என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    • நோய் எதிர்ப்பு சக்தி என்பது ஒரு உறுப்போ ஒரு தசையோ ஒரு செல்லோ மட்டுமே சம்பந்தப்பட்டது இல்லை.
    • நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ள நாம் என்ன செய்வது என்று கீழ்வருமாறு பார்ப்போம்.

    வெளியே மழை பொழிகிறதோ வெயில் அதிகமாக காய்கிறதோ இல்லை குளிர் உடலைத் தாக்குகிறதோ. நாம் மழையையோ வெயிலையோ குளிரையோ நிறுத்த முடியாது. ஆனால் நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள குடை பிடித்துக் கொள்கிறோம், நிழலை தேடுகிறோம் மற்றும் கம்பளி உடைகளை அணிந்து கொள்கிறோம்.. அதைப் போலத்தான் நம்மை சுற்றிலும் வைரஸ் பாக்டீரியா ஃபங்கஸ் போன்ற நோய் தொற்று கிருமிகள் இருக்கின்றன அவையெல்லாம் நம் மூச்சுக்காற்று மூலமாகவும், உணவு தண்ணீர் மூலமாகவும் நம் உடலுக்குள் சென்று கொண்டு தான் இருக்கும். இந்த கிருமிகளில் இருந்து நம்மை பாதுகாக்க இதற்காகத்தான் இயற்கை ஒரு அரணை நமக்கு கொடையாக கொடுத்துள்ளது. அதுதான் நம் நோய் எதிர்ப்பு சக்தி.

    இந்த நோய் எதிர்ப்பு சக்தி என்பது ஒரு உறுப்போ ஒரு தசையோ ஒரு செல்லோ மட்டுமே சம்பந்தப்பட்டது இல்லை. நம் உடலின் மொத்த உறுப்புகளின், தசைகளின் இணக்கமான ஒத்திசைவே நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியாக விளங்குகிறது. எனவே நம் உடலின் எல்லா உறுப்புகளையும் எல்லா தசைகளையும், ரத்த ஓட்டங்களையும், நிணநீர் ஓட்டங்களையும், நரம்புகளையும் நாம் நல்ல முறையில் சீரமைத்துக் கொள்ள வேண்டும். நம் உடல் மட்டுமின்றி நம் மனதை மிகவும் முக்கியத்துவத்துடன் நாம் பாதுகாத்து சரியான முறையில் இயக்க பழகிக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் நம் உடலின் எதிர்ப்பு சக்தி மிகவும் துல்லியமாக செயல்படும். சரி நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ள நாம் என்ன செய்வது என்று கீழ்வருமாறு பார்ப்போம்.

    புகை பிடித்தல்: புகை பிடித்தலை அறவே ஒழிப்போம். ஒவ்வொரு சிகரெட்டை புகைக்கும் போதும் நம் வாழ்நாளில் ஒரு சில நிமிடங்களை நாம் இழக்கிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். புகை பிடிப்பது நம் உடலின் நுரையீரலை மட்டுமின்றி ரத்த ஓட்டங்களையும் பாதிக்கிறது. உடலில் நச்சுப் பொருட்கள் தேங்குவதை கூட்டுகிறது. இதனால் நம் உடலின் எதிர்ப்பு சக்தி மிகவும் பாதிப்படைகிறது என்பதை மறுக்க முடியாது. மேலும் புகைபிடிப்பவர்கள் தங்களின் ஆரோக்கியத்தை மட்டுமின்றி அவர்கள் வெளியிடும் புகையை சுவாசிக்கும் குடும்பத்தில் சமுதாயத்தில் உள்ள மற்றவர்களும் இதனால் பாதிப்படைகிறார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே புகை என்பதை அறவே ஒழிக்க வேண்டும்.

    ஆரோக்கியமான உணவு பழக்கம்: நம் உணவில் நிறைய பழங்களும் பச்சைக் காய்கறிகளும் இருக்க வேண்டியது அவசியம். அதேபோல் மாவுச்சத்து புரதச்சத்து மற்றும் கொழுப்புச் சத்துக்களும் சரிவிகித அளவில் இருப்பதை உணர்ந்து சாப்பிட வேண்டும். உணவை நன்கு ரசித்து நிதானமாக மென்று உமிழ்நீருடன் கலந்து உண்ண வேண்டும். பசி இல்லாத போது எதையும் சாப்பிடுவதை தவிர்ப்பதும் நிதானமாக சாப்பிடும் பழக்கத்தை மேற்கொண்டாலும் நாம் பல நோய்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம்.

    மிதமான உடற்பயிற்சி: உடற்பயிற்சி என்பது இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏதும் இல்லை. துரித நடை பயிற்சி சைக்கிள் ஓட்டுதல், நீச்சல், ஓட்டம், நடனம் ஆடுதல், யோகாசனம் என்று நம் மனதிற்கு பிடித்த எந்த ஒன்றை வேண்டுமானாலும் செய்யலாம். வாரத்தில் ஐந்து நாட்களாவது இதை கடைபிடிப்பது நல்லது.

    சரியான எடை: உடல் பருமன் என்பது பலவிதமான நோய்களுக்கு வழி கோல்வதுடன் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் பாதிக்கக் கூடியதாக இருக்கிறது. எனவே உடல் எடையை சரியான முறையில் பராமரிப்பது மிகவும் அவசியம்.

    தூக்கம்: குறைந்தபட்சமாக 7 மணி நேர தூக்கம் ஒருவருக்கு மிகவும் அவசியம். குழந்தைகளுக்கு இன்னும் சற்று அதிகமான தூக்கம் நல்லது. தூங்கும் இடம் வசதியானதாகவும் காற்றோட்டம் உள்ளதாகவும் இருப்பது அவசியம்.

    உடல் சுகாதாரம்: பலவிதமான நோய்கிருமிகள் சுகாதாரமற்ற சூழலில் பெருகி வளர்ந்து நம்மை தாக்குகிறது. எனவே சமைக்கும் பொருட்களை சுத்தமானதாக தேர்ந்தெடுத்து நன்கு கழுவி சமைப்பது நல்லது. குறிப்பாக இறைச்சி உணவுகளை நீண்ட பொழுது வைத்திருக்காமல் அவ்வப்பொழுது சமைத்து உண்பது நல்லது. சாப்பிடும் முன்பும் வெளியில் சென்று வந்தாலும் கைகளை நன்கு கழுவ வேண்டும்.

    மன உளைச்சல்: மனதை லேசாக அமைதியாக வைத்துக் கொள்ள பழக வேண்டும். இதற்கு தியானம் பெரிதும் உதவுகிறது. வீட்டிலும் பணியிடங்களிலும் முடிந்தவரை தேவையற்ற விஷயங்களை தவிர்ப்பதும் நல்லது. உறவுகளுக்குள் சிக்கல் ஏற்படும் பொழுது உடனடியாக அதை பேசி தீர்த்துக் கொள்வது நன்மை பயக்கும்.

    நாம் செய்ய வேண்டிய கடமையாக நம் உடலையும் மனதையும் சரியாக ஆரோகியமாக வைத்துக்கொண்டாலே போதும், நம் உடலுக்குள் நுழையும் வேண்டாத கிருமிகளை நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி நம் துணை மற்றும் உதவி இன்றியே துரிதமாக விரட்டி அடித்து விடும்.

    • இதில் 3.7 கிராம் நார்ச்சத்து மற்றும் 3 கிராம் புரதம் இருக்கிறது.
    • இதில் நார்ச்சத்து மிக அதிகமாக உள்ளது.

    கொத்தவரங்காய் சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவு குறையும் என்பது உண்மைதான். கொத்தவரங்காயில் நார்ச்சத்து மிக அதிகமாக இருப்பதோடு, வைட்டமின் சி, வைட்டமின் ஏ, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், இரும்பு சத்து, போலேட் ஆகியவையும் அதிகமாக இருக்கிறது. 100 கிராம் கொத்தவரங்காயில் 35 கலோரிகள் தான் இருக்கிறது.

    மேலும் இதில் 3.7 கிராம் நார்ச்சத்து மற்றும் 3 கிராம் புரதம் இருக்கிறது. இதன் சர்க்கரை உயர்தல் குறியீடு (கிளைசிமிக்ஸ் இன்டெக்ஸ் ) மிகக் குறைவு என்பதால் நீரிழிவு நோயாளிகள் இதனை தயக்கமின்றி சாப்பிடலாம்.

    இதன் விதைகளில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து, குடலில் உள்ள நன்மை தரக்கூடிய பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவித்து குடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இது ரத்தத்தில் எல்.டி.எல். எனப்படும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது. மேலும், இது பித்தப்பையில் உள்ள கற்களை கரைக்கக்கூடிய திறன் படைத்தது.

    இதில் உள்ள பைட்டோநியூட்ரியன்ட்ஸ் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கிறது. போலேட் மற்றும் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால் கருவுற்றிருக்கும் பெண்கள் இதை தாராளமாக சாப்பிடலாம். இத்தகைய நன்மைகளைப் பெற்றிருக்கும் கொத்தவரங்காய் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவாக கருதப்படுகிறது. இதில் நார்ச்சத்து மிக அதிகமாக இருப்பதால் உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்ளும்போது வயிறு சம்பந்தப்பட்ட செரிமான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

    நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா), காஞ்சிபுரம்

    • வெந்தயத்தை கர்ப்பிணி பெண்கள் தவிர்ப்பது நல்லது.
    • வெந்தயம் கர்ப்பப்பையில் சுருக்குதல் உண்டாக்கி கருச்சிதைவு ஏற்படலாம்.

    நீரிழிவு நோயாளிகள் வெந்தயத்தை ஊற வைத்து சாப்பிடுவதால் சர்க்கரை அளவு குறையும் என்பது உண்மைதான். வெந்தயத்தில் உள்ள கேலக்ட்டோமேனான் என்ற நார்ச்சத்து செரிமானத்தை தாமதப்படுத்தி கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை உறிஞ்சுதலை வயிற்றில் குறைத்து, குளுக்கோஸ் ஸ்பைக்ஸ் வராமல் தடுக்கிறது.

    மேலும் வெந்தயத்தில் உள்ள ஹைட்ராக்சி லியூஸின் என்ற வேதிப்பொருள் இன்சுலின் உணர்திறனை அதிகரித்து இன்சுலின் சுரப்பதை மேம்படுத்தி, ரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது. இது 2015-ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டது.

    வெந்தயத்தில் உள்ள ட்ரைகோணலின் என்ற வேதிப்பொருள் இன்சுலின் திறம்பட செயல்பட உதவுகிறது. வெந்தயத்தை மென்று சாப்பிட்டால் அல்லது 10 கிராம் வெந்தயத்தை ஒரு டம்ளர் நீரில் இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் காலை குடித்தால் நீரிழிவு நோயாளிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

    வெந்தயத்தில் உள்ள சப்போனின் என்ற ஒரு வேதிப்பொருள் ரத்தத்தில் உள்ள எல்.டி.எல் கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. வெந்தயத்தை கர்ப்பிணி பெண்கள் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் வெந்தயம் கர்ப்பப்பையில் சுருக்குதல் உண்டாக்கி கருச்சிதைவு ஏற்படலாம். மேலும் வார்பெரின் போன்ற மருந்துகளுடன் வெந்தயம் எதிர் செயல் புரிவதால் இம்மருந்துகளை உட்கொள்பவர்கள் வெந்தயம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • கோடை காலத்தில் ‘டேபிள் பேன்’ பயன்படுத்துவது நல்லது.
    • தேவையில்லாமல் விளக்குகளை எரியவிடக்கூடாது.

    கோடைகாலத்தில் அதிகரிக்கும் வெப்பத் தாக்கம் வீட்டின் உள்ளேயும் வெளிப்படும். அப்போது மின் விசிறியை உபயோகித்தாலும் அனல் காற்றுதான் அறைக்குள் சுழன்று கொண்டிருக்கும். வீட்டில் 'எக்ஸாஸ்ட் பேன்' இருந்தால் அதை உபயோகப்படுத்துவது நல்லது. பெரும்பாலும் சமையல் அறையில்தான் 'எக்ஸாஸ்ட் பேன்' பயன்பாட்டில் இருக்கும். சமையல் முடிந்ததும் அதனை அணைத்துவிடாமல் சில மணி நேரங்கள் ஓட விடுவது வீட்டில் இருக்கும் வெப்பம் சூழ்ந்த காற்றை வெளியேற்ற உதவும். அதனால் அறைக்குள்ளும் வெப்பத்தாக்கம் குறையும்.

    கோடை காலத்தில் 'டேபிள் பேன்' பயன்படுத்துவது நல்லது. அது அதிக அளவில் வெப்ப காற்றை வெளியேற்றாது. அதன் முன்பு அகன்ற பாத்திரத்தில் ஐஸ்கட்டிகளை கொட்டி வைக்கலாம். டேபிள் பேனில் இருந்து வெளிப்படும் காற்று ஐஸ்கட்டிகளில் பரவி அறையில் குளிர்ந்த காற்றை வீசச்செய்யும்.

    கோடை காலத்தில் சிந்தடிக், பாலியஸ்டர் போன்ற துணிகளால் ஆன திரைச்சீலைகளை பயன்படுத்தினால் அது அதிக வெப்பத்தை உமிழும். திரைச்சீலைகள் மட்டுமின்றி சோபா கவர், மெத்தை, தலையணை உறை போன்றவற்றுக்கும் காட்டன் துணிகளை பயன்படுத்தவேண்டும். மின் சாதனங்களும் வெப்பத்தை உமிழக்கூடியவை என்பதால் கோடை காலத்தில் அவற்றின் பயன்பாட்டை குறைத்துக்கொள்ள வேண்டும். பகல்வேளையிலும், இரவு வேளையிலும் தேவையில்லாமல் விளக்குகளை எரியவிடக்கூடாது.

    வீட்டில் கணினி இருந்தால் அதனை உபயோகித்து முடித்ததும் அணைத்துவிட வேண்டும். பிரிட்ஜும் வெப்பத்தை உமிழும் என்பதால் அதில் அதிக பொருட்களை சேமித்துவைக்கக்கூடாது. அவை அதன் செயல்பாட்டை அதிகரிக்க செய்து அதிக வெப்பத்தையும் வெளியேற்றும். வீட்டில் தேவையற்ற பொருட்கள் சேர்வதற்கும் அனுமதிக்கக்கூடாது. அவையும் வெப்பத்தை கடத்தும். வீட்டை சுற்றி காலி இடம் இடம் இருந்தால் ஆங்காங்கே செடிகள் வளர்க்கலாம்.

    அவை வீட்டுக்குள் குளிர்ச்சி தன்மை நிலவ உதவும். அறைக்குள் ஆங்காங்கே கண்ணாடி டம்ளர்கள், குவளைகளில் கூழாங்கற்களைப் போட்டு வைத்தாலும் வீட்டில் குளுமை தென்படும். வீட்டின் மொட்டை மாடி தரைத்தளத்தில் மாலை வேளையில் தண்ணீர் தெளித்தால், இரவு வேளையில் சீலிங் வழியாக வெப்பம் கீழே வருவது தடுக்கப்படும். அடிக்கடி தரைத்தளத்தை 'மாப்' போட்டு துடைத்து வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்வதும் நல்லது. அறைகளுக்குள் காற்று விசாலமாக புகும்விதத்தில் வீட்டை வடிவமைத்து கட்டுவது மிக அவசியம்.

    • உடல் பருமன் அதிகரிக்கும்போது புற்றுநோய்க்கான பரிசோதனை செய்துகொள்வது நல்லது
    • தெருவுக்குத் தெரு புற்றுநோய் சிறப்பு மருத்துவமனைகள் முளைத்துவிட்டன.

    இன்று உலகை அச்சுறுத்தும் முக்கிய நோயாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறது புற்றுநோய். இந்தியா போன்ற நாடுகளில் இதன் தாக்கம் ரொம்பவே அதிகம். அடிப்படை வசதிகள் கூட இல்லாத கிராமங்களில் கூட இந்நோய் ஆழமாக ஊடுருவிவிட்டது. அதனால் தெருவுக்குத் தெரு புற்றுநோய் சிறப்பு மருத்துவமனைகள் முளைத்துவிட்டன.

    நல்ல வசதி, வாய்ப்பு இருப்பவர்கள் ஆரம்பத்திலேயே நோயை கண்டறிந்து சரியான சிகிச்சை பெற்று முழுமையாக குணமடைந்து விடுகின்றனர். ஆனால், வசதி, வாய்ப்பில்லாத பலர் இறுதிக் கட்டத்தில் நோயை கண்டறிந்து மரணத்தைத் தழுவுகின்றனர். இந்நிலையில், ''புகைப்பிடித்தலை விட உடல் பருமன்தான் புற்று நோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணியாக இருக்கிறது...'' என்று அதிர்ச்சியளிக்கிறது சமீபத்திய ஆய்வு.

    இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு மருத்துவ நிறுவனம் பல ஆண்டுகளாக புற்றுநோய் குறித்து ஆய்வு செய்து இந்தத் தகவலை வெளியிட்டிருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு பால் புட்டியால் குழந்தைகளுக்குப் புற்றுநோய் ஏற்படுகிறது என்ற அதிர்ச்சித் தகவலை உலகுக்குத் தெரிவித்ததும் இந்த நிறுவனம்தான்.

    குடல், சிறுநீரகம், கல்லீரல், கருப்பை புற்றுநோய் உட்பட 13 வகையான புற்றுநோய்களுக்கு முக்கிய காரணியாக இருப்பது உடல் பருமன் தான் என்று அடித்துச் சொல்கிறது அந்த ஆய்வு. இந்த வகையில் உலகம் முழுவதும் உடல் பருமன் காரணமாக பத்து லட்சத்துக்கும் அதிகமானோர் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனராம்.

    'புகைப்பிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும்' அளவுக்கு 'அதிகமான உடல் பருமனும் புற்றுநோயை உண்டாக்கும்' என்று நாம் விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை என்பது அந்த ஆய்வு முன்வைக்கும் முக்கிய குற்றச்சாட்டு.

    உடல் பருமன் உடைய எல்லோரையுமே புற்றுநோய் தாக்காது என்பது இதில் சின்ன ஆறுதல். ஆனால், தேவையில்லாமல் உடல் பருமன் அதிகரிக்கும்போது புற்றுநோய்க்கான பரிசோதனை செய்துகொள்வது நல்லது என்று ஆலோசனை தருகிறார்கள் மருத்துவர்கள்.

    • ஆரோக்கியமான, உறுதியான உடல்தான் பதற்றமில்லாத மனதுக்கு ஆதாரம்.
    • யோகா, மூச்சுப் பயிற்சி போன்றவை பயன்தரும்.

    உடல், மனம் என இரண்டையும் தனித்தனியாக பிரித்துப் பார்க்க முடியாது. சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த பிரச்சினைகளுக்கு மனப்பதற்றமும் ஒரு காரணமாக இருக்கலாம்.

    மனப்பதற்றத்தை தணிப்பதற்கு நாம் முதலில் செய்ய வேண்டியது, வாழ்க்கை முறையில் மாற்றங்கள்.

    உடல் எடை அதிகமாக இருந்தால் எடையைக் குறைத்தாலே பாதிப் பிரச்சினைகள் சரியாகும். தவறாமல் உடற்பயிற்சி செய்தாலே, மனப்பதற்றமும் மனச் சோர்வும் வெகுவாக குறையும். ஆரோக்கியமான, உறுதியான உடல்தான் பதற்றமில்லாத மனதுக்கு ஆதாரம்.

    குறிப்பாக யோகா, மூச்சுப் பயிற்சி போன்றவை பயன்தரும். காபி, டீ போன்ற பானங்களை அதிகம் அருந்துவதும் மனப்பதற்றத்தை அதிகரிக்கும். அவற்றைக் குறைத்துக்கொண்டு நிறைய காய்கறிகள், பழங்களைச் சாப்பிடுங்கள்.

    சிறு விஷயங்களுக்குக்கூட பதற்றப்பட்டு பதற்றப்பட்டு, பின்னர் அதுவே ஒரு பழக்கமாக ஆகிவிடும். பிறகு பல நேரம் நம்மை அறியாமலேயே பதற்றம் வந்துவிடும்.

    ஒரு விஷயம் நடந்துவிடுமோ என்று நாமே கற்பனை செய்வதால், எதுவும் நடக்கப்போவதில்லை, ஏன் பதற்றப்பட வேண்டும் என்ற விழிப்புணர்வுடன் இருந்தாலே பதற்றம் வராது. இந்த வழிமுறைகள் எல்லோருக்கும் தெரிந்தவைதான். அவற்றைச் செயல்படுத்துவதில்தான் சூட்சுமம் இருக்கிறது.

    • கருப்பு புள்ளிகள் உள்ள பழங்களில்தான் சுவை அதிகமாக இருக்கும்.
    • சீசனின் போது மாம்பழங்கள் கல் வைத்துப் பழுக்கவைக்கப்படுகின்றன.

    தேங்காயை தட்டிப் பார்த்து வாங்குவதுபோல, மாம்பழங்களை தட்டிப் பார்த்துதான் வாங்க வேண்டும். தட்டும்போது சத்தம் சற்று குறைந்திருந்தாலோ, சத்தம் கேட்காமல் இருந்தாலோ அழுகியது அல்லது அதிகம் கனிந்தது என்று அர்த்தம். வாங்கும்போது, நிச்சயம் கவனிக்கவேண்டிய ஒரு விஷயம், பழத்தில் இருக்கும் கருப்பு நிறப் புள்ளிகள். இவை இல்லாத பழங்கள் ஆபத்தானவை. செயற்கை முறையில் கனியவைக்கப்பட்டவை.

    கருப்பு புள்ளிகள் உள்ள பழங்களில்தான் சுவை அதிகமாக இருக்கும். மாம்பழத்தின் உள்ளே காணப்படும் ஆரஞ்சு மற்றும் சிவப்பு கலந்த நிறம் இயற்கையானது. வெறும் மஞ்சள் நிறச் சதையுள்ள பழம் என்றால், அது ரசாயனம் மூலம் செயற்கையாக பழுக்கவைக்கப்பட்டது எனப் புரிந்துகொள்ளலாம். வேதிக்கற்கள், வேதிப்பொருட்கள் ஆகியவற்றின் துணையோடு பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் செரிமான கோளாறுகள், அரிப்பு, வாந்தி, பேதி தொடங்கி, நுரையீரல் பிரச்சினைகள் என பல பாதிப்புகளை உண்டாக்கும் என்பதால் மாம்பழம் வாங்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    மாம்பழத்தில் இருந்து வெளிவரும் வாசனையை வைத்து மாம்பழங்களைத் தேர்வு செய்யலாம். மாம்பழங்களின் தோல், பளிங்கு போல பளபளக்க வேண்டும் என்று எதிர்பார்க்க கூடாது. கருநிற கோடுகள், திட்டுக்கள் இருக்கும் மாம்பழங்களை தாராளமாக வாங்கலாம்.

    சீசனின் போது மாம்பழங்கள் கல் வைத்துப் பழுக்கவைக்கப்படுகின்றன. அதாவது, வெள்ளை நிறத்தில் இருக்கும் 'கால்சியம் கார்பைடு' கற்களை இதற்குப் பயன்படுத்துகிறார்கள். அதோடு, இந்தக்கற்களைப் பொடியாக்கி, ஸ்பிரே போலவும் உபயோகிக்கின்றனர். இந்த ஸ்பிரேக்கள் அடிக்கப்பட்ட மாம்பழங்கள் பளபளவென இருக்கும். அதனால், பழத்தில் இயல்பாக இருக்கும் கருப்பு நிறப் புள்ளிகள் தென்படாது. இப்படி கற்கள், பவுடர் பயன்படுத்தப்பட்டால், மாம்பழத்தில் இருக்கும் சத்துகள் குறைந்துவிடும். எனவே மிக கவனமாக பார்த்து மாம்பழங்களை வாங்க வேண்டும்.

    இயற்கையான முறையில் மாம்பழத்தைப் பழுக்கவைக்க வைக்கோல், ஊதுவத்தி, பேப்பர் ஆகியவையே போதுமானவை. வீட்டில் உள்ளவர்கள், குறைந்த அளவுக்குத்தான் மாங்காய்களை வாங்குவார்கள். அவற்றை பேப்பரில் சுற்றிவைத்து, ஓர் அட்டைபெட்டியில் போட்டு, ஊதுவத்தி ஏற்றிவைக்க வேண்டும். அதன் புகை அந்தப் பெட்டிக்குள்ளேயே இருக்கும்படி காற்றுப் புகாதவாறு மூடிவைக்க வேண்டும். இரண்டே நாட்களில் மாங்காய்கள் பழுத்துவிடும். பச்சையாக, கடினமான காயாக இருந்தால் பழுக்க இரண்டு நாட்கள் தேவைப்படும். சற்றுப் பழமாக இருந்தால் ஒரு நாள்போதுமானது.

    • வெப்பம், வறண்ட வானிலை ஆகியவை சிறுநீரக கற்கள் உருவாகும் வாய்ப்பை அதிகரிக்கும்.
    • கோடை காலத்தில் பெரும்பாலான மக்கள் நீரிழப்பு பிரச்சினையால் பாதிக்கப்படுகின்றனர்.

    கோடை கால நோய்களில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்வது எப்படி? என்பது குறித்து வேலூர் அமுதம் கூட்டுறவு ஆயுஷ் மருத்துவமனை ஆயுர்வேத டாக்டர் சுபஸ்ரீ பியூலா விளக்கம் அளித்துள்ளார்.

    ஆயுர்வேத டாக்டர்

    வேலூர் சத்துவாச்சாரி அமுதம் கூட்டுறவு ஆயுஷ் மருத்துவமனையில் ஆயுர்வேத டாக்டராக பணிபுரிபவர் சுபஸ்ரீ பியூலா. இவர் பெண்களுக்கு கோடை காலத்தில் ஏற்படும் நோய்களும், அதிலிருந்து நம்மை எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்பது குறித்தும் கூறினார்.

    அவர் கூறியதாவது:-

    கோடை காலம் வந்துவிட்டது, அதிகரித்து வரும் வெப்பநிலை பல நோய்களை கொண்டு வரலாம். இந்தியாவில், கோடைக்காலம் ஆண்டின் வெப்பமான பருவமாகும். பொதுவாக மார்ச் முதல் ஜூன் வரை வெப்பமான வானிலை இருக்கும். இந்த நேரத்தில் தோல், கண்கள் மற்றும் இரைப்பை அமைப்பு உள்பட முழு உடலையும் வெப்பம் பாதிக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றாவிட்டால், கடுமையான வெப்பம் மற்றும் இடைவிடாத வறட்சி ஆகியவை பொதுவான கோடைக்கால நோயைக் கொண்டுவரும். கோடையில் ஏற்படக்கூடிய சில நோய்கள் மற்றும் அவற்றைத் தவிர்ப்பதற்கான முறைகள் குறித்து தெரிந்து கொள்வோம்.

    கோடையில் ஏற்படும் நோய்கள்

    கோடை காலத்தில் பெரும்பாலான மக்கள் நீரிழப்பு பிரச்சினையால் பாதிக்கப்படுகின்றனர். ஒருவர் அருந்தும் நீர் அவரது உடல் தேவையை பூர்த்தி செய்யாதபோது நீரிழப்பு ஏற்படுகிறது. நீரிழப்பு சிறுநீர் பாதை தொற்றுகளுக்கு வழிவகுக்கும். எனவே கோடையில் சிறுநீர் பாதை தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகம். கோடை காலத்தில் வானிலை வெப்பமாக இருக்கும். இது கிருமிகள் அல்லது பாக்டீரியாக்கள் வளர ஏற்றதாக இருக்கும்.

    கோடை மாதங்களில் வெப்பம், வறண்ட வானிலை ஆகியவை சிறுநீரக கற்கள் உருவாகும் வாய்ப்பை அதிகரிக்கும். சிறுநீரகக் கல் உருவாவதற்கான ஆபத்து வயதுக்கு ஏற்ப அதிகரிக்கிறது. இருப்பினும், 20 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் கோடையில் சிறுநீரகக் கற்களால் பாதிக்கப்படுகின்றனர். இதில் பெண்களை விட ஆண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

    கோடை காலத்தில் சிறுநீரக கற்கள் ஏற்படுவதற்கு முதன்மையான காரணம் நீர்ச்சத்து குறைபாடுதான். நம்மில் பெரும்பாலோர் ஆண்டு முழுவதும் மற்ற பருவங்களை விட வெப்பமான மாதங்களில் வெளியில் இருக்கிறோம். இதன் விளைவாக அதிக வியர்வை வெளியேறுகிறது. சரியான நீரேற்றம் இல்லை என்றால், உடல் திரவங்கள் உணவு தாதுக்களுடன் அதிக செறிவூட்டப்பட்டு கற்களாக மாறக்கூடும்.

    அன்றாட செயல்பாடுகளைத் தொடரவும், நீர் இழப்பை ஈடுகட்டவும் அதிக தண்ணீர், பழங்கள் மற்றும் பழச்சாறுகள், மோர் மற்றும் இளநீர் ஆகியவற்றை அருந்த வேண்டும்.

    தோல் பிரச்சினைகள்

    நமது தோலில் வெளிப்படும் பகுதி குளிர்காலம் மற்றும் கோடைக்காலம் ஆகிய இரண்டிலும் பாதிக்கப்படுகிறது. நீண்ட நேரம் சூரிய ஒளியில் இருப்பது தீங்கு விளைவிக்கும். சூரியனில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்கள் தோலில் ஊடுருவி பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தும். மேலும், உடலில் மெலனின் உள்ளடக்கம் குறைவாக உள்ளவர்கள் மெலனோமா (ஒரு வகை தோல் புற்றுநோய்) போன்ற கடுமையான தோல் நோய்த்தொற்றுகளுக்கு ஆளாகின்றனர். நீண்ட நேரம் சூரிய ஒளியில் இருப்பது தோல் எரிச்சல், வறட்சி மற்றும் வெடிப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும்.

    சளி, தட்டம்மை, சின்னம்மை, சொறி, தோல் கொப்பளம் போன்றவை கோடை காலத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் பொதுவான நோய்களாகும். வெப்பத் தடிப்புகள் பொதுவாக ஆடைகளால் மூடப்பட்ட பகுதிகளில் ஏற்படும். குழந்தைகளுக்கு இந்த தொற்று அடிக்கடி வலி மற்றும் அரிப்பை ஏற்படுத்துகிறது.

    இரைப்பை குடல் அழற்சி

    வெப்பம் அதிகரிக்கும் போது, ஒருவரது செரிமான கொள்ளளவு குறைந்து சில செரிமான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். எனவே, உங்கள் உணவுப் பழக்கத்தை கவனித்துக்கொள்வது மற்றும் வெப்பத்தை வெல்ல ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடிப்பது அவசியம்.

    வெப்பம் அதிகரிக்கும் போது வயிற்றுக் குடல் அழற்சி பொதுவாக எல்லா வயதினருக்கும் காணப்படும். அதன் அறிகுறிகளில் சில வாந்தி, வயிற்றுப்போக்கு, மலத்தில் ரத்தம், நீர்ப்போக்கு மற்றும் வயிற்று வலி ஆகியவை அடங்கும்.

    மூலிகை, பழங்கள்

    நீங்கள் காரமான, வறுத்த, உணவுகளின் பிரியராக இருக்கலாம், ஆனால் கோடையில் அவற்றைத் தவிர்க்க வேண்டும். அவை குடல் புண், வீக்கம் மற்றும் வயிற்று அழற்சியை கூட ஏற்படுத்தும். புரோபயாடிக்குகள் குடலுக்கு உகந்த பாக்டீரியாவைக் கொண்டிருப்பதால் உதவியாக இருக்கும். மோரில் புரதம் நிரம்பியுள்ளது. அதில் உள்ள பாக்டீரியாக்கள் உங்கள் செரிமான செயல்முறையை எளிதாக்கும். வயிற்றுப்போக்கை நீக்கும்.

    கோடையில் உடல் சூட்டைத் தணிக்க நன்னாரி, வெட்டிவேர், பூசணிக்காய், கற்றாழை, தர்பூசணி, வெள்ளரி, நெல்லிக்காய் போன்ற மூலிகை மற்றும் பழங்களை சாப்பிடலாம்.

    உடற்பயிற்சி

    கோடைகாலத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்ட உணவு முறை, வானிலைக்கு ஏற்ப புதிய உடற்பயிற்சி முறை. வெப்பமான காலநிலையின் ஆரம்பம் உங்கள் உடலை பல்வேறு வகையான நோய்களுக்கு உள்ளாக்கும். எனவே ஆரோக்கியமான கோடைக்காலத்திற்கு நான் கூறிய சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும். அவ்வாறு செயல்பட்டால் கோடை வெப்பத்தில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
    • தற்போது இரண்டு வகையான டயாலிசிஸ் சிகிச்சைகள் உள்ளன.

    நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு (Chronic Kidney Disease) என்பது உலக அளவில் ஒரு பெரும் பிரச்சினையாக உருவாகி வருகிறது. ஒரு ஆய்வு அறிக்கையில் இந்த நோய் இறப்புக்கான காரணங்களின் பட்டியலில் 13வது இடத்தில் இருந்தது. மேலும் 2040ம் ஆண்டில் இது உலக அளவில் இறப்புக்கான காரணங்களின் பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய அளவில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உயர்இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், புகைபிடித்தல் மற்றும் உடல் பருமன் ஆகியவை சிறுநீரக நோய்க்கு வழிவகுக்கும். ஒரு கட்டுப்பாடற்ற நீரழிவு மற்றும் உயர் இரத்த அழுத்த நோயாளி ஒரு இறுதி நிலை சிறுநீரக நோயாளியாக (End Stage renal disease) எளிதாகவும், விரைவாகவும் முன்னேறலாம். இந்நோயின் ஆரம்ப கட்டங்களில் அறிகுறிகள் எதுவும் தென்படுவதில்லை.

    இருதய நோயாளிகள் , நீரழிவு நோயாளிகள், இரத்த கொதிப்பு நோயாளிகள், குடும்பத்தில் மற்றவர்களுக்கு சிறுநீரக கோளாறு இருப்பவர்கள், அதிக உடல் பருமன் உள்ளவர்கள் அவ்வப்போது சிறுநீரக பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

    எடை இழப்பு, பசியின்மை, கை-கால் வீக்கம், மூச்சு திணறல், உடல் சோர்வு, சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல், இரவில் அதிகமாக சிறுநீர் கழித்தல், தூக்கம் இன்மை, தோல் அரிப்பு, தலைவலி போன்ற அறிகுறிகள் சிறுநீரக செயலிழப்பு காரணமாக ஏற்படலாம்.

    நோயின் ஆரம்ப நிலைகளில் சரியான உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் மருந்துகள் உட்கொள்வதன் மூலம் நோய் முற்றிய நிலையை அடைவதை தடுக்க முடியும். சிறுநீரக செயலிழப்பு காரணமாக உடலில் நீர் மற்றும் நச்சுப் பொருள்கள் அதிக அளவில் ரத்தத்தில் கலந்து இருந்தால் அவர்களுக்கு டயாலிசிஸ் சிகிச்சை தேவைப்படும். நவீன டயாலிஸிஸ் சிகிச்சை மூலம் இந்நோயாளிகளின் சராசரி வாழ்நாள் சற்று உயர்ந்துள்ளது.

    தற்போது இரண்டு வகையான டயாலிசிஸ் சிகிச்சைகள் உள்ளன. ஒன்று ஹீமோ டயாலிசிஸ் , மற்றொன்று பெரிட்டோனியல் டயாலிஸிஸ். ஹீமோ டயாலிசிஸ் என்பது உடம்பில் உள்ள ரத்தத்தை ரத்தக்குழாய் (AV Fistula) மூலம் வெளியே எடுத்து ஹீமோ டயாலிசிஸ் இயந்திரத்தினுள் செலுத்தி சுத்திகரிப்பு செய்து மறுபடியும் உடம்பினுள் செலுத்துவதாகும். இது ஒவ்வொரு நோயாளிக்கு ஏற்றவாறு வாரம் இரண்டு அல்லது மூன்று முறை தேவைப்படும் சிகிச்சைக்கு. இச்சிகிச்சைக்கு ஒவ்வொரு முறையும் நோயாளி மருத்துவ நிலையத் திற்கு செல்ல வேண்டியது இருக்கும்.

    பெரிடோனியல் டயாலிசிஸ் சிகிச்சை வீட்டிலிருந்து தினமும் செய்யக்கூடிய சிகிச்சை முறை ஆகும். இதற்காக நோயாளி ஒவ்வொரு முறையும் மருத்துவமனைக்கு வரவேண்டிய அவசியம் இல்லை.

    சிறுநீரக செயலிழப்பிற்கு சிறந்த சிகிச்சையாக தற்போது இருப்பது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை (Renal Transplantation) ஆகும்.

    சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மூலம் மாற்றுச் சிறுநீரகம் பொருத்தப்பட்டவர்கள் சாதாரண மனிதர்களைப் போல இயல்பான வாழ்க்கை வாழமுடியும். எனினும் மாற்றுச் சிறுநீரகம் கிடைப்பது தற்போது அரிதாகி வருகிறது. எனவே சிறுநீரக செயலிழப்பு நோயின் நோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்து அதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்வதன் மூலம் நிரந்தர சிறுநீரக செயலிழப்பை தடுக்க முடியும்.

    கமலா ஸ்பெசாலிட்டி மருத்துவமனை, கோவில்பட்டி

    Dr.R. கிருஷ்ணன்M.D., DM (Nephro)

    • துரித திண்பண்டங்களை கண்டிப்பாக வெயில் காலத்தில் சாப்பிடக் கூடாது.
    • கோரைப்புல் படுக்கை விரிப்புகள் உடற்சூட்டைத் தணித்து, பசியை அதிகரிக்க செய்யும் தன்மை உடையது.

    கோடை காலம் தொடங்கி விட்டாலேஅதனுடன் இணைந்த நோய்களும் உடலுடன் ஒட்டிக்கொள்கின்றன.மழையைகூட தாங்கிக் கொள்ளலாம், ஆனால் வெயிலை ஏற்பது என்பது இயலாதது. அவ்வாறான காலங்களில் வசதி படைத்தவர்கள் கோடைவாச ஸ்தலங்களை நாடிச்செல்வார்கள். ஆனால் நடுத்தர மற்றும் ஏழை, எளியோர் உணவு முறை மாற்றத்தின் மூலம் தான் இந்த கோடையை கடக்க வேண்டும்.

    இன்றைய காலகட்டத்தில் பூமியின் தட்ப வெப்பநிலை மாற்றங்களால் உடல் நிலை பல்வேறுவகையில் பாதிக்கப்படுகிறது. மேலும் மனிதனின் தற்போதைய நவீன வாழ்க்கை முறை, நவீன உணவு முறை மாற்றங்களும் உடல் பாதிப்படையவும், உடற்சூடுஏற்படவும்காரணமாகின்றன.

    இலவம் பஞ்சு மெத்தை, தலையணை, கோரைப்பாய் பயன்படுத்திய காலம் மாறி, இன்றுசெயற்கைபோம் மெத்தை, தலையணைகளை பயன்படுத்த தொடங்கிவிட்டோம். வெயில் காலம் மட்டுமல்ல எல்லா காலத்திலும் படுத்து உறங்க, உட்கார சிறந்தது இலவம் பஞ்சால் செய்த இருக்கை, மெத்தை, தலையனைதான் சிறந்தது. இலவம்பஞ்சு மெத்தை உடல் சூட்டை தணித்து, உடல் சூட்டை சமச்சீராக்கி உடல் முழுவதையும் குளிர்ச்சி அடையச் செய்யும்.

    கொதிக்கும் கோடை வெயில் காலங்களில் போம் வகை செயற்கை மெத்தை, தலையனைகளைப் பயன்படுத்தும் போது தோலில் எரிச்சல், கட்டி, கொப்புளங்கள், கண் எரிச்சல், மலக்கட்டு, மூலம், பவுத்திரம், பிறப்புறுப்பு பாதிப்பு, விந்தணுக்கள்அழிவு, சினைப்பைநீர்க்கட்டி, வெள்ளைப்படுதல், ஞாபக மறதி, உடல் வலி, அசதி போன்றவை வருவதற்கான காரணங்கள் அதிகம்.

    இதைத் தெரிந்து தான் நம் முன்னோர்கள் செயற்கை மெத்தை, தலையணைகளைத் தவிர்த்து இயற்கையில் கிடைக்கும் இலவம் பஞ்சு மெத்தை, தலையணையை பயன்படுத்தி, அதிக உஷ்ணத்தால் ஏற்படும் நோய்கள் வராமல் தற்காத்து வாழ்ந்தனர்.

    காற்றின்இசைக்கேற்ப ஆற்றங்கரையோரம் நடனமாடும் கோரை புற்களைச் சேகரித்து, பதப்படுத்தி, கற்றாழை நாரினால் கோர்த்து சேர்த்த கோரைப்புல் பாய்களின் பயன்பாடு அதிகமாக இருந்த காலத்தில் படுக்கை விரிப்புகளால் உண்டாகும் நோய்கள் மிகக்குறைவாகவே இருந்தது. இப்போது ஆதிக்கம் செலுத்தி வரும் நெகிழிப் பாய்களை குளிர்காலத்தில் பயன்படுத்தலாம் என்றாலும், அவற்றில் உடலுக்கு நன்மை பயக்கும் எவ்வித மருத்துவ குணங்களும் இல்லை என்பதுதான் உண்மை.

    வெயில் காலத்தில் நெகிழிப் பாய்களில் உறங்கினால், நம் உடலும் சூடாகி தோலும் நெகிழும் அளவுக்கு அவை கொதிக்கின்றன. மேலும் உடல் நோய்களையும் ஏற்படுத்துகின்றது. தமிழ் மக்கள் பாரம்பரியமிக்க கோரைப் பாயை படுக்கைவிரிப்புகளாக பயன்படுத்துவது மட்டுமின்றி மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது என்பதை அறிந்துதான் இதைப் பயன்படுத்தி பயனடைந்தனர்.

    இந்தகோரைப்புல் படுக்கைவிரிப்புகள் உடற்சூட்டைத் தணித்து, பசியை அதிகரிக்க செய்யும் தன்மை உடையது. இதில் படுப்பதால் நல்ல தூக்கம் வருவதோடுமலக்கட்டு பிரச்சினைகள்ஏற்படாது. கெட்ட கனவுகள் வராது, உடற்சூட்டினால் ஏற்படும் மூலம், பவுத்திரம் தொந்தரவு வராது, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், குத்தல், வலியை ஏற்படுத்தாது. கண்ணுக்கும், மூளைக்கும்,உடல் முழுமைக்கும் குளிர்ச்சியைத் தரும். ஆண், பெண் பிறப்புறுப்பு பிரச்சினைகள், நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.

    கோரைப் பாய் குளிர்ச்சி தரும்,நல்லநித்திரை தரும்... என்ற பாடல் வரி, கோடைக்காலத்தில் நாம் தேடும் குளிர்ச்சியை வழங்கி, சுகமான உறக்கத்தையும் கோரைப்பாய் அள்ளிக் கொடுக்கும் என்பதைச் சுட்டிக் காட்டுகிறது. எனவேஅழகு, ஆடம்பரம் தவிர்த்து செயற்கை படுக்கை மற்றும் இருக்கை விரிப்புகளை கண்டிப்பாக தவிர்ப்போம்.

    உடற்சூடு அதிகரிக்க காரமான உணவுகள், அதிக சூடான உணவு, நேரம் தவறி உண்பது, நேரம் தவறி உறங்குவது, பல்வேறு நோய்களுக்கு நிறைய மருந்துகளை தொடர்ந்து உண்பது, அடுப்பின் முன் நீண்ட நேரம் நின்று சமைப்பது, அதிக நேரம் வெயிலில் சுற்றுவது, அதிக புகைப்பழக்கம், தலைக்கு, உடலுக்கு எண்ணெய் வைக்காமல் இருத்தல், குளிக்காமல் தவிர்ப்பது போன்ற பல்வேறு காரணங்களால் உடற்சூடு ஏற்படலாம். மேலும் பல்வேறு வகை ஆடைகளை மிகவும் இறுக்கமாக அணிவது, காற்றோட்டம் இல்லாத ஆடைகளை இறுக்கமாக அணிந்திருப்பது, நாள்பட்ட மலக்கட்டு பிரச்சினை இருப்பதும் உடற்சூட்டை அதிகப்படுத்த காரணமாகிறது.

    மனக் கவலை, மன உலைச்சலும் காரணமாகலாம். உடற்சூட்டைபோக்க தலைக்கு எண்ணெய் வைப்பது, வாரத்திற்கு இரண்டு முறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பது, வருடத்திற்குஇரண்டு முறைவயிறு பேதிக்கு சாப்பிடுவது, உணவில் நார்ச்சத்து, புரதச்சத்து, வைட்டமின் சத்துக்கள் நிறைந்த காய், கீரை, பயறு வகைகள், பழங்களைச் சாப்பிடுவது, தண்ணீர் நிறைய குடிப்பது, மோர், பதநீர், இளநீர், நுங்கு, தர்பூசணி, வெள்ளரிக்காய், வெள்ளரிப் பழம் சாப்பிடுவது, எலுமிச்சை பழச்சாறு குடிப்பது, மண்பாணையில் தண்ணீர் வைத்து குடிப்பது, இயற்கை உந்தல்களை (மலம், சிறுநீர்) அடக்காமல் தவிர்ப்பது, இறுக்கமாக ஆடைகள் அணிவதை தவிர்ப்பது, துரித உணவு திண்பண்டங்களை சாப்பிடாமல் தவிர்ப்பது, நிறைய தண்ணீர் குடிப்பது, மது-புகையிலை தவிர்ப்பது, இரவு நீண்ட நேரம் கண் விழித்திருப்பதை தவிர்ப்பது, அதிக காரம், மசாலா சேர்ந்த உணவு திண்பண்டங்களை சாப்பிடாமல் தவிர்ப்பது போன்றவைகளால் உட ற்சூடு வராமல் தடுக்கலாம்.

    உடற்சூட்டைத் தணிக்க திரிபலா சூரணம் -மாத்திரை, அதிமதுர சூரணம்-மாத்திரை, கடுக்காய் சூரணம்-மாத்திரை, பரங்கி ப்பேட்டை சூரணம்-மாத்திரை, நெல்லிக்காய் லேகியம், வெண்பூசணி லேகியம், வில்வாதி லேகியம், துறுஞ்சி மணப்பாகு, நன்னாரி சர்பத் (தரமானது) போன்ற சித்த மருந்துகளைப் பயன்படுத்தலாம்.

    மேலும் துரித உணவுகள், துரித திண்பண்டங்கள் கண்டிப்பாக வெயில் காலத்தில் மட்டுமல்ல எப்பொழுதும் சாப்பிடக் கூடாது. உடலுக்கு குளிர்ச்சி தரும் திண்பண்டங்கள் மற்றும் பாரம்பரிய சிறுதானிய உணவு முறைகளை பின்பற்றினால் உடற்சூடு வராமலும் அதனால் ஏற்படும் நோய்கள் வராமலும் தடுக்கலாம்.

    மேற்கண்ட தகவலை திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் எஸ்.காமராஜ் தெரிவித்துள்ளார்.

    • வெயில் காலத்தில் அதிக அளவில் வியர்வை வெளியேறும்.
    • டீ, காபியை தவிர்ப்பது மிகவும் நல்லது.

    கோடை காலத்தில் இருதய நோயாளிகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார், சென்னையைச் சேர்ந்த பிரபல இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர் என்.விஸ்வநாதன்.

    அவர் கூறியதாவது:-

    வெயில் காலம் இருதய நோயாளிகளுக்கு நிறைய மாற்றங்களை ஏற்படுத்தும். இதனால் மருத்துவர்கள் சொன்ன மாத்திரைகளை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். இது மிகவும் முக்கியம்.

    வெயில் காலத்தில் அதிக அளவில் வியர்வை வெளியேறும். இதனால் உடலில் ரத்த அழுத்தம், பொட்டாசியம், சோடியத்தின் அளவு மாறக்கூடிய வாய்ப்பு உள்ளதால் மயக்கம், சோர்வு ஏற்படும். அப்படிப்பட்ட அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை சென்று பார்க்க வேண்டும். ரத்த அழுத்தம், சர்க்கரை அளவை பரிசோதிக்க வேண்டும். தேவைப்பட்டால் ஈ.சி.ஜி. எடுக்க வேண்டும்.

    பொதுவாக இரண்டு வகையான இருதய நோயாளிகள் இருக்கிறார்கள். ரத்தத்தை வழக்கமான அளவில் 'பம்பிங்' செய்யும் இருதய நோயாளிகள் ஒருவகை. இதயத்தின் 'பம்பிங்' திறன் குறைவாக உள்ள இருதய நோயாளிகள் மற்றொரு வகை. இவர்களில் 'பம்பிங்' திறன் நன்றாக உள்ள இருதய நோயாளிகள் ஒரு நாளைக்கு 3 முதல் 4 லிட்டர் வரை தண்ணீர் அருந்தலாம். 'பம்பிங்' திறன் குறைவாக உள்ள இருதய நோயாளிகள் 1.5 லிட்டர் தண்ணீர்தான் குடிக்க வேண்டும்.

    கூடுமானவரையில் டீ, காபியை தவிர்ப்பது மிகவும் நல்லது. அப்படி அருந்துவதாக இருந்தால், காலையில் எழுந்ததும் அரை லிட்டர் தண்ணீர் குடித்துவிட்டு, மற்ற வேலைகளை தொடங்கலாம். சிறிது நேரம் கழித்து அருந்தலாம்.

    காலை 7 மணிக்கே வெயில் அதிகமாக இருக்கும் என்பதால், இருதய நோயாளிகள் காலையில் நடைபயிற்சி செல்வதை தவிர்க்க வேண்டும். வெயிலில் செல்லும் போது 'சன் ஸ்ட்ரோக்' ஏற்பட்டு ரத்த அழுத்தம் குறையவும், அதிக வியர்வையினால் மயக்கம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே இரவு 7 மணிக்கு பிறகு நடைபயிற்சி செல்லலாம். வெயில் காலத்தில் இருதய நோயாளிகளுக்கும், சர்க்கரை நோயாளிகளுக்கும் மாலை நேர நடைபயிற்சி மிகவும் நல்லது.

    காலை வேளை உணவாக எளிதில் ஜீரணமாகக்கூடிய இட்லி, தோசை போன்றவற்றை சாப்பிடலாம். ஆப்பிள், கொய்யா, பப்பாளி, பேரிக்காய் பழங்களும் சாப்பிடலாம். என்றாலும் அதிகமாக சாப்பிடக்கூடாது. சர்க்கரை நோயாளியாக இருந்தால் இவற்றை அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டும்.

    மதியம் 11 அல்லது 12 மணி அளவில் காய்கறி சூப், மோர் அருந்தலாம். சிறந்த நீர்பானம் என்றால், அது மோர்தான், குறைவாக உப்பு சேர்த்து மோர் அருந்துவது மிகவும் நல்லது. மோர் குடிப்பதால் கொழுப்பு அதிகரிக்காது.

    இளநீரில் இருக்கும் பொட்டாசியம் சத்து உடலுக்கு புத்துணர்ச்சியை அளிப்பதால் இளநீர் குடிக்கலாம். அதேசமயம், இளநீர் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் என்பதால், சர்க்கரை நோயாளிகள் இளநீரை தவிர்க்க வேண்டும். தர்ப்பூசணி பழம் சாப்பிடுவதாக இருந்தால் குறைவாக சாப்பிடுங்கள்.

    நீர்ச்சத்து அதிகம் உள்ள வெள்ளரிக்காய் சாப்பிடலாம். இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது. சர்க்கரையின் அளவு கூடாது என்பதால் சர்க்கரை நோயாளிகளும் இதை சாப்பிடலாம்.

    கோடை காலத்தில் மதிய உணவில் ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி போன்ற அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும். பச்சை காய்கறிகளை அதிகம் சாப்பிடலாம்.

    பச்சை காய்கறிகளெல்லாம் 'கிரீன் சிக்னல்' மாதிரி. சாலையில் 'கிரீன் சிக்னல்' விழுந்ததும் நாம் செல்வது மாதிரி, பச்சை நிற காய்கறிகள் எல்லாமே உடலுக்கு மிகவும் நல்லது. பீன்ஸ், அவரைக்காய், கோவைக்காய், பாகற்காய், காராமணி, காலிபிளவர், கீரை போன்றவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். சாதத்தை அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும்.

    மதிய உணவுக்குப் பின் சற்று ஓய்வு எடுப்பது நல்லது. இதனால் வெயிலை தவிர்க்க முடியும் என்பதோடு, சிறிதுநேரம் தூங்கி எழுந்தால் மாலையில் புத்துணர்ச்சி கிடைக்கும்.

    மாலையில் ஏதாவது பிஸ்கெட் சாப்பிட்டுவிட்டு, அவரவர் விருப்பத்துக் ஏற்ப சர்க்கரை இல்லாமல் சிறிது டீ, அல்லது காபி அருந்தலாம்.

    இரவில் சர்க்கரை அதிகம் உள்ள உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். சாப்பிட்டு விட்டு 2 டம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும். தூங்கச்செல்வதற்கு 1.30 மணி நேரத்துக்கு முன்பே சாப்பிட்டு விடவேண்டும்.

    மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்பதால், இருதய நோயாளிகள் காற்றடைக்கப்பட்ட ரெடிமேட் குளிர்பானங்களை அருந்தக்கூடாது. பழச்சாறு அருந்தலாம். பழச்சாறு அருந்துவதை விட பழங்களை அப்படியே சாப்பிடுவது மிகவும் நல்லது.

    வெயில் அதிகமாக இருக்கும் போது வீட்டினுள் குளிர்ச்சியான இடத்தில் இருங்கள். குளிர்சாதன வசதி இல்லாதவர்கள் வெயில் படாத காற்றோட்டமான அறையில் இருக்கவேண்டும். வீட்டுக்கு வெளியே மரத்தின் நிழலிலும் அமரலாம்.

    பொதுவாக எல்லா இருதய மற்றும் சர்க்கரை நோயாளிகளுமே 3 மாதத்துக்கு ஒருமுறை டாக்டரை சென்று பார்க்க வேண்டும். உடல் நிலைக்கு ஏற்ப அவர்கள் மாத்திரைகளை மாற்றிக்கொடுப்பார்கள் அல்லது ஏற்கனவே எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிடச் சொல்வார்கள்.

    இந்த யோசனைகள் இருதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமின்றி வயதான எல்லோருக்குமே பொருந்தும்.

    இவ்வாறு டாக்டர் என்.விஸ்வ நாதன் கூறினார்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • கோடை காலத்தில் வழக்கத்தை விட கூடுதலாக தண்ணீர் பருக வேண்டும்.
    • ஒவ்வொரு பருவகால பழங்களுக்கும் தனித்தன்மை உண்டு.

    கோடை காலத்தில் உணவு மற்றும் வாழ்க்கை முறைகளில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியது அவசியமானது. பருத்தி ஆடை அணிந்து, சருமத்தில் சன்ஸ்கிரீன் பூசி வெளிப்புற உடல் ஆரோக்கியத்தை பராமரிப்பதுபோல் உட்புற உடல் நலனையும் பேண வேண்டும். உணவு பழக்க வழக்கங்களில் ஒருசில தவறுகளை தவிர்ப்பதன் மூலம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதுகாக்கலாம்.

    தண்ணீர் அருந்தாமல் இருப்பது:

    கோடை காலத்தில் மட்டுமல்ல எல்லா பருவ காலங்களிலும் உடலில் நீரிழப்பை தவிர்க்க போதிய அளவில் தண்ணீர் பருக வேண்டும். இருப்பினும் கோடை காலத்தில் வழக்கத்தை விட கூடுதலாக தண்ணீர் பருக வேண்டும். அத்துடன் பழ ஜூஸ்கள், நீர்ச்சத்து நிறைந்த காய்கறி, பழ வகைகள், திரவ வகை உணவுகளை தவிர்க்காமல் உட்கொள்ள வேண்டும்.

    உப்பு நிறைந்த தின்பண்டங்களை உட்கொள்வது:

    கோடை காலத்தில் உப்பு அதிகம் கலந்த திண்பண்டங்களை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட சிப்ஸ்கள், குக்கீஸ்களை உட்கொள்ளும்போது அதில் இருக்கும் உப்பு உள்ளடக்கத்தை நீர்த்துப்போக செய்வதற்கு உடலுக்கு அதிக தண்ணீர் தேவைப்படும். அதன் காரணமாக நீரிழப்பு ஏற்படும். இதனை தவிர்க்க உப்பு நிறைந்த தின்பண்டங்களை ஒதுக்கிவைப்பதுதான் சரியானது.

    அதிக கலோரி கொண்ட பானங்களை உட்கொள்வது:

    கோடை காலத்தில் ஏற்படும் தாகத்தை தணிப்பதற்கு குளிர்பானங்களைத்தான் பலரும் நாடுவார்கள். அதிக கலோரி கொண்ட பானங்களை தவிர்ப்பதுதான் நல்லது. இளநீர், பதநீர், நன்னாரி சர்பத், எலுமிச்சை ஜூஸ் போன்ற இயற்கை பானங்களை பருகலாம்.

    பருவகால பழங்களை புறக்கணிப்பது:

    ஒவ்வொரு பருவகால பழங்களுக்கும் தனித்தன்மை உண்டு. அவை பருவகால நோய்களில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவும். உடல் உபாதை பிரச்சினைகளையும் தவிர்க்கச்செய்யும். இந்த கோடை காலத்தில் கிடைக்கும் தர்பூசணி, மாம்பழம், கிர்ணி போன்றவற்றை ஒரு போதும் தவிர்க்கக் கூடாது.

    ×