search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    கோடையில் உடல் சூட்டை தணிக்கும் கோரைப் பாய்
    X

    கோடையில் உடல் சூட்டை தணிக்கும் கோரைப் பாய்

    • துரித திண்பண்டங்களை கண்டிப்பாக வெயில் காலத்தில் சாப்பிடக் கூடாது.
    • கோரைப்புல் படுக்கை விரிப்புகள் உடற்சூட்டைத் தணித்து, பசியை அதிகரிக்க செய்யும் தன்மை உடையது.

    கோடை காலம் தொடங்கி விட்டாலேஅதனுடன் இணைந்த நோய்களும் உடலுடன் ஒட்டிக்கொள்கின்றன.மழையைகூட தாங்கிக் கொள்ளலாம், ஆனால் வெயிலை ஏற்பது என்பது இயலாதது. அவ்வாறான காலங்களில் வசதி படைத்தவர்கள் கோடைவாச ஸ்தலங்களை நாடிச்செல்வார்கள். ஆனால் நடுத்தர மற்றும் ஏழை, எளியோர் உணவு முறை மாற்றத்தின் மூலம் தான் இந்த கோடையை கடக்க வேண்டும்.

    இன்றைய காலகட்டத்தில் பூமியின் தட்ப வெப்பநிலை மாற்றங்களால் உடல் நிலை பல்வேறுவகையில் பாதிக்கப்படுகிறது. மேலும் மனிதனின் தற்போதைய நவீன வாழ்க்கை முறை, நவீன உணவு முறை மாற்றங்களும் உடல் பாதிப்படையவும், உடற்சூடுஏற்படவும்காரணமாகின்றன.

    இலவம் பஞ்சு மெத்தை, தலையணை, கோரைப்பாய் பயன்படுத்திய காலம் மாறி, இன்றுசெயற்கைபோம் மெத்தை, தலையணைகளை பயன்படுத்த தொடங்கிவிட்டோம். வெயில் காலம் மட்டுமல்ல எல்லா காலத்திலும் படுத்து உறங்க, உட்கார சிறந்தது இலவம் பஞ்சால் செய்த இருக்கை, மெத்தை, தலையனைதான் சிறந்தது. இலவம்பஞ்சு மெத்தை உடல் சூட்டை தணித்து, உடல் சூட்டை சமச்சீராக்கி உடல் முழுவதையும் குளிர்ச்சி அடையச் செய்யும்.

    கொதிக்கும் கோடை வெயில் காலங்களில் போம் வகை செயற்கை மெத்தை, தலையனைகளைப் பயன்படுத்தும் போது தோலில் எரிச்சல், கட்டி, கொப்புளங்கள், கண் எரிச்சல், மலக்கட்டு, மூலம், பவுத்திரம், பிறப்புறுப்பு பாதிப்பு, விந்தணுக்கள்அழிவு, சினைப்பைநீர்க்கட்டி, வெள்ளைப்படுதல், ஞாபக மறதி, உடல் வலி, அசதி போன்றவை வருவதற்கான காரணங்கள் அதிகம்.

    இதைத் தெரிந்து தான் நம் முன்னோர்கள் செயற்கை மெத்தை, தலையணைகளைத் தவிர்த்து இயற்கையில் கிடைக்கும் இலவம் பஞ்சு மெத்தை, தலையணையை பயன்படுத்தி, அதிக உஷ்ணத்தால் ஏற்படும் நோய்கள் வராமல் தற்காத்து வாழ்ந்தனர்.

    காற்றின்இசைக்கேற்ப ஆற்றங்கரையோரம் நடனமாடும் கோரை புற்களைச் சேகரித்து, பதப்படுத்தி, கற்றாழை நாரினால் கோர்த்து சேர்த்த கோரைப்புல் பாய்களின் பயன்பாடு அதிகமாக இருந்த காலத்தில் படுக்கை விரிப்புகளால் உண்டாகும் நோய்கள் மிகக்குறைவாகவே இருந்தது. இப்போது ஆதிக்கம் செலுத்தி வரும் நெகிழிப் பாய்களை குளிர்காலத்தில் பயன்படுத்தலாம் என்றாலும், அவற்றில் உடலுக்கு நன்மை பயக்கும் எவ்வித மருத்துவ குணங்களும் இல்லை என்பதுதான் உண்மை.

    வெயில் காலத்தில் நெகிழிப் பாய்களில் உறங்கினால், நம் உடலும் சூடாகி தோலும் நெகிழும் அளவுக்கு அவை கொதிக்கின்றன. மேலும் உடல் நோய்களையும் ஏற்படுத்துகின்றது. தமிழ் மக்கள் பாரம்பரியமிக்க கோரைப் பாயை படுக்கைவிரிப்புகளாக பயன்படுத்துவது மட்டுமின்றி மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது என்பதை அறிந்துதான் இதைப் பயன்படுத்தி பயனடைந்தனர்.

    இந்தகோரைப்புல் படுக்கைவிரிப்புகள் உடற்சூட்டைத் தணித்து, பசியை அதிகரிக்க செய்யும் தன்மை உடையது. இதில் படுப்பதால் நல்ல தூக்கம் வருவதோடுமலக்கட்டு பிரச்சினைகள்ஏற்படாது. கெட்ட கனவுகள் வராது, உடற்சூட்டினால் ஏற்படும் மூலம், பவுத்திரம் தொந்தரவு வராது, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், குத்தல், வலியை ஏற்படுத்தாது. கண்ணுக்கும், மூளைக்கும்,உடல் முழுமைக்கும் குளிர்ச்சியைத் தரும். ஆண், பெண் பிறப்புறுப்பு பிரச்சினைகள், நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.

    கோரைப் பாய் குளிர்ச்சி தரும்,நல்லநித்திரை தரும்... என்ற பாடல் வரி, கோடைக்காலத்தில் நாம் தேடும் குளிர்ச்சியை வழங்கி, சுகமான உறக்கத்தையும் கோரைப்பாய் அள்ளிக் கொடுக்கும் என்பதைச் சுட்டிக் காட்டுகிறது. எனவேஅழகு, ஆடம்பரம் தவிர்த்து செயற்கை படுக்கை மற்றும் இருக்கை விரிப்புகளை கண்டிப்பாக தவிர்ப்போம்.

    உடற்சூடு அதிகரிக்க காரமான உணவுகள், அதிக சூடான உணவு, நேரம் தவறி உண்பது, நேரம் தவறி உறங்குவது, பல்வேறு நோய்களுக்கு நிறைய மருந்துகளை தொடர்ந்து உண்பது, அடுப்பின் முன் நீண்ட நேரம் நின்று சமைப்பது, அதிக நேரம் வெயிலில் சுற்றுவது, அதிக புகைப்பழக்கம், தலைக்கு, உடலுக்கு எண்ணெய் வைக்காமல் இருத்தல், குளிக்காமல் தவிர்ப்பது போன்ற பல்வேறு காரணங்களால் உடற்சூடு ஏற்படலாம். மேலும் பல்வேறு வகை ஆடைகளை மிகவும் இறுக்கமாக அணிவது, காற்றோட்டம் இல்லாத ஆடைகளை இறுக்கமாக அணிந்திருப்பது, நாள்பட்ட மலக்கட்டு பிரச்சினை இருப்பதும் உடற்சூட்டை அதிகப்படுத்த காரணமாகிறது.

    மனக் கவலை, மன உலைச்சலும் காரணமாகலாம். உடற்சூட்டைபோக்க தலைக்கு எண்ணெய் வைப்பது, வாரத்திற்கு இரண்டு முறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பது, வருடத்திற்குஇரண்டு முறைவயிறு பேதிக்கு சாப்பிடுவது, உணவில் நார்ச்சத்து, புரதச்சத்து, வைட்டமின் சத்துக்கள் நிறைந்த காய், கீரை, பயறு வகைகள், பழங்களைச் சாப்பிடுவது, தண்ணீர் நிறைய குடிப்பது, மோர், பதநீர், இளநீர், நுங்கு, தர்பூசணி, வெள்ளரிக்காய், வெள்ளரிப் பழம் சாப்பிடுவது, எலுமிச்சை பழச்சாறு குடிப்பது, மண்பாணையில் தண்ணீர் வைத்து குடிப்பது, இயற்கை உந்தல்களை (மலம், சிறுநீர்) அடக்காமல் தவிர்ப்பது, இறுக்கமாக ஆடைகள் அணிவதை தவிர்ப்பது, துரித உணவு திண்பண்டங்களை சாப்பிடாமல் தவிர்ப்பது, நிறைய தண்ணீர் குடிப்பது, மது-புகையிலை தவிர்ப்பது, இரவு நீண்ட நேரம் கண் விழித்திருப்பதை தவிர்ப்பது, அதிக காரம், மசாலா சேர்ந்த உணவு திண்பண்டங்களை சாப்பிடாமல் தவிர்ப்பது போன்றவைகளால் உட ற்சூடு வராமல் தடுக்கலாம்.

    உடற்சூட்டைத் தணிக்க திரிபலா சூரணம் -மாத்திரை, அதிமதுர சூரணம்-மாத்திரை, கடுக்காய் சூரணம்-மாத்திரை, பரங்கி ப்பேட்டை சூரணம்-மாத்திரை, நெல்லிக்காய் லேகியம், வெண்பூசணி லேகியம், வில்வாதி லேகியம், துறுஞ்சி மணப்பாகு, நன்னாரி சர்பத் (தரமானது) போன்ற சித்த மருந்துகளைப் பயன்படுத்தலாம்.

    மேலும் துரித உணவுகள், துரித திண்பண்டங்கள் கண்டிப்பாக வெயில் காலத்தில் மட்டுமல்ல எப்பொழுதும் சாப்பிடக் கூடாது. உடலுக்கு குளிர்ச்சி தரும் திண்பண்டங்கள் மற்றும் பாரம்பரிய சிறுதானிய உணவு முறைகளை பின்பற்றினால் உடற்சூடு வராமலும் அதனால் ஏற்படும் நோய்கள் வராமலும் தடுக்கலாம்.

    மேற்கண்ட தகவலை திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் எஸ்.காமராஜ் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×