என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    இம்முறை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் முதன் முதலாக புதிய பாடத்திட்டத்தின்படியும், வினாத்தாள் வடிவமைப்பு இல்லாமலும், நன்கு சிந்தித்து எழுதக்கூடிய கேள்விகள் இடம்பெறும் வினாத்தாள்களுக்கும் விடையளிக்க உள்ளனர்.
    கொரோனா நோய்த் தொற்று காரணமாக மார்ச் 27-ந் தேதி தொடங்க வேண்டிய பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 14-ந் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து மே 3-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், அதன்பிறகான நாட்களில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. எனவே மாணவர்கள் தற்போது உள்ள விடுமுறையை எப்படி பயன்படுத்தி கொள்வது என்பதை திருவண்ணாமலை மாவட்டம் தேசூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ரவி காசி வெங்கட்ராமன் விளக்குகிறார்.

    இம்முறை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் முதன் முதலாக புதிய பாடத்திட்டத்தின்படியும், வினாத்தாள் வடிவமைப்பு இல்லாமலும், நன்கு சிந்தித்து எழுதக்கூடிய கேள்விகள் இடம்பெறும் வினாத்தாள்களுக்கும் விடையளிக்க உள்ளனர். மேலும் இரு தாள்களாக எழுதப்பட்ட தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழித்தாள்கள் ஒரே தாளாக மாற்றப்பட்டுள்ளது. இத்தகைய மாற்றங்களைக் கவனத்தில் கொண்டு மாணவர்கள் தேர்வுக்கு தயாராக வேண்டும்.

    ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு கால அட்டவணையில், ஒவ்வொரு தேர்வுக்கும் இடையே அதிகளவில் விடுமுறை விடப்பட்டிருந்தது. இனிவரக் கூடிய தேர்வுகளுக்கு விடுமுறை குறைவாக இருக்கவே வாய்ப்புள்ளது. மாணவர்கள் இதற்கு தகுந்தவாறு தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ளவேண்டும்.

    பொதுவாக எந்த பொதுத்தேர்வு தொடங்குவதற்கு 2 அல்லது 3 வாரத்திற்கு முன்னர், புதிதாக எந்தப் பாடப் பகுதியையும் படிக்காமல், ஏற்கனவே படித்த பாடங்களை திருப்புதல் (revise) செய்வது வழக்கம். ஏனெனில் படிக்காமல் உள்ள புதிய பாடப் பகுதிகளை படிக்க அதிக நேரமாகும். ஆனால் இப்போது புதிதாக தேர்வு கால அட்டவணை அறிவிக்கப்பட இருப்பதாலும், அதிக விடுமுறை நாட்கள் உள்ளதாலும் மாணவர்கள் படிக்காமல் விட்ட புதிய பாடப் பகுதிகளையும் படித்து அதிக மதிப்பெண்கள் பெற முயற்சி செய்ய வேண்டும்.

    மாணவர்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை கைப்பேசி மூலமாக ஆசிரியர்களிடமோ அல்லது சக மாணவர்களிடமோ கேட்டுத் தெளிவு பெறலாம்.

    மேலும் வீட்டிலிருந்தே மாணவர்கள் பாடங்களை கற்கும் வகையில் இணைய வழிக் கல்வி வலைதளம் e-learn.tnschools.gov.in தமிழக பள்ளிக் கல்வித் துறையால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் அனைத்துப் பாடங்களும் வீடியோவாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. கணினி வசதி இல்லாத மாணவர்களும் தங்கள் செல்போன் மூலமாக, தாங்களே கற்றுக்கொள்ளும் வகையில் எளிய வடிவில் இது உள்ளது.

    இதைத் தவிர மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் கல்வித் தொலைக்காட்சி வழியாக தினமும் பாடம் சார்ந்த வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. டி.டி. பொதிகை தொலைக்காட்சியிலும் ஏப்ரல் 15-ந் தேதி முதல் காலை 10 மணியில் இருந்து 11 மணி வரை பாடம் சார்ந்த நிகழ்வுகள் ஒளிபரப்பப்படுகின்றன. மாணவர்கள் இவைகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    தமிழ், ஆங்கிலப் பாடங்களில் மனப்பாடப்பகுதிகள் மற்றும் இலக்கணம் சார்ந்த பகுதிகள், கணிதப் பாடத்தில் செய்முறை வடிவியல் பகுதி மற்றும் வரைபடம், அறிவியல் பாடப்பகுதியில் உள்ள படங்கள், சமூக அறிவியல் பாடத்தின் வரைபடங்கள் மற்றும் காலக்கோடுகள் போன்றவற்றை அவ்வப்போது திருப்புதல் செய்யவேண்டும். கூடுதலாக அனைத்துப் பாடங்களிலும் ஒரு மதிப்பெண் வினாக்களை தயார் செய்து படிக்க வேண்டும்.

    ரவி காசி வெங்கட்ராமன்
    ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், தேவைக்குத் தாய்ப்பால் குடிக்காத குழந்தைகள், ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகள் ஆகியோரை நிமோனியா எளிதில் தாக்கும்.
    உடலில் நோய் எதிர்ப்பு சக்தி சரியாக இருந்தால், தொற்றுநோய்கள் நம்மை அண்டுவதற்கு அஞ்சும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு காயத்துக்குப் போடும் பிளாஸ்திரி மாதிரி பல நோய்கள் வந்து ஒட்டிக்கொள்ளும். அதிலும் குறிப்பாக பச்சிளம் குழந்தைகளைக் குறிவைத்துத் தாக்கும் நோய்கள்தான் நம் நாட்டில் அதிகம். அவற்றில் மிக முக்கியமானது, நிமோனியா.

    எது நிமோனியா? :'ஸ்ட்ரெப்டோகாக்கஸ் நிமோனியே' எனும் பாக்டீரியா கிருமிகள் காற்றில் கலந்து வந்து நுரையீரலைத் தாக்குவதால், நிமோனியா ஏற்படுகிறது. இந்த நோயுள்ளவர் இருமும்போது, தும்மும்போது, சளியைக் காறித் துப்பும்போது, இந்தக் கிருமிகள் காற்றில் கலந்து, அதைச் சுவாசிக்கும் அடுத்த நபருக்கும் தொற்றிக்கொள்ளும். எனவே, இந்த நோய் உள்ளவரோடு நெருங்கிப் பழகும் குழந்தைக்கு நிமோனியா பரவ வாய்ப்புகள் அதிகம்.

    ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், தேவைக்குத் தாய்ப்பால் குடிக்காத குழந்தைகள், குறைந்த எடையில் பிறக்கும் குழந்தைகள், அசுத்தமான இடங்களிலும், அதிக நெரிசலான இடங்களிலும், மாசு நிறைந்த சூழலிலும் வளரும் குழந்தைகள், விறகு அடுப்புப் புகையை சுவாசிக்கும் குழந்தைகள், ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகள் ஆகியோரை நிமோனியா எளிதில் தாக்கும்.

    அறிகுறிகள் :இந்த நோயுள்ள குழந்தைக்குப் பசி இருக்காது. சாப்பிடாது. கடுமையான காய்ச்சல், இருமல், சளி, வேகமாக மூச்சுவிடுதல், மூச்சுத்திணறல், உதடுகள் வெளிறிப்போவது அல்லது நீலம் பூத்துப்போவது போன்ற அறிகுறிகளும் தோன்றும். இருமும்போது நெஞ்சு வலிக்கும். குழந்தை எந்த நேரமும் அழுது கொண்டிருக்கும்; மிகவும் சோர்வாகக் காணப்படும்.

    இந்த நோயைக் கவனிக்கத் தவறினால், இந்தக் கிருமிகள் நுரையீரலையும் கடந்து, ரத்தத்தில் கலந்து, உடல் முழுவதும் பரவக்கூடிய ஆபத்து உள்ளது. முகத்தில் உள்ள சைனஸ் அறைகள், எலும்பு, ரத்தம், வயிறு, காது, மூளை உறை போன்றவற்றைப் பாதித்து, உயிரிழப்பை ஏற்படுத்தும் ரத்தப் பரிசோதனைகள் மற்றும் மார்பு எக்ஸ்-ரே மூலம் இந்த நோயை எளிதில் கண்டுபிடித்துவிடலாம்.

    சிகிச்சை என்ன :நிமோனியாவை இரு வகைகளாகப் பிரித்து சிகிச்சை அளிப்பது நடைமுறை. ஆரம்பநிலை நிமோனியா முதல் வகையைச் சேர்ந்தது. இதற்கு நோயாளி வீட்டில் இருந்தபடியே ஒரு வாரத்துக்குச் சிகிச்சை பெற்றால் குணமாகும். தீவிர நிமோனியா இரண்டாம் வகை. இந்த நோயாளிகளை மருத்துவமனையில் அனுமதித்து, அவர்களின் சிரை ரத்தக் குழாய்களில் தகுந்த 'ஆன்டிபயாடிக்' மருந்துகள் மற்றும் குளுக்கோஸ் சலைனைச் செலுத்தியும், மூக்கு வழியாக ஆக்ஸிஜனைச் செலுத்தியும் சிகிச்சை தரப்படும்.

    அதேநேரத்தில் நிமோனியாவை நெருங்க விடாமல் தடுக்க தடுப்பூசிகள் உள்ளன. அவற்றைக் காலத்தோடு போட்டுக்கொண்டால் ஆபத்துகள் வராது. தடுப்பூசி வகை :'பிசிவி 13' தடுப்பூசி (PCV-13) என்பது ஒரு வகை. பச்சிளம் குழந்தைகள் முதல் 50 வயதைக் கடந்தவர்கள் வரை அனைவரும் இதைப் போட்டுக்கொள்ளலாம்.  குழந்தைக்கு ஒன்றரை, இரண்டரை, மூன்றரை மாதம் முடிந்தவுடன் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். இதற்கு 'முதன்மைத் தடுப்பூசி' என்று பெயர். அதன் பிறகு, 15 மாதங்கள் முடிந்ததும், ஊக்குவிப்பு ஊசியாக ஒரு தவணை போடப்பட வேண்டும்.

    'பிபிஎஸ்வி 23' (PPSV 23) என்பது மற்றொரு வகை. இத்தடுப்பூசியை இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே போட வேண்டும். அதிலும் எல்லா குழந்தைகளுக்கும் இது தேவையில்லை. இதய நோய், சிறுநீரக நோய், நீரிழிவு நோய், ஆஸ்துமா, கல்லீரல் நோய், புற்றுநோய், மண்ணீரல் நோய், எய்ட்ஸ் நோய் உள்ளவர்கள், உறுப்பு மாற்றுச் சிகிச்சை மேற்கொள்கிறவர்கள் ஆகியோர் 'PCV 13' தடுப்பூசியை ஒருமுறையும், 2 மாதம் கழித்து 'PPSV 23' தடுப்பூசியை ஒருமுறையும் போட்டுக்கொள்வது நல்லது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு 'PPSV 23' தடுப்பூசியை மீண்டும் ஒருமுறை போட்டுக்கொள்ள வேண்டும்.

    முதியோரையும் தாக்கும் :நிமோனியா சில சமயம் பெரியவர்களையும் தாக்கும். முதுமையில் நோய் எதிர்ப்பு சக்தி மிகக் குறைவாக இருப்பதே இதற்குக் காரணம். அந்த நேரத்தில் நிமோனியா அவர்களைத் தாக்கினால் உடனடியாக உயிரிழப்பும் நேரலாம். இதைத் தவிர்க்க 50 வயதைக் கடந்தவர்கள் 'பிசிவி 13' தடுப்பூசியை ஒரு தவணை போட்டுக்கொண்டு, ஒரு வருடம் கழித்து 'பிபிஎஸ்வி 23' தடுப்பூசியை ஒரு தவணை போட்டுக்கொள்ள வேண்டும்.

    உலகம் முழுவதும் ஆண்டுதோறும் சுமார் 20 லட்சம் குழந்தைகள் நிமோனியாவால் உயிர் இழக்கின்றனர். இதில் 25 சதவீதம் பேர் இந்தியக் குழந்தைகள். அதாவது, நான்கு குழந்தைகளில் ஒரு குழந்தை இந்தியாவைச் சேர்ந்தது. ஆகவே, இந்த நோயை வரவிடாமல் தடுப்பதுதான் முக்கியம். இதற்குத்தான் இந்த இரண்டுவகைத் தடுப்பூசிகள் உதவுகின்றன.

    சுத்தம் அவசியம் :நிமோனியா மற்றவர்களுக்குப் பரவாமல் தடுக்க சுற்றுப்புறம் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்க வேண்டியது அவசியம். தெருக்களில் எச்சில் மற்றும் சளியைத் துப்பக்கூடாது. இருமும்போது கைக்குட்டையால் முகத்தை மறைத்துக்கொள்ள வேண்டும். வீடுகளில் விறகு/கரி அடுப்புகளைப் பயன்படுத்தக்கூடாது. வீட்டில் எவரும் புகைபிடிக்கக்கூடாது.

    குழந்தைக்கு இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதற்கு ஆறு மாதம் முடிகிற வரை தாய்ப்பால் மட்டுமே தரவேண்டும். அதற்குப் பிறகு தாய்ப்பாலுடன் ஊட்டச்சத்து நிரம்பிய இணை உணவுகளை இரண்டு வயது வரை தர வேண்டும். குழந்தைக்கு உடல் சுத்தம், கை, ஆடை மற்றும் படுக்கை விரிப்புகளும் சுத்தமாக இருக்க வேண்டும்.

    -டாக்டர் கு. கணேசன்,பொதுநல மருத்துவர், ராஜபாளையம்.gganesan95@gmail.com
    குழந்தைகள் விஷயத்தில் அடிப்பது சரியா? அடித்தால் குழந்தைகளை சரிசெய்து விட முடியுமா? இதுவரை நீங்கள் நினைத்திருந்தது தவறு. ஏன் என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
    குழந்தைகள் விஷயத்தில் அடிப்பது சரியா? அடித்தால் குழந்தைகளை சரிசெய்து விட முடியுமா? இதுவரை நீங்கள் நினைத்திருந்தது தவறு. ஏன் என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள். பெற்றோர், ஆசிரியர், வீட்டில் உள்ள பெரியவர் யாராக இருந்தாலும் குழந்தையை அடிப்பது என்பது குற்றம்.

    நாம் குழந்தைகள் நம் சொத்தாக, நம் உரிமையாகப் பார்க்கிறோம். உண்மையில், அவர்கள் நம் மூலம் வந்திருக்கிறார்கள். ஆனால், நம்மை போல அவர்களின் இயல்பு, சுபாவம், கனவு, ஒழுக்கம், நடவடிக்கை எல்லாம் ஒரேபோல இருக்கும் என எதிர்பார்ப்பது சரியல்ல.

    அன்பு ஒன்றே மிகப் பெரிய ஆயுதம். அதை தீட்டிக் கொள்ளுங்கள் போதும். அன்புக்கும் செல்லத்துக்கும் வித்தியாசம் உண்டு. அன்பு, குழந்தைகளைப் பண்பானவர்களாக மாற்றும். செல்லம் கொடுப்பது, குழந்தைகளைக் கெடுக்கும். இந்த வித்தியாசம் புரியட்டும். ‘எங்கம்மாவ கேட்காம நான் இதை செய்ய மாட்டேன்’. அன்பால் வளர்க்கும் பிள்ளை சொல்வது. ‘இதை எனக்கு கொடுத்து விடு, இது எனக்கே சொந்தம்’… செல்லத்தால் வளரும் பிள்ளை சொல்வது.

    இரண்டும் இருவேறு குணங்களைத் தரும். அம்மாவோ அப்பாவோ தன் கண் அசைவால் கோபத்தை தெரிவித்துகூட குழந்தையை திருத்தி விட முடியும். இந்த வளர்ப்பு முறையை மிக சிறந்த முறை. இதற்கு புரிதலும் பெருந்தன்மையும் பெற்றோருக்கு வேண்டும். செம அடியை அடிக்கும் பெற்றோரின் குழந்தைகளுக்கு கண் அசைவும் புரியாது நீங்கள் வாய் வலிக்க கத்தினாலும் கேட்காது.

    சென்சிடீவ்வான குழந்தைகளை வளர்ப்பது கொஞ்சம் கடினம்தான். ஆனால், முடியாத காரியம் அல்ல. முயன்றால் அன்பால் அரவணைப்பால் பெற்றோரின் பண்பால் நிச்சயம் குழந்தைகளை நல்வழிப்படுத்த முடியும். இதற்கு முதலாக நீங்கள் பண்பானவர்களாக மாறிக் கொள்ளுங்கள். குழந்தைகளுக்கு நல்ல முன் உதாரணமாக மாறிவிடுங்கள். பின் எல்லாம் சுபமே. 
    கொரானா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் குழந்தைகள் வீட்டுக்குள் ஏதேனும் அசம்பாவிதமாக செய்துகொள்ளாமல் தடுக்க ஒரே வழி வீட்டை குழந்தைக்கேற்ற பாதுகாப்புச் சூழலாக மாற்றுவது தான்.
    கொரானா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் வீட்டில் இருக்கும் குழந்தைகளை சமாளிப்பது பெரும் கஷ்டம். பெற்றோராக நீங்கள் உஷாராக இருந்தாலும்கூட வீட்டுச்சூழலில் எந்நேரமும் குழந்தையை, உங்கள் கண்காணிப்பில் வைத்திருக்க முடியாது. குழந்தைகள் வீட்டுக்குள் ஏதேனும் அசம்பாவிதமாக செய்துகொள்ளாமல் தடுக்க ஒரே வழி வீட்டை குழந்தைக்கேற்ற பாதுகாப்புச் சூழலாக மாற்றுவது தான். இதைத்தான் "சைல்ட் ப்ரூஃபிங்" என்கின்றனர். இவற்றை செய்வதால் உங்கள் குழந்தையின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதோடு மட்டுமல்லாமல், குழந்தைகள் தன்னிச்சையாக சுற்றுப்புறத்தை ஆய்ந்து விளையாட அனுமதிக்கப்படும்போது, அவர்கள் மனதில் தன்னம்பிக்கை மற்றும் ஆளுமைத் திறன் போன்றவை வளர்கின்றன.

    பூட்டுகள்: அலமாரிகள் மற்றும் இழுப்பறைகளுக்கு பூட்டுகள் போடுவதால். குழந்தைகள் அவற்றில் உள்ள அபாயகரமான சாமான்களை எடுப்பதை தடுக்கலாம். சமையலறை மற்றும் பாத்ரூம் போன்ற இடங்களில் உயரம் குறைவான கேபினட்டுகள் இருந்தால், மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இவற்றில் கெமிக்கல் க்ளீனர்கள், மருந்துகள் மற்றும் கூரான உபகரணங்கள் இருக்கக்கூடும்.

    மின்சார பிளக் மூடிகள்: எதையுமே தொட்டுப்பார்த்து தெரிந்து கொள்ள குழந்தைகள் முயற்சிக்கும் என்பதால் மின்சார பிளக் பாயிண்டுகளில் கவனமாக இருக்க வேண்டும். எனவே இவற்றுக்கு உறுதியான பிளாஸ்டிக் மூடிகள் வாங்கி பொருத்துவது அவசியம்.

    வாயிற்கதவு: குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட பகுதி அல்லது அறையை விட்டு படிகளுக்கோ, பால்கனிக்கோ செல்லாமல் இருப்பதற்கு, ‘சேஃப்டி கேட்’ எனப்படும் வாயிற்கதவு மிக அவசியம். இந்த கதவுகளானது சுவரில் நிரந்தரமாக பொருத்தப்படுவதோடு, குழந்தைகள் எளிதில் வெளியே தாண்டி வராத அளவு, அவர்களுக்கான கதவுகள் போன்று இருக்கும். மேலும் அந்த மாதிரியான கதவுகளில் இடைவெளிகள் கூட இருக்கும். ஆகவே அந்த கதவுகளை சரியாக கவனமாக பார்த்து வாங்கி பொருத்த வேண்டும்.

    மருந்து மற்றும் விஷப்பொருட்கள்:எதையுமே எடுத்தவுடன் வாயில் வைக்கும் பழக்கம் குழந்தைகளுக்கு இயற்கை என்பதால், இந்த விஷயத்தில்நாம் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். ஆகவே மருந்து பாட்டில்கள், கெமிக்கல் பெட்டிகள் போன்றவற்றை சாதாரணமாக திறந்த மாதிரி வைத்திருக்காமல், உறுதியான மூடியுடன் கூடிய பெட்டியில் வைத்திருப்பது நல்லது.

    ஃபர்னிச்சர்: குழந்தை எழுந்து நடக்க ஆரப்பித்தப் பிறகு, அறையில் உள்ள இருக்கை போன்ற கனமான சாமான்கள் நகராமல் இருக்க, சுவருடன் இணைந்த பிராக்கெட்டுகள் (mounting brackets) மற்றும் ஸ்ட்ராப்புகள் (wall straps) போன்றவற்றை பயன்படுத்துவது நல்லது. இப்படி செய்யாவிட்டால், புத்தக அலமாரிகள் மற்றும் டிரஸ்ஸிங் மேஜைகளை குழந்தைகள் இழுத்து ஏற முயற்சித்து, மேலே தள்ளிக் கொள்ளக்கூடும். மேலும், கூரான முனைகள் உள்ள டீப்பாய் போன்றவற்றின் நான்கு முனைகளில் பம்பர் பேடுகளை (padded bumpers) பொருத்துவதும் அவசியம்.

    ஜன்னல்: ப்ளைண்டுகள் (blinds) மற்றும் தொங்கு திரைகள் (drapes) போன்றவற்றிலுள்ள கயிறுகளில் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் அவை குழந்தைகள் விஷயத்தில் அபாயமான ஒரு அம்சமாகும். ஆகவே இந்த கயிறுகளை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் வைத்திருப்பது நல்லது. மேலும் ஜன்னல்கள் திறந்திருக்கும் போது, அதன் வழியாக குழந்தைகள் விழுந்து விடாமல் இருக்க, ஜன்னலில் வலை போன்ற அமைப்பை பொருத்த வேண்டும்.

    சமையலறை: சமையலறை என்பது குழந்தைகளுக்கு பல அபாய அம்சங்களுடன் காத்திருக்கிறது. ஏனெனில் அங்கு கூரான கருவிகள், ஆல்கஹால், மருந்துகள், தீக்குச்சிகள், பிளாஸ்டிக் பைகள், நச்சுக் கலந்த கெமிக்கல் பொருட்கள் போன்றவை இருப்பதால், எப்போதுமே அலமாரிகளில் வைத்து சேஃப்டி பூட்டுகள் மூலம் பத்திரப்படுத்த வேண்டும். குழந்தையை வைத்துக் கொண்டு சமைக்கும் போது பாத்திரங்களின் கைப்பிடிகள், ஸ்டவ்வின் பின்புறம் திரும்பியிருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும். மைக்ரோவேவ் சாதனத்தை தொடக்கூடாது என்று குழந்தைக்கு சொல்லித் தர வேண்டும்.

    மேற்கூறியவாறெல்லாம் பின்பற்றி வந்தால், குழந்தைகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம். 
    ஊரடங்கு உத்தரவு எதிரொலியாக மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர். இதற்காக வாட்ஸ்-அப் மூலம் மாணவர்களுக்கு வினாக்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த புதிய யுக்திக்கு பெற்றோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
    தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு ஆண்டு இறுதித்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. அதேபோன்று எஸ்.எஸ்.எல்.சி. தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து உள்ளது.

    தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருப்பதால், மாணவ-மாணவிகளுக்கு பாடங்கள் நடத்தப்படாமல் இருக்கிறது. இதனால் மாணவர்கள் பள்ளிக்கூடங்கள் திறந்த பிறகு தேர்வை சந்திப்பது மிகவும் சிரமமான காரியம்.

    இதனால் தனியார் பள்ளிக்கூடங்கள் புதிய யுக்தியை கையாள தொடங்கி உள்ளன. அதாவது, ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் நடத்தும் முறையை ஆரம்பித்து இருக்கின்றனர். வாட்ஸ்-அப் மூலம் பாடங்கள், வினா வங்கிகள் அனுப்பி வைக்கப்படுகிறது. இதனை வைத்து மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    சில பள்ளி, கல்லூரிகளில் பிரத்யேக செல்போன் செயலிகள் உருவாக்கி, அதன்மூலம் மாணவர்கள் ஒருங்கிணைக்கப்பட்டு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துரையாடல், சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்டல் உள்ளிட்டவையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சில தொடக்க பள்ளிக்கூடங்களில் வீடியோகால் மூலம் பாடல்கள், அடிப்படை கல்வி ஆகியவை ஆடல், பாடலுடன் கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது.

    ஊரடங்கு தளர்த்தப்படுவதற்கு இன்னும் எத்தனை நாட்கள் ஆகுமோ? என்று காத்திருக்கும் நிலையில், வீட்டில் இருந்தபடியே கல்வியை கற்பிக்கும் பணிகளில் கல்வி நிறுவனங்கள் ஈடுபட தொடங்கி இருப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.
    கொரோனா குறித்த விழிப்புணர்வு ஓவியம் வரைந்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ஊரடங்கை குழந்தைகள் பயனுள்ளதாக கழிக்கின்றனர்.
    உலகத்தையே உலுக்கும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தவும், இந்த வைரஸ் குழந்தைகளை பாதிக்காமல் இருப்பதற்காகத்தான் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. ஆனால் வீட்டுக்குள்ளே இருக்கும் சிறுவர், சிறுமிகள் எத்தனை பேர்? ஊரடங்கை பயனுள்ளதாக கழிக்கிறார்கள் என்ற வினா எழத்தானே செய்கிறது.

    படுசுட்டித்தனமாக இருக்கும் குழந்தைகள் வீட்டுக்குள் அங்குமிங்கும் ஓடுவதோடு, பெற்றோரின் பேச்சை காதில் வாங்காமல் செய்யும் சேட்டைகளால், உங்க தொந்தரவு தாங்க முடியலப்பா என்று புலம்பும் பெரியவர்களின் மனக்குமுறலை தான் பெரும்பாலான வீடுகளில் தற்போது கேட்க முடிகிறது.

    இந்த குழந்தைகளுக்கு மத்தியில், சில குழந்தைகள் கொரோனா குறித்த தகவலை சேகரிப்பதோடு, அது குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்கள். அதேபோன்று, குமரி மாவட்டம் விரிகோடு கையாண்டவிளை பகுதியில் வசிக்கும் அஸ்மிதா (11), இம்மானுவேல் (7) என்ற அக்காள், தம்பி இருவரும் கொரோனா வைரஸ் குறித்து ஓவியம் வரைவதோடு, வாசகங்களையும் எழுதுகிறார்கள். அதாவது,

    * கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாக்கும் வழிமுறைகள்

    * வயதானவர்கள் எதை செய்யக்கூடாது

    * கொரோனாவை விரட்ட நாம் என்ன செய்ய வேண்டும்

    சமூக வலைதளங்களில் குழந்தைகள் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு வாசகங்களை படத்தில் காணலாம்.

    * கொரோனா குறித்து அரசை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் என விலாவாரியாக வாசகங்களை எழுதியதோடு, அதற்கேற்ப ஓவியத்தையும் தீட்டியுள்ளனர்.

    * கொரோனா விதிமுறையை மீறினால் என்னவாகும் என செய்தித்தாளில் வரும் தகவல், படங்களை ‘கட்‘ பண்ணியதோடு, அதனை தங்களுடைய கைவண்ணத்தால் விழிப்புணர்வு வாசகங்களையும் எழுதி, மேலும் உயிரூட்டும் வகையில் ஒட்டி வைத்துள்ளனர்.

    இந்த ஆர்வத்தை உணர்ந்த அவர்களுடைய பெற்றோர் ராஜ்குமார், சுமங்கலி ஆகிய இருவரும் தங்களுடைய குழந்தைகளை தட்டிக் கொடுத்து ஊக்குவித்தனர். அதே சமயத்தில், குழந்தைகளின் கொரோனா விழிப்புணர்வு ஓவியம், வாசகங்களை முகநூல், வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைதளங்களிலும் பரப்பினர். இதனை பார்த்த நண்பர்கள், உறவினர்கள் குழந்தைகளின் விழிப்புணர்வு நடவடிக்கையை பாராட்டினர். விழிப்புணர்வு ஏற்படுத்தும் அஸ்மிதா 6-ம் வகுப்பும், இம்மானுவேல் 2-ம் வகுப்பும் படிக்கிறார்கள். இதுகுறித்து இருவரும் கூறுகையில், கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் தொடர்ந்து ஈடுபடுவோம், வீட்டுக்குள்ளே இருந்து கொரோனாவையும் விரட்டுவோம் என தன்னம்பிக்கையுடன் சூளுரைத்தனர்.

    ஊரடங்க உத்தரவால் வீட்டுக்குள்ளே முடங்கி இருக்கும் பெரியவர்கள் முதல் வாலிபர்கள் வரை செல்போன் கையுமாக இருக்கிறார்கள், சிலர் கொரோனா அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாமல் ஊர் சுற்றுகிறார்கள், இவ்வாறான நபர்களுக்கு மத்தியில் இந்த குழந்தைகள் கொரோனா குறித்த தகவலை தினமும் சேகரிப்பதோடு, அதன் தாக்கத்தையும் அறிந்து கவனமாக இருக்க வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயலை போல், மற்றவர்களும் திகழ்ந்து கொரோனாவை விரட்ட எச்சரிக்கையுடன் செயல்படுவோம் என சபதம் ஏற்கலாமே!
    வீட்டில் செல்லப்பிராணி வளர்ப்பது, குடும்பத்தில் உள்ள பலருக்கும் நன்மை செய்யக்கூடியது. செல்லப்பிராணி மற்றும் வளர்ப்பு பிராணிகளைப் பற்றியும், அவை வழங்கும் நன்மைகளையும் கொஞ்சம் தெரிந்துகொள்வோமா..
    குட்டீஸ்.. நீங்கள் வீட்டிற்கு செல்லப்பிள்ளைகள் என்றால், உங்களுடைய செல்லப்பிள்ளைகள் நீங்கள் வளர்க்கும் செல்லப்பிராணிகள்தானே? வீட்டில் செல்லப்பிராணி வளர்ப்பது, குடும்பத்தில் உள்ள பலருக்கும் நன்மை செய்யக்கூடியது. செல்லப்பிராணி மற்றும் வளர்ப்பு பிராணிகளைப் பற்றியும், அவை வழங்கும் நன்மைகளையும் கொஞ்சம் தெரிந்துகொள்வோமா..

    உங்கள் வீட்டில் என்ன செல்லப்பிராணி உள்ளது? நாய், பூனை, கிளி, லவ்பேர்ட்ஸ், மீன்கள் என ஏராளமாக அடுக்கிக்கொண்டே செல்லலாம். இவை தவிர ஆடு, மாடு, கோழிகளை வளர்ப்பு பிராணி களாகவும், பொருளாதார ரீதியான தேவைகளுடனும் செல்லப் பிராணிகள்போல பராமரிக்கும் விவசாய குடும்பங்களும் நம்மிடையே அதிகம். அப்படி, உங்கள் வீட்டில் ஒரு செல்லப்பிராணியோ, வளர்ப்பு பிராணியோ இருந்தால், அது உங்கள் மகிழ்ச்சியை பல மடங்கு அதிகரிக்கும். வாழ்க்கையில் மதிப்பை உண்டாக்கும் என்று கருதப்படுகிறது. வளர்ப்பு பிராணிகள், சமூகத்தோடு நெருங்கிய பிணைப்பு ஏற்படுத்தும் மனப்பாங்கை வளர்க்கும்.

    நீங்கள் மாடு, ஆடு, நாயுடன் வெளியே செல்லும்போதும், உங்கள் பூனையுடன் விளையாடும்போதும் மற்றவர்களின் நலம் விசாரிப்பும், பேச்சும் இயல்பாக ஆரம்பிப்பதை பார்க்கலாம். மற்ற நேரத்தில் ‘எங்கே போகிறீர்கள்?’ என்று கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டியிருப்பதால், பலர் விசாரிக்க விரும்பாமல் போகலாம். ஆனால் கால்நடை மற்றும் வளர்ப்பு பிராணிகளுடன் செல்லும்போது, “என்ன மேய்ச் சலுக்கா?”, “பால்காரம்மா கிளம்பிட்டாங்க...”, “என்ன மாட்டிற்கு உடம்பு சரியில்லையா?” என்று இயல்பான நலம் விசாரிப்பும், நட்புறவும் வளர்வதை உணரலாம்.

    செல்லப்பிராணிகள், வளர்ப்பு பிராணிகள் வளர்ப்பதில் பல இன்னல்கள், சவால்கள் உள்ளன. அதை அன்றாடம் எதிர்கொள்வது வாழ்வில் வரும் சாவாலான தருணங்களையும் தடுமாறாமல் எதிர்கொள்ளும் உளவியல் பண்பை தந்துவிடுகிறது. செல்லப்பிராணிகள், வளர்ப்பு பிராணிகள் வளர்ப்பது நம்மை சுறுசுறுப்பாக செயல்பட வைக்கும். கால்நடைகளும், செல்லப்பிராணிகளும் துரு துருவென செயல்படக்கூடியதாகும். செல்லப்பிராணிகள், சாதாரணமாக சோம்பி கிடப்பதில்லை. நாம் அதை நெருங்கிச் செல்கிறோம் என்றாலே, அது சுறுசுறுப்பாக விளையாடவும் செயல்படவும் தொடங்கிவிடுவதை நாம் கவனிக்கலாம். அந்த நேரத்தில் அவற்றின் சுறுசுறுப்பு நம்மையும் தொற்றிக்கொள்ளும். நம்மை விறுவிறுப்பாக செயல்பட வைக்கும். உதாரணமாக நாய் வளர்ப்பவர்கள், கட்டாயம் நடைப்பயிற்சி மேற்கொள்வதாகவும், மற்றவர்களைவிட கூடுதலாக நடைப்பயிற்சி செய்வதாகவும் ஒரு ஆய்வு சொல்கிறது.

    செல்லப்பிராணி வளர்ப்பதால் நமது தகவல் தொடர்புத்திறனும் நுட்பமாக வளர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. நாம் அவற்றுடன் பழகும்போது, தொடுதல், சைகை கட்டளை மூலமாக நமது எண்ணங்களை அவற்றுக்கு உணர்த்து கிறோம். அதேபோல அவற்றின் ஒவ்வொரு விதமான குரலுக்கும், அசைவுக்கும் நாமும் பொருள் புரிந்து கொள்கிறோம். இந்த நுட்பமானது சமூக செயல்பாட்டின்போதும் மற்றவர்களின் உணர்வுகளை துல்லியமாக புரிந்து கொள்ளவும், பரிவு, பாசம் காட்டவும் காரணமாக அமைகிறது.

    செல்லப்பிராணிகள் நாம் அமைதியாக இருக்கவும், பரபரப்பு இன்றி தளர்வாக நிதானமாக செயல்படவும் காரணமாக அமைகின்றன. இறுக்கமான மனநிலையில் இருந்து மகிழ்ச்சியான மனநிலைக்கு நம்மை மாற்றுவது செல்லப்பிராணிகள்தான். செல்லப்பிராணிகள் வளர்ப்பு, வாழ்க்கையில் நம்பிக்கை ஏற்படுத்துவதாக அமையும். அத்தகைய நேர்மறை எண்ணங்களை விலங்குகளின் பாச உணர்வு நமக்குள் தூண்டும்.

    வயதான பலருக்கும், வளர்ப்பு பிராணிகள் நல்ல துணையாக விளங்குகின்றன. பல நேரங்களில் அவை நட்பாகவும், பாசமுள்ள உறவாகவும் இருக்கின்றன. இது நோய்வாய்ப்பட்ட முதியவர்களுக்கு ஆறுதல் தருவதாகவும், ஆரோக்கியம் வழங்குவதாகவும் உள்ளதாக பல ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

    செல்லப்பிராணிகள் மற்றும் வளர்ப்பு பிராணிகள் வாழ்வியல் சார்ந்ததாகவும், பொருளாதாரம் சார்ந்ததாகவும் உள்ளது. நாய்கள், பூனைகள், முயல்கள், கிளிகள், பறவைகள் என பலவற்றை செல்லப்பிராணியாக வளர்க்கிறோம். இதுபோல ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட மேலும் சில பிராணிகளை வளர்ப்பு பிராணிகளாகவும் வளர்க்கிறோம். வளர்ப்பு பிராணிகள் சார்ந்தும், செல்லப்பிராணிகள் சார்ந்தும் பல்வேறு தொழில்கள் உள்ளன. அவற்றின் மூலம் பலரது வாழ்க்கை வளம்பெறுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
    குழந்தைகளின் மெனுவில் கட்டாயம் இடம்பெற வேண்டிய முக்கியமான 4 உணவு வகைகளைப் பற்றி இப்போது சொல்கிறேன். முதலில் அவற்றில் இருந்து தொடங்குங்கள்.
    சத்தான எதைக் கொடுப்பதாக இருந்தாலும் ஆரம்பத்தில் அதைப் பற்றி விலாவரியாக விளக்கோ, விளக்கென்று விளக்கி குழந்தைகளுக்கு அந்த உணவுப் பொருட்களின் மீது ஆர்வம் வருவதற்குப் பதிலாக சலிப்பை வரவழைத்து விடத் தேவையில்லை.  ஒரே நேரத்தில் நீ இதைத்தான் சாப்பிட வேண்டும், இப்படித்தான் சாப்பிட வேண்டும் என்று வற்புறுத்தி உண்ண வைப்பதைக் காட்டிலும், பெற்றோரான நீங்கள் முதலில் சாப்பிடத் தொடங்கி பேச்சோடு பேச்சாக அதை குழந்தைகளுக்கும் தொற்றிக் கொள்ளச் செய்யலாம்.

    குழந்தைகளின் மெனுவில் கட்டாயம் இடம்பெற வேண்டிய முக்கியமான 4 உணவு வகைகளைப் பற்றி இப்போது சொல்கிறேன். முதலில் அவற்றில் இருந்து தொடங்குங்கள். பிறகு படிப்படியாக அடுத்தடுத்த ஆரோக்கிய மெனுக்களுக்கு தாவலாம்.

    பருப்பு வகைகள் :

    மளிகை லிஸ்டில் இடம் பெறும் உளுந்தப் பருப்பு, பாசிப் பருப்பு, கடலைப் பருப்பு, துவரம்பருப்பு என அத்தனை பருப்பு வகைகளுமே குழந்தைகளுக்கு தினமும் சாப்பிடத் தரத்தக்கவையே. இவற்றில் கூடுதலாக சோயா பீன்ஸ் பருப்பு, ராஜ்மா, மொச்சை, முக்கடலை, பட்டாணி என்று தினமொரு வெரைட்டியாக சேர்த்துக் கொள்ளலாம். இந்தப் பருப்பு வகைகள் இல்லாமல் குழந்தைகளின் ஒரு நாள் கூட கழிய அனுமதிக்காதீர்கள். இவற்றை நீங்கள் உங்கள் வழக்கப்படி குழம்பு சாதமாகவோ அல்லது தனியாக அவித்தோ, வறுத்தோ கூட அவர்களைச் சாப்பிடச் செய்யலாம். இவை அனைத்துமே புரதம் நிறைந்த உணவுவகைகள் லிஸ்டில் சேர்ந்தவை. குழந்தைகளின் அடிப்படை உடல் பலத்தை கட்டமைக்கக் கூடியவை இவையே.

    கீரைகள்:

    இந்தியாவில் பலவகைக் கீரைகள் புழக்கத்தில் உள்ளன. அதில் சாப்பிடக் கூடியவை மட்டுமே கிட்டத்தட்ட 60 வகைகள் உண்டு. அவற்றில் உங்கள் குழந்தைகளுக்குப் பிடித்தமான சுவையில் அமையும் கீரைகளை தினம் ஒன்றாக வாரம் முழுவதும் அவித்தோ, பொரித்தோ அல்லது மசித்தோ சாப்பிடத் தரலாம்.

    வால்நட்:

    வால்நட்டைப் பார்த்திருப்பீர்கள். அதன் வடிவமே கிட்டத்தட்ட மனித மூளை போன்றது தான். ஒரு கைப்பிடி வால்நட்டில் மட்டும் 2.6 கிராம் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் நிரம்பியுள்ளது. இது மனித மூளையின் செயல்திறன் அதிகரிப்பில் மிக முக்கிய பங்காற்றுகிறது. அத்துடன் மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பிலும், இதய செயல்பாட்டைச் சீரமைப்பதிலும் கூட வால்நட்டின் பங்கு அதிகம்.எல்லாவற்றையும் விட முக்கியமாக வால்நட்டில் அதிகமிருக்கும் மெலட்டோனின் குழந்தைகளின் ஆரோக்யமான தூக்கத்திற்கு உத்தரவாதமளிக்கிறது.

    ப்ளூபெர்ரி:

    ப்ளூபெர்ரியில் பாலிஃபீனால் ஆண்ட்டி ஆக்ஸிடண்டுகளின் சதவிகிதம் அபிரிமிதமாக இருப்பதால் அவை ரத்த நாளங்களைப் பாதுகாத்து அவற்றில் வீக்கமிருப்பின் அதையும் சரி செய்து கொள்ள உதவுகிறது. அத்துடன் பிற எந்தப் பழங்களிலும் இல்லாத க்வாலிட்டியாக ப்ளூபெர்ரி பழங்களுக்கு மாத்திரம் டியூமர் செல்களை உருவாகாமல் தடுக்கும் சக்தியும் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளதால் நம் குழந்தைகளின் மெனுவில் நிச்சயம் இடம் பெற வேண்டிய பழவகைகளில் இது முக்கிய இடம்பிடிக்கிறது.

    கீரைகளை குழந்தைகள் தனியாகச் சாப்பிட விரும்பாவிட்டால் அவற்றை சப்பாத்தி மற்றும் பூரியில் ஸ்டஃப் செய்து கொடுத்து சாப்பிடப் பழக்கலாம்.
    பச்சிளம் குழந்தையின் மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் அளவு குறைந்தால், அந்தக் குழந்தை வளரவளர, அதனுடைய மூளை சீரான வளர்ச்சி அடைவதில் பாதிப்புகள் வர வாய்ப்பு இருக்கிறது.
    ‘பிறந்த 10 நிமிடத்தில் ஒரு குழந்தை அழத்தொடங்கினால், அக்குழந்தை ஆரோக்கியத்துடன் இருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம். அந்த குழந்தைகளின் மூளைக்கு ஆக்சிஜன் சென்று விட்டது என்றே அர்த்தம்.

    அதேவேளையில், பச்சிளம் குழந்தையின் மூளைக்கு தேவையான அளவிற்கு ஆக்சிஜன் செல்லவில்லை என்றால், அக்குழந்தை அழாது. மூளைக்குப் போதுமான அளவுக்கு ஆக்சிஜன் செல்லாத காரணத்தால். அதன் உடம்பின் நிறம் சிவப்பு நிறத்தில் இருந்து நீல நிறமாக மாறிவிடும். இதனை, பச்சிளம் குழந்தை மருத்துவர்கள் Cyanosis என்று குறிப்பிடுவார்கள்.

    குழந்தையின் உடம்பு நீலநிறமாக மாறுவதைத் தொடர்ந்து, அதன் கை மற்றும் கால்கள் அசைவது(Grimace Refleexs) நின்று விடும். நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ள குழந்தைகள் மூக்கில் சக்‌ஷன்(Suction) பொருத்தினால், அதை தள்ளிவிடும். மூளைக்கு ஆக்சிஜன் குறைவாக செல்கிற குழந்தைகள் அதனைத் தள்ளாது.

    இதுமாதிரியான குழந்தைகளுக்கு பச்சிளம் குழந்தை மருத்துவரின்(Neonatologist) தொடர் கண்காணிப்பு அவசியம் தேவை. பச்சிளம் குழந்தையின் மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் அளவு குறைந்தால், அந்தக் குழந்தை வளரவளர, அதனுடைய மூளை சீரான வளர்ச்சி அடைவதில் பாதிப்புகள் வர வாய்ப்பு இருக்கிறது. ஆக்சிஜன் போகாத காரணத்தால், மூளை செல் பாதிப்பு அடையும். இதுபோன்ற பாதிப்புகள் உள்ள குழந்தைகளை, மருத்துவ உலகில் Cereberal Palsy என்று குறிப்பிடுவோம்.

    எந்தவித பாதிப்பும் இல்லாமல், இயல்பாக பிறக்கும் குழந்தையின் APGAR ஆனது ஒரு நிமிடத்துக்கு 8/10-வும், 5 நிமிடத்திற்கு 9/10-வும் காணப்படும். உடலில் ஏதேனும் குறைபாடு உடைய குழந்தைகளுக்கு இந்த ஸ்கோர் அளவு குறையும்.

    அந்த சமயத்தில், அந்தக் குழந்தைக்கு செயற்கை சுவாசம் தருவோம். இந்த செயற்கை சுவாசத்தில், Bag And Mask Ventilation, PPV, Intubation என மூன்று பிரிவுகள் உள்ளன. இவற்றின்மூலம், மூளைக்கு ஆக்சிஜன் குறைவாக செல்வதை சரிசெய்யலாம். இதன் பின்னர், குழந்தை முழு ஆரோக்கியத்துடன் இருக்கும்.

    இந்த சிகிச்சை முறை, குறைபிரசவத்தில் பிறந்த குழந்தை, செயற்கை கருத்தரிப்பு மூலம் பிறந்த குழந்தை, தாயிடம் உள்ள சில பிரச்னைகளால் பாதித்த குழந்தைகள் ஆகியோருக்குத் தேவைப்படும். இந்த சிகிச்சை முறைக்கு Hypoxia எனப் பெயர்.

    செயற்கை சுவாசம் தரப்படுகிற குழந்தைகளைNICU-வில்(Neonatal Intensive Care Unit) வைத்து முழுமையாக குணமாகும் வரை கண்காணிக்க வேண்டும். குழந்தையின் ஆரோக்கியத்தைப் பொறுத்து வென்டிலேட்டரைப் பொருத்த வேண்டும். பிறந்து 34 வாரம் முடிவடையாத குழந்தைகளுக்கு இச்சிகிச்சை தொடர்ந்து தர வேண்டியிருக்கும். அதற்கான காலத்தை உறுதியாகச் சொல்ல முடியாது.

    பச்சிளம் குழந்தைகள் தாய்ப்பால் நன்றாக குடித்து, சிறுநீர், மலம் ஆகியவற்றை சரியான நேரத்தில் நன்றாக கழித்தால் உடனே டிஸ்சார்ஜ் செய்துவிடலாம். பச்சிளம் குழந்தைகளைப் பராமரிப்பதில், மருத்துவர் ஆலோசனைப்படி நடப்பது இல்லை. அதற்கு பதிலாக, மற்றவர்கள் சொல்லும் அனுபவ வைத்தியத்தையும், மேலோட்டமான ஆலோசனைகளையும் பலர் பின்பற்றுகிறார்கள். முக்கியமாக, நாட்டு மருந்து மற்றும் பொதுவான மருந்துகளைத் தருகிறார்கள்.

    அவ்வாறு செய்யும்போதுதான் தவறு ஆரம்பிக்கிறது. தாய்ப்பால்தான் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்வதற்கு அடிப்படையானது. அதிலும், முதல் இரண்டு நாட்கள் வருகிற பால்(Clostrum) நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக கொண்டு இருக்கும். எனவே, இதைத் தவறாமல் குழந்தைகளுக்குக் கொடுப்பது நல்லது. 6 மாதங்கள் வரை தாய்ப்பால் அவசியம் புகட்ட வேண்டும்.

    ஒரு வயது வரை தேவையில்லாத மருந்துகளைத் தவிர்க்க வேண்டும். தடுப்பூசிகளைத் தவறாமல் போட வேண்டும்.

    உங்கள் குழந்தைக்கு ஏற்படும் ஒவ்வொரு சுகவீனத்திற்கும் ஏற்ற வகையில் உணவளிப்பது பற்றி உங்கள் டாக்டரிடம் கேளுங்கள். அவருக்குத்தான் நோயின் தன்மையும், அதற்கேற்ப எப்படி உணவளித்தால் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதும் தெரியும்.
    பொதுவாகவே குழந்தைகளின் உணவுப்பழக்கத்தில் அக்கறை செலுத்த வேண்டியது கட்டாயம். அதிலும் உடல்நிலை சரியில்லாதபோது இன்னும் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும். எனவே, உங்கள் குழந்தைக்கு ஏற்படும் ஒவ்வொரு சுகவீனத்திற்கும் ஏற்ற வகையில் உணவளிப்பது பற்றி உங்கள் டாக்டரிடம் கேளுங்கள்.

    அவருக்குத்தான் நோயின் தன்மையும், அதற்கேற்ப எப்படி உணவளித்தால் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதும் தெரியும். அப்படி மருத்துவர்கள் பொதுவாகப் பரிந்துரைத்திருக்கும் சில உணவுகள் பற்றி தெரிந்து கொள்வோம்...

    சளி பிடித்தால்…

    சளி பிடித்த குழந்தைக்கு எப்பொழுதும் போல் வழக்கமான உணவையே அளிக்கலாம். இந்த சமயத்தில் குழந்தைக்கு பசி குறைவாக இருக்கும். சளி மற்றும் அசதியால் அதிகம் ஓடி விளையாடாமல் வீட்டிற்குள்ளேயே இருப்பதால் பசி இருக்காது. சளியைக் குழந்தை விழுங்கிக் கொண்டிருந்தாலும் பசி குறைந்துவிடும். எனவே, குழந்தையை சாப்பிட சொல்லி வற்புறுத்த வேண்டாம். வற்புறுத்தினால் வாந்திதான் ஏற்படும். குழந்தை எதை குடிக்க விரும்பினாலும் கொடுக்கலாம். அதற்கு இந்த நேரம் அதிக தாகம், வறட்சி ஏற்படும்.

    காய்ச்சலில் உணவு...

    102 டிகிரியோ அதற்கு மேலோ காய்ச்சல் ஏற்பட்டால் குழந்தை கெட்டி உணவு சாப்பிடுவது சற்று கடினம். ஆகவே, அம்மாதிரி உணவுகளை குறைத்து கொண்டு கொஞ்சமாக அரை மணி, ஒரு மணிக்கு ஒரு தடவை தண்ணீரோ, பால், மோர், பழச்சாறு போன்றவற்றையோ கொடுக்கலாம். தண்ணீர் குழந்தைக்கு தேவை. விரும்பி குடிக்கும். அது விரும்புமளவு தண்ணீர் குடிக்கட்டும். காய்ச்சல் அதிகமாகி, குமட்டல், வாந்தி ஏற்பட்டால் குழந்தைக்கு எந்த நேரமும் கொஞ்சம் கொஞ்சமாக தொடர்ந்து தண்ணீர் கொடுத்து கொண்டிருக்க வேண்டும்.

    வாந்தி எடுத்தால் வாந்தி எடுத்த மறுநிமிடமே வாயை துடைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் அதில் ஒரு சிட்டிகை உப்பு, அரை கரண்டி சர்க்கரை சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்கலாம்.காய்ச்சல் குறைய ஆரம்பித்து வாந்தி, குமட்டல் நின்று, குழந்தைக்கு பசி லேசாக எடுக்கும் சமயம் ஒன்றிரண்டு வேளை இட்லி அல்லது குழைந்த சாதத்துடன் சாம்பார், கடைந்த தயிர், கடைந்த கீரை, பருப்பு, காய்கறி முதலியவற்றுடன் உப்பு, உரைப்பு, புளிப்பு சேர்த்தும் கொடுக்கலாம். ரொட்டி, ரஸ்க் தனியாகவோ பாலுடனோ கொடுக்கலாம். எல்லாவற்றுக்கும் மேலாக தண்ணீர் மட்டும் அதிகம் கொடுக்க வேண்டுமென்பதை மறந்துவிடாதீர்கள். சோடா, காபி, டீ முதலியவற்றை தவிர்த்து விடுங்கள்.

    வாந்தி எடுத்தால்...

    குழந்தை வாந்தி எடுத்தால் அதன் இரைப்பைக்கு உணவு தேவையில்லை. ஓய்வு ஒன்றே உடனடி தேவை என்பது அர்த்தம். மேலும் மேலும் உணவையே கொடுக்க ஆரம்பித்து விடாதீர்கள். மேற்கொண்டும் வாந்தி தொடரும். வாந்தி எடுத்தபின் இரைப்பைக்கு குறைந்தது 3 - 4 மணி நேரம் ஓய்வு தேவை. அப்பொழுது வயிற்றில் வலியில்லாமல் குமட்டலில்லாமல் குழந்தையும் நிம்மதியாக தூங்கிவிட கூடும். குழந்தையின் வயிறும் ஓய்விற்கு பின்
    மெதுவாகிவிடும்.

    முதலில் தண்ணீர் மட்டும் சிறுக சிறுக கொடுங்கள். தண்ணீரை ஆவலுடன் குழந்தை குடிக்க முற்பட்டாலும், நிறைய தண்ணீரை கொடுக்காமல் ஒரு ஸ்பூனால், அவசரமில்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் கொடுங்கள். சிறிது தண்ணீர் குடித்த பின் சற்று நிறுத்தி கொள்ளுங்கள். 5 - 6 நிமிடங்களுக்கு வாந்தியோ, குமட்டலோ இல்லையென்றால் மேற்கொண்டு கொடுக்க ஆரம்பியுங்கள்.

    தண்ணீர் கொடுத்த பின் மறுபடியும் குழந்தைக்கு ஓய்வு கொடுங்கள். மேற்கொண்டு 3 மணி நேரம் வரை வாந்தி இல்லையென்றால் 40 - 50 மில்லி பால் கொடுக்கலாம். பாலை தனியாகவோ அல்லது சம பங்கு அரிசி கூழ் சேர்த்தோ கொடுக்கலாம். 12 மணி நேரம் வாந்தி இல்லையென்றால் இட்லி கொடுக்கலாம். சாம்பார், கீரை, பருப்பு, காய்கறி ஏதாவதொன்றை சேர்த்து கொடுக்கலாம். அதன் பின்னர் குழைந்த ரசம் சாதம், தயிர் சாதம் முதலியனவும் கொடுக்க ஆரம்பிக்கலாம். முதல் ஒன்றிரண்டு நாட்களுக்கு வயிறு பாதி நிறைவது போலவே கொடுக்க வேண்டும்.

    பசி இல்லையென்றால்...

    பல நாட்கள் காய்ச்சலில் அவதிப்படும் குழந்தை மெலிந்தும், பசியின்றியும் இருக்கும். பெற்றோருக்கு குழந்தை காய்ச்சலால் மெலிந்து விட்டதை கண்டு சகிக்க இயலாமல் ஆகாரங்களை ஒரேயடியாக கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள். காய்ச்சலில் தளர்ச்சி அடைந்திருக்கும் குழந்தையின் குடல் இத்தனையும் ஏற்றுக்கொள்ள இயலுமா என்று அவர்கள் யோசிக்க மாட்டார்கள்.

    குழந்தை சாப்பாட்டை கண்டு பயந்து ஒதுக்கி விடவும் கூடும்.ஆகவே காய்ச்சல் நின்ற ஓரிரு தினங்களுக்கு குழந்தை முடிந்த அளவே சாப்பிட அதன் போக்கிலேயே விட்டுவிடுங்கள். பின்னர், குழந்தைக்கு தானாகவே பசி உண்டாக ஆரம்பித்துவிடும். அந்த நேரம் குழந்தை நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே சாப்பிட ஆரம்பித்து விடவும் கூடும். அதன் இஷ்டத்துக்கு சாப்பிட விட்டுவிடுங்கள்.

    குழந்தையின் மெலிந்த உடல் தன்னிலை அடையும் வரை அதுவும் அதிகமாகவே சாப்பிட்டு கொண்டிருக்க கூடும். பின்னர், அதன் வழக்கம்போல் அளவான உணவு கொள்ள ஆரம்பித்துவிடும். காய்ச்சல் குறைந்து ஓரிரு வாரங்களுக்கு பின்னரும் குழந்தைக்கு இயற்கையாகவே ஏற்பட வேண்டிய பசி ஏற்படவில்லையென்றால் குழந்தையை உங்கள் டாக்டரிடம் காண்பித்து காரணம் தெரிந்து
    கொள்ளுங்கள்.

    குழந்தைகளை கொஞ்சிக் கொஞ்சியே குட்டிச்சுவர் பண்ணும் அம்மா, அப்பாக்களுக்கு முக்கியமான டிப்ஸ்கள். அதைப் பற்றி அனைத்துப் பெற்றோரும் அறிந்து கொண்டால் நலம்.
    அடிப்படையில் குழந்தை வளர்ப்பில் மூன்று வகைகள் உண்டு.

    சில பெற்றோருக்கு குழந்தை வளர்ப்பு என்பது ஆற்று நீரோட்டம் போன்றது. எவ்வித ஆர்ப்பாட்டமும் இன்றி குழந்தை வளர்ப்பு என்பது வாழ்வின் ஒரு பகுதியாக அதன் பாட்டில் நழுவிச் சென்று கொண்டிருக்கும். அவர்களது வாழ்வில் குழந்தைகள் பிறப்பார்கள், வளர்வார்கள், படிப்பார்கள், வாழ்வார்கள். அதாவது இவ்வுலகில் கோடானுகோடி யுகங்களாக மனிதர்கள் எப்படிப் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து காணாமல் போகிறார்களோ? அப்படியே தான் அவர்களது வாழ்வும் அமைதியாக நடந்தேறும்.

    இன்னும் சில பெற்றோர் இருக்கிறார்கள். சர்வாதிகாரிகள் போலத்தான் நடந்து கொள்வார்கள். அத்தகைய பெற்றோர் இருக்கும் வீடுகளில் குழந்தைகளுக்கு முடிவெடுக்கும் உரிமைகள் கிடையாது. அவர்களது அத்தனை முடிவுகளும் பெற்றோர்களால் மட்டுமே எடுக்கப்படும். இந்த இரண்டு வகையிலும் சேராமல் இன்னொரு கேட்டகிரி உண்டு.

    அங்கு பெற்றோர்கள் எனப்படுபவர்கள் அவரவர் பெற்றெடுத்த குழந்தைகளின் அடிமைகளாக இருப்பார்கள். ஏன் அப்படிச் சொல்கிறேன் என்றால், அவர்களுக்கு தங்கள் குழந்தைகள் தான் எஜமானர்கள். அவர்களுக்கு ஒன்று என்றால் இவர்கள் பொறுக்க மாட்டார்கள் என்பதோடு சதா தம் குழந்தைகளைப் பாராட்டித் தள்ளிக் கொண்டும் இருப்பார்கள். குழந்தை குப்புற விழுந்தால் பாராட்டு, குழந்தை சிறுமியாகி ஸ்கிப்பிங் ஆடத் தொடங்கி விட்டால் அது இமாலய சாதனை. ஸ்கிப்பிங் ஆடும் குழந்தை பள்ளியில் மாவட்ட அளவில் ஏதேனும் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு பரிசு கொண்டு வந்தால் அது என்னவோ தேசிய விருது பெற்றது போல ஊர் முழுக்க தண்டோரா போட வேண்டியது.

    அவர்கள் செய்யும் சின்னச் சின்ன விஷயங்களைக் கூட கொண்டாடி, பெரிது படுத்திப் பேசி என் மகளாச்சே, என் மகன் போல வருமா? பப்பு, மிட்டு, செல்லம், வைரம், தங்கம், புஜ்ஜி என்றெல்லாம் கொஞ்சிக் கொஞ்சியே அவர்களை குட்டிச்சுவர் பண்ணுவது.

    இப்படியும் சில பெற்றோர்கள் இந்த உலகில் ஜீவித்திருக்கிறார்கள். இந்த மூன்று வகைப்பெற்றோரில் முதலாம் வகைப் பெற்றோர் மட்டுமே நார்மலானவர்கள். மற்ற இரண்டு பிரிவினருமே தங்களுக்கே தெரியாமல் தங்கள் பிள்ளைகளின் வாழ்வைத் தவறான வழிக்கு திசை திருப்புகிறார்கள்.

    குழந்தைகளை இப்படிக் கொஞ்சிக் கொஞ்சியே குட்டிச்சுவர் பண்ணும் அம்மா, அப்பாக்களுக்கு முக்கியமான பேரண்டிங் டிப்ஸ்கள். அதைப் பற்றி அனைத்துப் பெற்றோரும் அறிந்து கொண்டால் நலம்.

    1. உங்கள் குழந்தைகள் பிறக்கும் போது வெற்றுச் சிலேடுகளாகவோ அல்லது எழுதப்படாத வெள்ளைத்தாள்களாகவோ பிறந்து விடவில்லை. நடத்தை மரபியல் (Behavior Genetics) தத்துவத்தின் படி ஒரு குழந்தையின்ஆளுமையில் 50% பிறவியிலேயே கட்டமைக்கப்பட்டு விடுகின்றன. மிச்சமுள்ளதில் 40 % குணநலன்கள் கலாச்சாரம், சக மனிதர்களுடனான பழக்க வழக்கங்கள், தாக்கம் உள்ளிட்டவறால் கட்டமைக்கப்படுகின்றன.  ஆக ஒரு குழந்தையின் ஆளுமையைக் கட்டமைப்பதில் பெற்றோரின் பங்கு என்பது வெறும் 10% மட்டுமே என்றாகிறது. ஆனால், பெற்றோர் நினைத்துக் கொள்கிறார்கள், தங்கள் குழந்தையின் முழு வாழ்வுக்கும் தாங்களே பொறுப்பு என்பதாக நினைத்துக் கொண்டு குழந்தைகளைப் பற்றியே சதா முழு நேரமும் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். இது வீணான வேலை. குழந்தைகளின் ஆளுமைத் திறனில் வெறும் 10% பெற்றோர்களின் கையில் இருக்கிறதெனும் போது 100% தாங்கள் தான் பொறுப்பு என்று நினைத்துக் கொண்டு அவர்களைக் கையாள்வது தவறு.

    2. இரண்டாவதாக நீங்கள் உங்கள் குழந்தைகளை உங்களால் இந்த உலகுக்கு வந்தவர்கள் என்ற ஒரே ஒரு காரணத்தை முன்னிட்டு மிக மிக அதிசயமானவர்களாகவும், அதி அற்புதமானவர்களாகவும், விலைமதிப்பற்றவர்களாகவும் கொண்டாட வேண்டிய அவசியமில்லை. அவர்களை மற்றெல்லாக் குழந்தைகளையும் போல சாதாரணர்களாக வளர அனுமதியுங்கள். உங்களது குழந்தைகள் என்ற ஒரே காரணத்திற்காக எவ்வித சாதனைகளையும் படைக்காத நிலையில் அந்தக் குழந்தைகளின் ஒவ்வொரு சின்னஞ்சிறு செயலையுமே கூட பூதக்கண்ணாடி வைத்துப் பெரிதாக்கி அற்புதம் நிகழ்த்தப்பட்டு விட்டதாக எண்ணச் செய்து தற்பெருமையில் திளைக்க அனுமதித்து விடாதீர்கள். உலகம் முழுவதும் ஒவ்வொரு நொடியிலும் பல்லாயிரம் குழந்தைகள் பிறக்கின்றனர். அவர்கள் அத்தனை பேரும் எப்படியோ அப்படித்தான் உங்களது குழந்தையும். உங்கள் குழந்தைக்கென்று ஸ்பெஷலாக தேவதை இறகுகளோ அல்லது சாத்தானின் கொம்புகளோ இல்லை. அதை பெற்றோரான நீங்களே உங்கள் அதீதமான பாராட்டுரைகளால் வரவைத்து விடாதீர்கள்.

    3. மூன்றாவதாக குழந்தைகளை வளர்ப்பது என்பது கொஞ்சம் கஷ்டமான காரியம் தான். அதற்காக நீங்கள் உங்கள் வாழ்க்கையில் பலமணி நேரங்களை அர்ப்பணிக்கிறீர்கள். குழந்தைகளின் கல்வி, உணவு, பிற விருப்பங்கள், உடைகளுக்காக நீங்கள் உங்கள் வருமானத்தில் பெரும்பகுதியைச் செலவிடுகிறீர்கள். அவர்களது தேவைகளை நிறைவேற்றித் தருவதற்காக உங்களை கடுமையான உழைப்புக்கு உட்படுத்திக் கொள்கிறீர்கள். இதற்கிடையில் வீடு மற்றும் அலுவலகங்களில் உங்களுக்கென காத்திருக்கும் பிரச்னைகளையும் நீங்கள் நேர் செய்தாக வேண்டும். உங்களுக்கே உங்களுக்கான பிரச்னைகளை மட்டுமல்ல பள்ளியிலும், வீட்டிலும் உங்கள் குழந்தைகளுக்கு பிறரால் ஏற்படக்கூடிய பிரச்னைகளுக்கும் கூட தீர்வு கண்டாக வேண்டிய பொறுப்பு உங்களுடையதாகிறது.
    4. கடைசியாக ஒரு வார்த்தை. உங்களது ‘பேரண்டிங் லட்சியம்’ என்னவாக இருக்கிறது என்பது குறித்து யோசியுங்கள். ஒரு நல்ல அம்மா, அப்பா என்று பெயரெடுத்தால் போதுமா? உங்களது குழந்தைகள் உலகத்திலேயே ஆகச்சிறந்த குழந்தைகள் என்று பெயரெடுத்தால் போதுமா? உங்கள் லட்சியம் ஈடேறி விடுமா? பிறகு மற்றதெல்லாம் தேவையில்லையா? ஒரு நிமிஷம் நின்று நிதானியுங்கள். உங்களது பிள்ளை வளர்ப்பின் எந்தெந்த தருணங்களில் எல்லாம் நீங்கள் சந்தோஷமாக, மனநிறைவாக உணர்ந்தீர்கள் என்று யோசித்துப்பாருங்கள். அந்த தருணங்களில் மட்டுமே நிஜமாக நீங்கள் வாழ்வை அனுபவித்திருப்பது உங்களுக்கே புரியும். எனவே தயவு செய்து லட்சியம், பொறுப்பு, கடமை, என்ற வார்த்தைகளை எல்லாம் புறக்கணித்து விட்டு உங்கள் குழந்தைகளுடன் நட்பாக இருக்கப் பழகுங்கள். எல்லாக் குழந்தைகளுமே தங்களை நண்பர்களாகப் பாவிக்கும் பெற்றோர்களையே மிகவும் விரும்புகிறார்கள். அது மட்டுமே இறுதிவரை உங்களைப் பிணைக்கும் பாசக்கயிறாகிறது.

    இந்த நான்கு விஷயங்களையும் மனதில் கொண்டு நாம், நம் குழந்தைகளை வளர்க்கத் தொடங்கினால் தேவையில்லாத பல சிரமங்களைத் தவிர்க்கலாம்.

    ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், குழந்தைகள் பாரம்பரிய விளையாட்டான பல்லாங்குழி, தாயம், தட்டாங்கல், பரமபதம் போன்ற விளையாட்டுகளை வீடுகளில் இருந்தபடியே விளையாடி மகிழ்கின்றனர்.
    ‘ஓடி விளையாடு பாப்பா’ என்றார் பாரதியார். ஆனால், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டு உள்ளன. இதனால் சிறுவர்-சிறுமிகள் வீதிகளில் சென்று கூட விளையாட முடியவில்லை. வீடுகளிலேயே அவர்கள் முடங்கிக்கிடக்கின்றனர். வீட்டில் இருக்கும் போது பெரும்பாலான நேரத்தை செல்போனில் செலவு செய்வதாக கவலை அடையும் பெற்றோர்கள் செல்போனை கொடுக்க மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இதனால் குழந்தைகளுக்கு அறிமுகம் இல்லாமல் இருந்த தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள் பல்வேறு வீடுகளில் மீண்டும் கற்பிக்கப்படுகிறது. தேனி, கொடுவிலார்பட்டி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வீடுகளில் குழந்தைகள் பாரம்பரிய விளையாட்டான பல்லாங்குழி, தாயம், தட்டாங்கல், பரமபதம் போன்ற விளையாட்டுகளை வீடுகளில் இருந்தபடியே விளையாடி மகிழ்கின்றனர்.

    ×