search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    கோடைக்காலத்தில் காது, மூக்கு, தொண்டை பிரச்சினை வருவது ஏன்?
    X

    கோடைக்காலத்தில் காது, மூக்கு, தொண்டை பிரச்சினை வருவது ஏன்?

    • அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
    • வெதுவெதுப்பான தண்ணீராக இருந்தால் உடலுக்கு நல்லது.

    தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கிய பின்பு தான் வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால், இந்த வருடம், அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. கரூர், சேலம், வேலூர் மாவட்டங்களை தொடர்ந்து மதுரையில் அதிக அளவில் வெயில் பதிவாகி வருகிறது.

    அதாவது, தினமும் 102 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகிறது. கோடை வெயில் அதிகமாக இருப்பதால், மர நிழலை தேடி ஓடுவதை போல், குளிர்பானங்களை தேடி அதனை ஆசையாய் பருகிவருகிறோம். இந்த நிலையில் வெயில் காலங்களில் காது, மூக்கு, தொண்டை பிரச்சினை அதிகமாகி வருகிறது. இதுகுறித்து மதுரை அரசு ஆஸ்பத்திரியின் காது, மூக்கு, தொண்டை பிரிவு துறை தலைவர் டாக்டர் தினகரன் கூறியதாவது:-

    தற்போது வெயில் அதிகமாக இருப்பதால், உடலில் உள்ள நீர் சத்துகள் உடனடியாக குறைந்து விடுகிறது. அதனை அதிகப்படுத்துவதற்கு குளிர்பானங்களை சாப்பிடுகிறோம். அதாவது, குளிர்ந்த நீர், குளிர்ந்த பானங்களால் மூக்கடைப்பு பிரச்சினை, அடிக்கடி தும்மல் வரும். அதனை தொடர்ந்து, காது வலி வருகிறது. அதன்பின்னர், தொண்டை வலியும் வருகிறது. குளிர்பானங்களை காட்டிலும் எலுமிச்சை சாறு, டீ போன்றவற்றை அருந்தலாம். வெயில் காலத்திற்கு ஏற்ற உணவாக இதுபோன்ற உணவுகள் உள்ளது. முடிந்த வரை வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும். வெதுவெதுப்பான பானங்களை கோடைக்காலத்தில் அருந்த வேண்டும்.

    அதுபோல், வெயிலில் சென்று விட்டு உடனடியாக வீட்டிற்கு வந்த உடன், குளிர்ந்த பானங்கள் சாப்பிடக்கூடாது. ஏனென்றால், உடலில் உள்ள வெப்பநிலையும், அறையில் உள்ள வெப்பநிலையில் சமமாக இருக்காது. எனவே, வெளியில் சென்று விட்டு வந்தால், குறைந்தபட்சம் அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த பானங்களை சாப்பிடலாம்.

    வெயில் காலத்தில் பெரியவர்களும், குழந்தைகளும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். அவர்களுக்குத்தான் பல்வேறு பிரச்சினைகள் வருகிறது. அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே இருக்கும்.

    கோடைக்காலம் வந்தாலே காது, மூக்கு, தொண்டை பிரச்சினை தான் அதிக அளவில் வருகிறது. பொதுவாக ஏப்ரல், மே மாதங்களில் வெயில் அதிகம் இருப்பதால் காது, மூக்கு, தொண்டை பிரிவிற்கு சிகிச்சைக்கு அதிக அளவில் நோயாளிகள் வருகின்றனர். ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வரும் வெளிநோயாளிகளின் எண்ணிக்கையை காட்டிலும் இரு மடங்கு வருகிறது. இந்த பிரச்சினைகளை தீர்க்க அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். அதுவும், வெதுவெதுப்பான தண்ணீராக இருந்தால் உடலுக்கு நல்லது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×