபுரம்).

    பதில்: நீரிழிவு நோய் கட்டுக்குள் இல்லாவிட்டால் இரவு நேரத்தில் தூக்கமின்மை நேரலாம். ஏனென்றால் ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் போது சிறுநீர் அடிக்கடி கழிக்க நேரிடுவதால் தூக்கம் தடைபடுகிறது. அதேபோல் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்போது (சர்க்கரை தாழ்நிலை) தூக்கமின்மை, கெட்ட கனவுகள் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். மேலும் நீரிழிவு நோயாளிகளுக்கு மன அழுத்தம் அல்லது மனநல பிரச்சினை ஏற்படக்கூடிய வாய்ப்பு மற்றவர்களை விட மூன்று மடங்கு அதிகம். மன அழுத்தத்தால் இவர்களால் சரியாக தூங்க முடிவதில்லை.

    நீரிழிவு நோயினால் நரம்பியல் பாதிப்பு (டயாபட்டிக் நியூரோபதி) ஏற்படும்போது கை, கால்களில் வலி, மதமதப்பு, எரிச்சல், தூக்கமின்மை போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.

    நீரிழிவு நோயாளிகளில் 21 சதவீதத்தினருக்கு ஏற்படும் 'ரெஸ்ட்லஸ் லெக் சின்ட்ரோம்' (ஆர்.எல்.எஸ்) எனப்படும் நரம்பு கோளாறில் தூக்கத்தில் கால்களில் விரும்பத்தகாத உணர்வு ஏற்பட்டு, கால்கள் அமைதியற்ற விதத்தில் தானாகவே நடுங்குவதால் தூக்கம் தடைப்பட்டு தூக்கமின்மை ஏற்படுகிறது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் நீரிழிவு நோயாளிகளில் கிட்டத்தட்ட 77 சதவீதம் பேர் தூக்கம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்படுகிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.

    கேள்வி: எனக்கு 20 வருடமாக சர்க்கரை நோய் இருக்கிறது. நான் இன்னும் மாத்திரைகள் எடுத்து கொண்டு தான் இருக்கிறேன். இதனால் எனது சிறுநீரகம் பாதிப்பு அடையுமா?. எனக்கு வயிற்றில் எரிச்சலும் அதிகமாக இருக்கிறது. இது எதனால்? (கண்ணன், தஞ்சாவூர்)

    பதில்: நீங்கள் சர்க்கரை நோய்க்கு மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனை பெற்று சரியான அளவு எடுத்துக்கொண்டால் மாத்திரைகளால் சிறுநீரக பாதிப்பு ஏற்படாது. உங்களுக்கு ஒரு வேளை நீரிழிவு நோயாலோ அல்லது வேறு காரணங்களினாலோ சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டால், மருத்துவர் நீங்கள் உட்கொள்ளும் சர்க்கரை மாத்திரைகளின் அளவையோ அல்லது மாத்திரைகளையோ மாற்றலாம். சிறுநீரக பாதிப்பு இருக்கும்போது அதன் வேலைப்பளுவை குறைப்பதற்காக சிறுநீரகத்தால் வெளியேற்றப்படும் சர்க்கரை மாத்திரைகள் அளவை குறைத்தோ அல்லது வேறு மாத்திரைகளையோ பரிந்துரைக்கலாம். மேலும் எஸ்.ஜி.எல்.டி2 இனஹிபிட்டர் மாத்திரைகள் சிறுநீரக பிரச்சினையை மேலும் மோசமடையாமல் தடுக்கிறது என்பது ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    உங்களுக்கு வயிறு எரிச்சல் ஏற்படுவதற்கு வயிற்றுப்புண் (கேஸ்ட்ரைட்டிஸ்), நீரிழிவு நோயால் ஏற்படக்கூடிய இரைப்பை வாதம் (கேஸ்ட்ரோபெரிஸிஸ்) அசிடிட்டி, அமிலப் பின்னோட்ட நோய் (ரிப்லக்ஸ்) போன்றவை காரணமாக இருக்கலாம். வயிறு எரிச்சல் இருப்பதால் நீங்கள் ஏற்கனவே மெட்பார்மின் மாத்திரைகள் உட்கொள்பவராக இருந்தால் மருத்துவரின் ஆலோசனை பெற்று மெட்பார்மின் மாத்திரையின் அளவை குறைத்துக் கொள்ளலாம் அல்லது அதற்கு பதிலாக வேறு மாத்திரைகளை மாற்றிக் கொள்ளலாம்.

    கேள்வி: ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இல்லை என்றால் கண் பார்வை பாதிக்கப்படும் என்கிறார்கள். ரத்த சர்க்கரையின் அளவை மீண்டும் கட்டுக்குள் கொண்டு வந்தால் கண் பார்வை மீண்டும் நார்மல் ஆகிவிடுமா? (சரவணன், சென்னை)

    பதில்: நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இல்லை என்றால் விழித்திரை நோய் பாதிப்பு ஏற்படுகிறது. இதில் விழித்திரையில் உள்ள ரத்தநாளங்கள் சேதம் அடைவதால் ரத்தக் கசிவு ஏற்படுகிறது. நீரிழிவு நோயாளிகளில் கிட்டத்தட்ட 30 சதவீதம் பேர் விழித்திரை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் பார்வை இழப்பிற்கு இது முக்கிய காரணமாக திகழ்கிறது. பொதுவாக விழித்திரை நோய் நிரந்தர பாதிப்பை ஏற்படுத்துகிறது. மீண்டும் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் கொண்டு வந்தாலும் இது மீளக்கூடிய வாய்ப்பு மிகக் குறைவு. விழித்திரை நோய் பாதித்த ஆரம்ப கட்டத்தில் வேண்டுமானால் இதிலிருந்து மீள்வது சாத்தியம். ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருந்தால் விழித்திரை நோய் மேலும் மோசமடைவதை வேண்டுமானால் தாமதிக்கலாம்.

    • தொழில் முறையாக அடிக்கடி பயணம் செய்யும் போது பல்வேறு உடல் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்
    • சாதாரணமாக வருகின்ற காய்ச்சலுக்கு எளிய சித்த மருத்துவம் உள்ளது.

    தொழில் ரீதியாக அடிக்கடி பல்வேறு ஊர்களுக்கு பயணம் செய்கிறவர்களுக்கு தண்ணீர், காலநிலை மாறுபாட்டினால் தொண்டை வலி, இருமல், காய்ச்சல், சளி போன்ற நோய் தாக்குதலுக்கு ஆளாவார்கள். இதை தடுக்க சித்த மருந்துகள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

    அடிக்கடி பயணம் செய்யும் போது பருவநிலை மாற்றம், தண்ணீர் மாறுபாடு போன்றவற்றை பலரும் சந்திக்க நேரிடும். இதுபோன்ற நிலையில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்போதும், வைரஸ் மூலமாகவும் இந்த பிரச்சினைகள் வரலாம். இதுபோன்று சாதாரணமாக வருகின்ற காய்ச்சலுக்கு எளிய சித்த மருத்துவம் உள்ளது. இந்த மருந்துகளை உங்கள் கைவசம் எப்போதும் வைத்துக்கொள்ளுங்கள்.

    காய்ச்சல்: நிலவேம்பு கசாயம் இதற்கு சிறந்த நிவாரணம் தரும். பெரியவர்கள் 60 மி.லி. இருவேளை, சிறுவர்கள் 15 முதல் 30 மி.லி. இருவேளை, 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் 10 முதல் 15 மி.லி. வீதம் ஏழு நாட்கள் எடுக்க வேண்டும். அடுத்து திரிகடுகு சூரணம் ஒரு கிராம், லிங்கச் செந்தூரம் 100 முதல் 200 மி.கி., சிவனார் அமிர்தம் 200 மி.கி. இருவேளை தேன் அல்லது வெந்நீரில் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சாப்பிட வேண்டும்.

    தொண்டை வலி, குரல் கரகரப்பு: இந்தப்பிரச்சினைக்கு தாளிசாதி வடகம் ஒன்று அல்லது இரண்டு மாத்திரை மூன்று வேளை கடித்து சாப்பிட வேண்டும். பின்னர் ஒரு டம்ளர் வெந்நீர் அருந்துவது நல்லது.

    தலைவலி: சிலருக்கு தலைவலி காணப்படும். அதுபோன்ற நிலையில் நீர்க்கோவை மாத்திரையை வெந்நீரில் உரசி நெற்றி, கன்னத்தில் பற்று போட வேண்டும்.

    இருமல்: வறட்டு இருமல் முதல் சாதாரண இருமல் சிலருக்கு காணப்படும். அதற்கு ஆடாதோடை மணப்பாகு 5 முதல் 10 மி.லி, இரண்டு முதல் மூன்று வேளை குடிக்க வேண்டும். தலை பாரம், மூக்கடைப்பு இருந்தால் நொச்சி இலை அல்லது மஞ்சள் வைத்து ஆவி பிடிக்க வேண்டும்.

    உணவுகள்: பாலில் மிளகு, மஞ்சள், பனங்கற்கண்டு சேர்த்து காய்ச்சி குடிக்க வேண்டும். முட்டையை அரை வேக்காட்டாக்கி அதனுடன் மிளகு, மஞ்சள், சீரகம், உப்பு சேர்த்து சாப்பிட வேண்டும். குடிப்பதற்கு, குளிப்பதற்கு வெது வெதுப்பான வெந்நீரை பயன்படுத்த வேண்டும். வெளியே செல்லும் போதும், பயணத்தின் போதும் `மாஸ்க்' அணிவது, சானிடைசர் பயன்படுத்துவது நல்லது.

    சித்த மருத்துவ   நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)

    • முதியோர் இல்லங்கள் போன்றே இவ்வமைப்புகள் இருக்கும்.
    • நவீன வருங்கால வயதானவர்களுக்கான வசதியான முதலீடு.

    தற்போதைய காலகட்டத்தில் முதியவர்கள் ஓய்வு பெற்ற பின் அமைதியான சூழலில் பாதுகாப்புடன் வாழ்வதற்கு உகந்த இடம் வயதானவர் ஒய்வு இல்லம். பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் அயல்நாட்டில் வேலை பார்ப்பதால் இங்கு பார்த்துக் கொள்வதற்கு ஆள் இல்லாத காரணத்தினாலும் தனிக்குடுத்தனங்கள் பெருகி உள்ள நிலையில் இடவசதி இன்மை, சௌகரியங்கள் இன்மை இது போன்ற பல தவிர்க்க முடியாத காரணத்தால் பெற்றோர்களை முதியோர் காப்பகத்தில் அனுமதிக்கின்றனர்.

    பெரியவர்களும் தங்களுக்கு உள்ள சுதந்திரத்தை விட்டுக் கொடுக்க முடியாமலும் தனக்கென்று ஒரு தனிமை தேவைப்படுவதாலும் தங்களது தனி உரிமைக்காகவும் சிலர் அமைதியான இது போன்ற சூழலில் வாழ விரும்புகின்றனர்.

    முதியவர்கள் வாழ்நாள் முழுவதும் உழைத்து ஓடி கொண்டே இருந்த சூழலில் தங்களது வயதான காலத்தில் அமைதியாகவும் நிம்மதியாகவும் பாதுகாப்புடனும் வாழும் சூழலை விரும்புகின்றனர். இவை அனைத்தும் இது போன்ற ஓய்வு இல்லங்கள் நிறைவேற்றுகின்றது.

    தற்போது பல கட்டட அமைப்புகள் வளர்ந்து வரும் தொழில்நுட்ப காலத்தில் முதியவர்களுக்கு என தனித்தனியே வீடுகள் கட்டித் தரப்படுகின்றன. அவைகள் முதியவர்களின் வசதிக்கேற்ற மாதிரி முதியவர்களுக்காக மட்டுமே அமைக்கப்படுகிறது. இதில் பலதரப்பட்ட குடும்பங்களை சார்ந்த ஓய்வு பெற்ற முதியவர்கள் ஒன்றாக வசிக்கிறார்கள்.

    முதியோர் இல்லங்கள் போன்றே இவ்வமைப்புகள் இருக்கும். ஆனால் தனித்தனி சொந்த வீடுகள். முதியவர்கள் வயதான பின்பு ஓய்வு காலத்தில் அவரவர் சொந்த வீட்டில் சுதந்திரமாக பாதுகாப்பாக மகிழ்ச்சியுடன் எந்த தொந்தரவும் இல்லாமல் வாழும் வண்ணம் இக்கட்டட அமைப்புகள் அமைகின்றன.

    அவரவர் வசதிகளுக்கு ஏற்ப அவர்களின் பிள்ளைகளோ வயதானவர்களே கூட தங்களது ஓய்வு ஊதிய பணத்தை அதில் முதலீடு செய்து தனக்கென சொந்தம் ஆக்கிக் கொள்கிறார்கள். அங்குள்ள அனைத்து வீடுகளிலுமே முதியவர்கள் இருப்பதால் அதுவயதானவர்இல்லம் போன்ற ஒரு அமைப்பையே உருவாக்கி தருகிறது. அங்கு மருத்துவ வசதிகள் யோகாசன பயிற்சிகள் பூங்காக்கள் நடைபாதை மேடைகள் என பல வசதிகளும் அமைக்கப்படுகிறது.

    வயதானவர்கள் அவரவர் வீடுகளில் வசிப்பது போன்றே எந்த தொந்தரவுகளும் இல்லாமல் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் சுதந்திரமாகவும் அமைதியான பாதுகாப்பான முறையிலும் வீட்டு சூழலை உருவாக்கி தருகிறார்கள்.

    வயதானவர்களின் தேவைகளுக்கும் விருப்பத்திற்கு ஏற்பவும் கட்ட மைப்புகள் அமைக்கப்படுகின்றன. வீட்டில் குளியலறை வசதி படுக்கையறை சமையலறை என ஒவ்வொரு அறையிலும் வயதானவர்களின் வசதிகளுக்கு ஏற்ப கட்டட அமைப்புகள் உள்ளன.

    வயதானவர்களை கவனித்துக் கொள்ள பணியாளர்களும் அங்கே அமர்த்தப்படுகிறார்கள். 24 மணி நேரமும் மருத்துவ வசதிகளும் குடிநீர் வசதி என பல வசதிகளுடன் கட்டப்படுகிறது.

    வயதானவர்களுக்கு விளையாட்டு பயிற்சிகள் மூச்சுப் பயிற்சிகள் என அனைத்து பயிற்சிகளும் உள்ளேயே வழங்கப்படுகிறது. விளையாட்டுக் கூடங்கள் தோட்டங்கள் என அனைத்து வசதிகளும் உள்ளடங்கிய கட்டமைப்பாகும்.

    வயதானவர்களின் மன அழுத்தத்தை போக்கும் வண்ணம் பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. அதற்கான கட்டட அமைப்புகளும் அதற்குள்ளேயே உருவாக்கப்படுகிறது.

    பெரிய அடுக்குமாடி கட்டடங்களில் அனைவருக்கும் பொதுவான பூங்காக்கள் நடைபாதைகள் பயிற்சி மையங்கள் விளையாட்டு பொழுது போக்கு கூடங்கள் கோயில்கள் என்ற அனைத்தும் உள்ளடங்கிய கட்டட அமைப்புகள் போன்ற அமைப்பை ஒத்தவை தான் இந்த முதியோர் இல்ல கட்டட அமைப்புகளும்

    சிறந்த தொழில்நுட்ப கட்டட வல்லுனர்களால் பல அதிநவீன வசதிகளுடன் முதியவர்களின் சௌகரியங்களுக்கு ஏற்ப கட்டடங்கள் வடிவமைக்கப்படுகிறது. அவர்களின் பாதுகாப்பை முன்னிறுத்தி கட்டடங்கள் கட்டப்படுகிறது.

    அனைத்து வசதிகளும் முதியோர் இல்லத்தில் இருந்தாலும் அது நமக்கு என சொந்தமான இடம் இல்லை என்பது பலருக்கும் மன வருத்தத்தை உருவாக்குவதால் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இதை தவிர்க்கும் வண்ணம் இது மாதிரி வயதானவர் ஓய்வு இல்லங்கள் சொந்த வீடுகளில் வாழும் சூழல் மற்றும் மன அமைதியை தருகிறது.

    மன உற்சாகத்தை தருவதுடன் அயல்நாடுகளில் வேலை பார்க்கும் தங்களது பிள்ளைகள் பேரன் பேத்திகள் என்று வந்தாலும் தங்குவதற்கு வசதியாக இருக்கும். சொந்த வீடு என்பதால் தங்குவதற்கு தொந்தரவு இல்லாத சூழலையும் உருவாக்கி தரும்.

    அவர்களுக்கும் தாய் தந்தையருடன் சொந்த வீட்டிலேயே இருக்கலாம். பேரன் பேத்திகளுக்கும் இது என் தாத்தா பாட்டி வீடு என்று சுதந்திரமாக சுத்தி திரிவதற்கும் வசதியாக இருக்கும்.

    வயதானவர்கள் காலத்திற்குப் பின்பு அவர்களது பிள்ளைகள் இதே மாதிரி மகிழ்ச்சியாக தங்களது வயதான காலத்தை கழிப்பதற்கும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம். அவர்களது மகன் குழந்தைகள், குழந்தைகளின் குழந்தைகள் என்று பரம்பரையாக சொந்த வீட்டில் வசிக்கலாம்.

    இதுவும் சொந்த வீடு வாங்கி சொத்து சேர்ப்பதற்கான ஒரு அமைப்பு தான். ஆனால் வயதானவர்கள் ஒன்று கூடி வாழும் ஒரு சூழலில் சொந்தமாக சுதந்திரமாக அமைதியாக வாழும் ஒரு அமைப்பு.

    சம்பாதிக்கும் நாட்களிலேயே இது போன்ற வீடுகளை வாங்கி வைத்துக் கொள்வது பிற்காலத்தில் நமக்கும் நமது சந்ததியினருக்கும் உதவியாக இருக்கும். இதுவும் ஒருவித முதலீடு தான். பாதுகாப்பான முதலீடு. சொத்து சேர்ப்பதற்கான நவீன வருங்கால வயதானவர்களுக்கான வசதியான முதலீடு.

    • தற்போது புற்றுநோய்க்கு பல்வேறு அதிநவீன அறுவை சிகிச்சைகள் வந்து விட்டன.
    • புற்று நோய்க்கான மருத்துவ சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

    முன்பு புற்றுநோய்(கேன்சர்) வந்து விட்டால் குணப்படுத்த முடியாது என்ற கருத்து மக்கள் மத்தியில் பரவலாக இருந்தது. புற்றுநோய் வந்து விட்டால் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எப்படியும் இறந்து விடுவார்கள் என்று கூறுவதை நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் தற்போது புற்றுநோய்க்கு பல்வேறு அதிநவீன அறுவை சிகிச்சைகள் வந்து விட்டன. புற்றுநோய் கட்டிகளை அகற்றி குணப்படுத்தப்பட்டவர்கள் பலர் உள்ளனர். அந்த வகையில் பெருங்குடல் புற்று நோய் எளிதில் அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தப்பட்டு வருகிறது.

    இது குறித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள ஸ்ரீ குமரன் மருத்துவமனையின் குடல் நோய் மற்றும் நுண்துளை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜெ.பாலமுருகன் கூறியதாவது:-

    பெருங்குடல் புற்று நோய்

    புற்று நோய்களில் பல வகைகள் உள்ளன. அதில் ஒன்று பெருங்குடல் புற்று நோய். இந்த புற்று நோய் ஜீரண மண்டலத்தின் கடைசி பகுதியான பெருங்குடல் மற்றும் மலக்குடல் பகுதியில் ஏற்படும்.

    பொதுவாக பெண்களுக்கு மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படும். ஆண்களுக்கு நுரையீரல் புற்று நோய் ஏற்படும். அதற்கு அடுத்தபடியாக பெருங்குடல் புற்றுநோய் அதிக அளவில் ஏற்படுகிறது.

    மரபணு கோளாறு

    பெருங்குடலில் தான் நீர்சத்து உறிஞ்சப்பட்டு மனித கழிவு உருவாகுகிறது. இந்த பெருங்குடல் புற்றுநோய் மரபணு கோளாறு, குடும்பத்தில் மூதாதையர்களுக்கு யாருக்காவது(பரம்பரையாக) இருந்தால் வரும். உணவு பழக்க வழக்கங்களாலும் ஏற்படும். புகை பிடித்தல், மது அருந்துதல், இறைச்சி வகைகளை அதிகமாக உண்பதாலும் இந்த புற்றுநோய் ஏற்படும்.

    தற்போது யாரும் கீரை போன்ற நார்ச்சத்து உணவுகளை அதிகம் சாப்பிடுவது இல்லை. குறிப்பாக மேலை நாட்டு உணவு வகைகளையே அதிகம் விரும்பி சாப்பிடுகிறார்கள். இதனால் இந்த புற்று நோய் ஏற்படுகிறது. இந்த புற்று நோயை கண்டறிய வயிற்று பகுதியில் ஸ்கேன் மற்றும் குடல் உள்நோக்கி கருவிகள்(colonoscopy) செய்து பார்க்க வேண்டும்.

    மூல நோய்

    குடல் புற்று நோய் அறிகுறி இருந்தால் மலக்குடல் வழியாக ரத்தம் வரும். அதனால் நாம் மூல நோய் வழியாகத்தான் ரத்தம் வருகிறது என எண்ணக்கூடாது. 85 முதல் 90 சதவீதம் வரை மூலநோய் இருக்கலாம். 15 சதவீதம் பெருங்குடல் புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். இதேபோல வலது பக்க பெருங்குடல், மேல் பகுதியில் ரத்தக்கசிவு இருக்கும். அது தெரியாமல் கூட இருக்கலாம்.

    உடலில் ஹீமோகுளோபின்(ரத்த அளவு) குறைந்து கொண்டே இருக்கும். அவ்வாறு இருப்பவர்களுக்கு உடல்சோர்வு, பசியின்மை, மலச்சிக்கல், ரத்தசோகை போன்றவை காரணமாக இருக்கும். இடது பக்க பெருங்குடலில் புற்றுநோய் கட்டிகள் ஏற்பட்டு பின்னர் அடைப்பு ஏற்படும். மேலும் மலச்சிக்கலுடன், ஒரிரு நாட்கள் வயிற்றுப்போக்கு, வாந்தி என அடிக்கடி ஏற்பட்டால் கூட பெருங்குடல் புற்றுநோய்க்கான அறிகுறியாக தென்படும்.

    தொடக்க நிலை

    இதை கவனிக்காமல் விட்டால் உடலின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவக்கூடும். இதற்கு தகுந்த அறுவை சிகிச்சை முறை மூலம் குணப்படுத்தலாம். இதை தொடக்க நிலையிலேயே கண்டறிந்தால் முற்றிலும் குணப்படுத்தலாம். இதற்கு அறுவை சிகிச்சை ஹீமோதெரபி, மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை செய்ய வேண்டும். ஆனால் இதில் எந்த நோயாளிக்கு எந்த வகையான சிகிச்சை முறை தேவை என்பதை புற்றுநோய் மருத்துவக்குழு தான் முடிவு செய்யும்.

    அறுவை சிகிச்சைகளும் 2 வகையாக மேற்கொள்ளப்படும். ஒன்று வயிற்றை திறந்து அறுவை சிகிச்சை செய்யப்படும். மற்றொரு முறை நுண்துளையிட்டு அறுவை சிகிச்சை(laparoscopy) மூலம் புற்றுநோய் கட்டிகள் அகற்றப்படும். இந்த சிகிச்சை முறையை சிறந்த அறுவை சிகிச்சை டாக்டர்களை கொண்டு செய்ய வேண்டும். வயிற்றை திறந்து அறுவை சிகிச்சை செய்வதை காட்டிலும், லேப்ராஸ்கோப்பி மூலம் நுண்துளை அறுவை சிகிச்சை முறை என்பது மிகவும் துல்லியமாக செய்யப்படும் அறுவை சிகிச்சையாகும்.

    கதிர்வீச்சு சிகிச்சை

    வயிற்றை திறந்து செய்யப்படும் அறுவை சிகிச்சை செய்தால் அவர்கள் குணமடைந்து வீடு திரும்ப 10 நாட்களுக்கு மேல் ஆகும். ஆனால் லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை செய்தால் மறு நாளே நோயாளி எழுந்து நடக்கலாம். 4 நாட்களில் வீடு திரும்பலாம். அறுவை சிகிச்சை முடிந்த பின்னர் புற்று நோய்க்கான மருத்துவ சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

    பெருங்குடல், மலக்குடல் புற்று நோயை முதல் மற்றும் 2-வது நிலைகளிலேயே கண்டறிந்தால் துல்லியமாக குணப்படுத்தி விடலாம். ஆரம்ப நிலையில் அலட்சியமாக இருந்து விட்டு நோய் முற்றிய நிலையில் சிகிச்சை மேற்கொண்டால் குணப்படுத்துவது சற்று கடினம். தற்போது இந்த பெருங்குடல் புற்று நோய்க்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள ரோபோடிக் லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சையும் வந்து விட்டது. எனவே நாம் விழிப்புடன் இருந்தால், பெருங்குடல் புற்று நோயை குணப்படுத்தி விடலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒரு ஆப்பிளில் 104 கலோரிகள், 27 கிராம் மாவுச்சத்து, 14 கிராம் சர்க்கரை இருக்கிறது.
    • ஆப்பிள் அனைவருக்கும் பிடித்த சுவையான பழம்.

    ஆப்பிள் அனைவருக்கும் பிடித்த சுவையான பழம். இதில் வைட்டமின் சி, நார்ச்சத்து, ஆன்ட்டிஆக்சிடன்ட்ஸ் (Antioxidants) அதிகமாக உள்ளது.

    ஆப்பிளில் உள்ள ஆன்ட்டிஆக்சிடன்ட்ஸ் குறிப்பாக குயிர்செட்டின் (Quercetin), பிளோரிசின் (Phlorizin), கிளோர்ஜெனிக் ஆசிட் (Chlorgenic acid) ஆகியவை இன்சுலின் எதிர்மறை நிலையை (Insulin Resistance) குறைத்து இன்சுலின் செயல் திறனை அதிகப்படுத்தி, கணையத்தின் பீட்டா செல்களை இன்சுலினை அதிகமாக சுரக்க செய்கிறது.

    ஆப்பிளில் உள்ள அதிகமான நார்ச்சத்து செரிமானத்தை தாமதப்படுத்தி ரத்தத்தில் சர்க்கரை அளவை உடனே அதிகமாகாமல் தடுக்கிறது. ஒரு ஆப்பிளில் 104 கலோரிகள், 27 கிராம் மாவுச்சத்து, 14 கிராம் சர்க்கரை இருக்கிறது. ஆப்பிளில் அதிகமான அளவு மாவுச்சத்து இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் அதிகமான அளவு சாப்பிடக்கூடாது. வைட்டமின்கள் மற்றும் ஆண்டிஆக்ஸிடன்ட்ஸ் தோலில் இருப்பதால் தோலுடன் சேர்த்து தான் ஆப்பிளை சாப்பிட வேண்டும். ஜூஸ் வடிவில் குடிக்க கூடாது.

    நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா), காஞ்சிபுரம்

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • ஒரு முட்டையில் கார்போஹைட்ரேட் மிகக் குறைந்த அளவில் இருக்கிறது.
    • ஒரு முட்டையில் 75 கலோரிகள் இருக்கிறது.

    நீரிழிவு நோயாளிகளுக்கு முட்டை ஒரு மிகச்சிறந்த உணவாக இருப்பதற்கு கீழ்கண்டவை முக்கிய காரணங்களாக கருதப்படுகிறது. ரத்த சர்க்கரையை அதிகப்படுத்தக்கூடிய கார்போஹைட்ரேட் ஒரு முட்டையில் மிகக் குறைந்த அளவில் இருக்கிறது. (0.5 கிராம்). இதில் உள்ள அதிகமான அளவு புரதம் (புரோட்டீன்) (ஏறக்குறைய 7 கிராம்) செரிமானத்தை தாமதப்படுத்தி, சாப்பிட்ட உடனே ரத்த சர்க்கரை அளவை அதிகப்படுத்தாமல் தடுக்கிறது. முட்டையில் வைட்டமின் ஏ, டி, ஈ, கே, பி12 ஆகியவையும் தசை மற்றும் நரம்புகளுக்கு தேவையான பொட்டாசியம், தோலுக்கு முக்கியமான வைட்டமின் பயோடின், மூளை வளர்ச்சிக்கு முக்கியமானதாக கருதப்படும் கோலின் ஆகியவை அதிக அளவில் இருக்கிறது .

    ஒரு முட்டையில் 75 கலோரிகள் இருக்கிறது. இதில் 15 கலோரிகள் வெள்ளைப் பகுதியிலும், 60 கலோரிகள் முட்டையின் மஞ்சள் பகுதியிலும் இருக்கிறது. அதனால் நீரிழிவு நோயாளிகள் ஒரு முட்டையை முழுவதுமாக சாப்பிட்டால் ஒரு வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முட்டை சாப்பிடலாம். மஞ்சள் கருவை நீக்கி வெள்ளை பகுதி மட்டும் சாப்பிட்டால் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முட்டை சாப்பிடலாம்.

    முட்டையில் ஒன்பது வகையான அமினோ அமிலங்கள் இருப்பதால் இதை ஒரு முழுமையான புரதம் (கம்ப்ளீட் புரோட்டின்) என்று அழைக்கிறார்கள். ஒரு முட்டையின் மஞ்சளில் கிட்டத்தட்ட 184 கிராம் கொலஸ்ட்ரால், 5 கிராம் நிறைவுற்ற கொழுப்பு இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் அதை தவிர்ப்பது நல்லது. முட்டையை அவித்து சாப்பிடுவது நல்லது.

    நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா), காஞ்சிபுரம்

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
    • வெதுவெதுப்பான தண்ணீராக இருந்தால் உடலுக்கு நல்லது.

    தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கிய பின்பு தான் வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால், இந்த வருடம், அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. கரூர், சேலம், வேலூர் மாவட்டங்களை தொடர்ந்து மதுரையில் அதிக அளவில் வெயில் பதிவாகி வருகிறது.

    அதாவது, தினமும் 102 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகிறது. கோடை வெயில் அதிகமாக இருப்பதால், மர நிழலை தேடி ஓடுவதை போல், குளிர்பானங்களை தேடி அதனை ஆசையாய் பருகிவருகிறோம். இந்த நிலையில் வெயில் காலங்களில் காது, மூக்கு, தொண்டை பிரச்சினை அதிகமாகி வருகிறது. இதுகுறித்து மதுரை அரசு ஆஸ்பத்திரியின் காது, மூக்கு, தொண்டை பிரிவு துறை தலைவர் டாக்டர் தினகரன் கூறியதாவது:-

    தற்போது வெயில் அதிகமாக இருப்பதால், உடலில் உள்ள நீர் சத்துகள் உடனடியாக குறைந்து விடுகிறது. அதனை அதிகப்படுத்துவதற்கு குளிர்பானங்களை சாப்பிடுகிறோம். அதாவது, குளிர்ந்த நீர், குளிர்ந்த பானங்களால் மூக்கடைப்பு பிரச்சினை, அடிக்கடி தும்மல் வரும். அதனை தொடர்ந்து, காது வலி வருகிறது. அதன்பின்னர், தொண்டை வலியும் வருகிறது. குளிர்பானங்களை காட்டிலும் எலுமிச்சை சாறு, டீ போன்றவற்றை அருந்தலாம். வெயில் காலத்திற்கு ஏற்ற உணவாக இதுபோன்ற உணவுகள் உள்ளது. முடிந்த வரை வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும். வெதுவெதுப்பான பானங்களை கோடைக்காலத்தில் அருந்த வேண்டும்.

    அதுபோல், வெயிலில் சென்று விட்டு உடனடியாக வீட்டிற்கு வந்த உடன், குளிர்ந்த பானங்கள் சாப்பிடக்கூடாது. ஏனென்றால், உடலில் உள்ள வெப்பநிலையும், அறையில் உள்ள வெப்பநிலையில் சமமாக இருக்காது. எனவே, வெளியில் சென்று விட்டு வந்தால், குறைந்தபட்சம் அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த பானங்களை சாப்பிடலாம்.

    வெயில் காலத்தில் பெரியவர்களும், குழந்தைகளும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். அவர்களுக்குத்தான் பல்வேறு பிரச்சினைகள் வருகிறது. அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே இருக்கும்.

    கோடைக்காலம் வந்தாலே காது, மூக்கு, தொண்டை பிரச்சினை தான் அதிக அளவில் வருகிறது. பொதுவாக ஏப்ரல், மே மாதங்களில் வெயில் அதிகம் இருப்பதால் காது, மூக்கு, தொண்டை பிரிவிற்கு சிகிச்சைக்கு அதிக அளவில் நோயாளிகள் வருகின்றனர். ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வரும் வெளிநோயாளிகளின் எண்ணிக்கையை காட்டிலும் இரு மடங்கு வருகிறது. இந்த பிரச்சினைகளை தீர்க்க அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். அதுவும், வெதுவெதுப்பான தண்ணீராக இருந்தால் உடலுக்கு நல்லது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×