என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    • வாரத்திற்கு 2 முறை நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பதன் மூலம் சூடு தணியும்.
    • ஜீன்ஸ் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

    அக்னி நட்சத்திரம் தொடங்கியது முதல் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. சென்னை உள்பட பல மாவட்டங்களில் தினமும் வெயில் சதமடித்துக் கொண்டிருக்கிறது. அனல் காற்று வீசுகிறது.

    கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பித்து கொள்வதற்காக சிலர் ஊட்டி, கொடைக்கானல் போன்ற குளிர்பிரதேசங்களை தேடி செல்கின்றனர். பலர் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். கோடை வெப்பத்தில் இருந்து பிள்ளைகளை காத்து கொள்வதற்காக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

    வெப்பத்தால் ஏற்படும் வியர்வை மூலமாக உடலில் இருந்து வெளியேறும் உப்பு சத்துகளை ஈடு செய்வதற்காக நீர் மோர், பதநீர், நுங்கு, இளநீர், தர்பூசணி, எலுமிச்சை சாறு மற்றும் பழச்சாற்றை அருந்தும்படி ஆலோசனை வழங்கப்படுகிறது.

    கோடைக்கால நோய்களை தவிர்க்கவும், வெப்பத்தாக்கத்தில் இருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் மத்திய, மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தல்கள் விடுத்து வருகின்றன. அந்த வகையில் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பின்பற்ற வேண்டிய எளிய சில வழிமுறைகளை அறிவித்து உள்ளன.

    குறிப்பாக நடப்பு ஆண்டு சுட்டெரிக்கும் வெயிலின் அளவு அதிகமாக இருக்கும் என்றும், வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் வெப்ப அலை தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுவது அவசியமானது. வெயிலில் அதிக நேரம் செல்ல வேண்டிய நிலைமை இருந்தால் வெப்பத்தை தடுக்கும் ஆடைகளை அணியுங்கள்.

    குறிப்பாக பருத்தி ஆடைகளே சிறந்தது. அடர் நிறம் மற்றும் இறுக்கமான ஆடைகள் அணிவதை தவிருங்கள். சன்ஸ்கிரீன் பூசுவதற்கு மறக்காதீர்கள். மதுபானம் அருந்துவதை முற்றிலும் தவிருங்கள். மது அதிகம் அருந்தினால் நீரிழப்பை ஏற்படுத்தும். இதனால் வெப்ப பக்கவாதத்தால் பாதிக்கப்படக்கூடிய நிலை உருவாகும்.

    மருத்துவ உதவியை நாடுங்கள்

    வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் சூழலில் மிக கடுமையான உடல் உழைப்பில் ஈடுபடாதீர்கள். மின்சார உபகரணங்களை அதிகமாக பயன்படுத்தாதீர்கள். அவையும் வெப்பத்தை உருவாக்கி வீட்டின் வெப்பநிலையை அதிகரித்துவிடும். வெயில் காலத்தில் ஏற்படும் தலைச்சுற்றல், குமட்டல், உடல் சோர்வு, உடல் பலவீனம் போன்ற அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீர்கள். அவை வெப்ப பக்கவாதத்திற்கான எச்சரிக்கை அறிகுறிகளாக இருக்கலாம். தேவைப்பட்டால் மருத்துவ உதவியை நாடுங்கள்.

    போதுமான அளவு தண்ணீர் குடிக்க மறக்காதீர்கள். இல்லாவிட்டால் நீரிழப்புக்கு ஆளாக வேண்டியிருக்கும். மொட்டை மாடி போன்ற கான்கிரீட் தளம் கொண்ட மேற்பரப்புகளில் அதிக நேரத்தை செலவிடாதீர்கள். அவை சூரியனின் கதிர்களை அதிகம் பிரதிபலிக்கும். உங்கள் உடலை சட்டென்று வெப்பமாக்கிவிடும். பகல் வேளையில் வீட்டின் ஜன்னல்களை மூடிய நிலையில் வைக்காதீர்கள். ஏனெனில் இது வெப்பத்தை அதிகப்படுத்தி அறையை இன்னும் சூடாக மாற்றும்.

    அதிக நேரம் சூரிய ஒளி

    வெயில் காலத்தில் நீர் நிலைகளில் நீந்துவது உடலை இதமாக்கும். எனினும் பாதுகாப்பான சூழல் கொண்ட நீர்நிலைதானா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். வெயில்படும்படியான இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் உலோகப் பொருட்களைத் தொடாதீர்கள். அவை அதிக வெப்பமடைந்து தீக்காயங்களை ஏற்படுத்தும். முகம் மற்றும் கண்களை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க தொப்பி, கண்ணாடி அணிய மறக்காதீர்கள். கொழுப்பு அதிகம் உள்ள உணவுகள், செரிமானம் ஆவதற்கு கடினமான உணவுகளை உண்ணாதீர்கள்.

    ஏனென்றால் இந்த உணவுகள் மந்தமாக உணர வைக்கும். மேலும் உடலின் வெப்பநிலையை அதிகரிக்க செய்துவிடும். அதிக நேரம் சூரிய ஒளி சருமத்தில் படும்படி வைத்துக்கொள்ளாதீர்கள். அது தோல் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் என்று அறிவுறுத்தி உள்ளது.

    கொளுத்திவரும் கோடை வெயிலை பொதுமக்கள் எவ்வாறு சமாளித்து வருகிறார்கள் என்பது பற்றி சிலரிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் அளித்த பதில் விவரம் வருமாறு:-

    வீட்டில் இருந்தபடி வேலை

    கொசப்பேட்டையை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியர் நிர்மல் - பிரியா தம்பதி கூறும் போது, 'கோடையில் உணவு பழக்கத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால் திட உணவுகளை குறைத்துவிட்டு திரவ உணவுகளை அதிகம் பயன்படுத்த தொடங்கி இருக்கிறோம். அதேபோல் சாலையின் ஓரத்தில் விற்பனை செய்யப்படும் பதநீரை வாங்கி பயன்படுத்தி வருகிறோம். இதுதவிர குழந்தைகளுக்கும் தேவையில்லாதவற்றை வாங்கி தருவதைவிட கோடைக்கு ஏற்ற தர்பூசணி பழம், கிர்ணி பழங்கள் வாங்கி தருகிறோம். அதேபோல் நிறுவனத்திலும் வீட்டில் இருந்து பணி செய்ய கூறியிருப்பதால் வெளியே செல்வது பெரும்பாலும் தவிர்க்கப்பட்டு வருகிறது. கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கொரோனா காலத்தில் வழங்கியபடி வாய்ப்புள்ள நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்தே பணி செய்ய உத்தரவிடலாம். இதன் மூலம் ஓரளவு கோடையின் தாக்கத்தில் இருந்து பொதுமக்களை காக்க முடியும்' என்றார்.

    சிக்கனுக்கு டாடா

    சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் பணியாற்றும் தனலட்சுமி, பிரித்தி ஆகியோர் கூறும் போது, 'கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்காக தினசரி பதநீர், நுங்கு வாங்கி சாப்பிடுகிறோம். இதுதவிர வீட்டில் எலுமிச்சை பழ ஜூஸ் அடிக்கடி குடித்து வருகிறோம். அத்துடன் வீட்டில் சிக்கன் சூடு என்பதால் கோடையில் சிக்கனுக்கு டாடா சொல்லப்பட்டு உள்ளது. அதேபோல் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டுள்ள குடிநீரை சுத்தமாக பயன்படுத்துவதில்லை. வெதுவெதுப்பான குடிநீரை தான் பயன்படுத்துகிறோம். குடிநீரும் வெளியே எங்கும் சாப்பிடாமல் தேவையான குடிநீரை வீட்டில் இருந்தே கொண்டு வந்து பருகுவதால் கோடையின் தாக்கத்தில் இருந்து ஓரளவு தப்பித்து வருகிறோம். வீட்டை விட்டு வெளியே போய்விட்டு மீண்டும் வீடு திரும்புவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடுகிறது. மதிய வேளைகளில் வெளியில் சென்றால் வியர்வையிலேயே குளிக்கும் அளவுக்கு வெப்பம் தகிக்கிறது' என்றனர்.

    பழங்கள், காய்கறிகள்

    அமைந்தகரை அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை (இந்திய மருத்துவம்) சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் வெண்தாமரை செல்வி கூறும் போது, 'கோடை வெயிலின் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கணினியில் வேலை பார்ப்பவர்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டால் பொன்னாங்கண்ணி தைலம் தேய்த்து குளித்தால் கண்களுக்கு குளிர்ச்சி தரும். அதேபோல் வாரத்திற்கு 2 முறை நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பதன் மூலம் சூடு தணியும். உணவு முறையை பொறுத்தவரையில் வெந்தயத்தை இரவில் ஊறவைத்து மிக்சியில் அரைத்து அதனை பாலில் கலந்து காய்ச்சி அருந்துவதன் மூலம் உடல் சூடு குறையும்.

    திராட்சை, கிர்ணிப்பழம், தர்பூசணி பழங்கள் மற்றும் கீரைகள், புடலங்காய், பீர்க்கன்காய், வெண் பூசணி, மஞ்சள் பூசணியை அதிகம் பயன்படுத்த வேண்டும். அத்துடன் சின்ன வெங்காயத்தை (சாம்பார் வெங்காயம்) நல்எண்ணெய், கடுகு, உளுந்து போட்டு வதக்கி சாதத்தில் நெய் ஊற்றி சாப்பிட்டால் உஷ்ணம் குறையும். கண் எரிச்சல் அதிகம் இருப்பதாக உணருபவர்கள் இரவில் உள்ளங்காலில் வெண்ணெய் தடவி கொண்டு படுத்தால் கண் எரிச்சல் குறையும். ஆடைகளை பொறுத்தவரையில் காட்டன் ஆடைகளை மட்டும் பயன்படுத்த வேண்டும்.

    ஜீன்ஸ் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. வெயிலில் செல்பவர்களுக்கு ஆரோக்கியம் ரொம்ப முக்கியம் என்பதால் நீர்மோர், தண்ணீர் அதிகம் குடித்துவிட்டு, குடைகள் மற்றும் தலையில் வைப்பதற்கான தொப்பிகளை எடுத்து செல்ல வேண்டும். வியர்வை துர்நாற்றத்தை போக்குவதற்கு குளிக்கும் தண்ணீரில் நலுங்கு மாவை கலந்து குளிக்க வேண்டும். சிறுநீர் கடுப்பு ஏற்பட்டால் வெட்டிவேரை இரவில் குடிநீரில் கலந்து காலையில் குடிக்கலாம். அதேபோல், எலுமிச்சம்பழம் பிழிந்து நன்னாரி சர்பத் அடிக்கடி குடிக்கலாம். காபியை தவிர்த்துவிட்டு டீயில் ஏலக்காய் போட்டு குடிப்பதால் சூட்டை தணித்து கோடையில் எந்தவித ஆரோக்கிய குறைபாடும் ஏற்படாமல் தவிர்க்க முடியும் என்று சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது' என்றார்.

    சூடுபிடித்த நுங்கு- பதநீர் வியாபாரம்

    எழும்பூரில் நுங்கு- பதநீர் வியாபாரம் செய்யும் தென்காசி செல்வா கூறும் போது, 'கோடை வெயில் வழக்கத்தைவிட சற்று அதிகமாகவே இருப்பதால் நுங்கு, பதநீர் வியாபாரம் நன்றாக இருக்கிறது. தேவைப்படும் நுங்கு தென்காசியில் இருந்தும், பதநீர் மேல்மருவத்தூரில் இருந்தும் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த வியாபாரம் வருகிற ஜூலை மாதம் வரை இருக்க வாய்ப்பு உள்ளது. பொதுமக்கள் கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பித்து கொள்வதற்காக நுங்கு, பதநீர் ஆகியவற்றை வாங்கி செல்கின்றனர்' என்றார்.

    கூடுதல் குடிநீர்

    மந்தைவெளியைச் சேர்ந்த வணிகர் பாலகிருஷ்ணன்-லதா தம்பதிகள் கூறும் போது, 'கோடை வெப்பம் அதிகமாக இருப்பதால் தேவையில்லாமல் பகல் பொழுதில் வெளியே செல்ல வேண்டாம் என்று டாக்டர்கள் கூறுகின்றனர். ஆனால் வணிகராக இருக்கும் நான் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க முடியாது. ஆனால் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் தரவேண்டி இருக்கிறது. எனவே தினசரி கூடுதல் தண்ணீர் குடிக்கிறேன். இதுதவிர வெளியே வந்தால் சாலை ஓரத்தில் வியாபாரம் செய்யும் நுங்கு, பதநீர், பழ ஜூஸ், நீர்மோர் போன்றவற்றை வாங்கி குடித்து ஓரளவு கோடை வெப்பத்தில் இருந்து தங்களை காத்து கொள்கிறோம். இருந்தாலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. இதனால் தினசரி காலை மற்றும் மாலை இரண்டு வேளைகளும் குளிக்கிறோம். கோடை வெப்பம் தணியும் நாளை எதிர்நோக்கி காத்து கொண்டு இருக்கிறோம்' என்றனர்.

    வெளியில் தலைகாட்டவில்லை

    விருகம்பாக்கம் சொர்ண லட்சுமி கூறும் போது, 'கோடை என்றாலே விடுமுறை கொண்டாட்டம் ஒரு புறம் இருந்தாலும் மறுபுறம் கோடை வெப்பத்தின் தாக்கம் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. அதுவும் நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் உணவு பழக்கத்தையும் சற்று மாற்றி வருகிறோம். தண்ணீர் ஆகாரத்தை தான் அதிகம் சாப்பிட்டு வருகிறோம். டாக்டர்கள் கூறியபடி தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே எங்கும் செல்வதில்லை. பழங்கள் மற்றும் கீரைகளையும் அதிகம் பயன்படுத்துவதால் பெரிய அளவில் கோடை வெப்பத்தால் பாதிக்கப்படவில்லை. இன்றும் ஓரிரு மாதங்களில் இதே உணவு பழக்கத்தை தான் கடைப்பிடிப்போம். வெப்ப தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்காக வீட்டிலே இருக்கிறோம். இதனால் வெளியில் தலை காட்ட முடியவில்லை' என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கிரீன் டீ பருகுவது தற்போது அதிகரித்துள்ளது.
    • ஒரு சில உடல் நிலைக்கு கிரீன் டீயைத் தவிர்ப்பது நல்லது.

    உடல் எடையைக் குறைப்பது உள்ளிட்ட பிறநன்மைகளின் காரணமாக, கிரீன் டீ பருகுவது தற்போது அதிகரித்துள்ளது. 'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு' என்பதுபோல, ஒரு நாளுக்கு 2 முதல் 3 கப்புக்கு மேல் கிரீன் டீ குடிப்பது உடலுக்கு தீங்கு தரும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல், ஒரு சில உடல் நிலைக்கு கிரீன் டீயைத் தவிர்ப்பது நல்லது. அவ்வாறு, யாரெல்லாம் கிரீன் டீ பருகக்கூடாது என்று இங்கே பார்ப்போம்.

    கிரீன் டீயில் இருக்கும் காபின், காட்ஸின் மற்றும் டானின் போன்ற மூலக்கூறுகள் கர்ப்பிணிகளுக்கும், கருவில் இருக்கும் குழந்தைக்கும் பாதிப்பை உண்டாக்கக்கூடும். இவை பால் சுரப்பை குறைக்கும் தன்மை கொண்டவை. இதனால் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் பெண்கள் கிரீன் டீயைத் தவிர்ப்பது நல்லது. கிரீன் டீயில் இருக்கும் 'காட்ஸின்', உணவில் இருக்கும் இரும்புச்சத்தை உடல் உறிஞ்சுவதைத் தடுக்கும்.

    எனவே ரத்த சோகை மற்றும் இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள் கிரீன் டீயைத் தவிர்க்க வேண்டும். வயிறு மற்றும் செரிமானக்கோளாறு உள்ள நபர்கள் கிரீன் டீ குடிப்பதை தவிர்க்க வேண்டும். இதில் இருக்கும் 'டானின்' என்ற மூலக்கூறு வயிற்றில் அமிலச் சுரப்பை அதிகரிக்கும். இதனால் வயிற்று வலி, வாந்தி உணர்வு, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சினைகள் உண்டாகும்.

    உள் உறுப்புகளின் வளர்ச்சியை பாதிக்கும் என்பதால் இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தை களுக்கு கிரீன் டீ கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். 'குளூக்கோமா' எனும் கண் தொடர்பான பிரச்சினை உள்ளவர்கள் கிரீன் டீ பருகக்கூடாது. இது கண்களின் அழுத்தத்தை அதிகரிக்கும்.

    இதுமட்டுமில்லாமல் பதற்ற நோய் உள்ளவர்கள், ரத்தப்போக்கு பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள், இதய நோயாளிகள், கல்லீரல் பாதிப்பு உள்ளவர்கள், ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்சினை உள்ளவர்கள் கிரீன் டீயைத் தவிர்க்க வேண்டும்.

    • மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைப்படுவதால் பக்கவாதம் ஏற்படுகிறது.
    • பக்கவாதம் வராமல் தடுக்க நீரிழிவு நோயாளிகள் இவற்றை பின்பற்ற வேண்டும்...

    சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு அதிக அளவில் சர்க்கரையின் அளவு இருந்தால் ஏன் பக்கவாதம் ஏற்படுகிறது? அதற்கான சரியான காரணம் என்ன? அதை தடுப்பதற்கான வழிமுறைகள் ஏதேனும் உள்ளதா? என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

    நீரிழிவு நோயாளிகளுக்கு மற்றவர்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது பக்கவாதம் வரக்கூடிய வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் கூட இரண்டு நிமிடத்திற்கு ஒருவர் பக்கவாத நோயினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். நீரிழிவு நோயாளிகளுக்கு பக்கவாதம் ஏற்படக்கூடிய வாய்ப்பு அதிகமாவது கீழ்கண்ட காரணங்களால் என கண்டறியப்பட்டுள்ளது.

    1) நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இல்லாத போது உடலில் உள்ள ரத்த நாளங்களில் அழற்சி (இன்பளமேஷன்) ஏற்பட்டு, ரத்த நாளங்கள் பாதிப்படைகின்றது. மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைப்படுவதால் பக்கவாதம் ஏற்படுகிறது.

    2) பாதிப்படைந்த ரத்த நாளங்களில், தமனிக்குழாய் தடிப்பு (அதிரோஸ்கிலோரிடக் பிளேக்) ஏற்பட்டு ரத்த நாளங்களில் அடைப்பு உருவாகிறது. இது மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் அளவை குறைத்து பக்கவாதத்தை ஏற்படுத்துகின்றது.

    3) பெரும்பாலும் நீரிழிவு நோயாளிகளுக்கு கூடுதலாக இருதய நோய், அதிக கொலஸ்ட்ரால், சிறுநீரக பாதிப்பு, ரத்த கொதிப்பு, உடல் பருமன் போன்றவையும் இருப்பதால் பக்கவாதம் ஏற்படக்கூடிய வாய்ப்பு அதிகமாகிறது.

    பக்கவாதம் வராமல் தடுக்க நீரிழிவு நோயாளிகள் இவற்றை பின்பற்ற வேண்டும்:

    ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்தல், ரத்தத்தில் கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த கொதிப்பை கட்டுக்குள் வைத்தல், புகை பிடித்தல் மற்றும் மது பழக்கத்தை விட்டொழிதல், உடல் எடை குறைத்தல், தினமும் உடற்பயிற்சி செய்தல், நார்ச்சத்து நிறைந்த உணவுகள், கீரைகள், காய்கறிகள், பழங்கள், புரதம் நிறைந்த பால், மீன் அல்லது கோழி இறைச்சி, முட்டையின் வெள்ளை போன்ற ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளுதல்.

    • கருவுற்றிருக்கும் பெண்கள் பலாப்பழத்தை தவிர்க்க வேண்டும்.
    • முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் எல்லோராலும் விரும்பப்படும் ஒரு பழம்.

    முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் எல்லோராலும் விரும்பப்படும் ஒரு பழம். பலாப்பழ சுளையின் மஞ்சள் நிறத்திற்கு காரணம் அதில் இருக்கும் வைட்டமின் ஏ (கரோட்டினாய்ட்ஸ்). ஒரு கப் பலாப்பழத் துண்டுகளில் 143 கலோரிகள், 35 கிராம் கார்போஹைட்ரேட், 3 கிராம் புரதச்சத்து, 3 கிராம் நார்ச்சத்து இருக்கிறது.

    இதில் மிக அதிகமான அளவு வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் சி இருக்கிறது. பலாப்பழத்தின் கிளைசிமிக் இன்டெக்ஸ் (சர்க்கரை உயர்தல் குறியீடு) 60 ஆகும். இது ஒரு மிதமான கிளைசிமிக் இன்டெக்ஸ் அளவாகும். பலாப்பழத்தில் கார்போஹைட்ரேட் மிக அதிகமாக இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் மிகக் குறைந்த அளவே சாப்பிட வேண்டும்.

    இதில் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால் (446 கிராம்) சிறுநீரக பாதிப்பு அல்லது சிறுநீரக செயலிழப்பு உள்ளவர்கள் இதை சாப்பிடக்கூடாது. ஆனால் நீரிழிவு நோயாளிகள் பலாப்பழத்தின் கொட்டை அல்லது அதிலிருந்து தயாரிக்கப்படும் பலாப்பழம் மாவை சாப்பிடலாம்.

    ஏனெனில் இதில் உள்ள பீட்டா கரோட்டின் எபாக்சைடு, பிளாவினாய்ட்ஸ், பைட்டோஸ்டிரால்ஸ் போன்ற ஆன்ட்டி ஆக்சிடென்ட்ஸ் பீட்டா செல்களை இன்சுலின் சுரக்கச் செய்து சர்க்கரை அளவை குறைப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பலாப்பழம் கர்ப்பப்பை சுருக்குதலை ஏற்படுத்திக் கருச்சிதைவை உண்டாக்கலாம். அதனால் கருவுற்றிருக்கும் பெண்கள் பலாப்பழத்தை தவிர்க்க வேண்டும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • வெந்தயம் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும்.
    • குடல்புண் உள்ளவர்கள் மிளகை அதிகம் சேர்த்து கொள்ளக்கூடாது.

    நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் இருந்து, சில நோய்களுக்கு மருந்துகளை எளிய முறையில் தயாரிக்கலாம் என சித்த மருத்துவ குறிப்புகளில் கூறப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:-

    * கறிவேப்பிலை, இஞ்சி, சீரகம் இவற்றை தண்ணீரில் கொதிக்கவைத்து, ஆறவைக்க வேண்டும். அந்த நீரை வடிகட்டி குடித்தால் அஜீரணத்திலிருந்து நிவாரணம் கிட்டும்.

    * அஜீரணம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், வயிற்றுவலி போன்றவற்றை குறைக்க மிளகு அருமருந்து. உணவில் மிளகை சேர்த்துக்கொள்வதால் இவை ஏற்படாமல் தவிர்க்கலாம்.

    * மிளகு சாப்பிடுவதால் வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் சுரக்கிறது. அது வயிற்றில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை சரிசெய்கிறது. ஆனால் குடல்புண் உள்ளவர்கள் மிளகை அதிகம் சேர்த்து கொள்ளக்கூடாது.

    * வெந்தயம் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும். சிறிதளவு வெந்தயத்தை வறுத்து, சோம்பும், உப்பும் சேர்த்து அரைத்து மோரில் கலந்து குடித்தால் வயிற்றுப்போக்கு நிற்கும். மேலும் வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து முகத்தில் பூசி வர பருக்கள் குறையும்.

    * கசகசாவை நன்கு ஊறவைத்து அரைத்து மோருடன் கலந்து குடித்துவந்தால் சீதபேதி கட்டுப்படும்.

    * சர்க்கரை நோய் உள்ளவர்கள் பாகற்காய், அவரைப்பிஞ்சு ஆகியவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளவும். இறுக்கமான காலணிகள் அணிவதை தவிர்க்க வேண்டும்.

    * நாவல்பழம் அடிக்கடி சாப்பிட, சர்க்கரை நோய் கட்டுப்படும். தினமும் கையளவு நாவல்பழங்களை சாப்பிட்டால், சிறுநீர்க்குழாயில் ஏற்படும் தொற்று குணமாகும். சிறுநீர்க்குழாயில் காணப்படும் பாக்டீரியாவை அழிக்கக்கூடிய ரசாயனங்கள் நாவல்பழத்தில் உள்ளன.

    * பாதாம்பருப்பில் வைட்டமின் 'ஈ' சத்து அதிக அளவில் உள்ளது. தினமும் சிறிதளவு பாதாம் பருப்புகள் சாப்பிடுவதன் மூலம் சருமம், தலைமுடி, நகங்கள் ஆகியவை பளபளப்பாகும்.

    • குறிப்பிட்ட பானங்களை பருகினால், உடல் எடை குறைவதோடு கோடை உஷ்ணத்தில் இருந்தும் தங்களை பாதுகாத்துக்கொள்ளலாம்.
    • கோடை காலத்தில் பழங்கள், காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும்.

    உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்கள் தற்போது குறிப்பிட்ட பானங்களை பருகினால், உடல் எடை குறைவதோடு மட்டுமின்றி- கோடை உஷ்ணத்தில் இருந்தும் தங்களை பாதுகாத்துக்கொள்ளலாம். அத்தகைய பானங்கள் பற்றி பார்ப்போம்!

    எலுமிச்சை-வெள்ளரி பானம்: சிறிய வெள்ளரிக்காய் மற்றும் எலுமிச்சை பழம் இரண்டையும் சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும். அதனை அகன்ற ஜாரில் போட்டு இரண்டு டம்ளர் நீர் நிரப்பிக்கொள்ள வேண்டும். அதனுடன் சிறிதளவு புதினா இலைகளையும் சேர்த்து அரைக்கவேண்டும். இந்த சாறினை வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் பருகி வரலாம். இது குறைந்த கலோரிகளை கொண்டது. அதனால் உடலில் சேரும் கலோரிகளை கட்டுப்படுத்துவதோடு, நீர்ச்சத்தை தக்கவைத்துக்கொள்ளவும் உதவும். இதனை பருகினால் நாள் முழுவதும் உற்சாகத்துடன் செயல்படலாம்.

    லவங்கப்பட்டை, ஸ்ட்ராபெர்ரி பானம்: 4-5 ஸ்ட்ராபெர்ரி பழங்களை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். சிறிதளவு லவங்கப்பட்டை, புதினா சேர்த்து மிக்சியில் போட்டு அரைக்கவும். அதனை வடிகட்டி, ஒரு மணி நேரம் கழித்து பருகலாம். இரவில் பிரிட்ஜில் வைத்துவிட்டு காலையிலும் பருகலாம். கோடை காலத்தில் உடல் வெப்பத்தை குறைப்பதோடு, எடை குறையவும் உதவும்.

    மோர்: பசியின்மை, செரிமான கோளாறு கொண்டவர்களுக்கும், அதிக உடல் எடை கொண்டவர்களுக்கும் மோர் சிறந்த நிவாரணம் தரும். வயிறு சார்ந்த பிரச்சினைகளை கொண்டவர்கள் தினமும் மோர் அருந்துவது நல்லது. மிக்சியில் ஒரு டம்ளர் மோர் ஊற்றி அதனுடன் சிறிதளவு புதினா, கொத்தமல்லி இலைகள், சிறிதளவு கேரட் சேர்த்து விழுதாக அரைத்து, பருகலாம்.

    எலுமிச்சை சாறு கலந்த கிரீன் டீ: கிரீன் டீயில் ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்துள்ளன. எலுமிச்சை பழத்தில் வைட்டமின் சி மற்றும் பாலிபினால்கள் இருக்கின்றன. இவை உடல் எடையை குறைக்க உதவும். சூடான நீரில் கிரீன் டீ பேக் ஒன்றை போடவும். அதனுடன் அரை எலுமிச்சை பழ சாறு கலந்து பருகலாம். வெறுமனே கிரீன் டீ பருகுவதற்கு பதிலாக எலுமிச்சை பழ சாறு சேர்ப்பது சிறந்த பலனை கொடுக்கும்.

    எலுமிச்சை, இஞ்சி, தேன் பானம்: அகன்ற பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீர் ஊற்றி கொதிக்கவிடவும். அதனுடன் ஒரு துண்டு இஞ்சியை நறுக்கி சேர்க்கவும். நன்கு கொதித்ததும் இறக்கிவிட்டு தலா ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, தேன் கலந்து இரண்டு நிமிடங்கள் மூடி வைக்கவும். பின்பு அந்த நீரை வடிகட்டி பருகவும். உடல் எடை குறைப்புக்கு இது சிறந்த பானமாக கருதப்படுகிறது.

    கேரட் - ஆரஞ்சு ஜூஸ்: கேரட்டில் நார்ச்சத்து, பீட்டா கரோட்டின் போன்றவை இருப்பதால் பசியை கட்டுப்படுத்தும். குறைவாக சாப்பிடுவதற்கும் வழிவகுக்கும். ஆரஞ்சு பழத்தில் இருக்கும் வைட்டமின் சி எடையை குறைப்பதோடு, நீர்ச்சத்தையும் தக்கவைக்கும். கேரட், ஆரஞ்சு பழம் இரண்டையும் தோல் நீக்கி மிக்சியில் போட்டு அரைத்து ஜூஸாக்கிக்கொள்ளவும். அதனுடன் சிறிதளவு மிளகு தூள், உப்பு சேர்த்து பருகவேண்டும்.

    காய்கறி-பழ ஜூஸ்: கோடை காலத்தில் பழங்கள், காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும். அவைகளில் இருக்கும் நார்ச்சத்துக்கள் பசியை கட்டுப்படுத்தி, அதிகமாக உணவு சாப்பிடுவதை தடுக்கும். கேரட், ஆப்பிள், ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி, கீரை, பீட்ரூட் போன்றவற்றை ஜூஸாக்கி பருகலாம். அவற்றுடன் சிறிதளவு கல் உப்பு, மிளகு தூள் சேர்த்துக்கொள்ளலாம். இவற்றில் பெரும்பாலானவை கிளைசெமிக் குறியீட்டு எண்களை குறைவாக கொண்டிருப்பதால் சர்க்கரை அளவையும் கட்டுக்குள்வைக்கும்.

    அன்னாசி லெமனேட் பானம்: அன்னாசி பழத்தில் எடையை குறைக்க உதவும் கொழுப்பு அமில ஆக்சிடென்டுகள் இருக்கின்றன. ஒரு அன்னாசி பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி மிக்சியில் அரைத்து ஜூஸாக்கி கொள்ளவும். அதனுடன் எலுமிச்சை பழசாறு, சிறிதளவு மிளகு தூள் கலந்து பருகலாம். காலை வேளையில் இந்த பானத்தை பருகுவது எடையை குறைப்பதோடு, புத்துணர்ச்சியையும் தரும்.

    பீட்ரூட்-புதினா ஜூஸ்: இரண்டு பீட்ரூட்களை தோல் நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கி மிக்சியில் லேசாக அரைத்துக்கொள்ளவும். அதனுடன் ஒரு கைப்பிடி புதினா இலை, இரண்டு டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து ஜூஸாக்கி தேவைக்கு நீர் கலந்து பருகலாம். பீட்ரூட் இயற்கையாகவே இனிப்பு சுவை கொண்டது. அதில் நார்ச்சத்தும் அதிகம். வயிற்று ஆரோக்கியத்தை பாதுகாக்கக்கூடியது. குடலை சுத்தம் செய்வதுடன் கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கவும் உதவும்.

    • பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் ஆரோக்கியமானதாக கருதப்படுகின்றன.
    • மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்களை தடுக்கும் 5 உணவு வகைகளை பார்ப்போம்.

    இதய நோய்கள் வராமல் தடுக்கும் உணவுகளை சாப்பிடாமல் புறக்கணிப்பதால் மாரடைப்பு அபாயம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்களை தடுக்கும் 5 உணவு வகைகளின் பட்டியலை பார்ப்போம்.

    1. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்: இதய ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களுக்கு முக்கிய பங்குண்டு. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களைக் கொண்ட சால்மன், டுனா போன்ற மீன்களை உண்பது, டிரைகிளிசரைடுகளை குறைத்து, உடலில் ஏற்படும் வீக்கத்தை போக்கும். அக்ரூட் பருப்புகள், ஆளி விதைகள் மற்றும் ராஜ்மா போன்ற ஒமேகா-3 நிறைந்த உணவுகள் ரத்த அழுத்தத்தை இயல்பான அளவில் வைத்திருக்கவும், உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கவும் உதவும்.

    2. முழுதானியங்கள்:

    பதப்படுத்தப்பட்ட தானியங்கள் பல்வேறு செயல் முறைகளின் மூலம் வடிகட்டப்படுகின்றன. அப்போது அவற்றில் இருக்கும் ஊட்டச்சத்துக்களின் வீரியம் குறைந்து போய்விடக்கூடும். ஆனால் முழு தானியங்களை கழுவி சுத்தம் செய்யும்போது இத்தகைய பாதிப்பு கள் நேராது. மேலும் முழு தானியங்களில் நார்ச்சத்து அதிகம் உள்ளடங்கி இருக்கும். அவை ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக தக்க வைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தன்மை கொண்டவை. நீரிழிவு மற்றும் இதய நோய் ஆபத்துக்களை குறைக்கவும் செய்யும். ''முழு தானியங்களை பதப்படுத்தும்போது, அவற்றில் உள்ள நார்ச்சத்துக்கள் நீக்கப்படக்கூடும். அவற்றை அதிகம் உட்கொள்வது உடல் பருமனையும், ஊட்டச்சத்து குறைபாட்டையும் ஏற்படுத்தும். வெள்ளை அரிசிக்கு பதிலாக பழுப்பு அரிசியையும், வழக்கமான பாஸ்தாவை விட முழு கோதுமை நீக்கப்படாத பாஸ்தாவையும், கார்ன் பிளேக்குகளுக்கு பதில் ஓட்ஸையும் தேர்வு செய்யலாம்'' என்கிறார் மும்பையை சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் பாட்டீல்.

    3. பழங்கள்- காய்கறிகள்: வளமான வாழ்க்கைக்கு பழங்கள், காய்கறிகளை உண்ணுங்கள் என்கிறார்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள். பழங்கள் மற்றும் காய்கறிகளில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஈ, பொட்டாசியம், போலிக் அமிலம் ஆகியவை நிரம்பியுள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் இதய நோய்க்கான ஆபத்தை குறைக்க உதவுவதோடு உடலில் ஏற்படும் தேய்மானத்தை சரி செய்வதற்கு தேவையான ஆற்றலை அளிக்கும்.

    4. நிறைவுற்ற கொழுப்பு: இறைச்சி வகைகள் மற்றும் பால் பொருட்களில் நிறைவுற்ற கொழுப்பு காணப்படுகிறது. இவை எல்.டி.எல் கொழுப்பின் அளவை உயர்த்தலாம். தமனிகளின் செயல்பாடுகளை முடக்கி விடலாம். எனவே நிறைவுற்ற கொழுப்புகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். கொழுப்பு குறைவான இறைச்சி வகைகளை தேர்வு செய்ய வேண்டும். வெண்ணெய்க்கு பதில் நெய், கடுகு எண்ணெய் போன்ற நல்ல கொழுப்பு கொண்ட உணவு பொருட்களை சமையலுக்கு தேர்ந்தெடுக்கலாம்.

    5. பால் பொருட்கள்: பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் ஆரோக்கியமானதாக கருதப்படுகின்றன. ஆனால் அவற்றை அதிகமாக உட்கொள்ளும்போது அவற்றில் உள்ள கொழுப்பு உடலில் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க செய்துவிடும். பாலாடைக்கட்டி, ஐஸ்கிரீம் போன்ற பால் பொருட்களில் நிறைவுற்ற கொழுப்பு அதிகம் இருக்கும். இருப்பினும் அவற்றில் குறைந்த கொழுப்பு வகை கொண்டவற்றை உட்கொள்வது இதய நோய் அபாயத்தை குறைக்கும்.

    • ஆண்களைப் போலவே, பெண்களும் கல்லீரல் தொடர்பான நோய்களால் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.
    • எண்ணெயில் பொரித்த உணவுகள் மற்றும் சிவப்பு இறைச்சியை தவிர்ப்பது நல்லது.

    ரத்தத்தை சுத்தப்படுத்துவது, புரதத்தை உருவாக்குவது, ஹார்மோன்களை சமநிலைப்படுத்துவது, ஊட்டச்சத்துக்களை சீராக பயன்படுத்துவது என பலவிதமான வேலைகளை செய்வது கல்லீரல். ஆண்களைப் போலவே, பெண்களும் கல்லீரல் தொடர்பான நோய்களால் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். பெண்களுக்கு கல்லீரலில் உண்டாகும் நோய்களில் முக்கியமானது 'சிரோசிஸ்' எனும் 'கொழுப்பு கல்லீரல் நோய்'. அதிகப்படியான கொழுப்பினால் ஏற்படும் வீக்கம் 'சிரோசிஸ்' எனப்படுகிறது. கொழுப்பு கல்லீரல் நோய் மது அருந்துவதாலும், ஊட்டச்சத்து குறைபாட்டாலும், அதிக உடல் எடையாலும் ஏற்படுகிறது. இதைத் தவிர்ப்பதற்கு வைட்டமின் பி, சி, தாதுக்கள் மற்றும் குளுட்டோதயோனின் நிறைந்த உணவுகள் உதவும். அவற்றைப் பற்றி இங்கு பார்க்கலாம்.

    1. காபி: இதில் காபின், கரிம அமிலங்கள், பாலிசாக்ரைடுகள், ஆன்டிஆக்ஸிடன்டுகள் மற்றும் பாலிபினால்கள் அதிகமாக உள்ளன. இவை சிரோசிஸ் நோய்க்கு எதிரான ஆற்றலை அதிகரிக்கும்.

    1. காபி: இதில் காபின், கரிம அமிலங்கள், பாலிசாக்ரைடுகள், ஆன்டிஆக்ஸிடன்டுகள் மற்றும் பாலிபினால்கள் அதிகமாக உள்ளன. இவை சிரோசிஸ் நோய்க்கு எதிரான ஆற்றலை அதிகரிக்கும்.

    2. பச்சை இலை உணவுகள்: கீரை, முட்டைக்கோஸ் போன்ற பச்சை இலை உணவுகளில் பொட்டாசியம், மாங்கனீசு மற்றும் மெக்னீசியம் ஆகிய சத்துக்கள் உள்ளன. இவற்றில் உள்ள குளோரோபில் நச்சு ரசாயனங்களை நீக்க உதவும்.

    3. பருப்புகள் மற்றும் விதைகள்: பாதாம், அக்ரூட் போன்ற பருப்புகளில் உள்ள மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள், கல்லீரலில் கெட்டக் கொழுப்பு சேர்வதை தடுக்கின்றன.

    4. பூண்டு: பூண்டில் உள்ள அல்லிசின், வைட்டமின் சி, வைட்டமின் பி6 மற்றும் செலினியம் ஆகிய சத்துக்கள் நச்சு நீக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அல்லிசின் என்பது ஒரு கந்தக கலவை ஆகும். இது ஆன்டிஆக்ஸிடன்டு மற்றும் ஆன்டிபயாடிக் பண்புகளைக் கொண்டுள்ளது. செலினியம், இயற்கையாகவே நச்சு நீக்கும் கனிமமாகும். இது ஆன்டிஆக்ஸிடன்டுகளின் செயல்பாட்டை அதிகரிப்பதன் மூலம், கல்லீரலின் செயல்பாட்டை அதிகரிக்க உதவும்.

    5. பீட்ரூட்: இதில் குறிப்பிடத்தக்க அளவு நார்ச்சத்து, மாங்கனீசு, பொட்டாசியம், வைட்டமின்கள் ஏ மற்றும் சி உள்ளன. இவை நொதிகளின் செயல்பாட்டை மேம்படுத்துகின்றன. இதனால் நச்சுக் கழிவுகள் விரைவாக உடலில் இருந்து வெளியேறுகின்றன.

    மேலும் முட்டை, சிட்ரஸ் பழங்கள், இஞ்சி, மஞ்சள், தேநீர் மற்றும் மீன் போன்ற உணவுகளும் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடியவையாகும். மேலும், சர்க்கரை, ஆல்கஹால், பதப்படுத்தப்பட்ட உணவுகள், எண்ணெய்யில் பொரித்த உணவுகள் மற்றும் சிவப்பு இறைச்சியை தவிர்ப்பது நல்லது.

    • பொதுவாக 40 வயதில் கழுத்து சவ்வு தேயத் தொடங்கும்.
    • இப்போதோ இளம் வயதிலேயே இது தேயத் தொடங்கிவிடுகிறது.

    கால் நூற்றாண்டுக்கு முன்புவரை கழுத்துவலி வயதானவர்களுக்கு மட்டுமே வரும் நோயாக இருந்தது. இப்போதோ இது வளரிளம் பருவத்தினருக்கும்கூட வந்துவிடுகிறது. கழுத்து வலிக்கு முக்கியக் காரணம், கழுத்துப் பகுதியில் உள்ள தசைகள் சோர்ந்துபோவதுதான். அப்போது கழுத்தை தசைகளால் தாங்கிப்பிடிக்க முடிவதில்லை. அதன் வெளிப்பாடுதான் கழுத்து வலி. அதிக சுமையைத் தலையில் தாங்குவது, நீண்ட நேரம் கழுத்தை அசைக்காமல் ஒரே நிலையில் வைத்துக்கொண்டிருப்பது போன்றவை இந்த மாதிரியான கழுத்து வலிக்கு அடித்தளம் அமைக்கும்.

    கழுத்து எலும்புகளில் தேய்வு, இடைச்சவ்வு விலகுவது அல்லது அது வீங்கி அருகிலுள்ள நரம்பை அழுத்துவது போன்ற காரணங்களால் கழுத்துவலி ஏற்படலாம். பொதுவாக 40 வயதில் இந்த சவ்வு தேயத் தொடங்கும். ஆனால், இப்போதோ இளம் வயதிலேயே இது தேயத் தொடங்கிவிடுகிறது. காரணம், பலரும் உட்கார்ந்துகொண்டே வேலை செய்வது இப்போது அதிமாகிவிட்டதுதான்.

    கணினி முன்னால் அதிக நேரம் தொடர்ந்து வேலை செய்வதை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இதுபோல் தொடர்ந்து பல மணி நேரத்துக்கு டி.வி. பார்ப்பது, படுத்துக்கொண்டே படிப்பது, படுத்துக்கொண்டே டி.வி. பார்ப்பது, கழுத்தைக் கோணலாக வைத்துக்கொண்டு உறங்குவது. தலையணைகளைத் தலைக்கு அடுக்கிவைத்து உறங்குவது, வேலைக்குச் செல்ல பல மணிநேரம் பயணிப்பது, பயணங்களில் உட்கார்ந்துகொண்டே உறங்குவது போன்றவையும் கழுத்து வலிக்கு காரணமாகிவிடும்..

    இப்போதெல்லாம் பலரும் இரு சக்கர வாகனங்களை ஓட்டிச் செல்லும்போதும் செல்போனில் பேசுகிறார்கள். அப்போது கழுத்தை ஒரு பக்கமாக சாய்த்துக்கொண்டு பேசுகிறார்கள். இந்த தவறான பழக்கம் நாளடைவில் கழுத்து வலியை ஏற்படுத்துகிறது. குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் அடிக்கடி பயணிப்பதும் கழுத்து வலியைச் சீக்கிரத்தில் கொண்டுவந்துவிடும். கழுத்தை எக்ஸ்ரே, சி.டி.ஸ்கேன் அல்லது எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்துப் பார்த்து நோயை புரிந்துகொள்ளலாம். ஆரம்ப நிலையில் உள்ள கழுத்து வலியை எளிதாக குணப்படுத்திவிடலாம். நோய் நீடிக்கிறது என்றால் மருத்துவரின் ஆலோசனைப்படி கழுத்தில் பட்டை அணிந்துகொள்வது, பிசியோதெரபி சிகிச்சை போன்றவை பலன் தரும். நோயின் தன்மையை பொறுத்து எலும்பு அல்லது நரம்பு நலச் சிறப்பு மருத்துவரை நேரில் பார்த்து ஆலோசிக்க வேண்டும்.

    உங்களுக்கு மன அழுத்தம் இருப்பதாகத் தெரிந்தால் ஏற்கெனவே இருக்கும் எந்த ஒரு வலியும் அதிகமாகவே உணரப்படும். புதிதாகவும் வலி தோன்றலாம். எனவே, கழுத்து வலிக்கு முறையான சிகிச்சை எடுத்துக்கொண்டு, தேவைப்பட்டால் உளவியல் சிகிச்சையும் எடுத்துக்கொள்ளலாம். இது குணப்படுத்தக் கூடியதுதான் என்கிறார்கள் டாக்டர்கள்.

    • மூளைப் பகுதியில் ‘உறக்க மையம்’ என்ற ஒன்று உள்ளது.
    • நாம் உறங்கும்போது உறக்க மையம் இரண்டு விதமாகச் செயல்படுகிறது.

    பகல் முழுவதும் உழைத்த பின்பு உடலும் உள்ளமும் களைத்துப் போகின்றன. சோர்ந்த உறுப்புகளுக்கும், திசுக்களுக்கும் புத்துணர்வும் ஆற்றலும் ஊட்டுவதற்கு தூக்கம் மிகவும் அவசியம். சரி, நமக்கு தூக்கம் எப்படி வருகிறது?, தூக்கத்தில் உடலுக்கு என்ன நேர்கிறது? என்பதை அறிவியல் பூர்வமாக அறிந்து கொள்வோம்.

    * தூக்கம் எப்படி வருகிறது?

    மூளைப் பகுதியில் 'உறக்க மையம்' என்ற ஒன்று உள்ளது. இந்த உறக்க மையத்தை ரத்தத்தில் உள்ள கால்சியம் கட்டுப்படுத்துகிறது. உறக்க மையத்தில் வேண்டிய அளவு கால்சியம் சேர்ந்தவுடன் உறக்கம் வருகிறது. அப்படியானால், தூக்கமின்மை நோயால் தவிக்கும் மனிதர்களுக்கு உறக்கம் வருவதற்காக கால்சியத்தை உறக்க மையத்தில் செலுத்தினால் தூக்கம் வருமா என்றால்... 'வரும்' என்கிறார்கள். சில விலங்குகள் மீது இத்தகைய சோதனையைச் செய்து விஞ்ஞானிகள் நிரூபித்திருக்கிறார்கள்.

    ஆனால் இதில் பிரச்சினை என்னவென்றால், உறக்க மையத்தில் நேரடியாக கால்சியம் செலுத்தப்பட்டால் மட்டுமே உறக்கம் வரும். ரத்தக் குழாயில் கால்சியத்தைச் செலுத்தினால் வராது. நாம் சோர்வடையும் நேரத்தில் உறக்க மையம் சில ரசாயனப் பொருட்களால் உணர்ச்சியடைந்து இருக்கும். அப்போது கால்சியம் செயல்படவே, உறக்கம் வருகிறது.

    * தூங்கும்போது என்ன நடக்கிறது?

    நாம் உறங்கும்போது உறக்க மையம் இரண்டு விதமாகச் செயல்படுகிறது. முதலில் இதன் இயக்கத்தால் மற்ற உறுப்புகளிலிருந்து மூளையின் தொடர்பு அற்றுப் போகிறது. இரண்டாவது, உடலின் மற்ற உறுப்புகளையும் இது தடுத்துச் செயலாற்ற வைக்கிறது. உறக்கத்தில் நமது மன ஆற்றலும், உணர்ச்சியும் தற்காலிகமாக நிலைத்துப் போகின்றன.

    தூக்கத்தில் உடலானது பலவிதமான அசைவுக்கு உள்ளாகிறது. நாம் இரவுத் தூக்கத்தில் சராசரியாக 20 முதல் 40 தடவை புரண்டு படுக்கிறோம். ரத்த ஓட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது. இதயத் துடிப்பு சற்று குறைகிறது. ஜீரண உறுப்புகள் சரியாக இயங்குகின்றன. ஈரலும், சிறுநீரகமும் தொடர்ந்து செயலாற்றுகின்றன. உறக்கத்தில் உடல் வெப்பம் ஒரு சென்டி கிரேடு குறைகிறது. உடலில் சேர்ந்த கழிவுகளை வெளியேற்றும் வேலை தூக்கத்தின்போது வேகமடைகிறது.

    • கோடை வெப்பத்தை சமாளிப்பதற்கு ஏற்ற வழிமுறைகளை பின்பற்றுவது அவசியம்.
    • அடர் நிறம் கொண்ட துணிகள் அணிவதை தவிர்க்கவும்.

    கோடை காலத்தில் வெப்பநிலையில் ஏற்படும் மாறுபாடுகளை சமாளிப்பதற்கு ஏற்ற வழிமுறைகளை பின்பற்றுவது அவசியம். அதன் மூலம் உடல் ஆற்றலை அதிகரித்துக்கொள்ளலாம். தேவையற்ற பிரச்சினைகளில் இருந்து உடலை தற்காத்தும் கொள்ளலாம். அதற்கு செய்ய வேண்டிய 10 விஷயங்கள்:

    1. அடர் நிறம் கொண்ட துணிகள் அணிவதை தவிர்க்கவும். வெளிர் நிறத்திலும் வெள்ளை நிற ஆடைக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். தளர்வான பருத்தி ஆடைகளை அணிவது உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும்.

    2. காபின் அதிகம் கொண்ட பானங்கள் நீரிழப்பை ஏற்படுத்தும். அந்த பானங்கள் பருகுவதற்கு இதமாக இருந்தாலும் கோடை காலத்தில் அவற்றை அறவே தவிர்த்துவிடுவது நல்லது. மதுப்பழக்கத்தையும் தவிர்க்கவும். அதுவும் நீரிழப்பை அதிகப்படுத்திவிடும்.

    3. வெயிலின் தாக்கத்தால் உடலில் இருந்து வெளிப்படும் அதிகப்படியான வியர்வை உடலில் இருந்து சோடியம் மற்றும் பொட்டாசியத்தை இழக்க வழிவகுக்கும். எலுமிச்சை ஜூஸ், இளநீர், மோர், ஸ்வீட் கார்ன், தர்பூசணி, வெள்ளரி ஆகியவை கோடைகால உணவில் அவசியம் இடம் பெற்றிருக்க வேண்டும். இவை இழந்த வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை மீட்டெடுக்க உதவும்.

    4. புரதம் மற்றும் கொழுப்பு கொண்ட உணவுகள் செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். மேலும் அவை உடலின் அடிப்படை வெப்பநிலையையும் அதிகப்படுத்திவிடும். இந்த கோடை வெப்பத்தில் உடலை நீரேற்றமாக வைத்திருக்கும் காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்வது சிறப்பானது.

    5. மூன்று வேளை சாப்பிடும் உணவுகளை கோடை காலத்தில் ஐந்து முறையாக பிரித்து சாப்பிடலாம். அப்படி சாப்பிடுவது செரிமானம் இலகுவாக நடைபெற உதவும். நாள் முழுவதும் உடல் ஆற்றலுடன் செயல்படவும் வித்திடும்.

    6. நேரடி சூரியத் தொடர்பைத் தவிர்க்கவும். காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியே செல்வதை கூடுமானவரை தவிர்க்கவும். தலையை பாதுகாக்க குடை மற்றும் தொப்பியைப் பயன்படுத்தவும். சன்ஸ்கிரீன் பூசுவதற்கும் மறந்துவிடாதீர்கள்.

    7. மாய்ஸ்சுரைசர் போடுவது சருமத்திற்கு கூடுதல் சுமையாகத் தோன்றலாம். ஆனால் அது சருமத்தை ஈரப்பதமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும். மென்மையான கிரீம் அல்லது கற்றாழை ஜெல் சருமத்திற்கு இதமளிக்கும்.

    8. கோடையில் எல்லோரும் விரும்பும் பயிற்சிகளில், முதன்மையானது நீச்சல். அது உடலை வெப்பத்தில் இருந்து காக்கும். காலை அல்லது மாலையில் நடைப்பயிற்சி செய்வது, சைக்கிள் ஓட்டுவது கூட புத்துணர்ச்சி அளிக்கும்.

    9. காதுகளின் பின்புறம், மணிக்கட்டு, கழுத்து, முழங்கைகள், முழங்கால்கள் போன்ற பகுதிகளில் ஐஸ்கட்டி கொண்டு ஒத்தடம் கொடுக்கலாம். குளிர்ந்த பாட்டிலை உருட்டியும் மசாஜ் செய்யலாம். அது உடலை விரைவாக குளிர்விக்க உதவும்.

    10. அடிக்கடி தண்ணீர் பருக மறக்காதீர்கள். கோடையை சமாளிக்க தினமும் போதுமான அளவு ஓய்வெடுங்கள்.

    • கவலையுடன் படுக்கைக்கு செல்லக்கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
    • தியானம் செய்வதன் மூலம் மனதை அமைதிப்படுத்த முடியும்.

    இரவு தூங்குவது முதல் காலையில் விழித்து எழுவது வரையிலான இடைப்பட்ட நேரத்தில் எதுவும் சாப்பிடாததால் நீண்ட நேரம் வயிறு காலியாக இருக்கும். அதன் காரணமாக காலையில் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறையும். அதனை சீராக பராமரிப்பதற்கு குளுகோகன், எபிநெப்ரின் மற்றும் கார்டிசோல் ஆகிய மூன்று ஹார்மோன்கள் போராடும்.

    இவற்றுள் கார்டிசோல், மன அழுத்த ஹார்மோனாகும். ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை பராமரிக்கும் இந்த ஹார்மோன் அதிகாலை வேளையில் அதிகமாக சுரக்கும். பகல் பொழுதை நெருங்கும்போது படிப்படியாக குறையும். நள்ளிரவில் வெகுவாக குறைந்துவிடும். பின்பு காலையில் அதிகரித்துவிடும். எனவே நீரிழிவு நோயாளிகள் காலை நேரத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக மன அழுத்தத்தில் இருந்தால் இந்த ஹார்மோன் காலை வேளையில் சட்டென்று அதிகரித்துவிடும்.

    குறிப்பிட்ட நேரத்தில் வேலையை முடித்தாக வேண்டும் என்ற நெருக்கடிக்கு ஆளாகுதல், வேலையையும், குடும்ப வாழ்க்கையையும் சம நிலையில் நிர்ணயிக்க தவறுதல், கடன் நெருக்கடி உள்பட பல்வேறு காரணங்கள் மன அழுத்தத்திற்கு வித்திடுகின்றன. அதே நிலை நீடிக்கும்போது ஒருவித பயம், வெறுமை போன்ற உணர்வுகள் வெளிப்படும்.

    அப்படிப்பட்ட மன நிலையில் தூங்கச் சென்றால் காலையில் மன அழுத்த ஹார்மோனான கார்டிசோல் அதிகமாக வெளியேறிவிடும். அதனால்தான் நோயாளிகள் கவலையுடன் படுக்கைக்கு செல்லக்கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். இது நீரிழிவு நோயாளிகளுக்கும் பொருந்தும்.

    ஏனெனில் காலை வேளையில் கார்டிசோல் அளவு அதிகரித்தால் இன்சுலின் உற்பத்தி பாதிப்புக்குள்ளாகும். குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்குத்தான் நேரடி பாதிப்பை ஏற்படுத்தும். மன அழுத்த ஹார்மோன்களின் செயல்பாடு அதிகரிக்கும்போது கணையத்தில் இன்சுலினை உற்பத்தி செய்யும் செல்கள் சரியாக வேலை செய்ய முடியாத நிலைக்கு ஆளாகக்கூடும். அவை தயாரிக்கும் இன்சுலினின் அளவு குறையலாம். அதன் தாக்கமாக உடலில் குளுக்கோஸ் அளவும் குறையக்கூடும். இது நீரிழிவு நோயாளிகளுக்கு பாதிப்பை அதிகப்படுத்திவிடும்.

    கார்டிசோல் ஹார்மோன் அதிகரிப்பது, நீரிழிவு நோயாளிகளை மட்டுமல்ல மற்றவர்களையும் பாதிக்கலாம். அதிகாலை வேளையில் கார்டிசோல் ஹார்மோனின் அதிகரிப்பு காரணமாக ஏற்படும் அழுத்தத்தின் தாக்கமாக உயர் ரத்த அழுத்தம், பதற்றம், மாரடைப்பு, மூளை பக்கவாதம் போன்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடும். நாள்பட்ட நோய்கள், உடல் வலி, மன அழுத்தம் மற்றும் நுரையீரல் நோய்கள் போன்ற பாதிப்பு கொண்டவர்களுக்கு நிலைமை மோசமாகக்கூடும்.

    கட்டுப்படுத்துவதற்கான வழிகள்

    * அதிகாலையில் கார்டிசோல் ஹார்மோன் சுரப்பு காரணமாக ஏற்படும் மன அழுத்தத்தை தடுக்க யோகாசனம் அல்லது உடற்பயிற்சி செய்யலாம்.

    * ஆன்டி-ஆக்சிடெண்டுகள் அதிகம் கொண்ட உணவுகளை சாப்பிட வேண்டும்.

    * நீரிழிவு நோயாளிகள் சரியான நேரத்தில் மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.

    * இரவில் ஆழ்ந்த தூக்கம் அவசியமானது. தூக்கமின்மை பிரச்சினை இருந்தால் அதனை சரி செய்வதற்கான வழிமுறைகளை கையாள வேண்டும்.

    * மது அருந்துதல், புகைப்பிடித்தல் மற்றும் பிற போதை பழக்கங்களை தவிர்க்க வேண்டும்.

    * தியானம் செய்வதன் மூலம் மனதை அமைதிப்படுத்த முடியும்.

    * தினமும் போதுமான நேரம் ஓய்வு எடுப்பது அவசியமானது.

    இலக்குகளையும் எதிர்பார்ப்புகளையும் நிர்ணயித்துக்கொள்வது, அது பற்றிய சிந்தனையிலேயே மூழ்கி இருப்பது மன அழுத்தத்துக்கு வழிவகுக்கும். அதற்கு இடம் கொடுக்காமல் திட்டமிட்டு செயல்பட வேண்டும்.

    ×